நான் பிழை… நீ மழலை..!

நான் பிழை… நீ மழலை..!

8

மறந்துவிட முயன்றாலும் நெஞ்சில் ஆறாத ரணமாக கடந்தகால நினைவுகள், ஆதியின் மனதில் அலையடிக்கத் தொடங்கியது.

திருப்பூர் நகரில் பாரம்பரியத்திற்கும் செல்வச் செழிப்பிற்கும் பெயர் பெற்ற குடும்பத்தின் மூத்தவாரிசு செல்வராஜன். அவருக்கு அடுத்த பெண் வாரிசாக சிந்தாமணி. ஏற்றம் பெற்ற பரம்பரையில் கௌரவமும் தன்மானமும் இரண்டு கண்களாக பார்க்கப்படுவதும் வழமையான ஒன்று.

செல்வந்தர் இல்லங்களில் பாரம்பரியங்களையும் தொழிற்பங்குகளையும் முன்வைத்தே திருமணங்களை முடிப்பது உலகவியல் நடைமுறைகளில் சாத்தியமே!

அவ்வகையில் செல்வராஜன், சிந்தாமணி இருவரின் திருமணங்களும் ஒரே மேடையில், அவர்களுக்கு சமதையான குடும்பத்தில் பெண்ணெடுத்து, பெண் கொடுத்து ஏக அமர்க்களமாய் நடந்தேறியது.

வம்சாவழியையும் பரம்பரை செல்வாக்கையும் இணைக்கும் கோடாக இரண்டு திருமணங்கள் நடந்த நாள்தொட்டு இருவரின் இல்லங்களிலும் எரிமலையும் பூகம்பமும் அமைதியாக உறுமத் தொடங்கின.

செல்வராஜன் – ரூபாவதி தம்பதியரின் காதல் வாழ்க்கைக்கு சாட்சியாக மணம் முடிந்த ஒரு வருடத்தில் இரட்டை ஆண் குழந்தைகள், ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்து அனைவரையும் சந்தோசக் கடலில் மூழ்கடித்தது.

வருடம் திரும்பும் முன்பே ஒன்றுக்கு இரண்டாக பேரப்பிள்ளைகளை ஈன்றெடுத்த ரூபாவதியின் மேல், இரு வீட்டுப் பெற்றோருக்கும் வாஞ்சையும் கனிவும் கூடிக்கொண்டே போக, அது இளையவர்களின் வயிற்றிலும் மனதிலும் விசத்தை வார்த்தது.

சிந்தாமணி – சண்முகம் தம்பதியரால் முன்னவர்களைப் போல மனமொத்து வாழ இயவில்லை. சிந்தாமணியின் கணவர் சண்முகத்துக்கு இயல்பிலேயே சற்று நோஞ்சான் உடல்வாகு. இதையே பெரிய தடைக்கல்லாக நினைத்து  சிந்தாமணி உட்பூசலை கிளப்பிக் கொண்டே இருந்ததில், அவரின் தாய்மை அடையும் நாட்கள் கானல்நீராகிப் போயின.

அதிருப்தியுடன் நடமாடிய சிந்தாமணிக்கு அண்ணனின் நிறைவான வாழ்வு மனதிற்குள் பெரும் புகைச்சலை உண்டு பண்ணியது. நேரடியாக சொல்லவிட்டாலும் அவ்வப்போது ஜாடை பேச்சில் அண்ணியும் நாத்தியுமான ரூபாவதியை சீண்டத் தொடங்கினார். 

சண்முகத்திற்கு இரண்டு சகோதரிகள். மூத்தபெண் ரூபாவதியை செல்வராஜன் மணமுடித்திருக்க, இளையவள் கலாவதி, அவ்வூரின் பெரிய தனக்காரர் மகன் கதிரேசனை காதல் மணம் புரிந்திருந்தார்.

இரு வீட்டாரின் எதிர்ப்புடன் நடைபெற்ற கலாவதியின் காதல் திருமணம், செல்வராஜன் மற்றும் சண்முகத்தின் பல சமாதனப் பேச்சுக்களுக்கு பின்னர் பெரியவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. கலாவதியின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பிய காலகட்டத்தில்தான் ரூபாவதி இரட்டையர்களை பிரசவித்து இருந்தார்.

செல்வராஜன் மனைவியின் மீதுள்ள காதலைச் சொல்ல வாய் வார்த்தைகளைத் தேடாமல் தனது செயலிலேயே காண்பிக்கத் தொடங்கினார். ‘ரூபம் குருப்ஸ்.’ என்ற தொழிற்குழுமத்தை உருவாக்கி அவரது பங்குத் தொழில்கள் அனைத்தையும், ஒரே மையப் புள்ளியில் கொண்டு வந்து இணைத்து விட்டார்.

இரு வீட்டு பெரியவர்களின் பெயரோடு, மனைவியின் பெயரையும் இணைத்து, ‘ஆதித்யரூபன், ஆனந்தரூபன்.’ என மகன்களுக்கு நாமகரணம் சூட்டி, தனது பாசத்தையும் குடும்பப்பற்றினையும் ஆளுமையுடன் வெளிப்படுத்தி அசத்தினார் செல்வராஜன்.

சிந்தாமணிக்கு குறையாத வன்மத்தை கலாவதியின் கணவர் கதிரேசனும் மனதில் ஏற்றி வைத்திருந்தார். மாமனார் வீட்டில் எந்நேரமும் தன்னை நிந்தித்து ஒதுக்கி, மூத்த மாப்பிள்ளை செல்வராஜனை தூக்கி வைத்து பேசியதில், சகலையை முதல் எதிரியாகவே பார்க்க ஆரம்பித்திருந்தார்.

செல்வராஜின் அன்பான அதிரடிகளும், தொழிலில் அவருக்கு இருக்கும் நன்மதிப்பும், திறமையும் கதிரேசனின் மனதில் பெரும் பகையை உண்டு பண்ணியிருந்தது.

இந்நிலையில் திருமணம் முடிந்த இரண்டாம் வருடத்தில் கலாவதிக்கு வயிற்றில் மாடு முட்டி விபத்து ஏற்பட்டுவிட, கர்ப்பப்பை சேதமடைந்து  தாய்மையடையும் பாக்கியத்தை இழந்தார். மனைவியின் நிலையை தனக்கு சாதகமாக்கி கொண்ட கதிரேசன் மனதிலுள்ள வன்மத்தை மெதுவாக காண்பிக்கத் தொடங்கினார் 

“இந்த வயசுல ஆசை, காதல் பெருசா தெரிஞ்சாலும், மூப்பு தட்டுன பிறகு நம்மை தாங்கிக்க நமக்கொரு பிள்ளை வேணும் கலா! என்னோட வம்சவிருத்திக்கு இல்லன்னாலும்,  நமக்கு கொள்ளி போட ஒரு மகன் வேணாமா?” ஆதங்கமாக பேசிய கணவரை இயலாமையுடன் பார்த்த கலாவதி,

“இதுக்காக, இன்னொரு கல்யாணம் பண்ணிக்கற யோசனையெல்லாம் எனக்கு சுத்தமா இல்ல.” கதிரேசனின் உறுதியான குரலில் ஆசுவாசமடைந்தார்.

“ஒரு பிள்ளையை தத்தெடுத்துக்கலாம். ஆனா, அதுக்கும் உங்க குடும்பத்து பெரியவங்க கௌரவம், பாரம்பரியம்னு காரணம் சொல்லி தடுக்கப் பாப்பாங்க. அதையும் மீறி யாரோ ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்த்தா, வாழ்க்கை முழுசும் உன்னை தள்ளி வைச்சுடுவாங்க.” கதிரேசனின் கூற்றில், பெரிதும் கலங்கிப் போனார் கலாவதி.

காதல் மணம் புரிந்து கொண்டாலும் பிறந்த வீட்டு சொத்து, சுகங்களின் மீது கலாவதிக்கு ஆசை விட்ட பாடில்லை. வசதி வாய்ப்புடன் வளர்ந்ததில் உடலும் மனமும் மீண்டும் அந்த மேம்பட்ட வாழ்விற்கான ஏக்கங்களுக்கே தாவிட, தனக்கான பங்கை பிறந்த வீட்டில் கேட்க ஆரம்பித்திருந்தார்.

‘உறவிற்காக மட்டுமே சேர்த்துக் கொண்டது, சொத்துக்களை கொடுக்க முடியாது.’ மகளை பிறந்த வீட்டினர் தட்டிக் கழித்துவிட, மீண்டும், ‘கணவரே கண்கண்ட தெய்வம்.’ என கதிரேசனை துதி பாட ஆரம்பித்து விட்டார் கலாவதி.

“நீங்க சொல்றதும் சரிதான். ஆனா, இதுக்கு என்ன தீர்வுன்னே தெரியலையேங்க?” கலா குழப்பத்துடன் கேட்க,  

“உங்க அக்காக்கு தான், ரெண்டு பசங்க ராஜா வீட்டு கன்னுகுட்டியாட்டம் இருக்கானுங்களே! அவங்கள்ல ஒருத்தனை தத்து கேப்போம்.” கணவன் அமைதியாக சொன்ன யோசனையில் மூச்சடைத்துப் போனார் கலாவதி.

‘உடன்பிறந்தவளே என்றாலும், பெற்ற மகனை தத்து கொடுக்க அக்கா சம்மதிப்பாளா?’ யோசனையுடன் தயங்கி நின்ற மனைவியிடம் குழந்தைத் தேவையை அழுத்திக் கூறி, உசுப்பி விட்டார் கதிரேசன்.

“அப்படி அவங்க சம்மதிக்கலேன்னா, நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறதை தவிர வேற வழியே இல்ல கலா. அப்படி நடந்தா உன் வாழ்க்கையும் கேள்விக்குறியா போயிடும். தாங்கி நிக்க சொந்தபந்தம் இல்லாம நாதியத்து நடுத்தெருவுல நிப்ப நீ! என்னால குப்பை தொட்டியில் கிடந்த பிள்ளைக்கு எல்லாம் அப்பாவா இருக்க முடியாது. எனக்கும் கௌரவம், மானம், மரியாதை இருக்கு.” மிரட்டலுடன் உறுதியாக கூறிவிட, இறுதியில் அக்காவிடம் மடிபிச்சை ஏந்தி விட்டார் கலாவதி.

தங்கையின் கோரிக்கையை கேட்டு ரூபாவதி வாயடைத்து நிற்க, செல்வராஜனின் பெற்றோர்கள் இன்னதென்ற வரம்பில்லாமல் கலாவதியை வசைபாடித் தீர்த்தனர். 

குழந்தை வரம் மட்டுமே வேண்டி நின்ற பெண்ணிற்கு பெரியவர்களின் வசைமொழி தன்மானத்தை சீண்டி விட்டது. அவர்களுக்கு குறையாத சொத்தினையும் கௌரவத்தையும் அவர்களின் வாரிசின் மூலமே அடைந்தே தீருவது என்ற முடிவினை மனதிற்குள் அப்பொழுதே தீர்மானித்து கொண்டார் கலாவதி.

அந்த உறுதியின் முதல்படியாக, “பிள்ளை இல்லாமல் வாழ்விழந்து நிர்கதியாக நிற்பதற்கு பதிலாக, விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொள்வதே மேல்!” அழுகையோடு கலாவதி மிரட்ட, கதிரேசன் மனைவிக்கு தப்பாமல் பின்பாட்டு பாடி பொருத்தமாய் நாடகம் ஆடினார்.

“ஆசையா, பாசமுமா கண்ணுக்குள்ள வச்சு வளக்கத்தானே பிள்ளையை கேக்குறோம்? அதுவும் ரெட்டை பிள்ளையா இருக்கப்போயி தானே கேக்குறோம். கதியில்லாம நிக்கற சொந்த பந்தத்துக்கு கரிசனம் காமிக்க கூடாதா?” கண்களில் நீரோடு தழுதழுப்பாய் பேச, செல்வராஜனின் மனது ஆட்டம் கண்டது.

சிந்தாமணியைப் போலவே கலாவதியையும் சகோதரியாக நினைத்து பாசம் பாராட்டியவரால், அவர்களின் கோரிக்கையை தட்டிக் கழிக்க இயலவில்லை. மனைவியை கலந்து ஆலோசிக்காமல் வீட்டுப் பெரியவர்களின் மறுப்பினையும் தட்டிக் கழித்துவிட்டு, தான் பெற்ற மகன்களில் ஒருவனை தத்து கொடுக்கிறேன் என்று வாக்களித்தார் செல்வராஜன்.

“ஒரே ஊருல வாழ்ந்திட்டு இருக்கோம். இனியும் அப்படிதான் இருக்கப் போறோம். தெனமும் போயி பார்த்துட்டு வந்துட்டா போச்சு! புள்ள மனசு சுணங்கிப் போகாம இருக்க, ஸ்கூல் லீவு விடுறப்ப எல்லாம் அவனை இங்கே தங்க வைச்சுக்கலாம்.” அனைவருக்கும் ஏற்ற வகையில் சமாதானம் கூறியவராக, ஒரு மகனை அனுப்ப முடிவெடுத்தார் செல்வராஜன்.

‘வீட்டின் மூத்த வாரிசை அனுப்ப முடியாது.’ என பெரியவர்கள் அப்பொழுதும் முட்டுக் கட்டையிட, தத்துபிள்ளையாக, கலாவதியின் வீட்டிற்கு பெற்றோர்களால் அனுப்பி வைக்கப்பட்டான் ஐந்து வயது ஆனந்தரூபன். 

‘மூத்தது மோழை; இளையது காளை.’ என்ற பழமொழிக்கு தப்பாமல் வளர்ந்திருந்தனர் இரட்டையர்கள். தந்தையின் அன்பு, அறிவு, கண்டிப்பு, தீர்க்கம் என அனைத்தையும் கொண்டு, குடும்பத்தின் மூத்த வாரிசாக வளர்ந்து வந்தான் ஆதித்யரூபன்.

அவனுக்கு நேர்மாறாக குறும்பும் வீம்பும் மிதமிஞ்சி இருக்க, விளையாட்டுத்தனம் நிரம்பிய சுட்டிக் குழந்தையாக வளர்ந்தான் ஆனந்தரூபன். வீட்டின் செல்லப்பிள்ளை என்று அவனை கண்டிக்கவும் அனைவரும் பெரிதும் தயங்குவார்கள்.

பிள்ளைக் குறும்புகள், வீம்புகள் ஆதியிடம் வெளிப்பட்டாலும் தம்பியின் அரட்டலில், பிடிவாதத்தில் அப்படியே விட்டுக் கொடுத்து விடுவான். விளையாட்டு, படிப்பு என எந்த நேரமும் இணைபிரியாமல் இருந்தாலும் இருவரின் சுபாவங்களும் விருப்பங்களும் முற்றிலும் வேறு வேறாக இருக்கும்.

மகன், தத்துப் பிள்ளையாக வேறிடம் சென்று வளரப் போகிறான் என்ற காரணத்திற்காகவே கலாவதியின் வீட்டில் அனைத்து வசதி வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்தார் செல்வராஜன். பொருள் உதவியோடு பண உதவியையும் அளித்து கதிரேசனின் வாழ்க்கை பயணத்தில் ஏற்றம் பெற வைத்தார்.

புதிய தொழிலை கதிரேசனுக்கு அமைத்துக் கொடுத்த கையோடு, அவருக்கு உதவியாக அருணாச்சலத்தையும் நியமித்தார். வயதான தாயோடு செல்வராஜனின் பெரிய வீட்டுக் கணக்கை பார்த்துக் கொண்டு, பெரியவர்களுக்கு உதவியாகவும் வாழ்ந்து வந்தவர் அருணாச்சலம்.

பிடிக்காத திருமணத்தில் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து மாண்டுவிட, எதிலும் பிடித்தமின்றி தனியாளாக வாழ்க்கை நடத்தி வந்தார் அருணாச்சலம்.

செல்வராஜன் இவரை நம்பியே கதிரேசனுக்கு தொழில் தொடங்கி கொடுத்து, வலது கையாகவும் நியமித்து விட, பெரிய இடத்தின் முடிவினை யாரும் மறுக்காமல் ஏற்றுக் கொண்டனர்.

“சகலையின் பிள்ளையாக இருந்தாலும் பெரிய குடும்பத்து வாரிசினை வளர்த்து வருகிறேன். இறுதி காலத்தில் அவன் கையால் தான் கொள்ளி வாங்குவேன்.” அனைவரின் முன்பும் மார்தட்டிக் கொண்டு கதிரேசன் பேச, கலாவதிக்கு பெருமை பிடிபடவில்லை.

“பெற்றவர்கள் தேடிச் சலித்திருந்தாலும் இப்படி ஒரு நல்லவன் எனக்கு கிடைத்திருக்க மாட்டான். இவருக்காக சொத்து சுகத்தை விட்டு வந்ததில் தவறில்லை. இவரது காலடி நிழலே போதும்.” கலாவதியின் பேச்சு பிறந்த வீட்டிலும் எதிரொலிக்க, அவர்களுக்கு பெரும் தர்மசங்கடமாகிப் போனது.

இத்தனை நாட்கள் மகளை, இவர்கள் கரித்து கொட்டியது மாறிப்போய், மகள் பெற்றவர்களின் நிழலையே வேண்டாமென்று கூறிவிட்டாளே என்று மனம் பிசைந்து நின்றனர்.

‘பார்த்தவரையில் பழுதில்லை. இனிமேலும் மூத்த மாப்பிள்ளையின் மேற்பார்வையில் வாழப் போகிறார்கள்.’ என்கிற நல்லெண்ணத்தில் கலாவதிக்கான நகை, சீர் வரிசையை செய்து முழுமனதோடு கதிரேசனை குடும்பத்தில் சேர்த்துக் கொண்டனர் பெண்ணின் பெற்றோர்.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு அமைதியாக நடமாடிக் கொண்டிருந்த சிந்தாமணியின் மனமும் பல்வேறு கணக்குளை போடத் துவங்கியிருந்தது. ஐந்து வருடங்களுக்கு பிறகு பெண் குழந்தையை பெற்றெடுத்த மகிழ்வினை அனுபவிக்க முடியாத துர்பாக்கியசாலியாக இருந்தார் அவர்.

வருடங்கள் கழித்து தகப்பனான சந்தோசத்தில் சண்முகத்தின் இருதயம் சட்டென்று வேலை நிறுத்தம் செய்துவிட, எமனிடம் வெகு சீக்கிரமே தஞ்சமடைந்து விட்டார்.

இன்பத்தை கொடுக்காத இல்லற வாழ்க்கையும் ஊராரின் பரிதாபப் பார்வையும் சிந்தாமணியின் வாய் துடுக்கினை அதிகப்படுத்தி விட, முன்னைவிட நச்சுப் பாம்பாக ரூபாவதியை கொத்த ஆரம்பித்து விட்டார் சிந்தாமணி. 

மாமனார் வீடு சிந்தாமணிக்கு அடைக்கலம் அளித்தாலும் அண்ணனின் குடும்பத்தை வன்மத்துடன் வெறுப்போடு பார்ப்பதையே தொழிலாகக் கொண்டார் அந்த இளம் விதவை. மனைவியின் மீதான செல்வராஜனின் நேசத்தை பார்த்தே எந்நேரமும் வயிறெரிந்து போனார்.

இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடந்த பொழுது ஆனந்தனை கண்ணுக்குள் வைத்து தாங்கிக் கொண்டனர் வளர்ப்பு பெற்றோர்.

கலாவதியின் வீட்டிற்கு சென்ற தொடக்க நாட்களில் செல்லம் கொஞ்சிய ஆனந்தனுக்கு ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே புதிய இடத்தில் இருப்பது கசக்கத் தொடங்கியது.

தாயின் முந்தானையை பிடித்து உறங்கியே பழக்கப்பட்ட பாலகன், அம்மாவின் வாசத்திற்கு ஏங்கி, வீட்டிற்கு செல்ல வேண்டுமென அடம்பிடித்த நேரத்தில் வளர்ப்பு பெற்றோரால் அடக்கி வைக்கப்பட்டான் ஆனந்தன். ஆனால் அவனோ அவர்களுக்கு அடங்காமல் பல அசம்பாவிதங்களை அரங்கேற்றத் தொடங்கினான். 

சிறுவனின் பிடிவாதம் பெற்றவர்களுக்கு தெரியவர, அவனை அங்கேதான் இருக்க வேண்டுமென கண்டிப்புடன் கூறி பிஞ்சு மனதை நோக வைத்தார் செல்வராஜன்.

“அவங்க தான் இனிமே உன்னோட அம்மா, அப்பா… உன்னை அவங்க மகனா தத்து கொடுத்துட்டோம் சின்னவனே!” கனிவுடன் செல்வராஜன் கூற,சிறுவனின் பிடிவாதம் பெற்றவர்களுக்கு தெரியவர, அவனை அங்கேதான் இருக்க வேண்டுமென கண்டிப்புடன் கூறி பிஞ்சு மனதை நோக வைத்தார் செல்வராஜன்.

“அப்போ நீங்களும் அங்கே வந்து இருங்க… எனக்கு அம்மா வேணும்பா! ஆதி கூட விளையாடணும்.” ஐந்து வயதில் தெளிவாக தனது தேவையை உரைத்த மகனை, கண்ணீரை மறைத்து அணைத்துக் கொள்ள மட்டுமே ரூபாவதியால் முடிந்தது.

இவரும் மகனின் பிரிவாற்றமையில் நித்தமும் அழுதுக் கரைபவர் தானே? வருத்தத்தை வெளியில் கூறி ஆறுதல் தேடிக் கொள்ளவும் வழியில்லாமல் ரூபாவதியும் தவித்துதான் போனார்.

“கொஞ்சநாள் நம்மகிட்ட இருக்கட்டுமே அத்தான்? புள்ளை ஏங்கிப் போயிருக்கான்.” கணவரிடம் ரூபாவதி கெஞ்ச, முதன் முதலாக மனைவியிடம் கோபம் கொண்டார் செல்வராஜன்.

“அவனுக்கு போட்டியா நீயும் கண்ணை கசக்கி, உருகிட்டு நிக்கிறதாலதான் இவனும் அழிச்சாட்டியம் பண்ணிட்டு திரியுறான் ரூபா! சின்ன புள்ளைக்கு எடுத்து சொல்றதை விட்டுட்டு நீயும் அழுது வடியாதே!” மனைவியை கடிந்து கொண்ட செல்வராஜன், மகனைப் பார்த்து,

“சித்தி வீடுதான் இனிமே உன் வீடு. அவங்கதான் உன்னோட அம்மா அப்பா எல்லாமும்… இனிமே நீ பரிட்சைக்கு லீவ் விடுறப்போ மட்டும் இங்கே வந்து தங்கினா போதும்.” கண்டிப்புடன் கூறிவிட்டு, அரற்றிய மகனையும் திரும்பிப் பார்க்காமல் சென்றார்.

ஒரு கட்டத்தில் மகனை இங்கே மொத்தமாக அழைத்து வந்து விடுமாறு கணவரிடம் ரூபா கெஞ்ச ஆரம்பிக்க, வாக்குத் தவறாமை, கொடுத்ததை கேட்கும் பழக்கமில்லாத பாரம்பரியக் குடும்பம என்ற பெருமை பேசி வீம்புடன் நின்றார் செல்வராஜன்.

கணவனின் கோபமுகத்திற்கு பயந்தே ரூபாவதியும் மகனை சென்று பார்க்காமல் இருக்க, தனக்கென யாருமே இல்லையென்ற விரக்தி எண்ணத்தை சிறுவயது ஆனந்தனின் மனது ஸ்திரமாய் பதியம் போட்டுக் கொண்டது.

வளர்ப்பு பெற்றோரும், பிள்ளையை பெற்றவர்களின் வருகையை நிஷ்டூரமாக மறுக்க ஆரம்பித்தனர். ரூபாவதி தொலைபேசியில் தவித்து பேசினாலும் மகனிடம் பேச விடமாட்டார் கலாவதி.

“அப்பப்பா… எத்தனை தடவைதான் சொல்றது க்கா? அவனுக்கு இந்த வீடும் பழக்க வழக்கமும் செட் ஆகிடுச்சு! வீணா நீயும் குழம்பி, புள்ளை மனசையும் கலைக்க வேணாம். சொந்தத்துல புள்ளைய வாங்கி இருந்தாலும் சட்டபூர்வமா சாஸ்வதம் பண்ணி இருக்கணும் போல?” ஏகத்திற்கும் குறையாக தொலைபேசியில் பேசி முடிப்பார் கலாவதி.

நெற்றிபோட்டில் அடித்தாற்போல அக்காவை நிந்தனை செய்யும் காலாவதியின் முகத்தில் தோன்றியது எக்களிப்பா? வெற்றியா என்பதே புரியாமல் முழிப்பான் ஆனந்தன்.

நாட்கள் செல்லச் செல்ல கறார் கண்டிப்பு என்ற வெளிப்பூச்சில் சிறுவனுக்கு அடிகளும் வசவுகளும் கிடைத்திட, அந்த நேரத்தில் பெற்றவளின் மடி தேடி களைத்து சோர்ந்து போனான் பாலகன். எட்டாக் கனியாக பெற்றவளின் பாசமே தூரமாகிப் போக மனதளவில் நிரம்பவே இறுகிப் போனான்.

‘என்னை பார்க்க, எனக்காக யாரும் வராதபோது, நான் யாரைப் பார்க்க வேண்டும்? இனி யாரோடும் பேசவும் பழகவும் மாட்டேன். பெரியவர்களின் பேச்சினையும் காதில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்.’ பிடிவாத மனோபாவம் கொண்டு மூர்க்கனாக வளர ஆரம்பித்தான் ஆனந்தரூபன்.