நினைவு தூங்கிடாது 1.1

நிஜம் 1

சூரியன் அஸ்தமிக்கும் நேரம், வானில் நட்சத்திரங்கள் கண் சிமிட்ட தொடங்கி இருந்தது. 

 இந்திரலோகமே தோற்றுவிடும் வண்ணம், பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டமாக அமைக்கப் பெற்றிருந்தது  அந்த செயற்கை கலையரங்கம்.

காண்போரை கவரும் வகையில் வண்ண விளக்குகளும், மேடை அலங்காரங்களும் கண்ணை பறித்தது. எங்கு திரும்பினாலும் பணம் புகுந்து விளையாடி இருந்தது.

வானில் மின்னும் நட்சத்திரங்களுக்கு போட்டியாக, மண்ணுலக திரை நட்சத்திரங்கள் ஒன்று கூடி கொண்டிருந்தனர். பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் நடத்தப்படும் விருது வழங்கும் விழா இனிதாக தொடங்கியது.

வாகன நிறுத்துமிடம் முழுவதிலும் விலையுயர்ந்த கார்களும், பல ரகமான வாகனங்களும் அணிவகுத்து கொண்டிருந்தன. ஏறக்குறைய அனைவரும் வந்து விட்டிருந்த நிலையில் ஒரு விலையுயர்ந்த கார், முழு வேகத்தில் அங்கே வந்து தன் மூச்சை நிறுத்தியது. அதிலிருந்து இறங்கினான் பின் இருபதுகளில் இருந்த வாலிபன்.

உடற்பயிற்சியால் இறுகிப் போயிருந்த கட்டுடல் மேனியும், ‘என்னை கண்டால் நாலடி தள்ளியே நில்’ என்று எச்சரித்த கூர்மையான கண்களும், இறுக்கமான உதடுகளும் அவனை மிகவும் அழுத்த காரனாக காட்டியது. ஆனாலும் அவனது கம்பீரம் அனைவரையும் கவரும் வகையிலிருந்தது.

கண்களில் அலட்சியத்தோடும், உடலில் ஒரு மிடுக்கோடும் அந்த அரங்கத்தினுள் நுழைந்து கொண்டிருந்தான் ருத்ரேஸ்வரன், ஈஸ்வர் புரொடக்ஷனின் தற்போதைய ஒரே வாரிசு. 

பெரிய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என அனைவரும் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காதா? என காத்திருக்கும் நிறுவனம். ருத்ரனின் தந்தையால் நடத்தப்படுகிறது.

ருத்ரன் தனக்குத் திரையுலகமே வேண்டாமென ஒதுங்கி, சொந்தமாக ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வருகிறான். அவனை வளைத்துப் போட்டால் திரைப்படத்தில் நடிக்கலாம், என்று அவனுக்கு வலை விரித்த பெண்கள் ஏராளம்.’எந்த வலையினாலும் அடக்க முடியாத திமிங்கலம் அவன்,’ என்பதை பாவம் அவர்கள் அறியவில்லை.

அனைவரின் வரவேற்பையும் சிறு தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டு அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைக்கு சென்றுவிட்டான். 

நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் சென்று கடைசி கட்டத்தை நெருங்கியது. இது சிறந்த நடிகர் மற்றும் நடிகைக்கு வழங்கப்படும் விருது. 

“இப்போது நாம் வழங்கப் போகும் விருது சிறந்த நடிகருக்கான விருது, அது யார் என்று சொல்லட்டுமா?” நிகழ்ச்சி தொகுப்பாளரின்  அறிவிப்பில் கூட்டம் முழுவதும் சந்தோஷ ஆர்ப்பரிப்பு. 

“பல இளம் பெண்களின் மனதை கவர்ந்த, நம் அன்பிற்கு பாத்திரமான, ஒன் அண்ட் ஒன்லி மேன் ஆஃப் தி ஷோ, ஐ கால் சார்மிங் அண்ட் எனர்ஜெடிக் ரிஷிவர்மா ஆன் ஸ்டேஜ்.”(one and only man of the show, I call charming and energetic rishivarma on stage.)

பலத்த கைதட்டலுடன், தனது திரைப்படக் காட்சியின் பின்னணியோடு, மேடையில்  ஒன் அண்ட் ஒன்லி சார்மிங் ரிஷிவர்மா.

அவனிடம் விருது வழங்காமல்,”இப்ப நாம அவருக்கு விருது கொடுக்க போவதில்ல.”

ஏன் என்ற கோஷம் இப்போது.

“ஏனென்றால் அவருடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப் போகிறோம். அந்த நடிகை யார் என்று நான் சொல்லவும் வேண்டுமா?”

சந்தோஷ ஆர்ப்பரிப்பு.

“எஸ் அவங்களேதான். அழகின் மொத்த இருப்பிடம், பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த கனவுக்கன்னி, ஐ கால் கார்ஜியஸ் மித்ராலினி ஆன் ஸ்டேஜ்.”

இன்றைய திரை உலகத்திற்கு தேவையான மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்ததுபோல், நவ நாகரீகத்தின் உச்சக்கட்டமாக, ருத்ரனின் அருகிலிருந்த  மித்ராலினி,  ரிஷிவர்மாவிற்கு வழங்கிய கரகோஷத்திற்கு சற்றும் குறைவில்லாத கைதட்டலுடன்  மேடை ஏறினாள்.

அவளைப் கண்ட ருத்ரனின் கூர்மையான கண்களில் ரசிப்பு கூடியது. அவளின் அழகு அவனை பிரமிக்க வைத்தது. இதுவரை எந்த பெண்ணிடமும் தோன்றாத ஈர்ப்பு அவளிடம் தோன்றியது. யாருக்காகவும் திறக்கப்படாத அவனது மனக்கதவு, அவளுக்கு மட்டுமே திறப்பதற்காக காத்திருந்தது

‘ச்ச இவ்வளவு நேரம் நம்ம பக்கத்துல இருந்த பெண்ணை பார்க்காமல் போயிட்டேனே!’ அவனின் இறுகிய வெளி தோற்றத்தை தாண்டி அவனின் விளையாட்டு குணம் வெளிவந்து, மனதில் தன்னைத்தானே திட்டிக் கொண்டாலும், வெளியே எப்போதும்போல் இறுகிய முகத்துடன், அவளை மட்டுமே கண் விலக்காமல் பார்த்திருந்தான்.

பின்னால் திரையில் ரிஷிவர்மாவும் மித்ராலினியும் இணைந்து நடித்து, தற்போது விருது பெற்ற படத்திலிருந்து பாடல்  ஓடிக்கொண்டிருந்தது. இப்போது ருத்ரனின் பார்வை திரைக்கு சென்றது. அங்கே அவர்கள் உருகிக்கொண்டிருந்த காட்சியைப் பார்த்து இவன் கண்களில் கூர்மை கூடியது.

பாடல் முடியவும் தொகுப்பாளர் அவர்களிடம் கேள்வியை தொடங்கினார்.”திரையில் உங்கள் இரண்டு பேருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி, சான்சேஇல்ல. இட்ஸ் ரியலி அமேசிங். ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்டது போலவே இருக்கிறீர்கள்” என சிலாகித்தார்.

“தேங்க்யூ வெரி மச்” இருவரும் ஒருசேர.

“ரிஷி சார் உங்ககிட்ட ஒரு கேள்வி மேடத்தைப் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன” என மித்ராலினியை கைக்காட்டினார்.

“என் வாழ்க்கையை எனக்கு கொடுத்த தேவதை”

“இப்போது மேடம் உங்களுக்கும் அதே கேள்வி.”

“நல்ல உள்ளம் படைத்த உயர்ந்த மனிதர். என் சந்தோஷம் எல்லாம் அவரிடம் தான் உள்ளது.” அவள் கூறியது ஒரு அர்த்தத்தில், ஆனால் மற்றவர்களுக்கு புரிந்ததோ தவறான அர்த்தத்தில், அதில் ருத்ரனும் அடக்கம்.

“இரண்டு பேருக்கும் சேர்ந்து ஒரு பர்சனல் கேள்வி. திரையில் பார்த்த உங்கள் கெமிஸ்ட்ரி நிஜ வாழ்க்கையிலும் தொடருமா?” 

ருத்ரன் கண்கள் இடுங்க அவர்களை வெறித்திருந்தான். அவனின் செவிகள் கூர்மை அடைந்தது அவர்களின் பதிலுக்காக.

“சாரி நாங்க வெறும் பிரண்ட்ஸ் மட்டுமே” ரிஷிவர்மா.

“ஊடகங்களில் வர செய்தி அப்படி சொல்லலையே?” கொக்கி போட்டார்

“ஊடகங்கள் பரபரப்புக்காக எதை வேணும்னாலும் சொல்லுவார்கள். அது எல்லாம் உண்மை ஆகிடாது.”

“ஆனா…” என ஏதோ கேட்க முயன்ற பெண்ணை தடைசெய்து,”ப்ளீஸ் தனிப்பட்ட கேள்விகள் வேண்டாம்.” இருவரும் ஒரே குரலில். 

“ஃப்ரெண்ட்ஸ்ன்னு சொல்லி, உங்கள் திருமண தேதியை கேட்க ஆவலோடு இருந்த ரசிகர் மனதை உடைச்சுட்டிங்க.”

கூட்டத்தைப் பார்த்து

“அவங்க வெறும்  ஃப்ரெண்ட்ஸ்ன்னு சொல்லிட்டாங்க. வேற என்ன கேள்வி கேட்கலாம்? ரசிகர்களிடம் ஏதேனும் கேள்வி இருந்தால் கேளுங்கள்.” என அறிவிக்க,

ஒரு விஷமக்கார ரசிகர் இடமிருந்து கேள்வி பிறந்தது,”மித்ராலினி மேடம் இதுவரை நீங்க நான்கு படத்தில் நடித்து  இருக்கிங்க. எல்லா படத்திலும் ரிஷிவர்மா சார் மட்டும்தான் ஹீரோ. நீங்க ஏன் வேற ஹீரோ கூட நடிக்கிறது இல்லை?”

இந்தக் கேள்வியை கேட்டதும் பெண் ஒரேயோரு நொடி திகைத்து நின்றாள். மறுநொடி அழகான புன்னகையுடன்,”அது வேறு ஒன்றுமில்லை ரிஷி என்னுடைய நண்பர், எனக்கு சூட்டாகிற கதையைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்கிறார். எனக்கு சூட் ஆகிற மாதிரி கதை அமைந்தால் வேற ஹீரோ கூடவும் நடிப்பேன்.” உறுதி அளித்தாள். அந்த உறுதி அவள் வாழ்க்கை பாதையை மாற்ற போவது தெரியாமல். 

இது அனைத்தையும் ருத்ரன் மிகக் கவனமாக உள்வாங்கிக்கொண்டிருந்தான்.

இப்போது சுதாரித்த தொகுப்பாளர்,”போதும் பிரண்ட்ஸ். இப்போது நாம் அவர்களுக்கான விருதை வழங்க, ஈஸ்வர் புரொடக்ஷனின் சார்பாக வந்திருக்கும் இளைய தலைமுறை ருத்ரேஸ்வரன் அவர்களை அன்புடன் அழைக்கிறோம்.”

ஆண்மையின் வசீகரத்துடன் மேடை ஏறினான் ருத்ரன். மித்ராவின் பார்வை அவனை நோக்கி திரும்பாமல் கூட்டத்தை மட்டுமே பார்த்திருந்தது. அவனின் கூர்மையான கண்கள் அனைத்தையும் உன்னிப்பாகப் பார்த்து இருந்தது.

‘உன் கண்கள் என்னை மட்டுமே பார்க்கவைக்கிறேன். உன் உலகம் என்னை சுற்றிமட்டும் இயங்க வைக்கிறேன். பொறுத்திருந்து பாரு பொம்மு குட்டி’ என மனதில் சூளுரைத்தான். அனைவரையும் தன் சுண்டுவிரலால் ஆட்டிப்படைக்கும் அந்த சுரப்புலி ருத்ரேஸ்வரன்.

முதலில் சிறந்த நடிகருக்கான விருதை ரிஷிவர்மாவிற்கு வழங்கினார்கள். இன்முகத்துடன் அதை பெற்றுக்கொண்டு, ருத்ரனுடன் கைக்குலுக்கி சற்று தள்ளி நின்றான்.

பின்னர் மித்ராலினிக்கு சிறந்த நடிகைக்கான விருதை வழங்கிய ருத்ரன், கைகுலுக்க தன் கரத்தை நீட்டினான். ஒரு நொடி அந்த கரத்தை பற்ற தயங்கிய பெண், பிறகே தன் கரத்தை அவன் கைகளுடன் இணைத்தாள்.

அந்த ஓர் நொடி தயக்கத்தை புரிந்துகொண்ட ருத்ரனின் மனதில் ஒரு விபரீத விளையாட்டு உதயமானது. அவளின் கரங்களை சற்று அழுத்தத்துடன் பற்றி, அவளை தன் அருகினில் நிறுத்தினான். நெளிந்துகொண்டே அவனருகில் நின்றிருந்தது பெண்.

“ருத்ரன் சார். உங்க கிட்டயும் அதே கேள்வி? மித்ராலினி மேடம் பற்றிய உங்கள் அபிப்ராயம் என்ன?”

தலை முதல் பாதம் வரை ரசனை பார்வையை, அவள்மீது செலுத்தி,”மிக அழகான கவிதை” என்றான் வர்ணனையாக.

“மூன்றே வார்த்தையில் அழகா சொல்லிடீங்க. இன்னும் ஒரு கேள்வி? உங்களைப் பார்த்தாலே ஒரு ஹீரோ லுக் இருக்கு. நீங்க எப்போ படத்தில் நடிக்கப் போறீங்க?” தொகுப்பாளரின் கேள்விக்கு, அந்த விபரீத விளையாட்டை விளையாட, ருத்ரனின் மனதில் ஆசை எழுந்தது.

“இதுவரை எனக்கு நடிக்கறதுல இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனால் இப்போது மித்து மேடத்தைப் பார்க்கவும், அவங்க கூட ஜோடி சேர ஆசை வந்துடுச்சு. ஈஸ்வர் புரொடக்ஷனின், அடுத்த பிராஜெக்ட், நானும் மித்துவும் சேர்ந்து நடிக்கப் போகிறதுதான். என்ன மேடம் உங்களுக்கு சம்மதமா?” என கேள்வியோடு பந்தை அவளின் புறம் வீசி இருந்தான்‌.

மித்து என்ற ருத்ரனின் பிரத்தீக அழைப்பை இருவரும் உணரவில்லை.

‘என்ன சொல்வது?’ என திகைத்த பெண்ணின் பார்வை ரிஷிவர்மாவை நோக்கி சென்றது. அவனின் பார்வையிலோ மறுப்பின் சாயல். இவ்வளவு கூட்டத்திற்கு முன் ருத்ரனின் வேண்டுகோளை மறுக்க முடியுமா? ‘கூட்டத்தின் நடுவே மறுக்க மாட்டேன் என்ற தைரியம். இரு உன்னை கவனிச்சுக்கறேன்’ மனதில் கருவிக்கொண்டு,

அழகான புன்னகையுடன், “அதுக்கு என்ன சார். நல்ல கதையாகவும், எனக்கு சூட்டாகிற சப்ஜெக்டாகவும் இருந்தால் கண்டிப்பா நடிக்கிறேன்.” என திடமாக கூறி, அவன் விரித்த வலையில் வலிய சென்று சிக்கிக்கொண்டது அப்பாவி பெண் மான்.

ஈஸ்வரன் வெற்றிப் புன்னகையுடன்,”ஆல் த பெஸ்ட் மைப்பார்ட்னர்.” என மீண்டும் ஒரு கைக்குழுக்களுடன், ஒரு இதமான அணைப்பையும் வழங்கி அங்கிருந்து சென்றான். 

மித்ராலினியும் ரிஷிவர்மாவும் இயலாமையுடன் பார்வையை செலுத்தி கொண்டனர். அவர்களையும் மீறி அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. இல்லையில்லை நடத்திக் கொண்டிருக்கிறான் ருத்ரேஸ்வரன்.

மேடையில் நடந்த அனைத்தையும், தன் இல்லத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தார் ஈஸ்வர் புரோடக்சனின் உரிமையாளர். நம் கதை நாயகனின் தந்தை ஈஸ்வரமூர்த்தி. அனைவராலும் மூர்த்தி என்று அழைக்கப்படுபவர்.

மித்ராலினியின் முதல் படத்திலேயே அவளின் நடிப்பு பிடித்துப்போய், தன் தயாரிப்பில் நடிக்க கோரியபோது மறுத்த பெண்‌, இப்போது சம்மதித்ததை ஆச்சரியத்துடன் உள்வாங்கிக்கொண்டிருந்தார். 

அதையும்விட திரையுலகம் என்றாலே ஓடி ஒளிந்து கொண்ட தன் மகன், தானாக நடிக்க முன்வந்ததை நம்பமுடியாமல் திகைத்துப்போய் பார்த்திருந்தார்.

ருத்ரேஸ்வரன் விரித்த வலையில் சிக்கிக் கொண்டது

அப்பாவி பெண் மானா?

அடப்பாவி பெண் மானா?