நினைவு தூங்கிடாது 11.1

நிழல் 11

இரவில் தெரியும் நிலவை விட என் மனதில் தெரியும் அவளின் மதிமுகமே என்றென்றும் அழகு

கோவிலில் இருந்து வீட்டுக்கு திரும்பிய தேவி, உடனே தன் கணவனை தொலைப்பேசியில் அழைத்து,”நம்ம ராஜாவிற்கு பெண் பார்த்திருக்கேன்.”

“…”

“ரொம்ப அமைதியான அடக்கமான பெண். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”

“….”

“ராஜாவுக்கும் கண்டிப்பா பிடிக்கும். அவ்வளவு அழகான பெண். பொண்ணு வீட்ல கேட்டுட்டு அப்பறம் அவன் கிட்டயும் பேசுறேன்.”

“….”

“அது பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டா, அப்பறம் எல்லாம் சரியாயிடுவான்.”

“….”

“புருஷனை முந்தானையில் முடிஞ்சுகிறது அந்த பொண்ணோட சாமர்த்தியம்.”

“….”

“நம்ம ரேகாவோட பிரண்டுதான். இந்த பொண்ணு சின்ன வயசா இருக்கும்போதே அவங்க அப்பா தவறிட்டாரு. அம்மாவும் அவளோட ட்யின் சிஸ்டரும் மட்டும் இருக்காங்க”

“இன்னைக்கு சாயங்காலம் அவங்க வீட்டில போய் பொண்ணு கேட்கறேன்.” எனக் கூறி சம்மதம் வாங்கினார். 

பெண்களுடனான மகனின் தவறான பழக்கங்களும், அவனது கட்டுப்பாடற்ற வாழ்க்கைமுறை குறித்தும் கவலைகொண்ட பெற்றோர், ‘மகனுக்கு கால்கட்டு போட்டால், அவன் திருந்தி நல்வழியில் பயணிப்பான்’ என அனைத்து பெற்றோர்களையும் போல இவர்களும் முடிவு செய்தனர். அவனை திருமணம் முடிக்கும் பெண்ணின் எதிர்பார்ப்புகளை சிந்திக்க தவறினர்.

தன் மகனுக்கு வரும் பெண்கள் சீதையாக இருக்க வேண்டுமென விரும்பும் பெற்றோர்கள், தன் மகன் ராமனா? என சிந்திக்க தவறுகின்றனர்.

தவறான வழியில் செல்பவனை திருத்தும் தியாகியா பெண்கள்? இல்லை ஆண்கள் செய்யும் அனைத்து தவறுகளையும் பொறுத்துப் போகும் பூமாதேவியா அவர்கள்?

மாலையில் தன் அன்னையை அழைத்துக்கொண்டு, கஸ்தூரியின் முன்நின்ற தேவி, நேரடியாக பெண் கேட்டுவிட்டார். ஆனால் கஸ்தூரி தனது செல்வநிலை, பெண்ணின் வயது, படிப்பு என பல காரணங்களை கூறி தயங்கினார். அவர் தயக்கத்தை போக்கி அவரது சம்மதத்தை வாங்கினார். நாளை மறுநாள் நிச்சயம் என்றும், பெண் பதினெட்டு வயது பூர்த்தியாக இன்னும் மூன்று மாதங்கள் உள்ளதால், அதன் பின் திருமணம் எனவும் முடிவுசெய்தனர்.

வீட்டுக்கு சென்றவுடன் தன் கணவனை அழைத்த தேவி,”நீங்க உடனே கிளம்பி வாங்க. நாளை மறுநாள் அவர்களுக்கு நிச்சயதார்த்தம். மாப்பிள்ளைக்கு அப்பாவா லட்சணமா சீக்கிரம் வந்து சேருங்க.” அவருக்கு ஒரு கொட்டு வைத்து, கட்டளையிட்டார். 

தன் மகனிடம் தகவலை தெரிவிக்க பயத்துடன் காத்திருந்தார். திருமணம் என்று சொன்னாள் மகன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பானென பயந்திருந்தார். முன்னிரவு நேரம் நண்பர்களுடன் வீடு திரும்பிய ஈஸ்வரை, தனியே அழைத்துச் சென்று நேரடியாக விஷயத்தை கூறினார். 

“கோவிலில் பாடிய பெண்ணை பற்றி நீ என்ன நினைக்கிற?” மிதமிஞ்சிய ஆர்வத்துடன்.

அவனின் மூளை அமிர்தா என  ரகசியமாய் கூறி மகிழ்ச்சி கொண்டது. அதை தன் இறுகிய முகத்தின் பின் மறைத்துக்கொண்டு,”அந்தப் பெண்ணைப் பற்றி, நான் நினைக்க என்ன இருக்கிறது?” என்றான் அசட்டையாக.

“அந்த பெண்ணை உனக்கு திருமணம் பேசி முடித்திருக்கிறேன்” என்றார் உறுதியான குரலில்.

அவர் வார்த்தைகள் மூளையில் மகிழ்ச்சியை உண்டாக்க, மனதிலோ அதிர்வு. அவன் கண்முன்னால் அம்முவின் அழகு வதனம் தோன்றி மறைய, ‘அவள் சிறு பெண். அவளை மறக்க வேண்டும்’ என பலவீனமாக தன் மனதிற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டான். 

அம்மு என்ற சிறு பெண்ணிடம் தோன்றிய சலனத்திலிருந்து வெளிவர வேண்டும். அதேநேரம் அவன் மூளையும் அமிர்தா என்ற பெண்ணை ஏற்று கொண்டதால், தன் அன்னையின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்தான்.

“உங்கள் விருப்பம். எனக்கு சம்மதம்” என இறுகிய முகத்தோடு சம்மதத்தைத் தெரிவித்து, தன் அறையின் ஜன்னலில் நின்று, மனம் தேடும் நிலவு முகத்தை காண ஏங்கினான். 

‘கல்யாணம்ன்னு சொல்லியருக்கேன். கொஞ்சமாவது சந்தோஷப்படுகிறானா? இவன கட்டிகிட்டு அந்த பொண்ணு என்ன பாடு பட போகுதோ ஆண்டவா? இவனுக்கு நல்ல புத்தியை கொடு’ என முனு முனுப்போடு சென்றார்.

கார்த்திக்கு அமிர்தாவின் மேல் ஆர்வம் இருப்பதை இந்தக் கணம் மறந்து போனான் ஈஸ்வர்.

மறந்து போனானா? மறுத்து போனானா?

ஈஸ்வரின் திருமண செய்தியை கேட்ட நண்பர்கள் முகத்தினில் சந்தோஷம் இருந்தது மணமகளை நேரில் காணும் வரை.

††‡††

நிச்சயதார்த்த நாள் அழகாக விடிந்தது, அதே அழகோட முடியுமா?

இரண்டே நாட்களில் நிச்சயம் என்பதால் வீட்டில் பரபரப்புக்கு குறைவில்லை. அம்முவை காணாத ஈஸ்வரின் மனம் வெறுமையை சுமந்தது. அதை உணராதது யாரின் குற்றம்? அழுத்தமான அவனின் முகத்திற்கு  பின்னால், இலகுவான அம்முவின் முகம் ஒளிந்திருப்பதை அங்கிருந்த யாருமே தெரிந்து கொள்ளவில்லை, ஏன் ஈஸ்வரே அதை உணரவில்லை.

அவர்களின் வழக்கப்படி பெண் வீட்டில் நிச்சயம் நடத்தப்படும். மாப்பிள்ளை வீடு வசதியான வீடு என்பதால், பெண் வீட்டில் இடப் பற்றாக்குறை ஏற்படும், என்ற காரணத்தினால் விழா கோவில் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

சுவாமி சன்னிதானத்திற்கு முன் நிச்சய தட்டை மாற்ற முடிவு செய்திருந்தனர். அதனால் அங்கு மணமகன் சார்பாக கொண்டுவந்த, அனைத்து தாம்பாளத் தட்டுகளும் இறக்கி வைக்கப்பட்டது. 

அனைவரும் அங்கு கூடிய பின் ஐயர் மணமக்களை அழைத்து வரச் சொல்ல, மணமக்கள் அடுத்தடுத்து நின்றனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை. ‘அமிர்தா என்ற பெண்ணை சந்தித்துவிட வேண்டும்’ என ஆசைப்பட்டு கொண்டிருந்த ஈஸ்வர், இப்போது தன் அருகில் இருக்கும் பெண்ணை காண எந்த ஆர்வமும் காட்டவில்லை. மனம் வெறுமையை சுமந்திருந்தது.

ஈஸ்வரின் கண்கள் கூட்டத்திலிருந்த ஒருவரை மட்டுமே தொடர்ந்து கொண்டிருந்தது. மணமகளை கண்ட ஈஸ்வரின் நண்பர்களின் முகத்தினில் அதிர்ச்சி தோன்றியது‌. அதை மற்றவர்கள் அறியும் முன் மறைத்து கொண்டனர்.

ஐயர் நிச்சய பத்திரிக்கையை வாசித்தார், “சென்னையில் வசிக்கும் திருவாளர் ஈஸ்வரமூர்த்தி, அம்பிகா தேவியின் புதல்வன், திருநிறைச்செல்வன் ருத்ரேஸ்வரனிற்கும், பசுஞ்சோலை கிராமத்தில் வசிக்கும், மறைந்த திருவாளர் ரவிக்குமார், கஸ்தூரியின் புதல்வி, திருநிறைச்செல்வி பிருந்தாவிற்கும், பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் என உறுதி செய்யப்படுகிறது.” என தேதி குறிப்பிடப்படாமல், பத்திரிகையை வாசித்து முடித்த பெரியவர், நிச்சய புடவை இருந்த தாம்பாளத்தை எடுத்து, மணமகனின் சகோதரியிடம் (பெரியம்மா மகள், கார்த்திக்கின் உடன் பிறந்தவள்) கொடுத்து, மணப்பெண்ணின் கைகளில் வழங்கி புடவையை மாற்ற அனுப்பினார்.

மணமகள் அமிர்தா என்று எண்ணியிருந்த ஈஸ்வருக்கு மனதில் பலத்த அடி. செய்வதறியாது திகைத்துப் போனான். மணமகனாக ஈஸ்வரை கண்ட அம்முவிற்கோ உலகம் தட்டாமாலை சுற்றியது. ‘பூவினும் மென்மையான தன் சகோதரி, இந்த முரடனிடம் என்ன பாடுபடுவாளோ?’ என அஞ்சி நடுங்கினாள். ஏற்கனவே அவனை வெறுத்துக் கொண்டிருந்த பெண், இப்போது முற்றும் முழுவதுமாக அடி மனதிலிருந்து அவனை வெறுத்தாள்.

†††‡†††

தேவி தேர்ந்தெடுத்த காஞ்சிப்பட்டு கட்டி, அழகுநிலைய பெண்ணின் கைவண்ணத்தால், செயற்கை நகைகளோடும், முகத்தில் மின்னும் வெட்கப் புன்னகையோடும், அழகு மிளிர அனைவரையும் தன்னை நோக்கி ஈர்த்த பிருந்தா, ஈஸ்வரனின் அருகில் நின்றாள். 

அவளை ரசிக்க வேண்டிய மணாளனின் விழிகளோ, கூட்டத்தில் ஒதுங்கி, சாதாரண பாவாடை தாவணியிலும், அவனை வசீகரிக்கும் அழகோடு நின்றிருந்த அம்முவிடமே பசை போட்டு ஒட்டி கொண்டது. அவளை விட்டு பார்வையை விலக்காமல், அவள் முகத்தில் தோன்றும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டிருந்தான். 

அவள் முக மாற்றத்திலிருந்தே ‘இந்தத் திருமணத்தில் அவளுக்கு உடன்பாடு இல்லை’ என்பதை உணர்ந்து கொண்டவனின் மனதில், காரணமே இல்லாமல் குதூகலம் உண்டானது. அவள் சிறு பெண் என்பதால், அவளை விட்டு ஒதுங்க முடிவெடுத்தவன், இப்போது முடியாமல் திண்டாடி கொண்டிருந்தான்.

‘அம்முவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை’ அது உண்மைதான். ஈஸ்வர் நினைத்தது அவள் தன்னை விரும்புகிறாளென, ஆனால் உன்மையில் அம்மு அவனை அடியோடு வெறுக்கிறாள்.

விருப்புக்கும் வெறுப்புக்கும் நூலளவே வித்தியாசம் உள்ளது. எதுவும் மேஜிக் நடந்து அம்முவின் வெறுப்பு, விருப்பமாக மாறுமா?

ஈஸ்வர் குழம்பிக் கொண்டு இருக்கும்போதே அவன் கரங்களில் ஒரு மோதிரத்தை கொடுத்து, மணமகள் விரலில் அணிவிக்க வைத்தனர். இயந்திரமாக மோதிரத்தை, பிருந்தாவின் விரலில் மாட்டிய ஈஸ்வரின் பார்வை, சில நொடிகள் அவள் முகத்தில் பதிந்தது. ‘இந்தப் பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறேன்?’ அவன் நினைவடுக்குகளில் தேடத் தொடங்கியது. 

மேனுஃபாக்சரிங் டிபெக்டால் அவன் கண்கள் மீண்டும் அம்முவிடமே மையம் கொண்டது. ஆனால் மூளை ‘தன் அருகில் நிற்கும் பெண்ணை, எங்கு சந்தித்தோம்?’ என தீவிர தேடலில் இருந்தது. 

விழா இனிதே முடிவுற்று, அனைவரும் இல்லம் திரும்பினர்.  சற்று ஓய்வெடுத்த பின்னர், ஈஸ்வரும் அவனது நண்பர்களும் அங்கிருந்து கிளம்ப வேண்டும்.

தனதறையில் படுத்திருந்த ஈஸ்வரின் உடல் ஓய்விலிருந்த போதும், மனம் சிந்தனை வசம்.’அந்த பெண்… அவள் பெயர் என்ன?’ என தலையை தட்டி யோசிக்க,’பிருந்தா எஸ் பிருந்தா. அவளை இதற்க்கு முன் எங்க பார்த்தேன்?’ விடை கிடைக்கவில்லை. 

‘நான் அமிர்தான்னு நினைச்சு கல்யாணத்துக்கு சரி சொன்னா, இப்போ பிருந்தான்னு சொல்றாங்க. எங்கே நடந்த குழப்பம் இது? கோவில்ல பாடிய பொண்ணுன்னு அம்மா சொன்னாங்க?’ இப்போது விடை கிடைத்தது அவளை எங்கே சந்தித்தான் என்று. 

‘அன்னைக்கு அம்மு கூட சண்டை வரதுக்கு முன்னாடி, இந்த பெண்ணை கோயில்ல பார்த்தேன். கார்த்தி கூட இவகிட்ட அமிர்தாவை பத்தி கேட்டு கொண்டிருந்தானே?’ இப்போதும் அவன் நினைவுகள் முழுவதும், அம்முவை சம்மந்தப்பட்டுத்தி மட்டுமே. அதை உணராதவனின் முகம் அஷ்டக்கோணலானது.

கார்த்திக் ‘அமிர்தாவை  விரும்புகிறான்’ நினைவே கசந்து வழிந்தது. அதேநேரம் ஈஸ்வரின் நினைவுகள் அம்முவிடம் இழுத்துச் சென்றது.

‘அம்மு சின்ன பெண்ணுன்னு விலக நினைச்சேன். ஆனால் இப்போது அதே வயசு பெண்ணை பேசி முடிச்சுருக்காங்க. நான் அம்முவை விலகினது சரியா, தப்பா?’ என குழம்ப ஆரம்பித்தான். 

மனது அம்மு என்கிறது?

மூளை அமிர்தா என்கிறது?

நிச்சயிக்கப்பட்டது பிருந்தா?