நினைவு தூங்கிடாது 11.3

பைத்தியம் பிடிக்காத நிலையில் இருந்தான் ஈஸ்வர். ‘எங்காவது கண் காணாமல் ஓடிவிடலாமா?’ என அவன் மனம் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தது. அவனுக்கு ஆண்டவனும் உதவினார், என சொல்வதை விட, விதி தன் கோரத்தாண்டவத்தை ஆரம்பித்தது.

அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை. ‘உடனடியாக இங்கிருந்து கிளம்ப வேண்டும்.’ மனம் சற்று ஆசுவாசப்பட்டது. 

‘இங்கிருந்து சென்றால் தன் மனம் தெளிவடையும்’ என சரியாகவே சிந்தித்தான். ஆனால் அவன் அறியாத ஒன்று, ‘அவன் புரிந்து, தெளிந்து வரும்போது அனைத்தும் கைமீறி இருக்கும். அவனது உயிருக்குயிரான ஒன்றை மொத்தமாக இழந்து இருப்பான்’ என்று.

அவன் வருவதற்குள் பல அனார்த்தங்கள் நடக்கப்போவதை அறிந்திருந்தால் அவன் கிளம்பியே இருக்கமாட்டான். 

அதை அறியாதவன், அவன் நண்பர்கள் இருவரை அவர்கள் வந்த காரில் அனுப்பிவிட்டு, இன்னொரு நண்பனை தன்னுடன் அழைத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானான்.

“கல்யாணம் முடிவாகியிருக்க நேரத்தில், வெளிநாடு பயணம் அவசியமா?” என தேவி முணுமுணுத்துக் கொண்டார்.

“அம்மா ஆறு வாரம் தான் போறேன். கல்யாணத்துக்கு மூணு மாசம் இருக்கு. ஒன்றறை மாசத்தில் திரும்பி வந்து விடுவேன். அப்புறம் என்ன பிரச்சனை உங்களுக்கு?” என அவர்களை சமாதானப்படுத்தி கிளம்பியிருந்தான். 

அவன் நினைவு முழுவதும் அம்முவே நிறைந்து இருந்தாள். ‘செல்லும் முன் அவளை ஒரு முறை பார்த்துவிட மாட்டோமா?’ என மனம் ஏங்கி தவித்தது. 

எளிதாக, அவளை விலகிச்செல்ல முடிவெடுத்தவனால், அவ்வளவு எளிதில் அதை செயலாக்க முடியவில்லை. 

அவனது நினைவின் சக்தியோ? அல்லது விதியின் சதிராட்டமோ? அம்முவை கண்டான். சென்னை கிளம்பும்போது, வழியிலிருந்த கோயிலின் குளக்கரையில், தனியாக அமர்ந்திருந்தாள் பாவை. மனமெங்கும் மகிழ்ச்சி பொங்க தன் நண்பனை காத்திருக்கச் சொல்லிட்டு அவளை நோக்கி சென்றான்.

ஆனால் இவனது மகிழ்ச்சிக்கு நேரெதிராக அம்மு சோகத்தில் தத்தளித்து கொண்டிருந்தாள். ஈஸ்வரை பிருந்தாவின் கணவனாக, கனவில் கூட அவளால் நினைக்க முடியவில்லை. பழகிய இந்த சில நாட்களிலேயே, அவனது அடாவடி குணங்களை புரிந்து கொண்ட பெண்ணால், பூ போன்ற மனமுடைய பிருந்தாவுக்கு அவன் பொருத்தமில்லை என முடிவு செய்யமுடிந்தது. அவனை கட்டிக்கொண்டாள் சூறாவளியில் மாட்டிய பூவின் நிலை தான் பிந்துவுக்கு. அவனிடம் பிந்துவின் வாழ்க்கையை பலியிட்டு, விஷ பரீட்சை மேற்கொள்ள அவள் தயாராக இல்லை. 

பிந்துவின் திருமண செய்தி கேட்டதிலிருந்து, மகிழ்ச்சியோடு தன் மாமாவின் வரவை எதிர்பார்த்து கொண்டிருந்தவளுக்கு, பேரிடியாக அந்த இடத்தில் அவளின் கட்டவண்டி வந்து நின்றான். 

இன்று காலையில் பிந்துவின் அருகில் ஈஸ்வரை கண்ட, அம்முவின் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது. மனம் அவன் மேல் வெறுப்பையும், வெறுமையையும் சேர்ந்தே சுமந்தது. 

‘பிந்து, அவனிடம் மாட்டிக்கொண்டு கஷ்டப்படக்கூடாது. இந்த திருமணத்தை எப்படி நிறுத்தலாம்?’ என ஆழ்ந்த சிந்தனையில் இருந்த அம்மு, நீரில் தன் மென் பாதங்களை அலையவிட்டு, குளக்கரையில் அமர்ந்திருந்தாள்.

தன்னருகில் ஏதோ அரவம் உணர்ந்த அம்மு, அதில் தன் சிந்தனை தடைபட திரும்பி பார்த்தாள். அங்கே முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் நின்று கொண்டிருந்தான் தன் சிந்தனையின் நாயகன். 

‘அம்முவை கண்ட மகிழ்ச்சி’ அவன் முகத்தில் தெரிய, அதை ‘திருமண மகிழ்ச்சி’ என தவறாக புரிந்து கொண்டாள் அம்மு.

அவன் முகத்திலிருக்கும், நெஞ்சம் நிறைந்த சந்தோஷ புன்னகை, இன்னும் சற்று நேரத்தில் மறையப் போகிறது, அது மீண்டும் கிடைக்குமா என்பது சந்தேகமே?

†††††

காலையில் அணிந்திருந்த அதே பாவாடை தாவணியில், முகம் சோர்வையும் கவலையும் காட்ட, தலை கலைந்து அலங்கோலமாக அவளிருந்தாள். அவள் எப்படி இருந்தாலும்? அவன் கண்களுக்கு தேவதையாகவே தோன்றினாள்.

‘குழந்தை உள்ளம் கொண்ட அந்த குமரியை காண்பது, இதுவே கடைசிமுறை’ என தெரிந்தோ என்னவோ, அவன் கண்களால் அவளை படம் பிடித்து, இதயத்தில் சேமித்து கொண்டான்.

“ஹாய் நீலாம்பரி! வாட் எ சர்ப்ரைஸ்? ஊருக்கு கிளம்பிட்டு இருந்தேன். எங்க உன்னை பார்க்காமல் போயிடுவேனோன்னு, நினைச்சேன். நல்ல வேலை உன்னை பார்த்துட்டேன்.” அவள் மனநிலை புரியாமல், இவன் பேசிக்கொண்டிருந்தான். 

“நானும் உங்களைப் பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன்” என்றாள் சிடுசிடு குரலில்.

உல்லாச மனநிலையிலிருந்த ஈஸ்வர், அவள் குரலை உணரவில்லை. “ரியலி? வாட் எ கோ இன்ஸிடெண்ட். நானும் உன்ன பார்க்க ஆசைப்பட்டேன். நம்ம ரெண்டு பேரோட வேவ் லெந்தும் ஒரே மாதிரி ட்ராவல் பண்ணுது. இதுல இருந்து என்ன தெரியுது?” என நிறுத்தினான்.

அவனை அறிய வகை ஜந்துவை பார்ப்பதுபோல் பார்த்து வைத்தாள் பெண். “அதையும் நீயே சொல்லிடு கட்டவண்டி” என்றாள் கையைக்கட்டிக்கொண்டு அலட்சியமாக.

இப்போது எல்லாம் அந்த கட்டவண்டி, என்ற வார்த்தை அவனுக்கு இனித்தது. அவளுக்கு தன்னிடமுள்ள உரிமையை பறைசாற்றியது போலிருந்தது. “இந்த மாமனை பார்க்காமல் இருக்க முடியலைன்னு தெரியுது?” என மனம் விட்டு சிரித்தான் கடைசியாக.

ஈஸ்வரனின் கோபம், வெறுப்பு, கவலை, புன்னகை போன்ற முகங்களை அனைவராலும் காணமுடியும். அவனது மனம் விட்ட சிரிப்பும், சந்தோஷமும் காணக்கூடிய, ஏன் தரக்கூடிய ஒரே ஜீவனும் அம்மு என்கின்ற அமிர்தா மட்டுமே. அதை உணராது போனது யாரின் துரதிர்ஷ்டம்? 

“மண்ணாங்கட்டி! உங்களைப் பார்த்து பிந்து கூட உங்களுக்கு நடக்க போற கல்யாணத்தை நிறுத்த நினைச்சேன்.” கோவத்தில் வார்த்தைகள் வெடித்தது.

அவளின் கோபத்தில் ஈஸ்வரன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி கொஞ்சம் குறைந்தது. 

“ஏன்?” ஒரு வார்த்தை கேள்வி. ‘நான் உன்னை விரும்புறேன்’ என சொல்லிவிடமாட்டலா என்று எதிர்பார்ப்பு.

‘நீ நல்லவன் இல்லை. பொறுக்கி.’ என அவன் முகத்திற்கு முன் சொல்ல முடியுமா?

“தெரியாது! ஆனால் இந்தக் கல்யாணத்தை நிறுத்துங்க.” என மென்று விழுங்கினாள் பெண்.

“சரி” என்றான் அவளது கண்களை கூர்ந்த படி. பார்வையாலேயே அவளை தன்வசப்படுத்த எண்ணினானோ?

அவன் சம்மதம் சொல்லியதும் திகைத்து விழித்தாள் பெண். ‘அவனுடன் போராடவேண்டும்’ என நினைத்திருந்த பெண்ணிற்கு, காரியம் எளிதாக முடியவும்,’இவன் எப்படி பிந்துவை திருமணம் செய்ய சம்மதித்தான்?’ என்ற குழப்பத்துடனே, ‘எது எப்படியோ இவனிடமிருந்து பிந்து தப்பித்தால்’ ஒரு பெருமூச்சை வெளியிட்டு, “நன்றி” எனத் திரும்பி செல்ல முயன்றாள்.

அவளது கரத்தை பற்றி தடுத்த ஈஸ்வர், தன்னை நோக்கி திருப்பி “அந்த கல்யாணத்தை நிறுத்திடறேன். அதுக்கு பதில் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என அவள் மனம் அறிய கொக்கி போட்டான்.

அவன் கேள்வியில் தூக்கிவாரிப் போட திகைத்து விழித்தாள் பெண். “என்ன சம்மதமா?” ஒற்றை புருவம் ஏற்றி வினா தொடுத்தான்.

சற்று சுதாரித்த பெண்,”உன்கிட்ட மாட்டிகிட்டு பிந்து கஷ்டப்படக் கூடாதுன்னு நினைச்சேன். அதுக்காக நான் உன்ன கட்டிக்க முடியுமா?” மரியாதையை சுத்தமாக கைவிட்டிருந்தாள்.

“எதுக்கு கஷ்டப்படணும்?” கேள்வி சூடாக வந்தது.

“நீ ஒரு பொறுக்கி. உன்கிட்ட இருந்து பிந்துவை காப்பாத்தனும்.” தான் இருக்கும் இடம் மறந்து, தங்கள் தனிமையை மறந்து வார்த்தை விட்டிருந்தாள்.

அவள் பொறுக்கி என்றதில் அவனது கோபம் ஜெட் வேகத்தில் ஏறியது. 

“பொறுக்கியா?” கேள்வியில் அதிக சூடு. 

“தனியா இருந்த என்கிட்ட வரம்பு மீறி நடந்துகிட்ட. அப்படி ஒண்ணுமே நாடக்காத மாதிரி புது மாப்பிளை ஆகிட்ட. அப்புறம் உன்னை பொறுக்கின்னு சொல்லாம வேற என்ன சொல்றது?” காட்டமாகவே பதிலளித்தாள். 

“சின்ன பொண்ணுன்னு உன்னை விட்டதுக்கு, இதுவும் பேசுவ, இதுக்கு மேலயும் பேசுவ. பொறுக்கி என்ன பண்ணுவான்னு இப்போ உனக்கு காட்டுறேன்.” மிதமிஞ்சிய கோபத்தில் சுற்றிலும் கண்களை ஓட்டினான்.

கோவில் கருவறையில் சாந்தமாக வீற்றிருந்த அம்மன் அவன் கண்ணில் பட, அவளை அங்கு இழுத்துச் சென்றவன், அம்மன் கழுத்திலிருந்த மஞ்சள் கயிறை எடுத்து, அவள் சுதாரிக்கும் முன் அவள் கழுத்தில் கட்டியிருந்தான். 

அம்மன் கழுத்தில் இருந்து, அம்முவின் கழுத்தில் ஏரிய மஞ்சள்கயிறு, அம்முவுக்கு வேலியா? விலங்கா?

†††††

“என்னை பொறுக்கின்னு சொன்னில. இனி இந்த பொறுக்கி தான் உனக்கு கணவன், புருஷன், மாமா, மச்சான், அத்தான் அத்தனையும். என்னைத் தவிர உன் வாழ்க்கையில் வேறு ஒரு ஆண்மகனுக்கு இடமில்லை. அப்படி யாரையாவது நீ மனசில் நினைத்தால் கூட, உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன், ஏன்னா நீ என் மனைவி. ஆனால் நீ விரும்பும் அந்த ஆண்ணை தட்டி தூக்கிடுவேன். சீக்கிரம் திரும்பி வருவேன். என்னுடனான திருமண வாழ்க்கைக்கு தயாராகு” என அவளை மிரட்டிவிட்டு, அவள் கண்ணீர் சிந்துவதை பொருட்படுத்தாமல் அங்கிருந்து கிளம்பினான். 

அவள் பதினெட்டு வயது பூர்த்தியாகாத பெண், இந்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகாது என்பதை மறந்தான்; அவள் கிராமத்தில் வசிப்பவள், அவள் கழுத்திலிருக்கும் மஞ்சள் கயிறுக்கு பதில் சொல்ல வேண்டும் என்பதை மறந்தான்; அவளுக்கும் மனம் என்ற ஒன்று உண்டு, அதில் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் உண்டு என்பதை மறந்தான்; இன்று காலையில் ஒரு பெண்ணின் விரலில் மோதிரம் போட்டு, அவள் மனதில் ஆசையை வளர்த்து விட்டிருக்கிறோம் என்பதை மறந்தான்; அவன் இரு பெண்களுக்கு செய்த துரோகம் அவனை பந்தாடப்போகிறது.

அவள் யார்? அவள் பெற்றோர் யார்? அவள் நிஜப்பெயர் என்ன? எதுவும் தெரியாமல் அவன் செய்த காரியம், அவள் வாழ்க்கையை சுழட்டி அடிக்கப் போகிறது.

இந்த நிமிடம் அவனை ஆட்சி செய்தது கோபமும், அவள் மீதான கண்மூடித்தனமான காதலும். 

அவள் தன்னை பொறுக்கி என்றதில், ஈஸ்வர் கோபத்தில் செய்திருந்தாலும், ‘எங்கே அவள் தன்னை முழுதாக வெறுத்து விடுவாளோ? அவள் தனக்கு கிடைக்காமல் போய் விடுவாளோ?’ என அஞ்சியே அவள் கழுத்தில் தாலியை கட்டினான். ஆனால் இந்தத் தாலியை கட்டியதாலே அவள் தனக்கு கிடைக்காமல் போவாள் என்பது தெரியாமல் போனான்.

†††††

அவன் சென்ற வெளிநாட்டு பயணம், இழுத்துக்கொண்டே சென்று, ஆறு மாதங்கள் முடியும் தருவாயில் தான் அவனால் திரும்ப முடிந்தது. 

இந்தியா திரும்பிய அடுத்தநாளே தன்னவளை காண பசுஞ்சோலை ஓடிவந்த ஈஸ்வருக்கு கிடைத்ததோ, பேரிடி.