நினைவு தூங்கிடாது 13

நிஜம் 13

நட்புக்கு வயது தேவை இல்லை

உண்மை அன்பு போதும்

என் மேல் நீங்கள் கொண்ட நட்பை

என்னவென்று நான் சொல்ல 

தங்களது காரில், ரிஷியின் கை இடுக்கில் தன் கைகோர்த்து, அவன் தோளில் தலைசாய்த்து கடந்த காலத்துக்குள் பயணித்திருந்தாள் ரிஷியின் மிரு.

ரிஷியின் ஒரு கரம் அவள் கரங்களுக்குள் சிறைப்பட்டிருக்க, மறு கரம் அவள் தலையை கோதி ஆறுதல் அளித்தது. அவள் வாழ்வின் அனைத்து கருப்பு பக்கங்களையும், அறிந்திருந்த ரிஷி அவளுக்கு ஆறுதலானான். நீண்ட நெடிய நான்கு வருடங்களுக்கு பிறகு, அவள் விழிகளில் தோன்றியது மௌன கண்ணீர். அது கடந்த காலத்தின் எச்சங்களா? இல்லை வருங்காலத்தின் மிச்சங்களா?

அதே மாதிரி ருத்ரேஷ்வரனும் தன்னவளுடனான இனிய நினைவுகளில் சஞ்சரித்து, அந்தப் பயணத்தை மேற்கொண்டான்.

தன் நினைவுகளில் என்றும் தூங்கிடாது இருக்கும், நினைவலைகளில் தோன்றிய காட்சிகள், ஈஸ்வரனுக்கு இனிய பக்கங்கள் என்றால், அதே நினைவலைகளின் பின் நடந்த கோர தாண்டவங்கள், மித்ரா வாழ்வின் கசந்த பக்கங்களானது. 

கார் ஓட்டுனர் காரை செலுத்த, பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ருத்ராவின் கண்கள், தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரையே வெறித்து கொண்டிருந்தது.

‘இவர்களை எப்படி பிரிப்பது? ரிஷியின் காலை உடைத்தால், ‘தன்னவளை மட்டும் தனியாக அழைத்து வந்து, அவளை எப்படியாது சரிகட்டி, திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கலாம்’ என நான் போட்ட கணக்கு, தப்புக் கணக்காக போய்விட்டது. கால் உடைந்ததையே சாக்காக வைத்து, அவன் இங்கு வந்துவிட்டான். அவனை என்ன செய்வது?’ என மனம் குமுறி கொண்டிருந்தான் ருத்ரேஸ்வரன். 

ருத்ரேஸ்வரனின் மனக்கண்ணில் முன் தினம், மித்ராவுடனும் ரிஷியுடனும் நடந்த உரையாடல் வலம் வந்தது. ரிஷியின் நினைவுகளும், அதை ஒட்டிய நிகழ்வுகளில் சஞ்சரித்தது….

இரண்டு நாட்களாக தன் மிரு பேபி, ஒரு நிலையில் இல்லாமல் தவித்து கொண்டிருந்ததை, அவளின் கண்களிலிருந்தே உணர்ந்து கொண்டான் ரிஷி‌. முகம் எப்போதும் போல் புன்னகையை ஏந்தி இருந்தது, ஆனால் அவளது விழிகளில் மாற்றம். அந்தத் தவிப்பு எதற்காக என்பதும் புரிந்தது. காதலில் மட்டும்தான், முகம் பார்த்து மனதில் நினைப்பதை புரிந்து கொள்ளமுடியுமா? நட்பிலும் உணர முடியும் என நிருபித்தான் அந்த நல்ல நண்பன் மிருவின் வரு.

“மிரு! இங்க வா” அமைதியாக சென்று அவன் முன் நின்றாள்.

“இங்க உட்கார்” என படுக்கையில் தன் அருகே சுட்டினான். கள்ளத்தனம் இருந்தால்தான் தடுமாற்றம் இருக்கும். இருவர் மனதிலும் தூய்மையான அன்பே நிறைந்திருந்தது. எந்த வித தயக்கமும் இன்றி அவன் எதிரே அமர்ந்தாள். 

அவளது வலது கரத்தை தன் இரு கரத்தால் சிறைபிடித்து, அவள் விழியோடு விழி கலந்து,”என்னையும் உன் கூட, உங்க ஊருக்கு கூட்டிட்டு போறியா?” என்ற ரிஷியின் கேள்விக்கு, நம்பமுடியாத திகைப்போடு விழி விரித்தாள் பெண்.

அவளது மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டி,”ஏன் உங்க வீட்டில எனக்கு இடம் கொடுக்க முடியாதா? இந்த முழி முழிக்கிற” விளையாட்டாகவே, அவள் மனதிலிருந்த சஞ்சலத்தை போக்கினான்.

அவனுக்குத் தெரியும் அவள் அந்த ஊர் மண்ணை மிதித்தால், உடைந்து விடுவாளென்று. தற்போது அவளுக்கு இருக்கும் ஒரே பலமும் தான் தான், ஒரே பலவீனமும் தான் தான்.

அவளது பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த பார்க்கிறான் ருத்ரேஸ்வரன். அதை பலமாக மாற்றிக் கொண்டிருக்கிறான் ரிஷி வர்மன்.

ஆனந்த அதிர்ச்சியோடு,”நிஜமா தான் சொல்றியா வரு?” என சந்தோஷமாக ஆரம்பித்தவள், முகம் சுருங்கி,”உன்னால் அங்கு இருக்க முடியுமா? அது ரொம்ப சின்ன வீடு, அதுவும் குடிசை வீடு” என அவளது குரல் உள்ளே சென்றுவிட்டது.

அவளது கம்மிய குரலை சகிக்கமுடியாத ரிஷி,”வீடு சின்னதா இருந்தா என்ன மிரு? நீ என் கண் பார்வையில இருப்ப. எனக்கு அதுதான் முக்கியம். உன்னை விட வேறு எதுவும் எனக்கு பெருசு இல்லை. என்னை நீ பார்த்துக்க மாட்டியா?” அவன் பதிலில் மனம் நெகழ்ந்தாலும், ‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன் ரிஷியால் அங்கு தாக்குபிடிக்க முடியுமா?’ என்ற யோசனையை தத்தேடுத்தாள்.

அவள் இன்னமும் யோசனையில் இருப்பதை உணர்ந்து,”ஏன் மிரு எனக்கு சாப்பாடு போடுறது அவ்வளவு கஷ்டமா? அண்டா சாப்பாடு எல்லாம் வேண்டாம். ஒரு கிண்ணத்தில் குடுத்தா போதும்.” என அவளை வம்பிலுத்தான். இவன் சொல்வது புரியாமல் திரு திருவென விழித்தாள்.

“இல்ல உங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லவும் ரொம்ப யோசிச்சியா. அதுதான் எனக்கு சோ….று போட பயந்து..ட்டியோ..னு நினைச்சேன்?” இழுத்து கூறினான்.

அவன் என்ன சொன்னானென முதலில் புரியாமல் திகைத்தவள், புரிந்தவுடன் அவன் கரங்களில் சிறைப்பட்டிருந்த தன் கரத்தை விடுவித்து, தன்  பூங்கரங்களினால், அவனை போட்டு அடி வெளுத்துவிட்டாள். காலில் அடிபட்டால் எந்திரிச்சு ஓட முடியாத ரிஷி, சந்தோஷமாக அவளிடம் சிக்கிக்கொண்டு, அவள் அடிகளை மகிழ்ச்சியோடு வாங்கினான்.

“நீ வா, உனக்கு சோறு போடாமல் பட்டினி போட்டறேன்.” மறைமுகமாக அவள் சம்மதத்தை தெரிவித்தாள். அதில் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருந்தது.

கடந்த நான்கு வருடங்களாக அவளது சோகம், கொஞ்சல், உரிமை, விளையாட்டு என அனைத்துக்கும், ஒரே சொந்தக்காரன் ரிஷி வர்மா. வெளியே இன்முகத்துடன் வலம் வரும் பெண்ணின், மனதிலிருக்கும் காயங்களையும், அதன் வடுக்களையும் முற்றும் தெரிந்தவன், உடனிருந்து அனுபவித்தவன். வடுக்களை போக்க முடியாவிட்டாலும், காயத்திற்கு மருந்தானான்.

“நீ சோறு போடலைனா என்ன? என்னோட டார்லிங் எனக்கு சோறு போடும். நீ போய் பேக்கிங் வேலையை பார்” என்ற அவனுக்கு, பழிப்பு காட்டி விட்டு தங்களின் உடைமைகளை பயணத்திற்கு தயார் செய்தாள். 

†††††

அவர்கள் பசுஞ்சோலை கிராமத்திற்கு கிளம்புவதற்கு முந்தின தினம், வழக்கம்போல் சொல்லாமல் கொள்ளாமல், திடீரென ருத்ரேஸ்வரன் அவர்கள் முன் தோன்றினான். 

“என்ன ரிஷி? உடம்பு எப்படி இருக்கு?” புருவம் ஏற்றி, குசேலம் விசாரித்தானா? நையாண்டி செய்தானா? என்பது ருத்ரேஸ்வரன் மட்டுமே அறிந்த ரகசியம்.

“எனக்கு என்ன ருத்ரா? என்னோட மிரு கவனிப்பில் உடம்பு நல்லாவே இருக்கு. மனசும் தெளிவா இருக்கு” நக்கல் தூக்கலாக இருந்தது குரலில். ருத்ராவிற்கு கோபம் ஏகத்துக்கும் ஏறியது. பற்களை நறநறவென கடித்து அவனை முறைத்து நின்றான்.

“பாவம் உங்களுக்கு தான் மனசு தெளிவா இல்லபோல? நான் வேணா நல்ல ஹாஸ்பிடலா சஜஸ்ட் பண்றேன்” மீண்டும் நக்கலாகவே தொடர்ந்தான் ரிஷி.

“என்ன ரிஷி என்னை பார்த்தால் உனக்கு லூசு மாதிரி தெரியுதா? உன்னை உயிரோடு விட்டதே என்னோட தப்பு” 

“அது உனக்கு இப்பதான் புரிந்ததா? நீ எல்லாத்திலேயும் ரொம்ப ஸ்லோ ருத்ரா” அவன் வார்த்தைகளிலும் அழுத்தத்திலும் மறைபொருள் இருந்ததோ?

ரிஷியை கோபமாக முறைத்த ருத்ரேஸ்வரனின் கண்கள் மித்ராவிடம் சென்றது. எப்போதும் போல் பார்வையை அவளிடமிருந்து திருப்ப முடியாமல் பசைபோட்டு ஒட்டி கொண்டது. அவன் கால்கள் தானாக அவளை நோக்கி சென்றது. 

அவளை அணைக்க துடித்த கரங்களை மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்தி, “நாளைக்கு கிளம்புவதற்கு ரெடி ஆகிட்டியா?” அவன் கண்கள் அவளை ரசனையுடன் தழுவினாலும் வார்த்தை இறுக்கமாகவே வந்தது.

ஆம் என்ற தலையசைவு மட்டுமே பெண்ணிடம்.

“காலை பத்து மணிக்கு ரெடியா இரு. நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்” பெண்ணின் விழிகள் ரிஷியிடம் சென்றது. ருத்ராவின் கை முஷ்டிகள் இறுகியது.

ரிஷி தொண்டையை செருமிக்கொண்டு,”உங்களுக்கு எதுக்கு சிரமம் ருத்ரா சார்? நானும் மிருவும் எங்க கார்ல வந்திடறோம்.”

ரிஷியை கூர்ந்த ருத்ரா “என்னோட மகாராணியை கூட்டிட்டு போகபோறேன். இதுல எனக்கு என்ன சிரமம் இருக்க போகுது. உனக்கு காலில் அடிபட்டிருக்கும்போது, லாங் டிராவல் கூடாது ரிஷி. அது ஹெல்த்க்கு நல்லது இல்ல”  அவளுக்கு தன் மனதில் உள்ள இடத்தை புரிய வைத்து, ரிஷியின் உடல்நிலையை கூறி அவனது வருகையை தடுக்க முயன்றான்.

முதல் பாதியை லூசில் விட்டுவிட்டு,”காலில் அடிபட்டு இருக்கு ருத்ரா சார். அதனால் என்னால் ஷூட்டிங்கும் போக முடியாது. நல்லா இருந்திருந்தால் ஷூட்டிங்காவது போயிட்டு இருந்திருப்பேன். அதுக்கும் வழியில்லாமல் பண்ணிடீங்க. இங்க தனியா உட்கார்ந்து போரடிக்கிறதுக்கு, அங்க வந்தா மிரு என்னை நல்லா கவனிச்சு, எனக்கே கம்பெனி கொடுப்பா. சோ நோ ப்ராப்ளம்” என்றான் ஒன்றும் தெரியாத அப்பாவியாக.

ருத்ரா திகைத்து நின்றான். சத்தியமாக இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை.  ‘ரிஷியின் காலை உடைத்தால் வீட்டில் முடங்கி விடுவான். பெண்ணை தனியாக அழைத்துச் செல்லலாம். தன் மனதை அவளுக்கு புரிய வைக்கலாம்.’ என திட்டமிட்டிருந்தான். தன் திட்டத்தையே அவனுக்கு சாதகமாக்கிக் கொண்டான், ரிஷி வர்மா என பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது.

அவனை மறுத்து ஒன்றும் சொல்ல முடியாமல், தன் கோப விழிகளால் அவனை உறுத்து விழித்து, எச்சரிக்கை பார்வையோடு அங்கிருந்து சென்றான்.

அவர்கள் கிளம்பும் நேரத்தை அந்த வீட்டின் காவலாளியிடம் தெரிந்துகொண்டு, இப்போது அவர்களை பின் தொடர்கிறான். ‘சிசிடிவி கேமராவை ருத்ரா ஹக் பண்ணுகிறான்’ என்று மித்ரா எப்போது தெரிந்து கோபம் கொண்டாளோ, அதன் பிறகு ருத்ரேஸ்வரன் அந்த வேலையை தொடரவில்லை. 

அவர்கள் தன் நினைவலைகளில் இருந்து வெளி வருவதற்கும், கார் பசுஞ்சோலை கிராமத்தை அடைவதற்கும் சரியாக இருந்தது. 

†††‡†††

நம் நாயகி, நாயகர்கள் பயணித்த கார் வழுக்கிக் கொண்டு அமிர்தா, பிருந்தாவின் வீட்டின் முன்னால் நின்றது. மிருவின் பார்வை அந்த ஓட்டு வீட்டில் பதிந்தது.

அந்த வீட்டை கண்டவுடன், அங்கு தான் அனுபவித்த சந்தோஷ தருணங்கள் அனைத்தும், கண் முன்னால் தோன்றி அவளை உணர்வு குவியலாக மாற்றியது. 

‘தன் அன்னையை வம்பிழுத்து கொண்டு பட்டாம்பூச்சியாக சுற்றித் திரிந்தது; அந்தத் தோட்டத்தில் வைத்து தானும், தன் உடன் பிறந்தவளும் அடித்த லூட்டிகள்; தன்குட்டி சிட்டுகளுடன் தான் அடித்த கொட்டங்கள்; தன் வாழ்வில் இருந்த அனைத்து சந்தோஷத் தருணங்கள்;’ என அனைத்தும் அவள் கண் முன்னால் காட்சியாக தோன்றி அவளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 

நம் கடந்தகால சந்தோச நாட்களை நினைத்தாள், மனம் நெகிழந்து கண்களில் கண்ணீர் சேரும்.

நாம் கண்ணீர் சிந்திய நாட்களை நினைவு கூர்ந்தால்,’இதற்கு போய் கண்ணீர் விட்டிருக்கோமே?’ என வெட்கமே வரும்.

அவளின் அசைவற்ற தன்மையை கண்டு, அவள் நிலையை உணர்ந்து கொண்ட ரிஷி, டிரைவர் சீட்டின் அருகில் அமர்ந்திருந்த மேனேஜர் கிரிதரனை நோக்கி கண்ணசைத்தான். கண் அசைவை புரிந்து கொண்ட கிரியும், பின்புறம் வந்து அவனை ஆதரவாக பற்றி கீழே இறக்கினான். 

கிரியின் துணையுடன் தத்தி தத்தி நடந்து மிருவின் புறம் வந்த ரிஷி, கதவை திறந்து கை தாங்கலாக அவளை காரைவிட்டு இறக்கினான். அவளும் கண்களில் நீர் வழிய அவன் கரங்களைப் பற்றிக் கொண்டே இறங்கி நின்றாள். 

அவள் உணர்வுகளின் பிடியில் சிக்கி இருந்ததால், வீடு திறந்திருப்பதையும், அந்த வீட்டில் தூசிகள் ஏதுமின்றி துடைத்து வைத்தது போல் சுத்தமாக இருப்பதையும், தோட்டமும் அழகுடன் பராமரிக்கப்பட்டு இருப்பதையும் கவனிக்க தவறினாள். 

இந்த சிறு பெண் ரிஷியின் கரங்களில் எப்போது அடைக்கலமானாலோ, அன்றிலிருந்து அவளையும், அவள் சார்ந்த உடமைகளையும் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்டான் ரிஷி வர்மா.

இந்த வீடும், தோட்டமும் அவளுக்கும், அவளது சகோதரிக்கும் பொக்கிஷம் என்பதை தெரிந்த ரிஷி, கடந்த நான்கு வருடங்களாக பராமரித்து வருகிறான் கார்த்திகின் உதவியுடன். 

திடீரென ஒரு விலையுயர்ந்த கார், அம்மு வீட்டின் முன் நிற்கவும் அக்கம் பக்கத்திலிருந்த அனைவரும் அங்கு கூடிவிட்டனர். அவர்கள் வந்தது மாலை நேரம் என்பதால் பள்ளி செல்லும் பசங்களிலிருந்து, காட்டு வேலை பார்க்கும் பெரியவர்கள் வரை அனைவரும் அங்கு கூடிவிட்டனர்.

அந்த ஊரில் கார் வைத்திருக்கும் வீடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதிலும் விலையுயர்ந்த வெளிநாட்டு வகை கார்கள் அந்த ஊரில் காண்பதே அரிது. இந்த வகை கார்கள் பெரிய வீட்டிலும், மேலும் இரண்டு வீடுகளிலும் மட்டுமே இருந்தது. 

அப்படியொரு விலை உயர்ந்த வாகனம், நீண்ட நாட்களாக ஆட்கள் இல்லாத, தங்களின் பிரியமான அம்முவின் வீட்டின் முன் நிற்கவும், ஊரில் உள்ள அனைவரும் அங்கு கூடி விட்டனர். 

காரிலிருந்து இறங்கிய ரிஷியை கண்ட அனைவரும் விழி விரித்தனர். இருக்காதா பின்னே? தங்கள் அபிமான நட்சத்திரம், பிரியத்துக்குரிய கதாநாயகன், திரையில் மட்டும் பார்த்த முகம், அதை தங்கள் கண்ணெதிரே கண்டால், விழி விரிய தானே செய்யும்.

அனைவரும் அவனை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவன் மறு கதவை திறந்து யாரையோ கைப்பிடித்து இறக்கினான். ‘யார்?’ என கண்ட, அனைவரின் முகமும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் ஒருங்கே போட்டி போட்டது.

தங்கள் பிரியத்துக்குரிய பெண்ணை கண்ட மகிழ்ச்சியில், அனைவரும் ரிஷியை மறந்தனர். அந்தப் பெண்ணை சுற்றிவளைத்தனர்.

“உனக்கு எங்களைப் பார்க்க இப்பதான் வர முடிஞ்சதா?”

“ஏன் இவ்வளவு நாள் வரலை?”

“உன்னை பற்றி எங்களுக்கு தெரியாதா?”

“உன்னை நாங்க தப்பா நினைப்போமா?”

என அனைவரும் மித்ராவை பிடி பிடி என பிடித்துக்கொண்டனர். இவர்களை பேசி சமாளித்து பெண் நிமிரும் சமயம், அடுத்த தாக்குதலுக்கு தயாராக குட்டி சுட்டீஸ். 

இப்போது அவர்கள் அனைவரும் டீன் ஏஜ் வயதை அடைந்திருந்தனர். அவளது உயரத்தில், அரும்பு மீசையுடன் பப்பு, சோட்டு, கிட்டுவும், வயது பெண்ணாக இயற்கை அழகோடு பிங்கி. அவர்கள் அனைவரும் அவளை முறைத்து நின்றனர்.

அவர்கள் யாரும், ஒரு வார்த்தை கூட அவளுடன் பேசாமல் முகம் திருப்பி செல்ல, கண்ணில் நீருடன்,”நீங்க யாரும் என் கிட்ட பேச மாட்டீங்களா?” என்ற தவித்த வார்த்தைகள் பாவையிடம்.

“நாங்க எதுக்கு உன் கூட பேசணும்? உனக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்?” முதல் கோபம் சோட்டுவிடமிருந்து.

“சாரிடா சோட்டு. எனக்கு வேற வழி தெரியலை” என்றாள் கண்ணீர் மல்க.

“இங்க வரைக்கும் வந்திருக்க. ஆனா எங்களை பார்க்கனும்னு உனக்கு தோணவே இல்ல. உனக்கு அவ மட்டும் தான் முக்கியம். நாங்க யாரும் உனக்கு தேவையில்லை. அதனால் எங்களுக்கும் நீ வேண்டாம்.” அப்பட்டமான குற்றச்சாட்டு கிட்டுவிடம்.

“டேய் கிட்டு அப்படி சொல்லாத டா. எனக்கு நீங்க எல்லாம் எவ்வளவு முக்கியமுன்னு உங்களுக்கு தெரியாதா? சூழ்நிலை சரியில்லடா” மன்றாடினாள்.

“என்ன பெரிய சூழ்நிலை? எது வந்தாலும் நாங்க உனக்கு துணை இருப்போமுன்னு நீ யோசிக்கல? நாங்க வேற நீ வேற? அப்படிதான் நினைச்சிருக்க, அதனாலதான் எங்களை பார்க்காமல் பேசாமல் இருந்த?” என முகம் திருப்பிக் கொண்டு பப்பு. 

‘இவர்களிடம் என்ன சொல்லி தன்னை புரிய வைப்பது? தன்னுடைய கருப்பு பக்கங்களை புரிந்து கொள்ளும் வயதும், பக்குவமும் இவர்களுக்கு இல்லை.’ என மருகி நின்றாள் பெண்.

“நான் உனக்கு யாரோவா பப்பு? எங்க என் முகத்தைப் பார்த்து சொல்லு” என அவன் நாடி பிடித்து, தன் முகம் காண வைத்தாள். கண்களில் குயளம் கட்ட, அவளது கலங்கிய முகத்தை காணா முடியாமல், மீண்டும்  தன் முகத்தை திருப்பினான் பப்பு.

“நீ எங்களையெல்லாம் மறந்திட்டேல? எங்களை பார்க்கனும்னு உனக்கு தோனவே இல்லையா? நீ இல்லாமல் எங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?” கண்ணீருடன் பிங்கி. 

“நீங்க தானே என் உயிர். உங்களையெல்லாம் மறந்தால் நான் செத்ததுக்கு சமம். இப்ப எனக்குன்னு நீங்க மட்டும் தானே இருக்கீங்க. நீங்களும் இல்லைனா நான் அனாதையாகிடுவேன்” என‌ கதரி துடித்தாள்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட அவர்கள் பதறித் துடித்து அவளைத் தாவி அணைத்துக் கொண்டு,”என்ன பேசுற நீ செத்துப் போறது, அனாதை அது இதுன்னு. எங்க கிட்ட நீ நல்லா அடிதான் வாங்க போறே. மறுபடியும் அது மாதிரி பேசு அப்புறம் ஜென்மத்துக்கும் உன் கூட பேச மாட்டோம். இப்ப பேசினதுக்கு தண்டனையா இன்னும் ஒரு வாரத்துக்கு எங்க கூட பேசாத.” என சமாதானமானது போலாகி, மீண்டும் முறுக்கிக் கொண்டனர்.

“சாரிடா! நான் தெரியாம சொல்லிட்டேன். எனக்கும் உங்களை விட்டா யார் இருக்கா? இனிமேல் இப்படியெல்லாம் பேச மாட்டேன் காட் ப்ராமிஸ்.” என அவர்கள் முகம் பார்க்க, அங்கே இலக்கத்தின் சாயல் தெரியவில்லை.

தலையை இருபுறமும் சலிப்பாக ஆட்டி,”நான் உங்க செல்லம் தானே? என்னை மன்னிக்க கூடாதா?” என தன் வயதையும் மறந்து, அவளின் குட்டி செல்லங்களிடம் கெஞ்சி கொண்டிருந்தாள், அந்த விருது வாங்கிய புகழ்பெற்ற நடிகை.

அவர்கள் பார்வை ரிஷியிடம் சென்று மீண்டும் இவளை அடைந்தது. “சரி சரி ரொம்ப கெஞ்சி கேட்கிற. எங்க ஃபேவரிட் ஆக்டர் ரிஷியை கூட்டிட்டு வந்திருக்க. நீயும் பெரிய ஸ்டார் ஆகிட்ட. அதனால உன்னை மன்னிச்சு எங்க பிரண்டா ஏத்துகிறோம்” அவர்களாலும் இவளுடன் பேசாமல் இருக்க முடியுமா என்ன? அதனால் போனால் போ என அவளிடம் பேசுவதுபோல் பில்டப் குடுத்தனர்.

இவ்வளவு நேரம் கண்ணீரில் கரைந்த பெண், இப்போது,”அவ்வளவு சலிச்சுகிட்டு நீங்க ஒன்னும் என் கூட பேச வேண்டாம். உங்க கூட நான் கா” என முறுக்கி கொண்டாள்.

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என தெரியவில்லை என்றாலும், அவள் முகத்தில் நொடிக்கு நொடி மாறும் பாவனைகளை, கண் சிமிட்டாமல் கண்டிருந்தது ஒரு இதயம். அவளின் கண்ணீரில் தான் கரைந்து, அவள் உருகளில் தன் மனம் உருகி, அவள் பரிதவிப்பில் தான் தத்தளித்து, அவள் மகிழ்ச்சியில் தன் மனம் மகிழ்ந்து என அவளது ஒவ்வொரு செய்கைகளுக்கும் இந்த இதயமும், அவளுடன் இணைந்து  தவித்தது. 

“ஐயய்யோ அப்படியெல்லாம் சொல்லப்படாது. நாங்க உன் செல்லம். நீயும் நாங்களும் அப்படியா பழகி இருக்கோம்? நம்ம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு” என அப்படியே பிலேட்டை திருப்பி போட்டார்கள்.

‘கெஞ்சினால் மிஞ்சுவார்கள், மிஞ்சினால் கெஞ்சுவார்கள்’ என்ற பழமொழியை இந்த இடத்தில் அழகாக பயன்படுத்தினாள்.

நான்கு வருடங்களுக்கு பின் கிடைத்த, அவளுக்கு சொந்தமான கள்ளம் கபடமற்ற அன்பு. எத்தனை யுகங்கள் எடுத்தாலும் இவர்கள் அன்பு மாற்றமின்றி தொடரும் என்பதில் ஐயமில்லை. உண்மை அன்பு மாறுமா?

சுட்டீஸ் அனைவரும் பெண்ணின் கன்னத்தில் இதழ் பதிக்க, இவளும் அவர்களுக்கு முத்தமிட, என நெகிழ்ச்சியான தருணம். இவ்வளவு நேரமும் கொஞ்சம் தள்ளி நின்ற காரிலிருந்து, இவர்களைப் பார்த்து உருகி கொண்டிருந்த உள்ளம், இப்போது பொறாமையில் பொங்கியது.

அவர்களை சமாதானப்படுத்தினாலும், அவர்கள் அனைவரின் வார்த்தைகளும் பெண்ணின் மனதை வாள் கொண்டு அறுத்தது. அவர்கள் கேட்பது நிஜம்தானே என் கவலை, என் சோகம், என்று இருந்தேனே தவிர, ‘இவர்கள் என்னைத் தேடுவார்கள்’ என்பதை சிந்திக்காமல் இருந்து விட்டேன் என மனதில் மருகினாள். 

இவர்களின் உரிமை செல்ல சண்டைகளை முகத்தில் கனிவுடனும், உதட்டில் புன்னகையுடனும், அவள் வீட்டு வாசலில் நின்று ரசித்து  கொண்டிருந்தார்கள் ரிஷி வர்மா, கிரிதரன், டிரைவர், அவர்களுடன் இணைந்து கார்த்திக்.