நினைவு தூங்கிடாது 18

நிஜம் 18

என்னை வேண்டாம் என்று

 நீ விலகி சென்றாலும்…

நீயே வேண்டும் என தவிக்கும்

என் மனதின் தவிப்பை…

 என்னவென்று நான் சொல்ல…

சூரஜ் என்ற நரகாசுரனை அழித்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது. பிந்துவை சந்திக்க அழைத்து செல்வதாக, ருத்ராவிடம் சொன்ன அம்முவால், அன்று அவனை அழைத்துச் செல்ல முடியவில்லை. அவர்களின் நேரம் அனைத்தும் சூரஜுக்கு கட்டம் கட்ட, திட்டம் தீட்ட சரியாக இருந்தது.

ருத்ரா, பிந்துவின் சந்திப்பு இன்று என முடிவு செய்யப்பட்டது. பிந்துவை காண ருத்ரா, அம்முவுடன் ரிஷி, கார்த்திக், கிரிதரன் மூவரும் கிளம்பினர்.

காலையில் அம்முவின் வீட்டிற்கு வந்த ருத்ரேஸ்வரன்.”அம்மு ரெடியா? கிளம்பலாமா?”

“நான் அம்மு இல்லை மித்ராலினி” என முறைத்தாள்.

‘ஐயோ இவளோட ஒரே ரோதனையா போச்சு’ என நினைத்தவன்,”சரி பொம்முமா ரெடியா? போலாமா?” என குழந்தையை சமாதானப்படுத்துவது போல் கொஞ்சினான்.

அவனை முறைத்தபடி வெளியேறியவள், அவளது காரை நோக்கி சென்றாள். அங்கு ஏற்கனவே கிரிதரனும் ரிஷியும் காத்திருந்தனர். கார்த்திக் வீட்டை பூட்டிக் கொண்டிருந்தான்.

செல்லும் அவளை கரம் பற்றி தன் காருக்கு இழுத்து சென்றான்.”விடுங்க ருத்ரா சார். நான் என்னோட கார்ல வரேன்.”

அவள் ருத்ராவை அழைக்கும் விதம், நேரத்துக்கு தகுந்த மாதிரி மாறுகிறது. ஒரு நேரம் பெயர் சொல்லி அழைத்து, மரியாதை இன்றி பேசுகிறாள், ஒரு நேரம் சார் என்று அழைத்து, மரியாதை அளிக்கிறாள். ருத்ரா அவளிடம் மரியாதையை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் எதிர்பார்க்கும் பெயரோ வேறு?

“எப்போதும் யார் கூடயாவது சேர்ந்தே இரு. இன்னைக்கு என்கூட தனியா வா. நம்ம ரெண்டு பேரும் ஜாலியா போகலாம்.” என்றான் உல்லாச மனநிலையில்.

“இல்ல நான் என் கார்லயே வரேன். உங்களுக்கு எதுக்கு சிரமம்.” மறுப்பு தெரிவித்தாள்.

“இதுல என்ன சிரமம் இருக்கு? எல்லாரும் ஒரே இடத்துக்கு தானே போறோம்?” எரிச்சல் எட்டி பார்த்தது.

“பரவாயில்லை நான் என் கார்லயே வரேன்.” என உறுதியாக மறுத்தாள்.

அவளின் தொடர் மறுப்பு ருத்ராவிற்கு எதையோ நினைவு படுத்தியது.”நில்லு அம்மு! ஏன் என் கார்ல ஏற மாட்ட?”

‘புரிஞ்சா சரி’ என மனதில் நினைத்தவள், வாய் வார்த்தையாக “அப்படியெல்லாம் ஒன்னுமில்லை” என சொல்லி, திரும்ப முயன்றவளை தடுத்து,”படபூஜை நடந்த அன்னைக்கும் என் காரை தவிர்த்த. இந்த கிராமத்துக்கு வந்த அன்னைக்கும் என் காரை தவிர்த்த? இப்போதும் தவிர்க்கற, எதுக்காக?”

“விடுங்க சார் நான் போகணும்.” வெட்டி பேசினாள்.

“என் கேள்விக்கு பதில் சொல்லாமல் நீ போக முடியாது”

“என்ன பதில் சொல்லனும் சார்? பலசு எல்லாம் ஞாபகத்தில் இல்லையா? உங்க காரை தொடரதுக்கு கூட ஒரு தகுதி வேணும்ன்னு சொன்னதை மறந்துட்டீங்களா? அந்த தகுதி இல்லாத என்னை நீங்க படுத்திய பாட்டை மறந்துட்டீங்களா? நீங்க மறந்திருக்கலாம், நான் எதையும் மறக்கல, மறக்கவும் மாட்டேன்.” என அவன் கரத்தை விலக்கி, ரிஷயின் அருகில் அமர்ந்தாள். 

அவள் கூறியதை கேட்ட ருத்ரேஷ்வரனின் மனம் ஆடிப் போனது. அன்று கோபத்தில் விட்ட வார்த்தையின் வீரியம், இன்று மனதில் பாறாங்கல்லை வைத்தது போல் கனத்தது.

தள்ளி இருந்தவர்களுக்கு, இவர்களின் உரையாடல் கேட்கவில்லை என்றாலும், ஏதோ பிரச்சனை என்பது மட்டும் புரிந்தது. இது அவர்களுக்குள் தீர்த்து கொள்ள வேண்டியது, என அனைவரும் அதை கண்டு கொள்ளவில்லை.

ருத்ரேஸ்வரனின் மனம் தனலாக எரிந்தது. ‘நான் செய்த காரியமும், பேசிய பேச்சும், என் அம்முவை எவ்வளவு காயப்படுத்தியிருக்கு? எப்படி அவள் மனதை மாற்றி எனக்கு சொந்தமாக்க போகிறேன்? அதற்கு எனக்கு பொறுமையை கொடு ஆண்டவா.’ என வேண்ட மட்டுமே முடிந்தது.

கார்த்திக் ஏறிக்கொள்ள ருத்ரேஸ்வரன் காரை கிளப்பினான். இரு கார்களும் அடுத்தடுத்து மனநல மருத்துவமனையை அடைந்தது.

†††††

அந்த மருத்துவமனையின் ஒரு அறையில், சூனியத்தை வெறித்திருந்தாள் பிந்து. முகத்தில் வாடா புன்னகையுடன், உணர்வுகள் அனைத்தும் துளைந்து போயிருந்தது.

அவளை நெருங்கிய அம்மு,”பிந்து உன்னோட அம்மு வந்திருக்கேன். இப்ப எப்படி இருக்க.” என ஆரம்பித்து ஏதேதோ பேசினாள், எதற்கும் பிந்துவிடம் பிரதிபலிப்பில்லை. அவளுக்கு புரியுதோ இல்லையோ அம்மு தொடர்ந்தாள்.

“பிந்து நம்மை இந்த நிலைமைக்கு ஆளாக்கினவன் இப்போ உயிரோடு இல்லை. நம்ம அம்மாவின் சாவுக்கு காரணமானவன் செத்துப் போயிட்டான். எனக்குன்னு இருக்கிறது நீ மட்டும் தான் பிந்து. சீக்கிரம் சரியாகி வா. உன்னை கஷ்டப்படுத்த மாட்டேன். நானே தோட்டத்துக்கு தண்ணி ஊத்துறேன்.” என ஏதேதோ பிணாத்திக் கொண்டிருந்தாள்.

அவள் அழுவதை பார்க்க முடியாத ரிஷி, தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான். அவனால் அவள் கலங்கி தவிப்பதை காண முடியவில்லை.

அம்முவை நெருங்கிய ஈஸ்வர் அவள் தோளில் கை வைத்து,”ரிலாக்ஸ் அம்மு. உன் சிஸ்டர்க்கு சீக்கிரம் சரியாகும்.” என சமாதானப் படுத்தினான்.

அவனின் குரலைக் கேட்ட அம்மு,”எல்லாம் உன்னால் தான் ஈஸ்வர். நீ எங்க வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், நாங்க நல்லா இருந்திருப்போம்.” என சீறினாள்.

ஈஸ்வர் என்ற பெயர் பிந்துவிடம் மாற்றத்தை கொண்டு வந்தது. அவளது வெறித்த பார்வை மாறி கண்களில் ஒரு பிரகாசம். சில வருடங்களுக்குப் பிறகு அவளது இதழ்கள் உச்சரித்தது,”ஈஸ்… வந்… இனி… எல்லா…” வார்த்தைகள் குளறலாக வர, மயக்கத்தில் ஆழ்ந்தாள். அதிக மகிழ்ச்சி மூளை நரம்புகளை தாக்கியது.

அவளிடம் தோன்றிய மாற்றத்தை கண்ட அனைவரும் மகிழ்ந்தனர். அவளிடம் ஓடிய அம்மு,”பிந்து, பிந்து என்னை பாரு. நான் பேசுறது கேக்குதா? இனி நீ சீக்கிரம் சரியாகிடுவ. எனக்கு அந்த நம்பிக்கை வந்துடுச்சு. இதோ உன்னோட ஈஸ்வரை கூட்டிட்டு வந்துட்டேன். கண்ணை திறந்து பாரு. இனி உன்னை விட்டுட்டு போக மாட்டாரு.” என ஈஸ்வரின் கரத்தை பற்றி, பிந்துவின் கைகளில் வைத்த அம்மு, அவள் இஷ்டத்திற்கு வாக்கை அல்லிவிட்டு, ஈஸ்வரின் தலையில் பெரிய இடியை இறக்கினாள். அவனோ பேச்சற்று திகைத்துப் போய் நின்றான். 

மயக்கத்திற்குள் செல்லும் பிந்துவின் நிலையை மனதில் கொண்டு, ருத்ரேஸ்வரனால் எதுவும் மறுத்து பேச முடியவில்லை ‘ஆப் அடித்த குரங்கின் நிலை’ 

பிந்து சரியாவது அனைவருக்கும் மகிழ்ச்சியே. ஆனால் ஈஸ்வர் என்ற பெயர் பிந்துவிடம் தோற்றுவித்த மாற்றத்தை கண்டு திகைத்தனர். அதை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் திண்டாடினர்.

ஈஸ்வர்! பிந்துவின் மனதில் இவ்வளவு ஆழ பதிந்திருப்பான் என்பதை நம்ப முடியவில்லை. ஈஸ்வர் என்ற பெயருக்கு இவ்வளவு சக்தியா என குழம்பினர்.

ஈஸ்வர் மனதில், அம்மு மட்டுமே இருக்கிறாள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவனால் வேறு எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்க முடியாது என்பது உறுதி. அப்போ பிந்துவின் நிலை?

ஒருவேளை பிந்து மனதில் ஈஸ்வர் இருந்தால்? ஈஸ்வரை கட்டாயப்படுத்தி, பிந்துவுக்கு திருமணம் செய்து வைத்து விடுவாள் அம்மு. 

அப்போ ஈஸ்வரை மனதில் சுமந்திருக்கும் அம்முவின் நிலை? ஈஸ்வரை தவிர வேறு யாரையும், அவள் ஏற்றுக் கொள்வாளா என்பது சந்தேகமே? காயமளித்தவனும் அவனே, மருந்தும் அவனே.

‘இப்போது என்ன செய்வது?’ என ருத்ரேஸ்வரனுடன் இணைந்து ரிஷியும் கவலை கொண்டான்.

‘பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் முடிந்த கதை.’ ஈஸ்வர் ஏதோ நினைத்து செய்ய, அது எங்கோ முடிந்திருக்கிறது. இப்போது அதுவே அவனுக்கு தலைவலியானது.

மூன்று பேரின் வாழ்க்கை பிழையாக நிற்கிறது. அவர்களின் எதிர்காலம் பிந்து என்ற பெண்ணிடம் உள்ளது. அவள் கூறப்போகும் பதில் என்ன? காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.

ஒவ்வொருவரும் ஒன்று நினைக்க, தெய்வத்தின் கணக்கு என்ன?

†††††

பிருந்தா முழுதாக மயங்கவும், தன் கையை வெடுக்கென்று உறுவி, வேகமாக வெளியேறினான். கார்த்திக் அவனை பின் தொடர்ந்தான். ரிஷி, அம்முவின் பார்வை செல்லும் அவர்களையே பின்தொடர்ந்தது.

கோபத்தில் வெளியேறிய ருத்ரேஷ்வர், மருத்துவமனை வளாகத்திலிருந்த தோட்டத்தில் புகுந்து, கருமேகங்கள் சூழ்ந்த வானத்தையே வெறித்திருந்தான். ‘என் பெண் நிலவும், இந்த  கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் தான் உள்ளது. என்றேனும் கருமேகங்களை விலகி, தன்னிலவு ஒளிர்விடுமா?’ என முதல் முறை ஐயம் கொண்டான்.

‘நீ சந்தேகிக்கவே வேண்டாம். அது அவ்வளவு சுலபமில்லை.’ என அவனைத் தொடர்ந்து வந்த கார்த்திக் கூறினான்.

வானத்தை வெறித்திருந்த ருத்ரேஸ்வரனின் தோளில், கை வைத்து அவனது கவனத்தை தன் புறம் திருப்பினான் கார்த்திக்.

“பாரு கார்த்திக்! என்னை அவளோட சிஸ்டருக்கு தாரை வார்த்து கொடுக்க தயாராகிட்டா.” என மனம் குமுரினான்.

“ஈஸ்வர் நான் இப்ப சொல்றதை சரியா புரிஞ்சுக்குவேன்னு நினைக்கிறேன். நாலு வருஷம் கழிச்சு உன்னை பசுஞ்சோலை கிராமத்துக்கு வர வச்சது, பிந்துவை சரி பண்றதுக்கு தான்.” ஈஸ்வருக்கு ஒன்றும் புரியவில்லை.

“நான் தானே அம்முவை மிரட்டி, இங்க கூட்டிட்டு வந்தேன். நீ என்னமோ வேற கதை சொல்ற? ஏற்கனவே ஒரு தடவை இது மாதிரி சொன்ன.”

“நல்லா யோசி ஈஸ்வர், அன்னைக்கு ஃபங்ஷன் முடிஞ்சதும், அம்மு உன் கூட பேசி இருந்தா என்ன பண்ணியிருப்ப?”

‌”அவகிட்ட ‘ஏன் என்னை விட்டுவிட்டு போனான்னு’ கேட்டிருப்பேன். உன்கிட்ட, ‘ஏன் அவள் உயிரோடு இல்லைன்னு பொய் சொன்னேன்னு’ கேட்டு சண்டை போட்டிருப்பேன். அம்மா கிட்ட சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணி இருப்பேன்.”

“அதனாலதான் உன்னை சுத்தல விட்டு இந்த ஊருக்கு வர வச்சா?”

“புரியல”

“உன் பேரை கேட்கவும், பிந்துவோட கண்ணுல கண்ணீர் வந்துச்சு. அதுவரை அவகிட்ட எந்த உணர்வுமில்லை. அப்போ புரிஞ்சது அவ உன்னை எதிர்பார்க்குறானு. உன்கிட்ட விஷயத்தை சொல்லியிருந்தா, நீ இங்கு வந்து இருப்பியா? பிந்துவை கல்யாணம் பண்ண சம்மதிப்பயா?”

“நிச்சயம் சம்மதிச்சிருக்க மாட்டேன்.” என்றான் உறுதியாக. அவன் உறுதியில் கார்த்திக் மனம் மகிழ்ந்தான்.

“அதனாலதான் உன் ஈகோவை தூண்டி இங்க வரவச்சா. நான் சொன்னேன்ல உனக்கும் எனக்கும் பெரிய வித்தியாசம் இல்லைன்னு, அது இதைதான். ரெண்டு பேரும் அவளை விரும்பினோம். என்ன எனக்கு ஊரறிய கல்யாணம் ஆயிடுச்சு, உனக்கு நிச்சயமாயிடுச்சு.”

“என்ன விரும்பினோம்னு இறந்த காலத்துல சொல்ற? நான் இப்பவும் அவளை தான் விரும்புகிறேன். எப்பவும் அவளை தான் விரும்புவேன்.” என்றான் உறுதியாக.

“நான் அம்முவை விரும்பினது உண்மை. அதே மாதிரி இப்போ ரேகாவோட மகிழ்ச்சியா வாழ்வதும் உண்மை. அது உனக்கும் பொருந்தும். பிந்துவை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இரு. அம்முவுக்கு ரிஷி தான் பொருத்தமானவன். அவளை உள்ளங்கையில் வைச்சு தாங்குவான்.” என திரியை கொளுத்தி விட்டு சென்றான்.

அவன் பற்ற வைத்த நெருப்பு சரியாக பற்றிக்கொண்டது, ‘அவன் உள்ளங்கையில் வைச்சு தாங்கினால், நான் என் நெஞ்சில் வச்சு தாங்குவேன். பார்த்துக்கலாம் நானா? அவனா?’ என மனதினுள் சவாலிட்டான். 

‘ரிஷி அம்முவிற்கு செய்த உதவி மாபெரும் உதவி தான். அதற்காக என் அம்முவை நான் அவனுக்கு விட்டுக் கொடுக்க முடியுமா?’ மனம் மீண்டும் முரண்டியது.

†††††

கார்த்திக் சென்ற சிறிது நேரத்தில் அம்மு ஈஸ்வரை தேடி வந்தாள். அவளை கண்ட ருத்ரேஸ்வரன் அவளை பார்வையால் எரித்து சாம்பலாக்கினான். அந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் பெண்ணின் தலை தாழ்ந்தது.

“பிந்து உங்க மேல ஆசை வச்சிருக்கானு சொன்னேன், நீங்க நம்பல. நடந்ததை உங்க கண்ணால பாத்துட்டீங்க. இப்ப ஒத்துக்கறீங்களா?”

“இல்ல! இன்னும் என்னால் நம்பமுடியல. ஒருவேளை அது உண்மையா இருந்தாலும்? என் மனசுல இருக்கிறது நீ மட்டும் தான். உன்கிட்ட மட்டுமே நான் பேசி பழகி இருக்கேன். என்னால உன்னை தவிர வேற யாரையும் கல்யாணம் செஞ்சுக்க முடியாது.”

“அப்ப ஊரறிய விரலில் மோதிரம் போட்டு, நிச்சயம் பண்ணின அவளுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?”

“ஊரறிய அவளுக்கு மோதிரம் போட்டாலும், உனக்கு தான் தாலி கட்டினேன்.”

“அது தாலி இல்ல, வெறும் மஞ்சள் கயிறு. அதுவும் நீங்க கட்டின கொஞ்ச நேரத்தில், என் கழுத்தை விட்டு இறங்கிடுச்சு. இதுல இருந்தே தெரியலையா? உங்களுக்கான பெண் நான் இல்லை”

“நான் கட்டின தாலி உன் கழுத்தை விட்டு இறங்குச்சு, எதுக்குன்னு யோசிச்சயா?” சிறிது இடைவேளை விட்டு மீண்டும் தொடர்ந்தான்.

“ஒருவேளை நான் அன்னைக்கு தாலி கட்டளைனா? நீ அவங்ககிட்ட மாட்டி இருக்க மாட்ட. இன்னும் பல பெண்களை நாசம் செய்திருப்பாங்க. அந்தத் தாலியால தான் ஒருத்தனை வதம் செய்திருக்க. பல பெண்களோட மானத்தை காப்பாத்தியிருக்க. அதுக்கு அந்த அம்மன் தேர்ந்தெடுத்தது நம்ம ரெண்டு பேரையும். இதுல இருந்து தெரியலையா? அந்த ஆண்டவனோட ஆசையே நாம ரெண்டு பேரும் சேர்றதுதான்.” என அவளை குழப்பி, தன் மீது கவனத்தை திருப்ப முயன்றான். பெண்ணிடம் மௌனம்.

“திரும்ப சொல்லுறேன், என் மனசில் இருக்க ஒரே பொண்ணு நீ மட்டும் தான். என்ன ஆனாலும் என் கை உனக்கு மட்டுமே தாலி கட்டும். பிந்து சரியாகி வரட்டும் அப்பறம் பேசிக்கறேன்” என அந்த இடத்தை விட்டு அகன்றான்.

செல்லும் அவனையே கண்கலங்க பார்த்திருந்தாள் அம்மு. அவன் பெண்ணை குழப்ப முயன்றாலும், அவள் மனதில் பதிந்திருப்பது, மேலே எழுந்தது.

‘அவன் பிந்துவுக்கு சொந்தமானவன். உன் அக்கா கணவன். அவனை உன் மனசில் நினைக்கிறதே பெரும் பாவம். இங்க வந்தா அவனை இழக்க வேண்டுமென தெரிஞ்சு தான, இந்த முடிவை எடுத்த. அப்புறம் எதுக்கு பீல் பண்ற? அவன் உன்னை குழப்ப பார்க்கிறான். எங்கேயும் மனம் இலகிடாத. அப்புறம் பிந்துவின் வாழ்க்கை கேள்வி குறியாகிடும். சியர் அப் கேர்ள்.’ தன்னைத்தானே தேற்றிக் கொண்டாள், அடப்பாவி பெண் மானாக மாறிய, அப்பாவி பெண் மான்.

†††††

பிந்துவின் சிகிச்சை நடந்து கொண்டிருப்பது பசுஞ்சோலை அருகிலிருக்கும் ஒரு நகரில். அம்முவிற்கு அந்தக் கயவனை பழிவாங்கும் எண்ணம், மனதில் பதிந்திருந்ததால், பிந்துவை அங்கயே ஒரு மருத்துவமனையில் சேர்த்து, ரேகாவின் பொறுப்பில் அவளை விட்டாள்.  அவளுக்கு நடக்கும் சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தும் ரிஷி ஏற்றுக் கொண்டான்.

ருத்ரேஷ்வரன்! தன் திருமணம் தடை பெற்ற பின், அவனை சுற்றி நெருப்பு வளையம் அமைத்து கொண்டான். காண்பவர் அனைவரையும் ஒரே பார்வையால் சுட்டெரித்தான். அவனது அன்னையால் கூட அந்த வளையத்தை கடந்து, வேறு பெண்ணை திருமணம் செய்ய, அவனிடம் சம்மதம் வாங்க முடியவில்லை.

ஒருவனின் திருமணம் தான் தடைப்பட்டு நின்றுவிட்டது.  அட்லீஸ்ட் கார்த்திக்கின் திருமணத்தையாவது செய்து பார்க்க விரும்பினார்கள்.

ரேகாவை திருமணம் செய்ய கார்த்திக்கின் வீட்டில் சம்மதம் வேண்டி நிற்க,’எப்படியும் அம்மு தனக்கு கிடைக்க மாட்டாள். அப்படியே அவள் கிடைத்தாலும்,  இங்கு அவளால் நிம்மதியா இருக்க முடியாது. ஈஸ்வர் அதற்கு விட மாட்டான்.’ என்பதை தெரிந்து, ரேகாவை மனதார தன் சரி பாதியாக ஏற்றுக்கொண்டான்.  

பல வருடங்களாக தன் மனதில் பதிந்த, அம்முவின் பிம்பத்தை மாற்றி, அங்கு ரேகாவை பதிக்க வேண்டும். அது கார்த்திக்கிற்கு பெரிய சவாலாகவே இருந்தது. ரேகாவின் அன்பு அவன் மனதை முற்றிலும் மாற்றியமைத்தது.

விருது விழா அன்று, கார்த்திக்கிடம் ருத்ரேஸ்வரனை சந்தித்தது  பற்றி தெரிவித்தபோது, அவன் இருந்தது பிந்துவின் அறையில் ரேகாவுடன். ஈஸ்வர் என்ற பெயர் பிந்துவின் செவியை தீண்ட, அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது‌. 

ஈஸ்வர் என்ற பெயர் பிந்துவிடம் மாற்றத்தை ஏற்படுத்தியதால், அவன் இங்கு வந்தால் பிந்து குணமாவால் என நம்பினார்கள். அவனை சீண்டி, அவனது பொறாமையை தூண்டி அவனை பசுஞ்சோலை கிராமத்திற்கு இழுத்து வந்திருந்தாள் மித்ராவாகிய அம்மு.

இங்கு வந்தால் ‘அவள் உயிராக விரும்பும் ருத்ராவை இழக்க வேண்டும்’ என்பதை தெரிந்தே விஷப் பரீட்சையில் இறங்கினாள். 

ஆம்! அவள் ருத்ரேஸ்வரனை தன் உயிராக விரும்புகிறாள். எங்கே? எப்போது? அவனை விரும்பத் தொடங்கினாள், என்பது அவளுக்கே தெரியாத ஒன்று. ஆனால் அவன், அவளது உயிரோடு உணர்வாக கலந்தவன் என்பது மட்டும் நிச்சயம்.

அவள் நினைத்த மாதிரியே அனைத்தும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இனி ருத்ரா, அவள் உணர்வுகளோடு சதிராட போகிறான் என்பதை, பாவம் அறியாமல் போனாள் அப்பாவி அமிர்தா.

†††††

அவர்கள் எதிர்பார்த்தது போல் ஈஸ்வரின் வரவு, பிந்துவிடம் மாற்றத்தை வரவைத்தது. அதுவரை வெற்று சுவரையே வெறித்து கொண்டிருந்தவள் சுற்றமும் உணர ஆரம்பித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளது நினைவுகள் திரும்பிக் கொண்டிருந்தது. 

அம்மு, ரிஷி, ரேகா, கார்த்திக், கிரிதரன் அனைவரும் பிந்துவை அடிக்கடி சென்று பார்த்துக் கொண்டார்கள். ருத்ரேஷ்வர் மூன்று முறை மட்டுமே பிந்துவை சந்தித்தான். பிந்துவை பார்க்கும் போது அவனுக்கு பரிதாபம் மட்டுமே தோன்றியது. 

ஆனால் அம்மு, பிருந்தா ருத்ராவின் திருமணத்தில் உறுதியாக இருந்தாள். ‘தன் அன்னை ஆசைப்பட்ட திருமணம்’ என, ஒரு மனம் உருப்போட்டது, ‘தான் களங்கப்பட்டவள், ருத்ராவிற்கு பொருத்தமானவள் இல்லை’ என ஒரு மனம் அறித்து கொண்டது. என்னதான் மனம், இரு வேறு பிரிவுகளாக பிரிந்து வாதம் செய்தாலும், அவள் மனம் முழுவதும் நிறைந்தவன் ருத்ரேஸ்வரன் ஒருவனே!

அம்முவுக்கு யார் சொல்வது? பரிதாபத்தினால் திருமணம் செய்து கொள்ள முடியாது. காதல் வேண்டும். ருத்ராவின் காதல் தன் நீலாம்பரியின் மீது இருக்கும்போது, இன்னொரு பெண்ணை எப்படி திருமணம் செய்ய சம்மதிப்பான்?

கடந்த நான்கு வருடங்களாக, ‘தன்னவள் உயிரோடு இல்லை’ என மனதில் பதித்து கொண்ட போதிலும், எந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத ருத்ரேஸ்வரன். இப்போது தன்னவள் உயிரோடு இருக்கும் நிலையில், அவளே,’தன் சகோதரியை திருமணம் செய்து கொள்’ என கூறினாள், அவனது மனம் என்ன பாடுபடும். இதை புரிந்து கொள்ளாமல் போனாள், மனம் இறுகிப்போன மித்ராலினி.

தன்னவளின் மீது மலையளவு கோபமிருந்தாலும், அவள் தன்னிடம் திரும்பும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறான் ருத்ரேஸ்வரன்.

இதற்கிடையில் ருத்ராவும், மித்ராவும் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஈஸ்வர், அம்முவின் உறவு தாமரை இலைத் தண்ணீர் போல் ஒட்டாமல், முறைத்துக் கொண்டே சென்றது.

அவள் எதை நினைத்து பயந்து, இந்த திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறினாலோ? அதையே ஆயுதமாக எடுத்தான் ருத்ரேஸ்வரன்.

ஆம்! தற்போது நடிக்கும் படம் இவர்களது வாழ்க்கையை மையமாக கொண்ட கதைக்களம். அம்மு உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்தாள். ருத்ராவும் அவளுள் தூங்காமல் இருக்கும் பசுமையான நினைவலைகளை தட்டி எழுப்பி, அவளை தன்னிடம் நெருங்க  வைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். அதில் பாதி வெற்றியும் கண்டான். அரை கிணறு தாண்டிய நிலை. 

ஈஸ்வர் எதிர்பார்த்ததுபோல் ‘தங்கள் இருவருக்குள்ளும் நிகழ்ந்த நெருக்கமான தருணங்களை நினைவு கூர்ந்தவள், ‘தன்னைப் பெண்ணாக உணர வைத்த’ தன் கட்டவண்டியின் கை சிறையில் அடங்கிடவே ஆவல் கொண்டாள். ஆனால் அது ‘தன் அன்னை, சகோதரி, ஏன் தன் கட்டவண்டிக்கும் செய்யும் துரோகம்’ என கருதி அவனிடமிருந்து விலகினாள். 

ருத்ராவிடமிருந்து எந்த அளவு விலகினாலோ, அந்த அளவு ரிஷியிடம் நெருங்கினாள். இதை கண்ட ருத்ராவிற்கு காதில் புகை வராத குறை. ‘விட்டால் இருவரையும் எரித்து சாம்பலாக்கி இருப்பான்’ அந்தளவு கோபத்துடன் வலம் வந்தான். 

ஆம்! அவள் மனதில் ‘தான் ஈஸ்வருடன் இணைவது’ அவர்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதினாள் பெண். அதனாலேயே அவன் மீது மலையளவு ஆசையிருந்தும் அதை மனதினுல்லே புதைத்தாள்.

‘என் அன்னையின் விருப்பம் ‘பிந்து, ஈஸ்வரின்  திருமணம்.’ அதற்கு தகுந்தது போல், ஈஸ்வரின் பெயரை கேட்டவுடன் தன் சுயத்தை அடைந்து கொண்டிருக்கிறாள் பிந்து. கெட்டுப்போன நான் ஈஸ்வருக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லை. எந்த களங்கமும் இல்லாத பிந்துவே அவனுக்கு பொருத்தம்’ என மீண்டும் மீண்டும் மனதில் உரு போட்டுக் கொண்டாள்.