நினைவு தூங்கிடாது 19

நிஜம் 19

என்றோ

தொலைந்த பொக்கிஷம்…

இன்று மீண்டும்

 கை சேர்ந்த மகிழ்ச்சியை…

 என்னவென்று நான் சொல்ல…

“அம்மு என்கிட்ட வா. இது கனவில்லையே?” என உடல் நடுங்க, கைகள் விரிந்தது. அந்த விரிந்த கைகளில், ஆசையாக அடைக்கலம் புகுந்தாள் அமிர்தா.

தாய்மடி தேடிய கன்றாக, யார் மடியை? யார் தேடினார்கள்? என பிரித்தறிய முடியாத உணர்வு போராட்டம். ஒரு கருவில், ஒன்றாக உதித்து, பதினேழு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து, விதி செய்த சதியால் தன்னிலை இழந்து, உறவுகளை துறந்து, வாழ்ந்த அந்த இரு ஜீவன்களும், ஒன்றுடன் ஒன்று ஆரத்தழுவிக் கொண்டது. 

நான்கு வருடங்கள் பிந்துவை பார்த்து, மனதளவில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும், எங்கோ ஓடி மறைந்திருந்தது அம்முக்கு. தன்னிலை இழந்து, சுற்றம் மறந்து, அடுத்தவரின் உதவியில் வாழ்ந்த பிருந்தாவின் மன வேதனை, உடல் வேதனை மறைந்திருந்தது அம்முவின் அருகாமையில்.

ஆம்! பிந்து என்கிற பிருந்தா பூரண குணமாகியிருந்தாள். மூளையில் தூங்கிக் கொண்டிருந்த நினைவுகள் எல்லாம் விழித்துக் கொண்டது. அம்முவை கடத்திச் சென்றது, தாயின் தீ விபத்து, எல்லாம் கண் முன் தோன்றி பெண்ணை நடுங்க வைத்தது.

தன் கண் முன் நிற்கும் அம்முவை நம்ப முடியாமல், கனவாக மறைந்து விடுவாளோ? என அஞ்சியே அவளை தன் கையணைப்பிற்கு அழைத்திருந்தாள் பிந்து.

“அம்மு நிஜமாகவே நீதானா? உனக்கு ஒன்னும் இல்லையே? நீ நல்லா இருக்கியா? நான் முழிச்சு தானே இருக்கேன்? இல்லை தூக்கம் களஞ்சி எந்திருச்சா மறைஞ்சு போயிடுவியா? எல்லாம் என்னால. அன்னைக்கு நான் வராமல் இருந்திருந்தால் நீ அவங்க கிட்ட மாட்டி இருக்கவே மாட்ட.” என ஏதேதோ பிதற்றியவளின் கரங்கள் அம்முவின் கைகள், முகம் என அனைத்தையும் வருடி, அவள் தன் கண் முன்னால் உயிருடன், முழு உருவமாக இருக்கிறாள் என ஊர்ஜிகப்படுத்தி கொண்டது.

அம்முவிற்கு வார்த்தைகளே வரவில்லை, நான்கு வருடங்களுக்குப் பின்னான, தன் சகோதரியின் பேச்சைக் கேட்டு பூரிப்பில் வானத்தில் மிதந்தாள். தான் பட்ட கஷ்டங்களுக்கும், மனதில் உண்டான வேதனைகளுக்கும், இன்று பலன் கிடைத்துவிட்டது. வேறு என்ன வேண்டும் இந்த உலகத்திலே?

“பிந்து… பிந்…” அதற்கு மேல் வார்த்தைகள் வர மறுத்தது அம்முவின் இதழ்களில். கண்ணீர் பெருகியது. முகம் மலர்ந்து விகாசித்தது.

கண்ணில் நீரும், உதட்டில் புன்னகையுமாக மலர்ந்திருக்கும், அம்முவின் முகத்தை கண் சிமிட்டாமல் ரசித்து இருந்தார்கள் ருத்ரேஸ்வரனும், ரிஷிவர்மாவும்.

‘இந்தப் புன்னகை நிலைக்க, எது வேண்டுமென்றாலும் செய்யலாம்.’ என ருத்ரேஸ்வரன் மனதில் தோன்றிய அதே நேரம், அவள் கேட்டது நினைவில் வந்து அவனது முகத்தை இறுக செய்தது. தன்னால் அவள் கேட்டதை நிச்சயம் செய்ய முடியாது.

முக இறுக்கத்துடன் அந்த அறையிலிருந்து வெளியேறினான். செல்லும் அவனையே கண்களின் வலியுடன் பார்த்து நின்றான் ரிஷி வர்மா.

†††††

கண் மூடி திறக்கும் முன் ஒரு வாரம் ஓடி மறைந்திருந்தது. அனைத்து பரிசோதனைகளும் முடிந்து, பிந்து முழுதாக குணமாகயிருந்தாள். அவளிடம் பழைய விஷயங்களை பேசி அவளை வருத்த வேண்டாமென, சந்தோஷ நிகழ்வுகளை மட்டுமே பகிர்ந்து கொண்டனர். ருத்ரேஸ்வரனும் அவ்வப்போது வந்து அவளை பார்த்து சென்றான்.

“இனி பிருந்தாவுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. அவங்களை டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச் செல்லலாம்” என மருத்துவர்கள் கூறிவிட்டனர். துரிதமாக செயல்பட்டு அவளை அழைத்துக்கொண்டு, இதோ கிளம்பிவிட்டனர்.

ரிஷி வர்மாவை வீட்டில் நிறுத்திவிட்டு, அவனுக்கு துணையாக கிரிதரனை விட்டு, ருத்ரா, கார்த்திக் மட்டும் அம்முவுடன் வந்திருந்தனர்.

ஈஸ்வரின் காரில் ஏற மறுத்த அம்முவை, “இப்ப நீ பேசாம கார்ல ஏறல, அப்பறம் என் ஸ்டைல்ல உன் வாயை அடைப்பேன்.” என ரசனையாக மிரட்டியே, இழுத்து வந்திருந்தான். பெண்ணோ கடுங்கோபத்தில் அவனுடன் பயணித்தாள்.

வரும் போது அவளை மிரட்டியதற்கு பழிவாங்க, இதோ இப்போது திரும்பும் போது, காரின் பின்னால் இருக்கையில் பிந்துவை அமரவைத்த அம்மு, கதவை சாத்தவும் ருத்ராவிடம் திரும்பி,”நீங்க பிந்து கூட பேசிட்டு வாங்க. நான் கார்த்திக் கூட முன்னாடி ஏறிக்கறேன்” என எங்கோ பார்வையை பதித்துக் கூறினாள்.

சிறிது நேரம் அவனிடம் எந்த சத்தமும் இல்லை. அம்மு திரும்பி பார்க்க, அங்கு ருத்ராவின் கண்களோ கோவக் கணல் வீசி, பார்வையால் அவளை சுட்டு பொசிகியது. அவனின் எரிக்கும் பார்வையில் சர்வமும் அடங்க, பேசாமல் பிந்துவின் அருகில் அமர்ந்தாள். 

அம்முவின் நடவடிக்கையை பார்த்து ருத்ராவிற்கு சிரிப்பு வந்தது. எங்கே சிரித்தால், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கும், என்று வந்த சிரிப்பை அடக்கி வண்டியை கிளப்பினான். காரின் கண்ணாடி வழியாக, தன்னவளை ரசித்து கொண்டே, பசுஞ்சோலையை நோக்கி வாகனத்தை செலுத்தினான் ருத்ரா. அவர்கள் பயணம் இனிதே முடிந்தது. 

பிந்துவுக்கு, ஆரத்தி எடுத்து வரவேற்றாள் ரேகா. வீட்டைக் காணவும், அம்முக்கு தோன்றியது போலவே, இவளுக்கும் தங்கள் சந்தோஷ தருணங்கள் கண்முன் தோன்றி, முகத்தில் புன்னகை பூக்க செய்தது. அந்தப் புன்னகை சிறிது சிறிதாக தேய்ந்து, பயத்தில் முகம் வெளிரி, உடல் நடுங்கியது.

தன் அன்னை தீயில் சிக்கி அலறிய காட்சி, கண்முன் தோன்றி அவளை பயம் கொள்ள வைத்தது. பிந்துவின் நடுக்கம் எதனால்? என அம்முவாலும் உணர்ந்துகொள்ள முடிந்தது. காரணம் அவளும் அதே காட்சியை, அவளது பதினேழு வயதில் கனவில் கண்டாலே? 

பிந்துவின் கலக்கம் அம்முவை தாக்கியது. அவள் மீண்டும் தனக்குள் ஒடுங்கிவிடுவாளோ என மனம் அஞ்சியது. அவளது மனதை மாற்ற விளையாட ஆரம்பித்தாள்.

“பாரு மாமா! உன் பொண்டாட்டிய, எனக்கு அடி குடுத்து வரவேற்றாள். பிந்துவுக்கு மட்டும் ஆரத்தி எடுக்குறா?” என, கண்ணீர் வராத கண்ணை கசக்கி கொண்டே, கார்த்திக்கிடம் புகார் வாசித்தாள் அம்மு. அவள் எதிர்பார்த்தது போல் பிந்துவின் கவனம் இவர்கள் மீது திரும்பியது.

“நல்லா சாப்பிட்டு திம்ஸு கட்டை மாதிரி இருக்க, உனக்கு எதுக்கு ஆர்த்தி எடுக்கணும்?” ரிஷி இடை புகுந்தான்.

“வேண்டாம் வரு. எனக்கு கெட்ட கோபம் வரும். நான் உன்கிட்ட கேட்கல” என ஒரு விரல் நீட்டி, மூக்கு விடைக்க ரிஷியிடம் எகுறினாள்.

“மிரு பேபி! கோபமே கேட்டது. இதில் நல்ல கோபம்? கெட்ட கோபம்னு வேற இருக்கா?” பொல்லாத சந்தேகம் எழுந்தது ரிஷிக்கு.

“வேண்டாம் வரு” பல்லை கடித்தாள்.

“அப்படியே இரு பேபி. ஒரு போட்டோ எடுத்துகிறேன். வீட்ல த்ரிஷ்டிக்கு படமே இல்ல.” தன அலைபேசியை எடுத்தான்.

“போ வரு! உனக்கு எப்பவுமே விளையாட்டு தான்.” என பிந்துவின் பின் மறைந்து, சிணுங்கினாள். 

பிந்து இவர்கள் உரையாடலை சுவார்ஸமாக பார்த்தாள் என்றாள், ருத்ராவின் முகம் இறுகியது.

ருத்ராவின் முக மாற்றத்தை கண்ட கார்த்திக், ஏதும் விபரீதமாகும் முன்,”அம்மு பேசாமல் இரு” என்றான்.

அதில் வீறுகொண்டு வந்த பெண்,”ஏன், ஏன் நான் பேசாம இருக்கனும்? உன்கிட்ட கேட்ட கேள்விக்கு, அவன் என்னை கேலி பண்ணுறான். நான் சும்மா இருக்கணுமா?”

கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல,”பிந்து ஆஸ்பத்திரில இருந்து வரா‌. அதுனால அவளுக்கு என் பொண்டாட்டி ஆரத்தி எடுத்தா.  இனி எந்த பிரச்சனையும் வர கூடாதுன்னு. போதுமா?”

“இது ஏதடா வம்பா போச்சு? உன் பொண்டாட்டி ஆர்த்தி எடுக்கணும்ங்கறதுக்காக, நான் ஆஸ்பத்திரில நாலு நாள் அட்மிட் ஆகிட்டா வர முடியும்?” என நொடித்தாள்.

“இது என்ன பேச்சு அம்மு?” என ருத்ரா கோபத்தை விடுத்து பதறினான். பிந்துவின் பார்வை அவன் மீது படிந்தது.

அதற்குள் கார்த்திக்,”ஆஸ்பத்திரில இருந்து வந்தா மட்டுமில்லை, கல்யாணம் முடிஞ்சு வந்தாலும் என் பொண்டாட்டி ஆரத்தி எடுப்பா. எப்போ வச்சுக்கலாம் கல்யாணத்தை. ரிஷிக்கும் இதில் பரிபூரண சம்மதம்.” பெரிய விஷயத்தை அசால்டாக கூறினான் கார்த்திக். 

திகைத்த அம்முவின் பார்வை ரிஷியை தொட்டது. அதற்காகவே காத்திருந்த ரிஷியும், கண்ணடித்து, தலையசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தான். இதற்கு எப்படி எதிர் வினையாற்றுவது என தெரியாத பெண்ணின் பார்வை ருத்ராவை அடைந்தது. அவனோ கண்களில் கொலை வெறியுடன் அவளை முறைத்தான்.

‘சம்மதம் சொல்லித்தான் பாரேன்?’ என சவாலிட்டது அவன் பார்வை. ‘ஆத்தி! என்னை மர்கய்யா பண்ணாம விடமாட்டாங்க போல.’ திருதிருவென முழித்தாள் அம்மு.

கார்த்திக் திருமணத்தைப் பற்றி பேசவும், பிந்துவின் கண்கள் ஒரு எதிர்பார்ப்புடன் ஈஸ்வர் முகத்தை கண்டது. அவன் பார்வை அம்முவின் மீது இருக்கவும், பிந்துவின் பார்வையும் அவளை அடைந்தது.

திருட்டுத்தனம் செய்து, தன் அன்னையிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் தோற்றத்தில், நின்ற பெண்ணை கண்டதும் பிந்து சத்தமிட்டு சிரித்துவிட்டாள். அவளின் சிரித்த முகம் அனைவருக்கும் மகிழ்ச்சியளித்தது. 

“உங்க விளையாட்டை நிறுத்துங்க அத்தான். உள்ள வர ஐடியா இருக்கா? இல்லையா?” ரேகா சூழ்நிலையை இலகுவாக்கினாள். 

ஒரு நிம்மதி மூச்சுடன் அம்மு உள்ளே ஓடிவிட்டாள்.

†††††

மறுநாள் பிந்துவை காண வந்த, ஈஸ்வரின் தாத்தா, பாட்டியிடம் முகம் திருப்பினாள் அம்மு. 

“ஏன் பேசாம முகம் திருப்பரவ?” என பாட்டியின் கேள்விக்கு, “அவளை மட்டும் வந்து பார்க்குறீங்க. நான் வந்து எவ்வளோ நாள் ஆச்சு? என்னை வந்து பார்க்கணும்ன்னு தோணுச்சா?” என சிறுபிள்ளையாக கோபம் கொண்டாள்.

“உன்னை எதுக்கு பார்க்கணும்? சொல்லு எதுக்கு பார்க்கணும்? இங்க வான்னு எத்தனை தடவை கூப்பிட்டேன். வந்தயா? அப்பறம் எதுக்கு நாங்க மட்டும் உன்னை பார்க்கணும்?”

அவர்கள் கேள்வியில் இருந்த நியாயம் புரிய வாயை மூடிக்கொண்டாள். சிறிது நேரத்தில் தாத்தாவிடம் பேச்சை ஆரம்பித்தாள்.

“தாத்தா இப்போ பிந்து குணமாகிட்டா. நிச்சயம் பண்ணுன மாதிரி கல்யாணத்தை நடத்தலாமா? அம்மாவோட ஆசையை நான் நிறைவேத்தனும்.” குரலில் உறுதியும் கெஞ்சலும் சரிசமமாக இருந்தது.

தாத்தாவின் பார்வை மனைவியை அடைந்தது. அவரது பார்வை பேரனின் முகத்தில் நிலைத்தது.

“இந்த படம் முடிஞ்ச பிறகு, கல்யாணத்தை பத்தி பேசலாம். இப்ப யாரும் மூச்சு விடக்கூடாது.” முகமிறுக கூறி, அம்முவின் முகம் காணாமல் வெளியேறினான்.

அவனது பாராமுகத்தை கண்டு அம்மு தவித்து போனாள். பிந்து என்ன நினைக்கிறாள் என்று கணிக்க முடியவில்லை.

எப்போதும் ருத்ராவின் கண்கள் ஆசையுடன் அம்முவை ரசித்திருக்கும். கோவம் கொண்டாலும் அவளை தவிர்த்ததில்லை. சொல்லப்போனால் கோவத்தில் நெருக்கத்தை அதிகரிக்கவே செய்தான். இப்போது மட்டுமின்றி, நான்கு வருடங்களுக்கு முன்பும், தன்னை அருகில் வைத்துக்கொள்ளவே கட்டாயப்படுத்தி சந்திப்பை ஏற்படுத்தினான். 

அவனுடன் இருந்த ஒவ்வொரு மணித்துளியும், அவள் உணர்ந்தது பாதுகாப்பை மட்டுமே. பயம் தோன்றியதே இல்லை. அவன், அவளை நெருங்கிய சமயம், தன்னை பெண்ணாக உணர்ந்தாள், அருவெறுப்பு தோன்றியதில்லை.  அவனிடம் மட்டுமே அவளது பெண்மை மயங்கி நின்றது, நிற்கிறது. அவனுடனிருந்த நினைவுகள் அனைத்தும் பொக்கிஷமாக பெண்ணின் மனதில் ஆளபதிந்துள்ளது. அது போதும் அவள் வாழ என எண்ணினாள்.

அவனது தற்போதைய பாராமுகம், பெண்ணை வதைத்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல் நடமாடினாள். ‘தான் சற்று இளகினாலும், அது அவனுக்கு செய்யும் துரோகம்’ என மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள்.

பாவம் அவளுக்கு தெரியவில்லை மூன்று பேரின் சந்தோசம், நிம்மதியை குழைத்துக் கொண்டிருக்கிறாள் என்று.

†††††

படபிடுப்பு முடியும் கட்டத்திலிருந்தது. அம்மு தன் பிடியில் உறுதியாக இருந்தாள். ருத்ரா அவள் மனதை மாற்ற முடியாமல் திண்டாடினான். அவனது பாரா முகம் கூட அவளை பாதிக்கவில்லை. என்ன செய்து அவளை தன் வசப்படுத்துவது என்று புரியாமல் குழம்பினான். 

பிந்துவிடம் பேசலாமென்றால், மீண்டும் மன அழுத்துக்குள் சென்றுவிடுவாளோ என்ற பயம். தான் செய்து வைத்திருக்கும் குளறுபடியால் அம்முவிடம் அதிரடியில் இறங்கவும் பயம். ஆக மொத்தத்தில் அம்மு விஷயத்தில் செயலிழந்து நின்றான். அனைவரையும் தன் சுண்டு விரலில் ஆட்டி வைக்கும் அந்த சிம்ம ராஜாவை, தன் மௌனத்தால் ஆட்டிப்படைத்தாள் அடப்பாவி பெண் மான்.

பொறுக்க மாட்டாமல், கோபத்தை விடுத்து அவளிடம் பேசினான். “ஏன் அம்மு இப்படி பண்ற? எனக்கு நீ வேணும். என்னால் உன்னை பிரிய முடியாது.”

“வேணும்னா, எப்படி ருத்ரா சார்? ஊருக்கு தெரியாமல் தாலி கட்டின மாதிரி, குடும்பமும் நடத்த சொல்றீங்களா? அதாவது உங்க ஆசையை தீர்த்து வைக்கும் நாயகியாவா?” விஷம் தடவிய வார்த்தைகள். 

அவள் சொன்னது புரியவே ஒரு நிமிடம் எடுத்தது ருத்ராவிற்கு. புரிந்ததும் அவன் கரங்கள் இடியென அவளது கன்னத்தில் இறங்கியது. முதல்முறையாக தன் மனம் கவர்ந்தவளை அறைந்திருந்தான். 

அந்த வல்லின கரங்களில், மெல்லினமானவள் என்ன ஆவால்? தூரப் போய் விழுந்தால். அவள் விழுந்த பிறகே, தான் செய்த காரியம் மண்டையில் உரைத்தது ருத்ராவிற்கு. மனம் இறங்க மறுத்தது,’என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்?’ மனம் தனலாக எரிந்தது.

சூரஜ் என்ற ஓநாய், அன்று அம்முவிடம் தன் தேவை தீர்ந்த பிறகு,’உன்கிட்ட என்னமோ இருக்கு? அதுதான் ருத்ரா யாருக்கும் தெரியாமல் உனக்கு தாலி கட்டி, குடும்பம் நடத்த முடிவு பண்ணிட்டான். தினமும் ஒரு பெண்ணை தொட்ட என்னாலயே உன்னை விட்டு பிரிய முடியலை?’ என்று அவன் பேசிய வார்த்தைகள், அம்முவின் மனதில் பதிந்திருந்தது. அது தன்மேலயே ஒரு அருவருப்பை உண்டாக்கியது. அன்று யாரிடமும் பகிர முடியாமல், அழுத்தி வைத்த உணர்வுகள், இன்று வெடித்து சிதறியது விஷ வார்த்தையாக.

அவன் அறைந்த கன்னத்தில் கை வைத்து,”எதுக்கு என்னை அறைஞ்சிங்க? உங்க பிரண்டு தான் அத சொன்னான்.”

“எந்த பிரிண்ட்? என்ன சொன்னான்?” கேள்வி சீறி வந்தது. சூரஜ் பேசியதை அவனிடம் விளக்கினாள்.

குழி தோண்டி புதைத்தவனை, மீண்டும் தோண்டி எடுத்துக் கொள்ளும் ஆத்திரம் வந்தது. உயிர் வாழவே வெறுத்து போனது அவனுக்கு.

“நீ என் மேல வச்ச நல்ல எண்ணத்துக்கு ரொம்ப நன்றி” என்றவன்,’இவளிடம் பேசி புரிய வைக்க முடியாது’ என அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ருத்ரேஸ்வரன்.

உயிர் வெறுத்து செல்லும் அவனை, கண்களில் வலியுடன் பார்த்திருந்தாள் அம்மு.’நீ அப்படி என்னை நினைக்கலன்னு தெரியும் கட்டவண்டி. ஆனால் எனக்கு வேற வழி தெரியல. நான் உனக்கு வேண்டாம்.’ என மனதில் திரும்பத் திரும்ப உரு போட்டுக் கொண்டாள்.

†††††

இவர்களை கண்காணித்துக் கொண்டிருந்த ரிஷிக்கும் வெறுத்து விட்டது. ‘தாங்கள் களத்தில் இறங்க வேண்டும்’ ரிஷியும் கார்த்திக்கும் முடிவெடுத்தனர்.

ஒருநாள் கார்த்திக், ருத்ராவிடம் “நாளைக்கு பிரஸ் மீட். அதில் ரிஷி மித்ரா திருமணத்தை அறிவிக்க போறோம்.” என ஒரு வெடியை கொளுத்தி போட்டுவிட்டு சென்றான். திரியும் நன்றாகவே பற்றிக் கொண்டது.

மறுநாள் உண்மையில் பிரஸ் மீட் இருக்கவும், ருத்ரா சுதாரித்துக் கொண்டான். ரிஷி, மித்ரா இருக்குமிடம் நெருங்கினான். 

சரியாக அந்த நேரம்,”உங்கள் திருமணம் எப்போது என்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? ரிஷி சாரோட கால் தான் சரியாகிவிட்டதே?” என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு,

அவர்கள் பதிலளிக்கும் முன் முந்திக் கொண்ட ருத்ரா, மித்ராவின் தோளில் கையிட்டு தன் அருகில் நிற்க வைத்து,”மித்துவுக்கும் எனக்கும் திருமணம் முடிஞ்சு நாலு வருஷம் ஆயிடுச்சு. ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ல பிரிஞ்சு இருக்கோம்.” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தான்.

உன்னை என் ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள ஆசை இல்லையடி பெண்ணே…

என் உயிராக போற்றி காத்திடவே ஆசை கொண்டேன் கண்ணே…

என அம்முக்கு நிரூபித்து விடும் வேகத்தில் பேட்டி அளித்து விட்டான்.

அவனது அதிரடியில் அம்மு முதலில் திகைத்து, பிறகு அவனை முறைத்தாள். அதை கண்டுகொள்ளாத ருத்ரா நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தான். 

“என்ன மித்ரா மேடமுக்கு திருமணம் முடிந்ததா?” என மொத்த செய்தியாளர்களும் அதிர்ந்தனர்.

“எஸ் மித்ரா இஸ் மை வைஃப் (மித்ரா என் மனைவி)” என்றான் கூலாக.

“நீங்கள் சொல்வது உண்மையா?”

“அஃப்கோர்ஸ்! இன்னமும் எங்களுக்குள் எதுவும் சரியாகல. பாருங்க என்னை இன்னும் முறைச்சிக்கிட்டிருக்கா” என்றான் அப்பாவியாக முகத்துடன். அவனது நடிப்பை கண்டு அம்மு அசந்து நின்றாள்.

“நீங்க எல்லாம் பேசி என்னோட பொண்டாட்டியை என்கூட சேர்த்து வையுங்கள்” என்றான் அதே அப்பாவி முகத்துடன்.

கூட்டம் மொத்தமும் கொல்லென்று சிரித்து விட்டது ஒரு விஷமக்கார நிருபர்,”சார் பொண்டாட்டியை சமாதானப்படுத்துறது சும்மாவா? இதுக்கு மீடியேட்டரே இருக்கக் கூடாது, இதுல நீங்க மீடியாவை கூப்பிடுறீங்க. டைரக்டா லவ்வ ப்ரொபோஸ் பண்ணுங்க.” 

“நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்” என்றவன் அனைவரும் சுதாரிக்கும் முன், மித்ராவின் முன் மண்டியிட்டு, அருகிலிருந்த ஒரு ரோஜாவை எடுத்து அவளிடம் நீட்டி,

“நான் இதுவரை செய்த எல்லா பிழைகளையும் மன்னித்து, இனி செய்யவிருக்கும் தவறுகளை, என் மண்டையில் நாலு கொட்டு கொட்டி தண்டித்து, காலம் முழுவதும் என்னுடன் பயணம் செய்வாயா அம்மு?” என்றான் உயிர் உருகும் குரலில்.

எது செலுத்தியது என்று அறியாமல், பெண்ணின் கரங்கள் தானாக நீண்டு அந்த ரோஜாவை வாங்கி இருந்தது. அவளது வலது கரத்தை பற்றிய ருத்ரேஸ்வரன், அவளுக்காக ஆசை ஆசையாக நான்கு வருடங்களுக்கு முன், தன் காதலை உணர்ந்த தினம் பார்த்து பார்த்து வாங்கிய மோதிரத்தை அணிவித்து, அந்த விரலில் பூவினும் மென்மையாக முத்தமிட்டான். 

அதில் பெண்மை உருகி நின்றது.

ரிஷியின் விழிகள் ஆனந்தத்தில் நிறைந்தது. கார்த்திகை கண்டு,’சக்சஸ்’ என கட்டை விரலை உயர்த்தி காட்டினான். 

“சூப்பர் சார்; கலக்கிட்டீங்க; வாழ்த்துக்கள்; மேடம் சாரோட லவ்வை அக்சப்ட் பண்ணிக்கோங்க; நாலு வருஷம் உங்களுக்காக காத்திருந்து வந்திருக்கார். ஹிஸ் லவ் இஸ் கிரேட்.” என நிருபர்கள் அவர்களை வாழ்த்தி விட்டும், அறிவுரை கூறியும் கலைந்து சென்றனர்.

கூட்டம் கலைய தொடங்கியதுமே ருத்ராவும் மாயமாகி இருந்தான். ‘அங்கிருந்து அம்முவிடம், யார் வாங்கிக் கட்டிக்கொள்வது?’ என்ற நல்ல எண்ணம்தான்.

கூட்டம் கலைந்த பிறகுதான், தான் செய்திருக்கும் காரியம் மண்டையில் உரைக்க, அம்மு ஸ்தம்பித்துப் போனாள்.’என்ன காரியம் செய்து வச்சிருக்க அம்மு? தப்பு பண்ணிட்டியே’ என மனம் வருந்திய பெண், அடைக்கலம் ஆகியது சகோதரியின் மடியில்.

என்னவென்று தெரியாத பிந்து,”அம்மு என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என கேள்வி எழுப்பினாள். அம்முவிடம் பதில் இல்லை. 

“தப்பு பண்ணிட்டேன் பிந்து. உனக்கு துரோகம் பண்ணிட்டேன்” என கதறி துடித்தாள் அம்மு. 

புரியாமல் விழித்த பிந்துவிடம் அனைத்தையும் விலக்கிய அம்மு,”நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன்” என கதறினாள். 

அவளின் உணர்வுகளை புரிந்து கொண்ட பிந்து,”அடியே பைத்தியம்! நான் அவரை விரும்புகிறேன்னு உனக்கு யார் சொன்னா?”

“உனக்கு ஈஸ்வர் மேல எவ்வளவு பிரியம் இருந்தா? அவர் பெயரை கேட்டவுடன் நீ சரியாவ?” என்றாள் குழப்பமாக.

“அது விருப்பமில்லை அம்மு குற்ற உணர்வு.”

புரியாமல் விழித்த அம்முவிடம்,”ஈஸ்வருக்கும் எனக்கும் நிச்சயம் நடந்தது உண்மை. அம்மா சொன்ன பையனை திருமணம் செய்ய சம்மதித்தேன் அவ்வளவுதான். நான் ஈஸ்வரை விரும்பல. அவர் உனது கணவர் அதை மட்டும் மனதில் பதிய வைத்துக்கொள்.”

இதைக் கேட்ட பெண் தீ சுட்டது போல அவளிடமிருந்து விலகினாள். “நீ என்ன சொல்லுற?” என தடுமாறியது அம்முவின் குரல்.

“அவர் உனக்கு தாலி கட்டினதை நான் பார்த்தேன். அவர் உன் கணவன்.” பிந்து உறுதியாக கூறினாள்.

“அதெல்லாம் இல்ல பிந்து. அது ஏதோ கோபத்தில் நடந்தது. அம்மாவோட ஆசையே, உனக்கும் ஈஸ்வருக்கும் கல்யாணம் பண்றது. அந்த ஆசையை நான் கெடுக்க மாட்டேன்.”

அவள் சொன்னதை கேட்ட பிந்து, “மண்டு, மண்டு” என அம்முவின் தலையில் செல்லமாக கொட்டினாள். அம்மு புரியாமல் முழித்தாள்.

“ஈஸ்வர் உனக்கு தாலி கட்டினதை பார்க்கவும், அம்மாகிட்ட வந்து சொன்னேன். அவங்களுக்கும் அதிர்ச்சி. ஆனா உடனே சரியாகிட்டாங்க. ‘அந்த அம்மனோட ஆசை அதுதானா, மனுஷன் நம்மனால மாத்த முடியுமா?’ என சம்மதம் சொல்லிட்டாங்க.”

“ஈஸ்வர் வீட்டுக்கு போய், உனக்கும் ஈஸ்வருக்கும் திருமணம் பேசலாம்ன்னு இருந்தோம். உன்னை காணாம தேடி வந்த நான், அந்த அயோக்கியர்களிடம் மாட்டிக்கிட்டேன். அதுக்கு பிறகு நடந்தது உனக்கு தெரியும்”

“அப்ப அம்மாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பமா?” கேட்க முடியாமல் தடுமாறினாள் அம்மு.

“அவங்களுக்கும் பரிபூரண சம்மதம். அவங்க ஆத்மா நிச்சயம் உன்னை ஆசீர்வதிக்கும்” என பெண்ணின் வயிற்றில் பாலை வார்த்தாள் பிந்து.

சிறிது மௌவுனத்திற்கு பின் மீண்டும் பேசினால்,”எனக்குனு இந்த உலகத்துல இருந்த ரெண்டு ஜீவன்ல, ஒன்னு என் கண் முன்னாடி நெருப்புக்கு இரை ஆச்சு. ஒன்னு காணாம போச்சு. உன்னை தூக்கிட்டு போனா அவங்க, என்ன கொடுமை பண்ணுனாங்க? நீ உயிரோட இருக்கியா? இல்லையா? எதுவும் தெரியாமல் பிரம்மை பிடிச்சு போயிருந்தேன்.

ஒரு நாள் நீ திரும்பி வந்த என்னால் உணர முடிஞ்சது. உனக்கு நடந்த கொடுமையை பாட்டி, தாத்தாகிட்ட சொன்ன. உன்னோட வாழ்க்கை வீணானது என்னாலையோ? என ஒரு குற்ற உணர்வு. அதோட என் மூளை வேலை செய்வதை நிறுத்திடுச்சு. அப்போ அவர் பெயரை கேட்கவும், உன்னோட வாழ்வு மலருமென நான் சிரியாகிட்டேன் போல.” என முடித்தாள்.

அம்முவை பின்பற்றி வந்த ரிஷியும் ருத்ராவும், பிந்து சொன்ன அனைத்தையும் கேட்டு ஆனந்த அதிர்ச்சியோடு நின்றனர்.

தன் தேவதை மிரு பேபியின் வாழ்க்கையை, திருப்பிக் கொடுத்த பிந்துவை, புது சொந்தத்துடன் பார்த்தான் ரிஷி வர்மா.