நிஜம் 20
உறவும் சொல்கிறது…
ஊரும் சொல்கிறது…
நீயும் நானும் கணவன் மனைவி என்று…
அதை ஏற்றுக்கொள்ள முடியாமல்
தவிக்கும் என் தவிப்பை…
என்னவென்று நான் சொல்ல…
ருத்ரேஷ்வரன், மித்ராலினியின் திருமண செய்தி, அன்றைய மாலை நாளிதழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ருத்ரா, மித்ராவின் முன் மண்டியிட்டு மலர் நீட்டுவதும், அவள் கரங்களில் இதழ் பதிப்பதும், அவ்வளவு அழகாக பதித்திருந்தது புகைப்படக் கருவி.
ஆணின் முகத்தில் இருந்த அளவு கடந்த காதலையும், பெண்ணின் முகத்தில் இருந்த பூரிப்பையும், காண கண் கோடி வேண்டும். ‘மேட் ஃபார் ஈச் அதர். நைஸ் கப்பில்ஸ்’ என அனைவரையும் சொல்ல வைத்தது அந்த புகைப்படங்கள்.
செய்தி வெளியாகும் முன்பே ஈஸ்வரின் குடும்பத்துக்கு தெரிந்து அனைவரும் திகைத்துப் போயிருந்தனர். ரேகாவிற்கும் இந்த விஷயம் அதிர்ச்சியே. ஈஸ்வர்! அம்முவை விரும்புகிறான் என்றவரை மட்டுமே ரேகாவிற்கு தெரியும், திருமணத்தைப் பற்றி தெரியாது. திருமண விஷயம் தெரிந்தவர்கள் என்று பார்த்தால் ரிஷி, கிரி, கார்த்திக், இப்போ பிந்து.
விஷயம் அறிந்த உடனே ஈஸ்வரமூர்த்தி, அம்பிகாதேவி சென்னையிலிருந்து கிளம்பி சில மணி நேரங்களில் பசுஞ்சோலையில் இருந்தனர்.
ஈஸ்வர், அம்முவுக்கு திருமணம் எப்படி நடந்தது என கார்த்திக் விளக்கியிருந்தான். அனைவருக்கும் மகிழ்ச்சி ஒரு பக்கம், நான்கு வருடங்கள் வீணாகிவிட்டது என கவலை ஒரு பக்கம்.
பாட்டிக்கு அளவிட முடியாத சந்தோஷம். அவரை கையில் பிடிக்க முடியவில்லை. இருக்காதா பின்னே? அவர் மனம் கவர்ந்த பேத்தி ஆச்சே. அம்பிகாதேவிக்கு அதை விட ஆனந்தம், தன்னை போலவே தன் மகனுக்கும் அமிர்தாவை பிடித்திருக்கிறதென்று.
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு ஈஸ்வரின் பெற்றோர்கள், அம்முவின் முன் நின்றனர். அவர்களை நேற்கொண்டு சந்திக்க முடியாத பெண்ணின் தலை தாழ்ந்தது. அம்பிகா அதை கண்டு கொள்ளவில்லை.
“பட பூஜை நடந்த அன்னைக்கு, உன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குன்னு யோசிச்சேன். சட்டுன்னு ஞாபகம் வரல. ரெண்டு தடவைதானே உன்னை பார்த்திருக்கேன் அதனாலயா இருக்கும்.
நான் ஆசைப்பட்ட மாதிரி, நீயே எனக்கு மருமகளா வர. எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல, அடுத்து என்ன பண்றதுன்னு தெரியலயே.” திண்டாடினார் அம்பிகா.
அன்னையின் மகிழ்ச்சியை கண்டு, ருத்ரேஸ்வரனும் மகிழ்ந்தான். அதை மீறி வேறு எதுவும் சிந்திக்கவில்லை. சிந்திப்பதற்கு மூளை வேலை செய்ய வேண்டுமே? அவன் முன்னால் அம்மு இருந்தாள், அவன் மூளை வேலை செய்யுமா என்ன?
அனுபவஸ்தரான ஈஸ்வரமூர்த்தி தன் மனைவி சொன்ன வார்த்தையை, சரியாகப் பிடித்துக் கொண்டார். “என்ன அம்பி சொல்ற, நீ ஆசைப்பட்டது அமிர்தா வா? அப்ப எதுக்கு பிருந்தாக்கு நிச்சயம் பண்ணுன?” என இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவர் கேள்வி எழுப்பினார்.
அம்பிகாதேவியும் அவர் அமிர்தாவே பெண் கேட்டு, பிருந்தாவாக மாறிய நிகழ்வை விளக்கினார். அம்முவின் பார்வை பிருந்தாவை அடைந்தது. ‘பாரு அம்மாவுக்கு உன் திருமணத்தில் தான் விருப்பம்’ என கெஞ்சியது.
“சரி அடுத்து என்ன பண்ணலாம்னு? வீட்ல பேசி முடிவு பண்ணிட்டு சொல்றோம்.” என அவர்கள் கிளம்பினார்கள்.
அம்மு, பிருந்தாவிடம்,”பிந்து அம்மாவுக்கு உன் திருமணத்தில் தான் விருப்பம்.” என பழைய பல்லவியை பாடினாள்.
ஈஸ்வருக்கு அமிர்தாவை திருமணம் முடிக்க கஸ்தூரி மறுத்த காரணத்தை, தனக்குத் தெரிந்த அளவில் பிந்து விளக்கினாள். அம்முவின் மனது ஓரளவு சமாதானமானது.
ஆனால் மீண்டும் முருங்கை மரம் ஏறும் அபாயம்.
†††††
மூன்று நாட்கள் கடந்திருந்தது, அனைவரும் மகிழ்ச்சியில் திளைக்க, அம்மு மட்டும் குழப்பத்தில் தவித்தாள். அவளது விழியசைவில், உள்ளத்தை படிக்கும் ரிஷி, இப்போதும் கண்டு கொண்டான். தானகவே சரியாகி விடுவாள், என காத்திருந்தான். நாட்கள் மூன்று கடந்தும், அவளிடம் மாற்றமின்றி இருக்க, எப்போதும் போல் அவளுக்கு ஆசான் ஆனான்.
அவளைக் தனியே அழைத்துச் சென்று விசாரித்தான். அவளும் தன் மனம் திறந்தாள்.”வரு எனக்கு நடந்தத பத்தி தெரிஞ்சா, ஈஸ்வரோட பேரண்ட்ஸ் என்னை ஏத்துக்குவாங்களா? மொத களங்கப்பட்ட நான் ஈஸ்வருக்கு பொருத்தமானவளா?” என தன் நீண்ட வருட சந்தேகத்தை கேட்டாள்.
இதற்கு தன்னால் தீர்வு சொல்ல முடியாது. இதில் முடிவு எடுக்க வேண்டியதும், அவளது குழப்பத்தை தீர்க்க வேண்டியதும், ருத்ராவும் அவனது பெற்றோர்களும் என்பதை உணர்ந்தவன், அவர்களை வர வைத்தான்.
அம்முவை அவர்களிடம் விட்டு விலகி செல்ல முயன்ற ரிஷியை, தடுத்து அவனது கரத்தைப் பற்றிக் கொண்டாள். அவளின் கடந்த கால கொடூரத்தை சொல்லும் போது, தன் ஆதரவை எதிர்பார்க்கிறாள் என்பதை புரிந்தவன், சங்கடமான பார்வையை அனைவரிடமும் செலுத்தி,”மிரு நான் எங்கும் போகல கார் கிட்ட வெயிட் பண்றேன்.”
‘போகாதே’ என அவள் விழிகள் கெஞ்சியது. ரிஷிக்கு தர்ம சங்கடமான சூழ்நிலை.
“நீ இரு ரிஷி. ஒன்னும் பிரச்சனை இல்ல.” கணீரென வார்த்தைகள் வந்தது ருத்ராவிடமிருந்து.
ரிஷிக்கும் அம்முவுக்கும் ஆச்சரியமாகி போனது. ருத்ராவுக்கு ரிஷியை கண்டால் ஆகாது, என்பது அவர்களுக்கு தெரிந்தது தானே. அவர்களது பார்வை புரிந்த ருத்ரா ஒரு சிரிப்பை வழங்கினான். ‘நான் உங்கள் நட்பை புரிந்து கொண்டேன்’ என்ற செய்தி அதிலிருந்தது.
பிறகு என்ன கவலை? அம்மு தனக்கு நடந்த வன்கொடுமையை ஈஸ்வரின் பெற்றோர்களிடம் கூறினாள். அவளது கடந்த காலத்தை கேட்டு அவர்களும் மனம் வருந்தினார்கள்.
“இப்ப சொல்லுங்க? களங்கப்பட்ட நான் உங்க பையனுக்கு பொருத்தமானவளா?” திடமாக கேட்க முயன்று முடியாமல் தடுமாறினாள்.
இப்போது ருத்ராவின் கரம் அவளை ஆதரவாக தோள் அணைத்தது. ரிஷி விலகி நின்றான்.
“மருமகளே” ஒரே வார்த்தையில் தன் மனதை காட்டி இருந்தார் ஈஸ்வரமூர்த்தி. “படபூஜை அன்னைக்கு, ஈஸ்வர் உன்கிட்ட காட்டுன நெருக்கத்திலேயே, அவனோட மனசு புரிஞ்சது. உனக்கும் ரிஷிக்கும் இடையில் உள்ள உறவை பற்றி, தெரியாத காரணத்தினால் மட்டுமே பேசாமல் இருந்தோம். நாங்கள் அப்படி நினைத்ததற்கான காரணமும் உங்களுக்கு புரியும்.”
ரிஷி குறுக்கிட முயன்றதை கைகாட்டி தடுத்து,”உங்களுக்குள்ள தப்பான உறவுன்னு சொல்லல. நீங்க ரெண்டு பேரும் விரும்பும் பட்சத்தில், உங்களுக்கு நடுவில் ருத்ரா வந்துருவானோ என்று பயந்தோம். அவன் ஆசைப்பட்டதை அடைய எந்த எல்லைக்கும் போவான். இப்போ நீ பேசியதற்கு பிறகு அந்த கவலையும் தீர்ந்தது. உன்னை மருமகளாக ஏத்துக்க எனக்கு மனபூர்வ சம்மதம்.”
அதோட நிறுத்திக் கொண்ட ஈஸ்வரமூர்த்தி தன் மனைவிக்கு கண்ணை காட்டி பேச சொன்னார். அடுத்த விஷயத்தை அவர் மருமகளிடம் பேசுவது, இருவருக்கும் தர்ம சங்கடத்தை கொடுக்கும் என மனைவியை பேச வைத்து விலகி சென்றார்.
“அம்மு உனக்கு நடந்தது ஒரு விபத்து. அவ்வளவுதான். ஒரு ஆண், தன் பலத்தை பயன்படுத்தி, ஒரு பெண்ணை உடல் அளவில் நெருங்கினால், அந்தப் பெண் களங்கப்பட்டவளாக மாட்டாள். மனதளவில் சலனப்பட்டால் மட்டுமே களங்கப்பட்டவள். நீ என் மகனுக்கு மனைவியாக முழு தகுதியுடையவள்.
தன் விருப்பத்துடன் பெண்களை அணுகிய, என் மகனை நிராகரிக்கும் உரிமை வேணா உனக்கு இருக்கு. அவனை ஏற்றுக் கொள்வதும்? நிராகரிப்பதும்? உன் விருப்பம். உன்னை மருமகளாய், இல்லை இல்லை மகளாய் கூட்டிச் செல்ல எங்களுக்கு பரிபூரண சம்மதம். இனி முடிவு உங்கள் கையில்.” என ருத்ராவிற்கு ஒரு ஆப்பு அடித்து விட்டே, அவர்களுக்கு தனிமையளித்து ரிஷியுடன் விடை பெற்றார்கள்.
‘எங்கு அன்னை கூறியது போல், இந்த காரணத்தை கூறி தன்னை தவிர்த்து விடுவாளோ?’ ருத்ராவிற்கு பயம் பிடித்துக் கொண்டது.
“ஹாய்யய்யோ அம்மு! அம்மா சொன்ன மாதிரி எதுவும் சொல்லிடாத. அந்த பழக்கம் எல்லாம் உன்னை பார்க்கிறதுக்கு முன்னாடி. நீ உயிரோடு இல்லைன்னு நினைச்சப்ப கூட, உன்னை மட்டும் மனசுல சுமந்து, வேற எந்த பொண்ணையும் கண்ணால் கூட பார்த்ததில்லை.” பதறினான்.
“ஓ நான், உன்னை விட்டுடுவேன்னு நினைப்பு வேற உனக்கு இருக்கா? கட்டவண்டி.” ஒற்றைப் புருவம் உயர்த்தி தோரணையாக வினவினாள். அவனிருந்த பதற்றத்தில் அவள் சொல்லிய விஷயத்தை. உள்வாங்கவில்லை. அதேநேரம் கட்டவண்டியையும் கவனிக்க தவறினான்.
“என்னை விட்டு போக, உன்னை விடுவேன்னு நினைச்சியா நீலாம்பரி? அதுகா நான் இவ்வளவு பாடுபட்டேன்?”
“ஆமா பொல்லாத பாடுபட்ட? என்னை மிரட்டி இங்க கூட்டிட்டு வந்துட்டு, பாடுபட்டேன்னு பொய் வேற” என இதழ் சுழித்தாள்.
அவளது சுழித்த இதழை, ஆசையாக தழுவியது அவன் கண்கள்.”ரொம்ப நடிக்காதடி என் நீலாம்பரி. என்னை வெறுப்பேத்தி இங்க வர வச்சுட்டு பேசுற பாரு பேச்ச.” கண்கள் தழுவிய இதழை விரல் ஸ்பரிசித்தது.
அவன் கரத்தை தட்டி விட்டவள்,”ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்காத. உன்கிட்ட பைசல் பண்ண வேண்டிய கணக்கு இன்னும் இருக்கு.”
“இன்னும் என்னடி?” சலிப்பு வந்தது.
“நீயும் நானும் சேர்ந்திருக்கிற மாதிரி போட்டோவ, மார்ஃபிங் பண்ணி போடுற. எங்க வீட்டு கேமராவை ஹாக் பண்ற? இது எல்லாத்துக்கும் மேல என்னோட வருக்கு ஆக்சிடென்ட் பண்ண.” என அவன் மீதான குற்றத்தை வரிசையாக பட்டியலிட்டாள்.
‘ஐயோ நீலாம்பரி இப்படி வரிசையா, என்னோட குற்றத்தை அடுக்குனா என்னதான் பண்றது?’ என மனதில் சலித்தவன்.
“நாலு வருஷத்துக்கு முன்ன, செத்துப் போயிட்டதா நினைச்ச பொண்ணு, திடீர்னு என் முன்னாடி மேடையில் நிக்கிற. பின்னாடி திரையில உன்னுடன், வேற ஒருத்தன் நெருக்கமா இருக்க படக்காட்சி, அவனையும் உன்னையும் ஜோடி சேர்த்து கேள்விகள் வருது. உன் பார்வை கூட என் பக்கம் திரும்பல. உன் கவனத்தை என் பக்கம் திருப்ப, நம்ம ஜோடியா நடிக்க போறோமுன்னு அனவுன்ஸ் பண்ணினேன்.
நீ பின் வாங்க கூடாதுன்னு, பேப்பர்ல நம்ம சேர்ந்து இருக்கிற மாதிரி போட்டோ செட் பண்ணி போட்டேன். நான் முன்னால் செஞ்ச தப்பை மனசுல வச்சு, என் முகத்தில் முழிக்க கூடாதுன்னு, மறுபடியும் நீ என்னை பிரிஞ்சு போயிடா, என்ன பண்றது? அதனால் உங்க வீட்டு கேமராவை ஹேக் பண்ணேன். தப்பான அர்த்ததுல இல்லை.
என்கூட நடிக்கிறதை தவிர்ப்பதற்காக, உன் கல்யாணத்தை பத்தி சொல்லப் போறதா சொன்ன. என் மேல் உள்ள கோபத்தில், ரிஷியை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டா என்ன பண்றது? அதனால அவனுக்கு சின்ன ஆக்சிடென்ட் பண்ணேன்.” என தன்னிலை விளக்கம் சொல்லி முடித்தான்.
“சரி சொல்லி முடிச்சிட்டியா? அதுக்காகவெல்லாம் உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது கட்டவண்டி” என அசால்ட்டாக அம்மு நகர்ந்தாள். இப்போது அவளது கட்டவண்டியை உணர்ந்தவன் ஆனந்த அதிர்ச்சி அடைந்தான்.
நகர்ந்தவளின் தோளை பற்றி தடுத்து,”அம்மு, நீலாம்பரி இப்ப நீ என்னை என்ன சொல்லிக் கூப்பிட்ட?” முகம் எல்லாம் சந்தோஷத்துடன் கேட்டான்.
“என்ன சொன்னேன்? ஒன்னும் சொல்லலையே?” என்றாள் அப்பாவியாக.
“ஹே நீலாம்பரி! விளையாடாத. என்னை எப்படி கூப்பிட்ட? சொல்லு. சொல்லுடி.” ஆர்வம் மிக மிஞ்சி இருந்தது.
வெக்கம் பிடிங்கி தின்ன, முகம் எல்லாம் சிவக்க, அவன் கண்களுடன், தன் விழிகளை கலக்க விட்டவள்,”கோல்டன் வேர்ட்ஸ் ஆர் நாட் ரிப்பீட்டட். கட்டவண்டி.” என அவன் கரத்தை விலக்கி ஓடினாள்.
விலகி ஓடிய தன் நிலாம்பரியை, தாவி பிடித்து தன் மார்புடன் இறுக தழுவிக் கொண்டான் நீலாம்பரியின் கட்டவண்டி.
†††††
அம்முவையும் ருத்ராவையும் தனிமையில் விட்டு வந்த ரிஷிவர்மா, பிந்து தனித்திருந்த வீட்டிற்குள் செல்லாமல், வெளி தின்னையில் அமர்ந்து விட்டான். தன் மிரு பேபியுடன் தனிமையில், சொல்லப்போனால் ஒரே படுக்கையில் அமர்ந்திருந்த போது கூட, தோன்றாத உணர்வு பிந்துவிடம் தோன்றியது. தன் மனம் பிந்துவிடும் சாய்ந்து விட்டது என்பதை நன்கு உணர்ந்தான். அதனால் அவளுடனான தனிமையை தவிர்த்தான்.
ஏதோ வேலையாக வெளியே வந்த பிந்து கண்டது, டென்ஷனோடு அமர்ந்திருந்த ரிஷியை.
“ஏன் இங்கேயே உட்கார்ந்துட்டீங்க?” குரல் மென்மையிலும் மென்மையாக வந்தது.
“சும்மாதான். மிருவையும், ருத்ராவையும், பேச விட்டு வந்திருக்கேன். அவங்க என்ன முடிவு எடுப்பாங்கன்ற, டென்ஷன் தான் வேற ஒன்னும் இல்லை.”
அவன் சொன்னதை கேட்டு, பிந்துவுக்கும் டென்ஷன் ஏறியது,’ஆண்டவா அவங்க நல்ல முடிவா எடுக்கணும்னு’ என அவசர வேண்டுதல் வைத்து, அவளும் அங்கேயே அவர்கள் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
முதலில் பிந்துவும் அங்கு இருப்பது ரிஷிவர்மாவின் கவனத்தில் பதியவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகே அவள் இருப்பை உணர்ந்தவன், தலை திருப்பி அவளைக் கண்டான்.
அவளைப் பார்த்தவனின் கண்களை, அவளிடமிருந்து விலக்க முடியாமல் பசை போட்டு ஒட்டிக்கொண்டது. அவனது பார்வை அங்குலம் அங்குலமாக பெண்ணை அளந்தது. அவன் பார்வையை உணர்ந்த பெண்ணின் வதனம் வெட்கத்தை பூசிக் கொண்டது. அவளது வெட்கம் ஆணை வசீகரித்தது.
இவன் பார்வையால் பெண்ணை ரசித்து கொண்டிருக்க, அம்முவும் ருத்ராவும் முகம் எல்லாம் பிரகாசிக்க அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களின் முகப்பொலிவிலேயே முடிவை தெரிந்து கொண்ட ரிஷி, ருத்ராவுக்கு கைகொடுத்து வாழ்த்தி, மித்ராவை அணைத்துக் கொண்டான். அவர்கள் கண்கள் கலங்கியது. முகம் சந்தோசத்தில் ஜொலித்தது.
மற்றவர்களுக்காக தன் மனதை மறைத்து, உள்ளே அழுது வெளியே சிரித்து, இதுவரை அவள் ஆடிய நாடகம் இன்றுடன் முற்று பெற்ற நிம்மதி. அவள் காதலை அவளுக்கு திருப்பிக் கொடுத்த மகிழ்ச்சி ரிஷியிடம். அவர்களின் நான்கு வருட தவத்தின் வரம் கிடத்தது இன்று. அவளது வேதனையை உடனிருந்து அனுபவித்தவனுக்கு தானே தெரியும் அவளது மனகஷ்டம்.
சிறிது நேரத்திற்கு பிறகே தான் செய்யும் காரியம் மனதில் உரைக்க, ருத்ரா தவறாக எடுத்துக் கொள்வானோ? என அவளை விட்டு விலக முயன்ற ரிஷியையும், சேர்த்து ருத்ரா அணைத்துக்கொண்டான் தன் நிலாம்பரியுடன்.
உங்கள் நட்பை நான் அங்கீகரித்து விட்டேன். இனி உங்களுக்குள் பிரிவென்பதே கிடையாது, ஆனால் அதில் என்னையும் சேர்த்து கொள்ள வேண்டும், என கூறியது அந்த அணைப்பு.
Leave a Reply