நினைவு தூங்கிடாது 3.1

நிஜம் 3

மாட்டேன் முடியாது

 உன் தொடர் மறுப்பை

கேட்ட பின்னும்

 நீயே வேண்டும் என துடிக்கும்

என் இதயத்துடிப்பை

 என்னவென்று நான் சொல்ல 

மித்ராவின் முன்னால் ஒரு நாளிதழை விசிறியடித்த ரிஷி, கோபத்தில் நெருப்பாக தகித்து கொண்டிருந்தான்.

“நான் சொன்னேன் கேட்டியா மிரு? அவனோட வேலையை காட்டித்தான்.” என்றான் ரிஷி கோபத்தோடு. 

ஒன்றும் புரியாமல் அவன் முகத்தை ஏறிட்ட மித்ரா,”என்ன ஆச்சு வரு? ஏன் இவ்வளவு கோபம்?”

பதில் கூறாமல் அந்த நாளிதழை கண்களால் சுட்டினான்.

‘என்னவாகிற்று?’ குழப்பத்துடன், அவன் விசிறி அடித்ததில் அலங்கோலமாக சிதறிக்கிடந்த நாளிதழை எடுத்தாள். முதல் பக்கத்தை பார்த்த அடுத்த நொடி, நெருப்பை தொட்டது போல் அதை நழுவவிட்டாள்.

‘நான் அவனுடன், இது எப்படி சாத்தியம்?’ என குழம்பிய அவள், சிறிது நேரத்திலேயே தெளிந்தாள். ‘சாப்ட்வேர் நிறுவனத்தின் முடிசூடா ராஜாவால், இந்த சின்ன வேலையை செய்ய முடியாதா?’ என ஏளனமாக நினைத்தவள், நழுவிய நாளிதழை மீண்டும் எடுத்து, தங்கள் படத்துடன் வந்த செய்தியை வாசித்தவள் அலட்சியமாக தூக்கி எறிந்தாள்.

‘அந்த செய்தியால் அவள் பாதிக்கப்படுவாளோ?’ என அஞ்சி, அவள் முகத்தையே பார்த்திருந்தான் ரிஷி. அவன் எண்ணத்தைப் பொய்யாக்கி, ‘அந்த நாளிதழில் வந்த செய்திக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை’ என்பதுபோல், அதை விட்டெறிந்திருந்தாள்.

‘அந்த செய்தி அவளை பாதிக்க வில்லை’ என்பதில் நிம்மதி மூச்சுடன்,”அன்னைக்கே அவன் கூட நடிக்க ஒத்துக் கொள்ளாதேன்னு கண்ணை காட்டினேன். நீ புரிஞ்சுக்கல” இயலாமையுடன் வெளிவந்தது வார்த்தைகள்.

“புரியாம இல்ல வரு. கூட்டத்தின் முன், மேடையிலிருந்தபோது கேட்கிறான். எப்படி என்னால், அதற்கு மறுப்பு சொல்ல முடியும்? ஆனா அவன் இவ்வளவு தீவிரமா, அதுவும் இவ்வளவு வேகமா இறங்குவான்னு தெரியாம போச்சு.” அதே இயலாமை வார்த்தை.

அவளின் சூழ்நிலையும் ரிஷிக்கு புரிந்துதான் இருந்தது, ஒருவகையில் எதிர்பார்த்தும்கூட, என்ன இவ்வளவு விரைவில் எதிர்பார்க்கவில்லை. இப்போது மொத்தமாக மாட்டிக்கொண்டு முழிப்பது போல் ஒரு உணர்வு. ஏதோ தவறாக நடக்க போவதுபோல் மனதில் ஒரு நெருடல்.

அப்போது அவளது கைப்பேசி ஒலி எழுப்பி, அவர்களை கலைத்தது. அழைப்பு வந்த எண்ணை பார்க்கவுமே, அது யார் என்று தெரிந்து கொண்ட மித்ரா, அழைப்பை ஏற்று எதுவும் பேசாமல் ஸ்பீக்கரில் போட்டாள்.

அந்தப்புறம் இருந்த ருத்ரா அவளின் அமைதியை பொருட்படுத்தாமல்,”பொம்மு இனி உன்னால் இந்த படத்திலிருந்து விலக முடியாது. நான் சொன்னதை எப்பவும் நடத்திக் காட்டுவேன். பட பூஜைக்கு தேதி குறிக்கவும் கால் பண்றேன். வந்து சேர்.” அவள் பதிலை எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தான்.

தன் முன்னால் இருந்த நாளிதழை வெறித்தபடி இருந்தாள் மித்ரா. ‘அடுத்த நடவடிக்கை என்ன?’ என மித்ராவின் முகத்தையே சிந்தனையோடு பார்த்திருந்தான் ரிஷி.

அவர்களுக்கு முன்னால், ருத்ரேஸ்வரனும் மித்ராலினியும் நெருக்கமாக இருக்குமாறு, ருத்ராவால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம், அன்றைய செய்தித்தாளின் முதல் பக்கம் முழுவதும் இடம் பிடித்திருந்தது. அதிலிருந்த புகைப்படமும் செய்தியும் மித்ராவை பார்த்து எள்ளி நகையாடியது. 

அதிலிருந்த செய்தி

‘புதுமுக நடிகர் ருத்ரேஸ்வரனுடன், கனவுக் கன்னி மித்ராலினி இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படம் ஒரு கிராமத்தில் நடக்கும் கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தை பற்றி புதுமுக நடிகரும், இந்தப் படத்தின் கதாசிரியருமான ருத்ரேஸ்வரனின் கருத்து,

“இது முழுக்க முழுக்க கதாநாயகியை மையப்படுத்திய கிராமத்து கதை. இந்த கதாபாத்திரம் நடிகை மித்ராலினிகாகவே உருவாக்கப்பட்டது. இந்த கதாபாத்திரத்தில் அவங்களைத் தவிர வேறு யாராலும் பொருந்த முடியாது, அவ்வளவு கச்சிதமா அவங்களுக்கு பொருந்தும்.” என ருத்ராவின் சிறிய அளவு, தனி புகைப்படத்துடன் அச்சிடப்பட்டிருந்தது. 

இதே செய்தி ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலை தளங்களிலும் வைரலாக பரவியது. ஒரே இரவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றிருந்தது. விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருந்தன.

அந்த செய்தியை பார்த்து தான் ‘அடுத்து என்ன செய்வது?’ என இருவரும் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

தான் மறுப்பு கூறியும் ருத்ரா இந்த அளவு இறங்கி, அடுத்த கட்ட வேலையை செய்வான் என மித்ரா சிறிதும் எண்ணவில்லை. அவனின் மீதான கோபம் ஏறிக்கொண்டே சென்றது.

அவளின் சிந்தனை இந்தப் படத்தில் நடிக்க தனக்கு சம்மதம் இல்லை, என ருத்ராவிடம் மறுப்பு கூறிய தினத்திற்கு சென்றது.

†††††

விழா நடந்த மறுநாள், தன்னுடைய தூண்டுதலால் வெளியான செய்தியை கண்ட பின்னும், தன் பொம்முவிடமிருந்து எந்த எதிர்வினையும் இல்லாததால், அடுத்த நடவடிக்கையாக இயக்குநர் ஒருவரை, ஈஸ்வர் ப்ரொடக்ஷனின் சார்பில், மித்ராவின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் வைத்து, அவளை சந்திக்க அனுப்பினான்.

அவர்கள் தொடங்க இருக்கும் திரைப்படத்திற்கான கதையை, கூற வேண்டுமென்று வந்தவரை,”எனக்கு அந்தப் படத்தில் நடிக்க விருப்பம் இல்லை.” என மறுத்து கூறினாள் மித்ரா.

“இது நல்ல கதை மித்ரா மேடம். கதாநாயகியே முக்கிய கதாபாத்திரம். இந்தப் படம் நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல திருப்பத்தை கொடுக்கும். நீங்க இந்த கதையை படிச்சு பாருங்க. அப்புறமும் பிடிக்கவில்லையென்றால் சொல்லுங்க.” என கூறி, ஒரு கோப்பையை அவள் கரங்களில் திணித்து சென்றிருந்தார்.

அவர் இவ்வளவு சொல்லுமளவு, அந்தக் கதையில் அப்படி என்னதான் இருக்கிறது? என்று பெண்களுக்கே உரிய ஆர்வம் எட்டிப்பார்த்தது.

அதைப் படித்துப் பார்க்கலாமென முடிவு செய்து, அந்தக் கோப்பையை கொண்டு சென்று தன் படுக்கை அறையில் வைத்தவள், தன் வேலை பளுவால் அதை மறந்தே போயிருந்தாள். ஏற்கனவே ரிஷியுடன் நடித்துக் கொண்டிருந்த திரைப்படத்திற்கான, காட்சிப் பதிவுகள் முடியும் தருவாயில் உள்ளதால் அதில் மும்முரமாக முழுகி விட்டாள்.

அந்த இயக்குநர் வந்து சென்ற இரண்டு நாட்களுக்கு பின்,

தற்போது அவளும் ரிஷியும் நடித்துக் கொண்டிருக்கும் படத்தின், கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தது.

சில வருடங்களுக்குப் பின் சந்திக்கும் தன் நாயகனை, கண் இமைக்காமல் பார்த்து,’என்னை இப்படி தனியாக தவிக்க விட்டுட்டு சென்று விட்டாயே?’ என வசனமின்றி உணர்வுகளால் வெளிப்படுத்த வேண்டும். 

அதற்கு பதிலும் மௌன மொழியால்,’என்னை மன்னித்துவிடு’ என ரிஷி யாசிக்க வேண்டும்.

நாயகனை மன்னித்த நாயகி அவனை ஓடிச்சென்று அணைத்துக் கொள்ளும் காட்சி.  பிறகு சில சென்டிமென்ட் வசனங்களுடன் உருவாகிக் கொண்டிருந்தது. உணர்வுபூர்வமான கதைக்களம்.’ அதிலும் இந்த காட்சி மிகவும் முக்கியமானது. எப்போதும் போல் ரிஷியும் மித்ராவும் அந்த காட்சியுடன் ஒன்றி உருகிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சிக்கு, தயாராகிக் கொண்டிருக்கும் இடைவேளை நேரத்தில், சற்று இலகுவாக அமர்ந்திருந்த மித்ராவின் கைப்பேசி சினுங்கி அழைத்தது.

கைப்பேசியை எடுத்து யார் என்று பார்க்க, தெரியாத புது இலக்கத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது.’யாராக இருக்கும்?’ என சிந்தனையோடு அந்த அழைப்பை ஏற்றிருந்தாள்.

“ஹலோ” மித்ரா

“….” இணைப்பின் அந்தப்பக்கம் இருந்த நபர், அவள் குரலை உள்வாங்கிக் கொண்டிருந்தது போல் மௌனம்.

“ஹலோ ஹலோ” என இரண்டு மூன்று முறை அழைத்த பிறகும், பதில் வராததால் அலைபேசியை அணைத்தாள்.

மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு. இந்த முறை எரிச்சலோடு அந்தக் காலை எடுத்தாள்.

“ஹலோ யாருங்க நீங்க? போன் பண்ணி பேசாம இருக்க எதுக்கு போன் பண்றீங்க? எங்களுக்கு என்ன வேலை வெட்டி இல்லன்னு நினைச்சிங்களா?” என பொரிந்து தள்ளினாள்.

அந்தப் பக்கம் இருந்தவன், இவ்வளவு நேரம் அவளது குரலை ரசித்தது போதுமென, தன் திருவாய் மலர்ந்து,”பொம்முக்குட்டி” என அந்தப் பெயரை மிகவும் ரசித்து, மென்மையாக உச்சரித்திருந்தான். அவன், இந்த பெண் மானை கவர்ந்து செல்ல துடிக்கும் ருத்ரேஸ்வரன்.

அவனது பிரத்தியேக அழைப்பிலும் குரலிலும் அவனை அடையாளம் கண்டு கொண்ட பெண் இப்போது மௌனத்தை தத்தெடுத்தாள்.

“எப்படி இருக்க பொம்மு.” ஆர்வம் மட்டுமே இருந்தது அந்த குரலில்.

“…”

“உன்னோட நம்பர் வாங்குறதுக்குள்ள எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா?” குரலில் ஒரு குழைவு. 

“….”

“பொம்மு லைன்ல இருக்கியா? ஏதாவது பேசு?” இப்போது குழப்பம்.

“…”

“எவ்வளவு ஆசையோடு உனக்கு கால் பண்ணினேன். என் கூட பேச மாட்டியா?” குரலில் வருத்தம் இருந்ததோ?

“இங்கே பொம்முன்னு யாருமில்லை. நீங்க தப்பான நம்பருக்கு கால் பண்ணி இருக்கீங்க?” அந்தக் அழைப்பை துண்டிக்க முயன்றாள்.

“போனை கட் பண்ண உன்னை கொன்னே போடுவேன்?” இப்போது குரலில் ஒரு கடினம்.

“யார் நீங்க? தெரியாத ஒருத்தர்கிட்ட, என்னென்னமோ பேசிட்டு இருக்கீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என அவனை அறியாதது போல் கேள்விகளை தொடுத்தாள்.

‘அவள் தன்னை அறியாதது போல் நடிக்கிறாள்’ என்பதை உணர்ந்துகொண்ட ருத்ரா, மனதினுள் சிரித்துக்கொண்டே,

“நீ நடிகைங்கறத நல்லாவே நிரூபிக்கிற. நான் யாரென்று உனக்குத் தெரியாது? இட்ஸ் ஓகே நேரம் வரும் போது, உனக்கு நான் யாருன்னு புரிய வைக்கிறேன். நான் ருத்ரா, ருத்ரேஸ்வரன். நம்ம சேர்ந்து நடிக்கப் போற படத்தோட கதையின் ஸ்கிரிப்டை அனுப்பிச்சேன் படிச்சியா?”

முதலில் கூறிய அனைத்தையும் விடுத்து,”நான் உங்க கூட நடிக்க மாட்டேன்னு, அந்த டைரக்டர் கிட்ட சொன்னதா ஞாபகம்.”

“நீ நடிக்க மாட்டேன்னு சொன்னவுடனே உன்னை விட்டுட்டு போக நான் என்ன கேன பயன்னு நினச்சியா?” 

“என்னை உங்களால் எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது.” என்றாள் அலட்சியமாக.

“நான் ருத்ரேஸ்வரன் என் காதில் முடியாது என்ற வார்த்தை விழவே விழாது.” கர்வமாக கூறினான். 

“இனி உங்க காதில் இல்லை என்ற வார்த்தை என் மூலம் கேட்கும்.”

“அதையும் பார்க்கலாம். முதலில் ஸ்கிரிப்ட்டை படி. நான் நாளைக்கு கால் பண்றேன். பாய் பொம்முக்குட்டி.” என கூறி தொடர்பைத் துண்டித்தான்.

தன் இல்லம் சென்றபின், அவன் அனுப்பிய கோப்பையிலிருந்த கதையைப் படிக்கத் தொடங்கியவளின் கோவம், சிறிது சிறிதாக ஏறி அதன் உச்சத்தை தொட்டது “இவன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கான். இடியட் உன்னை நான் கவனிச்சுக்கிறேன்.” என ஆத்திரத்தில் அந்த கோப்பையை விட்டெறிந்திருந்தாள். அது மேஜையில் ஒரு மூலையில் சென்று விழுந்தது.

†††††

மறுநாள் சொன்னதுபோல், ருத்ரா மித்ராவை அழைத்திருந்தான். “என்ன பொம்முகுட்டி கதையை படிச்சியா? எப்ப நம்ம மூவியை ஸ்டாட் பண்ணலாம்? கரண்ட் மூவி எப்போ முடியுது?”

“என்ன மிஸ்டர் ருத்ரா, நான் எப்போ உங்க கூட நடிக்கறேனென்னு சொன்னேன்?”

“ஏன் அவார்ட் பங்க்ஷன்ல வாக்கு கொடுத்தது மறந்துட்டியா?” என்றான் அலட்சியமாக

“திவ்யமா ஞாபகம் இருக்கு. அதே சமயம் நானும், எனக்கு சூட்டாகுற கதை, பிடிச்சிருந்தா மட்டுமே நடிப்பேன்னு சொன்ன ஞாபகம்” அதே அலட்சியம்.  

“ஏன் கதைல என்ன பிரச்சனை? உனக்காகவே எழுதப்பட்ட கதை. உன்னை மட்டுமே மனதில் கொண்டு நான் எழுதிய கதை.” மறைமுக பொருள் இருந்ததோ?

அவன் கூறியதை கேட்டவளின் கோவம் சுள்ளென்று ஏறியது, தன் உணர்ச்சிகளை மறைக்க பழகியிருந்த பெண், தன் உணர்வுகளை தன்னுள் புதைத்து,”சாரி மிஸ்டர் ருத்ரா. எனக்கு அந்த கதை சூட்டாகாது. சோ நீங்க வேற ஹீரோயினை வச்சு அந்த கதையை முடித்துக் கொள்ளுங்கள்.”

“நான் யாரை வச்சு படம் எடுக்கணும்னு, நான் தான் முடிவு பண்ணனும். நீ இல்லை. உன்ன எப்படி என் கிட்ட வர வைக்குறதுன்னு எனக்குத் தெரியும். கூடிய விரைவில் மீண்டும் சந்திப்போம். பை மை டியர் பொம்முக்குட்டி.” என தொடர்பைத் துண்டித்தான்.

அன்றைய அலைபேசி உரையாடலை, அலட்சியம் செய்திருந்த மித்ரா இப்போது அதன் எதிரொலியை கண்டுவிட்டாள் நாளிதழின் வழியே. 

இதற்கான பதிலடியை திருப்பிக் கொடுக்க வேண்டுமென முடிவு செய்தாள் மித்ரா. மறுநாள் காலையில் வந்த நாளிதழில், அவள் கொடுத்த செய்தி, ருத்ராவை கொதிநிலைக்கு கொண்டு சென்றது.