நினைவு தூங்கிடாது 3.2

நிழல் 

முகம் அறிந்து பெயர் தெரியாமல்

பெயர் அறிந்து முகம் தெரியாமல்

இருவரும் ஒருவரே என

உணராமல் போன அறிவை

என்னவென்று நான் சொல்ல 

கோவிலிலிருந்து பிருந்தா கிளம்பிய பிறகு, ஈஸ்வரனின் குடும்ப நபர்கள் மட்டும் அங்கு வீற்றிருந்தனர்.

“இன்னைக்கு அமிர்தா ஏன் வரல குட்டிமா?” பாட்டி ரேகாவிடம் வினவினார்.

“வழக்கம் போலதான் அப்பத்தா. அவ பிரெண்ட்ஸ் கூட விளையாட போயிட்டா.” என தோழியை பார்க்க முடியவில்லையே, என்ற ஆதங்கத்தில் சலித்துக் கொண்டாள். அவள் பிரண்ட்ஸ் என்றதை அவள் வயதை ஒத்த பெண்கள் என ஈஸ்வரன் தவறாக புரிந்து கொண்டான்.

பாட்டியின் முகத்தில் புன்முறுவல், “விளையாட்டு புள்ள”

இவர்களது பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஈஸ்வரனின் அன்னை தேவி,”யார் மா அமிர்தா?” (ஏனோ தெரியவில்லை தன் அன்னை விசாரிக்கவும், அந்த பெண்ணை பற்றி தெரிந்து கொள்ள, ஆர்வம் வந்தது ஈஸ்வரனுக்கு)

“இப்ப பார்த்தமே பிருந்தா, அந்தப் பொண்ணோட இரட்டை சகோதரி. அமிர்தா, பிருந்தா, ரேகா மூணு பேரும் ஒன்னாதான் படிக்கிறாங்க. நம்ம வீட்டுக்கு பின்னாடி தான் அவங்க வீடு. பிருந்தா அமைதியான பொண்ணு, அமிர்தா சரியான அறுந்த வாலு. துறுதுறுன்னு எதையாவது செஞ்சுகிட்டே இருப்பா. அவள ஒரு இடத்தில பிடிச்சுவைக்க, அவ அம்மா படுற கஷ்டம் இருக்கே? அப்பப்பப்பா” சலிப்பதுபோல நடித்தார் பாட்டி. பேத்தியை சீண்டி பார்க்கும் ஆர்வம். 

சீண்டல் வேலை செய்தது, பெண் பொங்கிவிட்டாள்.”ஏய் கிழவி! உனக்கு என்னை வம்பிழுக்கலேனா தூக்கமே வராதே. அந்த கிழவி சொல்லுறத கேட்காத அத்தை. அவ ரொம்ப நல்ல பொண்ணு.”

“ஆமா உன்கிட்ட வம்பிழுக்க தான் காத்துக்கிட்டிருக்கேன்? போடி போக்கத்தவளே. அவளுக்கு எதாவது உருப்படியா செய்ய தெரியுமா?” பேத்தியை சீண்டினாலும், பாட்டிக்கு அமிர்தாவின் மீது தனி பிரியம் உண்டு. 

“போ அப்பத்தா” என சிணுங்கியவள் தேவிப்பக்கம் திரும்பி,”அமிர்தா நல்லா படிப்பா அத்தை.  அவதான் எப்பவும் கிளாஸ் பிரஸ்ட். பிருந்தா கொஞ்சம் பயப்படுவா. ஆனா அமிர்தா தப்புன்னு பட்டுச்சு, தப்பு பண்ணுனவங்கள உண்டு இல்லைன்னு ஆக்கிடுவா. அப்பறம் அவ அருமையா பாடுவா.” என்றாள் ரேகா ஆர்வமாக.

இவ்வளவு நேரம் பாட்டி பேத்தியின் வாயாடல்களை ரசித்திருந்த தேவி,”இப்ப பாடுன பொண்ணும் அருமையா பாடுனா.” 

“பிருந்தாவும் நல்லா பாடுவா, ஆனால் அமிர்தா பாடுனா நாள் ஃபுல்லா கேட்டுகிட்டே இருக்கலாம். அவளோட பாட்டு நம்மை உருகவும் வைக்கும், துள்ளவும் வைக்கும். எல்லா வகையான பாட்டுக்கும் அவள் குரல் பொருந்தும்.” தன் தோழியை பற்றி, சிறிதும் பொறாமையின்றி பெருமை அடித்தாள் ரேகா.  

அவர்களின் சம்பாஷணையை செவிமடுத்த ஈஸ்வரனின் மனம், முன்தினம் சாலையில் கண்ட பெண்ணுடன், இவளை ஒப்பிட்டு பார்த்தது. அந்த துறுதுறு விழிகள், இவர்கள் கூற்றுடன் ஒத்து போவது போல் இருந்தது. ஆனால் மூளை,’இல்லை இது வேற பெண்’ என தவறாக அறிவுறுத்தியது. மூளையின் பேச்சை கேட்டு,’இது அவள் இல்லை’ என்ற முடிவிற்கு வந்துவிட்டான்.

சிந்தனையின் வசமிருந்த ஈஸ்வரின் பார்வை கார்த்திகை நோக்கியது. அவனோ முகம் பிரகாசிக்க, அவன் மனம் கவர்ந்தவளின் பெருமைகளை ரசித்து கேட்டுக் கொண்டிருந்தான். ஏனோ அவனை பார்த்த ஈஸ்வரியின் நெஞ்சம் கசந்து வழிந்தது.

இவர்கள் அனைவரின் ஆர்வமான பேச்சு ஈஸ்வரனின் மனதில்,’யார் இந்த அமிர்தா?’ என்னும் குறுகுறுப்பை ஏற்படுத்தியது. தன்னையறியாமலேயே ‘அமிர்தா எப்படி இருப்பாள்?’ என கற்பனையில் இறங்கினான். அவன் கண்முன்னால் மீண்டும் அதே உருவம் தோன்ற. அவளாய் இருக்க வாய்ப்பே இல்லை என மண்டையில் ஒரு கொட்டு கொட்டி அதை அடக்கினான்.

அந்த நிமிடத்திலிருந்தே அமிர்தா எனும் காரிகையை பற்றிய அவனின் மன தேடல் தொடங்கிவிட்டது. அமிர்தா என்ற பெயர் அவன் மனதில் ஆழப்பதிந்துவிட்டது.

அமிர்தா, தன் மனதுடன் கலக்க போகின்றாள். அம்மு தன் உயிருடன் கலக்கபோகிறாள்.

அம்முவும் அமிர்தாவும் ஒருவளே என்று அறியாமல், அம்மு என்ற தன்னவளின் மீது தன் கோபத்தை வளர்த்துக் கொள்ளப் போகிறான். அவனின் அர்த்தமற்ற கோபத்தால் அம்மு என்ற அப்பாவி பெண்ணை வதைக்க போகிறான். அவனது செயல்களால் அந்த பெண் இவனை முழுதாக வெறுக்க போகிறாள் என்பதை பாவம் அவன் அறியவில்லை. 

தற்போது, தான் முழுதாக வெறுக்கும் பெண் அம்முவும், தன் மனம் தேடும் அமிர்தாவும் ஒருவரே என்று தெரியும்போது, காலம் கடக்காமலிருக்க வேண்டும்.

ஈஸ்வரின் அன்னை தேவி தன் சகோதரியுடன் வயல் வரப்பில் நடந்து வருவதாக கூறி அவர்களுடன் சென்று விட்டார். ஈஸ்வரன் மட்டும் ஊரை சுற்றி பார்க்க தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

‡†‡†‡†‡

“டேய் சோட்டு ஒழுங்கா அடிடா.” என்றாள் அம்மு கெஞ்சலாக.

“இப்ப பாரு அம்மு பந்து எப்படி பறக்குதுன்னு” ஜம்பமாக பேசிய அந்த குட்டி வாண்டு, பந்தை நோக்கி குறி வைக்க, அந்தோ பரிதாபம் அவன் கரத்திலிருந்த மட்டை நழுவி காற்றில் பறந்து கொண்டிருந்தது. எப்போதோ பந்து ஸ்டெம்பில் பட்டு அவுடாகி இருந்தான்.

“இதுதான் பந்து பறக்கற லட்சணமா?” அம்முவின் முறைப்பை கண்டு, உதடு பிதுக்கி அழுவது போல் முகத்தை வைத்துக்கொண்டு, அம்முவிடம் சென்று அமர்ந்துகொண்டான் பதினோரு வயது வாண்டு. 

ஊரை விட்டு சற்றுத் தள்ளியிருந்த ஆள் நடமாட்டம் இல்லாத, ஒரு ஒதுக்குப்புறமான பகுதியில், தன் தேன்சிட்டு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாள் அம்மு.

அவர்களின் விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தது. இப்பொழுது மட்டையை பிடிப்பது அம்முவின் முறை. 

“அம்மு நீ தான் நம்ம டீம் மானத்தை காப்பாத்தனும்” என்றான் கிட்டு என்று அழைக்கப்படும் கிருஷ்ணா.

“அம்முவை நம்பினோர் கைவிடப்படார்” சினிமா வசனத்தை பேசி, மட்டையோடு அவளின் இடத்தில் சென்று நின்று கொண்டாள்.

“டயலாக் எல்லாம் நல்லாதான் சொல்லுற, அடிக்கிறதுல தான் கோட்டையை விட்டுடற.” என்றான் சோட்டு நக்கலாக.

“போடா நீ அடித்ததை விட, நான் நல்லாவே அடிப்பேன்” என நாக்கை துருத்தி பழிப்பு காட்டினாள். யார் கண்டாலும் அவள் அழகில் சொக்கி தான் போவார்கள்.

பப்பு பால் போட தயாராக, அம்மு பேட்டிங்கிற்கு தயாரானாள். கைகளை மணலில் தேய்த்து கொண்டு மட்டையை பிடிக்க,”இது எதுக்கு?” சோட்டு நக்கலாக.

“ஒரு கிரிப்புக்குடா சோட்டு” என்றாள் பெருமையாக.

“பில்ட் அப் எல்லாம் நல்லா தான் குடுக்கர ஆனா?..” என முடிக்காமல் இழுத்தான்.

“ஆக்க்ஷன்ல ஒன்னும் இல்லை” என பேச்சை முடித்தான் கிட்டு.

அம்மு அவர்களை வெட்ட வா, குத்த வா என முறைக்க.”டேய் கம்முன்னு இருங்க.  இப்ப அம்மு சிக்ஸர் அடிப்பா.” அவளுக்கு ஆதரவாக வந்தாள் பிங்கி.

“அப்படி சொல்லுடி என் செல்ல குட்டி, சக்கர கட்டி” என பிங்கியின் கண்ணதை பிடித்து செல்லம் கொஞ்சி, சோட்டு, கிட்டுவை முறைத்து,”அம்மு வா மாங்காய் பறிக்கலாம், தேங்காய் அடிக்கலாம்ன்னு. ரெண்டு பேரும் கூப்பிடுவீங்கள அப்ப கவனிச்சுக்கிறேன் உங்களை.” 

“ஹயையோ அம்மு, நம்ம டீம்லயே நீ தான் பெஸ்ட் பிளேயர்” என அப்படியே பிலேட்டை திருப்பிபோட்டனர்.

“அது” என மிதப்பாக ஒரு பார்வையை கொடுத்தாள்.

‘எல்லாம் எங்கள் நேரம்’ என அந்த சின்ன சிட்டுகள் மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்டனர். உண்மையில் தலையில் அடித்தால், யார் அம்முவிடம் வாங்கி காட்டிக்கொள்வதென்ற நல்ல எண்ணம் தான்.

பப்பு பந்தை போட தயாராக அம்மு அதை அடிப்பதற்காக பேட்டை இறுகப் பற்றிக் கொண்டாள். மிகச்சிறந்த பவுலரை போல் தன் பேண்டில் அதை துடைப்பது போல் சைகை செய்து, பந்தை தூக்கி வீசினான் பப்பு என்கின்ற பன்னிரண்டு வயது சிறுவன். 

அம்முவுக்குத் தெரிந்தளவு, அவள் கையிலிருந்த மட்டையால் தன்னை நோக்கி வந்த பந்தை அடித்தாள். அவளின் பொல்லாத நேரம் அந்தப் பந்தும் மட்டையில் பட்டு பறந்தது.

உயரப் பறந்த பந்தை கண்டு அனைத்து வாண்டுகளும், ஆர்ப்பரித்து சத்தமிட்டு கொண்டிருந்த பொழுது, அந்தப் பந்து எங்கோ,’டொம்’ என்ற சப்தத்துடன் விழுந்தது. அதைத் தொடர்ந்து சடாரென ஏதோ ஒரு வாகனம் பிரேக் அடித்து நிறுத்தும் சத்தமும் காதை அடைத்தது.

அனைத்து குழந்தைகளும் பயந்துபோய் சத்தம் வந்த திசையை நோக்கி திரும்ப, அங்கே ருத்ர மூர்த்தியாக காரிலிருந்து இறங்கினான் ஈஸ்வரன்.

அவள் அடித்த பந்து அவனின் விலை உயர்ந்த காரின் மேல் பட்டு சிறிய அளவு சேதாரத்தை ஏற்படுத்தியிருந்தது. அதை பார்த்த அனைத்து குழந்தைகளும் சிட்டாக பறந்தனர். அம்மு மட்டும் அவனிடம் தனியாக சிக்கி கொண்டாள். 

†‡†‡†‡†

சற்று தொலைவில் வரும்போதே அம்முவை பார்த்துவிட்ட ஈஸ்வர், ‘இவ்வளவு பெரிய பெண், வீதியில் இப்படி சின்ன பசங்க கூட விளையாடிட்டு இருக்கா? ச்சி இவள் எல்லாம் என்ன பெண்ணோ?’ என இகழ்ச்சியாக நினைத்துக்கொண்டே வரும்போதுதான், அவள் அடித்த பந்து அவன் காரில் பட்டு கீழே விழுந்தது.

அவனின் வசதிக்கு இது பெரிய அளவு பாதிப்பு இல்லை என்றாலும், அவளின் மேல் ஏற்கனவே இருந்த அர்த்தமற்ற கோபம், அவளை வார்த்தைகளால் வதைக்க தூண்டியது. 

காரிலிருந்து இறங்கிய ஈஸ்வரன் தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு, அவளைத் தலை முதல் பாதம் வரை தன் கண்களால் அளந்து கொண்டிருந்தான்.

வாழைத்தண்டு கால்களை காட்டும், முழங்காலை தொடும் சாதாரண பாவாடை. பெண்மையை எடுத்து காட்டும் மேல் சட்டை, விளையாடியதால் வேர்த்து மேலும் உடலோடு ஒட்டி இருந்தது. சற்று களைந்து போன இரட்டை ஜடை பின்னல். ரோஜாமேல் இருக்கும் பனித்துளிபோல், முகத்தில் ஆங்காங்கே இருந்த வியர்வை துளிகள். ஆளை வீழ்த்தும் மீன் விழிகள் பரிதவிப்போடு. எந்த வித அலங்கார பூச்சும் இல்லாமல், இயற்கையில் பொழிவான முகம். ஆழிப்பேரலையாய் அவனை, தன்னுள், தன்னையறியாமல் சுருட்டிக்கொண்டிருந்தாள் அந்த அப்பாவி பெண் மான்.

அளவிடுவது போல் அவனின் கண்கள் அவளில் மேய, அவனது உணர்வுகள் விழித்துக்கொண்டது. ‘இவள் உன்னவள். அவளை உனக்கே சொந்தமாக எடுத்துக்கொள்’ என மனம் கூப்பாடு போட,’தான் இவ்வளவு பலவீனமானவனா?’ என தன்னை நினைத்தே கோவம் பெறுக, அதை வார்த்தைகளால் அவளிடம் கொட்டினான்.

அவனின் அளவிடும் பார்வை, பால் மனம் கொண்ட அம்முவிற்கு அசௌரியத்தை கொடுத்தது. அவள் நெளிந்து கொண்டே மன்னிப்பு கேட்க வாயை திறக்கும்போது,

“உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா? உன்னோட கண்ணு என்ன தலைக்கு பின்னாடியா இருக்கு? முன்னாடி வண்டி வரது கூட தெரியாத அளவுக்கு, அப்படி என்ன ஒரு ஆட்டம்.” என சரமாரியாக, தன் மீதிருந்த கோவத்தை அவள் மீது இறங்கிக் கொண்டிருந்தான். 

அவனிடம் மன்னிப்பு கேட்க வாயை திறந்த பெண், அவனின் சரமாரியான குற்றச்சாட்டில் வாயை மூடிக்கொண்டாள்.  அவனது வார்த்தைகளினால் உண்டான கோபம் தலைக்கேறி அவள் முகம் சிவந்துவிட்டது.

அவன் நிறுத்துவதுபோல் தெரியாததால், ஒரு அன்னியனிடம் பேசுகிறோம் என்பதை மறந்து, தங்களை சுற்றி யாரும் இல்லை என்பதையும் மறந்து, அவனுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்பதையும் மறந்து, தான் உபயோகிக்கும் வார்த்தைகளின் பின் விளைவை யோசிக்காமல்,

ஊரே நடுங்கும் அவனை கண்டு, சிறிதும் பயம் இல்லாமல்,”போதும் நிறுத்துயா. விட்டா ரொம்ப பேசிக்கிட்டே போற. என்ன கேட்ட அறிவு இருக்கான்னா? ஏன் உன்கிட்ட நிறைய இருக்கா? அப்படி இருந்தால் எனக்கும் கொஞ்சம் கடனா குடு. நானும் அறிவ வளத்துகிறேன்” என்றாள் படு அலட்சியமாக.

“என்ன, என்னை பார்த்தால் உனக்கு நக்கலா தெரியுதா? காரை உடச்சதும் இல்லாமல் என்னையே அலட்சியமா பேசுற” கோபத்தில் குதித்தான்.

“நாங்க பாட்டுக்கு ஆத்தங்கரையோரமா, யாரும் வராத இடத்தில் விளையாடிட்டு இருக்கோம். நீ வருவ என்று ஜோஷிமா தெரியும்? அடிச்ச பந்து தெரியாம உன்னோட வண்டி மேல விழுந்துடுச்சு. அதுக்கு என்னமோ உன் மேல விழுந்த மாதிரி குதிக்கிற. ஏதோ தப்பு என் மேல இருக்கிறதால் இப்ப பேசாம இருக்கேன்.” என மூக்கு விடைக்க பொரிந்து தள்ளினாள்.

“இல்லனா என்ன டி பண்ணுவ?”

அவன் டி என்றதில் கோபம் தலைக்கேற,”இல்லைனா நீ பேசுற பேச்சுக்கு உன் மண்டையை உடச்சிருப்பேன் டா.” அவளும் மரியாதையை கைவிட்டிருந்தாள். 

“நீ எல்லாம் வயசு பொண்ணு தானா? கொஞ்சம் கூட மரியாதை இல்லாம இந்த பேச்சு பேசற. சரியான நீலாம்பரி.”

“நான் வயசு பொண்ணு தானா? இல்லையான்னு? உன்கிட்ட நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. உனக்கு எல்லாம் மரியாத குடுக்க முடியாது. இப்ப வழியை விடு நான் போகனும்” அங்கிருந்து செல்ல முயன்றாள்.

இதுவரை யாரும் தன்னிடம், இதுபோல் அலட்சியமாக பேசி அறியாத ஈஸ்வர், கோபத்தின் உச்சகட்டத்தில் அவளை அங்கிருந்து செல்ல விடாமல், அவளை இழுத்து காரின் பின்பகுதியில் தள்ளி, தானும் அதில் ஏறி திமிரிய அவளை அடக்கி அவளின் இதழ்களை சிறை செய்திருந்தான் தன் இதழால்.