நினைவு தூங்கிடாது 5.1

நிஜம் 5

அன்பு பாசம் காதல்

அனைத்தையும் கடந்த

உன் அழகான நட்பை

என்னவென்று நான் சொல்ல

ஒரு உன்னதமான உணர்வு மித்ரா, ரிஷியின் இடையில் அழகான பந்தமாக மலர்ந்திருக்கிறது. அது அவர்கள் பிறக்கும்போது வந்த பந்தமில்லை. சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில், மித்ராவை சந்தித்த தினத்திலிருந்து ஆரம்பித்த பந்தம். அன்று முதல் அவளை தன் உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறான் ரிஷி வர்மா.

ஒரு சிறு துரும்பு கூட அவளை தீண்டாமல் பாதுகாத்து வருகிறான். அவர்களுக்குள் இருக்கும் பந்தம் நட்பா? காதலா? அதையும் தாண்டிய உறவா? என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை.

ரிஷியின் கரங்களில் மித்ரா தஞ்சமான சில மாதங்கள் கடந்த நிலையில், திடீரென ஒரு நாள் “வரு என்னை படத்துல நடிக்க வை” என கோரிக்கை வைத்தாள்.

ரிஷிக்கு அவளின் வேண்டுகோள் புரிய சில நிமிடங்கள் எடுத்தது. புரிந்தபின் திகைத்துப்போய், 

“ஏன் உனக்கு இங்கே எதுவும் ப்ராப்ளம் இருக்கா? நான் ஏதும் குறைவச்சுடேனா?” பதறி போனான்.

“சீச்சீ உன்னை குறை சொன்னா அந்த ஆண்டவனே என்னை மன்னிக்க மாட்டான். எனக்கு முடிக்க வேண்டிய சில கடமைகள் இருக்கு. அதனாலதான் கேட்டேன்.”

“உனக்கு திரையுலகம் வேண்டாம் டா. மேற்கொண்டு படி. நீ என்ன படிக்கணும்ன்னு ஆசை பட்டாலும், நான் படிக்க வைக்கிறேன்” என மறுத்தான்.

திரையுலகத்தை பற்றி தெரிந்திருந்த ரிஷி, மித்ராவை நடிக்க சம்மதிக்கவில்லை.

“இல்ல வரு, நான் பிரபலமாகனும். திரையுலகில் இருந்தால் மட்டுமே சீக்கிரம் பிரபலமாக முடியும். அப்படி பிரபலமானா தான் அவனை நெருங்க முடியும்.” 

“நீ சொல்றது எனக்கு புரியுது. அவனை நெருங்குறதுக்குனாலும் உனக்கு திரைத்துறை வேண்டாம். திரையுலகம் ஒரு மோசமான உலகம். அதற்குள் உன்னை போன்ற தேவதைகள் வரக்கூடாது. வெளியுலகத்திற்கு தெரியாத கருப்பு பக்கங்கள் நிறைய உண்டு. உனக்கு அது வேண்டாம்”

“எல்லா மோசமான பக்கத்தையும் பாத்துட்டேன் வரு. எல்லாத்தையும் இழந்து நிற்கிறேன். இனி இழப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை. என்னோட குறிக்கோள் ஒன்று மட்டுமே.” அளவுகடந்த வலி அந்த குரலில்.

அவள் குரலில் இருந்த வலியை உணர்ந்தவன், அவளை இழுத்து தன் மார்பில் இறுக்கிக்கொண்டான். தான் கடந்து வந்த பாதையை நினைத்த பெண்ணுடல் நடுங்கியது, அவனுடைய அணைப்பில் ஒன்றி போனாள்.

அவள் சற்று தெளிந்தவுடன் தன்னிலிருந்து பிரித்து, திரையுலக கருப்புப் பக்கத்தை அவளுக்கு விளக்கினான். 

“ஒரு நடிகை ஆகுறது அவ்வளவு சுலபமில்லை. இந்தத் துறைக்கு அழகு, திறமை மட்டும் பத்தாது அட்ஜஸ்ட் பண்ணனும், எல்லாத்தையும், எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணனும்.”

“அட்ஜஸ்ட் பண்ணனும்னா. நீ சொல்றது எனக்கு புரியல.” குழப்பம் மட்டுமே அவள் குரலில்.

அவளது முகத்தைப் பார்க்க முடியாமல், எங்கோ பார்வையை பதித்து “ஒரு படத்தில் நடிக்கணும்ன்னா அந்த படத்தில் நடிக்கும் ஹீரோ, வில்லன், தயாரிப்பாளர், இயக்குனர் என அனைவருடனும் படுக்கையை ஷேர் பண்ணனும்.” தயக்கத்துடன் அவளை பார்த்து,”நான் சொல்லுறது உனக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்.” தன் தேவதை பெண்ணிடம் பேசும் அந்த விஷயத்தில் கூனிக்குறுகி போனான்.

‘புரிந்தது’ என்ற தலையசைவு பெண்ணிடம்.

“அது உனக்கு வேண்டாம் குட்டி. நல்ல பொண்ணா நான் சொல்றதை கேட்கணும்.” என குழந்தைக்கு சொல்வதுபோல் எடுத்து கூறினான்.

ஆனால் அவளோ “நீயும் அந்த ஃபீல்டுலதான் இருக்க வரு.” என போட்டாலே ஒரு போடு. ரிஷி ஆடிப்போய்விட்டான்.

“நானும் அதே குட்டையில் ஊறிய மட்டைத்தான். உன்னை சந்திப்பதற்கு முன்பு வரை எனக்கும் அந்த பழக்கம் இருந்தது.” என அவள் விழியை நேர்கொண்டு சந்திக்க முடியாமல் எங்கோ பார்த்துக் கூறினான். 

அவன் கூறியதை செவிமடுத்த பெண்ணால் அதை நம்ப இயலாமல் திகைத்து விழித்தாள். 

“இங்கு சந்தர்ப்பம் கிடைக்கும்வரை அனைவரும் ராமன்தான். திரையுலகை பொருத்தவரை அந்த சந்தர்ப்பம் தானாக கிடைக்கும். படத்தில் நடிப்பதற்காக என்ன வேண்டுமென்றாலும், செய்யத் தயாராக இருக்கும் பெண்கள், எந்த எல்லைக்கும் செல்வார்கள். எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.” தயங்கிக்கொண்டே சொல்லிவிட்டு, அவள் முகம் பார்க்க தைரியம் இல்லாமல் தலைகுனிந்தான். 

ரிஷியை நெருங்கிய அவள், அவன் முகம் பற்றி தன்னை நோக்கி திருப்பி,”நான் தயார் வரு” 

ஒன்றும் புரியாமல், “எதுக்கு தயார் குட்டி?”

“நடிப்பதற்காக அங்கு செல்ல வேண்டுமென்றாலும்,” என அவனது படுக்கை அறையை சுட்டிக்காட்டி,”அங்கு செல்லவும் நான் தயார் வரு. இப்பவே அங்கு போகலாம்.” அந்த நொடி அவளை ஆட்சி செய்தது பழிவெறி மட்டுமே. அவனை பழிவாங்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தாள்.

அவள் சொன்னதை புரிந்து கொண்ட ரிஷி, நெருப்பு பட்டதுபோல் அவளிடமிருந்து விலகினான்.

“ஏய் லூசு மாதிரி என்ன உளறிட்டு இருக்க? நீ சொல்றதோட அர்த்தம் உனக்கு புரியுதா?” கர்ஜித்தான்.

“நான் பிரபலமாகணும். அதுக்கு எந்த எல்லைக்கும் செல்ல நான் தயார்.” 

“இங்க பாரு குட்டி, நான் தப்பானவனா இருந்தேன். சந்தோஷம்னா எது என்று தெரியாமல் சாக்கடையில் விழுந்தேன். ஆனா எப்போ உங்களை சந்தித்தேனோ, அப்ப இருந்து உண்மையான சந்தோஷத்தை புரிஞ்சுக்கிட்டேன். இப்போ நீ என் பொறுப்பு. உன்னை ராணி மாதிரி பார்த்துக்கறேன்.”

“நீ எங்களை ராணி மாதிரி பார்த்துக்குவ அதில் துளிகூட சந்தேகமில்லை. ஆனால் எனக்கு அவனை பழி வாங்கணும். அவனை நெருங்கனும். அதுக்கு இத விட்டா வேற வழியில்லை.” பிடித்த பிடியில் உறுதியாக நின்றாள். 

அவளின் உறுதியை கண்டு ரிஷி தான் இறங்கி வர வேண்டியதாக இருந்தது. 

 “சரி குட்டி! உன்னோட வழிக்கே வரேன். ஆனால் சில கண்டிஷன் இருக்கு அதுக்கு ஒத்துக்கிட்டா நான் உன்னை நடிக்க அனுமதிக்கிறேன்.” 

‘என்ன’ என்ற பார்வை மட்டுமே, வார்த்தைகளற்ற மௌனம் அவளிடம்.

“நீ என்னுடன் மட்டும் தான் நடிக்கணும். என்னை தவிர யார் கூடவும் வெளியே போகக்கூடாது. இதற்கு நீ சம்மதித்தால் என்னுடன் நடிக்க வாய்ப்பு கேட்கிறேன்.” என்றான் அவளின் பாதுகாப்பை கருதி.

சம்மதமான தலையசைவு பெண்ணிடம். அன்று முதல் கடந்த மூன்று வருடங்களாக மற்றவர்கள் பார்வை கூட அவள் மேல் தவறாக படாமல் காத்து வருகிறான். 

அப்படிப்பட்ட ரிஷிக்கு விபத்து.

†††††

ருத்ராவின் அலட்சியப் பேச்சில் ஏதோ பெரிதாக செய்திருக்கிறான் என்பதை உணர்ந்த மித்ரா, கரங்கள் நடுங்க தொலைக்காட்சியின் ரிமோட்டை தேடி எடுத்து, செய்தி சேனலை வைத்தாள். அதில் ஓடிக்கொண்டிருந்த செய்தியில் அவள் உலகம் ஸ்தம்பித்தது.

“படப்பிடிப்பில் நடிகர் ரிஷி வர்மா படு காயம்.” என்ற ஹெட்லைன்ஸ் ஓடிக்கொண்டிருந்தது.

அந்த செய்தியை பார்க்கவும் மித்ராவின் இதயம் அதிர்ச்சியில் நின்று துடித்தது. இச் செய்தியை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. 

மேலும் செய்தியைக் கூர்ந்து கவனித்தாள்

“நடிகர் ரிஷி வர்மா தற்போது நடிக்கும் படத்தின், கடைசி சண்டைக் காட்சியின் படப்பிடிப்பின்போது, தவறுதலாக கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு தனியார் மருத்துவமனையில், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

‘திருமணத்திற்கு பிறகுதான் அடுத்த படம் நடிப்பேன்’ என்று நடிகை மித்ராலினி அறிவித்துள்ளார். நடிகர் ரிஷி வர்மா உடனான அவரது திருமண பேச்சு நிலவி வரும் நிலையில், இந்த திடீர் விபத்து அவர்களது திருமணத்திற்கு தடையாகுமா?

அப்படி தடையாகும் பட்சத்தில் புதுமுக நடிகர் ருத்ரேஸ்வரனுடன் பேசப்பட்டு வந்த, ஈஸ்வர் புரொடக்ஷனின் திரைப்படம் தொடருமா?” என்ற செய்தி ஓடிக்கொண்டிருந்தது. 

அனைத்து படப்பிடிப்புகளும் முடிந்த நிலையில், திடீரென இந்த படத்தின் டைரக்டர் ரிஷியை அழைத்து,”ஒரு காட்சி சரியாக வரவில்லை. அதை மீண்டும் எடுக்க வேண்டும்” என கூறி படப்பிடிப்பு தளத்திற்கு வர கோரிக்கை விடுத்தார்.

அதை மறுக்காத ரிஷியும், மித்ராவை வீட்டில் விட்டுவிட்டு, அவன் மட்டுமே சென்றான். அப்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

தனது திருமண அறிவிப்பு; அதைத்தொடர்ந்து ருத்ராவின் மிரட்டல்; திடீர் ரிஷியின் படபிடிப்பு; அவனின் விபத்து; ருத்ராவின் தொலைபேசி உரையாடல்; செய்தியில் கூறிய ஈஸ்வர் புரோடக்சனின் அடுத்த படம்; என அனைத்தையும் கூட்டிக் கழித்து கணக்குப் பார்த்ததில், இது அனைத்திற்கும் பின்னணி ருத்ரேஸ்வரன் என்பது தெளிவாக புரிந்தது.

ஒரு முடிவுடன் தன் அலைபேசியை எடுத்தாள்.

†††‡†††

மித்ராவின் அழைப்பிற்காக மிகவும் ஆவலாக, ருத்ரா காத்திருந்தான். அவனை அதிக நேரம் காக்க வைக்காமல், அந்த செய்தியை பார்த்த சிறிது நேரத்திலேயே அவனை அழைத்திருந்தாள்.

அந்த அழைப்பை ஏற்றவுடன்,”பொம்மு” என்றான் மகிழ்ச்சி பொங்க.

அதில் கடுப்பான மித்ரா பல்லை கடித்துக்கொண்டு,”ஏன் ருத்ரா இப்படி எல்லாம் பண்ற?”

“நான் என்ன பண்ணினேன்?” என ஒன்றும் அறியாதவன் போல திருப்பி வினாவையே தொடுத்தான்.

“வருக்கு ஏன் விபத்தை ஏற்படுத்தின?” 

“வருவா அது யாரு?” மீண்டும் வினாவே. ஆனால் சற்று காரம் கூடி இருந்தது.

அதில் மித்ராவிற்கு சலிப்புதான் ஏற்பட்டது,”ரிஷிக்கு ஏன் விபத்தை ஏற்படுத்தின?”

“அவனுக்கு எங்கேயோ ஷூட்டிங்ல விபத்து நடந்தது என்றால், அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?” அலட்சியமே நிறைந்திருந்தது. 

“விளையாடாத ருத்ரா. அந்த ஆக்சிடென்ட்க்கு நீ தான் காரணமுன்னு, எனக்கு தெரியும். எனக்கு புரியுமுன்னு உனக்கும் நல்லாவே தெரியும். அப்புறம் எதுக்கு இந்த நடிப்பு? உனக்கு என்ன தேவை?” கறாராக பேசினாள்.

“பரவாயில்லை ரொம்ப சீக்கிரம் கண்டுபிடிச்சிட்ட. என்னை எதிர்த்தால், என்ன நடக்கும்னு ஒரு குட்டி டெமோ காமிச்சேன். நீ மட்டுமே என் தேவை?”

ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து,”சரி ருத்ரா உன்னோட வழிக்கே வரேன். உன் கூட நடிக்க சம்மதிக்கறேன். ஆனால் கதையில் சில மாற்றங்கள் செய்யணும்.”

‘அவள் எதை மாற்ற சொல்கிறாள்’ என்பதை உணர்ந்துகொண்ட ருத்ரா நக்கல் சிரிப்போடு,”அது என்னோட மனசுக்கு ரொம்ப பிடிச்ச கதை. என் உயிரோடும் உணர்வோடும் ஒன்றிப்போனது. எக்காரணம் கொண்டும் அதில் சிறு மாற்றத்தை கூட நான் அனுமதிக்கமாட்டேன்.”

“அப்ப நானும் அந்தப் படத்தில் நடிக்க மாட்டேன்.”

“ஹே பொம்மு! உனக்கு நான் ஆப்சன் குடுக்கவே இல்லை. நீ என்கூட நடிச்சே ஆகணும். அப்படி முடியாது என்றால் இன்னும் விளைவுகள் ஜாஸ்தியா இருக்கும்.” என்றான் அவனது ரோலிங் சேரில் சாவகாசமாக அமர்ந்து இடம் வலமாக ஆடிக்கொண்டே.

“நீ என்ன பண்ணாலும் திருப்பிக் கொடுப்பேன். ஆனால் அந்தக் கதையில் நடிக்க மாட்டேன்.”

“ச்ச்ச் என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கற பொம்மு. எந்த பிரச்சனையும் உனக்கு குடுக்க மாட்டேன், நீ என் உயிர். உனக்கு ஏதாவதனால் என் லிட்டில் ஹார்ட் தாங்குமா? ஆனால் அது எல்லாத்துக்கும் சேர்த்து அந்த ரிஷிக்கு தான் கிடைக்கும். அவன் உயிரோட இருக்கணுமா? வேண்டாமான்னு? டிசைட் பண்ணிக்கோ. சின்ன விபத்தை ஏற்படுத்தி அவனை மூன்று மாதம் படுக்க போட்ட எனக்கு, அவனையே போட தெரியாதா?”

ரிஷிக்கு ஆபத்து என்றதும் வேறு வழியில்லாமல், அந்தக் கதையில், அவனுடன் நடிக்க சம்மதித்தாள் மித்ராலினி.

“உன்மேல இருக்க க்ரைம் ரேட் கூடிக்கிட்டே போகுது. இது எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு நீ எனக்கு பதில் சொல்லியே ஆகணும். இப்ப என்ன? நான் உன் கூட நடிக்கணும் அவளோ தானே? இனி நீயா? நானா? பார்த்துக்கலாம்” என சவாலிட்டு அழைப்பை துண்டித்தாள்.

‘ஐயம் வைட்டிங் அம்மு. இந்த விளையிட்டு கூட ரொம்பா இண்டெர்ஸ்ட்டா இருக்கு. விளையாடிடலாம்’ என தனக்குள் சிரித்துக் கொண்டான்.

‘ருத்ரா உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? வாலண்டரியா வந்து என்கிட்ட மாட்டிக்கிற’ என மனதில் சிரித்துக் கொண்டாள். 

சிங்கத்தின் காதல் வலையில் மான் சிக்குமா?

மானின் வஞ்சத்தில் சிங்கம் சிறைபடுமா?