நினைவு தூங்கிடாது 7.1

நிஜம் 7

என் விழியசைவில்

என் உள்ளம் அறியும்

 என் தோழனே… 

நின் அன்பை

என்னவென்று நான் சொல்ல…

ரிஷிகான உணவை தயாரிக்க மித்ரா சமயலறை செல்ல, சரியாக அந்த நேரம் அவளின் கைப்பேசி அழைத்து அவளை திசை திருப்பியது. சமையலறை செல்ல இருந்தவள், வரவேற்பறை மேஜையில் இருந்த கைபேசியை எடுத்து யார் என்று பார்க்க, அதில் ருத்ராவின் எண் ஒளிர்ந்தது.

ருத்ராவின் எண்ணை பார்க்கவும் கோபத்தில் கண்கள் சிவந்தன. இது கோபத்தை காட்டும் தருணமல்ல, என்பதை உணர்ந்த பெண்,’அமைதி அமைதி’ என தன்னை திடப்படுத்திக் கொண்டு, அந்த அழைப்பை ஏற்றாள். 

“இன்னும் என்ன வேணும் ருத்ரா? அதுதான் உன்னோட படத்தில் நடிக்கிறேன்னு சொல்லிட்டேனே. திரும்ப, திரும்ப எதுக்கு கால் செஞ்சு என்னை தொந்தரவு பண்ற?” எண்ணெயில் இட்ட கடுகாக பொறிந்தாள்.

“ஓ! உனக்கு என் கூட பேசறது தொந்தரவா இருக்கு. ஆனா வாசலில் வச்சு அவன் கூட கொஞ்சி சீன் போடறது மட்டும் சக்கரையா இனிக்குதா?” என்ற குரலில் காரம் கூடியது.

“நான் யாரை கொஞ்சணுங்கரதும், யாரிடம் மிஞ்சணுங்கரதும் என்னோட பர்சனல். அதில் தலையிட உனக்கு எந்த விதத்திலும் உரிமையில்லை ருத்ரா” சூடாக பதிலளித்தாள்.

“உன்னோட பர்சனல் விஷயத்தில் தலையிடக் கூடிய, உரிமையுள்ள ஒரே நபர் நான் மட்டும்தான். வேறு யாராலும் அந்த இடத்தை நிரப்ப முடியாது.” கர்வம் மிளிர்ந்தது.

“என்னோட வாழ்க்கையில் யாருக்கு உரிமை இருக்கு? யாருக்கு உரிமை இல்லை? என முடிவு செய்ய வேண்டியது நான் மட்டுமே. உன்கூட நடிக்க மட்டுமே சம்மதம் சொல்லி இருக்கேன். மத்தபடி என்னோட வாழ்க்கையில் உனக்கு அனுமதி இல்லை.” 

“இந்தப் படம் முடியறதுக்குள்ள உன் சம்மதத்தோட உன்னோட வாழ்க்கையில் நான் நுழைவேன். அதை அந்த ஆண்டவனாலும் தடுக்க முடியாது.” என்றான் கர்வமாக.

ஒரு ஏளனப் புன்னகையுடன்,”ஆல் த பெஸ்ட் ருத்ரா. முடிஞ்சா என் சம்மதத்தோடு என் கழுத்தில் தாலி கட்டு. அப்படி நீ செய்துட்டா நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன். இல்லைன்னா நான் என்ன சொல்றேனோ அதை நீ கேக்கணும்.”

“இல்லை, முடியாது என்ற வார்த்தை என் அகராதியிலே கிடையாது பொம்மு. அது உனக்கு நல்லாவே தெரியும். கூடிய சீக்கிரம் உன்னுடைய விருப்பத்தை என்கிட்ட சொல்லுவ, சொல்ல வைப்பேன். இத சேலஞ்சா கூட எடுத்துக்கோ.”

“அது உன்னால முடியாது ருத்ரா..” என ஆரம்பித்தவள், மனதில் ஏதோ நெருட,”ஆமா நான் போனை எடுக்கவும், நானும் ரிஷியும் சீன் போடறதா சொன்னியே, உனக்கு எப்படி தெரியும்?” என்றாள் சந்தேகமாக.

ஒரு மர்மப் புன்னகையுடன்,”அது தெரிஞ்சு நீ என்ன பண்ண போற பொம்மு?” சுவாரஸ்யம் பிறந்தது அவனிடம்.

அவளது கால்கள் வாசலை நோக்கி சென்றது. இதழ்கள் பேசியது, “விளையாடாத ருத்ரா எங்களை வேவு பார்க்க ஆள் வச்சிருக்கயா?” வாசலில் யாரும் இருக்கிறார்களா? என விழிகளை சுழற்றிக்கொண்டே இவனிடம் கேள்வி எழுப்பினாள்.

“ச்ச ச்ச அந்த ஆளுக்கு வேற எதுக்கு தண்டத்துக்கு காசு கொடுக்கணும்?” என கூலாக கூறினான்.

“ஆள் வைக்கலைனா வேற எப்படி உனக்கு…?” என கண்களை சுழற்றிக் கொண்டே கேள்வி எழுப்பியவளின் விழி வட்டத்தில் சிக்கியது வாசலிலிருந்த கண்காணிப்பு கேமரா.

“ருத்ரா யு ஆர் கிராசிங் யுவர் லிமிட்” அக்னியின் தகிப்பு.

அவள் முகம் காட்டும் வர்ணஜாலங்களை, மடிக்கணினியில் கண்டு கொண்டிருந்தான். இப்போது அவள் ‘விஷயத்தை யூகித்து விட்டாள்’ என்பதை உணர்ந்த ருத்ராவின் முகத்தினில் மந்தகாச புன்னகை.”பரவாயில்லை நான் சொல்லாமலே தெரிஞ்சுகிட்ட. நீ ரொம்ப புத்திசாலிதான்.”

அவன் இல்லை என்று மறுப்பான் என எண்ணிய பெண்ணின் மனதில் ஏமாற்றம்.

“ஏன் இப்படி எல்லாம் பண்ற?” இயலாமையின் தவிப்பு.

“நான் தான் சொன்னேன்ல உன்னை அடைய நான் எந்த எல்லைக்கும் போவேன்” 

“வேண்டாம் ருத்ரா உன்னோட ஆட்டத்தை நிறுத்திக்கோ. இதோட பின் விளைவுகள் ரொம்ப ஜாஸ்தியா இருக்கும்.” குரலில் எச்சரிக்கை.

“அதையும் பார்த்துடலாம் பொம்மு குட்டி. குட் நைட்.” என கைப்பேசியை அனைத்து மெத்தையில் எறிந்துவிட்டு, ருத்ரா படுக்கையில் விழுந்தான். அவன் மனம் சில கணக்குகளை போட்டுக் கொண்டிருந்தது மித்ராவை தன்னிடம் வரவைக்க.

†††††

ரிஷியுடன்  தனிமையில் பேசுவதை தவிர்த்து, மித்ரா கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தாள். ருத்ராவுடன் தான் நடிக்க சம்மதித்ததை, எவ்வாறு வருவிடம் சொல்வது? என்று குழப்பத்திலேயே அவனை தவிர்த்து வந்தாள். 

மித்ரா தன்னை தவிர்ப்பதை உணர்ந்த ரிஷி அவளுடன் பேச முற்பட, ஏதாவது காரணம் சொல்லி அவனிடமிருந்து விலகி கொண்டிருந்தாள்.

அவள் செல்லும் திசையெல்லாம் ரிஷியின் கண்கள் ஆராய்ச்சியுடன் அவளைப் பின்தொடர்ந்தது. ரிஷியின் பார்வை தன்னை தொடர்கிறது என்பதை தெரிந்தே இருந்தாள் பெண். ஆனால் அவனிடம் தன் முடிவை சொல்லும் தைரியம் மட்டும் வரவில்லை.

அன்றிரவு உணவு நேரம் முடிந்தபின், ரிஷியை சரியாக படுக்க வைத்த மித்ரா அவனிடமிருந்து விலகி செல்ல, அவள் கரம் பற்றி தடுத்தான். கேள்வியாக அவனை நோக்கியது அவளது விழிகள். 

“உட்கார் மிரு உன் கூட பேசணும். நான் வந்ததிலிருந்து ஓடிக்கிட்டே இருக்க.” என்றான் கூர் பார்வையோடு.

“வரு நீ இன்னும் பால் குடிக்கல. நான் போய் பால் காய்ச்சி கொண்டு வரேன்.” என நழுவ முயன்ற பெண்ணை தடை செய்தான். 

“இப்ப சாப்பிட்டதே எனக்கு வயிறு ஃபுல்லா இருக்கு. பாலை அப்புறம் குடிக்கலாம். இப்படி உட்கார்,” தன் எதிரே இருந்த நாற்காலியைக் காட்டினான்.

எப்படியும் அவனிடம் சொல்ல வேண்டும். அதை எவ்வாறு சொல்வது என்பதில்தான் குழப்பம். முதன்முதலில் நடிக்க சம்மதம் வேண்டி ரிஷியிடம் நின்றபோது, அவள் பாதுகாப்பை கருதி அவனிட்ட கட்டுபாட்டில் மிக முக்கியமான ஒன்று,’தன்னைத் தவிர வேற யாருடனும் நடிக்க கூடாது’ என்பது. ஆனால் இப்போது ருத்ராவிடம் சம்மதம் சொல்லியதை, ரிஷி எவ்வாறு எடுத்துக் கொள்வான் என்பதில்தான் குழப்பம். 

அவளது கலங்கிய முகத்தை பார்த்துக்கொண்டே, “சொல்லு மிரு, உன் மனசை போட்டு, என்ன அறிச்சிட்டு இருக்கு? இந்த கண்களில் ஏன் இந்த தயக்கம், பரிதவிப்பு?”

முகமெல்லாம் வேர்க்க அவனைப் பார்க்க தயங்கித்கொண்டே, “ஒன்னும் இல்ல வரு. நீ தூங்கு காலையில பேசிக்கலாம்.” என நழுவ முயன்றாள்.

அவள் முயற்சியை தடைசெய்த ரிஷி,”சரி அதை விடு. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யார் கிட்டயிருந்து கால் வந்தது?” என அடுத்த அம்பு எய்தினான். 

திகைத்துப்போன பெண் அவனை மிரண்டு பார்த்தாள். “உனக்கு… உனக்கு எப்படி தெரியும்?” வார்த்தை தடுமாறியது.

“போன் சத்தம் கேட்டுச்சு. அதுக்கு பிறகு உன்கிட்ட வந்த மாற்றத்தையும் உணர்ந்தேன். யார் கால் பண்ணாங்க?” 

“ருத்ரா”

அவளை கூர்ந்தபடி,”என்னவாம்?”

“அவர் கூட நடிக்க போற படத்தை பத்தி பேசுறதுக்காக கூப்பிட்டாரு.” தயங்கினாலும் ஒரு வழியாக சொல்லி முடித்தாள்.

வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல் ‘நீயே சொல்லிமுடி’ என்று, அவள் முகத்திலிருந்த பார்வையை விலக்காமல் பார்த்திருந்தான்.

“ஏன் வரு எந்த கேள்வியும் கேட்காமல், என் முகத்தையே பார்த்துட்டு இருக்க?” குற்ற உணர்வு விரவி கிடந்தது. 

“நீ என்கிட்ட கேட்காம ஒரு முடிவெடுத்திருக்க அப்படினா, அதுக்கு பின்னாடி வேற ஏதோ காரணம் இருக்கும் குட்டி. அது நானாகவும் இருக்கலாம். இந்த ஆக்சிடென்டாகவும் இருக்கலாம்” அவன் கணிப்பை வெளியிட்டான்.

அவனது கணிப்பை கேட்ட பெண்ணினது கண்கள் சாஷர் போல் விரிந்தது. ‘தன்னை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறான்’ என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் தேவையில்லை. அவள் கண்களில் ஆனந்த முத்துக்கள் வழிந்தோடியது. 

அவளின் கண்ணீரை அவன் கரம் கொண்டு துடைக்க, அவனின் கரத்தை பற்றி அதில் தன் முகத்தை புதைத்து, ஈஸ்வரனுடன் நடந்த உரையாடலை தெரிவித்தாள்.

அனைத்தையும் பொறுமையாக கேட்ட ரிஷி,”சோ எனக்கு ஏதாவது ஆயிடும்ன்னு பயந்துதான் அவன் கூட நடிக்க சம்மதிச்சு இருக்க? ரைட்.” அவளின் தலை மேலும் கீழும் ஆடி ஒப்புக்கொண்டது. 

“இவனோட மிரட்டலுக்கு பயப்படற ஆளுன்னு என்னை நினைச்சியா?” என கோபத்தில் எகிறினான். அவனது கோபத்தை கண்டு மிரண்டது பெண் மான்.  அவளது மிரண்ட முகத்தை பார்த்து தலையை கோதி, தன் கோபத்தை குறைத்தான். கோபம் மட்டு பட்டவுடன், அமைதியாக, “என்னைப்பற்றி யோசிச்ச நீ, உன்னைப்பற்றி யோசியா?”

“என்னை பற்றி யோசிக்க என்ன இருக்கு வரு. இப்ப எனக்குன்னு இருக்கிறது நீ மட்டும் தான். உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன்.” என்றாள் உறுதியாக.

“நானும் அதே வரிகளை சொல்லலாம் எனக்கு இருக்கிறதும் நீ மட்டும் தான். உன்னை பற்றிய அக்கறை எனக்கு இருக்காதா?” அவன் வார்த்தைகளில் பெண் ஸ்தம்பித்தாள். ‘வரு சொல்வது உண்மை தானே’ மனம் இடித்துறைத்தது.

மனதை தேற்றியவள்,”எனக்கு நீ ஹெல்ப் பண்ணுறேன்னு வாக்கு குடுத்திருக்க வரு. பிளீஸ் வரு என்னை புரிஞ்சுக்க. எனக்கு ஒன்னும் ஆகாது வரு. நான் சேஃபா இருப்பேன்.” 

அவளின் மனதை உணர்ந்து, ஒரு பெருமூச்சுடன்,”எனக்கு கால்ல அடிபட்டு இருக்க சமயத்தில், என்னால் உனக்கு பாதுகாப்பா இருக்க முடியாது. இந்த மாதிரி நேரத்தில் உனக்கு இந்த ரிஸ்க் தேவையா?”

“நீ பயப்படாத வரு. இன்னும் குழந்தை மாதிரி பிஹேவ் பண்ண மாட்டேன்.” என குழந்தையயாக மிலற்றினால். மனமே இல்லாமல் சம்மதித்த ரிஷி அடுத்து என்ன செய்யலாமென சிந்திக்கத் தொடங்கினான்.  

†††‡†††

மறுநாள் காலை பத்து மணியளவில், ரிஷிக்கு அவனின் மறைந்த அன்னையின் ஏக்கம் வராமலிருக்க, உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள் மித்ரா. ஏதேதோ கதை பேசிக்கொண்டே அகம் நிறைந்த மகிழ்ச்சியோடு உணவு நேரம் சென்றது.

சரியாக அந்த நேரம் திடீரென அவர்கள் முன்னால் வந்து நின்றான் ருத்ரா, அக்னி பிழம்பாக. அவனை கண்டு, ரிஷிக்கு உணவை வழங்க சென்ற மித்ராவின் கைகள் அந்தரத்தில் தேங்கியது.

அந்த நேரத்தில், அந்த இடத்தில் அவனை எதிர்பார்க்காத மித்ரா திகைத்தாள். ருத்ராவின் கோப முகத்தை கண்ட ரிஷி,’அவனின் கோபம் எதற்காக.’ என்று உணர்ந்து, ஒரு மர்மப் புன்னகையோடு, அவனை நோக்கி நக்கலாக ஒரு பார்வையை செலுத்தியவன், அவள் கரத்தை பற்றி அந்த உணவை தன் வாயில் வாங்கிக் கொண்டான். 

இப்போது ருத்ராவின் கண்கள் மித்ராவின் கரத்தை பற்றிய ரிஷியின் கரத்தை எரித்து சாம்பலாக்கி கொண்டிருந்தது,’நீ எப்படி என்னவளின் கைப்பற்றலாம்? இதற்கான பின்விளைவுகளை நீ சந்திக்க வேண்டும்’ என்ற எச்சரிக்கை அதில் இருந்ததோ? 

அதை கண்டுகொள்ளாத ரிஷியின் மூளை,’காவலாளியை மீறி ருத்ரா எப்படி உள்ளே வந்தான்?’ என்ற கேள்வி எழுந்தது. 

அவர்கள் வீட்டு பழைய காவலாளி, அவரது மகனுக்கு விபத்து என்று, ஒரு வாரம் முன்பிருந்து விடுப்பில் இருக்கிறார். இந்த ஒரு வாரமாக வந்து கொண்டிருப்பது புது காவலாளி. ரிஷிக்கு தெரியாதது, இந்த புது காவலாளி ருத்ராவின் ஏற்பாடு என்று. பழைய காவலாளியின் மகனின் விபத்துக்கும் காரணம் ருத்ரா என்று.

ருத்ரா உளவு பார்க்க அவனை அங்கே அனுப்பவில்லை. அவன் வரும்போது எந்த தடங்கலும் இன்றி, உள்ளே வந்து செல்வதற்கு உபயோகமாக அவரை பயன்படுத்திக் கொண்டான். 

ருத்ரா ஹேக் செய்தது அவர்கள் வீட்டு வாசலில் இருந்த கேமராவை மட்டுமே. வேறு எந்தவிதமான கண்காணிப்பும் மித்ராவின் மேல் செலுத்தவில்லை. ஆனால் அந்த பாவையோ அவன் கேமராவை ஹேக் செய்ததில் அரண்டு இருந்தாள். அதுபோல் ‘அவள் மொபைல், மடிக்கணினியை ஹேக் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்’ என்று.

ருத்ராவின் திடீர் விஜயம் எதுக்கு என்று யோசியுங்கள் மக்களே?