நினைவு தூங்கிடாது 9

நிழல் 9

கை தவறினால் பொருள் உடையும் என யோசிப்பவர்கள்

வாய் தவறினால் மனம் உடையும் என யோசிப்பதில்லை.

‘அதிக உடல் உழைப்பின் காரணமாக தன் அன்னையும் சகோதரியும் இரவு நேரமே உறங்கி விடுவார்கள். மீண்டும் அவர்கள் கண் விழிப்பது காலையில்தான்’ என்பதை தெரிந்திருந்த அம்மு, ஈஸ்வரின் மிரட்டலுக்கு பயந்து அவனுடன் காட்டுக்கு வர சம்மதித்தாள்.

அவனின் மிரட்டலுக்கு பயந்து, சம்மதித்தது போலிருந்தாலும், இயற்கையிலேயே துடுக்குத்தனமும் குறும்பும் நிறைந்த அம்முவுக்கு, அங்கு செல்லும் ஆர்வம் ஏற்கனவே மனதினில் இருந்தது. தனியே செல்ல பயம். இப்போது துணை கிடைக்கவும் அதை பற்றிக்கொண்டாள்.

‘அன்னையை ஏமாற்றுகிறோம்’ என்று மனதை உறுத்தினாலும், ‘அங்கு உண்மையிலேயே என்ன இருக்கிறது?’ என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் பெருகியது. பின்விளைவுகளை சிந்திக்காத குருட்டு தைரியம் உண்டானது. 

மனம் ஒரு பக்கம் குற்ற உணர்வில் தவித்தது; ஒருபுறம் ஆர்வத்தில் மிதந்தது; மறுபக்கம் பயத்தில் தத்தளித்தது; ஆக மொத்தத்தில் ஒரு கலவையான மனநிலையோடு தன் அன்னை உறங்கிய பிறகு, தன் வீட்டிலிருந்து வெளியேறி அவன் சொன்ன அம்மன் கோயிலிலை அடைந்தாள்.

பசுஞ்சோலை கிராமத்தின் முக்கியத் தொழில் விவசாயம். பகல் முழுவதும் நிலத்தினில் கடினமாக உழைத்து, சோர்ந்துபோய் இல்லம் திரும்பும் மக்கள் விரைவிலேயே உணவை முடித்துக்கொண்டு, படுக்க சென்று விடுவார்கள். அதனால் அம்மு இரவு வெளியே சென்றது யார் கண்களிலும் படவில்லை.

இந்த சில நாட்களாக, பகலில் அவனுடன் தனித்திருந்தாலும், இரவில் அவனுடன் தனியே செல்வது மனதில் ஒரு குறுகுறுப்பை உண்டாக்கியது. முதல் நாள் அவளை அணைத்து முத்தமிட்டவன், அதன் பிறகு அவளை அவ்வாறு நெருங்கவில்லை என்பது, அவன் மேல் ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்கியிருந்தது.

ஆம்! அவளின் முதல் சந்திப்பில் முத்தமிட்டவன், அதன் பிறகு அவனது கோபத்தை வார்த்தைகளோடு நிறுத்திக்கொண்டான். பாவம் இந்த சிறு பெண்ணிற்கு எங்கே தெரியப்போகிறது இவளை காணும் ஒவ்வொரு நொடியும் அவன் உணர்ச்சிகளுடன் போராடுவது. தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த போராடுவது. அவன் உணர்ச்சிகள் கட்டுடையும் போது இந்த பெண்ணின் நிலை

அவன் மேல் தோன்றிய நல்ல எண்ணத்துடன், அவனுடன் பயணிக்கும் இந்த பாவை சேதாரமில்லாமல் திரும்புமா?

†††‡†††

ஊரிலிருந்து சற்று தள்ளி இருந்த அம்மன் கோயிலை, அவள் அடையும் போது அங்கு மனித நடமாட்டமே தென்படவில்லை. 

மனதில் பயம் சூழ ‘திரும்பி சென்று விடுவோமா?’ என அவள் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், ஈஸ்வர் நடைபயணமாக வந்து சேர்ந்தான். அவன் காரை தவிர்த்து வந்ததை கேள்வியோடு பார்த்தாலும், அதைப்பற்றி எதுவும் கேட்காமல்,”சார் எனக்கு ரொம்ப பயமாயிருக்கு போயிடலாம்” என்றாள் இறஞ்சும் குரலில்.

கல்மனம் கொண்ட காளையவனோ,”சரி வா போகலாம்.” என அவள் கரம் பற்றி காட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

“சார் நான் வீட்டுக்கு போகலாம்ன்னு சொன்னேன்” 

அவன் பார்த்த அனல் பார்வையில், தன் வாயை இறுக மூடிக்கொண்டு, அவனுடன் இணைந்து நடந்தாள். அவன் பிடித்த அவள் பூங்கரத்தை, விடாமல் தன் கைகளுக்குள் சிறை பிடித்து, அவளை கூட்டி செல்வது அவளுக்கு ஒரு பாதுகாப்பு தன்மையை கொடுத்தது. 

ஏதேதோ பேசிக்கொண்டே அவளை கூட்டி சென்றவனின் பேச்சு, அமிர்தாவிடம் வந்து நின்றது,”ஆமா உங்க ஊர்ல அமிர்தா என்ற ஒரு பெண் இருக்காலாமே? உனக்கு அவளை தெரியுமா?” 

‘தன்னை பற்றி தன்னிடமே கேட்கிறான்’ வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, “தெரியும் சார். சின்ன வயசுல இருந்தே பழக்கம்.”

அந்த இருளில் அவள் முகத்தில் வந்து போன சிரிப்பை காண முடியாத ஈஸ்வர், அவளை வம்பு செய்யும் நோக்கில்,”பார்க்க எப்படி இருப்பா? உன்ன மாதிரி இல்லாமல் அவளாவது அழகா இருப்பாளா?”

அவனை திரும்பி முறைத்த அம்மு,”என்னை பார்த்தால் அவளை பார்க்க வேண்டாம். அவளைப் பார்த்தால் என்னை பார்க்க வேண்டாம்” என சிலிர்த்துக்கொண்டாள்.

அவளது முறைப்பை கிடப்பில்போட்டு, “ஏதேது! விட்டா நான்தான் அமிர்தா என்று சொல்லுவ போல?”

“நீங்கள் சொன்னாலும் சொல்லலை என்றாலும் அதுதான் நிஜம்” என்றாள் நமட்டுச் சிரிப்போடு.

“ஓ” என இழுத்தவன் நக்கலோடு,”அமிர்தா ரொம்ப நல்லா பாடுவாளாம்” 

“நானும் நல்லா பாடுவேன். நான் வேணா பாடி காட்டவா?” என அவனை வம்பிழுக்கும் குரலில்.

“வேண்டாம், வேண்டாம். நீ பாடி, அதைக் கேட்டு, அந்த மரத்தில் இருக்க பேய்களெல்லாம், கீழே இறங்கி வந்தற போகுது” என பயப்படுவது போல் பாசாங்கு செய்தான். 

அவன் தன்னை பரிகாசம் செய்ததில் கோபம் வந்தாலும், அவன் பேய் என்று குறிப்பிட்டதில் பயந்து அவனை நெருங்கி நடந்தாள். 

ஏகாந்த இரவு நேரத்தில், மெல்லிய குளிர் உடலை தாக்க, தன் மனதை ஈர்த்த பெண்ணுடன், நெருக்கமாக கைகோர்த்து நடப்பது, ஈஸ்வரின் மனதில் மயிலிறகால் வருடிச் சென்றது. 

சிறிது நேரம் அமைதியில் கழிய, அவள் மனதை அழுத்திய கேள்வியைக் கேட்டேவிட்டாள், “எப்பவும் நீங்க கார்ல தான வருவீங்க? இப்போது ஏன் காரை எடுத்து வரல?” 

அவனின் மோன நிலையை கலைத்தது பெண் தொடுத்த வினா. சட்டென்று மோன நிலையிலிருந்து வெளிவந்த ஈஸ்வர், தன் மனம் செல்லும் பாதை புரிய தன் தலையில் மானசீகமாக அடித்துக்கொண்டான்.

“என் காரில் ஏறுவதற்கு கூட ஒரு தகுதி வேண்டும். உன்னை மாதிரி ஒருத்தியை ஏற்ற முடியுமா? அதுதான் கொண்டு வரல.” அசால்டாக அவள் மனதை குத்தி கிழித்தான்.

‘தான் காரை உயிர்ப்பித்து எடுத்து வந்தாள், அந்த சத்தம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்’ என்ற காரணத்தினால்தான் காரை எடுத்து வரவில்லை. ஆனால் இந்த சிறு பெண்ணிடம் தன் மனம் தடுமாறுவதை உணர்ந்தவன், வேண்டுமென்றே அவள் மனதை கூர்வாள் கொண்டு குத்தினான். ‘தன்னோட தகுதிக்கு அவள் பொருத்தம் இல்லை.’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டானோ என்னவோ?

அவனது சொற்கள், மெல்லிய மனம் படைத்த அந்த சிறு சிட்டுவின் மனதை சரியாக குத்திக் கிழித்தது. கண்களில் நீருடன் அவனை ஏறிட்டுப் பார்த்த பெண் திடமாக,”நான் பெரியவளான பின் அந்தக் காரை விட பெரிய கார் வாங்கி உங்ககிட்ட காமிக்கிறேன். டப்பா கார வெச்சுகிட்டு பேச்சை பாரு. கட்டவண்டி” என அவனுக்கு வார்த்தைகளால் கொட்டு வைத்தாள்.

அவள் கூறியதில் கோபம் கொண்ட ஈஸ்வர், அவளை அந்த காட்டில் தனியே விட்டுவிட்டு, ஒரு மரத்தின் பின் ஒளிந்து கொண்டான். இதுவரை டார்சின் வெளிச்சத்துடன், அவன் கைப்பற்றி வந்தவள், திடீரென ஏற்பட்ட தனிமையில் பயந்து நடுங்கி பரிதவித்து போனாள். 

அவள் தன்னை தேடுவதை சில நிமிடங்கள் பார்த்திருந்த ஈஸ்வர், அதற்குமேல் அவளைத் தவிக்க விட மனமற்று, அவள் பின் சென்று தோள்களை அழுத்தமாக பற்றினான். 

அந்த இருளில், தன் தோளில் ஒரு கரம் அழுத்தமாக பதியவும், பயந்து போன பெண், மிரண்ட விழிகளோடு திரும்பிப் பார்க்க, அவள் கண்டது ஈஸ்வரின் முகம். தெய்வத்தை கண்ட பக்தையைபோல சந்தோஷத்தில், அவனை தாவி அணைத்து, அவனது பரந்த மார்பில் தன் முகம் புதைத்து கொண்டாள். 

அவளின் இறுக்கமான அணைப்பு கூறியது அவளது பயத்தின் அளவை. ‘தான் தவறு செய்து விட்டோம்’ என்று உணர்ந்த ஈஸ்வர், அவள் தலையை ஆறுதலாக வருடி,”ரிலாக்ஸ் அம்மு! நீ பாதுகாப்பா இருக்க. இனி உன்னை விட மாட்டேன். பயப்படாத” என பல ஆறுதல் வார்த்தைகள் கூறி கொண்டிருந்தான். 

அங்கு உணர்ச்சிகள் தூண்டப்படவில்லை. உணர்வுகளால் ஆளப்பட்டு கொண்டிருந்தான். அவன் அறியாமலேயே தாய்மை அன்பை அவளுக்கு வழங்கிக் கொண்டிருந்தான். தந்தையை இழந்து தவித்த அந்த சிறு மலருக்கு, அவனது வருடல் தந்தையை நினைவுபடுத்த, அவனது அன்பு புரியாமலேயே அவன் கரங்களில் மயங்கி சரிந்தாள்.

அவன் முதல்மறையாக அம்மு என்று அழைத்ததை உணரவே இல்லை. அவள் பிடி தளரவும் நிதானத்துக்கு வந்துவிட்டாள் என்று நினைத்த ஈஸ்வர், அவளை தன்னிடமிருந்து விலக்க முயல, முயற்சி தோல்வியடைந்தது அவள் மயக்கத்தினால். மயங்கி சரிந்தவளை பார்த்து மூச்சு விடவும் மறந்தான்.

இப்போது பயப்பந்து தொண்டையை அடைக்க அவள் கன்னததை தட்டி,”ஹே நீலாம்பரி! நடிக்காத. எந்திரி. நீ இப்போ எந்திரிக்கல கடுமையான தண்டனை கொடுப்பேன்” என மயங்கியவலிடம், ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தான் தொழில் உலகின் சிம்மசொப்பனம் ஆனவன். 

அவன் எவ்வளவு அழைத்தும் எழும்பாத அவளை, தன் கரங்களில் பூக்குவியலென அள்ளிக்கொண்டு, வந்த வழியே திரும்பி சென்றான். அம்மன் கோயிலை அடைந்தவன், கோயில் வாசலில் அவளை படுக்க வைத்துவிட்டு, அங்கு தண்ணீர் தொட்டியில் இருந்த நீரை கொண்டுவந்து, அவள் முகத்தில் தெளித்து எழுப்பினான். 

இந்த முறை அவனை ஏமாற்றாமல் கண்விழித்த பெண், ‘தான் எங்கிருக்கிறோம்?’ என சுற்றி தன் பார்வையை ஓட்டினாள்.”ரிலாக்ஸ் அம்மு! நம்ம திரும்பி வந்துட்டோம். ஒரு பிரச்சனையும் இல்ல. நம்ம அங்க போயிட்டு வந்ததை யார்கிட்டயும் சொல்லாத. வா உன்னை உங்க வீட்டில விட்டுட்டு நான் கிளம்புறேன்” என கூறி அவள் முகம் பார்த்தான். 

கோவிலில் இருப்பதை உணர்ந்த பெண்ணின் முகத்தில் சிறு தெளிவு, அவன் கூறியதற்கு சம்மதமாக தலையசைத்து அவனுடன் சென்றாள்.

†††‡†††

மறுநாள் காலையில் எழுந்த கஸ்தூரி அம்மாவின் காதில் கேட்டது, அம்மு குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் அனத்தல் குரல். பதறிப்போய் அவர் அவளை தொட்டுப் பார்க்க உடல் அனலாக கொதித்தது.

பிருந்தாவை வைத்தியரை அழைத்து வர அனுப்பிவிட்டு, அம்முவின் நெற்றியில் ஈரத்துணியால் பற்று வைத்துக்கொண்டிருந்தார் கஸ்தூரி.”அங்க பேய் இருக்.. எனக்கு ரொம்… பயமாயிரு.. நான் வரமாட்டேன்.” என ஜுரத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.

அவள் விட்டு விட்டு கூறிய வார்த்தைகளை புரிந்துக்கொள்ள முடியாமல், ஏதோ கனவு கண்டு பயந்துவிட்டாள்? என்று நினைத்த கஸ்தூரி,”அம்மு உனக்கு ஒன்னும் இல்ல. நல்லா இருக்க. அம்மா உன் பக்கத்திலேயே இருக்கேன்.” என சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார்.

அவரின் வார்த்தைகள் அவளின் செவியை அடைந்ததுவோ என்னவோ? அவர் கரத்தைப் பற்றிக்கொண்டு,”அப்பா அப்பா” என பிதற்ற தொடங்கினாள்.

பல வருடங்களுக்குப் பிறகு, தந்தையை தேடும் அவளின் தவிப்பில் கஸ்தூரியின் மனம் மௌனமாக கண்ணீர் சிந்தியது. அந்த நேரம் சரியாக வைத்தியரை அழைத்து வந்த பிருந்தா, கலங்கிய அன்னையின் கரங்களை ஆதரவாகப் பற்றிக்கொண்டாள். 

அம்முவை பரிசோதித்த வைத்தியர்,”புள்ளை எங்கேயோ பயந்து இருக்கு. வேற ஒன்னும் இல்ல. சீக்கிரம் சரியாகிடும். நான் போய் மருந்து தயார் செய்து கொடுத்து அனுப்புறேன்” என கூறி விடைபெற்றார்.

அம்முவும் அடுத்த இரண்டு நாட்களில் பூரண குணமடைந்து தெளிந்தால். அவளை காணாத ஈஸ்வர் தெளிவில்லாமல் அலைந்தான்.

காட்டுப் பயணம் முடிந்த மறுநாள், ஆற்றங்கரையோரம் அவளுக்காக காத்திருந்தான். அவள் வராமல் போக இந்தமுறை அவனுக்கு கோபத்திற்கு பதில் தவிப்பே வந்தது. ‘அவள் எங்காவது கண்ணில் படுகிறாளா?’ என ஊர் முழுவதும் தேடி அலைந்தவன், கடைசியாக, அவளை முத்தமிட்ட கிரவுண்டை அடைந்தான்.  

அங்கே அவளின் குட்டி நண்பர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் அவளைப் பற்றி கேட்கலாமென அவர்களை நெருங்கி,”என்ன பசங்களா? நீங்க மட்டும் விளையாடரீங்க. எங்க உங்க தலைவரை காணோம்.” நேரடியாக அவள் பெயரை கூறி கேட்க தயக்கம்.

திடீரென அவன் தங்களிடம் பேசவும் திகைத்துப்போன பசங்கள் திருதிருவென முழித்து கொண்டிருந்தனர். 

யாரும் பேசுவதாக தெரியவில்லை எனவும் பப்பு முன்னே வந்து,”அம்முவுக்கு காய்ச்சல். அதனால நாங்க மட்டும்தான் விளையாடறோம்” என்றான் சோகமாக. 

அதைக் கேட்டதிலிருந்து ஈஸ்வரின் மனது பரிதவிக்க தொடங்கியது. ‘அவளை பார்த்து விட மாட்டோமா?’ என அவனது கண்கள் அலைபாய்ந்தது. தன் அறையின் ஜன்னலிலிருந்து, அவள் வீட்டு வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் தேடிய முகம் மட்டும் தென்படவே இல்லை.

இதற்கிடையில் அவன் நண்பர்கள் சிலர் திருவிழாவை காண அங்கு வந்திருக்கின்றனர். அவர்களுடனும் நேரம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை. இவர்கள் தான் அவனுக்கு மது, மாது பழக்கங்களை அறிமுகப்படுத்தியவர்கள். 

எந்தப் பெண்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்க மாட்டார்கள். அவர்கள் கண்களில் அம்மு படுவதை அறவே வெறுத்த ஈஸ்வர், முடிந்த அளவு அவர்களை அம்மு இருக்கும் பக்கம் அழைத்து செல்வதில்லை. 

அம்மு அவர்கள் கண்களில் பட வேண்டும் என்பது விதி. அந்த விதியை மாற்றி அமைக்க ஈஸ்வரால் முடியுமா?