நினைவு – 01

என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரப்ரம்மம்

அம்மா என்றழைக்க 

என்ன தவம் செய்தனை யசோதா

ஈரேழு புவனங்கள் படைத்தவனை கையில் ஏந்தி சீராட்டி

பாலூட்டி தாலாட்ட நீ என்ன தவம் செய்தனை யசோதா

ப்ரம்மனும் இந்திரனும் மனதில் பொறாமை கொள்ள

உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்சவைத்தாய் தாயே 

என்ன தவம் செய்தனை யசோதா

ஸனகாதியர் தவ யோகம் செய்து வருந்தி

சாதித்ததை புனித மாதே எளிதில் பெற 

என்ன தவம் செய்தனை யசோதா

 

சாம்பிராணி வாசமும், ஊதுபத்தி புகையும் நிறைந்திருந்த அந்த பூஜையறையில் தன் கண்களை மூடியபடி தன் முன்னால் இருந்த கடவுளை மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தாள் ஹரிணிப்பிரியா.

 

ஹரிணிப்பிரியா வீட்டில் அனைவருக்கும் ஹரிணி (இதற்கான காரணம் பிறகு சொல்லப்படும்) வெளியில் பிரியா.

 

ஹரிணி இருபத்தேழு வயது நிரம்பிய இளமங்கை மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மியின் மூத்த மகள்.

 

ஹரிணியுடன் உடன் பிறந்தவர்கள் இருவர், தங்கை விஷ்ணுப்பிரியா (இந்த பெயரால் தான் ஹரிணிப்பிரியா வீட்டில் மாத்திரம் ஹரிணி) மற்றும் தம்பி கிருஷ்ணா.

 

மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மி இருவருமே அடையார் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி சபையில்  தலைமை கணக்கு அதிகாரிகளாக இரு வேறு பிரிவுகளில் கடமையாற்றி வருகின்றனர்.

 

ஹரிணி சென்னையில் அடையார் பகுதியில் இருக்கும் ஒரு பிரபலமான ஃபேஷன் டிசைனிங் கம்பெனி ஒன்றில் இரண்டு மாதங்களாக வேலை புரிந்து வருவதோடு அவளது தங்கை விஷ்ணுப்பிரியா தற்போது சட்டக்கல்லூரியில் இறுதி வருடத்தில் படித்து கொண்டு இருக்கிறாள்.

 

இறுதியாக அந்த வீட்டின் ஒரே ஆண் வாரிசான கிருஷ்ணா பிளஸ் டூ முடித்து விட்டு எந்த காலேஜ் போவது என்று சில மாதங்களாக தலையை பிய்த்துக் கொண்டு யோசனையிலேயே தன் நாட்களை கடத்திக் கொண்டிருந்து இறுதியாக ஆறு மாதங்களுக்கு முன்பு இஞ்சினியரிங் காலேஜில் இணைந்து இருக்கிறான்.

 

பூஜையறையில் இருந்து வெளியேறி வந்த ஹரிணிப்பிரியா சாம்பல் நிற காட்டன் சுடிதாரில் எளிமையாக இருந்ததோடு அந்த எளிமையிலும் அழகாகவே தெரிந்தாள்.

 

அவளின் முகத்தின் ஓரங்களில் சிறு சிறு தழும்புகள் இருக்க அந்த தழும்புகளை எல்லாம் தாண்டி அவள் முகத்தை பார்த்தவுடன் அவளது புன்னகையில் எல்லோரும் தங்களை மறந்து விடுவர்.

 

சற்று சிவந்த தேகம், துருதுருவென ஓரிடத்தில் நில்லாமல் அலைபாயும் கண்கள், புன்னகை மாறாத இதழ்கள் அதுதான் ஹரிணிப்பிரியா.

 

ஏழு வருடங்களுக்கு முன்னர் அவள் வாழ்வில் நடந்த ஒரு மறக்க முடியாத விபத்தினால் தன் நினைவுகளை எல்லாம் முற்றாக மறந்திருந்தவள் இப்போது இந்த ஏழு வருடங்களாகத் தான் தன்னைப் பற்றியும் தன் உடனிருக்கும் தன் பெற்றோர் மற்றும் தன் உடன்பிறந்தவர்கள் பற்றியும் மெல்ல மெல்ல தனக்குள் சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறாள்.

 

இடைப்பட்ட வருடங்களில் அவள் தன் சுயநினைவிலேயே இல்லாதவள் போல் இருக்க வெகு சிரமப்பட்டு பல சிகிச்சை மற்றும் மருந்துகளின் உபயோகத்தினால் அவளை அவளது குடும்பத்தினர் ஒரு நல்ல நிலைமைக்கு முன்னேற்றிக் கொண்டு வந்து சேர்த்தனர்.

 

அந்த விபத்தின் பின்னர் அவள் முகத்திலும் சில சேதங்கள் நிகழ்ந்திருக்க அவளது தோற்றத்திலும் சிறு மாறுபாடுகள் வந்ததனால் அவளுக்கு முன்னர் தெரிந்த பலபேருக்கும் இப்போது அவளை அடையாளம் கண்டு கொள்வது கடினமாகிப் போனது.

 

அவளுக்கு சிகிச்சை மேற்கொண்ட வைத்தியரும் பழைய விடயங்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக அவள் மேல் திணிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு எடுத்து சொல்ல சொல்லியிருக்க அவளது பெற்றோரும் அப்படியே அதைக் கடைப் பிடித்து வந்தனர்.

 

தங்களுக்கு தெரிந்தவரை தங்கள் மகளின் நண்பர்களை எல்லாம் மெல்ல மெல்ல அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவள் தன் படிப்பை தொடர வேண்டும் என்று ஆசைப்படவே அவளை மீண்டும் காலேஜில் சேர்த்து விட்டனர்.

 

ஆரம்பத்தில் அந்த பாடங்கள், வசனங்கள் என எதையுமே கிரகித்துக் கொள்ள முடியாமல் சிரமப்பட்டவள் பின் ஒரு வருடகாலம் அதற்கென தனியாக சிறப்பு பயிற்சி எடுத்து விட்டு மீண்டும் தன் படிப்பை தொடரத் தொடங்கினாள்.

 

இப்போது மூன்று மாதங்களுக்கு முன்பு தன்னுடைய படிப்பை முழுவதும் பூர்த்தி செய்தவள் தனது சொந்த முயற்சியால் ஒரு கம்பெனியில் வேலைக்கு செல்லும் அளவுக்கு தன்னை முன்னேற்றி இருக்கிறாள்.

 

பழைய விடயங்கள் எதுவும் அவள் நினைவில் இல்லாவிட்டாலும் இப்போது இந்த ஏழு வருட நினைவுகளே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

 

பாசமிகு பெற்றோர், வருந்தும் போது தோழியாக அரவணைக்கும் தங்கை, ஆபத்தில் காக்கும் காவலனாக தம்பி, மனதிற்கு பிடித்த வேலை, இனிமையான நண்பர்கள் வட்டம் இதுவே தன் வாழ்க்கைக்கு போதுமென்று நினைப்பவள் எப்போதும் அதை நினைத்து கடவுளுக்கு நன்றி செலுத்த மறப்பதில்லை.

 

ஹரிணி விபத்திற்கு முன்னர் எப்படியான தோற்றத்தில் இருந்தாலோ அதை சற்று ஒத்த தோற்றத்திலேயே தற்போது அவளது தங்கை விஷ்ணுப்பிரியா இருப்பாள்.

 

அதனால் ஹரிணியை பல வருடங்களுக்கு முன்பு சந்தித்த யாரும் இப்போது அவளை சந்தித்தால் ஹரிணி என்று சொல்லமாட்டார்கள் மாறாக விஷ்ணுப்பிரியாவையே ஹரிணி என்று நினைத்து பேசிவிட்டு செல்வர்.

 

ஆரம்பத்தில் அவர்களுக்கு பதில் சொல்லி சொல்லியே ஓய்ந்து போன விஷ்ணுப்பிரியா நாளடைவில் அதைக் கண்டும் காணாமல் இருக்கப் பழகிப் போனாள்.

 

தன் வாழ்வில் நடந்த விடயங்களை எண்ணியபடியே ஹரிணி அமர்ந்திருக்க 

“இன்னா மேடம்? உட்கார்ந்துகிட்டே தூங்குற? நைட் தூங்கலயா?” காலேஜிற்கு செல்வதற்காக தயாராகி வந்த அவளது தங்கை விஷ்ணுப்பிரியா அவளது தோளில் இடித்து கேட்க

 

அவளைப் பார்த்து சிறிது புன்னகைத்துக் கொண்டவள்

“நைட் நீ விடுற குறட்டை சத்தத்தில் அந்த கும்பகர்ணனே எழுந்து ஓடி விடுவான்! இந்த புள்ளப்பூச்சி எம்மாத்திரம்?” பவ்யமாக தன் வாயின் மேல் கையை வைத்துக் கொண்டு பணிவாக கேட்பது போல வினவினாள்.

 

“ஓஹ்! அப்போ தினமும் ராத்திரியில் கரடி கத்துவது போல கேட்கும் சத்தத்திற்கு காரணம் என் இனிய உடன் பிறப்பு விஷ்ணு தானா?” ஏற்கனவே டைனிங் டேபிள் அருகில் அமர்ந்து காலையுணவுக்காக காத்துக்கொண்டிருந்த கிருஷ்ணாவின் கேள்வியில் 

 

மேஜை மீது ஏறி அவன் தலையில் கொட்டி விட்டு மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்து கொண்ட விஷ்ணுப்பிரியா

“டேய் கிரிஸ் டப்பா! ஒழுங்காக என் முழுப்பெயரை சொல்லு இல்லை பிரியான்னு சொல்லு! அதை விட்டுட்டு  விஷ்ணு, கிஷ்ணுன்னு சொன்ன அவ்வளவு தான் சொல்லிட்டேன் அப்புறம் நான் உன்னை நம்ம குடும்ப பெயர் பிரியாவை சொல்லி கிருஷ்ணப்பிரியான்னு கூப்பிடுவேன் பார்த்துக்கோ!” கோபமாக அவனைப் பார்த்து ஒரு விரல் நீட்டி எச்சரிக்க அவனோ அவளை சிறிதும் சட்டை செய்யாமல் தன் கையில் இருந்த போனில் கேமராவை ஆன் செய்து தன் தலைமுடியை சரி செய்து கொண்டிருந்தான்.

 

“ஹரிணி பாரு அவனை! என்னை எப்போதும் விஷ்ணு விஷ்ணுன்னே சொல்லுறான் என் பிரண்ட்ஸும் இவன் சொல்லுறதைப் பார்த்து என்னை அப்படியே கூப்பிட்டு கலாய்க்குறாங்க!” விஷ்ணுப்பிரியா தன் அக்காவான ஹரிணியிடம் குற்றப் பத்திரிகை வாசிக்க அவளோ அங்கே நடந்த எதையும் கவனியாதவள் போல தன் தட்டில் இருக்கும் நீர்த்துளிகளை இணைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

 

“அய்யோ! கடவுளே! இப்படி ஒரு தம்பி! தங்க கம்பி! அதற்கு மேல ஒரு அக்கா! ரொம்ப பக்காவா போச்சு!” விஷ்ணுப்பிரியா தன் கன்னத்தில் கை வைத்து கொண்டு புலம்பியபடியே அந்த மேஜை மீது கவிழ்ந்து படுத்துக் கொள்ள ஹரிணியும், கிருஷ்ணாவும் ஒருவருக்கொருவர் ஹைபை கொடுத்து கொண்டனர்.

 

“ஹேய்! கேடிஸ் நீங்க ஹைபை கொடுத்ததை நான் பார்த்துட்டேன்” விஷ்ணுப்பிரியா தன் தலையை உயர்த்தமாலேயே குரல் கொடுக்க மற்றைய இருவரும் அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே மீண்டும் கை குலுக்கி கொள்ள அந்த நேரம் சரியாக அவர்களது அன்னை ஜெயலஷ்மியும்  சமையலறைக்குள் இருந்து வெளியேறி வந்தார்.

 

தன் கையிலிருந்த உணவுகளை எல்லாம் மேஜை மீது வைத்து விட்டு மீண்டும் அவர் சமையலறைக்குள் நுழைந்து கொள்ளப் போக அவசரமாக அவர் முன்னால் வந்து நின்ற விஷ்ணுப்பிரியா

“ம்மா! என்னம்மா நீ? உன் செல்லப் பொண்ணை மற்ற இரண்டு பேரும் சேர்ந்து இப்படி நக்கல் பண்ணுறாங்க என்ன ஏதுன்னு கேட்காமலேயே போறீங்க?” என்று கேட்க

 

அவளையும் அவர்களுக்கு பின்னால் இருந்து அமைதியாக சாப்பிட்டு கொண்டிருந்த மற்றைய இருவரையும் ஏற இறங்கப் பார்த்தவர்

“என்ன? ஏது? போதுமா?” எனவும்

 

அவளோ

“அம்மா!” என்றவாறே தன் காலை தரையில் உதைத்து கொண்டு சிணுங்கியபடி நின்றாள்.

 

“ஆளை விடும்மா தங்கமே! தினமும் உங்க கூத்தை பார்த்துட்டு தானே இருக்கேன்! என்னவோ இன்னைக்கு தான் உன்னை இவங்க கலாய்க்குற மாதிரி சொல்லுற! வழியை விடு நேரமாகுது சீக்கிரமா சாப்பிட்டுட்டு ஆபிஸ் கிளம்பணும் அதோ உங்க அப்பா வர்றாரு எப்போவும் போல அவரை வைத்து விளையாடுங்க!” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து செல்லவும் ஹரிணியும், கிருஷ்ணாவும் ஒருவரை ஒருவர் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொள்ள 

 

விஷ்ணுப்பிரியாவோ

“அப்பா!” என்றவாறே மாணிக்கத்தை நோக்கி நகர்ந்து சென்று தன் குற்றப் பத்திரிகை வாசிக்கும் பணியைத் தொடர்ந்தாள்.

 

இது அவர்கள் வீட்டில் எப்போதும் நடக்கும் விடயம் என்பதனால் மாணிக்கமும் அவர்களது அந்த செல்லச்சண்டையில் இணைந்து கொள்ள எப்போதும் போல அவர்களது வீடு அன்றும் சந்தோஷத்தில் நிறைந்து போனது.

 

வெளியில் எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் வீட்டிற்குள் வரும்போது அதை எல்லாம் மாணிக்கம் ஒதுக்கி வைத்து விடுவார் அதிலும் ஹரிணியின் விபத்திற்கு பிறகு எந்தவொரு கவலை தரக்கூடிய விடயங்களையும் அவள் முன்னால் அவர் பேசுவதில்லை மற்றவர்களையும் பேச அனுமதிப்பதில்லை.

 

இனி காப்பாற்றவே முடியாது என்று வைத்தியர்கள் கை விட்ட நிலையில் வெகுவான போராட்டங்களுக்கு மத்தியில் மறுஜென்மம் எடுத்தது போல பிழைத்து வந்த தன் மகளை எந்தவிதத்திலும் இனிமேல் கஷ்டப்பட வைத்து விடக்கூடாது என்று உறுதியாக இருப்பவர் அவளை அந்த நிலையில் இன்று வரை வைத்தும் இருக்கிறார்.

 

எப்போதும் போல காலையுணவை முடித்து விட்டு விஷ்ணுப்பிரியாவை அவளது காலேஜில் இறக்கி விட்டு விட்டு திரும்பி வந்த கிருஷ்ணா ஹரிணிப்பிரியாவைவும் அவளது அலுவலகம் இருக்கும் பகுதியில் இறக்கி விட்டு விட்டு வழமை போன்று தன் கல்லூரியை நோக்கி புறப்பட்டு செல்ல மறுபுறம் மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மி தங்கள் அலுவலகத்திற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியேறி வந்து கொண்டிருந்தனர்.

 

தங்கள் அலுவலகத்திற்கு போகும் வழி நெடுகிலும் ஏதாவது விடயங்கள் பற்றி பேசிக்கொண்டே வரும் தன் மனைவி இன்று வெகு அமைதியாக இருப்பதைப் பார்த்த மாணிக்கம்

“என்ன லஷ்மி இன்னைக்கு எதுவுமே பேசாமல் ரொம்ப அமைதியாக இருக்க? என்ன ஆச்சு?” இயல்பாக வினவவும்

 

அவரோ நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டவாறே

“எல்லாம் ஹரிணியைப் பற்றி தான்ங்க!  அவளுக்கும் வயது ஏறிட்டே போகுது ஒரு நல்ல இடத்தில் அவளைக் கட்டிக் கொடுக்கணுமேன்னு தான் யோசனையாக இருக்கு வர்ற சம்பந்தம் எல்லாம் அவளுக்கு நடந்த ஆக்ஸிடென்டில் பழைய விடயங்களை எல்லாம் மறந்துட்டான்னு சொல்லுறதைக் கேட்டு ஏதோ வித்தியாசமான ஒரு வியாதி உள்ளவ மாதிரி அவளை வேணாமான்னு சொல்லிடுறாங்க! வீட்டில் வைத்து இதைப் பற்றி எல்லாம் பேசவும் முடியல! அதேநேரம் இதைப்பற்றி பேசாமல் இருக்கவும் முடியல!  என்னங்க பண்ணுறது?” கவலையோடு தன் கணவரின் முகத்தை அந்த வண்டியின் பக்க கண்ணாடி வழியாக பார்த்து கொண்டே வினவினார்.

 

“நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம் லஷ்மி! நான் இருக்குற வரைக்கும் என் பசங்களுக்கும் சரி, உனக்கும் சரி எந்தவொரு கவலை தரக்கூடிய விடயங்களையும் நெருங்க விடமாட்டேன் நம்ம பொண்ணுக்காக பிறந்த பையன் நிச்சயமாக அவளைத் தேடி வருவான் அதுவரைக்கும் நாமும் முயற்சி செய்வோம் இது அவ வாழ்க்கை விடயம் இல்லையா? கொஞ்சம் பக்குவமாக தான் கையாள வேண்டும் நீ வேணும்னா பாரு இந்த வருட முடிவுக்கு இடையில் நம்ம ஹரிணி கல்யாணம் நிச்சயமாக நடக்கும்” மாணிக்கம் தன் மனைவிக்கு தைரியம் அளிப்பது போல தனக்கும் அந்த விடயங்களை அறிவுறுத்திக் கொண்டு தங்கள் அலுவலகத்தின் முன்னால் தன் வண்டியை நிறுத்த அவரைப் பார்த்து சிறிது புன்னகைத்துக் கொண்ட ஜெயலஷ்மி தனது பிரிவை நோக்கி நடந்து சென்றார்.

 

தங்கள் பிரிவுகளை வந்து சேர்ந்த மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மி அதன் பின்னர் தங்கள் வேலைகளில் மூழ்கி விட மறுபுறம் ஹரிணிப்பிரியா தன் நண்பர்களுடன் இணைந்து கலகலப்பாக பேசிக் கொண்டே தன் வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தாள்.

 

ஹரிணியின் தற்போதைய நண்பர்கள் வட்டம் அஸ்வின், தருண், கீதா மற்றும் நித்யா ஆகிய நால்வரையும் கொண்டது.

 

அவர்கள் வேலை புரியும் அந்த ஃபேஷன் டிசைனிங் கம்பெனியில் இவர்கள் ஐவரும் கொண்ட குழு தான் எப்போதும் முதன்மையாக செயற்படும்.

 

எந்தளவுக்கு அவர்கள் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்குமோ அதே அளவுக்கு அவர்கள் வேலையிலும் நேர்த்தி இருக்கும் அதிலும் ஹரிணி சிரித்துப் பேசிக் கொண்டே செய்ய வேண்டிய வேலைகளை செய்து முடித்து விடுவாள், மற்றவர்களையும் செய்ய வைத்து விடுவாள்.

 

வழக்கம் போல அன்றைய நாளும் நீண்ட நேரப் பேச்சு மற்றும் சிறிது நேர வேலையோடு முடிவடைந்து இருக்க வீட்டுக்கு செல்வதற்காக வேண்டி தன் தம்பிக்கு அழைப்பை மேற்கொண்ட ஹரிணி அவனது வருகைக்காக காத்துக் கொண்டு நின்றாள்.

 

காலையில் வேலைக்கு வரும் போதும் சரி மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி செல்லும் போதும் சரி கிருஷ்ணா தான் அவளை அழைத்து கொண்டு செல்லுவான்.

 

அதற்கு ஒரு காரணமும் உண்டு.

 

ஏழு வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தின் போது உதிரத்தில் முற்றாக நனைந்து போய் இருந்த தன் அக்காவை பார்த்ததுமே அதிர்ச்சியில் உறைந்து போனவன் அவள் உயிர் பிழைத்து வரவேண்டும் என்பதற்காக கடவுளிடம் வேண்டிக் கொண்ட ஒரு விடயம் தான் அது.

 

தன் அக்கா உயிர் பிழைத்து வரவேண்டும் அவள் மீண்டு வந்துவிட்டாள் அவளுக்கு எப்போதும் துணையாக, காவலாக நான் இருப்பேன் என்று கடவுளிடம் அந்த சிறு வயதிலேயே வேண்டியிருந்தவன் அதை இன்று வரை கடைப்பிடித்தும் வருகிறான்.

 

ஹரிணி கூட பலமுறை தான் தனியாக சென்று வருவேன் என்று அவனிடம் சொல்லி இருந்தும் அவன் அதைக் கேட்டுக் கொள்ளவே இல்லை அந்தளவுக்கு அந்த விடயத்தில் அவன் உறுதியாக இருந்தான்.

 

இதற்கு முன் அவள் நடந்து செல்லும் போதும் சரி வேறு வாகனங்களில் செல்லும் போதும் சரி அவளுக்கு துணையாக செல்பவன் தனக்கென ஒரு வண்டியை எடுத்த அடுத்த கணம் முதல் அவளை தன்னுடன் அழைத்துச் செல்வதை மிகவும் முக்கியமான வேலையாக்கிக் கொண்டான்.

 

அவனது அந்த சிறு நம்பிக்கையை மறுக்க முடியாமல் நெகிழ்ந்து போன ஹரிணியும் தன்னை அந்த பாசத்திற்கு  பழக்கப்படுத்தி கொண்டாள்.

 

அன்று காலநிலை சற்று மப்பும் மந்தாரமுமாக இருக்க அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் ஆட்கள் நடமாட்டமும் பெரிதாக இருக்கவில்லை.

 

தங்கள் அலுவலகத்தின் முன்னால் இருக்கும் பேருந்து தரிப்பிடத்தில் கிருஷ்ணாவின் வருகைக்காக ஹரிணி காத்து நிற்க திடீரென எங்கிருந்தோ புயல் போல ஒருவன் அவள் முன்னால் வந்து நின்றான்.

 

திடீரென்று ஒரு நபர் தன் முன்னால் வந்து நிற்க தூக்கிவாரிப் போட இரண்டு அடி பின்னால் நகர்ந்து சென்றவள் பயத்தில் தன் கைப்பையை தன்னோடு இறுக்கி கொள்ள அழுத்தமான காலடிகளோடு அவள் முன்னால் வந்து நின்றவன் சட்டென்று அவள் முன்னால் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு

“ஹாய் பிரியா! ஐ யம் அர்ஜுன்! நான் இதை உன்கிட்ட சொல்ல ரொம்ப நாளாக ட்ரை பண்ணேன் பட் முடியல! ஆனா இன்னைக்கு சொல்லிடுவேன்! ஐ லவ் யூ பிரியா!” தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த ரோஜாப்பூ ஒன்றை அவளின் புறம் நீட்டியவாறே கூறவும் அவளோ தன் விழிகள் இரண்டும் வெளியே தெறித்து விடும் அளவுக்கு விரிய அதிர்ச்சியாக அவனை பார்த்து கொண்டு நின்றாள்…….