நினைவு – 02

கன்னத்தில் குழி விழும் அளவிற்கு சிரிப்போடு, அலை அலையாக அசைந்தாடும் கேசமும், முகம் முழுவதும் பிரகாசமும் ஒளிர தன் முன்னால் மண்டியிட்டு அமர்ந்திருந்தவனைப் பார்த்து ஹரிணிக்கு பேச்சே எழவில்லை.

 

‘யார் இவன்? எங்கிருந்து வந்தான்?’ மீண்டும் மீண்டும் அதே கேள்விகளை தனக்குள் அவள் கேட்டுக் கொண்டு நிற்கையில் அவள் நின்று கொண்டிருந்த புறத்திற்கு எதிர்ப்புறமாக இருந்த கடையில் இருந்து வாட்டசாட்டமான  இளைஞன் ஒருவன் அவர்களை நோக்கி வேகமாக ஓடி வந்து நின்றான்.

 

“டேய் அர்ஜுன்! எழுந்திருடா! இங்கே எல்லாம் எதற்கு வந்த? நான் தான் உன்னை கடையை விட்டு வெளியே போகாதேன்னு சொன்னேன் இல்லையா? எழுந்திருடா!” மண்டியிட்டு அமர்ந்திருந்தவனை அவனது தோள்களைப் பற்றி பிடித்து எழுப்பிய அந்த நபர் ஹரிணியின் புறம் திரும்பி

 

“ஐ யம் ரியலி சாரி மேடம்! இவன் என் பிரண்ட் தான் கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருக்கிறான் கொஞ்சம் மென்டலி டிஸ்டர்ப்ட்! இந்த மாதிரி அவன் அடிக்கடி பேசிட்டே இருப்பான்! நீங்க எதுவும் தப்பாக எடுக்க வேண்டாம்” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல அவளோ அவன் கூறியவற்றை எல்லாம் கேட்டு முன்னர் அதிர்ச்சியானதை விடவும் பன்மடங்கு மேலும் அதிர்ச்சியாகி போனாள்.

 

பார்ப்பதற்கு எந்தவொரு குறையும் சொல்லமுடியாமல் சிரிப்போடு தன் முன்னால் குழந்தை போல நின்ற அவனுக்கு இப்படி ஒரு குறையா? என்று அவளாலேயே நம்பமுடியாமல் போனது.

 

“வருண் எனக்கு பசிக்குது! சாப்பாடு வாங்கி கொடுடா!” 

 

“சரிடா வாங்கி தர்றேன் வா போகலாம்!”

 

“லெமன் ரைஸ் வாங்கித் தருவியா? பிரியாவுக்கு அதுதான் பிடிக்கும்”

 

“சரிடா வாங்கித் தர்றேன்”

 

“அப்போ சாக்லேட் ஐஸ்கிரீம்?”

 

“அதுவும் தான் டா! நீ என்ன கேட்டாலும் வாங்கித் தர்றேன்”

 

“அப்போ அந்த கார்?’

 

“உனக்கு இல்லாமலா வாங்கித் தர்றேன் டா!”

 

“அந்த பிளைட், பஸ், ஸ்கூட்டர் அப்புறம்…”

 

“நீ என்ன கேட்டாலும் வாங்கித் தர்றேன் டா ஆனா இப்படி என்கிட்ட சொல்லாமல் எங்கேயும் தனியாக போகக்கூடாது சரியா?”

அந்த ஆண்கள் இருவரும் பேசிக்கொண்டே வீதியைக் கடப்பதற்காக காத்திருக்க

 

 அவசரமாக அவர்கள் அருகில் சென்ற ஹரிணிப்பிரியா

“எக்ஸ்கியூஸ் மீ ஸார்! நீங்க தப்பாக எடுத்துக்கலேன்னா நான் ஒரு விடயம் கேட்கலாமா?” கேள்வியாக அவனை நோக்க முன்பின் தெரியாத ஒரு பெண் தன்னிடம் வந்து என்ன கேட்கப் போகிறாள் என்ற யோசனையோடு அவன் தன் தலையை ஆமோதிப்பாக அசைத்தான்.

 

“இவருக்கு எப்படி இந்த ஐ மீன் எப்படி இப்படி ஆச்சு?” அவன் கை வளைவில் நின்ற அர்ஜுனைக் காட்டி அவள் வினவ 

 

அவளை சற்று விசித்திரமாக பார்த்தவன்

“ஒரு ஆக்சிடென்ட்!” என்று விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்றான்.

 

தன் நண்பனைப் பற்றி தெரியாத ஒரு நபரிடம் பேசுவது அவனுக்கு சரியாகத் தோன்றததனாலேயே அந்த இடத்தில் இருந்து வேகமாக விலகிச் சென்றவன் அதே துரிதகதியில் தன் காரில் அர்ஜுனை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.

 

காரில் ஏறி சென்ற அந்த இருவரையுமே கண் இமைக்காமல் பார்த்து கொண்டு நின்ற ஹரிணியின் மனதிற்குள் ஏனோ ஒரு தடுமாற்றம் தலை தூக்கியது.

 

அதிலும் தன் முன்னால் காதலை சொல்லி நின்ற அந்த அர்ஜுனின் முகம் அவள் மனதிற்குள்ளேயே நின்றது.

 

‘ஒருவேளை அவனுக்கு அப்படி ஒரு பிரச்சினை இருப்பதாக சொன்னதும் அந்த பரிதாபத்தினால் தான் நான் அவனை பற்றி சிந்திக்கின்றேனா?’ என்ற யோசனையோடு ஹரிணி நின்று கொண்டிருக்க  

 

“ஹரிணி! யக்கா ஹரிணிக்கா!” கிருஷ்ணா தன் தொண்டையில் இருக்கும் தண்ணீர் வற்றி போகும் அளவுக்கு சத்தம் போட்டு அவளைத் தோளில் தட்டி அழைத்து கொண்டு நின்றான்.

 

“ஆஹ்! என்ன? என்ன ஆச்சு?” பதட்டத்தோடு அவள் தன் பார்வையை சுழலவிட

 

“ஐயோ!” என்றவாறே தன் தலையில் தட்டிக் கொண்ட கிருஷ்ணா 

 

“எவ்வளவு நேரமாக கூப்பிடுறேன்? நீ ஏதோ நின்னுட்டே கனவு காணுற உன் கூட கத்தி என் தொண்டை தண்ணீர் எல்லாம் வற்றிப்போச்சு! வா வந்து வண்டியில் ஏறு! வீட்டுக்கு போய் லச்சுகிட்ட சூடா ஒரு காஃபி குடித்தால் தான் சரியாக வரும்” என்று பேசிக் கொண்டிருக்க அவளோ அதை எதையும் கவனிக்காமல் அவனது வண்டியின் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டாள்.

 

ஹரிணி விஷ்ணுப்பிரியா அளவுக்கு பேசாவிட்டாலும் அதை விட குறைவாக அதே நேரம் கலகலப்பாக பேசிக் கொண்டு இருப்பாள் இன்று அந்த கலகலப்பு அவளிடம் இல்லாமல் இருப்பதைக் கண்டு கொண்ட அவளது தம்பி அதைப் பற்றி அவளிடம் கேட்க ஆரம்பித்தில் ஒன்றுமில்லை என்று மறுத்தவள் அவனது வற்புறுத்தலின் பின்னர் சற்று நேரத்திற்கு முன்பு நடந்த விடயங்களை பற்றி கூறினாள்.

 

“இதைத்தான் இவ்வளவு நேரமும் யோசித்து கொண்டு இருக்கியா? விட்டுத் தள்ளுக்கா! அது தான் அந்த ஆளுக்கு மென்டலி டிஸ்டர்ப்ட்ன்னு சொல்லிட்டாங்க தானே? அப்புறம் எதற்கு அதைப்பற்றியே யோசிக்குற? டாக்டர் தான் உனக்கு தேவையில்லாத விடயங்களை ரொம்ப யோசிச்சு ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க இல்லையா? விட்டுத்தள்ளுக்கா!” கிருஷ்ணாவின் கூற்றில் தற்காலிகமாக அந்த சிந்தனைகளை ஒதுக்கி வைத்து விட்டு அவனோடு இயல்பாக பேசிக் கொண்டே ஹரிணி தன் வீடு வந்து சேர மறுபுறம் அர்ஜுன் மற்றும் அவனால் வருண் என்று அழைக்கப்பட்ட மற்றைய நபரும் ஒரு பிரமாண்டமான வீட்டின் முன்னால் தங்கள் காரில் இருந்து இறங்கி நின்றனர்.

 

அந்த வீட்டைப் பார்த்ததுமே சிறு பிள்ளை போல துள்ளிக்குதித்து கொண்டு அர்ஜுன் ஓடிச் செல்ல அவன் பின்னால் நடந்து சென்று கொண்டிருந்த வருணின் கண்கள் இரண்டும் கலங்கி சிவந்து போய் இருந்தது.

 

தன் நண்பனை இப்படி ஒரு நிலையில் பார்க்ககூடும் என்று அவன் கனவிலும் நினைத்ததில்லையே! 

 

ஸ்கூல், காலேஜ் என எல்லா இடங்களிலும் எல்லா வகையான பரீட்சைகளிலும், போட்டிகளிலும் எல்லாவற்றிலும் முதன்மையானவனாக இருந்த தன் நண்பன் இப்போது தன்னையே மறந்து தன் சுயம் மறந்து பித்தாகிப் போய் இருப்பதைப் பார்த்து அவன் தினம் தினம் தனக்குள்ளேயே மருகி கொண்டு தான் இருக்கிறான்.

 

அர்ஜுன் மற்றும் வருண் இருவருமே சிறு வயதிலிருந்தே உற்ற தோழர்கள்.

 

அர்ஜுனின் தந்தை விஸ்வநாதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் வியாபாரத்தில் பெயர் பெற்றவர்.

 

பல கோடிக்கணக்கான சொத்து இருந்தும் அவருக்கு அதில் என்றுமே சந்தோஷம் கிடைத்ததில்லை அதற்கு காரணம் அவரது மனைவி பார்வதி.

 

ஐந்து வருடங்களுக்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்ட தன் மனைவி அவர்கள் ஒரேயொரு வாரிசான அர்ஜுனை பிரசவித்த அடுத்த கணமே தன் உயிர் துறந்திருக்க அன்றே தன்னை முழுமையாக தொலைத்தவர் அந்த பாலகனின் முகத்தை பார்த்தே தன் மீதமிருந்த நாட்களை கடத்தத் தொடங்கியிருந்தார்.

 

தன் மகனுக்காக என வாழத் தொடங்கியவர் ஒரு நாள் தற்செயலாக தனது சிறு வயது நண்பன் ராமநாதனை சந்தித்து இருக்க அன்றிலிருந்து தான் அர்ஜுனின் வாழ்வில் வருணினின் வருகை ஆரம்பமானது.

 

ராமநாதன் சென்னையில் ஒரு பல்பொருள் அங்காடி சந்தை வைத்து நடத்திக்கொண்டிருப்பதை பார்த்த விஸ்வநாதன் அவரது வியாபாரத்தில் தன் பங்கையும் வழங்க அன்றிலிருந்து அவர்கள் வியாபாரத்திலும் நண்பர்களாகிப் போயினர்.

 

வருணின் அன்னை சாவித்திரி அர்ஜுனையும் தன் மகனைப் போல பார்த்து கொள்ள அப்போதிருந்து அவர்கள் எல்லோரும் ஒரு குடும்பம் போல வாழ்ந்து வந்தனர்.

 

எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த வேளை தொழில் விடயமாக வெளியூருக்கு சென்ற விஸ்வநாதன் ஒரு விபத்தில் இறந்து போய் விட்டதாக தகவல் வர பதின்ம வயதின் ஆரம்பத்தில் இருந்த அர்ஜுன் முற்றிலும் நிலைகுலைந்து போனான்.

 

தன் தாய்க்கு தாயாக, தந்தையுமாக, எல்லாமுமாக இருந்த தன் தந்தையின் பிரிவு அவனை வெகுவாக தாக்க வருண் மற்றும் அவனது பெற்றோரின் பராமரிப்பிலேயே அர்ஜுன் சிறிது சிறிதாக தன்னை தேற்றிக் கொண்டான்.

 

ஒரே பள்ளி, ஒரே காலேஜ் என எப்போதும் ஒன்றாக வலம் வந்த அர்ஜுன் மற்றும் வருண் எப்போதும் இணைபிரியாமல் இருப்பதை பார்த்து பலபேர் பொறாமை கொண்டாலும் அவர்கள் நட்பில் மாத்திரம் எந்த குறைபாடும் வந்ததில்லை.

 

ஏழு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பாரிய சம்பவத்தினால் தன் சுயம் மறந்து நிற்கும் தன் நண்பனை எப்படியாவது சரி செய்து விடலாம் என்று வருண் எவ்வளவோ போராடியும் அவன் முயற்சிக்கு பலன் இன்றுவரை கிடைக்கவில்லை.

 

வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் எத்தனையோ வகையான சிகிச்சைகள் மேற்கொண்டும் அர்ஜுனின் மனநிலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருப்பினும் இன்று வரை வருண்  தன் முயற்சியை கைவிடவில்லை.

 

என்றாவது ஒரு நாள் அவனைக் குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை அவனது மனதில் உறுதியாக இருக்க இன்றும் அவனது சிகிச்சை பற்றி ஒரு வைத்தியருடன் பேசிக் கொண்டிருக்கையில் தான் அர்ஜுன் அந்த பேருந்து தரிப்பிடத்தில் நின்றவளிடம் சென்று பேசிக்கொண்டிருந்தான்.

 

அவன் அங்கே மண்டியிட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்ததுமே அவன் என்ன பேசியிருப்பான் என்பதை வருண் உணர்ந்து கொண்டான்.

 

இந்த ஏழு வருடங்களில் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை அந்த வசனங்களை நூறு தடவைகளுக்கு மேலாவது அர்ஜுன் கூறுவான்.

 

அந்த வசனங்கள் இறுதியாக அர்ஜுன் நன்றாக இருந்த போது அவன் மனம் கவர்ந்தவளிடம் கூறுவதற்காக தன் முன்னால் முன்னாயத்தம் செய்து கொண்ட வசனங்கள்.

 

எத்தனை ஆசைகளை சுமந்து கொண்டு அவன் தன் முன்னால் நடந்து சென்றான்? அன்றைய நாளின் தாக்கத்தில் முகம் இறுக தன் கண்களை மூடிக்கொண்டவன் அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்து கொள்ள

“வருண் என்னப்பா ஆச்சு?” சாவித்திரியின் ஆறுதலான தொடுகையில் தன் கண்களை திறந்து கொண்டவன் அவர் மடியில் சட்டென்று தலை சாய்த்து படுத்துக் கொண்டான்.

 

“என்னடா ராஜா ஆச்சு?” சாவித்திரி மீண்டும் அவன் தலையை கோதியபடியே கேட்கவும் அவர்கள் இருவரையும் சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் சிரித்துக் கொண்டே அவர்கள் அருகில் ஓடி வந்து நின்று சாவித்திரியின் மற்றைய கால் புறமாக தன் தலையை சாய்த்து படுத்துக் கொண்டு அவரது கையை எடுத்து தன் தலையில் வைத்துக் கொண்டான்.

 

அவனது செய்கையில் இதழ்கள் விரிய அவனது தலையை கோதி விட்டவர்

“அர்ஜுன் கிட்டயும் அம்மா கேட்கிறேன் சொல்லுங்க என்ன ஆச்சு?” என்று கேட்க 

 

கண்களை மூடிக் கொண்டு அவரது கையை பிடித்திருந்த அர்ஜுன் 

“இன்னைக்கு கார் பார்த்தேன், பஸ் பார்த்தேன், மீன் பார்த்தேன், பிளைட் பார்த்தேன் அப்புறம் பிரியாவைப் பார்த்தேனே!” தன் மறுகையால் வாயை மூடி கொண்டு சிரிக்க 

 

அவனது கூற்றில் சட்டென்று எழுந்து அமர்ந்து கொண்ட வருண்

“அர்ஜுன் என்னடா சொல்லுற? பிரியாவைப் பார்த்தியா? எங்கே? எப்போ?” பதட்டத்துடன் அவனது தோளைப் பற்றி உலுக்கி கேட்டான்.

 

அவனது இறுக்கமான பிடியில் வலியில் முகம் சுருக்கியவன்

“நான் பிரியாவை அதோ அங்கே வானத்தில் பார்த்தேன்!” எப்போதும் போல தான் சொல்லும் அதே விளக்கத்தை சொல்லிக் கொண்டவாறே அவனது கையை தன் தோளில் இருந்து தள்ளி விட முயற்சிக்க 

 

“வருண்! அவனுக்கு வலிக்குது போல இருக்கு! முதல்ல கையை எடு! அதற்கு அப்புறம் பொறுமையாக கேளு! இப்படி அதட்டி பதட்டமாக பேசாதே! அவன் நம்மளை மாதிரி இல்லை! சின்னக் குழந்தையைப் போல பக்குவமாக பார்க்க வேண்டிய பையன்!” சாவித்திரி வருணின் கைகளை விலக்கி விட்டு விட்டு அர்ஜுனை தன் புறமாக அமர்த்திக் கொண்டபடியே கூற அவனோ சோர்வாக அவரின் மறுபுறம் அமர்ந்து கொண்டான்.

 

“எனக்கு என்ன பண்ணுறதுன்னே புரியலம்மா! எப்படி இருந்தவன் இவன்? இப்போ தன்னையே மறந்து இந்த நிலைமையில் இருக்கான் இவனை இப்படி பார்க்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு கஷ்டமாக இருக்கும்மா! எத்தனையோ டாக்டர்ஸை பார்த்தாச்சு! எத்தனையோ ட்ரீட்மெண்ட் எடுத்தாச்சு! ஆனா இவன் இப்படியே தான் இருக்கான்! எந்த பொண்ணால் அவன் இப்படி ஆனானோ அந்த பொண்ணை தேடிப் பார்த்து பேசலாம்னு நினைத்தாலும் அந்த பொண்ணு இப்போ உயிரோடு இருக்காளா? இல்லையா? அதுவும் தெரியலை! இன்னைக்கு கூட பஸ் ஸ்டாண்டில் நின்னுட்டிருந்த ஒரு பொண்ணு கிட்ட பிரியான்னு நினைத்து பேசிட்டு இருக்கான்”

 

“யாருப்பா அந்த பொண்ணு?”

 

“தெரியலைம்மா! நான் எதுவும் கேட்கல திடீர்னு அர்ஜுன் போய் லவ் சொல்லவும் அவங்க ஷாக் ஆகிட்டாங்க போல! நான் போய் சாரி சொல்லிட்டு இவனைக் கூட்டிட்டு வந்துட்டேன்”

 

“ஒருவேளை அந்த பொண்ணு பிரியாவுக்கு தெரிந்த யாருமா இருக்குமோ? அதனால் தான் அர்ஜுன் போய் பேசி இருப்பானோ?” தன் அன்னையின் கேள்வியில் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் 

 

‘ஒருவேளை அப்படியும் இருக்கலாமோ?’ தனக்குள்ளேயே யோசித்துப் பார்த்து விட்டு

 

“நீங்க சொல்லுற மாதிரியும் இருக்கலாம்மா ஏன்னா இதுவரைக்கும் அர்ஜுன் இப்படி பேசுனவங்க கிட்ட நான் அவனோட நிலைமையை சொல்லும் போது அவங்க எல்லாம் பரிதாபமாக சில நேரம் ஏளனமாகப் பார்த்து விட்டு கடந்து போயிடுவாங்க! ஆனா இந்த பொண்ணு எங்க கிட்ட வந்து அர்ஜுனுக்கு எப்படி இப்படி ஆச்சுன்னு கேட்டா” எனவும்

 

“ஐயோ! என்ன வருண் நீ? கொஞ்சம் நிதானமாக ஏன் அவங்க கேட்டாங்க என்ன, ஏது என்று ஒரு தடவை விசாரித்து இருக்கலாமே?” சாவித்திரி கவலையோடு அவனைப் பார்த்து வினவினார்.  

 

“அது அந்த நேரம் பதட்டத்தில் அங்கே இருந்து சீக்கிரமாக வரணும்னு இதைப் பற்றி நான் யோசிக்கவே இல்லைம்மா! அதோடு முன்பின் தெரியாத ஒரு ஆளுகிட்ட அர்ஜுனைப் பற்றி சொல்லணுமான்னு அங்கே இருந்து கிளம்பி வந்துட்டேன்”

 

“நீ என்னவோ அவசரப்பட்டு வந்துட்டேன்னு தோணுது வருண்!” சாவித்திரியின் கூற்றில் இருந்த உண்மை அப்போதுதான் வருணுக்கும் மெல்ல மெல்ல பிடிபடத் தொடங்கியது.

 

“நாளைக்கு அதே இடத்திற்கு போய் அந்த பொண்ணு கிட்ட பேசிடுறேன்ம்மா! அர்ஜுன் குணமாக ஏதாவது ஒரு வழி கிடைத்தாலே போதும்” வருண் உறுதியான குரலில் தன் அன்னையை பார்த்து கூறிக் கொண்டே அர்ஜுனின் கைகளை ஆதரவாக பற்றிக் கொள்ள சிறு புன்னகையுடன் அவர்கள் இருவரையும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர் மனமோ தன் இரு குழந்தைகளையும் எண்ணி மௌனமாக கண்ணீர் வடித்தது.

 

தான் பெறாத மகனின் வாழ்வு இப்படி சூனியமாகி விட்டதே என்ற கவலை ஒரு புறம்!

 

தான் பெற்ற மகன் அவன் வாழ்வில் எந்தவொரு ஆனந்தமும் இல்லாமல் தனியாளாக நிற்கின்றானே அவனுக்கு என்று ஒரு குடும்பம் வராதா? என்ற ஏக்கம் ஒரு புறம்!

 

தன் இரு குழந்தைகளுக்காகவும் அந்த தாயுள்ளம் கண்ணீர் வடிக்க அவர் கைகளோ தன் பிள்ளைகளை மேலும் ஆதரவாக அணைத்துக் கொண்டது.

 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையுடன் அமர்ந்திருக்க சிறிது நேரத்தில் அலுவலகத்தில் இருந்து ராமநாதனும் வீட்டுக்கு வந்து விட வருணின் கவனம் தற்காலிகமாக அவர்களது வேலையின் புறம் திரும்பியது.

 

***************************

 

ஹரிணியின் வீட்டில் அன்று எல்லோரும் நேரத்திற்கே வீட்டுக்கு வந்து விட்டதால் இரவுணவை முடித்து விட்டு ஹாலில் அமர்ந்திருந்த விஷ்ணுப்பிரியா ஏதோ ஒன்றைப் பேச அதற்கு பதிலாக கிருஷ்ணா வேறு ஒன்று பேச அந்த வீடே அவர்களது பேச்சில் கதிகலங்கிப் போனது.

 

வழக்கமாக இவ்வாறு ஏதாவது நடக்கும் போது ஹரிணியும் அவர்களுடன் இணைந்து கொண்டு தன் தம்பிக்கு சாதகமாக பேசி விஷ்ணுப்பிரியாவை மேலும் வம்பிழுப்பாள்.

 

ஆனால் இன்று அவளிருந்த மனநிலையில் அவை எவற்றிலும் தன் கவனத்தைச் செலுத்தாமல் இருக்க அவளை விசித்திரமாக பார்த்த அவளது தங்கை 

“அக்கா! என்ன ஆச்சு? ஏன் டல்லா இருக்க? உடம்புக்கு எதுவும் முடியலடா?” அக்கறையுடன் அவளது நெற்றியில் கை வைத்து பார்த்து கொண்டு கேட்கவும்

 

சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள் 

“ஒண்ணும் இல்லை டா! நான் ரூமுக்கு போறேன்” என்று விட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட அவளோ கிருஷ்ணாவின் புறம் ஜாடையாக என்னவென்று வினவினாள்.

 

அவனும் அன்று மாலை  ஹரிணி தன்னிடம் கூறிய விடயங்களைப் பற்றி எல்லாம் ஒன்று விடாமல் அவளிடம் கூற அந்த நேரம் அந்த வழியாக வந்த ஜெயலஷ்மி பையன் ஒருவன்  ஹரிணியிடம் காதலை கூறினான் என்ற விடயத்தை மட்டும் கேட்டு விட்டு பதட்டத்துடன் தன் கணவரிடம் சென்று அதைப் பற்றி கூறி விட்டு மேலும் பதட்டத்துடன் பேசப்போக தங்கள் பிள்ளைகள் இருக்கும் பக்கத்தை ஜாடையில் காட்டிய மாணிக்கம் வேண்டாம் என்பது போல தலையசைத்து விட்டு அமைதியாக தங்கள் வீட்டிலிருந்த சிறு தோட்டத்தை நோக்கி நடந்து சென்றார்.

 

தன் கணவரின் நடவடிக்கைகளை பார்த்து கொண்டு நின்ற ஜெயலஷ்மி அவரது செய்கையின் அர்த்தத்தை உணர்ந்தவறாக சமையலறைக்குள் இருந்த தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு அவர் அமர்ந்திருந்த தோட்டப்பகுதிக்கு சென்று அவரருகில் அமர்ந்து கொண்டார்.

 

“சொல்லு லஷ்மி! உன் மனதில் இப்போ என்ன குழப்பம்?”

 

“ஏன்ங்க? உங்களுக்கு தெரியாதா? கல்யாண வயதில் பொண்ணை வைத்துட்டு இருக்கும் எல்லோருக்கும் இருக்கும் அதே பயம் தான் எனக்கும்! ஏற்கனவே அவளுக்கு நடந்த விபத்தைக் காரணம் காட்டி கல்யாணம் தள்ளிப் போகுது இதில் இப்படி அவளை தேவையில்லாமல் குழப்பம் பண்ணுற விடயங்கள் நடந்து மறுபடியும் அவளுக்கு ஏதாவது ஆச்சனா?”

 

“லஷ்மி!” மாணிக்கத்தின் அதட்டலான குரலில் திடுக்கிட்டு போய் அவரின் புறம் திரும்பி பார்த்தவர்

 

“ஒரு பேச்சுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு சொன்னதற்கே இவ்வளவு கோபப்படுறீங்க! அதே அளவு பயம் தானேங்க எனக்கும் இருக்கும் சீக்கிரமாக அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கணும் அது தான் இப்போ இருக்கும் முக்கியமான பிரச்சினை! அதற்கு ஏதாவது பண்ணுங்க!” கெஞ்சலாக அவரைப் பார்த்து கூறவே

 

தன் கண்களை மூடி தன் தலையை அழுந்த கோதிக் கொண்டவர்

“எனக்கு மட்டும் அந்த கவலை இல்லாமல் இருக்குமா லஷ்மி? நான் காலையிலேயே சொன்னேன் தானே எதையும் அவசரப்பட்டு செய்ய முடியாது! இது அவ வாழ்க்கை விடயம்! கொஞ்சம் பொறுமையாக தான் பண்ணலாம் நீ எதற்கும் பயப்பட வேண்டாம் நாளைக்கே நான் தரகர் கிட்ட கொஞ்சம் மும்முரமாக இந்த விடயத்தை பார்க்க சொல்லுறேன் நீ மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாமல் போய் தூங்கு!” என்று கூறவும் அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவர் தன் சிந்தனைகளுடேனேயே வீட்டை நோக்கி நடந்து சென்றார்.

 

மறுபுறம் மாணிக்கம் சிந்தனையோடு நடந்து செல்லும் தன் மனைவியை பார்த்தபடியே அமர்ந்திருக்க அவர் மனதிற்குள்ளோ ஆயிரம் கேள்விகள் நிறைந்து போனது.

 

அடுத்து என்ன செய்வது? என்ற யோசனையோடு அவர் அமர்ந்திருக்க அந்த குழப்பங்களுக்கு எல்லாம் பதில் கிடைக்கும் நாள் விரைவில் வந்து சேருமா??????