நினைவு – 03

வருணின் இல்லத்தில் அர்ஜுனுக்கு உணவு ஊட்டியபடி சாவித்திரி அமர்ந்திருக்க மறுபுறம் ஹாலில் ராமநாதனும், வருணும் மும்முரமாக எதைப்பற்றியோ பேசிக் கொண்டிருந்தனர்.

 

சிறு குழந்தையைப் போல அர்ஜுன் ஒவ்வொரு விடயங்களாக மீண்டும் மீண்டும் சாவித்திரியிடம் கேட்டுக் கொண்டிருக்க சிறிதும் முகம் மாறாமல் புன்னகையுடன் அவனது கேள்விகளுக்கு எல்லாம் அவர் பதிலளித்துக் கொண்டிருக்க பேசிக்கொண்டே தற்செயலாக அவர்களின் புறம் திரும்பிய ராமநாதன் சட்டென்று தன் பேச்சை நிறுத்திவிட்டு அவர்களையே பார்த்து கொண்டிருந்தார்.

 

தன் தந்தையின் திடீர் அமைதியில் கேள்வியாக அவரை நோக்கியவன் அவரது பார்வை சென்ற புறமாக திரும்பி பார்த்து விட்டு முகம் கனிய அவரின் கையை ஆதரவாக அழுத்திக் கொடுத்தான்.

 

“அப்பா!”

 

“ஆஹ்! சொல்லு ப்பா வருண்!” தன் பார்வையை திருப்பாமலேயே ராமநாதன் வருணின் அழைப்புக்கு பதில் கொடுக்க

 

“என்னப்பா அங்கேயே பார்த்துட்டு இருக்கீங்க?” அவன் தன் அடுத்த கேள்வியை அவரைப் பார்த்து கேட்டான்.

 

“அர்ஜுன்! அவனை உங்க அம்மா எவ்வளவு பொறுமையாக, பொறுப்பாக பார்த்துக்கிறா இல்லை?”

 

“அவங்களுக்கு எப்போதும் அர்ஜுன்னா தனிப்பிரியம் தானேப்பா!” 

 

“ஹ்ம்ம்ம்ம்! ஆமா! சாவித்திரி இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தால் அர்ஜுனை இப்படி கவனித்து இருப்பாங்களான்னு தெரியல! அந்த ஒரு விடயத்தில் எனக்கு சாவித்திரியை எப்போது பார்த்தாலும் ஒரு தனி மரியாதை உருவாகும்!”

 

“அப்பா! மரியாதைன்னு சொல்லிட்டே அம்மாவை சைட் அடிக்குறீங்களா?” வருண் கேலியாக அவரைப் பார்த்து வினவவும்

 

புன்னகையுடன் அவனது தோளில் தட்டியவர்

“நான் என் பொண்டாட்டியை சைட் அடிக்குறது இருக்கட்டும் நீ எப்போ உன் பொண்டாட்டியை சைட் அடிக்கப் போற?” கேள்வியாக அவனைப் பார்த்து புருவம் உயர்த்த 

 

சட்டென்று தன் முகத்தில் இருந்த இயல்பு நிலையைத் தொலைத்தவன் 

“இப்போ அதெல்லாம் எதுக்கு? விடுங்க!” சற்று கடினமான குரலில் கூறினான்.

 

“எதுக்குன்னா? இது என்னடா கேள்வி? எங்களுக்கும் எங்க பேரன், பேத்தியைப் பார்க்கணும், கொஞ்சணும்னு ஆசை இருக்காதா?” 

 

“அப்பா! நான் உங்க கிட்ட பலதடவை சொல்லி இருக்கேன் அர்ஜுன் குணமான பிறகு தான் நான் இதைப்பற்றி எல்லாம் யோசிப்பேன் அவனை இந்த நிலைமையில் விட்டுட்டு நான் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியுமா? சொல்லுங்க? அவன் எனக்கு பிரண்ட் மட்டும் இல்ல கூடப்பிறக்காத ஒரு தம்பி மாதிரி! அவனைக் குணப்படுத்தாமல் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறதாக இல்லைப்பா!” வருண் உறுதியான குரலில் கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட ராமநாதனோ அவனை கவலை தோய்ந்த முகத்தோடு பார்த்து கொண்டு இருந்தார்.

 

இந்த ஏழு வருடங்களில் என்னென்னவோ மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் வருணின் முடிவில் இதுவரையில் எந்தவொரு முன்னேற்றமும் அவருக்கு தென்படவில்லை.

 

அவரும் தன்னால் முடிந்த மட்டும் அர்ஜுனைக் குணப்படுத்தி விடலாம் என்று முயற்சி செய்தார் தான் ஆனால் அந்த முயற்சி எல்லாம் கானல் நீராகவே மாறிப்போனது.

 

ஏழு வருடங்களுக்கு முன் அந்த விபத்து நடந்த ஆரம்பகட்டத்தில் அர்ஜுன் முழுவதும் சித்த பிரமை பிடித்தாற் போல நடந்து கொள்ள தொடங்கியிருக்க அதைப் பார்த்து மிகவும் உடைந்து போனவர் ராமநாதன் தான்.

 

அந்த விபத்தின் பின்னர் இரண்டு, மூன்று வாரங்கள் மயக்கத்தில் இருந்து எழுந்தவன் அந்த கணம் முதல் தன் கண் முன்னால் வந்து நிற்போரை எல்லாம் பார்த்து ‘பிரியா’ என்று அழைப்பதும், அவளைக் காதலிப்பதாக சொல்வதுமாக இருக்க அவனின் அந்த நிலையை பார்த்து தவித்து போனவர்கள் அவனுக்கு செய்யாத சிகிச்சைகள் இல்லை.

 

அவனது தற்போதைய இந்த நிலைமையையும், சிறு வயதில் தன் கையை பிடித்து கொண்டு ‘ராமுப்பா!’ என்று தன் பின்னாலேயே சுற்றி வரும் அவனது அந்த புன்னகை தவழும் முகத்தையும் எண்ணிப் பார்த்துக் கொண்டே மனம் கனக்க ராமநாதன் தன் சிந்தனைகளில் தன்னை மறந்து அமர்ந்திருக்கையில் அர்ஜுனின் சிரிப்பொலி அந்த வீடு முழுவதும் எதிரொலிக்க தற்காலிகமாக தன் சிந்தனைகளில் இருந்து வெளி வந்தவர் தன் கலங்கிய கண்களை துடைத்து விட்டபடியே அவனின் புறம் திரும்பி பார்த்தார்.

 

மேஜை மீதிருந்த பூச்சாடியைத் தன் கையில் ஏந்தியபடி சாவித்திரியின் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்த அர்ஜுன்

“ஹாய் பிரியா! ஐ யம் அர்ஜுன்! நான் இதை உன்கிட்ட சொல்ல ரொம்ப நாளாக ட்ரை பண்ணேன் பட் முடியல! ஆனா இன்னைக்கு சொல்லிடுவேன்! ஐ லவ் யூ பிரியா!” புன்னகை முகமாக அவரைப் பார்த்து கூற 

 

தன் கையில் இருந்த உணவுக்கவளத்தை அவனது வாயில் வைத்தவர்

“நானும் உன்னை ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன் அர்ஜுன்!” என்றவாறே அவனது நெற்றியில் முத்தமிட

 

அவனோ

“ஹைய்யா! பிரியா எனக்கு ஓகே சொல்லிட்டா! நானும், பிரியாவும் லவ் பண்ணுறோம்!” என்றவாறே துள்ளிக்குதித்து கொண்டு அங்கிருந்து ஓடிச் செல்ல அவற்றை எல்லாம் பார்த்து அங்கிருந்த மூவரின் கண்களும் கண்ணீரால் நிறைந்து போனது.

 

சுற்றுப்புறம் மறந்து, குழந்தை போல, விடைதெரியாத கேள்வியாக தன் வாழ்வைத் தொலைத்து நிற்கும் அர்ஜுனின் நினைவுகளில் நிறைந்திருப்பவள் யாரோ?

 

*********************************************

 

காலை விடியல் உணர்ந்து எப்போதும் போல தன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்த ஹரிணி தலை வலிப்பது போல் தன் முகம் சுருக்கி தலையை பிடித்து கொண்டு பதட்டத்துடன் தன் அருகில் தூங்கிக் கொண்டிருந்த விஷ்ணுப்பிரியாவை தட்டி எழுப்பினாள்.

 

“பிரியா! பிரியா! கொஞ்சம் அவசரமாக எழுந்திருடி! எனக்கு தலை ரொம்ப வலிக்குது!” தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு வலியில் முகம் சுருங்கி அமர்ந்திருந்தவளைப் பார்த்து அடித்துப் பிடித்து பதறியடித்து எழுந்து அமர்ந்த விஷ்ணுப்பிரியா

 

“ஐயோ! ஹரிணி என்னாச்சு? ஐயோ! அம்மா! அப்பா! சீக்கிரமாக வாங்க!” அறை வாயிலுக்கும், கட்டிலுக்கும் இடையே பதட்டத்துடன் மாறி மாறி ஓடிக் கொண்டே சத்தமிட அவளது சத்தம் கேட்டு மாணிக்கம், ஜெயலஷ்மி மற்றும் கிருஷ்ணா பதட்டத்துடன் அவசரமாக அவளை நோக்கி ஓடி வந்தனர்.

 

“என்னாச்சு பிரியா? எதற்கு சத்தம் போட்ட?” மாணிக்கத்தின் கேள்வியில் அவரது கையை இழுத்துக் கொண்டு ஹரிணியின் முன்னால் சென்று நின்றவள்

 

“ஹரிணி தலை வலிக்குதுன்னு சொல்லுறாப்பா! என்ன என்று பாருங்கப்பா!” தவிப்போடு அவரைப் பார்த்து கூற

 

“சரிடா இரு! நான் பார்க்கிறேன்” என்றவாறே அவளது தலையை வருடிக் கொடுத்தவர் ஹரிணியின் முன்னால் அமர்ந்து கொண்டு அவளது முகத்தை நிமிர்த்தி பார்த்தார்.

 

விஷ்ணுப்பிரியா அறியாத வண்ணம் மாணிக்கத்தை பார்த்து கண்சிமிட்டியவள் 

“ஐயோ! அம்மா! தலை வலிக்குதே!” பெருங்குரலெடுத்து சத்தமிட்டு கத்தியபடியே தன்னருகில் நின்றவளின் மீது மயக்கம் போட்டு விழ

 

அவளோ

“ஐயோ! ஹரிணி! ஹரிணி இங்கபாரு!” கண்களில் கண்ணீர் வடிய தன் அக்காவை எழுப்ப முயன்று கொண்டிருந்தாள்.

 

“அப்பா! ஹரிணிக்கு என்ன ஆச்சு? அம்மா! அவளை எழுப்புங்கம்மா!” கதறியழுதபடியே அமர்ந்திருந்தவளின் அருகில் வந்து நின்று கொண்ட கிருஷ்ணா

 

“கடைசியாக நீ ஹாஸ்பிடலில் பிறந்து இருந்த நேரம் அழுததற்கு இப்போதான் அழுவுற போல!” யோசிப்பது போல பாவனை செய்தபடியே என்று கூற

 

கோபமாக அவனை முறைத்து பார்த்தவள்

“உனக்கு எந்த நேரத்தில் விளையாடணும்னு விவஸ்தை இல்லையா? இங்க ஹரிணி என்ன நிலைமையில் இருக்கா? நீ விளையாடுற!” என்றவாறே தன் மேல் சாய்ந்து இருந்தவளைத் திரும்பி பார்க்க அவளோ கண்களை மூடிக்கொண்டு தன் சிரிப்பை மறைத்தபடியே கன்னத்தில் வந்து அமர்ந்த கொசுவொன்றை விரட்டி விட்டு கொண்டிருந்தாள்.

 

“அடிப்பாவி!” தன் மேல் சாய்ந்து இருந்த ஹரிணியை சட்டென்று தள்ளிவிட்ட விஷ்ணுப்பிரியா 

 

அங்கிருந்து வேகமாக எழுந்து கொள்ளப் போன மாணிக்கத்தின் கைகளைப் பிடித்து கொண்டு

“எல்லோரும் சேர்ந்து என்னை ஏமாற்றுறீங்களா? என்னை அழ வைத்து பார்க்க உங்களுக்கு எல்லாம் என்ன அவ்வளவு ஆசை?” கோபத்தில் மூச்சு வாங்கியபடியே அழுகையில் துடித்த தன் உதடுகளை கடித்தபடி கேட்கவும் 

 

ஹரிணி அவசரமாக அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு

“ஐயோ! பர்த்டே பேபி இப்படி அழலாமா? நீ தானே எப்போவும் சொல்லுவ பர்த்டே அன்னைக்கு ஏதாவது மறக்கமுடியாத ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கணும்னு அது தான் ஒரு சின்ன முயற்சி! எப்படி இருக்கு?” புன்னகையுடன் அவளைப் பார்த்துக் கேட்டாள்.

 

“பர்த்டேவா?” யோசனையுடன் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த நாட்காட்டியை திரும்பி பார்த்தவள் அதில் அன்றைய நாளைப் பார்த்து விட்டு

 

“அட ஆமா! இன்னைக்கு என் பிறந்தநாள் இல்லை! அதைக் கூட மறந்துட்டேனே!” தன் தலையில் தட்டிக் கொண்டவள் 

 

உடனே கோபமாக ஹரிணியின் புறம் திரும்பி

“பிறந்தநாள்ன்னா சர்ப்பரைஸ்ன்னு இப்படியா பண்ணுவ? இன்னொரு நாள் உனக்கு உண்மையாகவே தலைவலி வந்து கத்தப்போற அப்புறம் நான் நம்பாமல் இருப்பேன் அப்போ தெரியும் பார்த்துக்கோ!” என்று அவளுடன் சண்டை போடத் தொடங்க 

 

“ஓகே கூல்! கூல்! முதல்ல கேக்கை கட் பண்ணு” என்றவாறே கிருஷ்ணா தன் கையில் பிளக் பாரஸ்ட் கேக் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தான்.

 

மாணிக்கம், ஜெயலஷ்மி, ஹரிணி மற்றும் கிருஷ்ணா விஷ்ணுப்பிரியாவை சுற்றி நின்று பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அதிரடியான அந்த நாளின் ஆரம்பத்தை எண்ணிப் புன்னகைத்து கொண்ட ஹரிணி சந்தோஷமாக அந்த தருணத்தை தன் குடும்பத்தினருடன் செலவிட்டாள்.

 

சிறிது நேரத்தின் பின் எல்லோரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றுவிட ஹரிணி தனது கப்போர்டில் இருந்து ஒரு பெரிய கவரை எடுத்துக் கொண்டு வந்து விஷ்ணுப்பிரியாவின் முன்னால் நீட்டினாள்.

 

“ஹை! எனக்கு கிஃப்டா? இது என்ன ஹரிணி?”

 

“நீயே பிரித்து பாரு!” 

 

“பில்டப் எல்லாம் ஓவரா இருக்கே!” அந்த கவரில் என்ன இருக்கும் என்ற யோசனையோடு அதைப் பிரித்து பார்த்த விஷ்ணுப்பிரியா அதில் இருந்த பொருளைப் பார்த்து அதிர்ச்சியாக தன் அக்காவை நிமிர்ந்து பார்த்தாள்.

 

“எப்படி இருக்கு என் கிஃப்ட்?” 

 

“இது கிஃப்டா? இது நான் பாவிக்க கூடாதுன்னு பிளான் பண்ணி வாங்கிட்டு வந்த மாதிரி இருக்கு!” 

விஷ்ணுப்பிரியாவின் பதிலில் ஹரிணியின் முகம் அனிச்சம் பூவாக வாட

 

“ஏன் பிரியா நல்லா இல்லையா?” சிறிது தயக்கத்துடன் அவளைப் பார்த்து வினவினாள்.

 

“ஐயோ! ஹரிணி நான் நல்லா இல்லைன்னு சொன்னேனா? ஆகாய நீல நிறத்தில் இந்த ஸாரி ரொம்ப சூப்பரா இருக்கு! ஆனா எனக்கு தான் ஸாரி கட்ட பிடிக்காதே! அப்புறம் எப்படி இதை நான் யூஸ் பண்ணுவேன்?”

 

“அவ்வளவு தானா? நான் கூட உனக்கு பிடிக்கலையோன்னு பயந்துட்டேன் இன்னைக்கு ஒரு நாள் ஸாரி கட்டுவதால் ஒரு பிரச்சினையும் வராது ஈவ்னிங் காலேஜ் முடிந்து நேராக வீட்டுக்கு வர்ற இந்த சேலையை கட்டிக்குற இரண்டு பேரும் ஒண்ணா கோயிலுக்கு போறோம் இது தான் பிளான்!” 

 

“அப்போ என் பிரண்ட்ஸ் கூட நான் இன்னைக்கு வெளியே போக கூடாதா?”

 

“நீ காலேஜுக்கு போறேன்னு சொல்லிட்டு எப்போதும் அவங்க கூட தானே சுற்றிட்டு இருக்க! ஒரு நாள் அவங்க கூட போகலேன்னா ஒண்ணும் ஆகாது! இன்னைக்கு ஒரு நாள் எனக்காக நீ வர்ற! இல்லை இல்லை வரணும்! என்ன வருவ தானே?” ஹரிணியின் கேள்வியில் புன்னகையுடன் அவளது கன்னத்தை பிடித்து ஆட்டிய விஷ்ணுப்பிரியா

 

“கண்டிப்பாக வருவேன்! ஹரிணி கேட்டு இல்லைன்னு சொல்லுவேன்னா?” அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்து விட்டு காலேஜ் செல்வதற்காக தயாராக சென்று விட அவளும் தனது அலுவலகத்திற்கு செல்வதற்காக தயாராகத் தொடங்கினாள்.

 

அன்று ஹரிணியின் அலுவலகத்தில் அவர்களது குழுவினருக்கு பெரிதாக வேலை எதுவும் இல்லாமல் இருக்கவே மதிய நேர இடைவெளி கழித்து சிறிது நேரத்தின் பின் கிருஷ்ணாவுடன் தங்கள் வீட்டுக்கு திரும்பியவள் மாலையில் கோவிலுக்கு செல்வதற்காக வேண்டி தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து தயாராகி கொண்டிருக்க மறுபுறம் வருண் அர்ஜுனுடன் தங்கள் வீட்டில் இருந்து அவசர அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்தான்.

 

நேற்று அந்த பெண்ணை சந்தித்த அதே நேரத்தில் அதே இடத்தில் இன்றும் சந்தித்து விடவேண்டும் என்ற ஒரு ஆவலுடன் தயாரான வருண் சாவித்திரியை அவர் வழக்கமாக செல்லும் முருகன் கோவிலில் இறக்கி விட்டு விட்டு சென்று விட அவரோ புழுதியை கிளப்பிக் கொண்டு செல்லும் அந்த காரையே ஏக்கமாக பார்த்து கொண்டு நின்றார்.

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோவிலாக சென்று எத்தனையோ பூஜைகளும், பரிகாரங்களும் அவர் செய்து பார்த்து விட்டார் அந்த பூஜைகளுக்கும், பரிகாரங்களுக்கும் கூட இன்று வரை அவருக்கு பலனளிக்கவில்லை.

 

தங்கள் குடும்பத்தை சூழ்ந்துள்ள இந்த குழப்பம் கூடிய விரைவில் நீங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு சாவித்திரி படியேறி கோவிலை நோக்கி நகர்ந்து செல்ல சரியாக அந்த தருணத்தில் ஹரிணியும், விஷ்ணுப்பிரியாவும் கிருஷ்ணாவோடு கோவில் வாயிலை வந்து சேர்ந்தனர்.

 

வயதில் சிறியவனாக இருந்தாலும் தன் இரு அக்காக்களுக்கும் பாதுகாப்பாக நடந்து வருவது என்னவோ அவனுக்கு நாட்டின் எல்லையில் இருக்கும் பாதுகாப்பு படையினரின் சேவையை செய்வது போல் இருந்தது.

 

அவர்கள் இருவரையும் கோவிலின் உள்ளே அனுப்பி விட்டு தன் தொலைபேசியை எடுத்து பார்க்க ஆரம்பித்தவன் அதிலேயே மூழ்கிப் போய் விட ஹரிணி மற்றும் விஷ்ணுப்பிரியா வழக்கம் போல தங்கள் கதைகளை பேசிக்கொண்டு கோவில் பிரகாரத்தை நோக்கி நடந்து செல்ல ஆரம்பித்தனர்.

 

மறுபுறம் வருண் நேற்று சந்தித்த அந்த பெண்ணை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவள் நேற்று நின்று கொண்டிருந்த பேருந்து நிறுத்தத்தின் முன்னால் நின்று கொண்டு பார்வையாலேயே சுற்றும் முற்றும் அவளைத் தேட அவன் தேடலுக்கான பதில் அங்கே கிட்டவில்லை.

 

“சே! அந்த பொண்ணு எங்கே இருந்து வந்தான்னு கூட தெரியலையே! இங்கே இத்தனை கட்டடம் இருக்கு இதில் எங்கேன்னு நான் போய் விசாரிப்பேன்?” கவலையோடு தன் காரின் மேல் சாய்ந்து கொண்டு வருண் யோசித்து கொண்டிருக்க அர்ஜுனோ காரின் உள்ளே நிம்மதியாக கண் மூடி உறங்கிக் கொண்டிருந்தான்

.

வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் அர்ஜுன் எப்போதும் தேடுவது சாவித்திரி மற்றும் வருணைத் தான்.

 

அதனாலேயே அவன் வெளியில் எங்கே சென்றாலும் அர்ஜுனைத் தன்னோடு சேர்த்து அழைத்து கொண்டே செல்வான் சாவித்திரியோடு தனியாக அவனை அனுப்பி வைத்து அங்கே ஏதாவது குளறுபடி நடந்து விடக்கூடாது என்பதற்காக அவரோடு அவனை எங்கேயும் தனியாக அனுப்பி வைப்பதில்லை.

 

தன் யோசனைகளோடு சஞ்சரித்தபடியே வருண் நின்று கொண்டிருக்க ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமாக பேருந்து நிறுத்தத்தின் முன்னால் நின்று கொண்டு வெகு நேரமாக போவோர் வருவோரை எல்லாம் குறுகுறுவென பார்த்து கொண்டிருந்தவனை நேரம் ஆக ஆக அங்கிருந்தோர் எல்லாம் விசித்திரமாக பார்க்கத் தொடங்கினர்.

 

அங்கிருந்த நபர்களின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவனாக சிறிது தயக்கத்துடன் தன் காரின் உள்ளே ஏறி அமர்ந்து கொண்டவன் அங்கே அதற்கு மேலும் காத்து நிற்பதா? வேண்டாமா? என்று யோசிக்கத் தொடங்கினான்.

 

நேற்று வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததனால் அந்த சாலையில் பெரிதாக ஆட்கள் இருக்கவில்லை ஆனால் இன்று வானம் கொஞ்சம் தெளிவாக இருந்ததனால் நேற்றைய நாளை விட இன்று ஆட்கள் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.

 

தன் கடிகாரத்தை திருப்பி பார்ப்பதும் சாலையை பார்ப்பதுமாக அமர்ந்திருந்தவன் அர்ஜுன் தூக்கத்தில் இருந்து எழுந்து கொள்வதைப் பார்த்ததுமே அதற்கு மேலும் அங்கே காத்திருப்பதில் பலனில்லை என்ற முடிவோடு தன் காரை அங்கிருந்து கிளப்பினான்.

 

அர்ஜுன் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் முதலில் தேடுவது சாவித்திரியைத் தான் என்பதனால் அவரை இறக்கி விட்டு வந்த அதே கோவிலின் முன்னால் தன் காரை நிறுத்தியவன் அவரை அழைத்துக் கொண்டு வரலாம் என்று நினைத்து கொண்டே அவரைத் தேடி கோவிலின் உள்ளே சென்றான்.

 

வருண் இங்கே ஒரு புறம் சாவித்திரியைத் தேடி கோவில் பிரகாரத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்க மறுபுறம் அவர் அங்கிருந்த பிரகாரத்தின் தூண் ஒன்றில் சாய்ந்து கண் மூடி அமர்ந்திருந்தார்.

 

அவர் அமர்ந்திருந்த அதே இடத்திற்கு எதிர்ப்புறமாக ஹரிணியும், விஷ்ணுப்பிரியாவும் அமர்ந்து கொண்டு சத்தமாக பேசி சிரித்துக் கொண்டிருக்க அந்த சத்தத்தில் தன் கண்களை மெல்ல திறந்து பார்த்த சாவித்திரி முகம் கொள்ளாப் புன்னகையுடன் அமர்ந்திருந்த அவர்கள் இருவரையும் பார்த்து கண்கள் கலங்கிப் போனார்.

 

சாவித்திரிக்கு வெகு காலமாகவே பெண் பிள்ளைகள் என்றால் அத்தனை பிரியம்.

 

அர்ஜுன் மற்றும் வருண் சிறு வயதாக இருந்த நேரங்களில் சில சமயம் அவர்களுக்கு பெண் பிள்ளைகள் போல ஆடைகள் அணிவித்து அவர் அழகு பார்த்ததுமுண்டு.

 

தனது பிள்ளைகள் வளர்ந்ததும் அவர்களுக்கென்று ஒரு திருமணத்தை நடத்தி வைத்து தனக்கு மருமகளாக வரப் போகும் பெண்களை தன் மகளாகப் பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தவருக்கோ இடியாக வந்து சேர்ந்த செய்திகள் அர்ஜுனின் இந்த நிலைமையும், வருணின் திருமணமே வேண்டாம் என்ற இந்த முடிவும்.

 

ஒரு அன்னையாக அவருக்கும் பல ஆசைகள் இருந்தும் அதை எல்லாம் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அவர் படும் கஷ்டம் அவர் ஒருவரே அறிய முடியும்.

 

மீண்டும் அந்த சிரிப்பு சத்தம் கேட்டு அவர்களின் புறம் திரும்பி பார்த்த சாவித்திரி அந்த பெண்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாமா? என்ற எண்ணத்தோடு அவர்களை நோக்கி நடந்து செல்லப் பார்த்து விட்டு சிறிது தயக்கத்துடன் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்.

 

முன் பின் தெரியாத ஒருவரிடம் அவர்கள் பேசுவார்களா என்ற தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தவர் முன்னால் அந்த கோவிலின் தர்மகர்த்தா கடந்து செல்ல சிறிது நிம்மதி கொண்டவராக அவரைப் பின் தொடர்ந்து சென்றவர்

“ஐயா! ஒரு நிமிஷம்!” என்று அழைக்க அவரது குரல் கேட்டு திரும்பி பார்த்தவர் அங்கே சாவித்திரியை பார்த்ததும்

 

“வணக்கம் சாவித்திரி அம்மா! எப்படி இருக்கீங்க?” புன்னகை முகமாக வினவினார்.

 

ஒவ்வொரு வருடமும் கோவிலில் நடக்கும் விஷேசங்களுக்கு அர்ஜுனின் பெயரில் அவர் உதவி செய்து வருவதால் அந்த கோவிலில் பணி புரியும் அனைவருக்குமே அர்ஜுனின் அம்மா சாவித்திரி என்று பதிவாகி போனது.

 

“நான் நல்லா இருக்கேன்ங்க! நீங்க எப்படி இருக்கீங்க?”

 

“கடவுள் புண்ணியத்தில் ரொம்ப நல்லா இருக்கோம் அம்மா! என்னம்மா நீங்க மட்டும் தனியாக வந்து இருக்கீங்க போல இருக்கு? உங்க பசங்க வரலயா?” 

 

“இல்லை அவங்க ஒரு வேளையாக போய் இருக்காங்க” என்ற சாவித்திரி சிறிது தயக்கத்துடன் அவரைப் பார்க்க

 

அவரது தயக்கத்தை உணர்ந்து கொண்டவராக

“என்னம்மா ஏதாவது சொல்ல வேண்டுமா?” என்று கேட்க அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவர்

 

ஹரிணி மற்றும் விஷ்ணுப்பிரியா அமர்ந்திருந்த இடத்தை சுட்டி காட்டி 

“அந்த பொண்ணுங்க இரண்டு பேரும் யாருன்னு உங்களுக்கு தெரியுமா? தப்பாக எடுக்க வேணாம் எல்லாம் ஒரு காரணத்திற்காகத் தான்” என்று இழுக்க

 

சிறு புன்னகையுடன் அவரைப் பார்த்தவர்

“நீங்க தப்பான எண்ணத்தோடு எதையும் கேட்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்மா! அவங்க இரண்டு பேரும் அடையார் கார்ப்பரேஷன் ஆபிஸில் அக்கௌன்டனாக வேலை பார்க்கும் மாணிக்கத்தோட பொண்ணுங்க! சின்ன வயதில் இருந்தே எனக்கு தெரியும் ரொம்ப நல்ல பொண்ணுங்க! நீங்க என்ன காரணத்திற்காக அவங்களைப் பற்றி கேட்டீங்கன்னு தெரியல ஆனா உங்க மருமகளாக வரணும்னு நினைத்து கேட்டீங்கன்னா அந்த பொண்ணுங்களைப் பற்றி உங்க கிட்ட சொன்னதற்காக எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கு! சரிம்மா நான் வர்றேன்” என்று விட்டு அங்கிருந்து சென்றுவிட சாவித்திரியோ மனதில் ஏதேதோ ஆசைகள் சூழ ஹரிணி மற்றும் விஷ்ணுப்பிரியாவை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்றார்…….