நினைவு – 04

காரில் சென்று கொண்டிருந்த சாவித்திரி தன்னருகில் இருந்த  ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க அவரருகில் அர்ஜுன் அமர்ந்து கொண்டு அவரது பூஜை தட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளாக தன் கையில் எடுத்து தன் பாட்டில் பேசிக்கொண்டும், அதற்கு தானாகவே விளக்கம் சொல்லிக் கொண்டும் அமர்ந்திருந்தான்.

 

வருண் காரின் முன் பக்க கண்ணாடி வழியாக அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டே காரை செலுத்திக் கொண்டிருக்க அவன் மனமோ தன் அன்னையின் முக மாற்றத்தை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.

 

கோவிலின் உள்ளே சென்று தன் அன்னையை ஒவ்வொரு இடமாக தேடிக் கொண்டு நின்றவன் அங்கே ஒரு மண்டபத்தின் நடுக்கூடத்தில் நின்று கொண்டிருந்த சாவித்திரியைப் பார்த்ததும் சிறு புன்னகையோடு

“அம்மா!” என்று அழைத்துக் கொண்டே அவரருகில் செல்ல

 

 அவனது குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்த்தவர் திருதிருவென விழித்து கொண்டே அவசரமாக அவனருகில் வந்து நின்று

“வருண் வந்துட்டியாபா? போகலாமா?” என்று கேட்டு விட்டு அவனது பதிலைக் கூட எதிர்பாராமல் அவனது கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு செல்ல

 

 அவரது நடவடிக்கைகளைப் பார்த்து சிறிது குழப்பம் கொண்டவன் 

‘ரொம்ப நேரம் காத்திருந்தால் அவசரமாக போக நினைக்குறாங்க போல!’ தன் குழப்பத்திற்கு தானாகவே பதிலை உருவாக்கிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து சென்றான்.

 

அந்த நொடி முதல் இந்த கணம் வரை வெகு அமைதியாக வரும் தன் அன்னையின் இந்த பரிமாணம் அவனை ஏனோ குழப்பம் கொள்ளவே செய்தது.

 

சாவித்திரி எப்போது கோவிலுக்கு சென்று திரும்பினாலும் அன்று அவர் எந்த கடவுளை தரிசித்தார்? என்ன எல்லாம் வேண்டிக் கொண்டார்? நாளை எந்த கோவிலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார் என்று ஒன்று விடாமல் பேசிக் கொண்டே வருவார் ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக அவர் அமைதியாக இருப்பது ஏனோ அவனுக்கு சரியாக படவில்லை.

 

சிறிது நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவராக ஏதாவது கூறுவார் என்று காத்திருந்து விட்டு இனியும் அமைதி காப்பது சரியில்லை என்ற எண்ணத்தோடு அவரைப் பார்த்து அவரது அமைதிக்கான காரணத்தை வினவ ஒன்றும் இல்லை என்று புன்னகையுடன் அவனைப் பார்த்து பதிலளித்தவர் அதன் பிறகு வேறு எதுவும் பேசவில்லை.

 

அர்ஜுன் கூட அவரை பல கேள்விகள் கேட்டு கேட்டு நச்சரிக்க அவனுக்கும் வெறும் ஒற்றை புன்னகையைப் பதிலளித்தவர் அவர்களது கார் வீட்டின் முன்னால் சென்று நின்றதும் சாவி கொடுத்தாற் போல காரில் இருந்து இறங்கி தங்கள் வீட்டை நோக்கி நடந்து சென்றார்.

 

அர்ஜுனும் அவரது கையை பிடித்து கொண்டு வீட்டிற்குள் நடந்து செல்லப் போக அவசரமாக அவர்கள் வழியை மறித்தவாறு வந்து நின்ற வருண்

“அம்மா! இன்னைக்கு நீங்க சொன்ன மாதிரி அந்த பஸ் ஸ்டாண்டில் போய் ரொம்ப நேரமாக வெயிட் பண்ணேன் அந்த பொண்ணு வரவேயில்லை!” என்று கூறவும்

 

“ஓஹ்!” என்று கேட்டுக் கொண்டவர் அவனைத் தாண்டி சென்று விட அவனுக்கோ அவரது நடவடிக்கைகள் எதுவுமே புரியவில்லை.

 

‘அம்மாவுக்கு என்ன ஆச்சு?’ பலத்த சிந்தனையோடு அவரைப் பின் தொடர்ந்து சென்றவனது சிந்தனையைக் கலைப்பது போல அலுவலகத்தில் இருந்து அழைப்புகள் வரத் தொடங்க மற்ற எல்லா சிந்தனைகளும் பின் வாங்க அந்த அழைப்புகளுக்கு பதிலளிக்க தொடங்கியவன் அதன் பின்னர் தனது வேலைகளில் மூழ்கி போனான்.

 

இரவுணவை முடித்து விட்டு அவரவர் அவரவர்களது அறைகளுக்குள் சென்று விட அர்ஜுன் மாத்திரம் அவனது அறையோடு சேர்ந்தாற் போல இருந்த பால்கனியில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு ஒரு காகிதத்தில் எதையோ வரைந்து கொண்டிருக்க அவனருகில் அமர்ந்திருந்த வருண் தன் தொலைபேசியில் ஒரு கண்ணும் அர்ஜுன் மீது ஒரு கண்ணுமாக அமர்ந்திருந்தான்.

 

அர்ஜுன் தனக்குள்ளேயே ஏதேதோ பேசிக் கொண்டு அந்த காகிதங்களில் எல்லாம் கிறுக்கல்களாக ஏதேதோ வரைந்து கொண்டிருக்க அவற்றை எல்லாம் சிறு புன்னகையுடன் பார்த்து கொண்டு அமர்ந்திருந்த வருண்

“அர்ஜுன்! ஒரு கேம் விளையாடலமா?” என்று கேட்கவும்

 

அவனது கேள்வியில் கை தட்டி சிரித்தவன்

“யாஹ்! நாங்க விளையாடப் போறோம்” என்றவாறே தன் கையிலிருந்த காகிதம் மற்றும் பேனாவை அப்படியே கீழே போட்டான். 

 

“அர்ஜுன் கண்ணா! நாம பேப்பரில் எழுதி தான் விளையாடப் போறோம்” கீழே விழுந்த காகிதத்தையும், பேனாவையும் மீண்டும் அவன் கையில் கொடுத்தவன்

 

“உனக்கு பிடிச்ச ஐந்து பேரோட பேரை சொல்லு!” என்று கூறவும் அர்ஜுனோ வருணைப் புதிதாக ஒரு பொருளைப் பார்ப்பது போல பார்த்து கொண்டிருந்தான்.

 

“என்ன அர்ஜுன் கண்ணா நான் சொன்னது புரியலையா?” வருணின் கேள்வியில் அவனது கையிலிருந்த காகிதத்தையும், பேனாவையும் பறித்தவன் மறுபுறமாக திரும்பி அமர்ந்து கொண்டு எழுத ஆரம்பிக்க வருணிற்கு தான் ஒரு மாதிரியாகிப் போனது.

 

அவனும் பலவழிகளில் அர்ஜுனுக்கு ஏதாவது ஒரு ஞாபகத்தை கொண்டு வந்து விடலாம் என்று பலவாறாக முயற்சி செய்து கொண்டிருக்கிறான் தான் ஆனால் எதுவும் அவனிடம் செல்லுபடியாகவில்லை. 

 

பழைய விடயங்களை பற்றி பேசும் போதாவது அவனுக்கு ஏதாவது ஒரு நினைவு வந்து இந்த சித்தபிரம்மை நீங்கி விடாதா? என்ற ஒரு ஆசை மட்டும் வருணை விட்டு விலகவில்லை.

 

தன் நண்பனை எண்ணி கலங்கியபடியே அமர்ந்திருந்தவன் கையில் தான் எழுதிக் கொண்டிருந்த காகிதத்தை வைத்து விட்டு அர்ஜுன் அவர்களது அறைக்குள் சென்று கட்டிலில் படுத்துக் கொள்ள அவனது இந்த திடீர் மாற்றத்தில் சிறிது வியந்து போனவன் அதில் எழுதி இருந்தவற்றைப் பார்த்து விட்டு அதிர்ச்சியாகி அவனைத் திரும்பிப் பார்த்தான்.

 

வருண் கேட்டது போலவே அர்ஜுன் அவன் மனதில் இருந்த ஐந்து நபர்களின் பெயர்களை அதில் எழுதியிருந்தான்.

 

அதில் முதலாவதாக வருணின் பெயரும் அதற்கு பிறகு சாவித்திரி, ராமநாதன், விஸ்வநாதன் மற்றும் பிரியா என்று பெயர்கள் எழுதப்பட்டிருந்தது.

 

இதற்கு முன்னர் பல தடவைகள் வருண் இதே கேள்வியை அவனிடம் கேட்ட போதெல்லாம் அவனது பதில் ஒன்று அமைதியாக இருக்கும் இல்லாவிட்டால் அந்த காகிதத்தை கிழித்து தூர வீசி சத்தமிட்டு சிரிப்பதும், அந்த பால்கனியைச் சுற்றிலும் ஓடுவதாக இருக்கும்.

 

ஆனால் இன்று அந்த வழமைக்கு மாறாக முற்றிலும் வித்தியாசமாக அவன் கேட்ட கேள்விக்கு பதில் எழுதியது மட்டுமின்றி அவனாகவே சென்று தூங்குவது எல்லாம் ஏதோ ஒரு நல்ல தொடக்கத்தின் ஆரம்பப்படியாகவே வருணுக்கு புலப்பட்டது.

 

இந்த சந்தோஷமான செய்தியை உடனே தன் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு வேக வேகமாக தன் அறையில் இருந்து வெளியேறி படியிறங்கி சென்றவன் அவர்களது அறையைத் தட்ட கையை கொண்டு போன நேரம் சரியாக அந்த இடத்தில் யாரோ ஒருவரின் அழுகுரல் கேட்கவும் தன் கையை மெல்ல பின்னிழுத்துக் கொண்டவன் சிறிது தயக்கத்துடன் சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டான்.

 

அந்த அழுகுரல் தன் அன்னையின் குரல் தான் என்பதை உணர்ந்து கொண்டு பதட்டத்துடன் அவர்களது அறைக் கதவை திறக்கப் போனவன் 

“தயவுசெய்து அழாதே சாவித்திரி! பசங்க காதில் கேட்டால் வீணாக எல்லோருக்கும் மனக்கஷ்டம் முக்கியமாக வருண் ரொம்ப கஷ்டப்படுவான்” ராமநாதனின் குரல் கேட்டு தன் கையை கீழிறக்கவும் தோன்றாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான்.

 

“எனக்கு என்ன பண்ணுறதுன்னே தெரியலைங்க! என் பிள்ளைங்க வாழ்க்கை இப்படியே கேள்விக்குறி ஆகிடுமோன்னு தினமும் எனக்கு கவலையாக இருக்குதுங்க! நாம யாருக்கு என்ன பாவம் பண்ணோம்னே தெரியலை நம்ம குடும்பத்துக்கு இவ்வளவு பெரிய பிரச்சினை அதிலும் அர்ஜுன்! அவன் ரொம்ப பாவம்ங்க! சின்ன வயதில் அம்மாவை இழந்து, வளரும் வயதில் அப்பாவை இழந்து, இப்போ இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகிட்டான்! அவனை நினைத்து நினைத்து வருணும் அப்படியே இருக்கான்! வெளியில் எங்கே போய் ஒரு பொண்ணை பார்த்தாலும் இந்த பொண்ணு நம்ம அர்ஜுனுக்கு பொருத்தமாக இருப்பாளோ? இந்த பொண்ணு நம்ம வருணுக்கு பொருத்தமாக இருப்பாளோ? என்று தான் யோசிக்க தோணுதுங்க இன்னைக்கு கூட கோவிலில் இரண்டு பொண்ணுங்களைப் பார்த்தேன்! அக்காவும், தங்கையும் மகாலட்சுமி மாதிரி அவ்வளவு அம்சமாக இருந்தாங்க எனக்கு அந்த இரண்டு பொண்ணுங்களையும் பார்த்த உடனே ரொம்ப பிடித்து போச்சுங்க!” உற்சாகமாக ஒலித்த சாவித்திரியின் குரல் 

 

“ஆனா நம்ம வீட்டுக்கு மருமகளாக வரத்தான் யாருக்கும் கொடுத்து வைக்கலையே!” சிறிது சிறிதாக தன் உற்சாகத்தை தொலைத்து வருத்தத்துடன் ஒலிக்க அவரது குரலைக் கேட்டு வருணின்  கையில் இருந்த காகிதம் கீழே நழுவி விழுந்தது.

 

‘தன்னால் அம்மாவின் மனதிற்குள் இவ்வளவு கஷ்டமா?’ தன் அன்னையை எண்ணி அவனது ஒரு புற மனது கண்ணீர் வடிக்க மறுபுற மனதோ அர்ஜுனின் நிலையை எண்ணி அவனைத் தயக்கம் கொள்ளச் செய்தது.

 

இரண்டு கண்களில் எந்த கண் வேண்டும் என்று கேட்டால் அவனால் என்ன தான் சொல்ல முடியும்? 

 

ஒரு கண்ணை இழந்துவிட்டு ஒரு கண்ணோடு இருக்க முடியுமா?

 

சாவித்திரியின் சந்தோஷத்திற்காக திருமணத்திற்கு ஒப்புக் கொண்டு திருமணம் செய்து நாளை தனக்கு வரப்போகும் மனைவி அர்ஜுனின் நிலையை புரிந்து கொள்ளாமல் அவனை ஏதாவது பேசிவிட்டால் அதை ஒரு நாளும் வருணால் தாங்கிக் கொள்ள முடியாது.

 

மனதிற்குள் ஆயிரம் குழப்பங்கள் சேர்ந்து கொள்ள சிறிது நேரத்திற்கு முன்பிருந்த உற்சாகம் முழுவதுமாக மறைந்து போக ஒரு வித தடுமாற்றத்துடன் படியேறி தன் அறைக்குள் வந்து சேர்ந்தவன் குழந்தை போல தலையணையை அணைத்துக் கொண்டு தூங்கும் தன் நண்பனின் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தவாறே கண் மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

 

மூடிய அவன் விழிகளுக்குள் ஏழு வருடங்களுக்கு முன் தன் கண் முன்னால் நடந்த அந்த விபத்தும் அதன் பின்னரான சம்பவங்களும் மாறி மாறி நினைவாக வரவே தலையை உலுக்கி அந்த நினைவுகளில் இருந்து தன்னை வெளியே கொண்டு வந்தவன்

‘தேவையற்ற எண்ணங்கள் வேண்டாம் வருண்! நாளை அர்ஜுனை டாக்டரிடம் அழைத்து செல்ல வேண்டும் அதை மட்டும் மனதில் வைத்துக் கொள்!’ என தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டு தூங்கி விட மறுபுறம் சாவித்திரி மாத்திரம் உறக்கம் வராமல் தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.

 

தூக்கத்தில் மெல்ல மறுபுறம் திரும்பி படுத்த ராமநாதன் தன்னருகில் சாவித்திரியை காணாமல் பதட்டத்துடன் எழும்பி சுற்றிலும் திரும்பி பார்க்க அங்கே அவருக்கு முன்னால் அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக அவர் நடந்து கொண்டிருக்க சிறு புன்னகையுடன் அவர் முன்னால் வந்து நின்றவர்

“இப்படி ராத்திரி நேரத்தில் தூங்காமல் ஏன் சாவித்திரி உன் உடம்பை கெடுத்துக்குற? நான் தான் சொன்னேன் இல்லையா அந்த பொண்ணுங்களைப் பற்றி விசாரித்து சொல்லுறேன்னு!” என்று கூறவும்

 

அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவர்

“எனக்கு அந்த யோசனை இல்லைங்க! நம்ம வருணைப் பற்றி தான் யோசனையாக இருக்கு அவன் இதற்கு சம்மதிப்பானா?” தயக்கத்துடன் தன் கணவரைப் பார்த்து வினவினார்.

 

“நீ ஏன் அவ்வளவு தூரத்திற்கு யோசிக்குற சாவித்திரி? முதலில் நம்ம குடும்ப நிலவரத்தை சொல்லி அவங்க கிட்ட பேசுவோம் அதற்கு அப்புறம் எல்லாம் சரியாக வந்தால் வருணைப் பேசி சம்மதிக்க வைப்போம் நீ தேவையில்லாமல் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாமல் வந்து தூங்கு வா!” சாவித்திரியை தன் தோளோடு சேர்த்து அணைத்தவாறே அழைத்துச் சென்ற ராமநாதன் அவரை தூங்க செய்து விட்டு சிறிது நேரம் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

 

மனதிற்குள் பல ஆசைகளை சுமந்திருக்கும் மனைவி ஒரு புறம்!

 

எதற்குமே பிடி கொடுக்காமல் நழுவிச் செல்லும் மகன் ஒரு புறம்! 

 

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை சரியாக உணர்ந்து கொள்ள முடியாத வளர்ந்த குழந்தை போல இன்னொரு மகன்! 

 

இவர்கள் எல்லோரது பிரச்சினைகளுக்கும் தீர்வாக யார் வரக்கூடும் என்ற யோசனையோடே ராமநாதனின் இரவு கழிந்து சென்றது.

 

அடுத்த நாள் காலை வருண் வழக்கம் போல தன்னோடு சேர்த்து அர்ஜுனையும் தயார் படுத்தி அழைத்து வந்து காலையுணவையும் முடித்து விட்டு நேற்று இரவு அர்ஜுன் நடந்து கொண்ட விதத்தைப் பற்றியும் அதற்காக வைத்தியரைச் சென்று பார்க்க வேண்டும் என்பதையும் தகவல்களாக ராமநாதனிடம் கூறி விட்டு அங்கிருந்து சென்றுவிட சாவித்திரியோ அவனை விசித்திரமாக பார்த்துக் கொண்டு நின்றார்.

 

“என்னங்க ஆச்சு இவனுக்கு? ஏதோ கொஞ்சம் லேட் ஆனாலும் பஸ்ஸை தவறவிட்டு விடுவேன் என்கிற மாதிரி இப்படி அவசரமாக ஓடுறான்?” சாவித்திரி குழப்பமாக தன் கணவரைப் பார்த்து வினவ

 

“அது தான் எனக்கும் புரியல! வழக்கமாக அர்ஜுன் கிட்ட ஒரு சின்ன மாற்றம் வந்தாலும் பெரிதாக சந்தோஷப்பட்டு எவ்வளவு சிரித்த முகத்துடன் நம்ம  முன்னாடி வந்து நிற்பான்? இப்போ ரொம்ப வித்தியாசமாக நடந்துக்கிறான் என்ன நடக்குது என்றே தெரியல! சரி சாவித்திரி நான் ஆபிஸ் கிளம்புறேன் வருண் இங்கே வந்தால் ஆபிஸுக்கு வரச்சொல்லு கூடவே அர்ஜுனையும் கூட்டிட்டு வரச்சொல்லு! எனக்கு தெரிந்த ஒரு டாக்டர் இன்னைக்கு ஆபிஸுக்கு வர்றேன்னு சொல்லி இருக்காரு!” என்று விட்டு ராமநாதன் கிளம்பி சென்று விட அவரும் தனது மீதி வேலைகளை கவனிக்க தொடங்கினார்.

 

மறுபுறம் காரில் சென்று கொண்டிருந்த வருணின் மனமோ படபடவென்று அடித்துக் கொண்டே இருந்தது.

 

இதற்கு முன் ஒரு நாளும் இப்படி அவன் தன் அன்னை தந்தை முன்னால் அவசரமாக பேசி விட்டு நிற்காமல் சென்றதில்லை ஆனால் இன்று ஏனோ அவர்கள் முன்னால் நின்று பேச அவனுக்கு தயக்கமாக இருந்தது.

 

தனக்காக இவ்வளவு தூரம் யோசித்து, பார்த்து பார்த்து எல்லாம் செய்து தரும் தன் பெற்றோருக்கு உண்மையான சந்தோஷம் எதையுமே தான் கொடுக்கவில்லையோ என்ற ஒரு குற்றவுணர்வு மாத்திரம் அவன் மனதிற்குள் விடாமல் அரித்துக் கொண்டே இருந்தது.

 

ஹாஸ்பிடல் முன்னால் தன் காரை நிறுத்தி விட்டு அர்ஜுனை வெளியில் வரும் படி வருண் அழைக்க எதுவும் பேசாமல் இறங்கி கொண்டவன் அந்த ஹாஸ்பிடல் கட்டடத்தைப் பார்த்து சிறு மிரட்சியுடன் அவன் பின்னால் சென்று ஒட்டிக் கொண்டு நின்றான்.

 

“ஹேய்! அர்ஜுன் ரிலாக்ஸ்! எதற்குடா பயப்படுற? இது நம்ம டாக்டர் அங்கிளை பார்க்க வர்ற ஹாஸ்பிடல் தான் வாடா!” அவனின் கையைப் பிடித்துக்கொண்டு வருண் முன்னேறி செல்லப் போக

 

அவனது கையை விடாமல் பிடித்துக் கொண்டவன்

“வருண் வீட்டுக்கு கூட்டிட்டு போடா! எனக்கு ஹாஸ்பிடல் வேணாம்! வேணாம்!” அந்த இடத்தை விட்டு நகரமாட்டேன் என்பது போல பிடிவாதமாக தான் சொன்னதையே மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு நின்றான்.

 

“ஏன்டா அர்ஜுன் இப்படி பண்ணுற? நாம உள்ளே போய் டாக்டர் அங்கிளை பார்த்துட்டு ஹாய் மட்டும் சொல்லிட்டு வரலாம் வாடா!” 

 

“இல்லை நான் வரமாட்டேன் நீ ஊசி போடச் சொல்லுவ! அந்த டாக்டர் என் தலையில் எல்லாம் ஊசி போடுவாரு நான் வரமாட்டேன்” 

 

“ஓஹ்! இது தான் பிரச்சினையா? இங்கே பாரு அர்ஜுன் நான் டாக்டர் கையை கட்டிப் போட சொல்லிட்டேன் அவர் ஊசி போட மாட்டாரு! பிராமிஸ்! போதுமா?” 

 

“நிஜமா?”

 

“நிஜமா தான் டா!” அர்ஜுனின் கையின் மேல் வருண் தன் கையை வைத்து கூற அவனைப் பார்த்து சிறிது சிரித்துக் கொண்டவன் அவனது கைகளை விடாமலேயே பிடித்து கொண்டு ஹாஸ்பிடலை நோக்கி நடந்து சென்றான்.

 

இவர்களது இந்த பேச்சு பரிமாற்றத்தை அங்கே பார்க்கிங்கில் நின்று கொண்டிருந்த ஹரிணிப்பிரியா விசித்திரமாக பார்த்துக் கொண்டிருக்க ஹாஸ்பிடலில் இருந்து வெளியேறி வந்த அவளது நண்பிகள் கீதா மற்றும் நித்யா

“ஹேய் பிரியா! அங்கே என்ன பார்வை?” அவளது தோளில் தட்டியபடியே கேட்க 

 

சிறு புன்னகையுடன் அவர்களைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள்

‘நைஸ் ஜென்டில்மேன்!’ தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டு தன் நண்பிகளுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றாள்.

 

கீதாவுக்கு அவள் தங்கியிருக்கும் ஹாஸ்டல் கேன்டீன் சாப்பாடு ஒத்துக் கொள்ளாமல் வாந்தியும், தலைசுற்றலுமாக இருக்க ஹரிணி வேறு வழியின்றி கட்டாயம் சென்றே ஆகவேண்டும் என்ற நிலைமையால் தன் வீட்டில் சொல்லாமலேயே அவளை அழைத்து கொண்டு இந்த ஹாஸ்பிடல் வந்திருந்தாள். 

 

கீதாவுக்கு தேவையான மருந்துகளை எல்லாம் எடுத்து விட்டு திரும்பி செல்வதற்காக ஆட்டோ ஒன்றை அழைப்பதற்காக வந்தவள் தான் வருண் மற்றும் அர்ஜுனைப் பார்த்து தன்னை மறந்து நின்றாள்.

 

அர்ஜுனைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு சலனம் அவளுக்குள் உருவானாலும் அந்த சலனத்தின் உண்மை நிலை அவளுக்கு புரியவில்லை.

 

அங்கே அந்த இடத்தில் அர்ஜுனைப் பார்த்ததுமே

‘இவர் அன்று பஸ் ஸ்டாண்டிற்கு வந்தவராயிற்றே!’ என்ற யோசனையுடன் அவனைப் பார்த்து கொண்டு நின்றவள் அதன் பின்னர் அவனது நடவடிக்கைகளையும், அவனருகில் நின்று கொண்டிருந்த வருணின் பேச்சையும் கவனித்த பின்னரே அவனது உடல்நிலையைப் பற்றி மேலும் சிறிது புரிந்து கொண்டாள்.

 

அந்த விடயத்தை அவளால் அன்றும், அந்த கணம் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தாலும் அது தான் நிதர்சனம் என்று நினைத்து கொண்டு அந்த இருவரையும் தன் வாழ்வில் மீண்டும் வெகு விரைவில் சந்திக்க கூடும் என்பதைப் பற்றி அறியாமலேயே தன் நண்பிகளுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட மறுபுறம் ஹாஸ்பிடலின் உள்ளே அர்ஜுனை வெகு சிரமப்பட்டு சில டெஸ்ட்களை எடுக்க வைத்த வருண் டாக்டரை சந்திக்கும் நேரத்திற்காக காத்து நின்றான்.

 

வழக்கத்திற்கு மாறான பல நடவடிக்கைகள் அர்ஜுனினால் செய்யப்பட்டுக் கொண்டிருக்க இது நல்ல மாற்றமா? இல்லை இன்னும் அவன் நிலையை கவலைக்கிடமாக மாற்றப் போகும் மாற்றமா? என்று தெரியாமல் வருண் கவலையோடு அமர்ந்திருக்க அவனுக்காக காத்திருக்கும் பதில் அவன் கவலையை சரி செய்யுமா? காலம் தான் பதில் சொல்லும்……..