நினைவு – 08

அர்ஜுன் திடீரென மயங்கி விழுந்ததைப் பார்த்து பதட்டம் கொண்ட வருண் 

“அர்ஜுன்! அர்ஜுன்! என்னைப் பாருடா!” அவனது கன்னத்தில் தட்டி எழுப்ப அவனோ பேச்சு மூச்சின்றி மயங்கி போய் கிடந்தான்.

 

பதட்டத்துடன் சுற்றிலும் அவன் தன் பார்வையை சுழல விட அதற்குள் அந்த இடத்தை சுற்றி ஆட்களும் குவிந்து விட அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை அவசரமாக நிறுத்தியவன் அர்ஜுனை தன் தோளில் தூக்கி போட்டு கொண்டு வேகமாக ஹாஸ்பிடலை நோக்கி விரைந்து சென்றான்.

 

தன் கவனயீனத்தால் தான் அர்ஜுனுக்கு இப்படி ஆகிவிட்டதோ என்று அவன் மனம் அவனை வருந்தச் செய்ய எல்லாம் தன்னால் தானே என்ற குற்றவுணர்வோடு வருண் அர்ஜுனுக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்த இடத்தின் முன்னால் சோர்வோடு நின்று கொண்டிருக்க சிறிது நேரத்திற்கு பின் அர்ஜுனுக்கு சிகிச்சைகளை முடித்து விட்டு வெளியே வந்த டாக்டர் இளங்கோ

“டோன்ட் வொர்ரி மிஸ்டர் வருண்! கொஞ்ச நாளாக அவர் சரியாக சாப்பிடலை போல இருக்கு அது தான் பி.பி லோ ஆகி மயக்கம் போட்டு விழுந்துட்டாரு குளுக்கோஸ் ஒரு பாட்டில் ஏறப் போட்டு இருக்கோம் அது முடிந்ததும் நீங்க அவரை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம் அவரோட உடல்நிலை தெரிந்தும் இனி நீங்க இப்படி இருக்க கூடாது பார்த்து நடந்து கொள்ளுங்க!” அவனது தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்த படி கூறி விட்டு சென்று விட அதன்பிறகு தான் அவனுக்கு நிம்மதியாக மூச்சே வெளிவந்தது.

 

“தாங்க் காட்!” கண்களை மூடி மனதார கடவுளுக்கு நன்றி செலுத்தி கொண்டவன் வாடிப் போய் கையில் டிரிப்ஸ் ஏற மயக்கத்தில் இருந்த தன் நண்பனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.

 

‘கல்யாணப் பேச்சு எடுத்ததற்கே நான் அர்ஜுனை விட்டு தூரம் விலகிப் போன மாதிரி இருக்கு இதில் நான் கல்யாணம் பண்ணி கொண்டால் நான் நிஜமாகவே அவனை விட்டு தூரம் போய் விடுவேனோ?’ மறுபடியும் அவன் மனதிற்குள் இந்த திருமணம் சரி தானா என்ற கேள்வி எழ தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு அப்போது தான் தாங்கள் இருவரும் ஹாஸ்பிடலில் இருக்கும் விடயத்தை இன்னும் வீட்டில் இருக்கும் தன் பெற்றோரிடம் சொல்லவில்லை என்பது நினைவுக்கு வந்தது.

 

உடனே தன் தொலைபேசியை எடுத்த வருண் ராமநாதனிடம் அர்ஜுன் மயங்கி விட்ட செய்தியையும், இப்போது அவர்கள் ஹாஸ்பிடலில் இருக்கிறார்கள் என்பதையும் கூறியவன் தன் அம்மாவிடம் முழுமையாக இந்த செய்தியை சொல்லாமல் அவரை அழைத்து வரும் படி கூறி விட்டு மனம் முழுவதும் கலங்கிப் போனவனாக அந்த இருக்கையிலேயே சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

 

சாவித்திரியிடம் நடந்த விடயங்களை எல்லாம் முழுமையாக கூறினால் அவர் பதட்டம் அடைவது மட்டுமின்றி அதைப்பற்றியே யோசித்து கொண்டு அவரது உடல் நிலைக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என்று தான் தற்காலிகமாக இந்த விடயத்தை பற்றி கூற வேண்டாம் என்று ராமநாதனிடம் வருண் தெரிவித்திருந்தான்.

 

அப்படி இருந்தும் ஹாஸ்பிடல் வந்து சேர்வதற்குள் சாவித்திரிக்கு பாதி உயிர் போய் விட்டது என்று தான் கூற வேண்டும்.

 

அர்ஜுனைப் பார்த்ததுமே கண்கள் கலங்க அவனருகில் வந்து அமர்ந்து கொண்டவர் அவன் கண் விழிக்கும் வரை அவனது தலையை வருடிக் கொடுத்தபடியே அமர்ந்திருக்க அதற்குள் வருணும், ராமநாதனும் பில் பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து செல்வதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டு வந்திருந்தனர்.

 

மருந்துகளின் பலனால் மெல்ல மெல்ல தன் மயக்கத்தில் இருந்து எழுந்து கொண்ட அர்ஜுன் தன் அருகில் இருந்த சாவித்திரியைப் பார்த்ததும் 

“சாவித்திரிம்மா! பிரியா எங்கே?” சிறு புன்னகையுடன் அவரைப் பார்த்து வினவ அவருக்கோ அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் போனது.

 

அந்த பெண் யார்? எப்படி இருப்பாள்? இப்போது அவள் உயிரோடு இருக்கிறாளா? இல்லையா? எதுவுமே தெரியாது அப்படி இருக்கையில் அந்த பெண்ணிற்காக தினமும் அர்ஜுன் இப்படி வருந்திக் கொள்வதை ஒரு தாயாக அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

 

இன்னும் சொல்லப்போனால் அந்த பெண்ணால் தானே இவ்வளவு கஷ்டங்களும் என்று கூட அவர் சில சமயங்களில் யோசிப்பதுமுண்டு.

 

ராமநாதன் கூட அந்த பெண்ணைப் பற்றி தன் முன்னிலையில் பேச வேண்டாம் என்று வருணிடமும், சாவித்திரியிடமும் அடிக்கடி சொல்லுவார் தாங்கள் பெறாவிட்டாலும் தங்கள் மகனைப் போல வளர்ந்து வந்த அர்ஜுன் இந்த நிலைமைக்கு ஆளாக அந்த பெண்ணும் ஒரு வகையில் காரணமாகி விட்டாளே என்பது தான் அவர்கள் எண்ணம்.

 

அவர்களுக்கு தெரிந்த வரை பிரியா என்ற ஒரு பெண்ணை அர்ஜுன் காதலித்தான் அவளிடம் தன் காதலை சொல்ல சென்ற வேலையில் அந்த பெண்ணுக்கு விபத்து நடந்துவிட அதைப் பார்த்து அர்ஜுன் சித்த பிரமை பிடித்தாற் போல ஆகிவிட்டான் என்று மட்டுமே தெரியும்.

 

அந்த காதலின் பின்னணியில் என்ன நடந்தது என்பதும் அர்ஜுன் அவன் மனதிற்குள் எந்த இடத்தில் அந்த பெண்ணை வைத்திருந்தான் என்பதும் அர்ஜுனுக்கும், அவனோடு உடனிருந்த வருணிற்கும் மாத்திரமே தெரியும்.

 

முகம் தெரியாத ஒரு பெண்ணை சாவித்திரி மற்றும் ராமநாதனின் மனம் அவர்களை அறியாமலேயே வெறுக்கத் தொடங்கி இருக்க அந்த பெண் தான் இன்னும் சில நாட்களுக்கு பின்னர் தன் வீட்டுக்கு மருமகளாக வரப்போகிறாள் என்பதை நாளடைவில் அவர்கள் அறிந்து கொண்டால் அவர்களின் நிலை என்னவாகுமோ? 

 

ஒவ்வொருவரும் பல்வேறு விதமான யோசனைகளுடன்‌ தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்க அவர்களது சிந்தனைகளின் காரணகர்த்தாவான அர்ஜுன் மாத்திரம் எந்தவித குழப்பமோ, யோசனையும் இல்லாமல் எப்போதும் போல சந்தோஷமாகவே அந்த வீட்டை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தான்.

 

நாட்கள் மெல்ல மெல்ல தன் பாட்டில் நகர்ந்து செல்ல அந்த வார இறுதி ஞாயிற்றுக்கிழமை பல்வேறு அதிர்ச்சிகளையும், ஆனந்தங்களையும் சுமந்து கொண்டு எல்லோரையும் சந்திக்க வரவே அன்றைய நாள் சிறப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தோடு வருண் ஹரிணியை சந்திக்க செல்வதற்காக தயாராகி கொண்டு நின்றான்.

 

மறுபுறம் ஹரிணி தன் உடைகள் எல்லாவற்றையும் கட்டிலில் பரவி வைத்து விட்டு அதற்கு நடுவில் அமர்ந்திருக்க விஷ்ணுப்பிரியா ஒவ்வொரு ஆடையாக அவள் மீது வைப்பதும் பின்னர் அது நன்றாக இல்லை என்று விட்டு கீழே தூக்கி போடுவதுமாக நின்று கொண்டிருந்தாள்.

 

“என்ன ஹரிணி நீ இன்னும் ரெடி ஆகலயா?” என்றவாறே அந்த அறைக்குள் நுழைந்த ஜெயலஷ்மி அந்த அறை இருந்த கோலத்தைப் பார்த்து விட்டு

 

“அய்யய்யோ! இரண்டு பேரும் சேர்ந்து ரூமை என்ன பண்ணி வைத்துருக்கீங்க?” கோபமாக தன் இடுப்பில் கை வைத்து முறைத்து கொண்டு கேட்க 

 

அவரைப் பார்த்து சமாளிப்பது போல சிரித்துக் கொண்டே அவரருகில் வந்து நின்ற ஹரிணி

“நான் எதுவுமே பண்ணலம்மா! எல்லாம் இந்த பிரியா பண்ண வேலை தான்!” என்று கூற அவரது கோபப்பார்வை இப்போது விஷ்ணுப்பிரியாவின் புறம் திரும்பியது.

 

‘அடிப்பாவி! அவரைப் பார்க்க போக நல்ல டிரெஸ்ஸாக எனக்கு செலக்ட் பண்ணி கொடுன்னு கேட்டுட்டு இப்போ அம்மாவைப் பார்த்ததும் பிளேட்டை மாற்றிப் போடுறியா? அப்பாவி மாதிரி முகத்தை வைத்துட்டு பண்ணுறது எல்லாம் அடப்பாவி வேலை! இரு இரு உன்னை கவனிக்கிறேன்’ மனதிற்குள் தன் அக்காவை வறுத்தெடுத்துக் கொண்டவள் 

 

தன் அன்னையின் கோபப்பார்வையை எப்படி சமாளிப்பது என்று யோசித்து விட்டு

“அது வந்து ம்மா முதன் முதலாக நம்ம வீட்டுக்கு வரப்போகும் மாப்பிள்ளையை சந்திக்க போறதுக்கு நல்லபடியாக தானே ரெடி ஆகிப் போகணும் அது தான் டிரெஸ் செலக்ட் பண்ணிட்டு இருந்தோம் அவ்வளவு தான்! நீங்க போங்கம்மா ஐந்தே நிமிஷம் டான்னு ரெடி ஆகிட்டு வர்றோம்!” அவரது தாடையைப் பிடித்து கெஞ்சி, கொஞ்சி பேசி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தவள் ஹரிணியின் புறம் திரும்பி சிறு சண்டையோடும், கேலிப் பேச்சுக்களோடும் பேசியபடியே அவளைத் தயார் படுத்த தொடங்கினாள்.

 

வால்நட் நிறத்தில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறம் கலந்த காட்டன் சுடிதாரில் மிதமான ஒப்பனையோடு வசீகரிக்கும் அழகோடு நின்று கொண்டிருந்த ஹரிணியின் கன்னத்தில் இதழ் பதித்த விஷ்ணுப்பிரியா

“இன்னைக்கு மாப்பிள்ளை உன்னைப் பார்த்து அப்படியே ஜெர்க் ஆகி நிற்கப் போறாரு!” அவள் கூறிய வார்த்தைகள் அவளுக்கே இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப் போகிறது என்பதை அறியாமல் தன்னருகில் நின்று கொண்டிருந்த தன் அக்காவை பார்த்து கண்ணடித்தபடியே கூறவும் அதைக் கேட்டு அவளது கன்னங்கள் இரண்டும் செக்கச் செவேலென சிவந்து போனது.

 

ஹரிணியுடன் துணைக்கு கிருஷ்ணாவும், விஷ்ணுப்பிரியாவும் செல்வதாக ஏற்கனவே முடிவெடுத்து இருக்க அவர்கள் மூவரும் வெகு சந்தோஷமாக சிரித்துப் பேசிக் கொண்டே தங்கள் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

 

எல்லாம் நல்லதே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தன் பிள்ளைகளை பார்த்து கொண்டிருந்த ஜெயலஷ்மி அவர்கள் மூவரும் அந்த சாலையோரத்தில் இருந்து மறையும் வரை அவர்களையே பார்த்து கொண்டு நிற்க மறுபுறம் வருண் ஒரு வித தடுமாற்றத்துடனும், படபடப்புடனும் தயாராகி கொண்டிருந்தான்.

 

ஏற்கனவே தயாராகி அவனருகில் நின்று கொண்டிருந்த அர்ஜுன் தன் கையிலிருந்த காரின் சாவியை வைத்து கொண்டு தனக்குள் பேசிய படி விளையாடிக் கொண்டிருக்க தன் முன்னால் இருந்த ஆளுயுரக் கண்ணாடி வழியாக அவனைப் பார்த்து கொண்டிருந்த வருண்

‘அர்ஜுனைப் பற்றி அவங்களுக்கு ஏதாவது தெரிந்து இருந்தால் அதை நான் உடனேயே தெரிந்து கொள்ள வேண்டும்! இந்த சந்திப்பே அர்ஜுனைப் பற்றி பேசத் தான்! என் சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்த பிறகு அவங்களுக்கு சம்மதம்னா இந்த கல்யாணத்தை பற்றி பேசலாம் அது வரைக்கும் கன்ட்ரோலா இருக்கணும் வருண்!’ மனதிற்குள் தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டவாறே நீண்ட பெருமூச்சுடன் அர்ஜுனை அழைத்து கொண்டு அடையாரில் உள்ள காஃபி கிங் ரெஸ்டாரண்டை நோக்கி புறப்பட்டான்.

 

வேறுபட்ட மனநிலைகளுடன் வருணும், ஹரிணியும் தங்கள் சந்திப்பை எண்ணி ஆவலோடு காத்துக் கொண்டிருக்க அவர்கள் யாரும் எதிர்பாராத ஒரு பாரிய அளவிலான அதிர்ச்சியை சத்தமே இன்றி அவர்களுக்கு இறக்கி வைக்க அந்த கடவுள் காத்துக் கொண்டிருந்தார்.

 

ஹரிணி சொன்ன அந்த ரெஸ்டாரன்டின் பார்க்கிங்கில் தங்கள் காரை நிறுத்திய வருண் அர்ஜுனின் கையைப் பிடித்து கொண்டு ரெஸ்டாரன்டின் உள்ளே சென்று ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ள சரியாக அந்த நேரம் கிருஷ்ணா, விஷ்ணுப்பிரியா மற்றும் ஹரிணிப்பிரியா அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

 

வெளிப்புறமாக கண்ணாடியால் சூழப்பட்டு உட்புறமாக ஒவ்வொரு மேஜைகளும் தனித்தனியாக சிறு தோட்டம் போன்ற ஒரு மர அமைப்பின் கீழ் அமைக்கப்பட்டிருக்க அந்த ரெஸ்டாரன்ட் பார்ப்பதற்கு சிறு பூங்கா போன்று காணப்பட்டது.

 

மரத்தை வைத்து செதுக்கினாற் போல இருந்த ஆசனங்களை சூழ செயற்கையாக உருவாக்கப்பட்ட வெண்ணிறமும், ஊதா நிறமும் கலந்த பூக்களை கொண்ட கொடிகள் பரவவிடப்பட்டிருக்க அந்த இடத்தில் அமர்ந்திருப்பது எப்படியான மனநிலையை உடையவர்களுக்கும் சாந்தமான மனநிலையை அளிப்பது போல் தான் இருக்கும். 

 

ஹரிணியின் வீட்டில் இருந்து இந்த ரெஸ்டாரன்ட் நடந்து வந்து செல்லும் தொலைவில் இருந்ததால் மெல்ல மெல்ல பேசிக் கொண்டே அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தவள் உள்ளே அவளது வருகைக்காக காத்திருந்த வருணைப் பார்த்ததும் புன்னகையுடன் முன்னேறி செல்லப் போக அவசரமாக அவளது கையை பிடித்து அவளைப் போக விடாமல் தடுத்து பிடித்த விஷ்ணுப்பிரியா

“எங்க போற?” கேள்வியாக அவளை நோக்க

 

“என்னடி லூசு மாதிரி கேள்வி கேட்குற? அவரைத் தானே பார்க்க வந்தோம் அது தான் உள்ளே போகப் போறேன்” என்று கூற 

 

அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவள்

“கொஞ்சம் வெயிட் பண்ணட்டும் விடு! எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்க போறவரு எவ்வளவு பொறுமையாக இருப்பாருன்னு ஒரு டெஸ்ட் வைத்து பார்ப்போமே! அதோடு இப்படி உடனே போய் பேசுவதில் என்ன கிக் இருக்கும் சொல்லு?” என்று கேட்க அவளோ உள்ளே அமர்ந்திருந்தவனை தவிப்போடு பார்த்துக் கொண்டு நின்றாள்.

 

“என்ன பீலிங்ஸ்சா?” விஷ்ணுப்பிரியாவின் கேள்வியில் அவளை பார்த்து முறைத்தவள் தன் முகத்தை வேறு புறம் திரும்பி கொள்ள 

 

அவளைப் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்ட அவளது தங்கை கிருஷ்ணாவின் தோளில் தட்டி

“கிருஷ்! முதல்ல நீ போ!” என்று கூறவும்

 

“உத்தரவு மகாராணி!” தன் இடை வரை குனிந்து அவளுக்கு வணக்கம் சொன்னவன் இயல்பாக விசிலடித்தபடியே வருணின் முன்னால் சென்று அமர்ந்து கொண்டான்.

 

திடீரென்று ஒரு நபர் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் வந்து அமர்ந்து கொள்ள அவனை குழப்பமாக பார்த்த வருண்

“எக்ஸ்கியூஸ் மீ சார்! இது நாங்க ரிசர்வ் பண்ணி இருக்கும் டேபிள் நீங்க வேறு டேபிள் பார்த்து இருக்க முடியுமா?” என்று கேட்கவும்

 

“என்ன மாமா என்னை அடையாளம் தெரியலையா?” அவனது கேள்வியில் சிறிது நேரம் யோசித்து பார்த்தவன் மறுப்பாக தன் தலையை அசைத்தான்.

 

“அப்பா உங்க கிட்ட சொல்லலயா? நான் கிருஷ்ணா ஹரிணியோட தம்பி! இன்னைக்கு அக்கா கூட நாங்களும் வர்றோம்னு நைட் அப்பா சொன்னதாக சொன்னாங்களே!”

 

“ஓஹ் யாஹ்! சாரி சாரி! கொஞ்சம் வர்க் டென்ஷன் அது தான் மறந்துட்டேன் ரியலி சாரி” என்றவனது பார்வையோ அவனது முதுகை தாண்டி பின்னால் வலம் வர ஆரம்பித்தது.

 

“என்ன மாமா தேடுறீங்க?”

 

“இல்லை அவங்க வந்து.. அது… உங்க அக்கா வரலயா?” வருண் தயங்கி தயங்கி கேட்ட கேள்வியில் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்ட கிருஷ்ணா

 

“அது என்ன மாமா? அவங்க, உங்க அக்கான்னு கேட்டுட்டு! ஹரிணின்னு பெயரை சொல்லி கேட்கலாம் தானே?” எனவும் அவனோ சிறிது தயக்கத்துடன் தன் தலையை கோதி விட்டுக் கொண்டான்.

 

அவனது தயக்கத்தையும், படபடப்பையும் பார்த்த கிருஷ்ணா இதற்கு மேல் விளையாட வேண்டாம் என்ற எண்ணத்தோடு தன் கையில் இருந்த தொலைபேசியில் 

‘மாமா பாவம் அக்காவை வரச்சொல்லு’ என்ற குறுஞ்செய்தியை விஷ்ணுப்பிரியாவிற்கு அனுப்பி வைக்க 

 

அதைப் படித்து விட்டு புன்னகைத்துக் கொண்டவள் 

“ஹரிணி தேவியாரே! தாங்கள் இப்போது உங்கள் ராஜாவை காண செல்லலாம்” ஹரிணியை உள்ளே போகும் படி பவ்யமாக நடித்துக் காட்டி அனுப்பி வைத்தாள்.

 

“வாலு நீயும் வா!” அவளது தோளில் தட்டி விட்டு ஹரிணி முன்னே சென்று விட தன் தொலைபேசியை பார்த்து கொண்டே விஷ்ணுப்பிரியா அவளை பின் தொடர்ந்து சென்றாள்.

 

ஹரிணி தங்களை நோக்கி வருவதைப் பார்த்ததுமே அர்ஜுன் துள்ளிக்குதித்து கொண்டு அவளை நோக்கி ஓடிச் சென்று

“பிரியா வந்துட்டா!” என்று அவளது கையை பிடித்து கொண்டு அவளை இழுத்துக் கொண்டு வர 

 

அவனது செய்கையில் சிறிது அதிர்ச்சியான வருண் அவசரமாக அவனது கையில் இருந்த ஹரிணியின் கையை விலக்கி விட்டு

“ஐ யம் ஸாரி! அர்ஜுனுக்கு! ஆல்ரெடி உங்களுக்கு தெரியும் தானே?” என்று கேட்க 

 

அவனைப் பார்த்து சிறு புன்னகை சிந்தியவள்

“இட்ஸ் ஓகேங்க! நான் தப்பாக எதுவும் நினைக்கல” என்று விட்டு அவன் முன்னால் அமர்ந்து கொண்டாள்.

 

“வருண் பிரியா வந்து இருக்கா! அவளுக்கு சாக்லேட் ஐஸ்கிரீம் சொல்லுடா! சொல்லுடா!” அர்ஜுன் பிடிவாதமாக வருணின் கையை இழுத்து அவனைத் தன்னோடு வரும்படி வம்பு செய்ய

 

“அர்ஜுன் கண்ணா! ப்ளீஸ் இப்படி உட்காரு அவங்களுக்கு ஐஸ்கிரீம் சொல்லிட்டேன் இப்படி உட்காரு!” அவன் தன்னால் முடிந்த மட்டும் அவனை சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.

 

‘இவங்களுக்கு எப்படி எனக்கு பிடித்த பிளேவர் தெரியும்?’ குழப்பமாக தன் முன்னால் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்தவள் 

 

‘ஏதோ பொதுவாக சொல்லி இருப்பாங்க போல’ தனக்குள்ளேயே சமாதானம் சொல்லிக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்க்க 

 

அவனோ அதை எதையும் கேட்காமல் பிடிவாதமாக இருக்க

“அர்ஜுன் ப்ளீஸ் இப்படி உட்காருங்க அது தான் அவங்க ஐஸ்கிரீம் சொல்லிட்டாங்க இல்லையா?” ஹரிணி அவனை பார்த்து புன்னகையுடன் வினவவும் அவனோ அவளது வார்த்தைக்கு கட்டுப்பட்டது போல உடனே அமைதியாக அமர்ந்து கொண்டான்.

 

அவனது அந்த அமைதியை பார்த்து சற்று வியந்து போன வருண்

‘நிச்சயமாக அர்ஜுன் வாழ்க்கையில் இந்த பொண்ணுக்கு ஏதோ சம்பந்தம் இருக்கு அதைப்பற்றி கேட்டே ஆகணும்!’ என்ற எண்ணத்தோடு அவளை நிமிர்ந்து பார்க்க 

 

அவளின் பின்னால்

“ஹாய் கைஸ்! ஐ யம் ஸாரி! ஒரு கால் வந்துச்சு அது தான் லேட் ஆகிடுச்சு! பை த வே ஐ யம் விஷ்ணுப்பிரியா ஹரிணியோட தங்கை!” விஷ்ணுப்பிரியா புன்னகை முகமாக வந்து நின்றாள்.

 

பலத்த சிந்தனைகளுடன் அமர்ந்திருந்த வருண் தங்கள் முன்னால் புதிதாக ஒரு குரல் கேட்டு சற்று மேலும் நிமிர்ந்து பார்க்க அங்கே புன்னகை முகமாக விஷ்ணுப்பிரியா நின்று கொண்டிருக்க அவளைப் பார்த்த அடுத்த கணமே ஷாக் அடித்தாற் போல சட்டென்று தன் இருக்கையில் இருந்து அதிர்ச்சியாக எழுந்து நின்றான்……