நினைவு – 12

eiE6SA598903(1)

நினைவு – 12
“டேய் அர்ஜுன் நீ உண்மையாக தான் சொல்லுறியா? இல்லை என்னை கலாய்க்க சொல்லுறியா?” அர்ஜுன் பிரியாவோடு பேசியவற்றை எல்லாம் கூறிய பின்னர் அதைக் கேட்டு அதிர்ச்சியான வருண் கேள்வியாக அவனைப் பார்க்க

பதிலுக்கு அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவனருகில் அமர்ந்து கொண்டவன்
“நீ முதன் முதலாக சில்..பிரியாவைப் பார்த்த போது ஒரு விஷயம் சொன்ன அப்போ அதை நான் நம்பல ஆனா இப்போ நம்புறேன் அவளைப் பார்த்தாலே என்னன்னவோ பண்ணுதுடா!” கண்களை மூடிக்கொண்டு ஒரு விதமான மோனநிலையோடு கூறவும்

‘சரிதான்! பையன் காதலில் விழுந்துட்டான் இனி அதில் மூழ்கி பைத்தியம் ஆகத்தான் போறான்! கடவுளே இந்த பையன் கிட்ட இருந்து எப்படியாவது என்னைக் காப்பாற்று பா!’ என்று தன் மனதிற்குள் விளையாட்டாக நினைத்துக் கொண்ட வருண் பின்னாளில் அது உண்மையாகும் என்பதை அறியாமலேயே அர்ஜுனின் தோளில் தட்டி அவனை மீண்டும் இந்த உலகத்திற்கு இழுத்து வந்தான்.

“யப்பா! காதல் கவிஞரே! நீ உன் கனவை எல்லாம் நைட்டுக்கு தூங்கும் போது காணு இப்போ வீட்டுக்கு போகலாம் வா!” வருணின் கூற்றில் தற்காலிகமாக தன் மனம் கவர்ந்தவளின் எண்ணங்களை ஒதுக்கி வைத்தவன் சிறு புன்னகையுடன் அவனோடு இணைந்து வீட்டை நோக்கி புறப்பட்டு சென்றான்.

அதன் பிறகு வந்த நாட்களில் எல்லாம் எல்லோரும் தங்கள் பரீட்சையில் மும்முரமாக கவனம் செலுத்த தொடங்கிவிட அர்ஜுன் மற்றும் பிரியா சந்திக்கும் வாய்ப்பும் குறைந்து போனது.

அவனுக்கு பரீட்சை நடக்கும் நேரங்களில் பிரியாவிற்கு ஓய்வாகவும் அல்லது அவளுக்கு பரீட்சை நடக்கும் நேரங்களில் அர்ஜுனுக்கு ஓய்வாகவும் வந்து அமையும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் அர்ஜுனின் மனதிற்குள் பிரியா இருக்கிறாளா? இல்லையா? என்பது வருணுக்கே புரியாத ஒரு புதிராக‌ மாறிப் போனது.

காலம் தன் சுழற்சியில் எல்லோரையும் தன் பின்னால் கட்டியிழுத்து செல்ல அந்த காலம் வைத்திருக்கும் அதிர்ச்சி, சந்தோஷங்களை அறியாத மாந்தர்களும் அதன் பின்னாலேயே செல்லத் தொடங்கினர்.

அர்ஜுனும், பிரியாவும் வாய் திறந்து தாங்கள் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக சொல்லியிருக்காவிட்டாலும் அவர்கள் இருவர் மனதிலும் என்ன இருக்கிறது என்பது அவர்களை சூழ இருந்த அனைவருக்கும் நன்றாகவே தெரிந்தது.

எப்போதும் போல பார்வையாலேயே பேசிக் கொள்ளும் ஒரு மௌனமான காதல் தான் அவர்களுக்கு இடையில் இருக்கும் ஒரு மறைவில்லா காதல்.

அர்ஜுன் இதற்கு முதல் எந்த ஒரு பெண்ணிற்காகவும் இத்தனை தூரம் பேசாமல் காத்திருந்தது இல்லை ஏதாவது ஒரு உதவி என்றால் போய் பேசுவான் அத்தோடு எல்லாம் முடிந்து விடும் ஆனால் இந்த பிரியா விடயத்தில் அவன் இதுவரை அவளோடு வாய் திறந்து பேசிய வார்த்தைகள் ஐம்பதிற்கும் குறைவாகத் தான் இருக்கும்.

அவன் இத்தனை தூரம் தயங்கி, வெட்கப்பட்டு, ஒரு வித மோனநிலையில் இருப்பதை போல நடந்து கொள்வது இதுவே முதல் முறை.

அவனிடம் இது நாள் வரை காணாத மாற்றங்களை எல்லாம் இந்த சில நாட்களாக கண்டு கொண்ட வருண் அவனாக‌ தன்னிடம் வந்து அவன் மனதில் இருக்கும் விடயங்களை பற்றி கூறட்டும் என்று அவனை அவன் போக்கிலேயே விட்டும் வைத்து இருந்தான்.

பிரியாவின் முழுப்பெயரை தெரிந்து கொள்ள ஆரம்பத்தில் பல்வேறு விதமான முயற்சிகளை செய்த அர்ஜுன் அவள் முழுப்பெயரை அறிந்திருக்க அவள் முழுப்பெயர் வருணுக்கு தெரிந்திருக்கா விட்டாலும் அவனும் அவளை பிரியா என்று சொல்லி பேசவே பழகி இருந்தான்.

அன்றோடு பிரியா அந்த கல்லூரியில் இணைந்து ஒன்பது மாதங்கள் முடிந்திருந்த நிலையில் வழமை போன்று அர்ஜுன் அவள் வழக்கமாக நிற்கும் பேருந்து நிலையத்தில் அவளது வருகையை எதிர்பார்த்து வருணோடு நின்று கொண்டிருக்க எப்போதும் போல தன் தோழியர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டே நடந்து வந்தவள் அவனை அங்கு பார்த்ததுமே முகம் சிவக்க வெட்கத்தோடு புன்னகைத்தபடி அந்த பேரூந்து நிறுத்தத்தின் மறுபுறமாக வந்து நின்று கொண்டாள்.

நொடிக்கு ஒரு தடவை இருவரது பார்வைகளும் ஒருவரை ஒருவர் தழுவி மீள வருணுக்கு தான் அங்கே நிற்பது வேப்பங்காயை சாப்பிட்டது போல அத்தனை கசப்பாக இருந்தது.

அவன் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை அந்த பெண்ணிடமும் கூறாமல் உற்ற தோழன் தன்னிடமும் கூறாமல் இப்படி எத்தனை நாட்களுக்கு தான் மறைத்து வைப்பது என்பது அவன் எண்ணம்.

இன்னும் ஒரு சில மாதங்களில் தங்களின் இந்த கல்லூரி வாழ்க்கை முடிவடைந்து விடும் அப்படியிருக்கையில் மனதில் சுமந்திருக்கும் ஆசைகளை எதற்காக மறைத்து வைக்க வேண்டும் என்பதை பல தடவைகள் வருண் நேரடியாகவும், மறைமுகமாகவும் அர்ஜுனிடம் கேட்டிருக்க அதற்கெல்லாம் அவனிடம் இருக்கும் ஒரே பதில்
‘எது எது எப்பப்போ நடக்கணுமோ அது அது அப்பப்போ நடக்கும்!’ என்பது தான்.

அர்ஜுன் இதற்கு முன்னரும் இப்படியான அமைதியான சுபாவத்தை கொண்ட ஒருவனாக இருந்திருந்தால் வருண் இந்தளவிற்கு இந்த விடயத்தை பற்றி அவனிடம் பேசியிருக்கமாட்டான் ஆனால் அர்ஜுன் அப்படியான சுபாவம் கொண்டவன் இல்லையே!

அவனும், அர்ஜுனும் இருக்கும் இடத்தில் கலகலப்பிற்கு பஞ்சமே இருக்காது அந்தளவிற்கு அவர்கள் தன் பேச்சாலேயே அந்த இடத்தை கட்டிப் போட்டு விடுவார்கள் ஆனால் இப்போது அர்ஜுன் பிரியாவிடம் பேசுவதற்கு இத்தனை தூரம் தயங்குவது அவனுக்கு ஏனோ மனதிற்கு சரியாக படவில்லை நாளை அதனால் தன் நண்பனுக்கு எதுவும் பிரச்சினை வந்து விடக்கூடாது என்பது அவன் எண்ணம்.

வழக்கமாக வருண் பெண்கள் நிற்கும் இடத்தை பார்த்தாலே எந்த தடையும் இன்றி நேரடியாக அவர்களிடம் சென்று பேசி ஒன்று திட்டு வாங்கி வருவான் இல்லையா அவர்களது தொலைபேசி எண்ணை எப்படியாவது வாங்கி வருவான் அப்படி துரித கதியில் செயல்படுவனை அருகில் வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கும் மேலாக அர்ஜுன் பார்வையாலேயே காதல் வசனங்கள் பேசிக் கொண்டு இருந்தால் அவனுக்கும் என்ன தான் செய்ய முடியும்?

ஒவ்வொரு நாளும் அர்ஜுன் பிரியா செல்லும் பேருந்து வரும் வரை அவள் நிற்கும் அந்த இடத்தில் நின்று அவள் பேருந்தில் ஏறி தன் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்து மறையும் வரை அவளைப் பார்த்து கொண்டு நின்று விட்டு தான் தன் வீட்டுக்கு செல்வதை வழக்கமாகி இருந்தான் அதற்கு துணையாக வருணும் அவனிடம் சிக்கி இருந்தான்.

இன்றும் அவளது பேருந்து வரும் வரை வருணோடு பேசிக் கொண்டிருந்த படியே அர்ஜுன் அவளைப் பார்த்து கொண்டு நின்ற நேரம் அவள் செல்லும் பேருந்து வரவே அதில் ஏறப் போனவள் சிறிது தயங்கி நின்று விட்டு வேகமாக அர்ஜுன் அருகில் வந்து அவனது கையைப் பிடித்து அதில் ஒரு காகிதத்தையும், மூன்று சாக்லெட் பார்களையும் வைத்து விட்டு சிறு புன்னகையுடன் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

அவளின் அந்த அதிரடி நடவடிக்கையில் முதலில் திடுக்கிட்டு போய் நின்றவன் அவளது புன்னகையைப் பார்த்த பின்னரே சிறிது இயல்பு நிலைக்கு திரும்பினான்.

வருணும் அவளது நடவடிக்கையில் முதலில் சிறிது அதிர்ச்சி அடைந்தாலும் அர்ஜுனின் கையில் இருந்த சாக்லேட்டைப் பார்த்ததுமே அதை எப்போது கைப்பற்றுவது என்று யோசித்து கொண்டு நிற்க பிரியா அமர்ந்திருந்த பேருந்து புழுதியையும், புகையையும் தாராளமாக கிளப்பிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றது.

அவள் தன் பார்வையில் இருந்து மறையும் வரை இதழில் மாறாத புன்னகையுடன் அர்ஜுன் பார்த்து கொண்டிருக்க அந்த பேருந்து அந்த தெருவில் இருந்து மறைந்ததுமே வருண் தன் பணியை செவ்வனே தொடங்கி இருந்தான்.

அவனது செய்கையைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவனது தோளில் தட்டிய அர்ஜுன் பிரியா கொடுத்து விட்டு சென்ற காகிதத்தை பிரித்து பார்த்து விட்டு
“அய்யய்யோ!” தன்னை மறந்து அதிர்ச்சியாக சத்தமிட அவனருகில் நின்று கொண்டிருந்த வருண் எதுவும் பிரச்சினையோ என்ற பதட்டத்துடன் அந்த காகிதத்தை வாங்கிப் பார்த்தான்.

‘ஹேப்பி பர்த்டே டூ மீ!’ ஒற்றை வரியில் எழுதப்பட்டிருந்த அந்த வாசகத்தை தாங்கியிருந்த காகிதத்தை பார்த்து கொண்டிருந்த வருண்

‘இதைப் பார்த்தாடா ஏதோ அந்த பொண்ணு கல்யாணப் பத்திரிகையைப் பார்த்த மாதிரி அந்தளவிற்கு சத்தம் போட்ட?’ தன்னருகே நின்று கொண்டிருந்த அர்ஜுனை சுட்டெரித்து விடுவது போல பார்க்கவும்

அவனோ
“பிரியாவோட பிறந்தநாள் டா! அதைக் கூட தெரியாமல் இருந்து இருக்கேனே!” என்று கூற

‘ஆமா! காலண்டரில் குறித்து வைக்க வேண்டிய முக்கியமான நாள் பாரு!’ என தன் மனதிற்குள் நினைத்து கொண்டு வாய் திறந்து எதுவும் பேசாமல் அவனைப் பார்த்து கொண்டு நின்றான்.

“டேய் வரு…”

“புரியுது நீ என்ன சொல்லப் போறேன்னு தெரியுது இப்போ உடனே பிரியாவை தொடர்ந்து போய் அவ கூட பேசணும் அது தானே?”

“இல்லை!”

“இல்லையா? அப்போ வேறு என்ன?”

“நீ பைக்கை எடுத்துட்டு வா சொல்லுறேன்!” அர்ஜுன் குழப்பத்துடன் தன்னை பார்த்து கொண்டு நின்ற தன் நண்பனின் தோளில் தட்டி விட்டு தன் வண்டியை ஸ்டார்ட் செய்ய அவனைப் பின் தொடர்ந்து வருணும் புறப்பட்டுச் சென்றான்.

வெகு நேரமாக எந்த இடத்திலும் தன் வண்டியை நிறுத்தாமல் அர்ஜுன் சென்று கொண்டிருக்க
‘இவன் என்ன ஐடியாவில் இருக்கான்னே தெரியலையே!’ வருண் பலத்த சிந்தனையோடு அவனைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.

பதினைந்து நிமிடப் பயணத்திற்கு பின்னர் ஒரு பெரிய ஜவுளிக்கடையின் முன்னால் தன் வண்டியை நிறுத்தியவன் வருணைப் பார்த்து தன்னோடு வரும்படி சைகை செய்து விட்டு முன்னே நடந்து செல்ல அவன் என்ன செய்ய போகிறான் என்பதை சிறிது யூகித்தவனாக வருண் வேகமாக அவனை நோக்கி நடந்து சென்றான்.

“டேய் அர்ஜுன்! நீ பிரியாவுக்கு டிரஸ் கிஃப்ட் பண்ணப் போறியா? என்னால் நம்பவே முடியல உனக்கு ரொம்ப நெருக்கமானவங்களுக்குத் தானே நீ இது வரைக்கும் டிரெஸ் எடுத்துக் கொடுப்ப அப்படின்னா பிரியாவை உனக்கு அந்தளவிற்கு பிடிக்குமா?” வருணின்‌ கேள்விக்கு சிறு புன்னகையை மாத்திரம் பதிலாக கொடுத்தவன் புடவைகள் இருக்கும் தளத்தை நோக்கி படியேறிச் செல்ல

“டேய் எனக்கு பதில் சொல்லுடா!” வருண் தன் கேள்வியை விடாமல் கேட்டுக் கொண்டே அவனைத் தொடர்ந்து செல்லலானான்.

“அண்ணா அந்த டார்க் ப்ளூ சேலையை எடுத்துக் காட்டுங்க!” அந்த ஜவுளிக்கடையில் இருக்கும் நபரிடம் பேச்சுக் கொடுத்தபடியே ஒவ்வொரு சேலையாக எடுத்துப் பார்க்கத் தொடங்கிய அர்ஜுன் இடைக்கிடையே வருணின் புறம் திரும்பி

“இது நல்லா இருக்கு இல்லையா?” என்று அவனையும் தன் வேலையில் இணைத்துக் கொள்ள முயல அவனோ அந்த இடத்தில் இடியே வந்து விழுந்தாலும் நான் ஒரு வார்த்தை கூட பேசமாட்டேன் என்பது போல இறுக்கமான முகத்துடன் நின்று கொண்டிருந்தான்.

பல சேலைகளை எடுப்பதும் பார்ப்பதுமாக நின்றவன் இறுதியாக மல்பெரி நிறத்தில் கருநீல நிறம் மற்றும் பொன்நிற பட்டி பிடிக்கப்பட்டிருந்த ஒரு சேலையை தெரிவு செய்து விட்டு அதற்கான பணத்தையும் செலுத்தி விட்டு அதன் பின்னரே வருணைத் திரும்பி பார்த்து
“நீ ரொம்ப நேரமாக ஏதோ கேட்டியே என்னடா கேட்ட?” என்று கேட்கவும் அவனோ தன் முன்னால் நின்று கொண்டிருந்தவனை வெட்டவா? குத்தவா? என்பது போல பார்த்து கொண்டு நின்றான்.

“எனக்கு ஆரம்பத்தில் பிரியாவை பார்த்த போதே ஒரு தடுமாற்றம் உருவாகிடுச்சுடா வருண்! அவளோட அந்த துடுக்குத்தனமான பேச்சு தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த விஷயம்! இதுவரைக்கும் நான் உன்கிட்ட எந்த ஒரு விடயத்தையும் மறைத்தது இல்லை இந்த விடயத்தையும் அப்போவே நான் உன்கிட்ட சொல்லி இருக்கணும் ஆனால் அந்த நேரம் நான் ஒரு சரியான முடிவில் இல்லை அவ ஏதோ என்னை வைத்து விளையாடத் தான் அப்படி எல்லாம் பேசுறான்னு நினைத்தேன் ஆனா என்னைக்கு அவ பஸ் ஸ்டாண்டில் வைத்து என் கண்ணைப் பார்த்து லவ் தானேன்னு ஒரு கேள்வி கேட்டாலோ அப்போவே என் மனது சொல்லிடுச்சு அவ தான் என் மனைவின்னு!

அவளுக்கும் என்னை பிடிக்கும் அது எனக்கு தெரியும் ஆனா வெளிப்படையாக ஒருத்தரை ஒருத்தர் பார்த்து காதலை சொல்ல ஒரு தயக்கம் இன்னைக்கு அவ உரிமையாக என் கையைப் பிடித்து அந்த சாக்லெட்டை வைத்து விட்டு போகும் போது என் உடம்பில் ஏதேதோ பண்ணிச்சுடா! நான் உன் கிட்ட அடிக்கடி ஒரு விஷயம் சொல்லுவேன் நான் என் அம்மாவைப் பார்த்தது கிடையாது அவங்க முகம் கூட மனதில் ஏதோ ஒரு மூலையில் தான் பதிந்து இருக்கு என் அப்பா நான் அம்மாவை நினைத்து ஏங்கி விடக்கூடாதுன்னு அவங்களை பற்றி எந்த விடயத்தையும் அதிகமாக பேசமாட்டாங்க எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் அம்மான்னு கூப்பிடுறது நம்ம சாவித்திரிம்மாவைத் தான்! அவங்க பாசம், அரவணைப்பு இதை எல்லாம் நான் வேறு யார் கூடவும் ஒப்பிட்டு பேச மாட்டேன் ஆனா எனக்கு வரப்போற மனைவி அதே போல் என்னைப் பார்த்து கொள்ளணும்னு ஆசைப்பட்டுட்டு இருக்கேன் அது உனக்கு நன்றாகவே தெரியும் அந்த பாசம், அரவணைப்பு அதை விட அளவில் அதிகமான காதல் இது எல்லாம் எனக்கு பிரியா கிட்ட கிடைக்கும் என்று நான் நம்புறேன் அவ கண்ணிலும் நான் அதை உணர்ந்து இருக்கேன்

இதோ இந்த சேலை அவ பிறந்தநாளுக்காக கொடுக்க நினைத்து நான் வாங்கல அவ உரிமையாக என் கையைப் பிடித்த அந்த தருணமே அவ என் மனைவின்னு என் மனதில் முடிவெடுத்து விட்டேன் இன்னும் சரியாக மூணு மாதம் கழித்து டிசம்பர் இருபதாம் திகதி நான் முதன்முதலாக இந்த காலேஜில் அவளை சந்தித்த அந்த நாள் அன்னைக்கு இந்த சேலையை அவ கிட்ட கொடுத்து எனக்கு மனைவியாக வர அவளுக்கு சம்மதமான்னு கேட்கப் போறேன் அவ இல்லைன்னு சொல்ல மாட்டான்னு தெரியும் ஆனாலும் ஒரு உறுதிப்படுத்தலுக்காக சொல்லப் போறேன் என் மனைவிக்கு நான் முதன்முதலாக வாங்கி கொடுக்கும் பரிசு அவளோடு எப்போதும் ஒட்டி இருந்து என் ஞாபகத்தை அவ மனது முழுவதும் நிறைத்து வைக்கணும் அதற்காக தான் இந்த கிஃப்ட் இப்போ உன் கேள்விக்கு எல்லாம் பதில் கிடைத்ததா மிஸ்டர் வருண்?” அர்ஜுன் தன் புன்னகை மாறாத முகத்துடன் வருணைப் பார்த்து வினவ

“அர்ஜுன்!” குரல் கம்மி நா தழுதழுக்க அவனை வாரி அணைத்துக் கொண்டவன்

“உன் மனதில் இவ்வளவு ஆசை இருக்கும்ன்னு நான் நினைத்து கூடப் பார்க்கலடா! பிரியா ரொம்பவே அதிர்ஷ்டசாலி! இதுவரைக்கும் நீ பிரியா கிட்ட ஒரு காதல் வார்த்தை கூட பேசியதில்லை ஆனா அவங்களை இந்த அளவுக்கு விரும்புற இப்படி எல்லாம் காதல் செய்ய முடியுமான்னு எனக்கு தெரியல டா! உன்னோட இந்த காதலைப் பார்க்கும் போது பேசாமல் நான் ஒரு பொண்ணாகப் பிறந்து இருக்கலாமோன்னு தோணுது! ஐ லவ் யூ டா அர்ஜுன்” சட்டென்று அவன் கன்னத்தில் முத்தமிட

அர்ஜுனோ
“அய்யே! சீச்சி! நான் அப்படிபட்டவன் இல்லை!” பயத்தோடு நடுங்குவது போல பாவனை செய்து காட்ட வருண் அவனைப் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்டு நின்றான்.

மனம் விட்டு சிரித்து பேசியபடியே தங்கள் வீட்டை வந்து சேர்ந்தவர்கள் இரவுணவை உண்டு விட்டு தங்கள் அறைகளுக்குள் நுழைந்து கொள்ள எந்த நாளை எண்ணி அர்ஜுன் மற்றும் வருண் காத்திருந்தனரோ அந்த நாள் உண்மையாகவே அவர்கள் வாழ்க்கையை திருப்பி போட காத்திருப்பதை அவர்கள் அறிந்திருந்தால் அந்த நாளை இத்தனை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்க மாட்டார்களோ என்னவோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!