நினைவு – 12

eiE6SA598903(1)

அர்ஜுன் தன் முகத்தில் அதிர்ச்சியை தேக்கி அமர்ந்திருக்க சற்று தள்ளி நின்று அவற்றை எல்லாம் பார்த்து கொண்டு நின்ற வருண் வாய் விட்டு சிரித்தபடியே அவனருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

“என்ன‌ ஆச்சு அர்ஜுன் சார்? ஏதோ பேயறைந்த மாதிரி இருக்க! ப்ளூ சுடிதார் போட்ட மோகினி பேய் அறைஞ்சுடுச்சா?” தன் வயிற்றை பிடித்து சிரித்தபடியே வருண் அவனைப் பார்த்து கேட்கவும்

அவனைப் பார்க்காமலேயே ஆமோதிப்பாக தலையசைத்தவன்
“பேய் இல்லை! சரியான சில்லு வண்டு!” என்றவன் பின்னர் ஏதோ நினைவு வந்தவனாக

“ஏய்! அது எப்படி உனக்கு தெரியும்?” கேள்வியாக அவனை நோக்கினான்.

“நீ இங்க வந்து உட்கார்ந்து அந்த பொண்ணை கண் இமைக்காமல் சைட் அடித்ததில் இருந்து அவ உன்னை பார்த்து கண்ணடித்துட்டுப் போன வரைக்கும் எல்லா தகவல்களையும் அடியேன் அறிவேன்!” வருண் ஆசிர்வாதம் அளிப்பது போல தன் கையை வைத்தபடி கூறவும்

“அட போடா!” சலிப்போடு அவனது கையை தட்டி விட்டவன்

“நான் பாட்டுக்கு செவனேன்னு தான் இருந்தேன் திடீர்னு வந்தா ஏதேதோ பேசுனா அப்புறம் பார்த்து சிரித்து கண்ணடித்துட்டுப் போறா! இது சரி வராது அவ யாரு என்னன்னு எனக்கு தெரிந்தே ஆகணும்!” உறுதியான குரலில் கூறி விட்டு அவள் சென்ற புறமாக நடந்து செல்ல

“விசுவாமித்திரர் தவத்தை ஒரு மேனகை கலைச்சுட்டா! இனி எல்லாம் அமோகமாக நடக்கப் போகுது!” என்றவாறே வருண் அவனைப் பின் தொடர்ந்து நடந்து சென்றான்.

நூறு, நூற்றைம்பது ஏக்கர் பரப்பளவில் இருந்த அந்த கல்லூரியில் ஒவ்வொரு டிபார்ட்மெண்டாக தன்னை சீண்டி விட்டு வந்த அந்த கன்னியை அர்ஜுனின் கண்கள் வலை வீசித் தேடத் தொட அந்த கன்னியோ அவன் கண்களுக்கு சிக்கவே இல்லை.

வெகு நேரமாகியும் அவளை எங்கேயும் காணாது சோர்ந்து போனவன் இறுதியாக அந்த கல்லூரியின் ஃபேஷன் டிசைனிங் டிபார்ட்மெண்ட் முன்னால் தன் தலையை கோதியபடியே வந்து நிற்க வருண் அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே அவனது தோளில் தன் கரத்தை வைத்தான்.

“சரி விடு அர்ஜுன்! அந்த பொண்ணு நம்ம காலேஜில் தானே படிக்குறா அவ யாரு, என்னன்னு கண்டுபிடிக்கலாம் இப்போ வா போகலாம்”

“இல்லை டா வருண்! அவ யாருன்னு நான் கண்டுபிடித்தே ஆகணும் இத்தனை பேரு இருக்கும் போது அவ ஏன் என்கிட்ட வந்து வம்பு பண்ணணும்? அவ எங்கே..”

“ஹேய் பிரியா! நீ என்னடி உன் பாட்டுக்கு அந்த அண்ணாகிட்ட ஏதேதோ பேசிட்டு வந்துட்ட அவங்க மறுபடியும் வந்து ஏதாவது கேட்டால் என்ன சொல்லுவ?” அவர்கள் இருவரையும் கடந்து சென்ற ஒரு பெண் குழுவினர் பேசிக் கொண்டு சென்ற வார்த்தைகளைக் கேட்டு அர்ஜுன் அமைதியாகி விட‌ அவன் பார்வையோ அந்த பெண்கள் கூட்டத்தை ஆவலுடன் நோக்கியது.

அவன் ஆவலை பொய்யாக்காமல் அவன் தேடலின் பதில் அந்த கூட்டத்தின் நடுவில் சிரித்த முகமாக நடந்து சென்று கொண்டிருக்க அவளைப் பார்த்ததுமே அர்ஜுனின் கண்கள் சந்தோஷமாக மலர்ந்தது.

அவள் தன்னை இன்னமும் கவனிக்கவில்லை என்பதைக் கண்டு கொண்ட அர்ஜுன் வருணையும் தன்னோடு அழைத்துக் கொண்டு சென்று அவள் பார்வை வட்டத்திற்குள் சிக்காத ஒரு இடத்தில் மறைந்து நின்று கொண்டு அவள் என்ன பேசுகிறாள் என்று கேட்க ஆரம்பித்தான்.

“அதெல்லாம் அவங்க ஒண்ணும் வரமாட்டாங்க! நான் சும்மா இரண்டு கேள்வி அதட்டலாக கேட்டதற்கே அவங்க கண்ணு இரண்டும் ஆந்தையோட கண்ணு மாதிரி விரிந்து போயிடுச்சு! சும்மா மிரட்டுனதுக்கே அவங்க பயந்துட்டாங்க! இதில் என்னைத் தேடி அவங்க வரப்போறாங்களா? அதுமட்டுமில்லாமல் இந்த பெரிய காலேஜில் அவங்க என்னைத் தேடி கண்டுபிடிக்க முடியுமா என்ன?”

“ஆனாலும் எனக்கு என்னவோ அந்த அண்ணா உன்னோட தேடி வருவாங்கன்னு தான் தோணுது?”

“அப்படியா? பரவாயில்லை வரட்டுமே! அப்போ அடுத்த தடவை அவரை பார்க்கும் போது ஐ லவ் யூ சொல்லிடலாம்”

“ஏய் பிரியா! என்னடி நீ விளையாடுறியா? அவங்க‌ யாரு என்னன்னு எதுவுமே தெரியாது அவங்க கிட்ட இப்படி எல்லாம் பேசுற நீ ஏதோ விளையாட்டுக்கு பண்ணுறேன்னு தானே நாங்க நினைத்தோம்” அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணின் கேள்வியில் அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவள்

“சீனியர்ஸ் மேல இருக்குற கடுப்பில் தான் நான் அங்கே போய் புலம்பிட்டு இருந்தேன் அவங்க என்னைப் பார்க்கவும் ஏதோ கோபத்தில் சத்தம் போட்டேன் தான்! அப்புறம் அவங்க அப்பாவித்தனமான முகத்தை பார்த்ததும் கொஞ்சம் விளையாடலாம்னு தான் அவங்க கிட்ட அப்படி பேசுனேன் ஆனா அவங்க முகத்தை ரொம்ப பக்கத்தில் பார்த்ததும் ஏனோ ஒரு மாதிரி ஃபீல் ஆச்சு” சற்று வெட்கத்தோடு கூறவும் அவளை சுற்றி நின்ற அவளது தோழிகளோ அவளைப் பார்த்து நக்கலாக சிரிக்கத் தொடங்கினர்.

“அட! அட! அட! நம்ம சாமியார் மேல ஒரு பொண்ணுக்கு லவ் வந்துடுச்சோ?” வருண் வேண்டுமென்றே அர்ஜுனின் காதின் அருகில் சென்று யோசிப்பது போன்ற பாவனையோடு கேட்கவும்

அவனைத் திரும்பி‌ முறைத்து பார்த்தவன்
“சும்மா ஏதாவது உளறிட்டே இரு! அந்த பொண்ணு தான் விளையாடுறான்னா நீ வேறயா?” என்றவாறே அங்கிருந்து வேகமாக விலகிச் செல்ல

“டேய் அர்ஜுன் நில்லுடா!” வருண் சிறு புன்னகையுடன் அவனைத் தொடர்ந்து ஓடிச் சென்றான்.

“ஏன்டா இப்படி இருக்க? நீயாக யாரையும் காதலிக்க மாட்டேங்குற சரி கடவுள் ஏதோ போனால் போகுதுன்னு அவங்களாக வந்து உனக்கிட்ட காதலை சொல்லும் படி வைத்தாலும் அதையும் ஒதுக்கி வைக்குற! அப்படி உன் மனதில் என்ன தான் இருக்கு?”

“வருண் கண்ணா! எப்போ எது நமக்கு ஏற்றதுன்னு அந்த கடவுளுக்கு தெரியும் அது அது நடக்க வேண்டிய நேரத்தில் கரெக்டாக நடக்கும் அது வரைக்கும் நாமும் வெயிட் பண்ணுவோமே என்ன அவசரம்?”

“ஆஹ்ஹாஹா! இப்படி சொன்ன எத்தனை பேரை நாங்க பார்த்து இருக்கோம்? ஆரம்பத்தில் இப்படி தான் சொல்லுவாங்க அப்புறம் பார்த்தால் இந்த பூனையும் பால் குடிக்குமா என்கிற அளவுக்கு வேலை பார்ப்பாங்க! ஹேய் அர்ஜுன்! இந்த நாள் உன் காலண்டரில் குறித்து வைத்துக்கோ!”

“சாரி என்கிட்ட காலண்டர் இல்லை!”

“அட கஞ்சப்பயலே! ஒரு பேப்பரை எடுத்தாவது குறித்து வைத்துக்கோடா!”

“சரி சரி நீ டயலாக்கை மறக்காமல் சொல்லு!”

“ஆஹ் ஹான்! எங்கே விட்டேன்?”

“காலண்டரில் விட்ட!”

“ஓகே தாங்க்யூ! டேய் அர்ஜுன் இந்த நாள் உன் காலண்டரில் சீச்சி ஒரு பேப்பரில் குறித்து வைத்துக்கோ! இந்த காலேஜ் முடிந்து போவதுக்கு இடையில் ஒரு நாள் நீயாக என் கிட்ட வந்து ‘டேய் வருண் வருண்! நான் அந்த பொண்ணு பிரியாவை லவ் பண்ணுறேன் நீ தான் இந்த விஷயத்தை எப்படியாவது வீட்டில் சொல்லி எங்களை சேர்த்து வைக்கணும்’ இப்படி சொல்லிட்டு நிற்கப்போற! அப்போ உன்னை வைச்சு செய்வேன்!” வீரவசனத்தை பேசிவிட்டு செல்லும் வெற்றி நாயகன் போல பெருமை பொங்க வருண் நடந்து செல்ல வானத்தில் உலாவிக் கொண்டிருந்த தேவர்களோ அதற்கு ‘ததாஸ்து’ சொல்லி விட்டு சென்றிருந்ததை பாவம் அப்போது யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

வீர நடை போட்டு செல்லும் தன் நண்பனைப் பார்த்து சிரித்துக் கொண்ட அர்ஜுன் சற்று நேரத்திற்கு முன்னர் அந்த பெண்கள் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி திரும்பி பார்க்க அவர்கள் அப்போதும் அதே இடத்தில் நின்று அவளை வைத்து ஏதோ சிரித்து பேசிக் கொண்டு நின்றனர்.

“பார்க்க அல்ட்ரா மாடர்ன் பொண்ணு மாதிரி இருக்கா ஆனா பேரு ரொம்ப பழைய மாடலாக இருக்கே! பிரியா! இந்த பேரு நல்லாவே இல்லை! உனக்கு என்ன பேரு இருந்தாலும் சரி நீ எனக்கு சில்லு வண்டு தான்! சில்லு!” பிரியாவைப் பார்த்து புன்னகையுடன் தன் தலையைக் கோதிக் கொண்டு நின்ற அர்ஜுன்

“ஏய் கேடி! இல்லை இல்லைன்னு சொல்லிட்டு செல்லப்பேரு எல்லாம் வைக்குற நீ!” தன்னருகே திடீரென்று கேட்ட வருணின் குரலில் திடுக்கிட்டு போய் திரும்பி பார்க்க அங்கே அவன் தன் இடுப்பில் கை வைத்து கொண்டு அவனை பார்த்து கொண்டு நின்றான்.

அவனை அங்கே பார்த்ததும் அந்த இடத்தில் எதுவுமே நடவாதது போல இயல்பாக தன் பார்வையை அங்குமிங்கும் சுழல விட்டபடியே அர்ஜுன் மெல்ல அங்கிருந்து நகர்ந்து செல்ல தன் நண்பனின் சேட்டைகளை பார்த்து சிரித்துக் கொண்டே வருணும் அங்கிருந்து நகர்ந்து சென்றான்.

அதன் பின்னர் வந்த நாட்கள் எல்லாம் இயல்பாக கடந்து செல்ல அர்ஜுன் மாத்திரம் பிரியாவின் முன்னால் செல்வதை இலாவகமாக தவிர்த்து வந்தான்.

பிரியா அவள் தோழிகளோடு அவன் இருக்கும் புறமாக தற்செயலாக வந்தால் கூட அவன் வேறு புறமாக திரும்பி நடந்து செல்லத் தொடங்கி விடுவான்.

அவன் எத்தனை தூரம் விலகிச் சென்றாலும் அவளது குரலோசை அவனை விட்டு விலகிச் செல்லவேயில்லை.

அவள் அவனை கவனிக்காத நேரங்களில் அவளது பேச்சையும், செய்கைகளையும் தூரத்தில் இருந்த படியே ரசித்து பார்ப்பவன் அதைப்பற்றி வருண் கேள்வி எழுப்பும் போதெல்லாம்
‘ அப்படி எல்லாம் எதுவும் இல்லை தேவையில்லாமல் நீயாக எதையும் கற்பனை பண்ணி கொள்ளாதே!’ என்று விட்டு நகர்ந்து சென்று விடுவான்.

அவள் விளையாட்டாகவோ அல்லது உண்மையாகவோ அவனை அடுத்த தடவை பார்க்கும் போது அவனை காதலிப்பதாக சொல்வதாக சொல்லி இருக்க அவள் உண்மையாக அப்படி எதுவும் சொல்லி விடுவாளோ என்ற பயத்தில் தான் அர்ஜுன் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்தான்.

அந்த கண்ணாமூச்சி ஆட்டம் விரைவில் அவனாலேயே முடிவுக்கு வர வேண்டும் என்று விதித்து இருக்க அந்த நாளும் இனிதாக வந்து சேர்ந்தது.

இன்னும் ஒரு வாரத்தில் செமஸ்டர் பரீட்சைகள் ஆரம்பிக்க இருந்ததனால் அவர்கள் கல்லூரி வளாகம் முழுவதும் அங்குமிங்கும் மாணவர்கள் பரபரப்போடு கை நிறைய புத்தகங்களோடும், மனம் நிறைய கேள்விகளோடும் நடமாடிக் கொண்டிருந்தனர்.

பரீட்சைக்கான விடுமுறை வந்தாலே தன் நண்பர்களுடன் வெளியே ஊர் சுற்ற தொடங்கி விடும் வருண் அன்று அர்ஜுனின் வண்டியை சர்வீஸுக்கு விட்டு இருந்ததனால் அவனை வழக்கம் போல கல்லூரியில் இறக்கி விட்டு தன் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்றிருந்தான்.

அவனும் தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு வீடு செல்வதற்காக வருணிற்காக காத்திருக்க அவன் தன்னால் தற்போது வரமுடியாது என்றும் சிறிது நேரம் அவனைக் காத்திருக்குமாறும் கூற அவனோ தற்போது வீட்டுக்கு சென்றே ஆகவேண்டும் என்ற முடிவில் பேருந்தில் இன்று வீட்டுக்கு செல்லலாம் என்ற எண்ணத்தோடு தங்கள் கல்லூரியின் அருகில் இருந்த பேருந்து நிலையத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.

மாலை நேரம் வானம் இலேசாக மங்கி இருக்க மழை பெய்வதற்கான அறிகுறியோடு குளிர் காற்றும் அந்த இடத்தை சூழ்ந்து கொள்ள அந்த காலநிலையே மனதிற்கு ஒரு ஏகாந்தமான சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தது.

அந்த ஏகாந்தமான சூழ்நிலையையும் தாண்டி தன் மனதை சூழ்ந்து கொண்ட ஒரு இனம் புரியாத படபடப்புடன் அமர்ந்திருந்த அர்ஜுன் சற்று தொலைவில் கேட்ட சிரிப்பு சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க அங்கே அவன் இத்தனை நாள் கண்ணாமூச்சி ஆட்டத்தை முடித்து வைக்கும் நாயகி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அவளை நேருக்கு நேராக பார்க்காமல் இருந்ததால் என்னவோ அவளை இன்று அங்கே பார்த்ததும் அவன் மனம் அவனையும் அறியாமல் துள்ளிக் குதித்து குத்தாட்டம் போடத் தொடங்கியது.

அவளும் அதே மனநிலையில் இருந்தாலோ என்னவோ அவனை அந்த இடத்தில் பார்த்ததுமே புன்னகை முகமாக அவன் முன்னால் வந்து நின்று
“என்ன சார் ஆறு மாதமாக ஆளையே காணோம்? அன்னைக்கு மிரட்டுனதை பார்த்து பயந்துட்டீங்களா?” இயல்பாக சிரித்து கொண்டே கேட்கவும் அவனோ சிறு வெட்கத்தோடு தன் தாடையை நீவி விட்டு கொண்டான்.

ஒரு சில கணத்துளிகள் அவர்கள் இருவருக்கும் இடையே அமைதி நிலவ
“உங்க பேரு என்ன?”

“உங்க பேரு என்ன?” இருவரும் ஒரே நேரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து கேட்க இருவர் முகங்களும் சொல்லி வைத்தாற் போல புன்னகையில் மலர்ந்து போனது.

“என் பேரு அர்ஜுன் இந்த காலேஜில் தான் மெனேஜ்மெண்ட் டிபார்ட்மெண்டில் பி.காம் ஃபைனல் இயர் படிக்கிறேன் நீங்க?”

“நான் ஃபேஷன் டிசைனிங் டிபார்ட்மெண்டில் பர்ஸ்ட் இயர்”

“பேரு சொல்ல மாட்டீங்களா?”

“எல்லாம் நாங்களே சொல்லணுமா? நீங்களும் உங்க மூளையை கொஞ்சம் தூசு தட்டலாமே!” அவளின் துடுக்குத்தனமான பேச்சில் வாய் விட்டு சிரித்தவன்

“பிரியா தானே உங்க பேரு?” என்று கேட்க

அவனை வியப்பாக திரும்பி பார்த்தவள்
“பரவாயில்லையே பாதி பெயரைத் தெரிந்து வைத்து இருக்கீங்க குட்” அவனை மெச்சுதலாக நோக்கினாள்‌.

“பாதி தானா? அப்போ முழுப்பெயர் பிரியா இல்லையா?”

“ஏங்க இவ்வளவு மாடர்ன் டைமில் யாராவது பிரியான்னு ஒரு தனிப்பெயரை வைப்பாங்களா?”

“அப்போ அந்த மாடர்ன் பெயரை சொல்லலாமே?” தானா இவ்வளவு இயல்பாக ஒரு பெண்ணிடம் பேசுகிறோம் என்று தன்னை எண்ணி வியந்து போனவன் தன் முகத்தில் எந்தவொரு மாற்றத்தையும் காண்பிக்காமல் அவளைப் பார்த்து புன்னகைத்தபடியே நின்றான்.

“காதல்ன்னு வந்தால் சில சில ரிஸ்க் எடுக்க தான் வேணும் அர்ஜுன் சார்! நீங்க என் முழுப்பெயரை கண்டுபிடிக்க அந்த ரிஸ்க் எடுக்கலாமே?”

“என்னது காதலா?” அர்ஜுன் போட்ட சத்தத்தில் அந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அனைவரும் அவர்களின் புறம் திரும்பி பார்க்க

அவசரமாக அவனருகில் வந்து நின்று அவனது கையைப் பிடித்து கொண்டவள்
“உஸ்ஸ்ஸ்! எதற்கு இப்போ இப்படி சத்தம் போடுறீங்க?” அதட்டலாக அவனைப் பார்த்து கேட்க அவனுக்கு தான் அங்கு நடப்பவற்றை எல்லாம் பார்த்து மயக்கம் வராத குறையாக இருந்தது.

“அப்போ லவ் இல்லையா?” அவளின் ஏக்கம் கலந்த கேள்வியில் அர்ஜுன் என்ன நினைத்தானோ அவளைப் பார்த்து

“இருக்கு!” என்றவாறே ஆமோதிப்பாக தலையசைக்க அதைப் பார்த்ததுமே அவள் முகம் முழுவதும் செந்தாமரையாக சிவந்து போனது.

அவள் மனதிற்குள் என்ன இருக்கிறது என்று அவனுக்கு தெரியாது ஆனால் அந்த கணம் அவன் மனதிற்குள் அவள் மலர்ந்த முகம் மட்டுமே ஆழமாக பதிந்து போனது.

பல வருடங்களாக பார்த்து பேசி பழகியது போலவே அர்ஜுனிற்கு அவளைக் காணும் போதெல்லாம் உள்ளுணர்வு சொல்லும்.

ஒரு சில தடவைகளே பார்த்த ஒரு பெண்ணின் மீது இத்தனை தூரம் நேசம் உருவாக கூடுமா என்பது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தாலும் அவளது அந்த துடுக்குத் தனமான பேச்சின் மீது அர்ஜுனுக்கு ஒரு தனி ஈர்ப்பு உண்டு.

அவளது மனதிற்குள் என்ன மாதிரியான உணர்வு இருக்கிறது என்று அவனுக்கு வெளிப்படையாக தெரியாவிட்டாலும் அவள் கண்களில் அவனுக்கான உரிமை நிறையவே இருந்தது அவனுக்கு தெளிவாக தெரிந்தது.

காதலிப்பதை விட காதலிக்கப்படுவது கூட ஒரு தனியான சுகத்தை அளிக்கும் உணர்வு தான் என்பதை அன்று அர்ஜுன் மனதார உணர்ந்து கொண்டான்.

அந்த குரல், அந்த கண்கள் அவை இரண்டும் அவன் மனதிற்குள் பசு மரத்தாணியாக பதிந்து போக இருவரும் ஒருவரை மறந்து ஒருவர் பார்த்து கொண்டிருக்கையில் அவள் செல்ல வேண்டிய பேருந்தும் அங்கே வந்து சேர்ந்தது.

அவளது தோழியர்களின் அழைப்பில் தன் சுயநினைவுக்கு வந்தவள் மனமேயின்றி அந்த இடத்தில் செல்வது போல அவனைத் திரும்பி திரும்பி பார்த்தபடியே பேருந்தில் ஏறிக் கொண்டாள்.

அவள் முக வாட்டத்தைப் பார்த்து தாளாமல் அர்ஜுன் புன்னகையுடன் அவளைப் பார்த்து கையசைக்க அந்த கையசைவில் முகம் மலர்ந்தவள் அவன் தன் விழியில் இருந்து மறையும் வரை கண் இமைக்காமல் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.

பிரியா சென்ற பேருந்து தன் விழிகளில் இருந்து மறையும் வரை இதழில் மறையாத புன்னகையுடன் அவளைப் பார்த்து கொண்டு நின்றவன் அந்த பேருந்து அந்த சாலையில் இருந்து மறைந்ததுமே ஒரு மந்தகாசப் புன்னகையுடன் தன் தலையைக் கோதிக் கொண்டு திரும்பி பார்க்க அங்கே தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டு வருண் நின்று கொண்டிருந்தான்.

அவனை அங்கே எதிர்பாராத அர்ஜுன் திருதிருவென விழிக்க
“டேய் கேடி! என்ன பார்வையாலே காதல் வலை வீசுறீங்களோ? கொஞ்ச நேரம் வெயிட் பண்ணா சொன்னால் அதற்கிடையில் வீட்டுக்கு போகணும் ஆத்தா வையும் என்கிற மாதிரி பஸ்ஸில் போறேன்னு இங்கே வந்து நிற்கிற? ஆனா இங்கே வேற என்னவோ நடந்த மாதிரி இருக்கு! என்னடா நடக்குது இங்க?” வருணின் கேள்வியில் வெட்கத்தோடு அவனது கையை எடுத்து அவன் நகங்கள் ஒவ்வொன்றாக இழுத்து இழுத்து விட்டவன் அங்கே நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் கூற அவன் கூறியவற்றை எல்லாம் கேட்ட வருண் தன் நெஞ்சில் கை வைத்து கொண்டு அங்கிருந்த பெஞ்சில் அதிர்ச்சியாக அமர்ந்து கொண்டான்……