நினைவு – 13

eiE6SA598903(1)

காலை விடியல் பறவைகளின் ஒலியோடும், பிரகாசமான கதிர்களின் ஒளியோடும் உலகத்தினரை தழுவிச் செல்ல அர்ஜுன் எப்போதும் போல தன் புத்துணர்ச்சி தரும் புன்னகையுடன் துயில் கலைந்து எழுந்து அமர்ந்து கொண்டான்.

வருணின் இல்லம் பல அறைகளைக் கொண்ட விசாலமான இல்லமாக இருந்தாலும் அர்ஜுனும், அவனும் சிறு பிராயம் முதலே ஒரு அறையில் தான் தங்கியிருப்பர்.

அதற்கான காரணம் கூட அவர்களுக்கு தெரியாது.

இரவு முழுவதும் கதையளந்து கொண்டு ஒரே அறையில் தங்கியிருப்பவர்கள் அப்படியே உறங்கிப் போய் விடுவர்.

சிறு வயதில் இருந்தே பழகிய பழக்கம் அது என்பதால் என்னவோ காலேஜ் முடிவடையும் இந்த தருணத்தில் கூட அவர்கள் அந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

எத்தனை விதமான வசதிகளோடு பல அறைகள் இருந்தாலும் நண்பனுடன் மனம் விட்டு பேசியபடி சிறு சிறு சேட்டைகளுடன் ஒரே அறையில் தங்கியிருப்பது கூட அவர்களுக்கு தனி சுகம் தான்.

முதல் நாள் மாலை தன் மனம் கவர்ந்தவளுடனான சந்திப்பை பற்றி சிந்தித்த படியே அமர்ந்திருந்த அர்ஜுன் தன் முன்னால் இருந்த அவளுக்கென்று வாங்கிய சேலையை தன் கையில் எடுத்து வைத்துப் பார்த்துக் கொண்டே
“சில்லு! நீ எப்படி என் மனசுக்குள்ள வந்தேன்னு இன்னமும் எனக்கு புரியல! ஆனா நீ இல்லாமல் இருக்க முடியாதுன்னு மட்டும் எனக்கு நன்றாகவே தெரியுது உன்கிட்ட நான் இதுவரைக்கும் பேசிய வார்த்தைகள் ரொம்ப ரொம்ப குறைவு ஆனால் உன் கண்ணில் நான் காதலை பார்த்தது ரொம்ப ரொம்ப அதிகம் இன்னும் மூணே மூணு மாதம் தான்! என்னோட படிப்பு முடிந்ததும் உன் கிட்ட வந்து என் மனதில் இருக்கும் ஆசைகளை எல்லாம் ஒன்று விடாமல் சொல்லி உடனே உன்னை எனக்கானவளாக என் நெஞ்சாங்கூட்டில் சேமித்து வைத்துக் கொள்ளுவேன்! ஐ லவ் யூ சில்லு!” தன் கண்களை மூடி காதல் ததும்ப பேசிக் கொண்டு இருக்கையில்

“மீ டூ அர்ஜுன்!” அவன் காதருகில் ஒரு பெண் குரல் கேட்கவே திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தவன் வெட்கப்படுவது போல பாவனை செய்தபடியே அமர்ந்திருந்த வருணைப் பார்த்ததும் தன் தலையில் மானசீகமாக அடித்துக் கொண்டான்.

“ஏன்டா ஏன்? காலங்கார்த்தாலேயே உன் வேலையை ஆரம்பித்துட்டியா?”

“யாரு நான் ஆரம்பித்தேனா? மவனே! நல்லா இழுத்து போர்த்திட்டு தூங்குற நேரத்தில் கண்ணே மணியே சில்லேன்னு லவ் டயலாக் பேசி என் காதை பஞ்சர் ஆக்கிட்டு இப்போ என்னையே கேள்வி கேட்குறியா? இப்படி தினம் தினம் என் கிட்ட லவ்வை சொல்லி என்னை போட்டு பாடாய் படுத்தாமல் அந்த பொண்ணு கிட்ட போய் உன் காதலை சொல்லலாம் தானே?”

“வருண் கண்ணா! எது எது…”

“அய்யோ! சாமி வேணாம் நான் எதுவும் கேட்கல! நீ மறுபடியும் இந்த சாமியார் மாதிரி எது எது அப்படி இப்படி அது இதுன்னு பேசி என்னை விடியற்காலையிலே அழ வைக்காதே! மீ பாவம்! உனக்கு கடைசியாக ஒரு எச்சரிக்கை! இன்னும் சரியாக மூணு மாதம் கழித்து நீ எப்போ பிரியாவை முதன் முதலாக சந்தித்தாயோ அதே நாளில் அவ கிட்ட உன் காதலை சொல்லலேன்னு வை அப்புறம் நானே அவகிட்ட போய்…”

“டேய்!”

“பதறாதே! பதறாதே! நான் அவகிட்ட போய் நீ அவங்களை லவ் பண்ணுறதை சொல்லி கொடுத்துடுவேன் ஜாக்கிரதை!” வருண் கோபமாக தன் இடுப்பில் கை வைத்து கொண்டு தன் முன்னால் அமர்ந்திருந்தவனை முறைத்து பார்த்தபடியே கூறவும்

அவனது கூற்றில் வாய் விட்டு சிரித்துக் கொண்ட அர்ஜுன்
“அதெல்லாம் நான் சிறப்பாக பண்ணிடுவேன் நீ எதுவும் கவலைப்படாதே! இப்போ காலேஜுக்கு போகலாம் கிளம்பு” என்று விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொள்ள

அவனோ
“இது எங்கே போய் முடியப் போகுதோ? கடவுளே!” என தனக்குள் முணுமுணுத்துக்கொண்டே மற்றைய அறைக்குள் இருந்த குளியலறையை நோக்கி நகர்ந்து சென்றான்.

வழக்கம் போல அன்றும் தங்கள் காலேஜ் முடிந்ததும் பிரியாவிற்காக காத்து நிற்கும் பேருந்து நிலையத்தில் அர்ஜுன் மற்றும் வருண் வந்து நிற்க அதே நேரம் அவளும் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.

நேற்று தன்னுடைய பிறந்தநாள் என்று சொன்னதற்காக இன்று ஏதாவது பேசுவானா என்று எதிர்பார்ப்பாடு பிரியாவின் கண்கள் அர்ஜுனை நோக்க அவளைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன் இத்தனை நாட்களில் என்றும் இல்லாதவாறு முதன் முதலாக அவளின் புறம் நடந்து சென்று அவளருகில் நின்று கொண்டான்.

அவனது அருகாமையில் என்றும் இல்லாத படபடப்புடன் பிரியா அவனை நிமிர்ந்து பார்க்க அவளைப் பார்த்து கேள்வியாக தன் புருவம் உயர்த்தியவன் இன்னும் சிறிது அவளின் புறமாக நகர்ந்து நிற்க மறுபுறம் இவற்றை எல்லாம் பார்த்து கொண்டிருந்த வருணிற்கோ தன் முன்னால் நிற்பது அர்ஜுன் தானா? என்று ஆச்சரியமாக இருந்தது.

இத்தனை நாட்களாக கண்களாலேயே ஜாடை பேசிக் கொண்டு நின்றவன் இப்போது தைரியமாக அந்த பெண்ணின் அருகில் சென்று நிற்பது அவனுக்கு ஏனோ ஒரு பெரும் சிக்கலை தீர்த்தது போன்று இருந்தது.

மெல்ல மெல்ல அர்ஜுன் மற்றும் பிரியா ஒருவரோடு ஒருவர் சிறிது மனம் விட்டு பேசத் தொடங்கி இருக்க தன் நண்பனின் காதல் எந்த பிரச்சனையும் இல்லாமல் சேர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் வருணின் மனதிற்குள் ஆழமாகப் பதிந்தும் போனது.

அதன் பிறகு வந்த நாட்கள் எல்லாம் அர்ஜுன் மற்றும் பிரியா அடிக்கடி சிறிது சிறிதாக பேசத் தொடங்கியும் இருந்தாலும் அவர்கள் சந்திக்கும் இடத்தில் தான் எந்த மாற்றமும் வந்ததில்லை.

நாட்கள் அதன் பாட்டில் நகர்ந்து சென்று கொண்டிருக்க அர்ஜுன் காத்திருந்தது போலவே அவனது இறுதி பரீட்சைகளும் சிறப்பாக நிறைவுற்றிருக்க மறுபுறம் பிரியாவும் தன் முதலாம் ஆண்டு படிப்பை முடித்து விட்டு இரண்டாம் வருடத்தில் அடியெடுத்து வைத்திருந்தாள்.

அர்ஜுன் மற்றும் வருண் தங்கள் படிப்பு முடிந்த கையோடு தங்கள் குடும்ப பொறுப்பின் கீழ் இருக்கும் அவர்கள் கம்பெனிகளை பொறுப்பெடுத்து கொள்ள ராமநாதன் வெகுநாட்களாக தன் மனதிற்குள் வைத்துக் கொண்டிருந்த பொறுப்பை சரியாக செய்து விட்ட திருப்தியோடு நிம்மதியாக இருக்க தொடங்கி இருந்தார்.

அன்று அர்ஜுன் வெகு நாட்களாக எந்த நாளுக்காக காத்திருந்தானோ அந்த நாளும் இனிதே வந்து சேர்ந்தது.

காலை நேரம் எப்போது வந்து சேரும் என்று கடிகாரத்தை பார்ப்பதும் வானத்தை பார்ப்பதுமாக அமர்ந்திருந்தவன் அதிகாலை விடியலை உணர்ந்ததுமே மனம் நிறைந்த சந்தோஷத்துடன் தயாராகி வந்து நிற்க இரவு முழுவதும் தன் நண்பனின் படபடப்பை பார்த்து கொண்டிருந்த வருண் சிறு புன்னகையுடன் அவனது தோளில் தன் கரத்தை ஆதரவாக பதித்தான்.

“டேய் வருண்! என்னடா இவ்வளவு சீக்கிரமா எழுந்திருச்சுட்ட? இன்னைக்கு ஏதோ பெரிதாக நடக்க போகுது போல!”

“ஆமா! ஆமா! என் சாமியார் நண்பன் அவன் காதலை சொல்லப் போறதே ஒரு அதிசயம் தானே! அதை விட வேற என்ன சம்பவம் நடந்து விடப் போகிறது?” வருணின் கேள்வியில் சிறிது வெட்கத்தோடு தன் தலையை கோதிக் கொண்டவன்

“டேய் வருண்! நீயும் என் கூட வர்றியா?” கேள்வியாக அவனை நோக்கினான்.

“நான் எதற்குடா? நீ போயிட்டு வா! எப்படியும் அவங்க நீ உன் காதலை சொன்ன பிறகு இல்லைன்னு சொல்ல மாட்டாங்க அதனால் அவ்வளவு தூரம் நான் உன் கூட வந்து அப்புறம் நீங்க இரண்டு பேரும் ஜோடியாக போக நான் ‘எங்கே செல்லும் இந்த பாதைன்னு’ புலம்பிட்டு நிற்கணும்! இதெல்லாம் தேவையா? அதுதான் நானே இந்த விளையாட்டில் இருந்து விலகி நின்னுடுறேன்!”

“அப்படி எல்லாம் உன்னை நான் கழட்டி விடுவேனா? நீ என் நண்பன்டே!” வருணை தன் தோளோடு சேர்த்து அணைத்தபடியே அர்ஜுன் கூற

அவனது கையை தன் தோளில் இருந்து தள்ளி விட்டவன்
“இந்த நண்பன்டே, டீ போண்டா எல்லாம் கடைசியில் என்ன ஆச்சுன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் அதனால் இந்த ஐஸ் வைக்கும் வேலையை விட்டுட்டு கிளம்பு!” என்றவாறே திரும்பி செல்ல போகத் திரும்பி விட்டு பின் சட்டென்று திரும்பி அவனை அணைத்து கொள்ள அர்ஜுனும் நெகிழ்வோடு அவனை அணைத்துக் கொண்டான்.

“ஆல் தி பெஸ்ட் டா சாமியார்!” சிறு புன்னகையுடன் அவனது தலையை கலைத்து விட்டவன் பின்னர் மனதிற்குள் ஏனோ நெருடலாக தோணவே

“கொஞ்சம் வெயிட் பண்ணு அர்ஜுன் நானும் ரெடி ஆகிட்டு வர்றேன்” என்று கூறவும்

“ஹேய்! நிஜமாவா? சரி சரி சீக்கிரமா ரெடி ஆகிட்டு வா!” அர்ஜுன் சந்தோஷம் தாண்டவமாட அவனைப் பார்த்து கூறி விட்டு அங்கிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டான்.

வருண் மனதார தன் நண்பனை எண்ணி சந்தோஷமாக உணர்ந்தாலும் அந்த சந்தோஷத்தை தாண்டி ஏதோ ஒரு வித்தியாசமான உணர்வு அவன் மனதை அரித்து கொண்டே இருந்தது.

என்ன மாதிரியான உணர்வு அது என்பதை அவனால் பிரித்தறிய முடியாது போகவே தற்காலிகமாக அந்த எண்ணத்தில் இருந்து தன்னை வெளியே கொண்டு வந்தவன் முயன்று தன் மனதை நிதானப்படுத்திக் கொண்டு தயாராகி அர்ஜுன் முன்னால் சென்று நின்றான்.

வருணை தன் முன்னால் பார்த்ததுமே சிறிது படபடப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தவன்
“டேய் வருண்! பிரியா கிட்ட எப்படி போய் என் காதலை சொல்லுறதுன்னு ஒரே பதட்டமாக இருக்குடா!” என்று கூறவும்

அவனைப் பார்த்து தன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தவன்
“பெரிய இவனாட்டம் என்கிட்ட என்ன என்னவோ எல்லாம் சொன்ன! இப்போ இப்படி பயப்படுற! அது தான் பிரியா கூட இவ்வளவு சகஜமாக பேச பழகிட்ட தானே! அப்புறம் என்ன தயக்கம்? உனக்கு அப்படி தயக்கமாக இருந்தால் இந்த கண்ணாடி முன்னால் நின்று பிரியா உன் முன்னால் நிற்பது போல் கற்பனை பண்ணி நீ சொல்ல வேண்டிய விடயங்களை எல்லாம் சொல்லி ஒரு இரண்டு, மூணு தடவை பிராக்டீஸ் பண்ணு பயம் போயிடும்! நானும் அப்படித்தான் பண்ணுவேன்” என்றவாறே அவனை அந்த அறையில் இருந்த ஆளுயரக் கண்ணாடியின் முன் சென்று நிறுத்த அர்ஜுனோ அவனை ஒருமார்க்கமாக ஏற இறங்கப் பார்த்து கொண்டு நின்றான்.

“என்னடா ட்ரை பண்ணு!”

“உன் கிட்ட போய் சொன்னேனே!” வருணைப் பார்த்து தன் தலையில் தட்டிக் கொண்டவன் சிறிது தயக்கத்துடன் கண்ணாடியைத் திரும்பி பார்க்க அதில் வருண் பிரியா என்று பெயரை எழுதி வைத்திருந்தான்.

“டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா!” அர்ஜுன் பாவமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு கூறவும்

“ஓவரா பேசாமல் சொன்னதை செய்டா!” சிறு அதட்டலோடு அவனின் முகத்தை கண்ணாடியின் புறம் திருப்பியவன் அவனை பேசுமாறு கூறவும் கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு கொண்டவன் பின் மெல்ல தன் கண்களை திறந்து கொண்டான்.

“ஹாய் பிரியா! ஐ யம் அர்ஜுன்! இதை நான் ரொம்ப நாளாகவே உன் கிட்ட சொல்ல ட்ரை பண்ணேன் பட் முடியல! ஆனா இன்னைக்கு சொல்லிடுவேன்! ஐ லவ் யூ பிரியா! இது வரைக்கும் எந்த பொண்ணு கிட்டயும் நான் இப்படி நின்று பேசியது இல்லை நான் பார்த்து வியந்த பொண்ணுங்க இரண்டு பேரு தான்! ஒண்ணு என் சாவித்திரிம்மா! இன்னொன்று நீ! சாவித்திரிம்மா அன்பை பார்த்து எந்தளவிற்கு நான் வியந்து போனேனோ அதே அளவுக்கு வியந்து போனது உன் துருதுரு நடவடிக்கைகளைப் பார்த்து தான்! நான் உன்னோடு பேசிய வார்த்தைகள் குறைவாக இருக்கலாம் ஆனால் உன் மேல் இருக்கும் அன்பு அதற்கு அளவே இல்லை! நீ என் மனைவியாக, என் குழந்தைகளுக்கு அம்மாவாக, என் பிரண்டா எல்லாமுமாக என்னோடு கடைசி வரைக்கும் இருக்கணும்னு நான் ஆசைப்படுகிறேன் நீ இருப்பியா?” காதல் பொங்க தன் மனதிற்குள் இருக்கும் ஆசைகளை கூறி கொண்டு நின்ற நண்பனைப் பார்த்து ஒரு கணம் ஆச்சரியம் கொண்ட வருண்

‘அர்ஜுன் ஆசைப்பட்ட எல்லாம் அவனுக்கு கிடைக்கணும் சின்ன வயதிலிருந்து நிறைய விடயங்களை இழந்துட்டான் இனிமேலாவது அவன் வாழ்க்கையில் அவன் ஆசைப்பட்ட எல்லாம் நடக்கணும்’ தன் மனதார கடவுளிடம் வேண்டிக் கொண்டவாறே அவனின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு அவனையும் அழைத்துக் கொண்டு படியிறங்கி ஹாலை நோக்கி நடந்து சென்றான்.

அவர்கள் வருகைக்காக காத்திருந்த சாவித்திரி முகம் நிறைந்த புன்னகையுடன்
“இப்போ தான் இரண்டு ராஜ்குமாரர்களுக்கும் விடிஞ்சதோ?” என்று கேட்கவும்

அவரின் இருபுறமும் வந்து நின்று கொண்ட அவரது மகன்கள்
“இன்னைக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான நாள்ம்மா! அது தான் அதற்கு முழுமையாக தயார் படுத்தி அர்ஜுனை அழைத்துட்டு வந்து இருக்கேன் இன்னைக்கு நடக்கப்போகிற சம்பவத்தை நான் வீட்டுக்கு வந்து சொல்லும் போது நீங்க அப்படியே ஆடிப்போய் நிற்பீங்கன்னா பாருங்களேன்!”

“ஆமா சாவித்திரிம்மா! இன்னைக்கு ரொம்ப முக்கியமான நாள்! நம்ம எல்லாருக்கும் மறக்க முடியாத நாளாக மாறப் போகிறது வீட்டுக்கு வந்து எல்லாவற்றையும் விவரமாக சொல்லுறோம் இப்போ நாங்க கிளம்புறோம்” என்றவாறே அவரது இரு கன்னங்களிலும் முத்தமிட்டு விட்டு சென்று விட அவரோ விசித்திரமாக அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டு நின்றார்.

முகம் கொள்ளாப் புன்னகையுடன் சிரித்துப் பேசிக்கொண்டே செல்லும் தன் மகன்களைப் பார்த்து கொண்டு நின்ற சாவித்திரி இன்னும் சிறிது நேரத்தில் அந்த சந்தோஷம் முழுவதும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போகப் போவதை அறியாமலேயே தன் வேலைகளை கவனிக்க தொடங்கினார்.

வருண் மற்றும் அர்ஜுன் இருவரும் வழமை போலவே பேசிக் கொண்டு பிரியாவின் டிபார்ட்மெண்ட் புறமாக வந்து சேர அதற்குள் பிரியா அவளது வகுப்பிற்குள் சென்று இருந்தாள்.

இப்போது அவளைப் பார்க்காவிட்டால் மாலை கல்லூரி முடியும் வேலை தான் அவளை சந்திக்க முடியும் என்றிருக்க அர்ஜுனும், வருணும் அவர்கள் கல்லூரி வளாகத்திலேயே சிறிது நேரம் சுற்றி வரத் தொடங்கினர்.

எப்போதும் இறக்கை கட்டி கொண்டு பறக்கும் நேரம் இன்று ஆமை வேகத்தில் நகர்வது போல இருக்கவே ஒவ்வொரு நிமிடங்களையும் ஒவ்வொரு வருடத்திற்கு சமனாக நெட்டித் தள்ளியவர்கள் கல்லூரி முடிவடையும் நேரம் எப்போதும் போல பிரியாவை சந்திக்கும் அந்த பேருந்து தரிப்பிடத்தில் வந்து நின்று அவளது வருகைக்காக காத்துக் கொண்டு நின்றனர்.

தன் கையில் இருந்த கடிகாரத்தை பார்ப்பதும் அவள் வரும் பாதையைப் பார்ப்பதுமாக நின்று கொண்டிருந்த அர்ஜுன் திடீரென ஏதோ ஞாபகம் வந்தவனாக
“அய்யய்யோ!” தன்னை மறந்து சத்தமிட்டவாறே தன் தலையில் கை வைத்து கொள்ள

அவனது சத்தத்தில் பதட்டத்துடன் அவனருகில் வந்து நின்ற வருண்
“அர்ஜுன் மறுபடியும் என்னடா ஆச்சு? இன்னைக்கு என்ன பிரியாவோட பாட்டியோட பிறந்தநாளா?” கேள்வியாக அவனை நோக்க

அவனோ
“பிரியாவுக்கு வாங்கிய சேலையை எடுத்து வர மறந்துட்டேன் டா!” கவலை நிறைந்த குரலில் அவனைப் பார்த்து கூறினான்.

“இவ்வளவு தானா? இதற்கு போய் இவ்வளவு தூரம் ஷாக் ஆகுற? நீ இங்கேயே இரு நான் போய் எடுத்துட்டு வர்றேன் அந்த சேலையை எங்கே வைத்து இருக்கேன்னு சொல்லு”

“இல்லைடா வருண்! பிரியா வர்ற நேரம் ஆச்சு நான் என் கையால் அதைக் கொடுக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன் நீ இங்கேயே இரு நான் ஒரு ஐந்து நிமிடத்தில் போய் எடுத்துட்டு வந்துடுறேன் அதுவரைக்கும் பிரியாவை இங்கே இருந்து போகாமல் பார்த்துக்கோ” என்று விட்டு அர்ஜுன் நொடியும் தாமதிக்காமல் தன் வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டு செல்ல வருண் ஒருவித பதட்டமான மனநிலையுடன் அவன் சென்ற வழியையே பார்த்துக் கொண்டு நின்றான்.

வழக்கம் போன்று அர்ஜுனை தன் பார்வையாலேயே தேடிக் கொண்டு வந்த பிரியா அவனை அங்கே காணாமல் தவிப்போடு வருணைப் பார்க்க அவளைப் பார்த்து சிறு புன்னகை சிந்தியவன்
“அர்ஜுன் உங்களை கொஞ்சம் வெயிட் பண்ண சொன்னான்” என்று கூற அதைக் கேட்ட பின்னரே அவள் முகத்தில் சிறிது தெளிவு பிறந்தது.

பிரியா செல்லும் பேருந்தும் அன்று நேரத்திற்கு வந்து விட அர்ஜுன் வருவான் என்று அந்த பேருந்தில் ஏறாமல் நின்றவள் தன் நண்பிகள் இருவரையும் தன்னோடு இருக்கும் படி கெஞ்சலாக கேட்டுக் கொண்டாள்.

பிரியா மற்றும் அர்ஜுன் பற்றி அவளது நண்பிகளுக்கும் மேலோட்டமாக தெரிந்து இருந்ததால் என்னவோ அவளது அன்பான வேண்டுகோளில் அவர்களும் அவளுடன் சிறிது நேரம் காத்து நின்றார்கள்.

அவள் காத்திருப்பை நீட்டிக்காமல் ஒரு சில நிமிடங்களிலேயே அந்த பேருந்து நிறுத்தத்தை வந்து சேர்ந்த அர்ஜுன் வீதியின் மறுபுறமாக தன் வாகனத்தை நிறுத்தி விட்டு அவளை நோக்கி நடந்து வரப்போக திடீரென வேகமாக அந்த வீதி வழியாக வந்த கார் ஒன்று அவனை மோதப் பார்க்கவே அவனோ அவசரமாக சற்று பின்னோக்கி நகர்ந்து நின்று கொண்டான்.

கார் ஒன்று அவனை மோத வந்ததைப் பார்த்த வருண் மற்றும் பிரியா அவன் விலகியதை கவனியாமல்
“அர்ஜுன்!” என்றவாறே பதட்டத்துடன் அவனை நோக்கி வரப் போக அதற்குள் மற்றைய புறமாக வந்த கேப் ஒன்று பிரியாவின் மீது மோதி அவளை தூக்கி வீசி இருந்தது.

ஒரு நொடிக்கும் தாமதமான அந்த தருணத்தில் நடந்த அந்த விபத்தில் அர்ஜுன் தன் கையிலிருந்த பொதியை நழுவ விட்டபடியே
“பிரியா!” என அலறிக்கொண்டே அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்க பிரியாவின் கண்களோ அர்ஜுனை வெறித்தவாறே மெல்ல மெல்ல மூடிக்கொண்டது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!