நினைவு – 16

eiE6SA598903

நினைவு – 16

சொந்தங்களும், நண்பர்களும் நிறைந்து போய் இருக்க எளிமையான அலங்காரங்களுடன் ஹரிணியின் இல்லம் ஜொலித்து கொண்டிருக்க பரபரப்போடும், அதைத் தாண்டிய சந்தோஷத்துடனும் மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மி அங்குமிங்கும் ஓடியாடி பம்பரம் போல் சுழன்று கொண்டே வேலை செய்து கொண்டிருந்தனர்.

தங்கள் மகளின் வாழ்வில் ஏதேதோ நடந்து முடிந்திருக்க அதை எண்ணியே மனதால் தினம் தினம் வருத்திக் கொண்டிருந்தவர்கள் அவளது திருமணம் கை கூடி வந்த செய்தியை கேட்ட பின்னர் எந்தளவிற்கு சந்தோஷம் அடைந்திருப்பார்கள் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

அன்று ஹாஸ்பிடலில் வைத்து சிறு நொடியும் தாமதிக்காமல் ஹரிணியிடமிருந்து வருணை திருமணம் செய்ய சம்மதம் கிடைத்து இருக்க அன்றிலிருந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குள் அவர்கள் இருவரினதும் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் வெகு விரைவாக நடந்து முடிந்து இருந்தது.

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை முழுமையாக உணர்ந்து கொள்வதற்கு முன்னரே வருணிற்கு எல்லாம் நடந்து முடிந்தது போல இருந்தது.

ஹாஸ்பிடலில் அவளது பெற்றோர் முன்னிலையில் எந்த ஒரு விடயத்தையும் வெளிப்படையாக கேட்க முடியாது என்ற ஒரு நிலையில் வருண் கோபத்தோடும், ஆற்றாமையோடும் அங்கிருந்து புறப்பட்டு இருந்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை அவளைத் தொடர்பு கொள்ள அவன் செய்யாத முயற்சிகள் இல்லை.

ஹரிணி நடந்த எல்லா விடயங்களையும் தெரிந்து கொண்ட பின்பும் எதற்காக தன்னை திருமணம் செய்ய சம்மதிக்க வேண்டும் என்பது இன்று வரை அவனுக்கு புரியவில்லை.

ஆரம்பத்தில் ஹரிணி தான் அர்ஜுனின் பிரியா என்று தெரியாமல் அவன் மனதிற்குள்ளும் அவள் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது என்னவோ உண்மைதான் ஆனால் எந்த நொடி அவள் தான் அர்ஜுன் நேசம் வைத்து கொண்டிருக்கும் பிரியா என்று தெரிந்ததோ அப்போதே அவன் மனதிற்குள் இருந்த அந்த எண்ணம் முற்றாக அழிந்து போய் விட்டது.

அர்ஜுன் அவளை எந்தளவுக்கு நேசித்தான், நேசித்துக் கொண்டிருக்கிறான் என்பதை நன்றாக அறிந்தவன் அவன் ஒருவனே அப்படியிருக்கையில் அவளை திருமணம் செய்ய அவனால் எப்படி சம்மதிக்க முடியும்?

இந்த திருமணம் வேண்டாம் என்று சொன்னால் தன் தாய் மற்றும் தந்தைக்கு தான் கொடுத்த வாக்கு, அவர்கள் மனதிற்குள் தன்னால் வளர்ந்து விட்ட ஆசைகள் அவை அனைத்துமே சுக்குநூறாகிப் போய் விடும் என்பதும் அவனுக்கு தெரியும்.

இதுநாள் வரை திருமணமே வேண்டாம் என்று விட்டு இப்போது திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்டு இரு வீட்டார் மனதிலும் பல்வேறு ஆசைகளை தூண்டி விட்டு எதுவுமே வேண்டாம் என்று சட்டென்று விலகிப் போக அவனால் முடியவில்லை.

தன் திருமணம் பற்றிய தன் அன்னையின் ஆசைகள், எல்லாம் சரியாக நடந்து விட வேண்டும் என்று நித்தமும் தன் கவலையை மறைத்து இயல்பாக இருப்பது போல் தன்னை காட்டிக் கொள்ளும் தன் தந்தையின் முகம் என ஒவ்வொரு விடயமும் அவனை சுற்றி நின்று கொண்டு மேலும் மேலும் அவனை பாடாய் படுத்த அதை எல்லாம் தாண்டி அவன் பார்வை வட்டத்திற்குள் நிற்பது அர்ஜுன் ஒருவனே.

அர்ஜுனுக்கு குணமடைந்து விட்டாலாவது ஏதாவது செய்து இந்த விடயங்களை எல்லாம் நிவர்த்தி செய்து விடலாம் ஆனால் அவனுக்கோ அங்கே என்ன நடக்கிறது என்பது கூட புரியாதிருக்கையில் யாரிடம் சென்று இதைப் பற்றி பேசி புரிய வைப்பது என்பது வருணுக்கு தெரியவில்லை.

இந்த நிச்சயதார்த்த பேச்சு ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது தனக்காக தன் திருமணத்திற்காக தன் பெற்றோர் பார்த்து இருக்கும் ஹரிணி தான் அர்ஜுனின் பிரியா என்று சொல்லி விட வேண்டும் என்று அவன் பலமுறை முயன்றும் அதை சொல்ல அவனுக்கு தைரியம் வரவில்லை.

ஏற்கனவே அந்த பிரியாவினால் தான் அர்ஜுன் இந்த நிலையில் இருக்கிறான் என்று அவர்கள் வருந்தி கொண்டு இருக்கிறார்கள் இந்த தருணத்தில் எல்லா விடயங்களையும் சொல்லுவது எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அவனுக்கு தெரியாத ஒன்று அல்ல.

இந்த திருமணத்தை நிறுத்த எந்த பக்கம் செல்ல நினைத்தாலும் ஏதோ ஒரு தடை அவனுக்கு முன்னால் சென்று நின்று கொண்டு அவனைப் பார்த்து ஏளனமாக சிரித்துக் கொண்டு நின்றது.

நிலைமை தன் கையை மீறி போய் விடுவதற்குள் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு வருண் இதற்கு எல்லாம் காரணகர்த்தாவான ஹரிணியை சந்திக்க எண்ணி காத்திருக்க மறுபுறம் அவளோ தன் மனதிற்குள் நினைத்ததை எல்லாம் எப்படியாவது எந்தவொரு தடையும் இல்லாமல் செய்து முடித்து விட வேண்டும் என்று உறுதியாக எண்ணிக் கொண்டிருந்தாள்.

அர்ஜுன் தான் எங்கே செல்கிறோம், எதற்காக செல்கிறோம், என்ன நடக்கப் போகிறது என்று எதுவுமே தெரியாமல் புது உடையணிந்து தயாராகி கொண்டிருக்க அவனருகில் அமர்ந்திருந்த வருணோ அவனது கையாலாகாத நிலையை எண்ணி வருந்தியவனாக கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தான்.

ஹரிணியின் வீட்டிற்கு செல்வதற்காக எல்லாப் பொருட்களையும் ஒழுங்கு படுத்தி விட்டு அவனது அறையை நோக்கி வந்த சாவித்திரி வெகுவான சிந்தனையுடன் எங்கோ ஒரு மூலையை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த வருணின் அருகில் வந்து அவனது தோளில் கை வைக்க தன் தோளில் பட்ட ஸ்பரிசத்தில் திரும்பி பார்த்தவன் அங்கே நின்று கொண்டிருந்த தன் அன்னையை பார்த்ததும் முயன்று வரவழைத்து கொண்ட புன்னகையுடன் அவர் முன்னால் எழுந்து நின்று கொண்டான்.

“என்னாச்சு வருண்? உடம்புக்கு எதுவும் முடியலயா? முகம் எல்லாம் வாடிப் போய் இருக்கு!”

“இ… இல்லை ம்மா! அப்படி எல்லாம் எதுவும் இல்லை நான் நல்லா தான் இருக்கேன்”

“நான் ஒண்ணு கேட்டால் தப்பா எடுத்துக்க மாட்ட தானே வருண்?”

“சேச்சே! என்னம்மா இது? நீங்க என்ன வேணும்னாலும் கேளுங்க!”

“உனக்கு ஹரிணியை கல்யாணம் பண்ணிக்க பூரண சம்மதம் தானே?” சாவித்திரியின் கேள்வியில் வருணின் பார்வை சட்டென்று தன் அருகில் நின்று கொண்டிருந்த அர்ஜுனின் புறமாக திரும்பியது.

“அர்ஜுன் நம்ம வீட்டு பையன் வருண்! அவனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நாங்க பார்த்துட்டு இருக்க மாட்டோம்!” வருண் அர்ஜுனை எண்ணித் தான் இந்த திருமணத்திற்கு தயங்குகிறான் என்ற எண்ணத்தோடு சாவித்திரி அவனைப் பார்த்து கூறவும்

அவரைப் பார்த்து இயல்பாக புன்னகைத்து கொண்டவன்
“அது எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்மா!” என்றவாறே அர்ஜுனின் தலையை வருடிக் கொடுத்தான்.

“வருண்! உனக்கு ஹரிணிக்கு நடந்த விபத்து பற்றி எல்லாம் தெரியும் அதை வைத்து அந்த பொண்ணை நிறைய பேர் வேறு மாதிரி பார்த்து இருக்காங்க நீயும் அதேமாதிரி அப்படி எதுவும் நினைத்து விடக்கூடாது டா கண்ணா சரியா? அவளை எந்த நிலையிலும் காயப்படுத்தி விடாதேடா கண்ணா!” சாவித்திரி தன் மகனின் கன்னத்தில் கையை வைத்து ஆதரவாக தட்டிக் கொடுத்தபடியே கூறவும்

‘அர்ஜுனோட பிரியாவுக்கு என்னால் எந்த கஷ்டமும் வராதும்மா!’ தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டதை வெளியே கூற முடியாது அவரைப் பார்த்து இயல்பாக தலையசைத்தவன்

“சரிம்மா கிளம்பலாமா?” என்று கேட்க

“அட ஆமா! நேரம் ஆகுது இல்லை சரி வாங்க போகலாம்” என்றவாறே முகம் கொள்ளாப் புன்னகையுடன் சாவித்திரி படியிறங்கி செல்ல

தன் நண்பனின் கையை தன் ஒரு கையால் பற்றிக் கொண்டவன்
‘ஹரிணியோடு நான் கண்டிப்பாக பேசியே ஆகணும்’ தன் மனதிற்குள் உறுதியாக முடிவெடுத்து கொண்டவனாக அவரைப் பின் தொடர்ந்து சென்றான்.

மிகவும் எளிமையான அலங்காரங்களுடன் ஹரிணியின் இல்லம் திருமணக் கோலம் பூண்டிருக்க அப்படியான அலங்காரங்களை எல்லாம் இதற்கு முன் பார்த்திராதவன் போல காரில் இருந்து துள்ளி இறங்கிய அர்ஜுன் அவற்றை எல்லாம் பார்த்து கை தட்டி சிரித்துக் கொண்டே ஆனந்தமாக அங்குமிங்கும் ஓடியாடி திரிய தொடங்கினான்.

“அய்யோ அர்ஜுன்!” என்றவாறே ராமநாதன் அவன் பின்னால் செல்ல போக

“அப்பா நான் அர்ஜுனைப் பார்த்து கூட்டிட்டு வர்றேன்” அவசரமாக அவர் கையை பிடித்து தடுத்தவன் சிறு புன்னகையுடன் அவனின் பின்னாலேயே நிழல் போல நடந்து கொண்டு இத்தனை பெரிய விளைவுகளை ஏற்படுத்திய ஹரிணி எங்கேயாவது தென்படுகிறாளா என்று வெகு மும்முரமாக தேடத் தொடங்கினான்.

அவன் அவளைத் தேடத் தொடங்கி ஒரு சில நிமிடங்கள் கடந்திருந்த நிலையில் அர்ஜுனின் குரல் அந்த இடத்தில் கேட்கவில்லை என்பதை உணர்ந்தவனாக பதட்டத்துடன் சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்டவன் அந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி வெண்ணிறம் மற்றும் ஊதா நிறம் கலந்த ஒரு பெரிய காகிதப்பூ மரத்தின் கீழ் அர்ஜுன் நின்று கொண்டிருக்க அவனருகில் முகம் கொள்ளாப் புன்னகையுடன் அடர் பச்சை நிறத்தில் அடர் ஊதா நிற பட்டி பிடிக்கப்பட்ட பட்டு சேலையில் மிகவும் எளிமையான அலங்காரங்களுடன் ஹரிணி நின்று கொண்டிருந்ததைக் கண்டு கொண்டான்.

அவளை அந்த இடத்தில் பார்த்ததுமே அத்தனை நாட்களாக தான் மனதிற்குள் நித்தமும் தன் நிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்த நிகழ்வுகள் காட்சியாக விரிய அத்தனை நாள் வருத்தமும் கோபமாக ஒன்று சேர வருண் வேகமாக அவளை நோக்கி நடந்து சென்றான்.

“உன் மனதில் என்ன நினைத்துட்டு இருக்க?” வருணின் திடீர் அதட்டல் கேள்வியில் அதிர்ச்சியாக திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தவள்

“வருண் அண்ணா! நீங்க தானா? வாங்கண்ணா எப்படி இருக்கீங்க?” என்று கேட்க இம்முறை அதிர்ச்சியாகி நிற்பது அவனின் முறையாகிப் போனது.

“அண்ணாவா?”

“ஆமா நீங்க அர்ஜுனோட பிரண்டா இருந்தாலும் எனக்கு அண்ணா மாதிரி தானே? இத்தனை நாட்களாக என் அர்ஜுனை நல்லபடியாக பார்த்து அவருக்கு துணையாக வேறு இருந்து இருக்கீங்க அதற்கு எல்லாம் ரொம்ப ரொம்ப நன்றி!”

“உன்னோட அர்ஜுனா? அய்யோ! இங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு எதுவுமே புரியல! அன்னைக்கு ஹாஸ்பிடலில் வைத்து என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னு சொன்ன! இப்போ அண்ணான்னு சொல்லுற என்னைப் பார்த்தால் உனக்கு என்ன இளிச்சவாயன் மாதிரி தெரியுதா?” வருண் தன் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு பற்களை கடித்தபடியே அவளைப் பார்த்து கேட்க

கண்கள் கலங்க அவனைப் பார்த்து தன் இரு கரம் கூப்பி நின்றவள்
“நான் என்னோட சுயநலத்திற்காக உங்க வாழ்க்கையையும் பணயம் வைத்துட்டேன் அதற்கு முதலில் என்னை மன்னித்து கொள்ளுங்க” என்று கூற அவளின் கூற்றில் வருணின் முகம் குழப்பத்தால் நிறைந்து போனது.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு நிற்பதை மாறி மாறிப் பார்த்து கொண்டு நின்ற அர்ஜுன் ஹரிணியின் அருகில் வந்து நின்று கொண்டு
“ஏன் பிரியா நீ அழுவுற? இந்த வருண் உனக்கு சாக்லேட் வாங்கித் தரலயா? அவன் வெரி பேட் பாய்! நான் உனக்கு எல்லாம் வாங்கித் தர்றேன் நீ அழுவாதே!” என்றவாறே அவளது கண்களைத் துடைத்து விட

புன்னகையோடு அவனது கையைப் பிடித்துக் கொண்டவள் வருணின் புறம் திரும்பி
“நான் எதற்காக இதெல்லாம் பண்ணுறேன்னு உங்களுக்கு எல்லாம் விலாவாரியாக சொல்லுறேன் அதற்கு முதல்ல உள்ளே போகலாம் வாங்க” என்றவாறே திரும்பி நடக்க

“என்னால் உள்ளே வர முடியாது!” வருணின் குரல் உறுதியாக ஒலித்தது.

“ப்ளீஸ் இப்போ என்னால எதையும் சொல்ல முடியாது அம்மாவோ, அப்பாவோ எப்போ வேணும்னாலும் நம்மைத் தேடி இங்கே வரலாம் அப்புறம் நான் நினைத்த எதுவும் நடக்காமல் போய் விடும் ப்ளீஸ் உள்ளே போகலாம் வாங்க!” ஹரிணி கெஞ்சலாக வருணைப் பார்த்து கூற

அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன்
“எனக்கு உண்மை தெரியும் வரைக்கும் நான் இந்த இடத்தை விட்டு அசையமாட்டேன்! உனக்கு வேணும்னா பழைய விடயங்கள் எல்லாம் மறந்து போய் இருக்கலாம் எனக்கு இல்லை! அர்ஜுன் உன்னை எந்தளவிற்கு ஆழமாக நேசித்தான்னு எனக்கு மட்டும் தான் தெரியும் அவன் எனக்கு பிரண்ட் மட்டும் இல்லை என் தம்பி மாதிரி! அப்படி இருக்கும் போது அவன் காதலித்த பெண்ணை நான் கல்யாணம் பண்ணிக்குறது அவனுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் அதுவும் அவன் இந்த நிலையில் இருக்கும் போது! என்னால் இதை எல்லாம் பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது ஒண்ணு நீ இப்போ எதற்காக இதெல்லாம் பண்ணுறேன்னு சொல்லணும் இல்லைன்னா நான் எல்லா விடயங்களையும் எல்லார் முன்னாடியும் சொல்ல வேண்டி வரும்!” என்றவாறே அவளைத் தாண்டி செல்ல போக

“அய்யோ! அது மட்டும் வேணாம் ப்ளீஸ்!” அவசரமாக அவன் முன்னால் வந்து நின்று கொண்டவள்

அர்ஜுனின் கையை பிடித்துக் கொண்டு
“இது எல்லாம் அர்ஜுனுக்காகத் தான்!’ என்று கூறினாள்.

“வாட்? அர்ஜுனுக்காகவா?”

“ஆமா! நீங்க அன்னைக்கு ஹோட்டலில் வைத்து அர்ஜுன் என்னை விரும்பியதைப் பற்றி எல்லாம் சொன்ன பிறகு நான் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தேன் எனக்கு எதுவுமே ஞாபகம் வரல! அதற்காக நீங்க சொன்னதை எல்லாம் நான் நம்பவில்லைன்னும் இல்லை! ஒரு வகையில் அர்ஜுன் இந்த நிலைமைக்கு வர நானும் தானே காரணம்! நான் தான் ஆரம்பத்தில் இருந்தே அவரைத் தொடர்ந்து வந்து இருக்கேன் போல! இப்போ அவர் என்னைத் தேடி வந்தும் என்னால் எதுவும் செய்ய முடியல! அதற்காக நான் பரிதாபத்தினால் இந்த முடிவுக்கு வந்தேன்னு சொல்ல முடியாது! காலம் பூராவும் அவர் பக்கத்தில் இருந்து அவரைப் பார்த்து கொள்ளணும்னு ஆசைப்படுறேன்! இப்போ நான் எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்ட பிறகு உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் இல்லைன்னு சொன்னால் எங்க வீட்டில் அடுத்த மாப்பிள்ளை, அதற்கடுத்த மாப்பிள்ளைன்னு பார்த்துட்டே இருப்பாங்க அர்ஜுனுக்கு குணமாகி விட்டாலாவது ஏதாவது செய்து இந்த கல்யாணப் பேச்சை நிறுத்தி விடலாம் ஆனா அது எப்போ நடக்கும் என்று யாருக்கும் தெரியல இந்த நிலையில் நான் எத்தனை நாளைக்கு வீட்டை சமாளிக்க முடியும் அதனால் தான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் என்று சொன்னேன் அப்படி சொன்னால் கொஞ்ச நாளைக்கு வீட்டில் உள்ளவர்களை சமாளித்து அர்ஜுன் குணமாக ஏதாவது செய்யலாம் என்று பார்த்தேன் ஆனால் இத்தனை சீக்கிரமாக நிச்சயதார்த்தம் வரைக்கும் வருவாங்கன்னு நான் எதிர்பார்க்கல!”

“அது தான் இப்போ நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்தாச்சே! இனி என்ன செய்ய போற?”

“நிச்சயதார்த்தம் முடியட்டும் ஆனால் கல்யாணம் கண்டிப்பாக நடக்காது அதற்கிடையில் எப்படியாவது அர்ஜுனுக்கு குணமாக வைத்து விடுவேன்”

“ஏழு வருடங்களாக நாங்க பார்க்காத டாக்டர்ஸ், ட்ரீட்மெண்ட் இல்லை அப்படி இருக்கும் போது உன்னால் என்ன பண்ண முடியும்?”

“இந்த ஏழு வருடங்களாக பார்க்காத மாற்றங்களை எல்லாம் அர்ஜுன் கிட்ட என்னை சந்தித்த இந்த ஒரு சில மாதங்களுக்குள் பார்த்ததாக நீங்க சொன்னதாக தான் எனக்கு ஞாபகம்!”

“…….”

“நான் பழைய விடயங்களை எல்லாம் மறந்தவள் தான் ஆனால் இப்போ நடந்த விடயங்களை எல்லாம் மறக்கல!”

“ஆனா இது எல்லாம் எந்தளவிற்கு சாத்தியம்?”

“முடிந்த வரைக்கும் முயற்சி பண்ணுவோம்!’

“அதற்கு அப்புறம்?”

“கண்டிப்பாக அந்த கடவுள் ஒரு நல்ல வழியைக் காட்டுவார்” ஹரிணியின் உறுதியான குரலில் வருணிற்கு கூட அத்தனை நேரமாக இருந்த கோபம் எல்லாம் தூசாகிப் போய் விட்டதைப் போல இருந்தது.

“அக்கா! அம்மா உள்ளே வரச் சொன்னாங்க!” விஷ்ணுப்பிரியாவின் குரலில் வருணைப் பார்த்து கெஞ்சலாக இரு கரம் கூப்பியவள் சட்டென்று அங்கிருந்து சென்று விட அவனுக்கு தான் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

இது எல்லாம் வெறும் வெளித்தோற்றத்திற்காகத் தான் செய்கிறோம் என்று தெரிந்தாலும் பொய்யாக கூட அர்ஜுனின் வாழ்க்கையில் தன்னால் கெடுதல் வந்து விடக்கூடாது என்பது அவன் எண்ணம்.

மனதையும், முகத்தையும் கல்லாக்கி கொண்டு வருண் இறுகிப் போனவனாக வீட்டிற்குள் நுழைந்து கொள்ள அங்கே அவனுக்காக ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஆவலாக காத்திருந்தனர்.

வருண் மற்றும் ஹரிணிப்பிரியா ஹாலில் வந்து அமர்ந்து கொண்ட சிறிது நேரத்திற்கு பின்னர் பெரியவர்கள் தாம்பூலத்தட்டு மாற்றிக்கொள்ள அய்யர் லக்ண பத்திரிகை வாசிக்க அவர்கள் இருவரது நிச்சயதார்த்தமும் இனிதாக நிறைவு பெற்றது.

வருணிடம் ஒரு மோதிரத்தையும், ஹரிணியிடம் இன்னுமொரு மோதிரத்தையும் கொடுத்த சாவித்திரி அதை அவர்கள் இருவரையும் மாற்றிக் கொள்ளும் படி கூற வருண் முகம் சிவக்க ஹரிணியின் முன்னால் வந்து நின்று ஓரக்கண்ணால் தன் அருகில் நின்று கொண்டிருந்த அர்ஜுனைப் பார்த்தவாறே அவள் கையைப் பிடித்து மோதிரத்தை மாற்றப் போக
“வருண்! பிரியா கையை விடுடா!” கோபமாக சத்தமிட்டு கத்தியபடியே வருணின் கையை தட்டி விட்ட அர்ஜுன் ஹரிணியை தன் தோளோடு சேர்த்து அணைத்தவாறே வந்து நிற்க அதைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்து போக வருணின் இதழ்களோ புன்னகையில் விரிந்தது……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!