நினைவு – 17

eiE6SA598903

அர்ஜுனின் அந்த திடீர் செயலில் அங்கே கூடியிருந்த அனைவரும் தங்களுக்குள் பதட்டத்துடன் ஏதேதோ பேசத் தொடங்க ஜெயலஷ்மியின் முகமோ கோபத்தால் சிவந்து போனது.

சாவித்திரி மற்றும் ராமநாதனின் முன்னிலையில் தன் கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் கணவரின் கையில் தட்டியவர்
“என்னங்க இது? இந்த பையன் தேவையில்லாத பிரச்சினையை எல்லாம் உருவாக்க பார்க்கிறான் போய் ஏதாவது பண்ணுங்க இல்லைன்னா நான் ஏதாவது கோபத்தில் கத்தி விடப்போறேன்” அவருக்கு மாத்திரம் கேட்கும் வகையில் முணுமுணுப்பாக கூற சிறிது சங்கடத்துடன் அவரைப் பார்த்து தலையசைத்தவர் ராமநாதன் அருகில் சென்று தயக்கத்துடன் தன் மனைவியை திரும்பிப் பார்த்தார்.

“பேசுங்க!” ஜெயலஷ்மியின் கோபமான பாவனையில் ராமநாதனின் தோளில் தயங்கியபடியே மாணிக்கம் தன் கரத்தை வைக்க

தன் தோளில் ஏற்பட்ட தொடுகையில் திரும்பி பார்த்தவர்
“சம்பந்தி நீங்க எதுவும் தப்பாக எடுக்க வேண்டாம் அர்ஜுன் ஏதோ தெரியாமல் இப்படி பண்ணிட்டான்” என்று கூறவும்

அவரைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவர்
“நான் எதுவும் தப்பாக நினைக்கவில்லை சம்பந்தி! ஆனா சுற்றி இருக்கும் ஆளுங்க அப்படி நினைப்பாங்களான்னு தெரியாதே! அது தான்…” தான் கூற வந்ததை சொல்ல முடியாமல் இழுக்க அவரது தயக்கத்தை உணர்ந்து கொண்டவராக ராமநாதன் அர்ஜுன் அருகில் விரைந்து சென்றார்.

என்னதான் வெளியே மற்றவர்கள் முன்னிலையில் நாங்கள் எதையும் இயல்பாக கடந்து சென்று விடுவோம், நாங்கள் அடுத்தவர் குறைகளை பெரிது படுத்துவதில்லை என்று கூறினாலும் தங்களுக்கு என்று ஒரு சம்பவம் நடக்கும் போது தான் அவர்களது பெருந்தன்மை வெளிப்படையாக தெரியும்.

அதே நிலை தான் இப்போது ஜெயலஷ்மியிடமிருந்து அங்கே வந்திருந்தது.

ராமநாதன் ஆரம்பத்தில் அர்ஜுன் பற்றி கூறிய போது பெருந்தன்மையாக அந்த விடயத்தை ஏற்றுக் கொண்டவர் அன்று ஹாஸ்பிடலில் வைத்து அவன் ஹரிணியின் அருகில் வந்து அமர்ந்து கொண்ட போதே அவர் தன் மனதிற்குள் சிறிது சலித்து கொண்டார்.

அன்று அந்த சலிப்பு வெளியில் தெரியாமல் தன்னை இயல்பாக காட்டிக் கொண்டவருக்கு இன்று இத்தனை சொந்த பந்தம் கூடியுள்ள இடத்தில் அர்ஜுன் ஹரிணியை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு நிற்பதை பார்த்து அத்தனை இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

அர்ஜுனை ஹரிணியை விட்டு விலக்கி வைப்பதிலேயே அவரது எண்ணம் முழுவதும் தேங்கி நின்றது.

ராமநாதன் அர்ஜுன் அருகில் வந்து அவனது கையை ஹரிணியிடமிருந்து விலக்கி எடுக்கப் பார்க்க என்றுமில்லாதவாறு அன்று அவரது கையை தட்டி விட்டவன்
“இது என் பிரியா! அவளை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன்! இங்கே இருந்து போங்க!” கோபமாக அவரை தள்ளி விடப் போக அதற்குள் வருண் அவரை தன்னோடு சேர்த்து பிடித்தவாறு வந்து நின்று கொண்டான்.

“அர்ஜுன்! நீ என்ன பண்ணுற? இது நம்ம அப்பா! அப்பாவையே தள்ளி விடப் போறியா?” வருணின் அதட்டலான கேள்வியில் கண்கள் கலங்க அவனை நிமிர்ந்து பார்த்தவன்

“என..எனக்கு என் பிரி..யா வேணு…ம்! என் பிரியா வேணும்! அவளை நான் யாருக்கும் கொடுக்க மாட்டேன் எனக்கு என் பிரியா வேணும்!” என்றவாறே அழத் தொடங்க

அவசரமாக அவனருகில் வந்து நின்று கொண்ட சாவித்திரி
“அர்ஜுன் கண்ணா! சாவித்திரிம்மா கிட்ட வாங்க! நான் உங்க பிரியாவை உங்க கிட்ட கூட்டிட்டு வர்றேன் இப்போ வீட்டுக்கு போகலாம் வாங்க பிரியா வேற டிரஸ் மாற்றிட்டு வீட்டுக்கு வருவா வாங்க! வாடா கண்ணா!” என்றவாறே அவனது கையை வலுக்கட்டாயமாக ஹரிணியின் தோளில் இருந்து பிரித்து எடுத்து விட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறி செல்ல அவரைப் பின் தொடர்ந்து வருணும், ராமநாதனும் மாணிக்கத்தைப் பார்த்து இரு கரம் கூப்பி மன்னிப்பு கேட்டபடியே அங்கிருந்து வெளியேறி சென்றனர்.

அர்ஜுனின் அந்த அணைப்பில் நின்ற கணம் ஹரிணியின் மனதிற்குள் ஏதேதோ எண்ணங்கள் அலை பாயத் தொடங்கியது.

அந்த தொடுகை ஏற்படுத்திய சிலிர்ப்பு, அவனது அந்த உரிமை, அவனது அந்த கம்பீரம் என அவனது ஒவ்வொரு அசைவுகளையும் அவளது கண்கள் ரசனையுடன் ரசித்து கொண்டிருந்தாலும் அவன் அவளை விட்டு செல்லும் போது ஏதோ ஒரு இனம்புரியாத வலி அவளுக்குள் நெருஞ்சி முள்ளாய் குத்தத் தொடங்கியது.

சந்தோஷமாக ஆரம்பித்த நாள் ஏதோ ஒரு வெறுமையுடன் தொக்கி நிற்பதைப் போல இருக்க அத்தனை நேரமும் தனக்குள்ளேயே இறுகிப் போனவளாக நின்று கொண்டிருந்த ஹரிணி கண்கள் கலங்க தன் தாய், தந்தையின் முகத்தை பார்த்து விட்டு சட்டென்று தன்னறையை நோக்கி நகர்ந்து சென்றாள்.

நிச்சயதார்த்த நிகழ்வுகள் ஆரம்பித்தது முதல் அந்த கணம் வரை அங்கே நடந்து கொண்டிருந்த எல்லாவற்றையும் வேடிக்கை பார்ப்பது போல பார்த்து கொண்டிருந்த விஷ்ணுப்பிரியா சட்டென்று அங்கிருந்து நகர்ந்து சென்ற தன் அக்காவை பின் தொடர்ந்து செல்ல அவர்களையே பார்த்து கொண்டிருந்த கிருஷ்ணாவும் அவர்களைப் பின் தொடர்ந்து நடந்து சென்றான்.

ஹரிணி அந்த அறையின் ஜன்னல் புறமாக திரும்பி நின்று கொண்டிருக்க அவள் பின்னால் விஷ்ணுப்பிரியா தன் கைகளை கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

அவர்கள் இருவரையும் பார்த்து பெருமூச்சு விட்டபடியே அந்த அறைக் கதவை சாத்தி விட்டு அதன் மேல் சாய்ந்து நின்று கொண்ட கிருஷ்ணா
“நீ நினைத்த காரியம் நல்லபடியாக முடிந்ததா ஹரிணி?” கேள்வியாக தன் அக்காவை நோக்கினான்.

அவனது கேள்வியில் பெண்கள் இருவரும் அவனைத் திரும்பிப் பார்க்க அழுத்தமான காலடிகளோடு அவள் முன்னால் வந்து நின்றவன்
“இந்த விஷப்பரீட்சை வேணாம்னு நானும், விஷ்ணுவும் அன்னைக்கே சொன்னோம் நீ கேட்டியா? இப்போ பாரு எல்லோருக்கும் முன்னாடி இவ்வளவு பெரிய பிரச்சினை ஆகிப் போச்சு இப்போ அர்ஜுன் சார் வீட்டில் நடந்த விடயங்களை எல்லாம் சொல்லித் தான் ஆகணும் இதற்கு முன்னாடி அர்ஜுன் சார் இப்படி எதுவும் பண்ணியது இல்லைன்னு வருண் சார் அன்னைக்கு ஹோட்டலில் வைத்து சொன்னாங்க தானே?” என்று கேட்கவும் ஹரிணியோ எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

“ஹரிணி ஏதாவது பேசு! இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்? அதுதான் கிருஷ்ணா கேட்கிறானே பதில் சொல்லு!” விஷ்ணுப்பிரியா ஹரிணியின் தாடையைப் பற்றி நிமிர்த்தி கேட்க அவளைப் பார்த்து சிறிது புன்னகைத்துக் கொண்டவள் தன் ஆபரணங்களை கழட்டி வைக்கும் வேலையை தொடர அவளது உடன் பிறந்தவர்கள் இருவருமோ சலிப்புடன் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர்.

“இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம் ஹரிணி? ஒரு வேளை உண்மை எல்லாம் தெரியட்டும்ன்னு அமைதியாக இருக்கியா? அப்படி உண்மையை எல்லாம் இப்படியான ஒரு நிலையில் தான் சொல்லணும்னா அன்னைக்கு ஹாஸ்பிடலில் வைத்தே சொல்லி இருக்கலாமே எதற்கு இந்த நிச்சயதார்த்தம் வரைக்கும் வரணும்? தேவையில்லாமல் அம்மா, அப்பா மனதை ஏன் நோகடிக்கணும்?”

“நான் அம்மா, அப்பா மனதை நோகடிக்க நினைக்கல பிரியா! இன்னும் சொல்லப்போனால் நான் இப்படி அர்ஜுன் நடந்துப்பாங்கன்னு கூட நினைக்கல”

“சரி நீ இப்படி நடக்கும் என்று நினைத்து இதெல்லாம் பண்ணல அது சரி ஹரிணி ஆனால் எல்லாம் நடந்து போச்சே இனி என்ன பண்ணப் போற?” விஷ்ணுப்பிரியாவின் கேள்வியில் தன் நெற்றியை நீவி விட்டு கொண்டவள்

“அது தான் எனக்கும் புரியல நான் வேணும்னா உடனே அர்ஜுன் வீட்டுக்கு போய் பேசிப் பார்க்கவா?” என்று கேட்க மற்றைய இருவரும் அவளை குழப்பமாக பார்த்து கொண்டு நின்றனர்.

“உனக்கு என்ன பைத்தியமா? இவ்வளவு குழப்பம் நடந்து முடிந்து இருக்கு இப்போ உடனே அவங்க வீட்டுக்கு போறது எல்லாம் சாத்தியமே இல்லை! முதல்ல அம்மா, அப்பாவை சமாளிக்கணும் கல்யாணத்துக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கு அதற்கு இடையில் ஏதாவது பண்ணி அர்ஜுன் சாரை பற்றி உண்மையை சொல்லணும் இல்லையா அவரைக் குணப்படுத்தனும் அதுவும் இல்லையா வருண் சாரோட உன் கல்யாணம் நடக்கும்”

“இல்லை! இந்த கல்யாணம் நடக்காது!” ஹரிணி அவசரமாக விஷ்ணுப்பிரியாவின் கூற்றுக்கு மறுப்பாக பதிலளிக்க

அவளது அந்த அவசரமான பதிலில் சிறிது புன்னகைத்துக் கொண்டவள்
“உனக்கு ஒரு பிரச்சினைன்னா நாங்க பார்த்துட்டு இருக்க மாட்டோம் ஹரிணி! ஆனா இது நீயாக உருவாக்கிய சிக்கல் அதை நீ தான் நிவர்த்தி செய்யணும் எங்களால் முடிந்த உதவிகளை நாங்களும் செய்வோம் ஆனா எக்காரணத்தைக் கொண்டும் அம்மா, அப்பா மனதை நோகடிக்க கூடாது சரியா?” என்று கேட்கவும் ஹரிணி சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்து சரியென்று தலையசைத்தாள்.

இங்கே இளையவர்கள் மூவரும் தங்களுக்குள் இயல்பாக பேசிக் கொண்டு இருக்க அதே நேரம் அவர்கள் வீட்டு ஹாலில் மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மி சோர்ந்து போனவர்களாக நின்று கொண்டிருந்தனர்.

“என்னங்க இந்த கல்யாணம் சரி வரும் தானே?”

“ப்ச்! என்ன லஷ்மி நீ? இவ்வளவு நாள் கல்யாணம் நடக்குமா நடக்குமான்னு கேட்டுட்டு இருந்த! இப்போ எல்லாம் சரியாகி வரும் போது இந்த கல்யாணம் சரி வருமான்னு கேட்குற! உன்னை சமாளிக்க எனக்கு வழி தெரியலை!” கோபமும், சலிப்பும் ஒன்று சேர தன் மனைவியை பார்த்து பதிலளித்து விட்டு மாணிக்கம் தங்கள் அறையை நோக்கி சென்று விட ஜெயலஷ்மியோ கவலையோடு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

ஒவ்வொரு மனிதனின் மன எண்ணவோட்டமும் வித்தியாசமானது அதே நேரம் விசித்திரமானது.

நான் எண்ணுவதைப் போலவே இன்னுமொரு நபரும் எண்ணுவார் என்று நம்மால் திட்டவட்டமாக கூற முடியாது.

அதே போல் தான் மாணிக்கமும், மற்றைய அனைவரும் இயல்பாக எல்லாவற்றையும் கடந்து செல்வதைப் போல ஜெயலஷ்மியால் கடந்து செல்ல முடியவில்லை அவரது எண்ணங்களும், சிந்தனைகளும் முற்றிலும் வேறு ஆனால் இந்த எண்ணங்களும், சிந்தனைகளும் இனி வரப்போகும் நிகழ்வுகளைப் பாதிக்குமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

*******************************

சாவித்திரி மற்றும் ராமநாதனின் நடுவில் கண்ணீர் வடித்தபடியே அர்ஜுன் அமர்ந்திருக்க அவர்களின் முன்னால் தன் கைகளை கட்டிக் கொண்டு வருண் நின்று கொண்டிருந்தான்.

இத்தனை வருடங்களாக அர்ஜுனின் உடனிருந்து வந்தவர்கள் தான் சாவித்திரி மற்றும் ராமநாதன்.

அவனது ஒவ்வொரு அசைவுகளையும் வருணைப் போன்றே மிகவும் நுணுக்கமாக கவனித்து குறித்து வந்தவர்கள் அவர்கள்.

அர்ஜுனின் இந்த நிலைமைக்கு பின்னர் அடிக்கடி அவன் சில பெண்கள் முன்னால் சென்று நின்று பிரியா என்று சொல்லி கொண்டு காதலிப்பதாக சொல்லி இருக்கின்றான் தான் ஆனால் இன்று முழு உரிமையோடு ஹரிணியை தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டு பிடிவாதமாக அதே நேரம் அப்பா என்று அழைத்து வந்தவரையே கோபமாக தள்ளி விடும் அளவுக்கு நடந்து கொண்டதில்லை.

அப்போதே சாவித்திரியும் சரி, ராமநாதனும் சரி அர்ஜுனின் இந்த நிலைமைக்கும் அந்த பெண்ணிற்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டனர்.

அந்த இடத்தில் வைத்து எதையும் பேச முடியாது என்ற நிலையில் அங்கிருந்து அவசரமாக புறப்பட்டு வந்தவர்கள் சிறு குழந்தை போல அழுதழுது பிரியா வேண்டும் என்று பிடிவாதமாக அமர்ந்திருக்கும் அர்ஜுனைப் பார்த்து மிகவும் கலங்கிப் போய் விட்டனர்.

இதற்கு எல்லாம் பதில் வருணிற்கு மாத்திரமே தெரியும் என்பதால் தான் இப்போது அவர்கள் முன்னால் தவறிழைத்து விட்டவனைப் போல தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தான் அவன்.

“அர்ஜுனுக்கும், ஹரிணிக்கும் என்ன சம்பந்தம்? சொல்லு வருண்!” சாவித்திரியின் நேரடிக் கேள்வியில் சிறிது தயக்கத்துடன் அவரை நிமிர்ந்து பார்த்தவன்

“ஹரிணியோட முழுப்பெயர் ஹரிணிப்பிரியா!” என்று கூறவும் பெரியவர்கள் இருவருமே அதிர்ச்சியாக அவனைப் பார்த்து கொண்டு இருந்தனர்.

“அப்படின்னா அர்ஜுன் சொல்லுற பிரியா தான் அந்த ஹரிணியா?” தன் அதிர்ச்சி மாறாத குரலில் ராமநாதன் வினவ அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன் ஹரிணி மற்றும் விஷ்ணுப்பிரியாவை ஹோட்டலில் வைத்து சந்தித்தது முதல் இன்று நிச்சயதார்த்தம் நடப்பதற்கு முன்னர் நடந்தது வரை ஒன்று விடாமல் சொல்லி முடித்தான்.

“இவ்வளவு தூரம் நடந்து இருக்கு பெரியவங்க எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்ல தோணலயா உங்களுக்கு?” சாவித்திரியின் அதட்டலான கேள்வியில் அர்ஜுன் திடுக்கிட்டு போய் அவரது கையை பிடித்து கொள்ள

அவனைப் பார்த்து சிறிது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவர்
“நிச்சயதார்த்தம், கல்யாணம் இதெல்லாம் உங்களுக்கு வேடிக்கையாக போச்சா? சினிமா, நாடகத்தில் வர்ற மாதிரி எப்போ வேணுமோ அப்போ பண்ணிக்கலாம் நினைத்த மாதிரி மாற்றி மாற்றி விளையாடலாம்னு நினைத்து இருக்கீங்களா?” என்று கேட்கவும் வருண் பதில் எதுவும் பேச முடியாமல் தலை குனிந்து நின்றான்.

“உனக்கு வேணும்னா இது எல்லாம் ஏதோ ஒரு விடயமாக இருக்கலாம் வருண் ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை உனக்கு கல்யாணம் நடக்கும் ஹரிணி தான் இந்த வீட்டு மருமகள்!” என்று விட்டு எழுந்து நின்ற சாவித்திரி

“அர்ஜுன் வாடா கண்ணா!” என்றவாறே அவனது கையைப் பிடித்து எழுந்து நிற்க செய்து தன்னுடன் அழைத்துக்கொண்டு செல்ல

அவனோ
“சாவித்திரிம்மா பிரியா வேணும்!’ என்றவாறே அவரோடு இணைந்து நடந்து சென்றான்.

“பிரியா கண்டிப்பாக வருவாடா கண்ணா! இனி பிரியா எப்போதும் நம்ம கூடவே தான் இருப்பா!”

“ஹைய்யா! ஜாலி! நான் இனி டெய்லி பிரியா கூட பேசுவேனே!” அத்தனை நேரம் அழுது வடிந்த முகத்தோடு அமர்ந்திருந்தவன் இப்போது சாவித்திரி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு துள்ளிக்குதிக்காத குறையாக அவரோடு சிரித்துப் பேசிக்கொண்டே நடந்து சென்றான்.

தன் அன்னை சொல்லி விட்டு சென்ற வார்த்தைகளை முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாமல் விக்கித்துப் போய் நின்ற வருண் தன் தந்தையை திரும்பி பார்க்க அவரும் அவனைப் பார்த்து எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

“அம்மா! இது சரியில்லை! அது அர்ஜுன் காதலித்த பொண்ணும்மா! அந்த பொண்ணை நான் எப்படி?” வேகமாக சாவித்திரி முன்னால் ஓடி வந்து அவர் வழியை மறித்தவாறு வந்து நின்று வருண் கேட்கவும்

அவனை ஏற இறங்கப் பார்த்தவர்
“அப்போ நிச்சயதார்த்தம் மட்டும் பண்ணலாம்மா?” என்று கேட்க

“அது நானாக எதுவும் பண்ணலம்மா! ஹரிணி தான் அவசரத்தில் ஏதோ…” சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல முடியாமல் தயங்கி நிற்க

அவனது கன்னத்தில் தட்டிக் கொடுத்தவர்
” கல்யாணத்துக்கு இன்னும் ஆறு மாதம் இருக்கு! அதோடு ஹரிணி தான் இந்த வீட்டு மருமகள்! நல்லா யோசி!” என்று விட்டு சென்று விட அப்போது தான் அவனுக்கு இலேசாக பொறிதட்ட தொடங்கியது.

“அம்மா!” ஆனந்தக் கூச்சலோடு அவர் முன்னால் வந்து நின்று அவரை ஆரத் தழுவிக் கொண்டவன்

“நான் ரொம்ப பயந்து போயிட்டேன்ம்மா! நீங்க பிரியா பற்றி தெரிந்து இந்த கல்யாணமே வேண்டாம்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்துட்டேன் ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் ம்மா!” என்று கூறவும்

“அம்மா கிட்ட தாங்க்ஸா?” சிறு கண்டிப்போடு அவனைப் பார்த்து வினவ அவரைப் பார்த்து சமாளிப்பது போல சிரித்துக் கொண்டவன் தன் தலையில் தட்டிக் கொண்டான்.

“சாவித்திரி ம்மா நானும்! நானும்!” வருணைப் போல தானும் மறுபக்கமாக சாவித்திரியை அணைத்துக் கொண்ட அர்ஜுன் அவர் தோளில் சாய்ந்து கொள்ள அவர்கள் இருவரும் அவனது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தனர்.

“அர்ஜுனோட இந்த நிலைமைக்கு அந்த பொண்ணு தான் காரணம்னு இத்தனை நாள் எனக்கும் கோபம் இருந்தது என்னவோ உண்மைதான் ஆனால் அந்த பொண்ணால் தான் அர்ஜுன் கொஞ்சம் கொஞ்சமாக குணமாகிட்டு வருகிறான் அப்படி இருக்கும் போது அந்த கோபம் எல்லாம் ஒன்னும் இல்லாமல் போயிடுச்சு டா வருண்! அர்ஜுனுக்கு அவ தான் சரியான பொண்ணா இருக்க முடியும்”

“ஆனா அம்மா ஹரிணியோட வீட்டில் இதை எப்படி சொல்லுறது?”

“பெரியவங்க ரொம்ப ஆசையோடு எல்லா விதமான ஏற்பாடுகளையும் பண்ணிட்டோம் ஹரிணி வீட்டில் உள்ளவங்க மனதில் நிறைய ஆசைகளை வளர்த்துட்டோம் அதை ஒட்டுமொத்தமாக அழிக்க முடியாது அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அர்ஜுனைப் பற்றி சொல்லி ஹரிணியோட வீட்டில் சம்மதம் வாங்கணும் இந்த பிரச்சனையை சிக்கல் படுத்தியது நீங்க தான் அதனால் அதை நீங்க தான் சரி செய்யணும்”

“கண்டிப்பாக நாங்க சரி செய்து விடுவோம்மா! ஆனா கல்யாணத்துக்கு இன்னும் ஆறு மாதம் தானே இருக்கு!”

“இந்த ஆறு மாதத்திற்குள் எப்படியாவது உண்மைகளை எல்லாம் ஹரிணியோட பெற்றவங்களுக்கு நீங்க சொல்லி எடுத்து புரிய வைக்கணும் இப்போ நாம கல்யாணம் வேணாம்னு சொன்னா அவங்க வேறு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினாலும் தொடங்கிடுவாங்க எப்படியும் இன்னும் மூன்று மாதங்கள் கழித்து கல்யாணப் பத்திரிகை அடிக்க ஆரம்பிக்கலாம் அதற்கு இடையில் இந்த குழப்பத்தை எல்லாம் சரி செய்து விடணும் உங்களால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் போனால் சரியாக இன்றிலிருந்து மூணு மாதம் கழித்து என்ன நாள்? ஆஹ்! டிசம்பர் இருபது அன்னைக்கு நான் ஹரிணி வீட்டில் எல்லா விடயங்களையும் சொல்லி விடுவேன்”

“அம்மா!”

“அம்மா தான்! அதனால் தான் இந்தளவிற்கு உனக்கு சுதந்திரம் கொடுத்து இருக்கேன் நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கட்டும் உங்களுக்கு நான் கொடுத்து இருக்கும் நேரம் மூணு மாதம் தான் ஒருத்தங்களை ஏமாற்றி எந்த விடயத்தையும் செய்ய கூடாது இருந்தாலும் இதில் என் பையன் வாழ்க்கையும் இருக்கே! அது தான் கொஞ்சம் சுயநலமாக மாறிட்டேன் நான் சொன்ன மூணு மாதம் முடிந்த பிறகு நான் என்ன சொல்லுறேன்னோ அதைத் தான் நீ கேட்கணும் நான் சொல்லுற பொண்ணை தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்” என்று விட்டு சாவித்திரி அர்ஜுனை அவனது அறையை நோக்கி அழைத்துச் சென்று விட வருணுக்கு தன்னை சுற்றி நடப்பது எல்லாம் நிஜம் தானா என்பது போல இருந்தது.

அர்ஜுனின் இந்த நிலைமைக்கு காரணமான ஹரிணியைப் பற்றி தெரிந்து கொண்ட பின்பு அவர் கோபப்படுவார், இந்த திருமணப் பேச்சு வார்த்தையையே நிறுத்தி விடுவார் என்று அவன் நினைத்திருக்க அவனது எண்ணத்திற்கு மாறாக அவளையே அர்ஜுனின் மனைவியாக அவர் வரவேண்டும் என்று நினைத்து பேசி இருப்பது அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அள்ளி கொடுத்ததைப் போல இருந்தது.

அர்ஜுன் மற்றும் ஹரிணியைப் பற்றி தெரிந்து கொண்ட பின்னர் சாவித்திரி சம்மதம் சொன்னதே அவனுக்கு போதுமானதாக இருக்க அதில் தன் திருமணம் பற்றிய செய்தியும் சேர்ந்திருந்தது அவனுக்கு பெரிதாக குழப்பத்தை உண்டு பண்ணவில்லை தன் அன்னையின் சந்தோஷமே தன் சந்தோஷம் என்பது அவனுடைய தற்போதைய எண்ணமாக மாறி இருந்தது

தான் ஒன்று நினைத்தது இப்போது இன்னொன்றாக தான் எதிர்பார்க்காத ஒன்றாக வரப் போகிறது இதை எப்படியாவது ஹரிணியிடம் தெரிவிக்க வேண்டும் என்ற சந்தோஷமான எண்ணத்தோடு வருண் நின்று கொண்டிருக்க அதே நேரம் அவனது தொலைபேசியும் சிணுங்கியது.

ஹரிணியின் பெயர் தொலைபேசி திரையில் ஒளிர அதே சந்தோஷமான மனநிலையுடன் அந்த அழைப்பை எடுத்து பேசத் தொடங்கியவன் தன் வீட்டில் நடந்த விடயங்களை எல்லாம் கூற மறுபுறம் அதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த ஹரிணி சந்தோஷம் தாண்டவமாட தன் அருகில் நின்று கொண்டிருந்த விஷ்ணுப்பிரியாவின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு புன்னகையுடன் அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

“வருண் அண்ணா நான் எங்க வீட்டில் நடந்த விடயங்களை எல்லாம் இப்போ சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன் அப்பா பரவாயில்லை எங்க பக்கம் தான் பேசுவாங்க ஆனா அம்மாவை சமாளிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் அதுவும் அர்ஜுன் இப்போ இருக்கிற நிலையில் அம்மாவை சமாளிப்பது முடியாத ஒரு விஷயம் எனக்கு பழைய விடயங்கள் எல்லாம் இனியும் ஞாபகம் வரும்னு நம்பிக்கை இல்லை அதனால் இந்த மூணு மாத காலத்திற்குள் அர்ஜுன் குணமாக ஏதாவது செய்தே ஆகணும்” ஹரிணியின் கூற்றுக்கு ஆமோதிப்பாக தலையசைத்தவன்

“ஆனா என்ன பண்ணுறது? உங்க வீட்டில் இந்த விடயத்தை கண்டிப்பாக சொல்லியே ஆகணும் அதற்கு என்ன பண்ணுறது?” பதில் கேள்வி கேட்க

மறுபுறம் ஹரிணி
“எங்க வீட்டில் காதல் பண்ணுவது தப்புன்னு எல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க ஆனா அர்ஜுனோட இந்த நிலைமை தான்!” என்று இழுக்க

“அந்த நிலைக்கு அவன் வர நீ தான் காரணம் அதை மறந்துடாதே!” வருண் சிறு கண்டிப்பான குரலில் அவளுக்கு அதை நினைவு படுத்தினான்.

வருணின் கூற்றில் தன் உதட்டை கடித்து கொண்டு அமைதியாக இருந்தவள் சிறிது நேரம் கழித்து
“நடந்த எதையும் என்னால் மாற்ற முடியாது அண்ணா! இனி நடக்கப் போகும் விடயங்களை வேணும்னா யோசித்து பண்ணுறேன்” என்றவள் தான் யோசித்து வைத்திருந்த விடயங்களை அவனிடம் பகிர்ந்து கொள்ள அவள் சொன்ன விடயங்களை கேட்டு அவனின் முகம் புன்னகையில் மலர்ந்து போனது……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!