நினைவு – 18

eiE6SA598903

வருண் மற்றும் ஹரிணிப்பிரியாவின் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து அன்றோடு ஒரு வாரம் நிறைவு பெற்றிருந்தது.

நிச்சயதார்த்த நிகழ்வின் போது அர்ஜுனால் ஏற்பட்ட குளறுபடிகளை மறந்து ஹரிணியின் வீட்டினர் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்க வருணின் வீட்டினரோ நடந்த முடிந்த விடயங்களை பற்றியும் இனி நடக்கப் போகும் விடயங்களை பற்றியும் எவ்வாறு அவர்களிடம் பகிர்ந்து கொள்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

இந்த விடயங்கள் எல்லாவற்றிலும் அர்ஜுன் தொடர்புபட்டு இருக்கிறான் என்பது மட்டும் இல்லாமல் அன்றைய நாளில் அவர்கள் முகமாற்றத்தை இவர்கள் கவனிக்காமல் இல்லையே!

எதையும் இயல்பாக ஏற்றுக் கொள்வோம் என்று கூறியிருந்த ஜெயலஷ்மி இப்போது எதுவுமே வேண்டாம் என்று அவசரத்தில் ஏதாவது தவறுதலாக முடிவெடுத்து விட்டால் தன் மகனின் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடுமே என்ற அச்சம் சாவித்திரி மற்றும் ராமநாதனை மிகவும் தயங்கிச் செல்ல செய்திருந்தது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையுடன் இருந்தாலும் ஹரிணி மற்றும் வருணின் எண்ணம் முழுவதிலுமே அர்ஜுன் ஒருவனே நிறைந்து போயிருந்தான்.

சாவித்திரி அவர்களுக்காக கொடுத்திருந்த மூன்று மாத கால அவகாசத்தில் ஒரு வாரம் முடிவடைந்து இருக்க இது நாள் வரை அவர்கள் நினைத்த எதுவும் நடந்தபாடில்லை.

அன்று இறுதியாக வருணோடு தொலைபேசியில் பேசிய போது ஹரிணி அவனிடம் கேட்ட ஒரே விடயம் அர்ஜுன் அவளுக்காக வாங்கிய சேலை.

யாருமே இலகுவில் அடையாளம் காணாத தன்னை அர்ஜுன் மாத்திரம் இலகுவாக அடையாளம் கண்டு கொள்வதை வைத்தே அவனது காதலின் ஆழத்தை உணர்ந்து கொண்டவள் அவள்.

அப்படியிருக்கையில் அவளுக்காக அவன் வாங்கிய அந்த சேலை இன்னமும் அவனது மனதிற்கு நெருக்கமாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டதால் தான் இப்போது அந்த சேலையை அணிந்து அர்ஜுனைக் காண செல்ல தயாராகி கொண்டிருக்கிறாள் ஹரிணிப்பிரியா.

நிச்சயதார்த்தம் முடிந்த இரண்டாவது நாளே தன் அலுவலகத்தில் வைத்து வருணிடம் இருந்து அந்த சேலையை பெற்றுக் கொண்டவள் அன்று வீட்டிற்கு வந்த நொடி முதல் அந்த சேலையை தன் கையில் வைத்துக் கொண்டு அதை வருடிக் கொடுத்தபடியே தான் அமர்ந்திருந்தாள்.

காலேஜ் முடிந்து வீடு திரும்பிய விஷ்ணுப்பிரியா ஹரிணி அமர்ந்திருந்த மோனநிலையைப் பார்த்து குழப்பம் கொண்டவளாக அதைப் பற்றி அவளிடம் வினவ அதற்கு பதிலளிக்கும் விதமாக தன் கையில் இருந்த சேலையை அவளிடம் காண்பித்தவள்
“அர்ஜுன் இந்த சாரியை என் கிட்ட கொடுக்க வரும் போது தான் எங்க இரண்டு பேர் வாழ்க்கையும் மாறிப் போயிடுச்சு பிரியா! இப்போ இந்த சேலையைப் பார்க்கும் போது அன்னைக்கு அந்த ஆக்சிடென்ட் நடக்காமல் இருந்து இருக்கலாமேன்னு தோணுது! அன்னைக்கே இந்த சேலையை அர்ஜுன் என்கிட்ட கொடுத்து இருந்தால் இப்போ நாங்க எவ்வளவு சந்தோஷமாக இருந்து இருப்போம் இல்லை?” ஏக்கம் நிறைந்த குரலில் அவளைப் பார்த்து வினவ

அவசரமாக அவளருகில் வந்து அமர்ந்து கொண்ட விஷ்ணுப்பிரியா
“ஹரிணி! உன் கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இப்படி எமோஷனல் ஆகக்கூடாதுன்னு! நடந்ததை நம்மால் மாற்ற முடியாது ஹரிணி இனி வரப்போகும் விடயங்களை சரியாக செய்யப் பாரு!” என்றவள்

சிறிது நேரம் கழித்து ஏதோ ஞாபகம் வந்தவளாக
“அது சரி உனக்கு அந்த ஆக்சிடென்ட், சேலையைப் பற்றி எல்லாம் ஞாபகம் இருக்கா?” என்று கேட்க ஹரிணியின் தலையோ இடம் வலமாக அசைந்தது.

“எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை பிரியா! வருண் அண்ணா சொன்ன விடயங்கள் மட்டும் தான் எனக்கு தெரியும் ஆனால் அதில் பொய் இல்லைன்னும் எனக்கு தெரியும் அர்ஜுனோட கண்ணில் எனக்கான ஒரு உரிமை நிறையவே இருந்தது! அதுவும் அன்னைக்கு நிச்சயதார்த்தம் நடந்த நேரம் வருண் அண்ணா என் கையைப் பிடித்ததற்கே அர்ஜுன் அத்தனை கோபப்பட்டாங்க அவங்களோட அந்த காதல் எனக்கு கிடைக்க நான் ரொம்பவே கொடுத்து வைத்து இருக்கணும்!”

“அவங்க தான் நீ கிடைக்க அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும் ஹரிணி! உனக்கு எதுவுமே நினைவு இல்லாமல் இருந்தாலும் அவங்க காதலுக்காக இவ்வளவு தூரம் எல்லாம் செய்ய நினைத்து இருக்கியே அந்த வகையில் அர்ஜுன் சார் தான் ரொம்ப லக்கி!”

“எனக்கு பழைய விடயங்கள் எதுவும் வேண்டாம் பிரியா! இப்போ இருக்கிற மாதிரியே அர்ஜுனை நான் காதலிக்கணும் அது தான் எனக்கு வேணும் நான் முன்னாடி எதை நினைத்து அப்படி அவங்க கிட்ட பழகினேன் என்ன காரணம் எதுவும் எனக்கு தேவையில்லை இப்போ இருக்கும் அர்ஜுனோட காதல் தான் எனக்கு வேணும் அர்ஜுனோட இப்படியான ஒரு காதலைப் பார்த்து எந்த பெண்ணும் அவரைக் காதலிக்காமல் இருக்கவே முடியாது!”

“ஆமா! அது என்னவோ உண்மைதான்! அர்ஜுன் சாரை யாருக்கு தான் பிடிக்காது போகும்” அன்று ஹோட்டலில் வைத்து அர்ஜுன் மற்றும் ஹரிணியின் காதலைப் பற்றி தெரிந்து கொண்ட பின்னர் அவனை வியந்து பார்த்ததை எண்ணியபடியே தன்னை மறந்து விஷ்ணுப்பிரியா கூற

அவளை விசித்திரமாக திரும்பி பார்த்த ஹரிணி
“ஹேய் பிரியா! என்ன ஏதோ கனவில் பேசுற மாதிரி பேசுற?” அவளது தோளில் தட்டிக் கேட்க அவளது கேள்வியில் அவசரமாக தன் சிந்தனையில் இருந்து வெளி வந்தவள் ஒன்றும் இல்லை என்பது போல தலையசைத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட ஹரிணியோ அர்ஜுன் தனக்கு கொடுக்க நினைத்த சேலையை தன் மார்போடு சேர்த்து அணைத்தவாறே கண் மூடி அருகில் இருந்த சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.

தன்னை மறந்த நிலையிலும் தன் காதலை மறக்காத அர்ஜுன்!

பழைய விடயங்களை எல்லாம் மறந்து இருந்தாலும் அர்ஜுனின் காதலை எண்ணி தினமும் அவனை பன்மடங்கு அதிகமாக காதல் செய்ய எண்ணும் ஹரிணி!

இதையெல்லாம் தாண்டி இவர்கள் இருவரது வாழ்க்கையையும் இத்தனை சிக்கலாக்கி மீண்டும் சரி செய்ய நினைத்திருந்தது அந்த விதி!

அன்று வாரத்தின் இறுதி நாள் எல்லோரும் தங்கள் ஒரு வாரக் களைப்பும் போகும் வகையில் ஓய்வெடுத்த வண்ணம் இருக்க ஹரிணி மாத்திரம் தன்னறையில் வெகு மும்முரமாக தயாராகிக் கொண்டிருந்தாள்.

மல்பெரி நிறத்தில் இருந்த அந்த பட்டு சேலை அவள் உடலில் வாகாக பொருந்தி இருக்க கண்கள் கலங்க அந்த சேலையை வருடிக் கொடுத்தவள்
“அர்ஜுன் உங்க செலக்சன் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு” என்று கூறிக் கொண்டு இருந்த நேரம்

“அது தான் உன்னை செலக்ட் பண்ணதிலேயே அவரோட ரசனை தெரிந்துடுச்சே!” என்றவாறே புன்னகை முகமாக விஷ்ணுப்பிரியா அவளருகில் வந்து நின்று கொண்டாள்.

“பிரியா நீ இங்கே என்ன பண்ணுற?” ஹரிணி சிறு கண்டிப்போடு அவளைப் பார்த்து வினவ

அவளோ
“தோடா! இது நானும் இருக்கும் ரூம் தான் நான் எப்போ வேணும்னாலும் வருவேன் போவேன்! கேட்குறா பாரு கேள்வி!” என்றவாறே அவளை முறைத்து பார்த்து கொண்டு நின்றாள்.

“சரி சரி கோவிச்சுக்காதே! ஆமா அம்மா, அப்பா எல்லோரும் எங்கே?” சுற்றிலும் ஒரு தடவை திரும்பி பார்த்தபடியே மெல்லிய குரலில் ஹரிணி வினவ

“எல்லோரும் ஹாலில் டிவி பார்த்துட்டு இருக்காங்க அது சரி நீ எங்கே போகப்போற?” விஷ்ணுப்பிரியாவும் அவளைப் போலவே மெல்லிய குரலில் தன் கேள்வியை கேட்டாள்.

“இன்னைக்கு சன்டே! இன்னைக்கு தானே நான் அர்ஜுனைப் பார்க்கப் போறதாக சொன்னேன் அதற்கிடையில் மறந்து போச்சா?”

“ஆமா ஆமா! இன்னைக்கு சன்டே தான் அது இருக்கட்டும் நீ தனியாகவா போகப் போற? அம்மா உன்னை கொன்னுடுவாங்க!”

“நான் தனியாக போகப் போறதாக சொல்லவே இல்லையே!”

“அப்போ யாரு கூடப் போகப் போற?”

“அது தான் என் செல்லத் தங்கை, என் ரத்தத்தின் ரத்தம், என் உடன் பிறப்பு நீ இருக்கியே!”

“எதேய்! நானா?” அத்தனை நேரமும் மெல்லிய குரலில் ரகசியமாக பேசிக் கொண்டு நின்றவள் ஹரிணியின் இறுதி வசனத்தில் தன்னை மறந்து சத்தமாக அவளைப் பார்த்து அதட்ட

“உஸ்ஸ்ஸ்ஸ்! மெதுவாக பேசு!” அவசரமாக அவளது வாயில் தன் கையை வைத்து மூடியவள் சுற்றிலும் மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்துக் கொண்டாள்.

“யாரும் வரல கையை எடு! நானெல்லாம் வர முடியாது எனக்கு நிறைய வேலை இருக்கு நீ வேணும்னா கிருஷ்ணாவோடு போ!” என்றவாறே விஷ்ணுப்பிரியா அந்த அறையில் இருந்து வெளியேறி செல்லப் போக

வேகமாக அவள் முன்னால் அவளது வழியை மறித்தவாறு வந்து நின்று கொண்ட ஹரிணி
“ஆமா பெரிய கலெக்டர் இவ நிறைய வேலை பார்க்க போறா! ஒழுங்காக போய் சீக்கிரமா ரெடி ஆகிட்டு வர்ற! கோவிலுக்கு போயிட்டு அப்படியே அர்ஜுனை பார்க்க போகலாம்” என்று கூறவும்

“நோ! நெவர்! இம்பாசிபிள்! நான் வரமாட்டேன்” விஷ்ணுப்பிரியா தன் கைகளை கட்டிக் கொண்டு பிடிவாதமாக மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள்.

“எங்கே போக வரமாட்ட பிரியா?” என்ற ஜெயலஷ்மியின் குரலில் ஹரிணிப்பிரியா மற்றும் விஷ்ணுப்பிரியா ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாக திரும்பி பார்க்க

அவரோ
“ஹரிணி எங்கேடா போகப் போற?” ஹரிணியை மேலிருந்து கீழாக ஆச்சரியமாக பார்த்தபடியே அவர்கள் இருவரது முன்னாலும் வந்து நின்று கொண்டார்.

“அது… அது வந்து ம்மா நா.. நாங்க கோவிலுக்கு போகப் போறோம் இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இல்லையா அது தான்!” ஹரிணி ஒருவழியாக தட்டுத்தடுமாறி அவரது கேள்விக்கு பதில் அளித்திருக்க

“ஓஹ்! அப்படியா?” என்றவாறே விஷ்ணுப்பிரியாவின் புறம் திரும்பி பார்த்தவர்

“ஆமா நீ ஏன் இன்னும் ரெடி ஆகாமல் இருக்க? போ போய் சீக்கிரமா ரெடி ஆகிட்டு வா நேரத்துக்கு போனால் தான் நேரத்துக்கு வீட்டுக்கு வரலாம்” என்று கூறவும் அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவள் ஹரிணியை முறைத்து பார்த்தபடியே குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

விஷ்ணுப்பிரியாவை பார்த்து சிரித்தபடியே தன் அன்னையின் புறம் திரும்பிய ஹரிணி அவரது அமைதியான தோற்றத்தை பார்த்து குழப்பத்தோடு

“அம்மா! என்னம்மா ஆச்சு?” அவரது தோளில் தன் கையை வைத்து வினவ

சிறு புன்னகையுடன் அவளைப் பார்த்து மறுப்பாக தலையசைத்து விட்டு அவளது தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தவர்
“இன்னைக்கு ரொம்ப அழகாக இருக்கேடா ஹரிணி! உன் முகத்தில் இருக்கும் இந்த சிரிப்பு எப்போதும் நிரந்தரமாக இருக்கணும் அது தான் என்னோட ஆசை!” என்று கூறவும்

அவரது தோளில் தன் தலையை சாய்த்து கொண்டவள்
“கண்டிப்பாக நீங்க ஆசைப்பட்ட படி இருப்பேன் ம்மா” என்று கூற அவரது கரங்கள் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டது.

“எனக்கு வேறு எந்த கவலையும் இல்லை ஹரிணி! உன் கல்யாணம் மட்டும் எந்த தடையும் இல்லாமல் நடந்ததுன்னா போதும் அம்மா ரொம்ப சந்தோஷமா இருப்பேன்
உனக்கு ஆக்சிடென்ட் ஆன அந்த நேரம் நானும், அப்பாவும் ரொம்பவே உடைந்து போய் விட்டோம் எங்களோட முதல் குழந்தை நீ! நான் முதன்முதலாக என் வாழ்க்கையோட மறுபக்கத்தை காண வழி செய்தவ நீ! உங்க அப்பா உன்னை முதன்முதலாக கையில் தூக்கி இருந்த நேரம் கை நடுங்க என் முன்னாடி நின்றது இப்போ வரைக்கும் என் கண்ணை விட்டு மறையல இன்னும் சொல்லப்போனால் எங்க வாழ்க்கைக்கு ஒரு புது அர்த்தம் தந்தவ நீ தான்!
அப்படியான எங்க குழந்தை இரத்தத்தில் உறைந்து போய் இருந்ததைப் பார்க்கும் போது எங்க பாதி உயிர் போயிடுச்சு! நீ அந்த ஆக்சிடென்டில் இருந்து மீண்டு வந்து மறுபடியும் பழையபடி என்னை அம்மான்னு கூப்பிடும் போது முதன்முதலாக நீ பேசக் கற்றுக் கொண்ட பிறகு என்னை அம்மான்னு கூப்பிடும் போது எப்படி ஒரு பூரிப்போடு இருந்தேனோ அதேயளவு சந்தோஷம் தான் எனக்கு கிடைத்தது! இப்போ அதேயளவு சந்தோஷம், பூரிப்பு எல்லாம் உன் கல்யாணம் நடக்கப் போவதை எண்ணி மறுபடியும் எனக்கு கிடைத்து இருக்கு!
இப்போ தான் உன்னை கையில் தூக்கி வைத்து பார்த்த மாதிரி இருக்கு அதற்கிடையில் உனக்கு கல்யாண வயது வந்துடுச்சி இல்லைடா!” என்று ஜெயலஷ்மி உணர்ச்சி வசப்பட்டவராக பேசிக் கொண்டே செல்ல இம்முறை ஹரிணியிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை.

தன் அன்னையின் முகம் சிறிது வாடினாலும் கலங்கிப் போய் விடுபவள் உணர்ச்சி வசப்பட்டவராக அவர் பேசுவதைக் கேட்டு இன்னமும் தனக்குள் கலங்கிப் போய் நின்றாள்.

தான் அர்ஜுன் பற்றிய விபரங்களை எல்லாம் அவரிடம் மறைத்து இருக்கக் கூடாதோ என்ற எண்ணத்தோடு அவரைப் பார்த்து கொண்டு நின்றவள் எல்லா விடயங்களையும் இப்போதே சொல்லி விடலாமா என தனக்குத்தானே கேள்வி கேட்டு கொண்டு நிற்க
“என்னம்மா அமைதியாக இருக்க?” தன் அன்னையின் கேள்வியில் கண்கள் கலங்க அவரை நிமிர்ந்து பார்த்து அர்ஜுனைப் பற்றி கூறப் போனவள்

“ஹரிணி நான் ரெடி போவோமா?” என்ற விஷ்ணுப்பிரியாவின் குரலில் உடனே சிறிது தன்னை சுதாரித்துக் கொண்டாள்.

விஷ்ணுப்பிரியா ஹரிணியை பார்த்து வேண்டாம் என்று தலையசைத்தவாறே அவர்கள் முன்னால் வந்து நின்று கொண்டு
“வா ஹரிணி சீக்கிரமா போயிட்டு சீக்கிரமா வந்துடலாம்” என்றவாறே அவளை இழுக்காத குறையாக அங்கிருந்து அழைத்துக் கொண்டு கிருஷ்ணாவையும் மற்றைய கையால் பிடித்து இழுத்து கொண்டு வேகமாக வீட்டில் இருந்து வெளியேறி சென்றாள்.

“விஷ்ணு கையை விடு! எதற்கு இப்படி அவசரமாக இழுத்துட்டு போற?” கிருஷ்ணா தன் கையை அவளது பிடியில் இருந்து இழுத்து விலக்கிய படியே அவள் முன்னால் வந்து நிற்க

அவனைப் பார்த்து தன் பற்கள் அனைத்தும் வெளியே தெரியும் படி சிரித்தவள்
“எங்க தங்க கம்பி, தைரிய செம்மல் நீ இல்லாமல் நாங்க வெளியில் போகலாமா? அது தான் என் தம்பியை பாசமாக கையை பிடித்து கூட்டிட்டு வர்றேன் கை வீசம்மா கை வீசுன்னு சின்ன வயதில் என் கையை பிடித்து பாட்டு பாடிட்டு வருவியே அதை மறந்துட்டியா கண்ணா?” என்று கேட்கவும்

அவளைப் பார்த்து தன் தலையில் அடித்துக் கொண்டவன்
“கருமம்! சிவாஜி வாய்ஸ் பேசுறேன்னு சுருளி ராஜன் வாய்ஸ் பேசுற! எல்லாம் என் நேரம்” என்று விட்டு முன்னால் நடந்து செல்ல அவனைப் பார்த்து சிரித்தபடியே ஹரிணியின் புறம் திரும்பியவள் சட்டென்று அவளது தோளில் அடித்து வைத்தாள்.

“ஆஹ்! எதுக்குடி அடிச்ச?”

“பின்ன நீ செய்ய போன வேலைக்கு உனக்கு ஆஸ்கார் அவார்டா தருவாங்க? அம்மா சட்டுன்னு எமோஷனல் ஆகிடுவாங்கன்னு உனக்கு நல்லாவே தெரியும் அப்படி இருக்கும் போது நீ எல்லா விடயங்களையும் அப்போவே அம்மா கிட்ட சொல்லப் பார்க்குற!”

“அ…அது…அது எப்படி உனக்கு தெரியும்?”

“முயல் பிடிக்குற நாயை முகத்தை பார்த்தாலே தெரியாமாம்! அது தான் உன் முகத்தில் அப்படியே அப்பட்டமாக தெரிஞ்சுச்சே! அர்ஜுன் சாரைப் பற்றி சொல்லத் தான் நீ ரெடியாகி நின்னேன்னு!”

“நான் வேணும்னு அப்படி சொல்ல நினைக்கல பிரியா அம்மா ரொம்ப வருத்தப்பட்டு பேசுனாங்க அது தான்!”

“அம்மாவைப் பற்றி தான் தெரியும் தானே! சின்ன விஷயமாக இருந்தாலும் ரொம்ப சீக்கிரமா ரியாக்ட் பண்ணிடுவாங்க அன்னைக்கு ஹாஸ்பிடலில் அர்ஜுன் சார் உன் பக்கத்தில் வந்து இருக்கும் போதே அம்மா முகம் மாறிடுச்சு அதோடு நிச்சயதார்த்தம் அன்னைக்கு ரொம்ப ரொம்ப கோபப்பட்டாங்க! இந்த நேரத்தில் நீ அவரைப் பற்றி சொன்னால் நிச்சயம் அம்மா கோபப்பட்டு இருப்பாங்க வருண் சாருக்கும் திட்டு விழுந்து இருக்கணும்
அது மட்டுமில்லாமல் நீ அர்ஜுன் சாரை லவ் பண்ண விஷயம் யாருக்கும் தெரியாது ஏன் உனக்கே தெரியாது அப்படி இருக்கும் போது அம்மா அதை முதலில் நம்புவாங்கலான்னும் கூட தெரியாது அதனால் தான் சொல்லுறேன் எதையும் கொஞ்சம் பொறுமையாக செய்யலாம் ஹரிணி! எனக்கு தெரியும் உனக்கு வருண் சாரோட அம்மா கொடுத்து இருக்குற நேரம் கம்மி தான் இருந்தாலும் நம்ம சக்தியையும் நாம பார்க்கணுமே! நம்மால் முடிந்த முயற்சிகளை பண்ணுவோம் அப்படியும் எதுவும் சரி வரலைன்னா வேறு வழியை யோசிப்போம் அதை விட்டுட்டு சும்மா இருக்குற சிக்கலை இன்னும் சிக்கலாக்கி விடாதே!”

“நீ சொல்லுறது புத்திக்கு புரியுது ஆனா மனசுக்கு புரிய மாட்டேங்குதே!”

“நாலு தட்டு தட்டினா எல்லாம் புரியும் வா!” சிறு மிரட்டலோடு தன் அக்காவின் கையை பிடித்து இழுத்து கொண்டு கோவிலினுள் நடந்து சென்றவள் பிரகாரத்தில் இருந்த கடவுளிடம் ஹரிணியின் நல்வாழ்க்கைக்காக வேண்டிக் கொள்ளவும் மறக்கவில்லை.

சிறிது நேரம் அந்த கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தவர்கள் வருணையும், அர்ஜுனையும் நிச்சயதார்த்தத்திற்கு முன்பு சந்தித்த ஹோட்டலில் வைத்து அன்றும் சந்திப்பதாக கூறியிருக்க அந்த இடத்தை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

அன்று போல இன்றும் அர்ஜுன் தன்னை பார்த்ததுமே தன்னை நோக்கி வந்து நின்று கொள்வானா? என்ற ஆவலுடன் ஹரிணி அந்த ரெஸ்டாரன்டை நோக்கி நடை பயில மறுபுறம் வருண் மற்றும் அர்ஜுன் இருவரும் அவர்களது காரில் ஏறி அமர்ந்து கொண்டனர்.

அர்ஜுனிடம் இப்போதெல்லாம் பெரும்பாலும் அமைதியே நிறைந்து இருந்தது.

கேட்கும் கேள்விகளுக்கு மாத்திரமே பதிலளிப்பவன் மீதி நேரமெல்லாம் அமைதியாகவே தன் நேரத்தை கழிப்பான்.

முன்பு எல்லாம் எப்போதும் ‘பிரியா, பிரியா’ என்று அவளது பெயரை ஜெபம் போல சொல்லிக் கொண்டு இருப்பவன் இப்போது பிரியா என்ற பெயரை எப்போதாவது ஒரு தடவை தான் உபயோகிப்பான் அதுவும் அவனாக விரும்பி சொன்னால் மாத்திரமே.

நிச்சயதார்த்த புகைப்படங்களில் ஹரிணி இருக்கும் புகைப்படம் ஒன்றை மாத்திரம் எப்போதும் தன்னோடு வைத்திருப்பவன் இரவு தூங்கும் நேரத்தில்
“பிரியா காலேஜ் போயிட்டா! பிரியா வீட்டுக்கு போயிட்டா! பிரியாவை காணோம்!” என்று மாற்றி மாற்றி பேசிக் கொண்டே இருப்பான்.

சில சமயங்களில் இரவு நேரங்களில் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து கொண்டு
“பிரியா! இரத்தம்! ஆக்சிடென்ட்!” என்று கூட சத்தமிட்டு கத்தி கூப்பாடு போடத் தொடங்கிவிடுவான்.

அவனது இந்த திடீர் மாற்றத்தில் சிறிது பதட்டம் கொண்ட வருண் வைத்தியர் இளங்கோவிடம் அது பற்றி பேசி இருக்க அவனை நேரில் அழைத்து வருமாறு கூறியிருந்தவர் இன்று மாலை தான் அவர்களை சந்திக்க நேரம் வழங்கி இருந்தார்.

இப்போது ரெஸ்டாரன்டிற்கு சென்று ஹரிணியை சந்தித்து விட்டு அப்படியே வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வருண் தன் காரை அந்த ரெஸ்டாரன்ட் பார்க்கிங்கில் நிறுத்தி வைத்து விட்டு அர்ஜுனை தன் ஒரு கையால் பிடித்து அழைத்து கொண்டு அவளைக் காண எண்ணி உள்ளே நடந்து சென்றான்.

அன்று வருண் இருந்த அதே இருக்கையில் ஹரிணிப்பிரியா மற்றும் விஷ்ணுப்பிரியா அமர்ந்திருக்க அவர்கள் இருவரையும் பார்த்து சிறு புன்னகையுடன் வந்து சேர்ந்தவன் ஹரிணியின் சேலையைப் பார்த்து விட்டு சிறிது அதிர்ச்சியாக அர்ஜுனைத் திரும்பி பார்த்தான்.

அந்த ரெஸ்டாரன்டில் நுழைந்தது முதல் இப்போது வரை ஹரிணியையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டு நின்ற அர்ஜுன் வருணின் கையில் இருந்து தன் கையை விலக்கி எடுத்து விட்டு அவளருகில் சென்று அமர்ந்து கொண்டு அவளையே மேலிருந்து கீழாக பார்த்து கொண்டு இருந்தான்.

தன் வாய்க்குள் எதையோ முணுமுணுத்தபடியே அர்ஜுன் அமர்ந்திருக்க அவனருகில் சென்று அவன் பேசுவதை கவனித்து பார்த்த வருண் அவன் கூறிக்கொண்டிருந்த விடயத்தை கேட்டு அதிர்ச்சியடைந்து போய் நின்றான்.

அவன் அதிர்ச்சி அடையும் அளவிற்கு அர்ஜுன் கூறிய விடயங்கள் வேறு எதுவும் அல்ல பிரியாவைப் பற்றிய விடயங்கள் தான்.

“பிரியாவுக்கு ஆக்சிடென்ட்! பிரியாவோட சேலையில் இரத்தம்! பிரியா இரத்தம்! ஆக்சிடென்ட் பிரியா!” என்று முணுமுத்தபடியே அர்ஜுன் அமர்ந்திருக்க ஹரிணியும் கண்கள் கலங்க அவனை பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து அர்ஜுன் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்து வருண் சிறிது கலக்கத்தோடு அவனது தோளில் தன் கரத்தை வைக்க கண்கள் கலங்க அவனை திரும்பி பார்த்தவன்
“வருண்! என் பி…ரியா! என்…னோட பிரியா! என்னோ…ட பிரியா டா!” என்றவாறே மெல்ல மெல்ல கண்களை மூடி மயங்கி சரிந்தான்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!