நினைவு – 21

eiE6SA598903-1e5a25b2

மாலை நேர வானம் தன் செம்மை நிறத்தை மறைத்து கருமையைத் தழுவிக் கொண்டபடி நிலவை தன் மீது பவனி வரச் செய்திருக்க அந்த நிலவொளி வெளிச்சத்தில் சாலையோரமாக ஹரிணி, விஷ்ணுப்பிரியா மற்றும் கிருஷ்ணா தங்கள் வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.

 

ஹரிணி முகம் கொள்ளாப் புன்னகையுடன் கனவுலகில் நடந்து செல்வதைப் போல நடந்து சென்று கொண்டிருக்க அவளைப் பின் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருந்த அவளது உடன்பிறப்புகள் இருவரும் அவளை ஜாடையில் காட்டி சிரித்துப் பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தனர்.

 

இத்தனை வருட காலத்தில் ஹரிணியின் முகத்தில் இந்தளவிற்கு சந்தோஷத்தை அவர்கள் யாரும் இதுவரை கண்டதில்லை இன்று தான் முதன்முறையாக அவளது முகத்தில் அத்தனை ஆனந்தம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது.

 

இந்த சந்தோஷத்திற்கு எல்லாம் காரணம் அர்ஜுன் என்று தெரிந்து கொண்ட பின்னர் அவனது காதல் நிச்சயமாக ஹரிணியின் வாழ்வில் அவள் இதுவரை காணாத வசந்தத்தை அவளுக்கு வழங்கும் என்பதை தன் மனதிற்குள் எழுந்த அர்ஜுன் மீதான சலனத்தை மறைத்து விஷ்ணுப்பிரியா உறுதியாக நம்பினாள்.

 

சிரித்துப் பேசிக்கொண்டே தங்கள் வீடு வந்து சேர்ந்தவர்கள் வீட்டிற்குள் நுழைவதற்காக உள் நுழைய போக அங்கே வீட்டின் வாயில் கதவருகில் ஜெயலஷ்மி தன் இடுப்பில் கையை வைத்து கொண்டு கோபமாக நின்று கொண்டிருந்தார்.

 

ஹரிணி அவரைப் பார்த்ததுமே ஓடிச் சென்று அவரை இறுக அணைத்து அவரது கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவரது கன்னங்கள் இரண்டையும் பிடித்து ஆட்டி விட்டு துள்ளிக்குதித்து கொண்டே தன்னறையை நோக்கி சென்று விட அத்தனை நேரம் தன் பிள்ளைகளை காணாத பயத்தில் பதட்டம் கலந்த கோபத்துடன் நின்று கொண்டிருந்தவர் இப்போது அவளது செய்கையில் குழப்பத்தில் வாயடைத்து போய் நின்று கொண்டிருந்தார்.

 

“அம்மா! என்ன ஆச்சு? ஒரே ஷாக் ரியாக்ஷன் முகத்தில் தாண்டவமாடுது?” விஷ்ணுப்பிரியா தன் அன்னையை பார்த்து சிரித்துக் கொண்டே கேட்க

 

எட்டி அவளது காதை பிடித்து கொண்டவர்

“கோவிலுக்கு போயிட்டு சீக்கிரமா வரச் சொன்னா இது தான் சீக்கிரமா வர்றதா? போன் பண்ணாலும் யாரும் போனை எடுக்கவே இல்லை அக்காவும், தம்பியுமா எங்கே போய் சுத்திட்டு வர்றீங்க? ஹரிணி என்னடான்னா சம்பந்தமே இல்லாமல் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு போறா? மூணு பேரும் ரகசியமாக என்ன வேலை பார்த்துட்டு என்னை தாஜா பண்ண நினைக்குறீங்க?” என்று கேட்க

 

“ஐயோ! அம்மா! வலிக்குதும்மா! விடும்மா!” அழாத குறையாக கெஞ்சியபடியே ஜெயலஷ்மியின் கையிலிருந்த தன் காதை விடுவிக்க போராடிக் கொண்டிருந்தவள் தன்னைப் பார்த்து சிரித்துக் கொண்டு நின்ற கிருஷ்ணாவின் முதுகில் பலமான அடி ஒன்றை வைக்கவும் மறக்கவில்லை.

 

“அம்மா!” அவளது அடியின் தாக்கத்தில் அலறிக்கொண்டே தன் முதுகை தேய்த்து விட்டு கொண்டவன்

 

“இந்த விஷ்ணு தான்ம்மா வேணும்னு என்னையும், ஹரிணியையும் லேட் பண்ண வைத்தா! நீங்க அவகிட்டயே கேளுங்க விடாதீங்க!” என்று விட்டு விஷ்ணுப்பிரியாவைப் பார்த்து பழிப்பு காட்டி விட்டு சென்று விட இப்போது ஜெயலஷ்மியின் கோபப்பார்வை முழுவதும் அவளின் புறமாக ஒட்டுமொத்தமாக திரும்பியது.

 

“அம்மா சத்தியமாக நான் எதுவும் பண்ணலம்மா! அவன் வேணும்னு போட்டுக் கொடுத்துட்டு போறான் என்னை நம்பும்மா!” விஷ்ணுப்பிரியா கெஞ்சலாக தன் அன்னையை பார்த்து கூற 

 

“உனக்கு எப்போதும் விளையாட்டு தான் பிரியா! வயசுப்பொண்ணுங்க நேரத்துக்கு வீட்டுக்கு வரணும்னு தெரியாதா? அதுவும் கல்யாண நிச்சயதார்த்தம் முடிந்து கொஞ்ச நாள் தான் ஆகுது இப்படி தான் நேரம் கெட்ட நேரத்துக்கு வீட்டுக்கு வர்றதா?” தன் ஒட்டுமொத்த கோபத்தையும் காட்ட அப்போதைக்கு அவள் ஒருவளே இருக்கிறாள் என்ற எண்ணத்தோடு ஜெயலஷ்மி கொட்டித் தீர்க்க அவளோ எதுவும் பேசாமல் அவர் முழுமையாக எல்லாவற்றையும் சொல்லி முடித்து விடட்டும் என்ற எண்ணத்தோடு தன் கையைக் கட்டிக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.

 

“என்னாச்சு லஷ்மி? ஒரே சத்தமாக இருக்கு?” தோட்டத்தில் வேலைகளை முடித்து விட்டு தன் தோளில் கிடந்த துண்டில் கையை துடைத்து விட்டபடியே மாணிக்கம் வரவும்

 

“லச்சு பேபி! உங்களுக்கு அடுத்த ரவுண்ட் போக ஆள் வந்தாச்சு என்னை விடுங்க! அப்பாவை வைத்து நல்லா செய்ங்க” என்றவாறே தன் அன்னையின் கன்னத்தில் தட்டி விட்டு விஷ்ணுப்பிரியா சிட்டாகப் பறந்து விட அவள் சொல்லி விட்டு சென்றது போல இம்முறை ஜெயலஷ்மியிடம் காரணமே இல்லாமல் மாணிக்கம் திட்டு வாங்கிய படி திருதிருவென விழித்துக் கொண்டு நின்றார்.

 

‘அப்பப்பப்பா! இந்த லச்சு கிட்ட நம்மை சிக்க வைத்து விட்டு இந்த ஹரிணியும், கிருஷ் டப்பாவும் என் காதை பஞ்சர் ஆக்கிட்டு போயிடுச்சுங்க! எங்கே அதுங்க இரண்டும்?’ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தங்கள் அறைக்குள் நுழைந்த விஷ்ணுப்பிரியா அங்கே கண்ணாடியின் முன் நின்று கொண்டு தன் தலையை துவட்டி கொண்டு நின்ற ஹரிணியைப் பார்த்ததும் அறைக்கதவை அறைந்து சாத்தி விட்டு அவள் முன்னால் வந்து நின்று கொண்டாள்.

 

“அப்புறம் பிரியா அம்மா கிட்ட அட்வைஸ் நல்லா கேட்டு வாங்கிகிட்டியா? அம்மா சொல்லுறதைக் கேட்டு நடம்மா ஏன் இப்படி எல்லாம் பண்ணுற? என்னைப் போல நல்ல பொண்ணா இருக்க பாரும்மா!” சிரிப்பில் வளைந்த தன் உதடுகளை மறைத்துக் கொண்டபடி இயல்பாக தன் தலையை துவட்டி விட்டபடியே கூறிக் கொண்டிருந்த ஹரிணியை கொலைவெறியோடு முறைத்து பார்த்தவள்

 

“அடியேய் ஹரிணி! உன்னை நசுக்கி சாறு எடுத்துத் தூக்கி போடப் போறேன் பாரு! நீயும், அர்ஜுன் சாரும் லவ்ஸ் பண்ண எங்களை மாட்டி விடுற நீ கேடி!” என்றவாறே அவளது கையில் இருந்த டவலை பறித்து எடுத்துக் கொள்ள 

 

முகம் நிறைந்த புன்னகையுடன் அவளது கைகளை பிடித்து துள்ளிக்குதித்தவள்

“நானும் அர்ஜுனும் லவ் பண்ணுறோம் பிரியா! இதை சொல்லும் போதே எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு பாரேன்!” கனவில் பேசுவதைப் போல பேசிக் கொண்டு நின்றாள்.

 

“ஹலோ மேடம்! நீங்க அப்படியே டூயட் பாட எல்லாம் போக வேணாம் முதல்ல இரண்டு பேரும் அவ்வளவு நேரமாக என்ன பேசிட்டு இருந்தீங்கன்னு சொல்லுங்க எனக்கு யோசித்து யோசித்து தலை எல்லாம் குழம்பி போயிடுச்சு” விஷ்ணுப்பிரியாவின் கூற்றில் சிறு புன்னகையுடன் அவளது தோளில் தட்டியவள்

 

“அதெல்லாம் சொல்லக்கூடாது சீக்ரெட்” என்று கூற

 

“அய்யே! என்ன பெரிய சீக்ரெட்? அந்த ஆக்சிடென்டில் என்ன நடந்ததுன்னு அவரு கேட்டு இருப்பாரு நீ உனக்கு எதுவுமே நினைவு இல்லை என்கிற விடயத்தை சொல்லி இருப்ப! அதைத்தான் அத்தனை நேரமாக பேசிட்டு இருந்திருப்பீங்க கரெக்டா?” தன் சுடிதாரின் காலரை உயர்த்தி விட்டபடியே கேட்டவளை ஹரிணி தன் விழி விரிய பார்த்து கொண்டு நின்றாள்.

 

“என்ன மேடம் வாயடைத்து போயிட்ட? நான் சொன்னது எல்லாம் சரிதானே?”

 

“எப்படி பிரியா அப்படியே எல்லாவற்றையும் ரொம்ப ரொம்ப…”

 

“பரவாயில்லை ஹரிணி ஓபனாக சொல்லு! பொதுவாக எனக்கு கொஞ்சம் ஜெனரல் நாலேஜ் அதிகம் தானே!”

 

“ஆமா ஆமா ரொம்ப அதிகம் அது தான் அங்கே ஹாஸ்பிடலில் நடந்ததை ரொம்ப ரொம்ப தப்பாக கெஸ் பண்ணுற!”

 

“வாட்? தப்பா?”

 

“ஆமா!”

 

“இல்லை நீ சும்மா சொல்லுற!”

 

“நான் ஒண்ணும் சும்மா சொல்லல வருண் அண்ணா அர்ஜுனைப் பற்றி சொன்னதில் இருந்து இன்னைக்கு அவங்களைப் பார்க்கப் போகும் வரை என்ன நடந்ததோ அதை எல்லாம் சொல்லிட்டேன்”

 

“என்ன? எல்லாவற்றையும் சொல்லிட்டியா?” விஷ்ணுப்பிரியா அதிர்ச்சியில் தன் வாயை பிளக்க

 

அவளது தாடையை தன் ஒரு கையால் மூடும் படி செய்தவள்

“அர்ஜுன் கிட்ட எல்லா விடயங்களையும் சொல்லணும்னு நினைத்தேன் சொல்லிட்டேன்” இயல்பாக தன் தோளை குலுக்கி கொண்டபடியே கூறினாள்.

 

“அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க?”

 

“ரொம்ப கஷ்டப்பட்டாங்க வருண் அண்ணா சொல்லி தான் எனக்கு அவரைப் பற்றியே தெரியும்னு சொன்னதைக் கேட்டு ரொம்ப ஃபீல் பண்ணாங்க ஆனாலும் நான் எல்லாம் சொல்லி முடித்ததும் புரிஞ்சுக்கிட்டாங்க”

 

“சரி இப்போ அடுத்ததாக இரண்டு பேரும் என்ன செய்ய முடிவு எடுத்து இருக்கீங்க?”

 

“நடந்த எல்லாவற்றையும் மறந்து அடுத்த கட்டத்திற்கு போக வேண்டியது தான்”

 

“அப்படின்னா? வருண் சாரை கல்யாணம் பண்ணிக்க போறியா?”

 

“போடி இவளே!” விஷ்ணுப்பிரியாவின் நெற்றியில் மெல்லமாக தட்டியவள் சற்று நேரத்திற்கு முன்பு ஹாஸ்பிடலில் வைத்து நடந்த விடயங்களை பற்றி கூறத் தொடங்கினாள்.

 

அர்ஜுன் எல்லாவற்றையும் மறந்து விடலாம் என்று கூறியதைக் கேட்டு ஹரிணி அதிர்ச்சியாக அவனைப் பார்த்து கொண்டிருக்க அவளது முகத்தின் முன்னால் சொடக்கிட்டு அவளை நனவிற்கு அழைத்து வந்தவன் கேள்வியாக அவளைப் பார்த்து கொண்டு இருந்தான்.

 

“அர்..ஜுன்! நீங்க என்ன சொல்றீங்க? எல்லாவற்றையும் மறந்து போறதா அப்படின்னா?”

 

“அப்படின்னா இத்தனை நாள் நான் இல்லாமல் உன் வாழ்க்கையில் நடந்த எல்லாவற்றையும் மறந்துட்டு இனிமேல் எல்லாவற்றையும் புதிதாக ஆரம்பிப்போம்னு சொல்லுறேன் அதாவது உனக்கு பழைய விடயங்கள் எதுவும் நினைவுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை இப்போ நீ என்னை விரும்புற மாதிரியே எப்போதும் என்னை காதல் செய் அது போதும் என்னோட காதல் எந்த நிலையிலும் மறக்காது அதேநேரம் மாறவும் மாறாது!” என்று விட்டு அர்ஜுன் அவளைப் பார்த்து புன்னகை செய்ய மனம் நிறைந்த ஆனந்தத்துடன் அவனை அணைத்துக் கொண்டவள் அவனது நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்டாள்.

 

அதன் பிறகு சிறிது நேரத்தில் அந்த அறையில் இருந்து வெளியே வந்தவள் அர்ஜுனை வருணோடு அனுப்பி வைத்து விட்டு தன் தம்பி, தங்கையுடன் தங்கள் வீட்டை நோக்கி புறப்பட்டு வந்திருந்தாள்.

 

“அர்ஜுன் சார் ரியலி க்ரேட் தான் இல்லையா ஹரிணி? இப்படியும் ஒருத்தரால காதல் செய்ய முடியுமான்னு ஆச்சரியமாக இருக்கு!” விஷ்ணுப்பிரியா தன் வியப்பு மாறாத குரலில் கூற

 

“ம்ம்ம்ம்ம்ம் ஆமா! அர்ஜுனோட இந்த காதலை விட பலமடங்கு அதிகமாக காதலை நான் அவருக்கு கொடுக்கணும் நான் அவங்களை இதற்கு முதல் எதை நினைத்து காதல் செய்தேனோ தெரியல ஆனா இப்போ அவரோட காதலுக்காக அவரை இன்னும் இன்னும் காதல் செய்ய ஆசைப்படுறேன் இன்னும் இரண்டு, மூணு நாளில் வீட்டுக்கு வந்து அம்மா, அப்பா கிட்ட நடந்த விடயங்களை எல்லாம் சொல்லி பேசுறதா சொல்லி இருக்காங்க எல்லாம் நல்லபடியாக நடக்கணும்” என்றவாறே ஹரிணி கலக்கம் நிறைந்த குரலில் தன் தங்கையை பார்க்க

 

அவளது தோளைப் பற்றி ஆதரவாக அழுத்திக் கொடுத்தவள்

“இத்தனை வருஷம் கழிச்சு உங்க இரண்டு பேரையும் சந்திக்க வைத்து அர்ஜுன் சாரை குணப்படுத்திய அந்த கடவுள் நிச்சயமாக உங்க இரண்டு பேரையும் சேர்த்து வைப்பாரு! எனக்கு பூரண நம்பிக்கை இருக்கு” என்று கூற ஹரிணியும் அவளது கூற்றில் சிறு நம்பிக்கையோடு மனதார கடவுளிடம் வேண்டிக் கொண்டு நின்றாள்.

 

*********************************

 

ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பியது முதல் தங்கள் வீடு வந்து சேரும் வரை அர்ஜுனிற்கு தன் இருப்புக் கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.

 

இந்த ஏழு வருட காலத்தில் சுற்று வட்டார பகுதிகளில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை எல்லாம் வியந்து பார்த்துக் கொண்டு இருந்தவன் தங்கள் வீட்டில், கம்பெனியில் தற்போதைய நிலவரங்களை பற்றி வருணிடம் கேட்டுக் கொள்ளவும் மறக்கவில்லை.

 

இன்னமும் அவனுக்கு தான் ஏதோ கனவில் இருந்து எழுந்து கொண்டதைப் போலத்தான் இருந்தது.

 

அர்ஜுனுக்கே இத்தகைய மனநிலை என்றால் வருணின் மனநிலையைப் பற்றி வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

 

நடக்கவே நடக்காதோ என்று நினைத்திருந்த விடயம் சடுதியாக யாரும் எதிர்பாராத தருணத்தில் எதிர்பாராத விதமாக நடந்து முடிந்திருக்க அதன் சந்தோஷத்தின் தாக்கம் இன்னும் அவனை விட்டு விலகவில்லை என்று தான் கூற வேண்டும்.

 

இந்த ஒரு நாளிற்காகத் தானே இத்தனை வருடங்களாக அவன் தவியாக தவித்தான்.

 

ஹரிணியைப் பற்றி முன்னரே கண்டுபிடிக்க முடிந்திருந்தால் இன்னமும் முன்னதாகவே அர்ஜுனை சரி செய்து இருக்கலாம் என்று அவன் நினைத்தாலும் அந்த கடவுள் விதித்து வைத்ததை யாரால் மாற்ற முடியும்.

 

எது எப்படி இருந்தாலும் ஹரிணி பற்றிய விடயங்களை அவளது விபத்து நடந்த அந்த காலத்திற்குள் கண்டுபிடிக்க முடியாமல் போனதில் யாரோ ஒருவர் தொடர்பட்டிருக்கிறார் என்பது மாத்திரம் அவனுக்கு மிகவும் உறுதியாக தெரிந்தது.

 

இப்போது அந்த விடயத்தை பற்றி அர்ஜுனிடம் உடனடியாக கேட்க முடியாது என்ற எண்ணத்தில் அந்த குழப்பத்தை சிறிது தள்ளி வைத்தவன் தன் பெற்றோர் அர்ஜுன் குணமடைந்த விபரத்தை பற்றி அறிந்து கொண்டதும் அதற்கு எவ்வாறு தங்கள் பதில் உணர்வை பிரதிபலிக்கப் போகிறார்களோ என்ற ஆவலோடு தங்கள் வீட்டை நோக்கி காரை செலுத்திக் கொண்டு இருந்தான்.

 

வெண்ணிற பிரமாண்டமான அந்த மாளிகையின் முன்னால் வருண் தங்கள் காரை நிறுத்தியதும் அர்ஜுன் இறங்கி கொள்ள மறுபுறம் வருண் புன்னகையுடன் அவனருகில் வந்து நின்று

“உள்ளே போகலாமா மிஸ்டர் அர்ஜுன்?” என்று கேட்க

 

“கண்டிப்பா!” ஆவல் ததும்ப அவனைப் பார்த்து கூறியவன்

 

“சாவித்திரிம்மா! ராமுப்பா!” என்றவாறே வீட்டை நோக்கி நடந்து சென்றான்.

 

அர்ஜுனின் குரல் கேட்டதுமே சமையலறையில் இருந்து வெளியேறி வந்த சாவித்திரி

“அர்ஜுன் கண்ணா! வாங்க வாங்க! இவ்வளவு நேரமாக எங்கே போய் இருந்தீங்க? டாக்டர் அங்கிள் என்ன சொன்னாங்க” அவனது தலையை கோதி விட்டபடியே சிறு குழந்தையிடம் கேட்பது போல வினவ 

 

கண்கள் கலங்க அவரைப் பார்த்து கொண்டு நின்றவன் 

“சாவித்திரிம்மா!” என்றவாறே அவரை இறுக அணைத்து கொண்டான்.

 

“அர்ஜுன் கண்ணா! என்னடா ஆச்சு உங்களுக்கு? வருண் டாக்டர் என்ன சொன்னாங்க?” சாவித்திரி சிறு பதட்டத்துடன் அவனைப் பார்த்து வினவ அவரைப் பார்த்து ஒன்றும் இல்லை என்பது போல தலையசைத்தவன் 

 

“உங்க அர்ஜுன் கண்ணாகிட்டயே கேளுங்க என்ன நடந்ததுன்னு?” என்று கூறவும் குழப்பமாக வருணைப் பார்த்தபடியே தன் அணைப்பில் இருந்து அர்ஜுனை விலக்கி நிறுத்தியவர் மேலிருந்து கீழாக அவனை ஆராய்ச்சியாக நோக்கினார்.

 

“சாவி ம்மா!” 

 

“இருடா கண்ணா! எதுவும் அடி பட்ட…” அர்ஜுனின் அழைப்பில் இயல்பாக பேசிக் கொண்டு சென்றவர் அவனது அந்த வித்தியாசமான அழைப்பில் அதிர்ச்சியாக சட்டென்று அவனை நிமிர்ந்து பார்க்க அவரைப் பார்த்து கண் சிமிட்டி சிரித்தவன்

 

“சாவிம்மா! உங்க கையால் காலிஃப்ளவர் மசாலா சாப்பிடணும் போல இருக்கு சாவிம்மா செய்து தருவீங்களா சாவிம்மா?” என்று கேட்கவும்

 

“அஜ்ஜு…அஜ்ஜு கண்ணா! என்னை சாவிம்மான்னா கூப்பிட்ட? என்னை சாவிம்மான்னு கூப்பிட்டியா? அப்படின்னா உனக்கு உனக்கு எல்லாம் சரியா… எல்லாம் போயிடு…ச்சா?” திக்கித்திணறி தவிப்போடு வினவ அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன் வருணின் புறம் திரும்பி பார்க்க அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவன் சிறிது நேரத்திற்கு முன்பு ஹரிணியை சந்தித்தது முதல் வைத்தியர் இளங்கோ அவனிடம் அர்ஜுனைப் பற்றி கூறியது வரை பகிர்ந்து கொள்ள ஆனந்தக் கண்ணீர் வடிய அதை எல்லாம் கேட்டு கொண்டு நின்றவர் தன் இரு மகன்களையும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்க தொடங்கினார்.

 

அர்ஜுனின் அந்த சாவிம்மா என்னும் அழைப்பு சாவித்திரியிடம் ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்றால் மாத்திரமே அர்ஜுனின் வாயில் இருந்து வெளிவரும் மீதி நேரமெல்லாம் சாவித்திரி ம்மா என்று தான் அவன் அவரை அழைப்பான்.

 

அர்ஜுனுக்கு சித்த பிரமை பிடித்திருந்த இந்த ஏழு வருட காலத்தில் ஒரு தடவை கூட அவன் அவரை அவ்வாறு அழைத்ததில்லை.

 

அர்ஜுன் அந்த நிலைமையில் இருந்து மீண்டு வந்து தன்னை ஒரு முறையாவது அவ்வாறு அழைக்க மாட்டானா என்று அவர் ஏங்காத நாளில்லை.

 

இன்று அது நிறைவேறி விட்ட சந்தோஷத்தில் 

“கடவுளே! இந்த ஒரு நாளுக்காகத் தானே இத்தனை வருஷமாக நான் உன் கிட்ட மனதார மன்றாடி வேண்டிக் கொண்டு இருந்தேன் என் வேண்டுதலை நிறைவேற்றித் தந்துட்டப்பா! நிறைவேற்றி தந்துட்ட!” என்று சாவித்திரி மகிழ்ச்சி பொங்க பேசிக் கொண்டு இருக்க 

 

அப்போது சரியாக அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்த ராமநாதன்

“என்ன வேண்டுதல் நிறைவேறிடுச்சு சாவித்திரி?” என்று கேட்டவாறே அவர்கள் முன்னால் வந்து நின்றார்.

 

“அப்பா!” வருண் சந்தோஷத்துடன் ராமநாதனை தழுவிக் கொள்ள 

 

அவர்கள் எல்லோரையும் மாறி மாறி பார்த்து கொண்டு நின்றவர்

“என்ன ஆச்சு? இன்னைக்கு எல்லோர் முகத்திலும் ஏதோ ஒரு பிரகாசம் தெரியுது? அர்ஜுன் கண்ணா நீங்க சொல்லுங்க என்ன நடந்தது?” என்று கேட்க

 

புன்னகையுடன் அவர் முன்னால் வந்து நின்று கொண்டவன்

“ராமுப்பா! நான், நீங்க அப்புறம் வருண் நம்ம மூணு பேரும் சேர்ந்து ஒரு வாக்கிங் போகலாமா? அப்படியே வரும் போது அந்த தெருமுனையில் இருக்குற கடையில் சூடான வெங்காய பஜ்ஜி அன்ட் பிளாக் டீ சாப்பிட்டுட்டு வருவோமா?” என்று கேட்கவும்

 

“வாக்கிங்கா? நீ இருக்குற இந்த நிலையில் வாக்கிங் போறது எல்லாம் சாத்தியம்…அர்ஜுன்!” எப்போதும் போல பேசுவதாக நினைத்து பேசியவர் அர்ஜுனின் அந்த இயல்பான பேச்சில் அங்கே நின்று கொண்டிருந்த எல்லோரது முகத்தையும் திரும்பி பார்க்க

 

அவனோ

“ராமுப்பா! எனக்கு எல்லாம் சரியாகிடுச்சு ராமுப்பா!” என்றவாறே அவரை அணைத்து கொண்டான்.

 

பதிலுக்கு அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவர் மௌனமாக கண்ணீர் வடிக்க அன்று தான் அவர்கள் இல்லம் பரிபூரண சந்தோஷத்தில் நிறைந்து போய் இருந்தது.

 

இத்தனை வருடங்களாக அந்த வீட்டில் இருந்து தொலைதூரம் சென்றிருந்த சந்தோஷம் மீண்டும் அர்ஜுன் குணமானதோடு அந்த இடத்தில் வந்து சேர்ந்திருக்க என்றுமில்லாத ஆனந்தக் களிப்போடு நேரம் போவதே தெரியாமல் அவர்கள் அனைவரும் அமர்ந்து கதை பேசிக் கொண்டு இருந்தனர்.

 

சிறிது நேரம் கழித்து சாவித்திரி மற்றும் ராமநாதனை அவர்கள் அறையில் உறங்கச் செய்து விட்டு தங்கள் அறைக்குள் வந்து சேர்ந்த அர்ஜுன் மற்றும் வருண் சிறிது நேரம் பேசி விட்டு வரலாம் என்ற எண்ணத்தோடு பால்கனியில் சென்று அமர்ந்து கொள்ள அர்ஜுனின் பார்வையோ தன் நண்பனின் முகத்தையே நிலை குத்தி நின்றது.

 

இயல்பாக பேசிக் கொண்டே தற்செயலாக அவனின் புறம் திரும்பிய வருண்

“என்னடா அர்ஜுன்? என் முகத்தையே பார்த்துட்டு இருக்க?” என்று கேட்க 

 

அவனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தவன் 

“நீ ரொம்ப நேரமா என் கிட்ட ஏதோ கேட்க முயற்சி பண்ணுற அது தான் அந்த விடயம் என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறேன்” என்று கூறவும் வருணின் பார்வை அவனை மெச்சுதலாக நோக்கியது.

 

“நீ ரொம்ப ரொம்ப ஷார்ப்டா அர்ஜுன்”

 

“எனக்கு ஐஸ் வைக்காமல் கேட்க வந்ததைக் கேளு!”

 

“இல்லை டா! இந்த விஷயத்தை நீ எப்படி எடுத்துப்பேன்னு தெரியல!”

 

“முதல்ல விஷயத்தை சொல்லுடா!”

 

“அது வந்து அர்ஜுன் ஹரிணிக்கு ஆக்சிடென்ட் ஆன அந்த நாளே அவங்களை பற்றி எந்த ஒரு தகவலும் வெளியே தெரிந்து விடக்கூடாதுன்னு யாரோ வேலை பார்த்து இருக்காங்க டா! காலேஜில் போய் கேட்டபோது யாரும் தகவல் சொல்லல! அவ பிரண்ட்ஸ் இரண்டு பேரும் திடீர்னு ஊரை விட்டு காணாமல் போயிட்டாங்க! யாரைக் கேட்டாலும் தெரியாது என்கிற பதில் மட்டும் தான் கிடைத்தது நீயும், ஹரிணியும் லவ் பண்ண விஷயம் நம்ம காலேஜில் இருந்து ஆளுங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதே! அப்புறம் எப்படி இது எல்லாம்? இந்த ஏழு வருடங்களாக எனக்கு இந்த கேள்விக்கு மாத்திரம் பதில் கிடைக்கலடா!” வருண் கவலை தோய்ந்த குரலில் பேசிக் கொண்டு செல்ல 

 

அவனது தோளில் தன் கரத்தை பதித்தவன்

“நாங்க லவ் பண்ண விஷயம் காலேஜைத் தாண்டி வெளி ஒரு ஆளுக்கும் தெரியும்டா வருண்!” என்று கூறவும் அவனோ அதிர்ச்சியாக அவனைத் திரும்பிப் பார்த்தான்.

 

“இன்னொரு ஆளா? யாரு அது?”

 

“பிரியாவோட அப்பா! மாணிக்கம் அங்கிள்!”  

 

“என்ன?” அர்ஜுனின் பதிலில் வருணின் முகம் ஒரே நொடியில் வெளுவெளுத்துப் போனது…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!