நினைவு – 24

eiE6SA598903-0856ba32

நினைவு – 24

முதல் நாள் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தினால் நீண்ட நேரமாக உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த மாணிக்கம் பொழுது புலரும் வேலையில் தான் சற்று ஆழ்ந்த உறக்கத்தை தழுவியிருந்தார்.

அன்று பொது விடுமுறை நாள் வேறு என்பதால் அவரது தூக்கத்தை கலைக்காமல் ஜெயலஷ்மி தன் வேலைகளை கவனித்து கொண்டிருக்க மறுபுறம் அவர்களது செல்வங்கள் மூன்று பேரும் வீட்டை அல்லோலகல்லோலப் படுத்திக் கொண்டு இருந்தனர்.

ஹரிணி வீட்டை தான் தான் சுத்தம் செய்வேன் என்று வாதம் செய்து கொண்டிருக்க விஷ்ணுப்பிரியாவோ தான் தான் சுத்தம் செய்வேன் என்று வீம்பாக நின்று கொண்டிருந்தாள்‌.

இதற்கிடையில் அவர்கள் இருவருக்கும் நடுவில் கிருஷ்ணா துடைப்பத்துடன் யார் அந்த இடத்தை சுத்தம் செய்யப்போகிறார்கள் என்று எண்ணத்தோடு இருவரது முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றான்.

“கிருஷ்ணா துடைப்பத்தை என் கிட்ட கொடு!” ஹரிணி கிருஷ்ணாவிடமிருந்து துடைப்பத்தை வாங்கப் போக

“டேய் கிருஷ் டப்பா! துடைப்பத்தை அவகிட்ட கொடுத்த அந்த துடைப்பத்தாலேயே உன்னை விரட்டி விரட்டி அடிப்பேன்” விஷ்ணுப்பிரியா தன் இடுப்பில் கையை வைத்து கொண்டு அவனை முறைத்துப் பார்த்தபடியே கூற அதற்குள் கிருஷ்ணாவின் கையிலிருந்த துடைப்பம் ஹரிணியின் கைக்கு இடம் மாறியிருந்தது.

“நான் சொல்ல சொல்ல என் பேச்சைக் கேட்காமல் இருக்க இல்லையா? இருடா உன்னை கவனிக்கிறேன்” கிருஷ்ணாவின் தலையில் நங்கென்று கொட்டியவள்

“ஹரிணி துடைப்பத்தை கொடு!” என்றவாறே அவளை விரட்ட ஆரம்பிக்க அவளோ தன் தங்கையின் பிடிக்குள் சிக்காமல் அவளுக்கு போக்கு காட்டி ஓடிக் கொண்டிருந்தாள்.

சரியாக அந்த நேரம் பார்த்து சமையலறைக்குள் இருந்து வெளியேறி வந்த ஜெயலஷ்மியின் மேல் மோதப் போன விஷ்ணுப்பிரியா சட்டென்று விலகிக் கொள்ள அவளின் முன்னால் ஓடிக் கொண்டிருந்த ஹரிணி

“அடியேய் விஷ்ணு! உன்னால் என்னை பிடிக்கவே முடியாது” என்றவாறே வீட்டு வாசலை தாண்டி ஓட இம்முறையும் அவர்கள் மூவரின் சேட்டைக்காகவும் அவளே தன் அன்னையிடம் சிக்கிக் கொண்டாள்.

தன் தங்கையை பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்டே ஓடி வந்த ஹரிணி தன் பின்னால் அவள் வருகின்றாளா என்று பார்த்து கொண்டே ஓடி வந்ததனால் தன் முன்னால் யாரும் வருகின்றார்களா என்று கவனியாமலேயே ஓடி வர சட்டென்று ஏதோ ஒன்று அவள் மேல் மோதியது.

திடீரென ஒரு தடுப்பின் மேல் மோதி தடுமாறி விழப்போகிறோம் என்கிற பயத்தில் பட்டென்று தன் கண்களை இறுக மூடிக் கொண்டவள் கீழே விழுந்தால் தலையில் அடிபட்டு வலிக்குமே என்ற அச்சத்துடன் தன் கண்களை திறவாமலேயே இருந்தாள்.

வெகு நேரமாகியும் தன் உடலில் எவ்வித வலியும் தோணவில்லையே என்ற யோசனையோடு ஹரிணி மெல்ல தன் கண்களைத் திறந்து பார்க்க அங்கே அவள் கண் முன்னால் புன்னகை முகமாக கன்னக்குழி சிரிப்புடன் அர்ஜுன் நின்று கொண்டிருந்தான்.

“அர்ஜுன்!” அதிர்ச்சியில் விழி விரிய ஹரிணி அவனைப் பார்த்து கொண்டு நிற்க தன் கை வளைவில் வைத்துக் கொண்டே அவளை தன் முன்னால் நிமிர்ந்து நிற்கச் செய்தவன் அவளை மிக நெருக்கமாக தன்னருகே நிறுத்தி கொண்டான்.

“அர்ஜுன்! யாரும் பார்த்துடப் போறாங்க” ஹரிணி தவிப்போடு தன் பார்வையை சுழலவிட்டபடியே கூற

அவளதும் தனதும் மூச்சு காற்று உரசிக் கொள்ளும் இடைவெளியில் அவளை மேலும் நெருங்கி வந்து நின்றவன்
“இத்தனை நாள் நான் உன்னை விட்டு விலகி இருந்ததே போதும் சில்லு! இனியும் உன்னை என்னால் விலக்கி வைக்க முடியாது! இப்போவே உன்னை என் கூட கூட்டிட்டு போகணும்னு மனது சொல்லுது தான் இருந்தாலும் மாமா, அத்தை சம்மதம் இல்லாமல் எதுவும் பண்ண முடியாது” என அவளது காதருகில் குனிந்து கூற அவனது மீசை முடியின் சிலிர்ப்பில் அவளது இமைகள் இரண்டும் தானாக மூடிக் கொண்டது.

அவனது நெருக்கத்தில் தன் கையிலிருந்த துடைப்பம் நழுவி விழ தன் இரு கைகளாலும் அவனது தோளை இறுக பற்றிக் கொண்டவள் தன் கண்களை மூடி ஒரு விதமான மோனநிலையில் நிற்க சிறு புன்னகையுடன் அவளது முக வடிவத்தை தன் கைகளால் வரைந்தவன்
“என்னை முதல் தடவை பார்த்த போது நீ இப்படி நெருக்கமாகத் தான் என் கிட்ட நின்ன சில்லு! இதே மாதிரி என் முகத்தையும் அளந்து சொன்ன ஆனால் உன் கை என் மேல் படல! அதற்காக இப்போவும் நான் அப்படியே இருப்பேன்னு சொல்ல முடியாது ஏன்னா அந்த அர்ஜுனுக்கு அப்போ இந்த சில்லு மேல எந்த எண்ணமும் இருக்கல! பட் இப்போ என் மனது பூராவும் நீ தான் இருக்க! உன் முகம் வேணும்னா மாறி இருக்கலாம் ஆனா உன் கண்ணில் தெரியும் காதல் அது இப்போவும் அதே மாதிரி தான் எனக்கு தெரியுது!” காதல் ததும்ப அவளது முகத்தை பார்த்து கொண்டே கூற

அவன் கூறியவற்றை கேட்டு வெட்கப் புன்னகையுடன் மெல்ல மெல்லத் தன் விழிகளைத் திறந்து கொண்டவள்
“ஐ லவ் யூ அர்ஜுன்! இப்போவும், எப்போவும்!” என்று விட்டு அவனது கன்னத்தில் தன் இதழைப் பதிக்க அவனோ ஆனந்த அதிர்ச்சியோடு அவளைப் பார்த்து தன் விழி விரித்தான்.

சிறிது நேரம் அவனது அணைப்பிலேயே தன்னை மறந்து மயங்கி நின்றவள் சட்டென்று அவனை விட்டு விலகி நின்று கொண்டு
“அது சரி நீங்க இங்கே எங்கே வந்தீங்க? அதுவும் இந்த நேரத்தில்?” கேள்வியாக அவனை நோக்க

அவளை எட்டிப் பிடித்து மீண்டும் தன் அணைப்பிற்குள் கொண்டு வந்தவன்
“நான் மட்டும் இங்கே வரல! வருண், சாவித்திரி ம்மா, ராமுப்பா எல்லோரும் தான் வந்து இருக்கோம் வருண் கல்யாண விடயமாக பேச!” என்று கூறவும்

“என்ன வருண் அண்ணா கல்யாணமா?” ஹரிணி தன்னை மறந்து அதிர்ச்சியில் சத்தமிட அவனோ அவசரமாக அவள் இதழ்களை தன் கை கொண்டு மூடிக் கொண்டான்.

“எதற்கு இவ்வளவு ஷாக்?”

“பின்ன ஷாக் இல்லாமலா? வருண் அண்ணா கல்யாணம்னா அப்போ அதில் நானும் தானே இருக்கேன்!” தன் இதழ்களை மூடியிருந்த அர்ஜுனின் கைகளை விலக்கி விட்டபடியே அவனைப் பார்த்து தவிப்போடு அவள் கூற

“ஆமா நீயும் தான் இருக்க!” அவனோ இயல்பாக அவளைப் பார்த்து தன் தோளை குலுக்கி கொண்டான்.

“என்ன அர்ஜுன் விளையாடுறீங்க? எனக்கு ஒன்னுமே புரியல!”

“மை டியர் சில்லு! உன் கல்யாணம் என்னோடு தான் நடக்கும் அதே மாதிரி வருண் கல்யாணமும் நடக்கும் பட் அது ஒரு சர்ப்ரைஸ்!”

“சர்ப்ரைஸ்?”

“ஆமா! சாவிம்மா உங்க நிச்சயதார்த்தம் நடந்த அன்னைக்கே இந்த விடயத்தை பற்றி யோசித்து வைத்துட்டாங்களாம் நேற்று தான் எங்க கிட்ட சொன்னாங்க எங்களுக்கும் சரின்னு பட்டது வருணும் ஓகே சொல்லிட்டான் அது தான் கல்யாண வேலை ஆரம்பிக்க முன்னாடியே எல்லாவற்றையும் பேசிடலாம்ன்னு வந்தோம்!”

“அப்போ வாங்க உள்ளே போகலாம் எல்லோரும் தேடப் போறாங்க!”

“இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு போகலாமே!” அர்ஜுன் தன் அணைப்பை மேலும் இறுக்கமாக்கப் பார்க்க

“யாரும் பார்த்துடப் போறாங்க அர்ஜுன்!” அவனது கையின் ஸ்பரிசத்தில் நெளிந்து கொண்டே அவனிடம் இருந்து விலகி நின்றவள் அவனைப் பார்த்து கண்ணடித்து விட்டு அங்கிருந்து ஓடிச் செல்ல மறுபுறம் அர்ஜுன் புன்னகையுடன் தன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டு அவளைப் பின் தொடர்ந்து நடந்து சென்றான்.

அர்ஜுனுக்கு பூரணமாக குணமடைந்து விட்ட பின்னர் இனியும் ஹரிணி, அர்ஜுன் பற்றிய விடயங்களை அவளது வீட்டினரிடம் பேசாமல் இருப்பது சரியில்லை என்ற எண்ணத்தோடு தான் காலை வேளையிலேயே அவனது குடும்பத்தினர் இங்கே வந்து சேர்ந்திருந்தனர்.

முதல் நாள் இரவே மாணிக்கத்திடம் தாங்கள் அனைவரும் அவர்களை இன்று சந்திக்க வருவதாக சொல்லி இருக்க அர்ஜுன் பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருந்ததால் என்னவோ அவர்கள் சொன்ன விடயம் அவர் மூளையை எட்டி இருக்கவில்லை போலும்.

அந்த சிந்தனையின் தாக்கத்தினால் தான் அவர்கள் தொலைபேசியில் சொன்ன விடயத்தை கூட தன் வீட்டினரிடம் சொல்லுவதற்கு அவர் மறந்து போய் இருந்தார்.

தன் மகன்களின் வாழ்க்கை விடயத்தை நேரம் தாழ்த்துவது சரியில்லை என்ற நோக்கத்தில் தாங்கள் சொன்னது போலவே சாவித்திரி மற்றும் ராமநாதன் ஹரிணியின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

ஹரிணியின் வீட்டிற்குள் நுழையும் நேரம் பார்த்து சரியாக அர்ஜுனின் தொலைபேசி ஒலிக்க சாவித்திரி, ராமநாதன் மற்றும் வருணை உள்ளே செல்லும் படி கூறியவன் தன் தொலைபேசியை எடுத்து கொண்டு தோட்டப் புறமாக நகர்ந்து சென்று விட தோட்டத்திற்கு செல்லும் வாயில் வழியே ஓடி வந்த ஹரிணியை அவர்கள் யாரும் கவனித்திருக்கவில்லை.

தன் தொலைபேசியில் பேசி முடித்து விட்டு வீட்டிற்குள் செல்லலாம் என்ற எண்ணத்தோடு அர்ஜுன் திரும்பி நடந்த போது தான் அவன் எதிர்பாராத அவனது தேவி தரிசனம் அவனுக்கு கிடைத்திருந்தது.

அவள் அருகாமையில் அவளது காதலை வெளிப்படையாக காணும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவனுக்குள் ஏதேதோ எண்ணங்கள் அலை பாய்ந்தாலும் மாணிக்கத்தின் சம்மதத்துடன் தான் தங்கள் திருமணம் நடந்து முடிய வேண்டும் என்ற நோக்கத்தில் தன் ஆசைகளை எல்லாம் அவன் தனக்குள்ளேயே மறைத்து வைக்கத் தொடங்கியிருந்தான்.

தங்கள் இருவரையும் தோட்டத்தில் வைத்து யாரும் கவனிக்கவில்லை என்று எண்ணி கொண்டு அர்ஜுனும், ஹரிணியும் இயல்பாக வீட்டிற்குள் சென்றிருக்க மாணிக்கம் வெளியே ஏதோ சத்தம் கேட்டு தன் தூக்கம் கலைந்து அறை ஜன்னல் வழியே தோட்டத்தை பார்த்து கொண்டு நின்றதை அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை.

ஹரிணியும், அர்ஜுனும் வெகு நெருக்கமாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததுமே அதிர்ச்சியும், கோபமும் ஒன்று சேர அவர் தனது முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாலும் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டது அவருக்கு தெள்ளத் தெளிவாகவே கேட்டது.

தான் தான் எல்லா விடயங்களையும் செய்தேன் என்று தெரிந்திருந்தும் தன் மகளிடம் தன்னைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவன் தவறாக சொல்லவில்லை என்ற உண்மை அவர் மனசாட்சியை சுட தன்னை எண்ணி அவருக்கே அவமானமாக இருந்தது.

எந்த நிலையிலும் அவனது காதல் அவனை விட்டு விலகி செல்லாமல் அவனை இத்தனை தூரம் வழி நடத்தி வந்து இன்று அவனுக்கு சந்தோஷத்தை அளித்திருக்கிறதே என்று எண்ணி வியந்து போனவர் ஹாலில் சாவித்திரி மற்றும் ராமநாதனின் குரல் கேட்டு மெல்ல தன்னை நிதானப்படுத்திக் கொண்டும், சுத்தப்படுத்திக் கொண்டும் அவர்களைக் காண விரைந்து சென்றார்.

“வாங்க சம்பந்தி வாங்க! உட்காருங்க” அவர்களின் திடீர் வருகையில் சிறிது தடுமாற்றம் கொண்ட ஜெயலஷ்மி தன் தடுமாற்றத்தை மறைத்து கொண்டு புன்னகை முகமாக அவர்கள் எல்லோரையும் உபசரிக்க வருணின் பார்வையோ அந்த வீட்டைச் சுற்றியே வலம் வந்தது.

“வணக்கம் சம்பந்தி! எப்படி இருக்கீங்க?” இயல்பான புன்னகையோடு தன் அறைக்குள் இருந்து வெளியேறி வந்த மாணிக்கத்தை பார்த்ததும் வருணின் முகம் சிறிது சுருங்கினாலும் உடனே தன்னை சரி செய்து கொண்டவன்

“வணக்கம் அங்கிள்!” என்றவாறே அவரைப் பார்த்து புன்னகை செய்யவும் மறக்கவில்லை.

அவனது இயல்பான நடவடிக்கையில் அவரது குற்றவுணர்வு அவரை வருந்தச் செய்ய தான் இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு அமைதியாக நின்றவர் அவர்களை இன்முகத்துடனேயே வரவேற்றார்.

சிறிது நேரம் அவர்கள் எல்லோரும் இயல்பாக பேசிக் கொண்டு இருக்க தன் கையில் காஃபி டம்ளர்கள் நிறைந்த ட்ரேயுடன் அவர்கள் முன்னால் வந்து நின்ற ஜெயலஷ்மி

“அர்ஜுன் எங்கே வரலயா?” அந்த இடத்தை நோட்டம் விட்டபடியே கேட்க

“நான் இல்லாமல் அவங்க மட்டும் எப்படி ஆன்டி வரமுடியும்?” என்றவாறே முகம் கொள்ளாப் புன்னகையுடன் அர்ஜுன் அந்த இடத்தை வந்து சேர்ந்தான்.

“எப்படி தம்பி இருக்கீங்க? பார்த்து ரொம்ப…” தன் பாட்டில் இயல்பாக அவனைப் பார்த்து பேசிக் கொண்டு சென்றவர் சட்டென்று ஏதோ நினைவு வந்தவராக

“தம்பி உங்களுக்கு எல்லாம் சரியாகிடுச்சா?” அதிர்ச்சியாக அவனைப் பார்த்து வினவ

புன்னகை முகமாக அவரைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைத்தவன்
“ஆமா ஆன்ட்டி எனக்கு எல்லாம் சரியும் ஆகிடுச்சு, நினைவும் வந்துடுச்சு” மாணிக்கத்தை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே அவரது கேள்விக்கு பதிலளித்திருந்தான்.

“ரொம்ப சந்தோஷம் தம்பி! ஆனாலும் யாரும் இந்த விஷயத்தை எங்க கிட்ட சொல்லவே இல்லை பாருங்க அவ்வளவுக்கு எங்களை மறந்து போயிட்டீங்களா?” ஜெயலஷ்மி சற்றே வருத்தம் தோய்ந்த குரலில் கேட்கவும்

அவரருகில் வந்து நின்று கொண்ட அர்ஜுன்
“உங்க கிட்ட சொல்லக்கூடாதுன்னு நினைக்கல ஆன்ட்டி! என் உடல் நிலை சரியானதோடு இன்னொரு விடயமும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அதைப் பற்றியும் நேரடியாக உங்ககிட்ட பேசலாம்னு தான் வெயிட் பண்ணோம்” என்று கூற

“இன்னொரு விடயமா?” அவரது பார்வை குழப்பமாக அவனை நோக்கியது.

“நான் தான் இந்த விடயத்தை பற்றி உங்க கிட்ட பேசணும்னு சாவித்திரி ம்மா, ராமுப்பாவை எதுவும் சொல்ல வேண்டாம் என்று இங்கே அழைச்சுட்டு வந்திருக்கேன் நான் சொல்லப் போற விடயத்தை கேட்டு நீங்க கோபப்பட்டாலும் பரவாயில்லை ஆனால் இந்த விடயத்தை இதற்கு மேலும் மறைக்க முடியாது ஏன்னா நான் சொல்லப் போற விடயத்தில் ஹரிணிப்பிரியாவும் சம்பந்தப்பட்டு இருக்கா!” அர்ஜுன் பீடிகையுடன் நிறுத்த ஜெயலஷ்மியின் பார்வை தன் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் பதட்டத்துடன் சுற்றி வந்தது.

“ஆன்ட்டி முதல்ல இப்படி உட்காருங்க! அங்கிள் நீங்களும் தான் உட்காருங்க!” மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மி இருவரையும் அருகருகே அமரச் செய்து விட்டு அவர்கள் முன்னால் முழங்காலிட்டு அமர்ந்து கொண்ட அர்ஜுன் தன் வாழ்வில் ஹரிணியை சந்தித்த தருணம் முதல் அவள் தன் முன்னால் இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த சம்பவம் வரை எல்லாவற்றையும் கூறி முடிக்க பெரியவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியோடு திரும்பி பார்த்துக் கொண்டனர்.

தன் மகளின் விபத்தின் பிண்ணனியில் இவ்வளவு பெரிய விடயம் நடந்ததா என்கிற அதிர்ச்சியில் ஜெயலஷ்மி அமர்ந்திருக்க மறுபுறம் மாணிக்கம் தான் பேசிய விடயங்களை எல்லாம் யாரிடமும் கூறாமல் இன்று வரை தன்னை தன் குடும்பத்தினர் முன்னால் தலை குனிந்து போகும் படி செய்யாமல் காத்து விட்டானே என்கிற ஒருவிதமான குற்றவுணர்வு கலந்த அதிர்ச்சியான மனநிலையுடன் அமர்ந்திருந்தார்.

“என்னடா இவன் திடீர்னு வந்து உங்க பொண்ணும், நானும் காதலித்தோம் அப்படி, இப்படின்னு உளர்றான்னு நீங்க யோசிக்குறீங்களோ தெரியல! என் மனதில் உங்க பொண்ணு மேல இருக்கும் காதல் தான் என்னை இந்த பாரிய பிரச்சினையில் இருந்து வெளி வர வைத்தது இன்னும் என்னை உயிர்ப்பாகவும் வைத்து இருக்கு!
என் கூட இப்போ என்னைப் பெற்ற அம்மா, அப்பா வேணும்னா இல்லாமல் இருக்கலாம் ஆனா அவங்களை விடவும் என்னைப் பாசமாக பார்த்துக் கொள்ளும் ஒரு குடும்பம் எனக்கு இப்போ இருக்கு! உங்க பொண்ணை ஏமாற்றி விட்டுட்டு போகணும்னு நான் காதலிக்கல காலம் பூராவும் என் கூட வைத்து பார்த்துக் கொள்ளணும்னு தான் காதலித்தேன் அன்னைக்கு அந்த ஆக்சிடென்ட் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் பிரியாகிட்ட காதலை சொன்ன அடுத்த நிமிடமே உங்க கிட்டயும் வந்து நான் பேசியிருப்பேன் ஆனா நம்ம ஒண்ணு நினைத்தால் அந்த கடவுள் வேற ஒண்ணு நினைக்குறாரு!
எப்போ நான் முதல் முதலாக உங்க பொண்ணு கையை பிடித்தேனோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் உரிமையோடு அவளைப் பிடித்த கையால் வேறொரு பெண்ணை பிடிக்கவே கூடாதுன்னு! ஒருத்தர் வாழ்க்கையில் உண்மையான காதல் ஒரு தடவை தான் வரும் அப்படி வந்தால் அவ்வளவு சீக்கிரமாக அதை நம்மை விட்டு போகாது அதை நான் இப்போ முழுமையாக நம்புறேன்
நான் மனநிலை சரியில்லாமல் இருந்த போது நான் எப்படி நடந்து கொண்டேன்னு எல்லாவற்றையும் வருணும், சாவிம்மாவும், ராமுப்பாவும் என் கிட்ட நான் கேட்கும் நேரமெல்லாம் சொன்னாங்க! அப்போ தான் நான் உண்மையாக ஒரு விடயத்தை உணர்ந்து கொண்டேன் பிரியா என் மனதில் மட்டுமில்ல என் உயிரோடு கலந்து போயிருக்கா! அது தான் நான் என்னை மறந்த நிலையிலும் அவளையோ, அவ காதலையோ மறக்கல!
இதெல்லாம் நான் உங்க கிட்ட இவ்வளவு விளக்கமாக சொல்ல காரணம் ஒன்னே ஒண்ணு தான்!” அர்ஜுனின் பேச்சில் இருந்த உண்மைகள் அனைத்தும் மாணிக்கம் அன்று அந்த ஒரு நாளில் அவனைத் தன் மகளை விட்டு தூரம் அனுப்ப எண்ணி பேசிய விடயங்களுக்கு பதில் அளிப்பது போல இருக்கவே மனம் முழுவதும் குற்றவுணர்ச்சி சூழ்ந்து கொள்ள அவனை நிமிர்ந்து பார்க்கவும் துணிவின்றி தலை குனிந்து மௌனமாக அமர்ந்திருந்தார்.

“எ…என்ன காரணம்?” அத்தனை நேரம் அவன் பேசியதை எல்லாம் கேட்டு என்னவென்று சொல்ல முடியாத ஒரு மனநிலையோடு அமர்ந்திருந்த ஜெமலஷ்மி அவன் இறுதியாக சொல்ல வந்த விடயத்தை பற்றி கேட்கவே

கண்கள் கலங்க அவரை நிமிர்ந்து பார்த்தவன்
“எனக்கு என் பிரியாவைக் கொடுப்பீங்களா? அவ தான் எனக்கு எல்லாம்னு நான் ரொம்ப கனவுக்கோட்டை கட்டிட்டேன் அவ இல்லைன்னா என்னால் இப்படி இயல்பாக இருக்க முடியுமான்னு தெரியல! நான், சாவித்திரி ம்மா, ராமுப்பா, வருண் இவங்க மட்டும் தான் எங்க குடும்பம் இல்லை பிரியாவும் எங்க கூட வந்தால் தான் எங்க குடும்பம் பரிபூரணமாக இருக்கும்! என் பிரியாவை எனக்கு கொடுப்பீங்களா?” தன் கரத்தை அவர் புறம் நீட்டிக் கேட்க தவிப்போடு அவனைப் பார்த்து கொண்டிருந்தவர் தன் கணவரின் முகத்தைத் திரும்பிப் பார்க்க அவரோ அவர்கள் யாரையும் பாராது தன் தலையை குனிந்து அமர்ந்திருந்தார்.

அர்ஜுன் மனநிலை சரியில்லாத நிலையில் தன் மகளையே சுற்றி சுற்றி வந்ததைப் பார்த்து அப்போது எரிச்சல் பட்டவரால் இப்போது அவனது அந்த நிலைக்கான காரணத்தைப் பற்றி தெரிந்ததும் ஏனோ எரிச்சல் கொள்ள முடியவில்லை மாறாக அவனது நிலையை எண்ணி கலக்கம் ஏற்படுவது போலவே இருந்தது.

“அர்ஜுன் ஒரு பெண்ணை விரும்பி அந்த பொண்ணுக்கு ஆக்சிடென்ட் நடந்தது வரை எல்லாம் எங்களுக்கு முன்னாடியே தெரியும் தான் ஆனா அந்த பொண்ணு யாருன்னு எங்களுக்கு இந்த நிச்சயதார்த்தம் நடக்கும் வரைக்கும் தெரியாது நிச்சயதார்த்தம் அன்னைக்கு அர்ஜுன் வித்தியாசமாக நடந்து கொண்ட பிறகு தான் அந்த பொண்ணு ஹரிணின்னே எங்களுக்கு தெரியும் அந்த விடயம் மட்டும் முன்னாடியே தெரிந்திருந்தால் நான் இந்த நிச்சயதார்த்தம் வரைக்கும் உங்களை கொண்டு வந்து நிறுத்தி இருக்க மாட்டேன் ஆனா பசங்க ஏதோ ஒன்று நினைத்து செய்ய அது வேறு மாதிரி வந்து முடிந்து இருக்கு!
நடந்ததை நம்மால் மாற்ற முடியாது தான் அதற்காக பசங்க வாழ்க்கையை நாம பணயம் வைக்க முடியாது இல்லையா? அன்னைக்கு நிச்சயதார்த்தத்தில் தடங்கல் வந்தது கூட அந்த நிச்சயம் நடக்க கூடாதுன்னு தானோ என்னவோ? எதுவாக இருந்தாலும் சரி நடந்த விடயங்களில் எங்க மேல் தப்பு இருப்பதால் எங்க எல்லோரையும் தயவு செய்து மன்னித்து கொள்ளுங்க! ப்ளீஸ்!” சாவித்திரி தயக்கமும், கவலையும் போட்டி போட ஜெயலஷ்மி மற்றும் மாணிக்கத்தின் முன்னால் கெஞ்சலாக தன் இரு கரம் கூப்பி மன்னிப்பு வேண்டி நிற்க அவரது கையைப் பிடித்து கொண்டு வேண்டாம் என்று தலையசைத்த ஜெயலஷ்மி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்போடு ஹரிணியைத் திரும்பி பார்க்க அவளோ தன் அன்னையும், தந்தையும் அர்ஜுனிற்கு சம்மதம் சொல்ல மாட்டார்களா என்ற எதிர்பார்ப்போடு அவர்களைப் பார்த்து கொண்டு நின்றாள்.

அர்ஜுனின் அந்த சித்த பிரமை நிலையின் பிண்ணனியில் தன் மகள் மீது வைத்திருந்த காதல் தான் இருந்தது என்று தெரிந்தாலும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில் இப்படி வந்து எல்லோரும் முற்றாக மாறி நிற்பதையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எல்லோர் முகங்களிலும் பலவிதமான எதிர்பார்ப்புகள் சூழ்ந்திருக்க இப்படி ஒரு நிலையில் தான் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துப் போன ஜெயலஷ்மி தன் கணவரின் கையை இறுக்கமாக பிடித்து கொள்ள இப்போது அனைவரது பார்வையும் மாணிக்கத்தின் மேல் நிலை குத்தி நின்றது……

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!