நினைவு – 26 [Final]

eiE6SA598903-c139551a

ஸ்ரீ மகாலட்சுமி திருமண மண்டபம்

வாசலில் வாழை மரங்கள் இரண்டு கம்பீரமான காவல்காரர்கள் போல வீற்றிருக்க அதிலிருந்து அந்த திருமண மண்டபத்தின் வாயில் வரை பூக்களும், மாவிலைகளும் கலந்த தோரணங்கள் கண்ணுக்கு விருந்தாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

திருமண மண்டபத்தின் வாயிலின் ஒரு புறம் பெரிய இதய வடிவிலான சிவப்பு நிற அட்டையில் அர்ஜுன் வெட்ஸ் ஹரிணிப்பிரியா எனவும் மறுபுறம் இருந்த அதே வகையான இதய வடிவிலான அட்டையில் வருண் வெட்ஸ் விஷ்ணுப்பிரியா என சாமந்தி பூக்களால் எழுதப்பட்டிருந்தது.

மண்டபத்தின் ஒரு புறம் மேள தாளங்கள் முழங்கிக் கொண்டிருக்க மறுபுறம் அய்யர் மந்திரங்களை சொல்லி சாஸ்திர சம்பிரதாயங்களை செய்து கொண்டிருக்க அந்த இடமே உறவினர்கள் மற்றும் நண்பர்களின் சந்தோஷமான ஆரவாரத்தினால் முழுவதுமாக நிறைந்து போய் காணப்பட்டது.

மணமகள் அறை என அடையாளப்படுத்தப்பட்டிருந்த அறைக்குள் ஆளுயரக் கண்ணாடியின் முன்னால் ஹரிணி மற்றும் விஷ்ணுப்பிரியா முழு அலங்காரத்தோடு அமர்ந்திருக்க அவர்களின் பின்னால் கண்கள் கலங்க பேச வார்த்தைகள் இன்றி மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மி உணர்ச்சி வசப்பட்டவர்களாக தங்கள் மகள்கள் இருவரையும் பார்த்து கொண்டு நின்றனர்.

ரோஜாப்பூக்குவியல் போல தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டிருந்த தங்கள் மகள்கள் இன்று இத்தனை பெரியவர்களாக வளர்ந்து திருமண அலங்காரத்தில் இருப்பதைப் பார்த்து எந்த பெற்றோரும் உணர்ச்சி வசப்படத்தான் செய்வர் அதற்கு மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மி மாத்திரம் விதிவிலக்கு அல்லவே.

மஞ்சள் நிறத்தில் குங்குமம் மற்றும் பச்சை நிற பட்டி பிடிக்கப்பட்டிருந்த பட்டுப் புடவையில் அதற்கேற்றாற் போல ஆபரணங்கள் அணிந்து தன் ஒற்றை பின்னலை மறைக்கும் அளவிற்கு மல்லிகை மலர்கள் சூடி ஹரிணிப்பிரியா எழுந்து நிற்க மறுபுறம் பொன்னிறத்தில் பல் வர்ண பூக்கள் அச்சிடப்பட்ட பட்டு சேலையோடு அதற்கேற்ப தங்க ஆபரணங்களும், மல்லிகை மலர்களும் சூடி புன்னகை முகமாக விஷ்ணுப்பிரியா எழுந்து நின்றாள்.

அய்யர் மந்திரங்களை சொல்லி முடித்து விட்டு
“பொண்ணை அழைச்சுட்டு வாங்கோ!” என்று குரல் எழுப்ப அவரது சத்தம் கேட்டு அவசரமாக தன் கண்களை துடைத்து விட்டு கொண்ட ஜெயலஷ்மி தன் இரு மகள்களையும் உச்சி முகர்ந்து விட்டு அவர்கள் இருவரது கைகளையும் பிடித்து கொண்டு திருமண மேடையை நோக்கி நகர்ந்து செல்ல அங்கே தங்கள் வருங்கால துணைவியை காணும் ஆவலோடு அர்ஜுன் மற்றும் வருண் அமர்ந்திருந்தனர்.

அர்ஜுன் அருகில் ஹரிணியும் வருண் அருகில் விஷ்ணுப்பிரியாவும் அமர்ந்து கொள்ள அய்யர் தன் மீதி சடங்குகளை ஆரம்பிக்க அவற்றை எல்லாம் புன்னகையுடன் பார்த்து கொண்டு நின்ற மாணிக்கம் ஆறு மாதங்களுக்கு முன்பு தங்கள் வீட்டில் வைத்து விஷ்ணுப்பிரியா நடந்து கொண்ட விதத்தை எண்ணி சிரித்துக் கொண்டே அன்றைய நாளை நோக்கி தன் நினைவுகளை ஓட விட்டார்.

ஆறு மாதங்களுக்கு முன்பு….

“என்னால முடியாது! முடியாது! முடியாது! நான் இதற்கு ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன்!” விஷ்ணுப்பிரியா அவர்கள் வீடே அதிரும்படி சத்தமிட்டு கொண்டு ஓடி வந்து மாணிக்கத்தை அணைத்துக் கொள்ள

அவளது அந்த நடவடிக்கைகளைப் பார்த்து பதட்டம் கொண்ட அவளது தந்தை
“பிரியா என்னடா கண்ணா ஆச்சு? சொல்லுடா கண்ணா!” என்று வினவ

“அவ எதற்காக இப்படி அழுது கூப்பாடு போடுறான்னு நான் சொல்லுறேன்” என்றவாறே ஜெயலஷ்மி விஷ்ணுப்பிரியாவை முறைத்து பார்த்த வண்ணம் அவர்கள் முன்னால் வந்து நின்றார்.

தன் அன்னையை அங்கே பார்த்ததும் திருதிருவென விழித்துக் கொண்டவள் மெல்ல மெல்ல மாணிக்கத்தின் முதுகோடு ஒன்றிக் கொள்ள அதற்குள் வீட்டிற்குள் இருந்த மீதி நபர்கள் எல்லோரும் அந்த இடத்தில் ஒன்று கூடி இருந்தனர்.

“என்னாச்சு லஷ்மி? எதற்கு குழந்தையை மிரட்டுற மாதிரி பார்க்கிற?” மாணிக்கம் தன் மகளை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டபடியே ஜெயலஷ்மியைப் பார்த்து வினவ

அவரோ
“யாரு அவ குழந்தையா? இன்னும் கொஞ்ச நாள் விட்டால் அவளுக்கே குழந்தை பிறந்துடும் இதில் அவ குழந்தையாமே!” அவர்கள் இருவரையும் முறைத்து பார்த்து கொண்டே பதில் அளிக்க

“லஷ்மி! என்னதான் நடந்தது சொல்லு ம்மா?” மாணிக்கம் தன் பொறுமையை இழுத்து பிடித்து வைத்து கொண்டு மீண்டும் அவரைப் பார்த்து வினவினார்.

“ஹரிணி அர்ஜுன் கல்யாணத்துக்கு நாள் ரொம்ப தூரமாக இருக்குதாம் அதனால் அவசரமாக கல்யாணத்தை நடத்தலாம்ன்னு அவ தான் சொன்னா ஆனா இப்போ வருணோட அவ கல்யாணத்துக்கு அதே நாளில் நேரம் குறிக்கலாம்ன்னு சொன்னா அதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுறா உங்க பொண்ணு!”

“தப்பு எதுவும் பண்ணா என் பொண்ணு! நல்ல விஷயம் பண்ணா உன் பொண்ணா?”

“என்னங்க!”

“ஓகே! ஓகே கூல் டவுன் லஷ்மி!” தன் மனைவியின் கன்னத்தில் செல்லமாக தட்டியவர்

தன் மகளின் புறம் திரும்பி
“என்னடா கண்ணா ஆச்சு? எதற்கு இவ்வளவு ஆர்பாட்டம்? உனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லையா?” என்று கேட்க அவளோ சட்டென்று வருணைத் திரும்பி பார்த்தாள்.

அர்ஜுன் மற்றும் ஹரிணியின் நிச்சயதார்த்தம் பற்றிய பேச்சை ஆரம்பிக்கும் போதே சாவித்திரி தன் மனதிற்குள் வருணிற்கு விஷ்ணுப்பிரியாவை திருமணம் செய்து வைக்க எண்ணி நினைத்திருந்ததை அவளது பெற்றோரிடம் கேட்டு விட தன் இரு மகள்களும் ஒரே வீட்டில் மருமகளாக போகப் போகிறார்கள் என்ற சந்தோஷமும் இத்தகைய நல்ல மனிதர்கள் இருக்கும் இடத்தை தட்டிக் கழிக்கவே கூடாது என்ற உறுதியான எண்ணத்திலும் அவர்கள் இருவரும் அப்போதே சம்மதம் சொல்லி இருந்தனர்.

மாணிக்கம் அழைப்பு ஒன்று பேசி விட்டு வருவதாக சொல்லி விட்டு அங்கிருந்து சென்றுவிட அவர் வெளியே சென்று வரும் அந்த இடைப்பட்ட நேரத்திற்குள் அங்கிருந்த பெரியவர்கள் அப்போதே அந்த விடயத்தை பற்றி இளையவர்களிடம் பேசலாம் என்ற முடிவோடு அவர்களை நோக்கி சென்றிருந்தனர்.

இதற்கிடையில் அர்ஜுனும் மாணிக்கத்தை பின் தொடர்ந்து வந்திருந்ததால் அவனுக்கும் உள்ளே நடந்த விடயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

“நீங்க போன் பேச வெளியே வந்ததும் இவ கிட்ட போய் இப்படி வருணுக்கு உன்னை பொண்ணு கேட்டு வந்து இருக்காங்க எனக்கும், உன் அப்பாவுக்கும் பரிபூரண சம்மதம் உனக்கும் சம்மதமான்னு கேட்கவும் அப்பாவுக்கு, உங்களுக்கு ஓகே தானே? அப்போ எனக்கும் டபுள் ஓகேன்னு பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிட்டு திகதி முடிவு பண்ணும் போது இப்போ இப்படி வந்து கூப்பாடு போடுறா! கல்யாணத்தில் இஷ்டம் இல்லைன்னா ஆரம்பத்திலேயே சொல்ல வேண்டியது தானே? எதற்கு இவ்வளவு அலப்பறை?” ஜெயலஷ்மி விஷ்ணுப்பிரியாவை முறைத்து பார்த்து கொண்டே தன் கணவரின் புறம் திரும்பி குற்றப்பத்திரிகை வாசிக்க

அவளோ தன் தந்தையின் சட்டைக் காலரைப் பற்றி திருகியபடி
“அப்படி இல்லைப்பா! அவங்க ரொம்ப நல்லவங்க, ரொம்ப ஹேண்ட்சம், சொந்தமாக தொழில் பண்ணுறாங்க அப்படி எல்லாம் இருக்கு தான் ஆனாலும் எனக்கு என்னோட படிப்பு முடிய இன்னும் ஆறு மாதம் இருக்கேப்பா! அதற்கிடையில் எனக்கு கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது ப்பா! அதை இந்த லச்சு கிட்ட சொன்னா அதை புரிஞ்சுக்காம எனக்கு லெச்சர் எடுக்குது இந்த லச்சு!” என்றவாறே தன் அன்னையை பார்த்து பழிப்பு காட்ட அங்கிருந்த அனைவரும் அவர்கள் இருவரையும் பார்த்து வாய் விட்டு சிரித்துக் கொண்டு நின்றனர்.

“உங்க இரண்டு பேரையும் அம்மா, பொண்ணுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க அத்தை! இன்னும் சின்ன பசங்க மாதிரிதான் இரண்டு பேரும் இருக்கீங்க” அர்ஜுன் அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே கூற

அவனது கூற்றில் சிறு வெட்கம் கலந்த புன்னகையுடன் தன் முகத்தை திருப்பிக் கொண்டவர்
“ஐயோ! அப்படி எல்லாம் இல்லை தம்பி! எல்லாம் இவளால் தான்!” விஷ்ணுப்பிரியாவின் தோளில் தட்டி விட்டு தன் கணவரின் மறுபுறமாக சென்று நின்று கொண்டார்.

“சாவித்திரி ம்மா, ராமுப்பா, அத்தை அன்ட் மாமா! நான் இப்போ சொல்லப் போகும் விஷயத்தை நீங்க கொஞ்சம் கவனமாக கேட்டுக்கோங்க! அவங்க மட்டுமில்ல வருண், ஹரிணி அன்ட் விஷ்ணுப்பிரியா நீங்களும் தான்! எனக்கு என் லைஃப்ல வருண் எவ்வளவு முக்கியம்ன்னு உங்க எல்லோருக்கும் தெரியும் ஒரு வேளை ஆரம்பத்திலேயே இந்த ஆக்சிடென்ட் எல்லாவற்றுக்கும் முதல் நீங்க என்னோட காதலுக்கு சம்மதம் சொல்லி இருந்தாலும் வருணுக்கு ஒரு நல்ல லைஃப் அமையாமல் நான் என் லைஃப்பை அமைச்சுக்க கூடாதுன்னு தான் இருந்தேன் இந்த விஷயம் சில்..பிரியா ஐ மீன் ஹரிணிக்கும் தெரியும் ஆனால் இப்போ அவளுக்கு அது நினைவு இருக்காது! பரவாயில்லை இருந்தாலும் இதை சொல்ல வேண்டியது என் கடமை
மறுபடியும் எனக்கு எல்லாம் சரியாக வந்த பிறகும் அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் தான் என் வாழ்க்கையைப் பற்றி யோசிப்பேன்னு முடிவெடுத்து இருந்தேன் அந்த சமயம் தான் சாவித்திரி ம்மா விஷ்ணுப்பிரியாவை ஆரம்பத்தில் எங்க வீட்டுக்கு இன்னுமொரு மருமகளாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு வந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து இருந்ததாகவும் எப்போ ஹரிணி எனக்கு தான்னு முடிவு செய்தாங்களோ அப்போவே விஷ்ணுப்பிரியாவை வருணிற்கு பேசி முடிக்க வேண்டும்னு முடிவெடுத்திருந்ததாகவும் சொன்னாங்க! இந்த விஷயத்தை எல்லாம் கேட்ட பிறகு தான் நான் அடுத்த கட்ட நடவடிக்கைகளையே யோசிக்க ஆரம்பித்தேன் வருணும் அம்மா, அப்பா முடிவு தான் தன்னோட முடிவுன்னு வேறு சொல்லிட்டான் இனி அவன் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் அதை நான் நம்புகிறேன் இதை எல்லாம் ஏன் நான் இப்போ சொல்லுறேன்னா வருணுக்கும், எனக்கும் ஒரே மேடையில் கல்யாணம் நடக்கணும் என்கிற தான் என்னோட ஆசை அதனால் தான் சொல்லுறேன்” அர்ஜுன் தன் நண்பனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டபடியே கூற

“அஜ்ஜு!” கண்கள் கலங்க அவனை அணைத்துக் கொண்ட வருண்

“எனக்காக நீ இவ்வளவு தூரம் எல்லாம் யோசிப்பியாடா?” என்று வினவவும்

“டேய்!” என்றவாறே அவனது தோளில் தட்டியவன்

“எனக்கு என்னைப் பெற்றவங்க யாரும் என் கூட இப்போ இல்லை என்கிற நினைப்பை இன்று வரை வர விடாமல் பார்த்துக் கொள்ளும் ஒரு பெஸ்ட் பிரண்ட் டா நீ! எனக்காக நீ ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து யோசித்து எனக்கு எது தேவை எது தேவை இல்லைன்னு இன்றைய நாள் வரை எனக்கு நிழலாக இருந்து வந்தவன் நீ! உன்னை என் லைஃப்ல இருந்து என்னால் எப்போதும் தள்ளி வைத்து யோசிக்க முடியாது எனக்கு எப்போ கெட்டது நடந்தாலும் தோள் கொடுத்து என்னை தேற்ற நீ இருப்ப அதேமாதிரி என்னோட சந்தோஷத்தில் உனக்கும் சரிசமமாக பங்கு இருக்கணும்னு தான் நான் ஆசைப்படுவேன்” என்று கூற அவர்கள் இருவரது நட்பையும் பார்த்து அங்கிருந்த அனைவருக்கும் உடலெல்லாம் சிலிர்த்து போனது.

காதலில் மட்டும் தான் எல்லையற்ற காதல் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை சில சமயங்களில் நட்பில் கூட எல்லையில்லாமல் இருக்க முடியும் அப்படியான எல்லையில்லாத ஒரு நட்பு தான் அர்ஜுன் மற்றும் வருணுக்கு இடையேயான நட்பு.

“ஸாரி! ஸாரி! எல்லோரையும் ரொம்ப ஃபீல் பண்ண வைச்சுட்டேன் போல! இப்போ என்ன விஷ்ணுப்பிரியாவுக்கு அவ படிப்பு முடிந்ததும் தான் கல்யாணம் பண்ணிக்கணுமா? ஓகே டன்! இத்தனை வருடங்களாக மனதிற்குள் ஹரிணியை நினைத்து வாழ்ந்த எனக்கு இன்னும் ஒரு சில மாதம் காத்திருக்கிறது பெரிய விஷயமே இல்லை! நான் ஏற்கனவே சொன்ன மாதிரி வருணுக்கும், எனக்கும் ஒரே நாளில் தான் கல்யாணம் நடக்கணும்! சாவித்திரி ம்மா, ராமுப்பா, அத்தை அன்ட் மாமா உங்க எல்லோருக்கும் ஓகே தானே?” அர்ஜுனின் கேள்விக்கு பெரியவர்கள் அனைவரும் ஆமோதிப்பாக தலையசைக்க அன்றிலிருந்து ஒரு வாரம் கழித்து இரு ஜோடிகளுக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தமும், ஆறு மாதங்கள் கழித்து திருமணமும் நடத்தலாம் என்று ஒரு மனதாக முடிவெடுத்து கொண்டனர்.

ஒரு விதமான ஆர்ப்பாட்டம் மற்றும் கலாட்டா நிறைந்த வகையில் தொடங்கிய அந்த நாள் எல்லோர் மனதிலும் திருப்தி அளிக்கும் வகையில் நிறைவடைந்திருக்க மாணிக்கத்தின் பார்வையோ நொடிக்கு ஒரு தடவை அர்ஜுனை நன்றியோடு தழுவி மீண்டது.

காலையில் அர்ஜுனை சந்தித்தது முதல் தன் தந்தையின் முக மாற்றங்களையே கவனித்துக் கொண்டிருந்த ஹரிணி அவரது அந்த பார்வை மாற்றத்தைக் கவனியாமல் இல்லை.

அதைப் பற்றி நேரடியாக அவரிடம் சென்று கேட்க தயக்கமாக இருந்ததனால் அர்ஜுன் தன்னைக் கவனிக்கும் வேலையில் அவனை வெளியில் வரும் படி ஜாடை காட்டியவள் குழப்பம் நிறைந்த முகத்தோடு தன்னை பின் தொடர்ந்து வந்தவனை கேள்விகளால் குடைந்தெடுக்கத் தொடங்கினாள்.

“அப்பாவுக்கும் உனக்கும் ஏதாவது ரகசியமாக டீலிங் ஓடுதா? காலையில் இருந்து அப்பா முகத்தை பார்க்கிறேன் ஆளும் சரியில்லை பார்வையும் சரி இல்லை இரண்டு பேரும் சேர்ந்து ஏதாவது கோல்மால் பண்ணுறீங்களா? காலையில் அப்பா ஏதோ சொல்ல வந்தாங்க அதை சொல்லி முடிப்பதற்குள் நீ அவரை வேறு கதை பேசி கொண்டு போயிட்ட, அப்புறமாக அவரு வெளியில் போனதும் நீயும் போய் ரொம்ப நேரமாக ஏதோ பேசிட்டு இருந்த இப்போ கூட அப்பா உன்னை பார்த்து ரொம்ப ஃபீல் பண்ணுற மாதிரி இருக்கு ஏதோ பெரிய மேட்டர் இருக்கு என்ன அது சொல்லு?”

“அய்யோ சில்லு! நீ எப்படி இவ்வளவு ஷார்ப்பா மாறுன? எனக்கு புல்லரிக்குது போ!”

“அரிச்சா அப்புறமாக நாரு வைத்து சுரண்டி விடுறேன் இப்போ கேட்டதற்கு பதிலை சொல்லுடா!”

“வாட்? டாவா?”

“ஆமாடா சொல்லுடா!”

“ஹேய் சில்லு! இப்படி எல்லாம் பேசாதே! அப்புறம் சேதாரம் ரொம்ப ஆபத்தாக இருக்கும்”

“ஹோ! அப்படியா? என்ன பண்ணிடுவ? நான் யாரு தெரியும்லே? அர்ஜுனோட லவ்வர்! அவன் என்னை யாரையும் நெருங்க விடமாட்டான்”

“அப்படியா? அதையும் பார்த்துடலாம் என்னை மீறி எவன் வருவான்னு!” அர்ஜுன் தன் முகத்தில் குறும்பு கூத்தாட ஹரிணியின் கை பற்றி இழுத்து அவளைத் தன் அணைப்பில் வைத்துக் கொண்ட படியே

“மிஸ். ஹரிணிப்பிரியா மேடம்! சில விடயங்கள் எதற்காக நடக்கிறது? என்ன காரணம்? எப்படி நடந்ததுன்னு எல்லாம் நம்மால் சொல்ல முடியாது அது பாட்டுக்கு அது தானாகவே நடக்கும் நாமும் அதை அப்படியே கடந்து போய் விடுவோம் அதே மாதிரி தான் இப்போ நீ கேட்ட விடயங்களும்! ஒரு அப்பாவா இருந்து யோசித்து பார்த்தால் அவரோட அந்த மாற்றங்கள் தப்பே இல்லை! நான் இன்னும் ஒரு அப்பாவாக வேணும்னா இல்லாமல் இருக்கலாம் ஆனா ஒரு ஆண்மகனாக அவரோட உணர்வுகளை மதிக்கிறேன் அவ்வளவு தான் சிம்பிள்! இதைப்பற்றி எல்லாம் இந்த குட்டி மூளையை வைத்துட்டு யோசிக்காமல் இனி நடக்கப் போகும் விடயங்களை பற்றி யோசி!”என்று கூறவும்

சிறிது நேரம் அவனையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டு நின்றவள்
“ஒவ்வொரு பொண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் அப்படி இருக்கணும் இப்படி இருக்கணும்னு பல ஆசைகள் இருக்கும் அதே மாதிரி நான் ஆசைப்பட்டது எல்லாம் ஒரே ஒரு விடயம் தான் எனக்கு வரப் போகும் கணவன் தெரிந்தோ, தெரியாமலோ என் குடும்பத்தில் உள்ளவங்க மனதை காயப்படுத்தி விடக் கூடாது அதே மாதிரி அவன் மனதையும் யாரும் காயப்படுத்தக் கூடாது அவ்வளவு தான்! எங்க அப்பா அவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருந்தும் என் கிட்டயோ, எங்க வீட்டு ஆளுங்க கிட்டயோ அவரை இன்னமும் விட்டுக் கொடுக்காமல் இருக்கியே அர்ஜுன் அது தான் எனக்கு இன்னும் இன்னும் உன்னை பிடிச்சு போக வைக்குது” என்று கூற அவனோ அதிர்ச்சியாக அவளைப் பார்த்து கொண்டு நின்றான்.

“ஹரி.. ப்ரியா அது..வந்து..அங்கிள்.. நாங்க”

“கூல் டவுன் மிஸ்டர் அர்ஜுன்!”

“உனக்கு எப்படி அதெல்லாம் தெரியும்?”

“இது எங்க அப்பாவோட டயரி! அவருக்கு ஒவ்வொரு நாளும் டயரி எழுதும் பழக்கம் இருக்கு அன்னைக்கு பழைய பேப்பர், புத்தகம் எல்லாம் நெருப்பில் போடும் போது இது மட்டும் தவறுதலாக நெருப்பில் விழாமல் என் காலுக்கு கீழே விழுந்தது நானும் அதை எடுத்து நெருப்பில் போடலாம்னு போகும் போது தான் அதில் ஒரு தாளில் அர்ஜுன் என்கிற உங்க பெயரைப் பார்த்தேன் அப்பா டயரில் அர்ஜுன் பெயரான்னு பிரித்து பார்க்கும் போது தான் எனக்கு எல்லாமே புரிந்தது அதை படித்து முடிந்ததுமே அவங்க கிட்ட போய் அதைப் பற்றி கேட்கப் போனேன் ஆனால் அவங்க முகத்தை பார்த்து கோபப்பட எனக்கு தைரியம் வரல! என் விரல் பிடித்து என்னை நிற்க வைத்து நடக்க வைத்து எனக்கு தைரியம் சொல்லி கொடுத்தவங்கள வார்த்தைகளால் காயப்படுத்த எனக்கு தைரியம் வரல அர்ஜுன்!”

“சில்லு! எமோஷனல் வேண்டாம் டா!”

“இல்லை அர்ஜுன் நான் எமோஷனல் ஆகல! நான் அவங்க தப்பை மறைக்க காரணம் அவரு என் அப்பா ஆனா நீங்க எதற்காக இதை எல்லாம் செஞ்சீங்க அர்ஜூன்? என் அப்பா பண்ண தப்பால் அதிகம் காயப்பட்டதும், பாதிக்கப்பட்டதும் நீங்க தானே?”

“மை டியர் சில்லு! தப்பு பண்ண எல்லோருக்கும் அவங்க தப்பை சொல்லி காட்டுவதால் அவங்களை மாற செய்துடலாம்னா இந்த உலகத்தில் தப்பே நடக்காதுடா கண்ணம்மா! உனக்கு ஒரு விஷயம் சொல்லவா? இந்த உலகத்திலேயே ஒருத்தங்க பண்ண தப்புக்கு பதிலாக கொடுக்கும் விடயம் எது தெரியுமா? மன்னிப்பு! அதைத் தான் நானும் பண்ணேன்! என்னோட காதலுக்காக!”

“ஆனா அர்ஜுன்..”

“உஸ்ஸ்ஸ்! பழைய விடயங்களை மீண்டும் மீண்டும் வெளியே போட்டு கிளறி விடுவதால் எதுவும் மாறப்போவதில்லை அதனால் இன்னையோட இந்த பேச்சுக்கு புல் ஸ்டாப் வைத்தாச்சு! உனக்கு இந்த விடயம் தெரியும் என்கிறது நம்ம இரண்டு பேருக்குள்ளேயும் தான் இருக்கணும் வருணுக்கும் தெரிய வேண்டாம்! இந்த டயரியை இனிமேல் யாருமே பார்க்க கூடாது!” ஹரிணியின் கையில் இருந்த மாணிக்கத்தின் டயரியை வாங்கிக் கொண்டவன் சற்று தள்ளி பாதி எரிந்தும், எரியாமலும் இருந்த ஒரு நெருப்புக் குவியலின் மேல் அந்த டயரியை போட்டு விட்டு அவரது தவற்றை அந்த நெருப்புடனேயே எரிந்து போகச் செய்தான்.

தன் வாழ்வில் இத்தனை தூரம் தன்னை நேசிக்கும் ஒருவன் கிடைக்க தான் என்ன பாக்கியம் செய்தோமோ தெரியாது என்ற பூரிப்போடு ஹரிணி அவனை பின்னால் இருந்தவாறே அணைத்துக் கொள்ள அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து செல்ல வந்த மாணிக்கம் அர்ஜுனின் பெருந்தன்மையை எண்ணி வியந்தவாறே சத்தமில்லாமல் அந்த இடத்தில் இருந்து அகன்று சென்றிருந்தார்.

ஒருவரைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவசரத்தில் தான் எடுக்கும் முடிவுகள் ஏற்படுத்தும் பாரிய விளைவுகளை மனதார உணர்ந்து கொண்ட மாணிக்கம் அன்றிலிருந்து ஒரு புதிய பிறப்பை எடுத்தவர் போல தன்னைத் தானே உருவேற்றி கொள்ளவும் தவறவில்லை.

“என்னங்க! என்னங்க! அர்ச்சதை எடுத்துக்கோங்க!” ஜெயலஷ்மியின் அதட்டலான குரலில் தன் பழைய நினைவுகளில் இருந்து வெளியேறி வந்தவர்

அவரைப் பார்த்து சமாளிப்பது போல புன்னகைத்துக் கொண்டே கை நிறைய பூக்களை அள்ளிக் கொள்ள அதே நேரம்
“கெட்டி மேளம்! கெட்டி மேளம்!” என்ற அய்யரின் குரலும் எதிரொலித்தது.

பெரியவர்களின் ஆசியுடனும், மனம் நிறைந்த காதலுடனும் அர்ஜுன் மற்றும் ஹரிணியின் திருமணம் நடந்திருக்க மறுபுறம் இனி வரப்போகும் நாட்களில் தங்கள் காதலை எதிர்பார்த்து வருண் மற்றும் விஷ்ணுப்பிரியா ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு அமர்ந்திருந்தனர்.

அதன் பிறகு வந்த நேரங்களில் ஏனைய சம்பிரதாயங்களும் நிறைவோடு நடந்து முடிந்திருக்க இரு ஜோடிகளும் தங்கள் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டி அவர்கள் முன்னால் வந்து நின்றனர்.

வருண் மற்றும் விஷ்ணுப்பிரியா மாணிக்கம் மற்றும் ஜெயலஷ்மியிடம் ஆசிர்வாதம் வாங்கி கொள்ள மறுபுறம் அர்ஜுன் மற்றும் ஹரிணிப்பிரியா சாவித்திரி மற்றும் ராமநாதனிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர்.

தன் இரு மகன்களினதும் வாழ்க்கையை எண்ணி நித்தமும் மருகி கொண்டிருந்த சாவித்திரி இன்று அவர்கள் இருவரது திருமண கோலத்தையும் பார்த்து பூரிப்பில் திளைத்து போய் நின்றார் என்றால் மிகையாகாது.

சிறு நேரம் கழித்து வருண் மற்றும் விஷ்ணுப்பிரியா வருணின் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொள்ள அர்ஜுன் மற்றும் ஹரிணிப்பிரியா அவளது பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொள்ள வேண்டி அவர்கள் முன்னால் சென்று நின்றனர்.

அர்ஜுன் மாணிக்கத்திடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டி கீழே குனியப் போக அவனை அவசரமாக தடுத்து நிறுத்தியவர் ஹரிணியின் கையையும் தன் மறுகையால் பிடித்துக் கொண்டு அர்ஜுனின் புறம் திரும்பி
“என் பொண்ணுனா எனக்கு எவ்வளவு இஷ்டம்னு உங்களுக்கு சொல்ல தேவையில்லைன்னு தான் நினைக்கிறேன் இருந்தாலும் இந்த நேரத்தில் நான் இதை கட்டாயம் சொல்லியே ஆகணும்! என் பொண்ணைப் பத்திரமாக பார்த்துக்கோங்க மாப்பிள்ளை!” அவனது கையில் ஹரிணியின் கையை வைத்து அழுத்தி கொடுத்தவாறே கூறவும்

அவரது கூற்றில் தான் ஏழு வருடங்களுக்கு முன்பு அவர் முன்னால் சொன்ன விடயங்களை எண்ணி சிரித்துக் கொண்டவன்
“கண்டிப்பாக மாமா!” என்று கூற அவர்கள் இருவரது சம்பாஷைணையின் ஆழமான அர்த்தத்தை புரிந்து கொண்ட நோக்கத்தோடு ஹரிணி மற்றும் வருண் அர்ஜுனை சந்தோஷமாக பார்த்து கொண்டு நின்றனர்.

சிறிது நேரத்தில் சடங்குகள் எல்லாம் முடிந்து இளையவர்கள் ஒரு புறமும், பெரியவர்கள் ஒரு புறமும் சென்று விட அர்ஜுன் மற்றும் ஹரிணி மாத்திரம் தனியாக அந்த மண்டபத்தின் பால்கனியில் நின்று கொண்டிருந்தனர்.

காலையில் தான் அவளுக்கு கட்டுவித்த தாலி அவளது கழுத்தில் மற்றைய எல்லா ஆபரணங்களையும் மறைப்பது போல பிரகாசமாக தெரிய அந்த தாலியையே பார்த்து கொண்டு நின்ற அர்ஜுன் அவள் முன்னால் வந்து நின்று அவள் தாடையை நிமிர்த்தி அவள் பார்வையோடு தன் பார்வையை கலக்க விட்டான்.

“சில்லு! இந்த ஒரு நாளுக்காக தான் நான் இத்தனை நாட்களாக காத்திருந்தேன் என்னோட காதல் எனக்கு கிடைச்சுடுச்சு! உன் முன்னாடி என் காதலை சொல்ல ரொம்ப தயாராகி வந்தேன் தெரியுமா? அதை அன்னைக்கு சொல்ல முடியல..”

“அப்போ இப்போ சொல்லுங்க”

“ஹேய்! நிஜமாவா? நீ சும்மா விளையாடுற தானே?”

“என்னைப் பார்த்தால் உங்களுக்கு விளையாடுவது மாதிரியா இருக்கு?”

“அப்போ நிஜமாகவே சொல்ல சொல்லுற?”

“ஆமா சொல்லுங்க” ஹரிணியின் கூற்றில் ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து விட்டு விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தவன்

“ஹாய் பிரியா! ஐ யம் அர்ஜுன்! இதை நான் ரொம்ப நாளாகவே உன் கிட்ட சொல்ல ட்ரை பண்ணேன் பட் முடியல! ஆனா இன்னைக்கு சொல்லிடுவேன்! ஐ லவ் யூ பிரியா! இது வரைக்கும் எந்த பொண்ணு கிட்டயும் நான் இப்படி நின்று பேசியது இல்லை நான் பார்த்து வியந்த பொண்ணுங்க இரண்டு பேரு தான்! ஒண்ணு என் சாவித்திரிம்மா! இன்னொன்று நீ! சாவித்திரிம்மா அன்பை பார்த்து எந்தளவிற்கு நான் வியந்து போனேனோ அதே அளவுக்கு வியந்து போனது உன் துருதுரு நடவடிக்கைகளைப் பார்த்து தான்! நான் உன்னோடு பேசிய வார்த்தைகள் குறைவாக இருக்கலாம் ஆனால் உன் மேல் இருக்கும் அன்பு அதற்கு அளவே இல்லை! நீ என் மனைவியாக, என் குழந்தைகளுக்கு அம்மாவாக, என் பிரண்டா எல்லாமுமாக என்னோடு கடைசி வரைக்கும் இருக்கணும்னு நான் ஆசைப்படுகிறேன் நீ இருப்பியா?” காதல் ததும்ப அவள் கண்களை பார்த்து கொண்டு வினவ

“அர்ஜுன்!” சிறு கேவலுடன் அவனை அணைத்துக் கொண்டவள்

“இன்னைக்கும், என்னைக்கும், எப்போதும் ஐ லவ் யூ அர்ஜுன்!” என்றவாறே அவன் நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்டாள்.

பல வித போராட்டங்கள், தடைகள், கஷ்டங்கள் என எல்லாவற்றையும் கடந்து தன்னை மறந்த நிலையிலும் தன் காதலை மறக்காத அர்ஜுன் இன்று அவன் காதல் கை கூடி விட்ட சந்தோஷத்துடன் தன் உயிராகிப் போனவளை தன்னோடு மேலும் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

பழைய நினைவுகள் தன்னை விட்டு போன நிலையிலும் அர்ஜுன் மேல் ஹரிணி கொண்ட காதல் அவளை இப்போதும் அவனை விட்டு விலகிச் செல்ல விடவில்லை.

அர்ஜுன் மற்றும் ஹரிணிப்பிரியா ஒருவரை ஒருவர் மறந்தாலும் அவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட காதல் ஒரு போதும் அழிந்து போகாது.

மொத்தத்தில் அர்ஜுன் மனதிலும் சரி, ஹரிணி மனதிலும் சரி இருக்கும் ஒரே விடயம்
‘மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே!’

………………..சுபம்………………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!