நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா-02

295797628_586832783012651_1027496183334268553_n-da4c9b4e

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா!

02

மண்டபத்தில் வசியால் அதிக நேரம் இருக்க முடியாமல் அவனின் மனம் எதையோ எண்ணி கலங்கிக் கொண்டு இருந்தது. அவனின் மனம் முழுவதும் தாயின் அன்பிற்காகவும் அரவணைப்பிற்க்காகவும் ஏங்கத் துவங்கியது. சொல்ல முடியா துயரம் அவனுள் எழ, அங்கே நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்த்து இரசிக்க முடியவில்லை.

அருகில் அமர்ந்திருந்த விபுவை பார்த்து, ”மச்சி வாடா, கிஃப்ட் கொடுத்துட்டு கிளம்பலாம்” என்றான்.

“என்னது கிளம்பலாமா?” என்று விழி விரித்து கேட்டான் அவன்.

“நான் எதுவும் தப்பா கேக்கலையேடா? கிளம்பலாம்னு தானே சொன்னேன். அதுக்கு எதுக்கு இப்படி கண்ணை விரிச்சு காட்ற” என்று புருவம் உயர்த்தி கேட்டிட,

“மச்சி, இங்க பாரு எவ்வளோ அழகான பொண்ணுங்க எல்லாம் இங்க இருக்காங்க. அவங்ளை எல்லாம் இப்போதான்  சைட் அடிக்க ஆரம்பிச்சேன். அதுமட்டும் இல்லாமல் இன்னும் சாப்பாடு போடலையேடா”

அவனை கேவலமான பார்வை பார்த்த வசி, ”அப்போ நீ இங்கயே கிட, வீட்டு பக்கமோ ஆஃபிஸ் பக்கமோ வந்துடாத சரியா, எங்கயாவது போயிடு” என்று கடுகடுத்தான்.

“நீ இப்படி எல்லாம் திட்டுனா நான் எங்க அம்மா கிட்ட சொல்லி கொடுத்திடுவேன் பார்த்துக்கோ” என்று விளையாட்டு பிள்ளை போல் கூறினான் விபு.

அம்மா என்ற வார்த்தையில் அவனது சிறுபிள்ளை தனம் கூட அவன் விழிகளில் விழாமல் போய்விட, எதுவும் பேசாமல் அமைதியாக அழுந்த பார்வை அவனைப் பார்த்தவன் கிளம்பி சென்று விட்டான்.

வசீகரன் பார்வையின் அர்த்தம் புரியாமல் இருந்த விபுவிற்கு அவன் விருட்டென சென்றதும், ‘என்ன செய்வது ஏது செய்வது’ என்று தெரியாமல் அவன் பின்னாலே சென்றான்.

வேகமாக வந்த வசி, புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு பரிசை தந்தான். அவர்களும் அதனை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டனர். மண மேடையை விட்டு வேகமாக வந்தவன், கார் இருக்கும் இடம் நோக்கி செல்லும்போதே விபு அவனுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினான்.

இருவருக்கும் அந்த பயணம் அமைதியாகவே இருந்தது. வாழ்க்கையில் இப்படி அனைவரும் இருந்தும் தனியே இருப்பது போல் அவனிற்கு தோன்றியதே இல்லை. ஆனால் இன்று ஏனோ அவனுக்குள் அப்படி ஒரு எண்ணத்தை தோற்றுவித்தது.

கார் வேகமாக அவனது தேவ் அட்வெர்ட்டைசிங்குள் நுழைந்தது. இந்த கம்பெனி அவனும் விபுவும் சேர்ந்து ஆரம்பித்தது. வாழ்க்கையில் தனியே நின்று சாதிக்க வேண்டும் என்று லட்சியம் கொண்டவன், படித்து முடித்து என்ன செய்வது என்று யோசித்து இருவரும் சேர்ந்து ஆரம்பித்தது தான்  இந்த கம்பெனி. சிறிதாக ஆரம்பித்த கம்பெனி இரண்டு வருடத்தில் நல்ல முறையில் வளர்ந்து வந்தது. அதற்கு முழு காரணமும் இவர்களது உழைப்பும் படைப்பாற்றல் திறனும்தான்.

காரை பார்க்கிங்கில் நிறுத்தியவன், நான்கடி அடுக்கு மாடியில் மூன்றாவது தளத்தில் இருந்த அவனது கம்பெனிக்குள் நுழைந்தான்.

அவன் பின்னே வந்த விபு, எதுவும் பேசாமல் அமைதியாக நடக்க, அவன் மனமோ, ‘என்னடா வாழ்க்கை இது, ஏதோ லவ்வர் பின்னாடி சுத்துற மாதிரி நான் இவன் பின்னாடி சுத்துறேன். எல்லாம் என் நேரம்டா ’ என்று எண்ணியவன் தலையில் அடித்துக் கொண்டு அவனின் அறைக்குள் நுழைந்தான்.

உள்ளே வந்த வசி, முகத்தில் ஒரு இறுக்கத்தை கொண்டு வந்து அனைத்து வேலைகளையும் ஒரு வேகத்துடன் செய்து  கொண்டிருந்தான். அவனின் இந்த தனிமையைப் போக்குவதற்கான வழி தெரியாமல் போய் விட, அதற்காகவே வேலையில் தன் கவனத்தை திருப்பி இருந்தான்.

அவன்முன் அமர்ந்தப்படி பார்த்திருந்த விபுவிற்கு இவனின் செயல்கள் வித்தியாசமாக தெரிந்தது. அதற்கான காரணங்கள் தெரியாமல் அவனை அணுகவே பயமாக இருந்தது விபுவிற்கு.

அதற்குள் அவனுக்கு ஒரு அழைப்பு வர, அதனை எடுத்தவன், சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, அதனை கண்ட விபுவே பயந்து போனான்.

மொபைலை வைத்த வசி, லேன்லைன் மூலமாக மேனேஜருக்கு அழைப்பு விடுத்து, ”உடனே கேபினுக்கு வாங்க?” என்று கடுகடுத்தான்.

வேகமாக உள்ளே வந்த மேனேஜர், ”சொல்லுங்க சார்” என்று பவ்வியமாக கேட்டான்.

“இன்னும் நீங்க பேங்க்ல அமௌண்ட் போடலையா?” என்று கோபமாகவும் அதே நேரத்தில் அமைதியாகவும் அழுத்தம் திருத்தமாக கேட்டான்.

அந்த மேனேஜரோ என்ன பதில் சொல்வது தெரியாமல் விபுவை பார்த்து  முழிக்க, அதனை கண்ட வசி, ”எதுக்கு இப்போ இப்படி அவனை பார்த்து முழிச்சிக்கிட்டு நிக்கிறீங்க, சொல்லுங்க அமௌண்ட் ஏன் இன்னும் போடல. இது என்ன உங்க அப்பன் கம்பெனியா நீங்க பாட்டுக்கு இங்க வந்துட்டும் போயிக்கிட்டும் இருக்கிறதுக்கு. மாசம் மாசம் ஒன்னா தேதியானா சம்பளம் வாங்க தெரியுதுல. அப்போ அதுக்கான வேலைய செய்ய தெரியாதா உங்களுக்கு” என்று சீறினான்.

“வசி அவரை எதுவும் சொல்லாதடா. நான்தான் நானே பேங்க்ல போய் போட்டுக்கிறேன்னு சொன்னேன். இன்னைக்கு போடலாம்னு கிளம்பினப்பதான்  அப்பா கூப்பிட்டு அங்க வர சொன்னாரு. அதான் பேங்க் போகாம அங்க வந்துட்டேன். இதோ இப்போ போய் பேங்க்ல அமௌண்ட் போடறேன்”

விபுவை கண்டு ஏகத்துக்கும் முறைத்த வசி, ”நீ என்ன இந்த கம்பெனிக்கு பார்ட்னரா இல்ல ஸ்டாஃபா, உன்ன யாரு இந்த மாதிரியான வேலையை பார்க்க சொன்னது. அப்புறம் எதுக்கு நான் இத்தன பேரை வேலைக்கு வச்சி சம்பளம் தரணும்னு சொல்லு. எல்லா வேலையும் நீயே செய்றதா இருந்தா, இவங்கள எதுக்கு தேவையில்லாம வேலைக்கு வச்சிக்கிட்டு. நீயே எல்லோரோட வேலையையும் சேர்த்து செய்யுற. அதுனால நான் இப்போ எல்லாரையும் வேலையை விட்டு நிறுத்துறேன்” என்றவன் ஓங்கி டேபிளில் குத்த, விபு மற்றும் மேனேஜருக்குதான் அவனின் பேச்சில் அடி வயிறு பிசைய தொடங்கியது.

“சா… சாரி சார். என்னுடைய வேலையை நானே செய்து இருக்கணும். அவரு நான் போறேன்னு சொன்னவுடன் சரி சொல்லி இருக்க கூடாது. இது என்னுடைய தப்புதான். என்னைய மன்னிச்சிடுங்க சார். வேலைய விட்டு எல்லாம் தூக்கிடாதீங்க சார் ப்ளீஸ்” என்று சொல்லி தலை குனிந்தான்.

“போங்க போய் பேங்க்ல அமௌண்ட் பே பண்ற வேலையை பாருங்க. இதுதான் உங்களுக்கு லாஸ்ட் வார்னிங். விபு இந்த கம்பெனியோட பார்ட்னர் உங்களோட சம்பளம் இல்லா வேலைக்காரன் இல்லை மைண்ட் இட். உங்களோட வேலையை அவன ஏமாத்திக் கொடுத்தீங்க அப்புறம் இதுதான் நீங்க வேலை செய்யிற கடைசி இடமா இருக்கும் பாத்துக்கோங்க” என்று அவனை வெளியேற்றியவன் விபுவிடம் திரும்பி,

“நீ என்ன தியாகியாடா, இப்படி எல்லாரோட வேலையையும் உன் தலையில போட்டுக்கிற, அதுனாலதான் உனக்கு இங்க யாரும் பெருசா மதிப்பு தரதில்லை. நான் இந்த கம்பெனிய உன்ன நம்பி விட்டுட்டுதான அங்க போய் எல்லா வேலையையும் பார்த்துத்துட்டு இருக்கேன். நீ இப்படி இருந்தா எப்படி சொல்லு, நாம ப்ரெண்ட்லியா இருக்கலாம் அதுக்கும் ஒரு எல்லை உண்டு சரியா. நம்ம மேல ஒரு பயமும் மரியாதையும் எப்பவும் அவங்களுக்கு இருக்கணும் பாத்துக்க” என்றவனுக்கு உள்ளே வரும்போது மேனேஜர் சக ஊழியரிடம் பேசியது நினைவில் வரவும் தலை வலிப்பது போல் இருந்தது.

வசி உள்ளே வரும்போது அந்த மேனேஜரிடம் ஒருவர், ”என்ன சார் நேத்து நிறைய வேலை இருக்குன்னு சொல்லிட்டு சீக்கிரமா பொய்ட்டிங்க, அப்போ வேலை எல்லாம் முடிஞ்சிதா?” என்று கேட்டான்.

“நான் எங்க முடிச்சேன். அதான் அந்த இளிச்சவாயன் விபு இருக்கானே அப்புறம் என்ன, எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு சீன் போட்டேன் அதை நம்பி அவனே வேலையை முடிக்கிறேன்னு சொல்லி பேங்க்கும் அவனே போறேன்னு சொல்லிட்டான்‌. அதான் நான் வீட்டுக்கு போயிட்டேன்” என்று சொல்லி சிரிக்க,

“பலே கில்லாடி சார் நீங்க?” என்று இருவரும் இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டே சென்றனர்.

தலை வலிப்பது போல் இருக்கவும் அப்படியே டேபிளில் தலை சாய்த்து படுத்துக்கொண்டான் வசீகரன். அவனுக்கு சில முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தான். தனிமை உணர்வு ஒருபுறம் இருக்க, விபுவை ஊழியர்கள் நடத்தும் விதத்தை கண்டு அவனின் அமைதியான ஜாலியான சுயத்தை மாற்றி கோபத்தை தொடுத்தது.

இதுநாள்வரை வசி இந்த மாதிரியான எந்தவொரு நிகழ்வுகளுக்கும் சென்றதில்லை. இதுவே முதல் முறை ஒரு திருமணத்திற்கு சென்றது. அதுவரை அவனது உலகம் முழுவதும் அவன் தந்தை பாரிவேந்தர் மட்டுமே இருக்க, அந்த திருமணத்திற்கு சென்ற பின்புதான் தெரிந்தது சொந்தங்கள் பற்றி. அவன் உள்ளே சென்றதும் தந்தையின் நண்பர் மற்றும் வெல்விஷரான சோமையன் அவனிடம் வந்து அவரது சொந்தங்களை அவனுக்கு அறிமுகபடுத்தி இருந்தார். அதை பார்க்க பார்க்க அவனுக்கு மலைப்பாக இருந்தது.

‘இத்தனை சொந்தங்கள் இருக்கிறார்களா? அப்போது தனக்கும் இவர்களை போல இருப்பார்களா? தாய் வழி சொந்தம், தந்தை வழி சொந்தம் என்று நமக்கும் யாராவது இருப்பார்களா?’ என்று யோசிக்கும் போதுதான்  அவனுக்கு தாய் கண்ணம்மா தங்களுடன் இல்லை என்பது நினைவு வர, அவனின் விழிகள் கரிக்க தொடங்கியது.

அந்த நேரம் பார்த்து புதுமண தம்பதியர் பெற்றவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, அவர்களை பார்க்கவும் தன் தாயும் தந்தையும் இதே போல் தன்னை சேர்ந்து நின்று ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்று மனது ஏங்க துவங்கிய நொடி அவன் மனம் கனத்தது.

அதனாலே அங்கிருக்க பிடிக்காமல் வேகமாக கிளம்பி வந்துவிட்டான். வந்தவுடன் தன் உற்ற நண்பனை பற்றி இப்படி பேசவும் கோபம் கொப்பளிக்க, ஆனாலும் நிதானத்தை இழக்காமல் இருந்தான்.

படுத்திருந்த அவனுக்கு எப்படி தாயை பற்றி அறிந்து கொள்வது என்று யோசனையாக இருந்தது. அவனுக்கு நன்கு தெரியும் தன் தந்தை தாயை பற்றி ஒரு வார்த்தை கூட கூற மாட்டார் என்பது. எப்படி அறிவது எப்படி எப்படி என்று யோசித்தவனுக்கு எந்தவொரு ஐடியாவும் கிடைக்காமல் போக மேலும் தலை வலித்தது.

விபு, அவனுக்காக காப்பியை வர வைத்தவன், மெதுவாக அவனின் முதுகை தட்டி எழுப்ப, தலையை மட்டும் தூக்கி பார்த்து, ‘என்னவென்று’ கேட்டான்.

“மச்சான் இந்த காஃபிய மட்டும் கொஞ்சம் குடி தலை வலி குறையும்டா” என்று தலை முடியை கோதி வாஞ்சையாக கூறினான்.

அவனுக்கு இதையே தன் தாய் தனக்கு செய்தால் எப்படி இருக்கும் என்று தோன்றிய நொடியே அவனுக்கு உடல் சிலிர்த்தது.

அந்த சிலிர்ப்பே அவனுக்குள் தாயை தந்தையுடன் சேர்க்கும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது.

அதுவரை இருந்த இறுக்கம் மறைந்து இதழில் சிறியதாக மென்னகை தோன்ற, அவனிடமிருந்து காப்பியை வாங்கிக் பருகியவன், ”டேய்  நான் கொஞ்ச நேரம் உன் மடியில படுத்துக்கவா விபு” என்று குழந்தையாய் கேட்டான்.

“என்னடா இப்படி கேட்டுட்டு இருக்க, வா வா வந்து படுத்துக்கோ” என்று அங்கே இருந்த சோஃபாவில் அவன் அமர்ந்து அவனை தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டான்.

அந்த நேரம் பார்த்து தன் மகனை பார்க்கலாம் என்று வந்த பாரி, அவனின் செய்கையை கண்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியுற்றவர் கலங்கி போய் வந்த இடம் தெரியாமல் அப்படியே வெளியேறிவிட்டார்.

காலையிலே வீட்டிற்கு வந்த நங்கை அங்கே ஆதினிக்கு பிடித்தமான உணவை செய்து வைத்தவர், அவளுக்காக காப்பி கலந்து கொண்டு அறையை நோக்கி சென்றார்.

ஆதினியின் அறைக்குள் வந்தவர், அவளது அறையே அலங்கோலமாக இருப்பதை பார்த்து, ‘இந்த பொண்ணு ஏன்தான் இப்படி அறையை வச்சிருக்கோ?’ என்று சலிப்புடன் நினைத்தவர் அதனை சுத்தம் செய்ய தொடங்கினார்.

அவளது புத்தகங்கள் அனைத்தையும் ஒழுங்குப்படுத்தி அலமாரியில் வைத்தவர், கட்டிலில் இருந்த துணிகளை எடுத்து மடித்துக் கொண்டிருக்கும் போதே குளித்து முடித்து வந்தவள், ”அடடடா! என்ன ப்யூட்டி இன்னைக்கு சீக்கிரமாவே வந்துட்டீங்க” என்று கேட்டபடியே டேபிளில் இருந்த காப்பி குடிக்க தொடங்கினாள்.

“நீ ரூம்ம சுத்தமாவே வச்சிக்க மாட்டியா. ஏன் இப்படி வச்சிருக்க அம்மு, நீயெல்லாம் புகுந்த வீட்டுக்கு போய் என்னத்த செய்ய போறியோ தெரியலை?” என்று திட்டியபடியே வேலைகளை செய்தார்.

நங்கை பேசியதை கேட்ட ஆதினிக்கு மூக்கிற்கு மேல் கோபம் கொப்பளிக்க செய்தது.

“ப்யூட்டி அது என்ன எப்ப பார்த்தாலும் நீ புகுந்த வீட்டுக்கு போய் என்னத்த செய்ய போறேன்னு சொல்லுற. நான் என்ன நாளைக்கேவா கிளம்பி புகுந்த வீட்டுக்கு போக போறேன். ஆனா ஊனா புகுந்த வீட்ட இழுக்கிற?” ்என்று ஆதினி கத்தினாள்.

“என்ன வாய் ரொம்ப நீளுது. இத்தன நேரம் மூச்சு விடாம பேசுனதுக்கு நீ எதையாவது படிச்சி இருக்கலாமே மார்க்காவது வாங்கி இருப்ப. தேவையில்லாம என்கிட்ட பேசி நேரத்தை வீணடிக்காத. சீக்கிரமா கிளம்பி கீழ வா” என்று அதட்டி விட்டு கீழே சென்றார்.

நங்கை சென்ற திசையை கண்டு மென்னகை புரிந்தவள், கிளம்ப தயாரானாள்.

தலைக்கு குளித்து இருந்ததால், இடை வரை நீண்டு இருந்த கூந்தலை உலர்த்தி விட்டு சிறிது காய விடுவதற்காக கிளிப் குத்தியவள், கல்லூரிக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து கிளம்பத் தொடங்கினாள்.

பத்து நிமிடத்திலே கிளம்பியவள் கீழே வர, அவளுக்காகவே சமையலறையில் காத்திருந்த நங்கை வேகமாக அவளுக்கு பிடித்தமான உணவை தட்டில் எடுத்து வைக்க துவங்கினார்.

சாமி கும்பிட்டு வந்து டைனிங் டேபிளில் அமர்ந்த ஆதினி, ”நங்கை அத்த, சீக்கிரமா வாங்க எனக்கு பசிக்குது” என்று கத்த,

“ஏய் ஆதினி கத்தாத, அவங்க எல்லாத்தையும் எடுத்து வைச்சி வர வேண்டாமா. நீ வரத பாத்துட்டுதான் அவங்க எல்லாத்தையும் எடுக்க போயிருக்காங்க. அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியா இருக்க முடியாதா உன்னால” என்று அதட்டி விட்டு சென்றார் சீதாலட்சுமி.

“ஆமா இவங்களுக்கு என்ன அதட்ட மட்டும்தான் தெரியும், வேற என்ன தெரியுது” என்று முணுமுணுத்தவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அதற்குள் நங்கை அவளுக்கு தேவையான உணவை எடுத்து வந்து வைத்து, ”சாப்பிடு” என்று கூற, அவளோ அவரை எரித்து விடும் அளவிற்கு முறைத்து கொண்டு இருந்தாள்.

“ஏன் இன்னும் சாப்பிடாம என்னையே பார்த்துக்கிட்டு இருக்க அம்மு, காலேஜ்க்கு நேரம் ஆகலையா இப்போ” என்று பார்வையை அலைய விட்டவாறே கேட்டார்.

“நான் ஒன்னும் உன்னைய சைட் அடிக்கல சரியா, அதுக்கு உன்னோட புருஷன் இருக்கான். நான் உன்ன பார்த்து முறைச்சிட்டு இருக்கேன்” என்று புருவத்தைச் சுருக்கினாள்.

“இங்க பாரு அம்மு, இது முறைக்கிறதுக்கான நேரம் இல்லை சாப்பிடறதுக்கான நேரம். அதுனால முதல்ல சாப்பிடுவியாம் அப்புறம் என்னைய முறைப்பியாம்” என்று சொல்லிவிட்டு அவளுக்காக ஆசையாய் செய்து எடுத்து வந்த கேசரியை எடுத்து தட்டில் வைக்க போக, ”எனக்கு ஒன்னும் தேவை இல்லை” என்று கையை நீட்டி மறுத்து விட்டாள்.

அவளின் கோபத்திற்கான காரணத்தை புரிந்து கொண்ட நங்கைக்கு அவளின் பாசத்தை கண்டு உடல் சிலிர்த்தது.

‘இதற்கு தான் தகுதியானவளா?’ என்ற கேள்வி கூட அவருள் எழும்பியது. ஆனால் விடைதான் அறிய முடியவில்லை.

“இங்க பாரு அம்மு மா, இவ்ளோ நாள் நீ லேட்டாதான் சாப்பிட வருவ. அப்போ யாரும் வீட்டில் இருக்க மாட்டாங்க, அதுனால நான் உனக்கு ஊட்டி விட்டேன். ஆனா இன்னைக்கு நீ சீக்கிரமா வந்துருக்க, இன்னும் உங்க வீட்ல உள்ள யாரும் சாப்பிடல. அதுவும் இல்லாம உங்க அப்பத்தா வெளில உக்காந்துட்டு நம்மளையேதான்  பாத்துட்டு இருக்காங்க. அதுனாலதான்  நான் உன்னையே சாப்பிட சொல்றேன் அம்மு‌. இன்னைக்கு ஒரு நாள் நீயே சாப்பிட்டுக்கோ” என்று தன்னிலை விளக்கம் அளித்து சாப்பிட சொல்ல, அவளோ மேலும் முரண்டு பிடித்தாள்.

“இங்க பாரு ப்யூட்டி, நீ இப்ப ஊட்டி விடுறதா இருந்தா நான் சாப்பிடுவேன். இல்லன்னா நான் இப்படியே பட்டினியா காலேஜ் போறேன். யாரோ எவரோக்காக நீ இப்போ எனக்கு சாப்பாடு ஊட்டாம இருந்தா, அப்போ நீ என்மேல வச்ச உண்மையான பாசம் பொய் ஆகி அவங்க சொல்றது எல்லாம் உண்மைனு சொல்ற மாதிரி இருக்கும். என்னோட நங்கை எப்போதும் தைரியமா எல்லார் முன்னாடி தலை நிமிர்ந்து இருக்கணும். இப்படி தலை கவிழ்ந்து இருக்க கூடாது” என்று சொல்லி தலையை நிமிர்த்த, அங்கே மாடி படியில் இருந்து இறங்கி வந்தார் சதாசிவம் அந்த வீட்டின் தலைவர்.

நங்கையும் ஆதினியும் எதையோ பேசிக்கொண்டு இருப்பதை மாடியில் இருந்து பார்த்தபடி வந்த சதாசிவத்துக்கு எரிச்சல் மூண்டது. எத்தனையோ தடவை அந்த நங்கையை வீட்டை விட்டு அனுப்ப முயற்சி செய்தாலும் அதற்கு தடையாக அந்த வீட்டு மகாலட்சுமியான ஆதினி முன் நின்று அத்தனையையும் தவுடு பொடியாக்கினாள்.

தந்தையின் வருகையை அறிந்து கொண்ட ஆதினி, ”ஹான்…  ஊட்டு ப்யூட்டி” என்று தட்டை அவர் புறம் திருப்பி வாயை திறந்து ஆவென காட்ட, அவளின் பிடிவாதத்தை அறிந்து தயக்கத்துடனே சாப்பாடை ஊட்ட தொடங்கினார்.

சதாசிவம் டைனிங் டேபிள் வந்ததை பார்த்த சீதா வேகமாக அங்கே வந்தவரை ஓங்கி கன்னத்தில் அடித்த சதாசிவம், ”நீ இந்த வீட்ல எதுக்குதான்  இருக்க, ஒண்ட வந்த பிடாரி எல்லாம் இங்க நின்னுட்டு அடுத்தவங்க உயிர எடுத்துட்டு இருக்கப்போ உனக்கு புருஷனையும் புள்ளையையும் கவனிக்க முடியல. நீயெல்லாம் உயிரோட இருந்து என்னத்த சாதிக்க போற. இன்னைக்கு மட்டும் நான் போற காரியம் நல்லபடியா முடியாம இருக்கட்டும் அப்புறம் இருக்கு உனக்கு” என்று நங்கையை பார்த்து அனைத்தையும் கூறி எச்சரித்து விட்டு வேகமாக வெளியேறிவிட்டார்.

இத்தனை நடந்தும் ஆதினி கூலாக நங்கை ஊட்டிய உணவை விழுங்கி கொண்டு இருந்தாள்.

சாப்பிட்டு முடித்தவுடன், ”சரி ப்யூட்டி, இனி நீ இங்க இருக்க வேணாம் சரியா, நீ பால்வாடிக்கு போ, அங்க உனக்காக அந்த குழந்தைங்க வந்துருவாங்க. அவங்கள போய் கவனிச்சிக்கோ. நான் உன்ன சாயங்காலம் வந்து பாக்குறேன்” என்று சொல்லி அவரது கன்னத்தில் முத்தமிட்டு பதில் முத்தத்தை பெற்றுக் கொண்டாள்.

ஆதினி, சதாசிவம் சீதாலட்சுமி தம்பதியரின் ஒரே மகள். பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு கல்லூரியில் விஸ்காம் கடைசி வருடம் படித்து வருகிறாள். குழந்தை போல் முகத்தை கொண்ட இருபது வயது மங்கையவள். நங்கையின் மேல் அத்தனை பாசத்தை கொண்டு அவரை பார்த்து கொள்பவள்.

வண்டியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பிய ஆதினி வேகமாக வந்து நின்றது ஒரு ஓட்டு வீட்டின் முன்பு…

“கியாங் கியாங்” என்று ஹாரன் சத்தத்தை ஆதினி காட்ட, உள்ளே இருந்து எந்த ஒரு பதிலும் வராமல் போக மீண்டும் ஹாரன் அடித்தாள்.

“இருடி வரேன்” என்று மென்மையான குரல் உள்ளே இருந்து வர, ”இவளுக்கு இதே வேலையா போச்சி” என்று புலம்பினாள் ஆதினி.

“நீ புலம்ப தேவையில்லை வண்டிய கிளப்பு” என்று அவள் பின்னே வண்டியில் ஏறி அமர்ந்தாள் அவளின் உற்ற தோழியான பூங்குழலி.

இருவரும் சேர்ந்து அவர்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று அவர்களது படைகளுடன் ஐக்கியமாகிட, அங்கே பரிட்சை என்றும் பாராமல் அரட்டை அரங்கம் நடந்தேறியது.

ஆதினி, பூங்குழலியை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேதான்  இருக்கும். அதற்கு முதல் காரணம் ஆதினியின் கலகலப்பான பேச்சு‌ மற்றும் அவளின் அழகு. பூங்குழலியின் அமைதி கூட பலரை ஈர்க்க செய்தது. அவள் அமைதியான குணம்தான் அது மற்றவர்களிடம் மட்டுமே அவளின் நெருங்கிய தொடர்பு உள்ளவர்களுக்கு எப்போதும் அவள் ஒரு வாயாடிதான்.

சிறிது நேரத்திலே அவர்களது அரட்டை அரங்கம் கலைந்து பரிட்சை எழுத சென்றனர்.

இங்கே வசி கிட்டதட்ட இரண்டு மணி நேரம் அவனது மடியிலே தலைசாய்த்து உறங்கி இருக்க, எழுந்த அவன் தன் அன்னையை அழைத்து வர வேண்டும் என்று முடிவோடு இருந்தான்.

அதற்கு முதல் படியாக, அவனுக்கு இருக்கும் எல்லா வேலையையும் முடிக்க எண்ணி அதனை பார்க்க துவங்கினான்.

இங்கே வீட்டிற்கு வந்த பாரிவேந்தருக்கு தன் மகனின் நிலையே அவரை நிலைக்குலைய செய்தது. அவனது கண்களில் கோர்த்திருந்த கண்ணீர் துளியும் பாசத்திற்கு ஏங்கும் இருபத்தி ஐந்து வயது குழந்தையாகவே தெரிந்தான்‌.

நேராக சென்ற அவர் நின்றது, அவர்கள் வீட்டு ஹாலில் மாட்டப்பட்டிருந்த கண்ணம்மாவின் புகைப்படத்திற்கு முன்புதான் .

“பாருடிம்மா நம்ம புள்ளையின் நிலமையை. என்னால இன்னிக்கு அவனோட நிலையை பார்த்து இந்த வாழ்க்கையையே வெறுக்கிற மாதிரி இருக்குடி. ஏன்டி எங்களை பிரிஞ்சி வாழுற. உன்னோட வைராக்கியத்தால தான் நம்ம புள்ளைக்கு இந்த நிலமை. அவன் உன்னோட பாசத்துக்கு ஏங்குறான் டி. நீ பெத்து போட்டா மட்டும் போதுமா சொல்லு, அவனுக்கு உன்னோட அன்பும் அரவணைப்பும் வேணாமா. அவன் பாவம்டி எங்க கிட்டயே வந்துறேன் கண்ணம்மா” என்று கண் கலங்கி அந்த புகைப்படத்தின் முன் அமர்ந்திருக்க, அந்த புகைப்படத்தில் இருந்த கண்ணம்மாவோ சிரித்து கொண்டு இருந்தார்.

மாலையில் கோபமாக வந்த சதாசிவம் சீதாலட்சுமியை அழைத்துக் கொண்டு நங்கை வீட்டிற்குள் கோபத்தோடு நுழைந்தார்.