நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா–05

295797628_586832783012651_1027496183334268553_n-68f3d486

அத்தியாயம் 05

மலா்கள் கேட்டேன்

வனமே தந்தனை…

தண்ணீா் கேட்டேன்

அமிர்தம் தந்தனை…

சதாசிவம் கூறியபடியே அதிகாலை சீக்கிரமாகவே எழுந்தவனுக்கு என்ன செய்வது ஏது செய்வது என்று ஒன்றும் புரியவில்லை, நடு காட்டில் தனித்து விட்டது போலானது.

எப்படி தன் அன்னையுடன் சேர்ந்து இருப்பது என்று யோசித்தவனுக்கு கடவுளே அதற்கான வழியை தந்ததும் இல்லாமல் தன் அன்னையையே அனுப்பி வைத்தது அவனுக்கு சந்தோஷத்துடன் கூடிய ஆச்சரியமாக  இருந்தது.

இப்போது அவனுக்கு இருக்கிற முக்கிய பொறுப்பு தன் அன்னையுடன் இந்த ஊரை விட்டு செல்வதற்குள் அவருக்கு தகுந்த ஒரு அங்கிகாரத்தை வாங்கி தர வேண்டும் என்பதே.

ஆனால் வசிக்கு இவர்களின் கடந்த காலமும் அன்னை தந்தையின் பிரிவின் காரணமும் தெரியாததால் அடுத்து என்ன செய்வது என்று குழம்பிப் போனான்.

அவனது யோசனையில் இருந்து கலைக்கும் பொருட்டு, அவன் தங்கி இருந்த அறை கதவு தட்ட பட‌, மெதுவாக எழுந்து கதவை திறந்து பார்த்தான்.

அங்கே தேவநங்கை காப்பி கப்புடன் நின்றிருந்தார். இதனை கண்ட வசிக்கு கண்கள் கரிக்க தொடங்க, அதனை லாவகமாக வெளியே வராமல் தடுத்திருந்தான்.

இத்தனை வருடங்களில் இப்படி ஒரு நாள் வரும் என்று அவன் நினைத்தது இல்லையே. கிடைக்காது என்று எண்ணி இருந்த தன் அன்னையின் பாசம் கிடைக்க, அவனுக்கு அந்த நேரத்தை விட மனதே இல்லை.

தன்னையே கட்டுப்படுத்த முடியாத நிலையில் உணர்ச்சி வசப்பட்டு போனவன் தன்னையும் அறியாமல், ”அம்மா” என்று அழைத்து விட்டான்.

அம்மா என்ற வார்த்தையில், பாசம், தவிப்பு, வலி, கவலை என பலதரப்பட்ட உணர்வுகளில் இருந்து பிரித்தெடுக்க முடியாத குரலில் அழைக்கவும் நங்கையே ஒரு நிமிடம் ஆடிப் போனார்.

அவருக்கு தன் மகனின் நினைப்பு வந்தவுடனே, ‘அவன் எப்படி இருப்பான்? எங்கு இருக்கிறான்? என்ன பெயர் வைத்து இருப்பார்? என்னை பற்றி தெரிந்து இருக்குமா? இப்போது என்ன செய்து கொண்டு இருப்பான்?’ என்று அவரது மகனின் நினைவில் உழன்று கொண்டு இருந்தவரை, ”அம்மா” என்ற‌ அழைப்பு சுயநினைவை மீட்டு தந்தது.

“தம்பி” என்ற வித்தியாசமான குரலில் அழைக்கவும், இத்தனை நொடி நேரம் தன் அன்னையின் கலவையான முகத்தையையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு, ”தன் அன்னை தன்னை மறந்திருக்க வில்லை” என்று உறுதியாகவும் அத்தனை மகிழ்ச்சி அவனுக்கு. அதில் தானாகவே இதழில் புன்னகை விரிந்தது.

“அம்மா காப்பி எனக்கா” என்று ஏக்கத்துடன் அன்னையை பார்த்து பிள்ளை கேட்க,

“ஹான் இந்தா பா” என்று அவனிடம் கொடுத்தவர், ஏதோ மாயையில் ‌சிக்கிக்கொண்டது போல் காபியை கொடுத்து விட்டு அவரது அறைக்கு சென்றுவிட்டார்.

நேராக அறைக்கு வந்த நங்கை, பீரோவை திறந்து தன் மகனுக்காக ஆசை ஆசையாக இத்தனை வருடங்களாக வாங்கி வைத்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்து பார்க்க தொடங்கினார்.

கண்கள் கலங்க அதில் இருந்த ஒரு பெட்டியை எடுத்த நங்கை, அதை திறந்து அதில் இருந்த பொருளை எடுத்து தன் நெஞ்சோடு சேர்த்து அழுத்தம் கொடுத்தவாறே, ”எனக்கும் உனக்கும் இருக்கிற பந்ததுக்குக்கு சாட்சியே இதுதான். இது இருக்கிறனால மட்டும்தான் நான் இன்னும் என்னோட உயிர கையில பிடிச்சி இருக்கேன். நீ என்னோட பையன்னு சொல்ற பந்தம் இதுதான்” என்றவரின் விழியில் நீர் அருவியாய் வழிந்தது.

அடுத்ததாக தன் மகனுக்காக வாங்கிய முதல் உடையை எடுத்தவர், “தம்பி ‌இப்போ நீ நல்லா வளர்ந்து இருப்பல. இந்த ட்ரெஸ் உனக்காக நீ பிறந்தப்ப வாங்கினது தெரியுமா பா. ஆனா உனக்கு கொடுக்க முடியாத நிலையில என்னை தள்ளிட்டாங்க. உன்னைய இத்தனை வருஷமா பார்க்காமா இருக்கிறதுக்கு என்னைய மன்னிச்சிடு பா. இந்த அம்மாவ மன்னிப்பியா தம்பி, உன்னோட வாயால என்னைய அம்மான்னு கூப்பிடுவியா தங்கம்” என்று அந்த உடையை கையில் ஏந்தி தடவி கொடுத்த படியே அதனை தன் மகனாக கருதி கேட்டார்.

இவை அனைத்தையும் வெளியில் இருந்து எட்டி பார்த்த வசிக்கு வலிக்க செய்தது. அதனுடன் கூடிய கண்ணீரும் வரவா வேண்டாவா என்ற நிலையில் இருக்க, ஆண்கள் அழக்கூடாது என்று எழுத படாத சட்டத்தினாலே தனக்காக வர இருந்த கண்ணீரை உள்ளிழுத்தவன் மனதில், ‘தான்  இன்னும் சீக்கிரமே வந்திருக்கலாமோ. இத்தனை வருடங்கள் இவரை பற்றி நினைக்காமல் விட்டது தவறோ’ என்ற யோசனையுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

ஆனால் அவனுக்கு தெரியாத ஒன்று, அவன் மட்டும்தான் அன்னையின் நிலை அறியாது இருந்தான். ஆனால் இத்தனை வருடங்களில் பாரிவேந்தர் அவனின் அன்னையின் நிலையை கவனிக்க தவறவில்லை. பக்கத்தில் செல்லவில்லை என்றாலும் அவரை பற்றின செய்தியை அறிந்து கொண்டேதான்  இருந்தார். அதானாலேதான் கண்ணம்மாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறி அவனுக்கு அவரது அம்மா இருக்கும் இடத்தை சொன்னதே.

சிறு நொடியிலே தன்னை மீட்டெடுத்து கொண்ட வசி, வேலைக்கு கிளம்புவதற்காக ஆயத்தமாக தொடங்கினான்.

குளிக்க தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு பின்புறம் வந்தவன், கிணற்றிலிருந்து தண்ணீரை இறைய தொடங்கிய நேரம், நங்கை அங்கே வந்து, ”கொடு தம்பி நான் உனக்கு தண்ணி எடுத்து தரேன் நீ குளிக்க போ” என்று சொல்ல,

“இல்லம்மா உங்களுக்கு எதுக்கு சிரமம் சொல்லுங்க, நானே பண்ணிக்கிறேன்” என்று மறுத்து பேசினான்.

அவனின் மறுப்பு அவருக்கு கவலையைக் கொடுக்க, “அதெல்லாம் முடியாது நீ என்ன அம்மான்னு தான சொல்லி கூப்பிட்டுற. அப்போ நான் செய்ய கூடாதா சொல்லு. இதுவே உங்க அம்மா கிட்ட இப்படி நீ சொல்லுவீயா” என்று தெரிந்தோ தெரியாமலோ சரியான இடத்தில் அடிக்க,

அதனை கேட்ட வசிக்கு சிரிப்பு வர அதனை கட்டுபடுத்தியனின் மனதிற்குள், ‘உண்மையான அம்மா கிட்டதான்  சொல்றேன். அதை உங்க கிட்ட சொல்லவா முடியும்” என்று புலம்பியவன் வெளியில் நல்ல பிள்ளையாக,

“அம்மா நம்ம வேலைய நம்மளே செஞ்சிக்கிட்டாதான்மா நல்லது. பிறரை எண்ணி இருக்கணும்னு அவசியம் இல்லை பாத்துக்கோங்க. அது மட்டும் இல்லாமல் நம்ம வேலைய நமக்கு சார்ந்தவங்களுக்கு கொடுத்தா நமக்கு சோம்பேறித்தனம் வரதும் இல்லாம அவங்களை நாம ஆட்டி வைக்கிற மாதிரி ஆகிடும். பொண்ணுங்க மட்டும்தான் வேலை செய்யணும்னு  இல்லையே ஆண்களும் தன்னாலான முடிஞ்ச வேலையை செய்யலாம்மா அதுல தப்பில்லை” என்று சொன்னவன் வாளியில் தண்ணீரை நிரப்ப தொடங்கினான்.

அவனை பார்க்கும் போது சிறு வயதில் இருந்த தன்னையே பார்ப்பது போல் ஒரு பிரம்மை உருவாக, அதனுடன் சேர்ந்து தன் மகனும் இவ்வாறு இருப்பானா என்ற யோசனையுடன் இருவரையும் ஒப்பிட்டு பார்க்க தொடங்கியது அவரது மூளை.

பின்னர் அவன் குளித்து முடித்து உடை மாற்றி அறையிலிருந்து  அவசரமாக வெளியில் வர‌, அவனுக்காக சுட சுட பஞ்சு போல் இட்லியையும் சட்னியையும் செய்து வைத்திருக்க, “வாப்பா வந்து சாப்பிட்டு போ. அங்க ஐயா காத்திட்டு இருக்க போறாரு” என்க.

“எதுக்குமா இதெல்லாம், நீங்க இங்க தங்க வச்சதே எனக்கு எவ்வளவு பெரிய உதவி தெரியுமாம்மா. அதுக்கே நான் என்னத்த திருப்பி தர போறேன்னு தெரியல. இதுல நீங்க சாப்பாடு எல்லாம் செஞ்சி தந்து என்னைய தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்காதீங்கம்மா” என்று தயங்கியவாறே மறுத்திட,

“தம்பி இப்பவே மணி ஆச்சி பாரு. எதுக்காகவும் நாம சாப்பாட்ட காக்க வைக்க கூடாது பா. சீக்கிரமா வந்து சாப்பிட்டு கிளம்பு” என்று அவன் பேசியது காதிலே விழாதது போல் பேசியவர் தட்டில் நான்கு இட்லியை வைத்தார். அவனும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட அமர்ந்தான்.

அன்னையின் பாசத்தில் மனம் நெகிழ்ந்து போனவனுக்கு தந்தை இங்கில்லாதது  கவலையைக் கொடுத்தது.

வேகமாக உணவு அருந்தியவன் கை கழுவி விட்டு வேலைக்கு கிளம்பினான்.

நேராக சதாசிவத்தின் வீட்டிற்கு வந்த வசி, உள்ளே செல்லாமல் வெளியில் இருந்தே, ”சார்ர்” என்று சத்தமாக அழைக்க,

அந்த சத்தத்தில் சமையலறையில் இருந்து வெளியில் வந்த சீதாலட்சுமி வசியை பார்த்து, “என்னப்பா வேணும் இவ்வளவு சீக்கிரமா வந்துருக்க?”  என்று கேள்வியாய் நோக்க,

“ஆமாம்மா, சார்தான் எங்கோ வெளிய போகணும்னு சீக்கிரமே வர சொன்னாரு. அதான் கார் சாவி வாங்கிட்டு போய் வண்டிய முன்னாடி எடுத்து வைக்கலாம்னு தான்மா” என்றான் விளக்கமாக.

“சரிப்பா  நீ இங்கேயே இரு நான் போய் வண்டி சாவியை எடுத்துட்டு வரேன்” என்று சொல்லி சாவியை எடுக்க சென்றுவிட்டார்.

அந்த நேரம் பார்த்து சரியாக ஆஜரான ஆதினி, அவனை மேலிருந்து கீழ் வரை பார்வையால் அளந்தவள் வெறுப்பான புன்னகை சிந்தி, “என்ன மிஸ்டர் விருமாண்டி, இவ்வளவு சீக்கிரமாவே இங்க எண்ட்ரி கொடுத்துட்டீங்க போல” என்ற குரலில் அத்தனை வெறுப்பு தென்பட்டது.

அவன் அமைதியாகவே அவளை பார்த்து நிற்கவும், “ஓ ஹோ! சாரு இன்னைக்கு மௌன விரதமோ, இல்ல இன்னைக்கு எந்த பொண்ணை கஷ்ட படுத்தலாம்னு யோச்சிக்கிறியா” என்ற குரலில் கேலி கலந்த சினம் காணப்பட்டது.

அதற்கு வசியின் பதிலாக இருந்தது வெறும் கசந்த புன்னகை மட்டுமே.

அதனை கண்ட ஆதினிக்கு ஆத்திரம் மேலோங்கதான் செய்கிறது. சரியா தவறா என்று யோசிக்கும் திறனை இழந்து அவனை பழிவாங்க வேண்டும் என்று பிடிவாதம் உண்டானது. முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் ஆகிவிட்டது இருவரிடத்திலும்.

“உன்ன நான் என்ன பாடு படுத்துறேன்னு மட்டும் பாரு. உன்ன இந்த ஊர விட்டு போக வைக்கல… அப்புறம் நான் நங்கையோட வளர்ப்பு இல்லைடா” என்று சொடக்கிட்டு அவன் முன்னால் சவால் விட்டாள்.

அதற்குள் சீதாலட்சுமி வரவே சாவியை வாங்கிக் கொண்டு வெளியேறினான்.

வீட்டின் முன்பு காரை நிறுத்தி அதனை நன்றாக துடைத்து முடித்தவன் சதாசிவத்திற்காக காத்திருக்க அவர் வரவும் வண்டி கிளம்பியது.

இதுவரை தன்னிடமிருந்த தேங்காய் தோப்புகளோடு ஏலத்தில் குத்தகைக்கு விடப்படும் தோப்புகளை கொண்டு அதில் தேங்காய் எண்ணெய் தயாரித்து மொத்த விற்பனை செய்து கொண்டிருந்த தொழிலில், இந்த முறை ஏலத்தில் குத்தகை அந்த சின்னராசு கைக்கு மாறிவிட, என்ன செய்வது என்று தெரியாமல் ‌இருந்த போதுதான்  இப்படிப்பட்ட யோசனையை கொடுத்தான் வசீகரன்.

அது என்னவென்றால் தேங்காய் மட்டையை கொண்டு நார் கயிறு தயாரிப்பு செய்யலாம் என்பதே. அதற்கான முதல் படியாகதான் இருவரும் கிளம்பி கோவை வரையும் சென்று கொண்டிருக்கின்றனர்.

கோவை மற்றும் திருப்பூரில் அதிகளவு தேங்காய் சாகுபடி நடைபெறுவதால், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிலிருந்த தேங்காய் நாரை கொண்டு நார் கயிறு செய்வதை பற்றி என்ன? ஏது? என்று விசாரிப்பதற்காக செல்கின்றனர்.

இருவரும் கிளம்பிய சிறிது நேரத்திலே ஆதினி பூங்குழலிக்கு அழைத்தாள்.

“சொல்லு ஆதி எதுக்கு கால் பண்ணி இருக்க, அதுவும் இவ்வளவு காலையிலே” என்று கொட்டாவியோடு கேட்க,

அதிலே அவள் இன்னும் விழிக்கவில்லை என்று அறிந்து கொண்ட ஆதினி, “சீக்கிரமா கிளம்பி இரு நாம காலேஜ் போறோம். எனக்கு சில டவுட்ஸ் இருக்கு அதை க்ளாரிஃபை பண்ணிக்க விரும்புறேன்” என்று அதட்டலாகவே சொன்னாள்.

“ஏன்டி இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? இன்னும் இரண்டு நாள்ல பரிட்சை வச்சிக்கிட்டு ட்வுட் இருக்குன்னு சொல்லுற” என்று தூக்க கலக்கத்தில் உரைக்க,

“அடியேய்” என்று கத்திய கத்தலில் பூங்குழலி மொபைலை கட்டிலில் தவறவிட்டாள்.

வேகமாக மொபைலை கையில் எடுத்த பூங்குழலி, “எதுக்கு இந்த காலையில கால் ஊரையே எழுப்புற மாதிரி கத்தி தொலையிற, அறிவில்லை உனக்கு” என்று இவளும் ஏகத்திற்கு கத்த,

“கத்தாத எருமை காது வலிக்குது” என்று காதை தேய்த்து கொண்டவள் பின்பு அவளே, ”சீக்கிரமா கிளம்பி இரு, நான் வந்து பிக்அப் பண்ணிக்கிறேன். எனக்கு சுத்தமா டைம் இல்லை பாத்துக்கோ” என்றவுடன் கடமை முடிந்தது என வைத்து விட்டாள்.

பின்னர் இருவருமே அவரவரது வீட்டில் கல்லூரிக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

விரைந்து கிளம்பிய ஆதினி, ஒரு துள்ளலுடனே மாடிலிருந்து கீழ் இறங்கியவள் வேகமாக அவளது ஆக்டிவாவை எடுத்துக் கொண்டு சிட்டாக பறந்து விட்டாள்.

போகும் வழியில் பூவையும் அழைத்துக்கொண்டு கல்லூரியை நோக்கி சென்றவள், தீடிரென யாருமற்ற சாலையில் வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு சுற்றியும் முற்றிலும் பார்த்தாள்.

“ஹே இப்போ எதுக்குடி வண்டிய நிப்பாட்டிட்டு சுத்தி சுத்தி பாத்துட்டு?”  என்று பூங்குழலி பதறி போய் கேட்க,

“ஹான் அதுவா வண்டி பஞ்சர் ஆயிடுச்சிடி, அதான் வண்டிய இப்படி ஓரமா நிப்பாட்டிட்டு இருக்கேன், யாராவது வராங்களான்னு பாக்குறேன்” என்று கூலாக பதில் கூறியவள் தன் பையில் இருந்த ஒரு கவரை கையில் எடுத்தாள்.

“என்னதுடி இது” என்று கேள்வியாய் அவளை நோக்க, 

“பச் கொஞ்சம் வாய மூடிகிட்டு இரு டி. எனக்கு வேற நேரமே இல்ல. இப்படி தொணத் தொணனு கேள்வி கேட்டா என் வேலை எப்படி முடியும்” என்று சலித்துக் கொண்டாள்.

“என்னமோ பண்ணுற ஆனா என்ன பண்ணுறன்னுதான் தெரியல” என்ற பூங்குழலி அமைதியாக வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.

அந்த கவரிலிருந்து ஒரு ஆணியையும் சுத்தியலையும் வெளியே எடுத்தவள் முன்னிருந்த டயர் நோக்கி கொண்டு சென்றாள்.

ஆணியை கொண்டு சுத்தியல் வைத்து அடித்து பஞ்சர் செய்தவள், உடனே மிஸ்டர் விருமாண்டிக்கு அழைப்பு விடுத்தாள்.

இவளின் செய்கையை கண்டு, ‘பே’ என முழித்தாள் பூங்குழலி.

***                                               

இங்கே சதாசிவமும் வசீகரனும் வேலை விடயமாக வெளியூர் சென்று கொண்டிருக்க, அப்போது வசியின் மொபைல் சிணுங்க, வண்டியை ஓரமாக நிறுத்தியவன் மொபைலை எடுத்து பார்க்க அதில் ஆதினி என்ற பெயர் திரையில் மின்னியது.

“எதுக்கு வண்டியை நிப்பாட்டிட்ட யாரு அந்த மொபைல்ல” என்று தன்மையாக கேட்டார் அந்த பெரிய மனிதர்.

“சார் ஆதினி மேடம்தான் கூப்பிடுறாங்க” என்றவனின் மனமோ அவங்களுக்கு என்னவோ ஏதோ என்று பதறிப் போய் யோசிக்க தொடங்கியது.

“சரி தம்பி பாப்பா எதுக்கு கூப்பிட்டான்னு தெரியல, அதுனால கூப்பிட்டு என்னென்னு கேளு பா”என்றவரின் குரலில் பயம் இருந்தது.

“சரிங்க சார்” என்றவன் அழைப்பேசியில் அவளது எண்ணிற்கு அழைக்க, அதுவோ ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

“ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது சார். இப்போ என்ன பண்றது”

“நீ திரும்பி ஃபோன் பண்ணி பாரு பா” சிறு பயத்துடனே வெளிவந்தது அவரது குரல்.

“இதோ பண்றேன் ஐயா” என்று மீண்டும் அழைக்க அப்போதும் அதே பதில்தான்.

இதில் ஒரு தந்தையாக தன் மகளுக்கு என்ன ஆனதோ என்று பதறிப் போய் சீதாவிற்கு அழைத்தார்.

“ஹலோ! ஆதினி எங்க இருக்கா” என்று எடுத்த எடுப்பிலேயே கத்த,

“அவ ஏதோ வேலை இருக்குன்னு சொல்லி காலேஜ்க்கு போயிருக்காங்க. ஏன் கேக்குறீங்க?”

“சரி வச்சி தொலை” என்று பதில் கூறாது வைத்து விட்டார்.

“தம்பி நீ வண்டியை திருப்புப்பா, ஆதினி ஏதோ வேலைன்னு சொல்லி கல்லூரிக்குதான் போயிருக்காளாம் நாம அங்கேயே போய் என்னென்னு பாப்போம்”

“இல்ல சார் இப்போ நீங்க கோவை போறது ரொம்ப முக்கியம். அதுனால நீங்க போங்க சார், நான் வேற வண்டி பிடிச்சு போய் அவங்கள பாத்துட்டு வரேன்” என்றான் அவன்.

மறுக்க தோன்றியவருக்கு அவன் குரலில் இருந்த வலிமை கண்டிப்பாக செல்வான் என்று தோன்றியது.

“சரிப்பா நீ சீக்கிரமா போய் என்னென்னு பார்த்துட்டு சொல்லு” என்றவர் அவன் இறங்கியதும் ஓட்டுநர் இருக்கைக்கு வந்து வண்டியை கிளப்பினார்.

அவர் சென்றதும் அங்கேயே நிற்க தோன்றாமல் நடக்க தொடங்கிய வசி, அந்த வழியாக வந்த ஒரு வண்டியை நிறுத்தி ஏறிக் கொண்டான்.

                                                   ***

  கிடைத்த வண்டியில் வந்துக் கொண்டிருந்த வசி பாதி வழியில் இறங்கியவன், வேகவேகமாக வீட்டிற்கு சென்று இன்னொரு கார் சாவியை பெற்று கொண்டு சாலையில் சீறி பாய்ந்தான்.

கல்லூரிக்குச் செல்லும் சாலையில் நடு வழியிலே ஆதினியின் வண்டியைக் கண்டவன் சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான்.

வண்டியை விட்டு வேகமாக இறங்கியவன், வேகமாக வண்டி இருந்த இடம் நோக்கி ஓடி வந்தவன் சுற்றிலும் பார்வையை அலசிட, அவன் கண்ணில் பசுமை நிறைந்த வயல்வெளிகளை தவிர்த்து வேறெதுவும் தெரியாமல் போக அந்த ஆறடி ஆண்மகனுக்கு பயம் துளிர்விட்டது.

“மேடம்… மேடம்…” என்று கத்தியபடி அங்கும் இங்கும் அலைந்து தேட, அவனின் தேடலுக்கு மிஞ்சியது என்னவோ வெறும் வேர்வை துளிகளே.

உள்ளுக்குள் பயம் ஊற்றெடுக்க என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் அந்த தார் சாலையிலே மண்டியிட்டு அமர்ந்து விட, ஆதினிக்கு என்னவாகியிருக்கும் என்றே அவன் மூளை யோசிக்க செய்தது.

அவனின் யோசனை எல்லாம் தவிடு படியாக்கும் படி ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தம் கேட்க, சத்தம் வந்த திசையை நோக்கியவனுக்கு கண்கள் இரண்டும் சிவப்பேறியது.

அவர்களை நோக்கி ஓடி வந்தவன், “மேடம் உங்களுக்கு எதுவும் பிரச்சினை இல்லையே” என்று அவளை ஆராய்ந்தவாறே கேட்டான்.

“எனக்கு ஒன்னும் ஆகலை. என்னோட வண்டிக்குதான் பிரச்சினை. ‌அதுதான் அங்க பஞ்சர் ஆகி நிக்குது” என்றாள் சர்வ சாதாரணமான குரலில்.

அதில் இருந்த கேலியில் ஆத்திரம் பொங்கினாலும் அதை வெகு சிரமப்பட்டு அடக்கினான்.

“சரி உங்க போனுக்கு என்ன ஆச்சி மேடம்? கூப்பிட்டா ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது”

“அதுவா காலைல சார்ஜ் போட மறந்துட்டேன். அதான் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சி. அதான் பக்கத்துல இருந்த டீ கடைக்கு போய் டீ குடிச்சிட்டு வரோம்” என்று அசட்டையாக பதில் கூறினாள்.

“சரி அப்போ இவங்களோட மொபைல்ல இருந்து கூப்பிட்டு இருக்கலாம்ல”

“ஹான் மறந்துட்டேன்…” என்ற பதிலின் முடிவில் அவள் கன்னத்தை தாங்கி நின்றாள் வசியின் அடியில்.

இத்தனை நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பூங்குழலிக்கு இவை அனைத்தும் அதிர்ச்சியாக இருந்தது.

ஆதினி அவனின் அடியில் திகைத்து நிற்க, அதனை கண்டவன் சிகை கோதி கோபத்தை கட்டுப்படுத்தியவன் பூங்குழலியிடம் திரும்பி, “ஏன்மா நீயாவது இவங்க வீட்ல யாராவது ஒருத்தருக்கு போன் பண்ணி சொல்லி இருக்கலாமே” என்ற குரலில் அத்தனை ஆதங்கம் நிறைந்திருந்தது.

“இல்ல அண்ணா… போன பிடுங்கி இவ வச்சிக்கிட்டா” என்றாள் தலை கவிழ்ந்து.

ஆதினியின் புறம் திரும்பிய வசி, “நீ செய்யுற ஒவ்வொரு செயலும் சொல்லும் உன்னோட வளர்ப்பைதான்  குறிக்கும். நீ அன்னைக்கு பஸ்ல என்னைய அடிச்சப்ப இவ்வளோ தைரியமான பொண்ணா வீட்ல வளர்த்துருக்காங்கன்னு நினைச்சேன். ஆனா இன்னைக்கு உன்னோட இந்த செயலை பார்த்து நீ உன்ன வளர்த்த உங்க நங்கை அத்தைக்கு ரொம்ப பெரிய நல்லது செஞ்சிட்டடீங்க மேடம் பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. அங்க உங்க வீட்ல எல்லாரும் ரொம்ப பயந்து போய் இருக்காங்க. முதல உங்க போன ஆன் பண்ணி அவங்ககிட்ட பேசிட்டு வந்து வண்டில ஏறுங்க மேடம்” என்று ஆத்திரம் பொங்க பேசியவன் வண்டியை திருப்பி இருவருக்காக காத்திருக்க தொடங்கினான்.

நங்கையின் பெயர் அடிபட்டதனால் மட்டுமே அந்த நேரம் அமைதியாக அவன் சொன்னதை செய்தாள்.

தன் தந்தைக்கு அழைப்பு விட அடுத்த நொடியே அதை எடுத்தவர், “பாப்பா உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே. நல்லா தானே இருக்க நீ?” என்று  தந்தையாக பதறினார்.

“நான் நல்லாதான்  இருக்கேன்” என்று விளக்கம் கொடுத்தவள் வைத்து விட்டாள்.

அதன் பின்னர் இருவரையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான் வசீகரன்.

சிறிது நேரம் அவளுடன் இருந்த பூங்குழலி ஆதினியின் செய்கைக்கு எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் ஒரு பார்வை மட்டுமே பார்த்து விட்டு சென்றாள்.

அது நீ செய்வது தவறு என்று அப்பட்டமாக கூறியது.

இரவு உணவை முடித்து விட்டு அறைக்கு வந்த ஆதினிக்கு, வீட்டினரிடம் பேசிய பிறகே தான் செய்தது தவறு என்று உணர்ந்தாள். இப்படி ஒரு செய்கையை செய்ய காரணமானவன் மிஸ்டர் விருமாண்டியே. அவன் எப்படி தன் வளர்ப்பை பற்றி பேசலாம். அதற்கான தகுதியே இல்லாத இவனெல்லாம் பேசும் நிலையிலா நான் இருக்கேன். ஆனாலும் அவன் எப்படி தன்னை அடிக்கலாம் என்று மனது வெதும்பி தவித்தது. அவன் அடித்த கன்னத்தை பார்க்க பார்க்க அவளுக்கு ஆத்திரம் பொங்கியது.

ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழி இவளின் செய்கைக்கு நன்றாகவே பொருந்திப் போனது.

***

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!