நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா-08

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா

 08

பரணிதரன் கூறியது போலவே அடுத்த வாரத்திலே மூவரையும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.

சௌந்தர்யாவிற்கு பிறந்த வீட்டை சந்திக்கப்போக போகிறோம் என்றே சந்தோஷமாக இருந்தது. இது பொதுவாக அனைத்து பெண்களின் ஆசையாக இருக்கும். பிறந்த வீட்டிலிருந்து சீராட்டி வருவது. புகுந்த வீட்டின் நிலையை கருத்தில் கொண்டு வருஷத்து ஒருவாரமோ அல்லது இரண்டு வருஷத்துக்கு ஒருதரமோதான்  செல்ல முடிகிறது.

மிளனிக்கு இது ஒரு புதியதொரு ட்ரிப்பாகவே இருந்தது. அவள் படிப்பை காரணம் காட்டியே யாரும் அதிகமாக இந்தியா செல்லவில்லை அபிநந்தனை தவிர்த்து, அதனாலே இந்த பயணத்தை ஜாலியாக என்ஜாய் செய்ய தொடங்கினாள்.

ஆனால் முற்றிலும் வேறுவிதமாக இருந்தது என்னவோ அபிநந்தன்தான். அவனால் இந்த ட்ரிப் எந்த மாதிரி ஒரு உணர்வை கொடுக்கிறது என்று சொல்ல முடியவில்லை.

இத்தனை வருடங்கள் கழித்து தன்னவளை காணப்போக போகும் ஆவல் ஒருபக்கம். காதல், ஆசை, பாசம் என கலவையான உணர்வுக்களுக்குள் சிக்கி தவித்தான். அவன் வயிற்றுக்குள் நட்சத்திரங்களாக சுற்றியது.

எப்போதுடா ஊருக்கு செல்வோம் என்றிருந்தது அவனுக்கு. ‌

எப்போது மும்பை வரும் என்று கிட்டத்தட்ட எட்டு மணி நேரமாக ப்ளைட்டில் இருந்தான்.

ப்ளையிட் தளம் இறங்கியதும் இறங்கியவன் வேகவேகமாக அடுத்து பிடிக்க வேண்டிய ப்ளைட் நோக்கி நடையிட்டான்.

இவனின் செயலை கண்டு சௌந்தர்யாவிற்கு சிரிப்புதான் வந்தது.

அடுத்து வந்த ஐந்து மணி நேரம் முழுவதும் அவனை ஆக்கிரமித்தது என்னவோ அவனின் ப்ளவர்தான். அதனாலே விமானத்தில் அமைதியாக வந்தான். இல்லையெனில் தாயையும் தந்கையையும் ஒரு வழி செய்திருப்பான்.

பிளைட் கோவை வந்து தரையிறங்கியதும் அனைத்து ப்ராசசிங்கையும் முடித்துக் கொண்டு அரைமணி நேரத்தில் வெளியே வந்தவன் அங்கே இருந்த கேப்பை புக் செய்தான்.

மூவரும் வண்டியில் ஏறி செம்மலபுரம் நோக்கி பயணித்தனர்.

தன்னவளை காணப்போகும் ஆசையில் அவளுடன் கனவிலே ஒரு டூயட் பாடினான் அவன்.

ஆனால் மிளனியோ அந்த இயற்கையின் அழகினை ஒவ்வொன்றாக இரசித்து வந்தது மட்டும் இல்லாமல் புகைப்படமாக போனில் எடுத்துக்கொண்டாள்.

சௌந்தர்யாவிற்கு ஆயாசமாக இருந்தது. அன்று மட்டும்தான்  பரணிதரனிற்கு மனைவியாகாமல் இருந்திருந்தால் இந்த இயற்கையோடு இணைந்து வாழ்ந்திருப்பேன். அல்லது எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் திருமணம் நடைப்பெற்றிருந்தால் இங்கேயே வாழ்ந்திருப்போம்.

அடுத்த இரண்டு மணிநேர பயணத்தில் செம்மலபுரம் வந்துவிட, இத்தனை மணிநேரம் காத்திருப்பே அவனுக்கு பல ஆண்டுகளாக காத்திருந்தது போல் இருந்தது. அந்த நிமிட நேர பயணம் அவனை பாடாய் படுத்தியது.

ஜன்னல் ஓரம் பார்வையை திருப்பியவனின் கண்கள் அகலமாய் விரிந்தது.

“நிறுத்துங்க நிறுத்துங்க” என்று அவசரமாய் வண்டியை நிறுத்தி இறங்கி எங்கோ சென்றான்.

                                                 ***

இங்கே தேங்காய் தோப்பில் இருக்கும் வேலை முழுதும் வசியை நம்பியே ஒப்படைத்திருந்தார் சதாசிவம்.

ஆனாலும் வசீகரன் எதையும் தணித்து செய்யாமல் அவரை முன் நிறுத்தியே செய்ய தொடங்கினான். ஏனென்றால் ஏதோ ஒருநாள் அவன் இந்த ஊரை விட்டு சென்றே ஆகவேண்டும் அல்லவா.

அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு வசீகரன் பெறும்பாலான நேரத்தை தோப்பிலே கழித்தான். வீட்டிற்கு போவதை தவிர்த்து வந்தான் அவன்.

அவன் வீட்டிற்கு செல்ல தவிர்த்து வந்ததற்கு காரணமானவளே அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

‘இவ எதுக்கு இப்போ இங்க வராளோ? இப்போ என்ன ஏழரைய கூட்ட போறாளோ தெரியலையே ஆண்டவா’ என்று வானத்தை பார்த்து புலம்பினான் வசி.

“ஹாய் மிஸ்டர் விருமாண்டி” என்று புன்னகையோடு அவள் சொல்ல,

மெல்லிய புன்னகையை சிந்தியவன், ”வாம்மா பூங்குழலி” என்று அவளுடன் வந்த பூங்குழலியை வரவேற்றான்.

“எங்கேயாவது வெளிய போனுமா நீங்க? வண்டி எடுக்கணுமா என்ன, இங்கேயே இருக்கீங்களா நான் போய் வண்டி எடுத்துட்டு வரேன்” என்று கிளம்ப எத்தனிக்க,

“மிஸ்டர் விரு அதெல்லாம் தேவையில்லை. நாங்க இல்ல இல்ல நான் இப்போ வந்தது என்னோட காதலனை பார்க்கதான்” என்று சர்வசாதாரணமாக கூறினாள்.

“இங்க பாருங்க மேடம், நீங்க பண்றது ரொம்பவே தப்பு” என்று பொறுமையாக எடுத்துரைக்க,

“பூவு நீ கொஞ்சம் தள்ளி இருக்கியா. நான் உன்னோட நொண்ணன் கிட்ட பேசணும்” என்க.

“என்னையா இதுல தப்பு இருக்கபோது சொல்லு. எனக்கு உன்மேல காதல் வந்தது அதை உன்கிட்ட சொன்னேன் அது ஒரு தப்பா சொல்லு. அதுக்காக வீடு பக்கமே தலை வச்சி படுக்க மாட்டேங்கிற. இது உனக்கே அந்நியாயமா தெரியல” என்று கோபமாக வார்த்தைகள் வந்தாலும் அவளின் முகம் சோகத்தை அப்பி கொண்டது.

“புரிஞ்சிதான் பேசுறீங்களா மேடம் நீங்க”

“நல்லா புரிஞ்சி தெரிஞ்சிதான் பேசுறேன் விரு. நான் உன்ன ரொம்பவே காதலிக்கிறேன் அவ்வளவுதான். என்னால ரொம்ப நாளைக்கு காத்துட்டே இருக்க முடியாது. அதுனால சீக்கிரமா உன்னோட காதலையும் என்கிட்ட ஷேர் பண்ணிக்க பாரு விரு” என்று காதல் பார்வை வீசினாள்.

“நீங்க இப்படி பேசுறது அபத்தம் மேடம். என்னோட காதல் கண்டிப்பா உங்களுக்கு கிடைக்காது. அது மட்டும் இல்லாமல் நான் யாருன்னு கூட உங்களுக்கு தெரியாது. அதுவும் இல்லாம நான் உங்ககிட்ட வேலை பாக்குற சாதாரண ஒருத்தன். இது வேணாம் மேடம் என்னால இப்போதைக்கு இந்த காதல் பத்தி எல்லாம் யோசிக்க முடியாது. உங்களோட மாமா பையனையே கல்யாணம் பண்ண பாருங்க” என்று நிதர்சனத்தை சொன்னான்.

காதல் பார்வை வீசிய கண்களில் இப்போது அனல் தேங்கியது.

“ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சிக்கோ, நீ மிஸ்டர் விருமாண்டில இருந்து எப்பவோ மிஸ்டர் விருவா மாறிட்ட, அப்புறம் அமுல் பேபி வசீகரன கூட சுருக்கி என் மனசுக்குள்ள நீ கரணா மாறிட்ட. அதுனால இந்த நொண்டி சாக்கு எல்லாம் சொல்லாம சீக்கிரமா இந்த கல்யாண பேச்சை நிறுத்த பாரு” என்று மிரட்டி விட்டு சென்றாள்.

“வா பூவு போகலாம்” என்றவள் அவளை முன் செல்ல விட்டு பின்னே நடந்தவள் திரும்பி வசியை பார்த்து, ”லவ் யூ மிஸ்டர் விரு” என்று பறக்கும் முத்தத்தை அளித்து விட்டு உல்லாசமாக நடந்தாள்.

“ஐயோ இந்த பெண்ணை என்ன பண்ணுவது” என்று தலையில் கைவைத்து விட்டான் அவளின் மிஸ்டர் விரு.

 ***

“ஆதினி ஒரு நிமிஷம் நில்லு” என்று பூவு அவளை நிறுத்த,

“சொல்லு டி, எதுக்கு இப்போ நிக்க சொன்ன?” என்று பார்வையை அங்கும் இங்கும் அசைத்தவாறே கேட்டாள்.

“இங்க என்ன நடக்குதுன்னு சொல்லு. காலைல எங்க வீட்டுக்கு நான் தப்ப உணர்ந்துட்டேன் என்னைய மன்னிச்சிடுன்னு சொன்ன. பரவால இவ்வளோ சீக்கிரமாவே மனசு மாறிட்டான்னு சந்தோஷப்பட்டேன். இப்போ நீ அண்ணா கிட்ட வேறு விதமா நடந்துக்கிற. நான் இல்லாத இத்தனை நாள்ல இங்க என்ன நடந்துச்சி சொல்லு ஆதினி” என்று தனக்கு தோன்றிய கேள்வியை தொடுத்தாள்.

ஒரு நிமிடம் என்றாலும் அந்த நாளை நினைத்து மனது இன்றும் பதறியது. அதனை சமன் செய்தவள் நடந்த நிகழ்வுகளை கூறிமுடித்து ஒரு பெருமூச்செடுத்தாள்.

“அய்யோ” என்று பதறி போனாள் பூவு.

“விடுடி அதான் மிஸ்டர் விரு என்னைய காப்பாத்திட்டாருல” என்று சிலாகித்து சொன்னாள்.

“அதுக்கும் இப்ப நீ பேசினதுக்கு என்ன சம்பந்தம்? என்கிட்ட இருந்து எதையாவது மறைக்கிறியா நீ” என்று துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தாள்.

“நான் ஒன்னும் பெருசா மறைக்கில என்னோட காதலை கரண் கிட்ட சொன்னேன் அதை மட்டும்தான் சொல்லல, மத்தபடி எல்லாத்தையும் சொல்லிட்டேன் உன்கிட்ட” என்று பார்வையை வேறுபுறம் பதிக்க,

“என்ன சொல்ற நீ, அண்ணா கிட்ட லவ்வ சொன்னீயா இது எப்போ இருந்து” என்று வாயை பிளந்தாள் பூங்குழலி.

“ஆமா பூவு அன்னைக்கு என்னைய கடைக்கு கூட்டுட்டு போய் ட்ரெஸ் வாங்கி கொடுத்தாங்கனு சொன்னேன்” என்று அன்று நடந்ததைக் கூற தொடங்கினாள்.

***                                      

உடை வாங்கி மாற்றி விட்டு ஆதினி வரவும் வேகமாக வண்டியை எடுத்திருந்தான் வசீகரன்.

பாதி தூரம் சென்றதும், “ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்துறீங்களா ப்ளீஸ். நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று தயக்கமாக சொன்னாள்.

‘என்கிட்ட பேச என்ன இருக்கு’ என்று நினைத்தவாறே வண்டியை ஓரமாக நிறுத்தினான்.

ஆதினி இறங்கியதும் அவளுக்கு பின்னே இறங்கிய வசி, “சொல்லுங்க மேடம், ஏதோ பேசணும்னு சொன்னீங்க?” என்று ஏதோ பிரச்சனையோ என்று நினைத்து பதறி‌ போனான்.

“எனக்கு இதை இந்த நேரத்துல சொல்றது சரியா தப்பான்னு சொல்ல தெரியல” என்று பீடிகை போட்டாள்.

“எதுனாலும் சொல்லுங்க மேடம்”

“நான் சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல” என்று கையை பிசைந்தாள்.

அவனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“நா… நா… நான் உ… உங்… உங்கள காதலிக்கிறேன் கரண்” என்று குண்டை தூக்கி அசால்ட்டாக அவன் தலையில் இறக்கினாள்.

அவள் சொன்னதை கேட்டவனுக்கு உச்சகட்ட அதிர்ச்சி. அவனுக்கு எதுவும் பேச தோன்றவில்லை. வசி ஒருப்போதும் இவள் தன்னை காதலிப்பாள் என்று சிறிதும் நினைக்கவில்லை.

“நான் உங்கள திட்டிருக்கேன், அவமானப்படுத்தி இருக்கேன். ஏன் உங்கள அடிக்க கூட செஞ்சிருக்கேன். எனக்கே தெரியல உங்க மீது எப்போ காதல் வந்துச்சின்னு. ஆனா இப்போ சொல்றேன் எனக்கு ஒரு பிரச்சனைன்னு வந்த போது என் மனசு உங்கள பத்தி மட்டும்தான்  நினைச்சிச்சு. இந்த ஊனும் உயிரும் உங்களுக்காக மட்டும்தான் இருக்கணும்னு தோனுச்சி. ஒரு இக்கட்டான நிலையில் எனக்கே தெரிய வந்தது நான் காதலிக்கிறது. என்னோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் உங்களை சைட் அடிக்கும்போது ஏன் அவ்வளவு கோபம் வந்துச்சின்னு இப்போதான் புரியுது. அது உங்களை பிடிக்காததுனால வந்த கோபமில்லை. உங்களை ரொம்ப பிடிச்சதுனால வந்த கோபம்னு. நான் உங்கள பத்தி தெரியாம தப்பா நடந்திருக்கலாம். ஆனா என்னோட காதல் உண்மையானது” என்று தன்னாலான விளக்கத்தை கொடுத்தாள் ஆதினி.

“நேரமாகுது வாங்க போகலாம், அங்க சார் உங்களை நினைச்சு கவலைப்பட்டுட்டு இருப்பாரு” என்று கூறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

எதுவும் பதில் சொல்லாமல் போகும் அவனையே பார்த்திருந்த ஆதினிக்கு கண்ணில் நீர் தேங்கியது. அழுதுவிடுமோ என்று பயந்து பின்னாடி சென்று அமர்ந்து கொண்டாள்.

அதனால்தான்  வீட்டிற்கு வந்தவுடன் தந்தையை அணைத்து அழுது அறைக்கு சென்றவள் அறையை விட்டு வெளிவரவே இல்லை. நங்கையின் அம்மு என்ற அழைப்பிற்கு பிறகே வெளி வந்தாள்.

பின் வீட்டில் கல்யாண விடயம் பேசவும் தான் அமைதி அவனுக்கு சரிப்பட்டு வராது என்று தோன்ற, துணிந்து காதல் அதிரடியில் இறங்கி விட்டாள் அந்த காதலி…

***                                          

அனைத்தையும் கூறி முடித்து அவள் முகத்தை பாவம் போல் பார்த்து, “இப்போதைக்கு எனக்கு இருக்கும் ஒரே வேலை உங்க நொண்ணனை காதலிக்க வச்சி கல்யாணத்தை நிறுத்துறதுதான்” என்று கூறி முன்னே நடந்தாள்.

பூங்குழலி ஆவென அவளை பார்த்து நின்றாள்.

“பார்த்தது போதும் வா போகலாம்” என்று விட்டு நகர்ந்தாள் ஆதினி. அவள் பின்னாடியே பூங்குழலியும் அந்த வயல் வரப்பு நடுவில் சென்றாள்.

“ஹே ஃப்ளவர்ஸ்” என்று இருவருக்கும் பின்னே இருந்து குரல் கொடுத்தான் அபிநந்தன்.

அவனின் அழைப்பில் இருபெண்களும் திரும்பி பார்த்து, ‘யாருடா நீ?’ என்று லுக்கு விட,

“ஹே ஃப்ளவர்ஸ் உங்க ரெண்டு பேருக்கும் என்னைய தெரியலையா” என்று உற்சாகமாக கேட்டான்.

“தெரியல” என்று இருவருமே ஒரே போல் இதழை பிதுக்கினார்கள்.

‘அடேய் என்னடா இது அபிக்கு வந்த சோதனை’ என்று தனக்குள் புலம்பியவன் தன்னவளை ஓரமாக ஓரக்கண்ணால் பார்த்தவாறே, ”நான் அபிநந்தன் சன் ஆஃப் சௌந்தர்யா பரணிதரன்” என்று சிரிப்போடு கூற, இருவருமே அவனின் பேச்சில் விரிந்த கண்ணை மேலும் விரித்தனர்.

“இப்போது எதுக்கு ரெண்டு பேரும் ஐ பால்ஸ வெளிய கொண்டு வர ட்ரை பண்றீங்க” என்று கிண்டலாக சொல்ல,

“சாரி அபி, எங்களுக்கு உண்மையாவே நீங்க யாருன்னு தெரியல அதான் சாரி” என்று ஆதினி விழியசைத்து சொன்னாள்.

“இட்ஸ் ஓகே ஃப்ளவர். இப்போ அடையாளம் தெரியலைன்னா என்ன இனி இங்க தான இருக்க போறேன்” என்றான்.

“அது சரி, நீங்க ஏன் என்னைய போய் ஃப்ளவர்ன்னு சொல்றீங்க? பூங்குழலிய சொன்னா கூட பரவால அதுல பூ வருதுன்னு வச்சிக்கலாம். ஆனா என்னைய பார்த்து ஏன் சொல்றீங்க” என்று ஆதினி புரியாமல் கேட்டாள்.

“அதுவா உன்னோட நேம்க்கு மீனீங் மலர்தான் . சோ அதான் ஃப்ளவர்னு கூப்பிட்டேன். ஏன் பிடிக்கலையா” என்று கேள்வியால் முடிக்க,

“ஹான்” விழித்தவள், யாரோ தங்களை ஊற்று நோக்குவது புரிந்து திரும்பி பார்க்க, அங்கே வசி நின்றிருந்ததை கண்டு, ”ஹோ கூப்பிடலாமே இதுல என்ன இருக்கு. சரி வாங்க வீட்டுக்கு போகலாம்” என்றாள் சிரிப்பை அடக்கிய குரலில்.

அதன் பின் மூவரும் வீட்டிற்கு நடந்தே சென்றனர்.

அபிநந்தன் வருகையை அறிந்து குடும்பமே வெளியே காத்திருக்க, அவர்களுடன் சேர்ந்து சௌந்தர்யாவும் மிளனியும் கூட நின்றனர்.

ஆதினியும் அபிநந்தனும் ஜோடியாய் வருவதை பார்த்து அந்த குடும்பத்தின் கண்கள் மகிழ்ச்சியில் மிளிர்ந்தது.

“உள்ள வாங்க” என்று வரவேற்றவள் உள்ளே செல்ல போக,

“நில்லு ஆதினி” என்று பேச்சியம்மாளின் குரலில் நின்றாள்.

“அபி இங்க வா பா” என்று ஆதினி பக்கத்தில் நிற்க வைக்க, பதறிப் போனாள் பேதையவள்.

“என்னைய எதுக்கு நிக்க வைக்கிறீங்க” என்று மூக்கு விரைக்க கேட்டாள்.

“வாய மூடுடி அபசகுணமா பேசாத” என்று அதட்டியவர், ”மருமகளே கொஞ்சம் ஆரத்தி தட்டை எடுத்துட்டு வா” என்று சத்தமிட,

“இதோ வரேன் அத்தை” என்று உள்ளே இருந்து வெளி வந்தார் சீதாலட்சுமி.

ஆரத்தி எடுக்க போகும்போது மிளனியும், ”நானு நானு” என்று அபி பக்கத்தில் நின்று கொண்டாள். ஆதினியும் சும்மா இல்லாமல் நண்பியை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள். அதன் பின்பே, சீதா ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றார்.

அபிநந்தன்தான் எப்போதும் போல் அனைவரிடமும் ஜாலியாக பேசி நேரத்தை கடத்தினான். அவனின் பேச்சில் அனைவருமே சந்தோஷமாக இருந்தனர்.

ஆனால் இதில் எதிலும் கலந்து கொள்ள முடியாமல் ஆதினியின் மனம் உளையாக கொதித்தது.

அதன் பின் காலை உணவை அனைவரும் சேர்ந்து முடித்து விட்டு, அபியையும் மிளனியையும் ரெஸ்ட் எடுக்க சொல்லி அனுப்பி விட்டு மதிய உணவை சமைக்க சென்று விட்டனர் சௌந்தர்யாவும் சீதாவும்.

வசிக்குதான் ஆதினி பூங்குழலியிடம் பேசியது யாராக இருக்கும் என்று யோசனையாகவே இருந்தது. அதுவும் அவன் கண்ணில் தெரிந்த ஏதோ ஒன்று அவன் யார் என்பதை பற்றி சிந்திக்க செய்தது.

***