அத்தியாயம் 09
மதியம் போல் சதாசிவம் தோப்பிற்கு வருகை தர, அதனை கண்ட வசீகரன் வேகமாக அவரை நோக்கி வந்தான்.
“வாங்க சார்” என்று அழைக்க,
“வேலை எல்லாம் எப்படி போகுது பா. எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடும்ல. ஏன்னா நான் தேங்காய் எண்ணெய் தயாரித்து மொத்த விற்பனை மட்டும்தான் செய்திட்டு இருந்தேன். இந்த மாதிரி கயிறு செய்றது எல்லாம் செஞ்சது இல்லை. அதான் கேக்குறேன் பா” என்று சரியாக நடந்து விடுமா என்ற பயத்துடனே கேட்டார் பெரியவர்.
“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல சார், எல்லா வேலையும் ஆரம்பிச்சாச்சி. சில பல எக்யூப்மெண்ட்ஸ் மட்டும்தான் வாங்கணும். அதுவும் வாங்கிட்டா நாம உங்களோட பேக்டரில ஃபிக்ஸ் பண்ணிடலாம் சார்” என்று நம்பிக்கை அளித்தான் வசீகரன்.
“எப்போப்பா மிஷின்ஸ்லாம் வாங்கணும். அதுக்கு எவ்வளோ ஆகும்னு சொன்னா அதுக்கான காசை பேங்க்ல இருந்து எடுக்க முடியும் அதான் கேக்குறேன் தம்பி”
“நாம ஆடர் கொடுத்தா போதும் சார், அவங்களே இங்க வந்து நமக்கு மெஷின்ஸ் எல்லாம் ஃபிக்ஸ் பண்ணி கொடுத்துட்டு பொய்டுவாங்க” என்க.
“அப்போ ஆர்டர் கொடுத்திடலாம் பா. ஆதினியோட நிச்சயத்தன்னைக்கே இதோட திறப்பு விழாவையும் வைக்கலாம்னு இருக்கேன்” என்று சொன்னார்.
“சரிங்க சார், நான் நாளைக்கே கிளம்பி போய் ஆர்டர் கொடுத்திட்டு வந்தறேன்” என்று சொல்லி இளநீர் கொண்டு வந்து கொடுத்தான். அதை குடித்து முடித்தவர் தோப்பை சுற்றி பார்த்து விட்டு கிளம்பினார்.
மதிய உணவிற்கு எல்லோரும் அமர்ந்து உணவு உண்டு கொண்டு இருக்க மெதுவாக அபியிடம் பேச்சை தொடங்கினார் சதாசிவம்.
“அபி உனக்கு ஆதினியை பிடிக்குமா?” என்று கேட்டு அவனை பார்த்தார்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆதினிக்கோ புரை ஏற தொடங்கியது. பக்கத்தில் இருந்த மிளனி அவளுக்கு தண்ணீர் எடுத்து கொடுக்க, அதனை வாங்கியவள் வேகவேகமாக குடித்து அவளின் பதற்றத்தை காண்பித்தாள்.
“பொறுமையா குடி ஆதி, எதுக்கு இந்த அவசரம் சொல்லு” என்று அவள் தலையைத் தட்டி கொடுத்தான் அபிநந்தன். அதனை கண்ட அனைவருக்கும் சந்தோஷமாகவே இருந்தது.
“சொல்லு அபி உனக்கு ஆதினியை பிடிச்சிருக்கா” என்று அழுத்தி கேட்க,
“யாருக்காவது ஆதினியை பிடிக்காமா போகுமா மாமா. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்” என்று மறைமுகமாக தன் விருப்பத்தை தெரிவித்தான் அபிநந்தன்.
“அப்போ சரிப்பா. அடுத்த வாரத்துல ஒரு நல்ல நாள் இருக்கு. அதுலையே உங்க நிச்சயதார்த்தத்தை வச்சிடலாம். என்ன எல்லாருக்கும் இதுக்கு சம்மதம் தானே” என்று அனைவரிடமும் சம்மதமும் கேட்க,
“இதுக்கு தானே அண்ணா நாங்க இங்க வந்ததே நீங்க நிச்சய வேலைய ஆரம்பிங்க ண்ணா” என்று சந்தோஷமாக சொன்னார்.
“சரிம்மா, மாப்பிள்ளைக்கு போன் போட்டு ஊருக்கு வர சொல்லிடுமா. ஆக வேண்டிய வேலைய எல்லாம் நான் பாத்துக்குறேன்” என்று சாப்பிட தொடங்கினார்.
அவசரமாக சாப்பிட்ட அபி ஆதினியை பார்த்து, ”நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். சீக்கிரமா சாப்பிட்டு மேல வா உனக்காக காத்திருக்கிறேன்” என்று சொல்லிச் சென்றான்.
அனைவரும் அதனை கேட்டும் கேட்காதது போல் இருந்து கொண்டனர்.
ஆதினியின் மூளைக்குள் அவன் எதற்கு வர சொல்லி இருப்பான் என்று குடைய தொடங்கியது. அதனாலே வேகவேகமாக சாப்பிட்டு மாடி ஏறினாள். இதனை கண்ட பெரியவர்கள் சிறியவர்களின் செயலில் நமட்டு சிரிப்பு ஒன்றை சிரித்தனர்.
வேகமாக அவன் இருந்த இடத்தை நோக்கி சென்றாள் ஆதினி. அங்கே அபி பால்கனியில் நின்று இயற்கையின் அழகினை இரசித்துக் கொண்டிருந்தான்.
அவனின் பக்கத்தில் சென்றவள், “அபி” என்று அழைக்க,
“ஹான் வா ஆதி, உன்கிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயம் இந்த கல்யாணத்த பத்தி பேசணும்” என்று பீடிகை போட்டான்.
“சொல்லு அபி, என்ன விஷயம் பேசணும்” என்று நடுக்கத்தை உள்ளுக்குள் வைத்து வெளியே தைரியமாக கேட்டாள்.
“நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன் ஆதி. அதை பத்தி பேசதான் உன்ன கூப்பிட்டது” என்று அவள் நடுக்கத்தை குறைக்க ஹீட்டர் போட்டது போல் இருந்தது அவனது இந்த சொல்.
அவனது பேச்சை கேட்டு நிம்மதியாக மூச்சி விட்டாள் பாவையவள்.
“அது யாருன்னு தெரிஞ்சிக்க உனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லையா ஆதி” என்று கேட்டு அவளை நோக்கினான்.
‘அது தெரிஞ்சிக்கிட்டு நான் என்ன செய்ய போறேன். போடா டேய், எனக்கு வேற வேலை இல்லை பாரு’ என்று மனதில் வசைப்பாடியவள் வெளியில், ”ஹான் சொல்லுங்க, யாரு அந்த பொண்ணு?” என்று கடமைக்காய் கேட்டு வைத்தாள்.
“அது… அது…” என்று இழுத்தவன் சிரிப்போடு, “அது வேற யாரும் இல்லை ஆதி நீதான்” என்று ஹீட்டரை போட்ட அவனே அதனை தூக்கியும் எரிந்து விட்டான்.
அவன் செயலில் நடுங்க நிறுத்திய தேகம் மேலும் நடுங்கத் தொடங்கியது.
“எ… என்ன சொல்ற நீ?” என்று அதிர்வோடு கேட்டாள் அவள்.
“ஆமாம் ஆதினி, நான் ஃப்ளவரைதான் லவ் பண்றேன்” என்று குண்டை அமைதியாகத் தூக்கி போட்டான்.
பின்னர் சிறிது நேரம் இருவரும் பேசிவிட்டே கீழே வந்தனர். போன போது இருந்த பதற்றம் கீழே வரும்போது சுத்தமாக இல்லை.
இவை அனைத்தையும் தூரத்திலிருந்து மிளனி பார்த்து சிரித்துக்கொண்டே வேறு புறம் சென்றாள்.
அடுத்த நாள் காலையிலே வசீகரன் வேலை விடயமாக கோவை வரைக்கும் சென்றிருந்தான்.
இது அறியாத ஆதினியோ அவனை தேடி தேடி தோய்ந்து போனாள்.
காதல் வந்தால் வலியும் சேர்ந்து வரும் போல. அவனுடன் இருந்த நேரத்தில் இவனை அனுப்ப வேண்டும் என்று யோசித்த ஆதினிக்கு, இப்போது அவன் இல்லாத ஒரு ஒரு நொடியும் கவலையாகவும் வேதனையாகவும் இருந்தது.
அவளால் சரியாக சொல்ல இயலவில்லை என்ன மாதிரியான நிலையில் அவள் இருக்கிறாள் என்று.
அபியின் குடும்பம் வந்ததில் இருந்தே நங்கை வீட்டிற்கு வருவது இல்லை. அவரை பார்க்காது பேசாது இருப்பது வேறு கஷ்டமாக இருந்தது பாவையவளுக்கு.
அடுத்தடுத்து நாட்கள் விரைந்தோட தொடங்க, நிச்சயத்திற்கு இன்னும் ஒரு நாள் விகிதமே இருந்தது.
மனதிற்குள் எப்படியாவது இந்த நிச்சயத்தை நிறுத்தியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது ஆதினிக்கு.
ஆனால் என்ன செய்து இந்நிச்சயத்தை நிறுத்துவது? எப்படி என்று தெரியாமல் தவித்து போனாள் ஆதினி. இதில் இவள் வசியை பார்த்தே ஒரு வாரமாகியது.
வேலை முடித்து ஊருக்கு திரும்பியவன் தோப்பே மனைவி என்பது போல் அங்கேயே இருந்து கொண்டான். அவனுக்காக துடிக்கும் ஜீவனை பற்றிய நிலையை அறிந்து கொள்ள விரும்பாமல்.
பரணிதரனால் நிச்சயத்தன்றுதான் வரமுடியும் என்பதால் அத்தனை வேலைகளும் அண்ணனும் தங்கையும் சேர்ந்தே செய்தனர்.
சௌந்தர்யா அவரது அறையில் அடுத்த நாளுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்த நேரம், சதாசிவம் உள்ளே வந்து, ”அம்மு” என்றழைக்க,
திரும்பி பார்த்தவர், ”வாங்க அண்ணா, எதுக்கு வெளியவே நிக்கிறீங்க? உங்களுக்கு ஏதாவதுவேணுமா” என்று கேட்டவாறே வேலை செய்தார்.
“அம்மு உன்னோட மாமியார் வீட்டுக்கு பத்திரிகை கொடுக்கலையாம்மா” என்று பொறுமையாக கேட்க,
“அண்ணா எனக்கு கொடுக்க ஆசைதான். ஆனா அவரு என்ன சொல்லுவாரோ தெரியலையே அண்ணா…
உங்களுக்கே தெரியும்ல அண்ணா, எங்க கல்யாணத்துக்கப்புறம் நாங்க அவங்களோட பேசுறதையே நிறுத்திட்டோம்னு. இப்போ வரைக்கும் அன்னைக்கு நடந்த அவமானத்தை அவரால தாங்கிக்க முடியல அண்ணா. எனக்கும் அவங்க குடும்பத்தோடு உறவு வச்சிக்கணும்னு தான் ஆசை படுறேன். ஆனா அவர மீறி நான் எதுவும் செய்ய முடியாது ண்ணா” என்று அவரது நிலையை கூறி விட்டார்.
“நீ ஒருமுறை மாப்பிள்ளை கிட்ட பேசி பாரும்மா. இது அவங்க பேரன் நிச்சயதார்த்தம்” என்க.
“சரி ண்ணா. நான் பேசி பாக்குறேன். ஆனா அவரு சம்மதிப்பாரான்னு தெரியல. சம்மதிச்சா உண்மையிலே அதிகமான சந்தோஷம் அடைவது நானாதான் இருப்பேன் ண்ணா” என்று எதையோ நினைத்து வெளியில் ஒற்றை சிரிப்போடு சொன்னார்.
“சரிடா நீ பேசிட்டு சொல்லு” என்று அறையை விட்டு வெறியேறி விட்டார்.
சதாசிவம் சென்றதும் நேரம் தாமதிக்காமல் கணவருக்கு அழைப்பு விடுத்தார் சௌந்தர்யா.
மனைவியின் அழைப்பை பார்த்ததும் எடுத்த பரணி, “சொல்லும்மா, அங்க வேலை எல்லாம் நல்ல படியா போகுதா. என்னால அங்க இருக்க முடியல” என்று வருந்தி கேட்க,
“அதெல்லாம் நல்லா போகுதுங்க. நான் இப்போ எதுக்கு கால் பண்ணேண்னா” என்று இழுக்க,
“எதுக்கு இழுக்கிற நேரா விஷயத்தை சொல்லு” என்றார்.
தைரியப்படுத்திக் கொண்டு, “நாம அபியோட நிச்சயத்துக்கு உங்க வீட்டு ஆளுங்களை கூப்பிடலாமாங்க” என்று வேகமாக கேட்டு முடித்தார்.
சௌந்தர்யா சொன்னதில் பரணிதரன் அப்படியே அமைதியாகி விட்டார். அவர் கண்ணில் அவர் பார்த்த அசிங்கங்களும் அவமானங்களும் இப்போது நடந்ததாகவே தோன்ற கோபம் புசுபுசுவென வந்து ஆத்திரமூட்டியது.
“எனக்கு எந்த ஒரு குடும்பமும் இல்லை” என்றார் விட்டேற்றியாக.
“அப்படி சொல்லாதீங்க, என்னதான் அவங்க தப்பு பண்ணி இருந்தாலும் இந்த நேரத்துல கூட அவங்களை மன்னிக்காம இருக்கிறது நல்லது இல்லைங்க. ப்ளீஸ்ங்க நம்ம புள்ள அபிக்கு அவங்க தாத்தா பாட்டி ஆசிர்வாதம் கண்டிப்பா வேணும்ங்க” என்று மனைவி எடுத்து சொல்ல, சிறிது சிறிதாக புரிந்து கொள்ள முனைந்தார் பரணிதரன்.
“சரி போய் நிச்சயத்துக்கு கூப்பிடு. ஆனா அவங்க கூட சொந்தம் கொண்டாடலாம்னு எல்லாம் நினைக்காத” என்று பல அறிவுரையோடு அங்கே செல்ல அனுமதித்தார்.
அவர் அனுமதித்ததே ஒருவிதமான நிம்மதியை அவருக்கு கொடுக்க, நேரத்தை கடத்த விரும்பாமல் அன்று மாலையே அபியையும் ஆதினியையும் அழைத்துக் கொண்டு பத்திரிக்கை வைக்க சென்று விட்டார்.
அபிதான், ”மாம் நாம இப்போ எங்க போறோம். இப்படி அவசர அவசரமா என்னையும் ஆதியையும் கிளப்பி எங்கேயோ கூட்டிட்டு போறீங்க” என்று கடுப்புடனே பேசினான்.
“வாய மூடிட்டு கொஞ்சம் வாடா. தொண தொணன்னு பேசிக்கிட்டு. இங்க பாரு என்னோட மருமக எவ்வளவு அமைதியா வரா நீயும்தான் இருக்கியே” என்று சலித்துக் கொண்டார் சௌந்தர்யா.
“நான் ஒரு டூ லைன்ஸ்ல தான கொஸ்டின் கேட்டேன். ஆனா நீங்க என்னைய பேச வேணாம்னு சொல்லி இவ்வளோ லென்தா பதில் சொல்றீங்க?” முகத்தை திருப்பி கொண்டு வேடிக்கை பார்க்கலானான்.
இதற்கும் தனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை என்பது போல் வேடிக்கை பார்த்து வந்தாள் ஆதினி.
வண்டி கோட்டையூருக்குள் நுழைந்ததுமே சௌந்தர்யாவிற்கு நெஞ்சமெல்லாம் படபடத்தது. இத்தனை ஆண்டுகள் யாரை காண வேண்டும் என்று எண்ணி இருந்தாரோ அவரை இன்று காணப்போகும் ஆசையில் லேசாக வேர்க்க தொடங்கியது.
“மாம் இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?” என்று கேட்ட மகனை பார்த்து, “வந்துட்டோம்டா மகனே” என்று ஒரு சிரிப்போடு பதில் சொன்னார்.
அவர் சொல்லி முடிக்கவும் அந்த வண்டி கோட்டையூர் என்ற பெயருக்கு ஏற்றது போலவே கோட்டை போல் இருந்த வீட்டிற்குள் நுழைந்தது.
“வாவ் மாம்! இந்த ஹௌஸ் பார்க்க ஏதோ பேலஸ் மாதிரி இருக்கு” என்று ஆச்சரியத்தோடு சொன்னான்.
ஆனால் ஆதினிக்கோ அத்தனை பெரிய வீடு தன் கவலையோடு ஒப்பிட்டு பார்க்கும் போது சிறிதாகவே தெரிந்தது.
“அமைதியா கீழ இறங்குடா” என்றவர், ”வாம்மா ஆதினி” என்று அவளுடன் சேர்ந்து இறங்கினார்.
இறங்கிய அவருக்கு எப்படி உள்ளே செல்வது என்று தயங்கி வெளியவே அமைதியாய் நிற்க,
அந்த அமைதியை கலைக்கும் விதமாக, “மாம் இட்ஸ் சோ ஹாட் ப்ளீஸ் வாங்க நாம உள்ள போகலாம். ஆமா இது யாரு வீடு மாம் இவளோ பெருசா இருக்கு” என்று கையை காத்தாடி போல் பயன்படுத்திய படியே தன் சந்தேகத்தைக் கேட்டான்.
அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமலும் தெரியாமலும் விழி பிதுங்கி நின்றார் அந்த அன்னை.
இவனின் சத்தம் கேட்டு அந்த வீட்டின் பெரியவரான ஒருவர் வந்து வெளியே பார்த்தார்.
“யாருப்பா வேணும் உங்களுக்கு, பாக்க பவுசா இருக்கீங்க என்ன வேணும்” என்ற படியே குச்சி வைத்து நடந்து வந்தார் அந்த வீட்டின் வயதான பெண்மணி.
அந்த வயதான பெண்மணியை பார்த்த சௌந்தர்யாவிற்கு கண்கள் இரண்டும் பனித்தன.
“பாட்டி” என்று கலங்கிய குரலோடு அழைத்தார் சௌந்தர்யா.
“என்னது பாட்டியா?” என்பது போல் பார்வை பார்த்து வைத்தான் அபி.
“பாட்டி நான்… நான் சௌந்தர்யா வந்துருக்கேன்” என்று சொல்ல,
“யாரும்மா நீ, உனக்கு என்ன வேணும்” என்று காதில் விழாததால் மீண்டும் கேட்டார். அவரது சத்தத்தை கேட்டு வீட்டிலிருந்த மற்றைய நபர்கள் எல்லாம் வருகை தந்தனர்.
“அம்மா அங்க யாருக்கிட்ட பேசுறீங்க?” என்று கேட்டபடி அறுபதை எட்டிய பெண்மணி வர,
“யாரோ வந்துருக்காங்கடா. யாருன்னு கேட்டா வாயவே திறக்க மாட்டேங்கிறாவ” என்று வீட்டின் மூத்தவர் சொல்ல, யாரா இருக்கும் என்று யோசித்தபடியே வெளியே வந்து பார்த்தவர் அதிர்ச்சியில் சிலை போல் நின்று விட்டார்.
“எதுக்குடி இப்படி இடிச்சு வச்ச பிள்ளையார் போல நிக்கிறவ?” என்று மூத்தவர் சத்தம் போட,
“ம்மா யாரு வந்துருக்காங்கன்னு பாரும்மா” என்று கண்கள் கலங்கியவராய் பதில் பேசினார்.
“ஹான் என்னதடி சொல்லுற. அந்த செவுட்டு மிசின நான் மாட்டல. அதுனால சத்தமா பேசு” என்று கத்த,
“ஏங்க யாரு வந்துருக்காங்கன்னு வெளிய வந்து பாருங்க. அண்ணா நீயும் சீக்கிரமா வா ண்ணா” என்று சந்தோஷத்தில் ஆர்பரித்தார்.
“யாரும்மா வந்துருக்கா?” என்றபடியே அவரின் கணவர் வெளி வர, அதன் பின்னே அவரின் அண்ணனும் வருகை தந்தார்.
“ஏங்க அங்க பாருங்க யாரு வந்துருக்கான்னு” என்று கை காட்டிட,
“பாருங்க நம்ம மகாலட்சுமி வந்துருக்கா. இத்தனை வருஷம் கழிச்சு இன்னைக்கு தாங்க நமக்கு விடிவு காலம் வந்திருக்கு” என்று அழுதிட,
“அத்தை… மாமா…” என்று சொல்லி கண்ணீர் சிந்தினார் சௌந்தர்யா.
அங்கே நடப்பதை பேவென பார்த்தது அபியும் ஆதினியும் மட்டும்தான் . புரியாத மொழியில் பார்க்கின்ற அழுகாச்சி படம் போல் இருந்தது இருவருக்கும்.
“உனக்கு இப்போதான் எங்களை பாக்க வரணும்னு தோனுச்சாம்மா” என்று மூக்கை உறிஞ்ச,
“என்னைய மன்னிச்சிடுங்க அத்தை” என்று அவர் காலிலே விழுந்து விட்டார் சௌந்தர்யா.
“எழுந்திரிம்மா நீ முதல்ல, நாங்க பண்ண தப்புக்குதான் இத்தனை வருஷமா தண்டனை அனுபவச்சிட்டு இருக்கோம்” என்றவர், ”முதல்ல உள்ள வாம்மா” என்று உள்ளே அழைத்துச் சென்றார்.
அனைவரது நலன்களையும் விசாரித்து கொண்டவர்கள், சௌந்தர்யாவிடம், “பரணி எங்கம்மா அவன் வரலையா? இன்னுமா அவன் எங்க மேல கோபமா இருக்கான்? ஆமா இவங்க ரெண்டு பேரும் உன்னோட பசங்களா” என்று இருவரையும் சுட்டிக் காட்டி கேட்க,
“அத்தை அவருக்கு கொஞ்சம் வேலை இருந்தது அத்த. அதான் எங்களை மட்டும் அனுப்பி வச்சாரு”
“அப்புறம் இவன் என்னோட மூத்த பையன் பேரு அபிநந்தன் அத்த. இவ பேரு ஆதினி என்னோட வருங்கால மருமக. அப்புறம் எனக்கு ஒரு பொண்ணு இருக்கா, அவ பேரு மிளனி. இரண்டு பேருமே அவங்க அப்பா மாதிரி டாக்டர்ஸ்” என்று பதில் கூறினார் சௌந்தர்யா.
“மாம் இவங்களாம் யாரு உங்க ரீலேட்டிவ்ஸா” என்று அவர் காதில் கிசுகிசுக்க,
“பேரன் என்ன கேக்குறாப்புள” என்று அந்த பெரியவர் கேட்டார்.
“அது அவனுக்கு உங்க யாரையும் தெரியாதுல மாமா, அதான் நீங்க யாருன்னு கேக்குறான்” என்றவர் ஒருவொருத்தராய் அறிமுகப்படுத்தினார்.
“இவங்க நாச்சியார் பாட்டி உங்க அப்பாவோட பாட்டி. இவங்க கிருஷ்ணவேணி, இவரு சீனிவாசன், உங்க டாடியோட அப்பா அம்மா. அப்புறம் இவரு ராஜவேல் உங்க அப்பாவோட மாமா” என்று அவ்வீட்டில் இருந்தவர்களை அறிமுகப்படுத்தியவரின் கண்கள் யாரையோ தேடியது.
பின் அந்நால்வரும் அபி மற்றும் ஆதினியை ஆசை தீர கொஞ்சி தீர்த்தனர்.
இரவு உணவை அங்கேயே முடித்துக்கொண்டு பத்திரிகை கொடுத்து, “நாளான்னைக்கு நீங்க கண்டிப்பா உங்க பேரன் நிச்சயதார்த்ததுக்கு வரணும் அத்த, மாமா” என்று சொன்னார் சௌந்தர்யா.
அதேநேரத்தில் ஆதினியும் அபியும் சேர்ந்து அங்கிருந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த சமயம், அங்கே மாலை போட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஆதினி அதே இடத்தில் மயங்கி சரிந்தாள்.
அவள் மயங்கியதும் தாங்கி பிடித்த அபி, “அம்மா…” என்று கத்தினான்.
அவனின் சத்தத்தில் பேசிக்கொண்டிருந்த ஐவரும் அவனருகே வந்து பதறி போயினர்.
“அபி ஆதினிக்கு என்ன ஆச்சி” என்று பதறினார் சௌந்தர்யா.
“தெரியலம்மா தீடிருன்னு மயங்கி விழுந்துட்டா. சீக்கிரமா தண்ணி கொண்டு வாங்க” என்று கத்த,
வீட்டு வேலையாட்கள் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, அவள் முகத்தில் தண்ணீர் தெளிக்க மெதுவாக கண் விழித்தாள் ஆதினி.
கண் விழித்து பார்த்தவள் அந்த புகைபடத்தையே வெறித்தாள்.
பின்பு இருவரையும் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தாள் ஆதினி.