நின் பார்வையில்

நின் பார்வையில்…!

 

செவ்வரலி மலர்கள் கொத்தாக அலர்ந்து தன் காம்புகளின் சந்தத்தில் அசைந்தாட, அவ் புஷ்பங்களையும் அவற்றினை சுமந்த விருட்சங்களின் வேர்களைத் தன்னுள் புதைத்த மண்ணையும் குளிர்விக்கும் வண்ணம் வானதேவன் தன் பூமிதேவியின் மீது பன்னீர்களைத் தூவி அர்ச்சித்துக் கொண்டிருந்தான்.

நீள்வட்ட திவளைகள் இலைகளில் ஊஞ்சலாட, சில்லென்ற சாரக்காற்று அவற்றினை ஆட்டுவித்துக் கொண்டிருந்தது. இலைகளின் மறைவுகளினை சற்று விலக்க, அங்கு ஓங்கியுயர்ந்த இரண்டடுக்கு மாளிகையொன்று மழைநீரில் குளித்துக்கொண்டிருந்தது.

மெல்லத் தவழும் மாருதம், தன் கரங்களை நீட்டி மாளிகையின் பால்கனித் தடுப்புச் சுவரில் எம்பிக்குதித்து தனது ஆளுமையை இல்லத்தில் நுழைக்கப்பார்க்க கண்ணாடிக் கதவுகள் தடைவிதிக்க தலை கவிழ்ந்து திரும்ப நினைத்த மந்தமாருதம், அறையின் உட்பக்கம் ஒரு மங்கை முகத்தினை ஏறிட்டு அசையமறுத்து கண்ணாடிக் கதவைத் தட்டி, முட்டி சமரிட்டுக் கொண்டிருக்க,

பூட்டப்பட்ட அறையினுள்ளே, மாருதத்தை மதிமயங்கவைத்த மங்கையவளோ தன் சரிபாதி சமர்மறவனுடன் சண்டையிட்ட களைப்பில் நீள் வட்ட முகத்தை நித்திரையில் தலையணைக்குள் புதைத்திருந்தாள். 

‘மெல்ல நெருங்கிடும் போது நீ தூரப் போகிறாய்’ 

நா.முத்துக்குமாரின் கவிவரிகள் காதலாக அறையை நிரப்ப, துயில் விழித்த துகிராவோ, கைகளைக் மஞ்சத்தில் துளாவி தனது அழைப்பேசியை எடுத்துக் காதில் அழுத்திப் பிடிக்கும் போதே கன்னத்தில் சிறு வலியை உணர்ந்து முகத்தை சுருக்கிக் கொண்டவள்,

“ஹலோ!” பேச்சை ஆரம்பிக்கப்போகும் முன் அழைப்பு இலக்கத்தை சரிபார்த்தாள். தொடுதிரையில் சிகப்பு நிற இதயக்குறியீட்டுக்கு அருகில், ‘ஹேய் சண்டைக்காரா’ என்று பதிவுசெய்யப்பட்டிருந்த தனது கணவனின் பெயரைப் பார்த்தவள், கட்டிலிளிருந்து எழுந்து நின்று இரண்டடி நடந்துவிட்டு, அஷ்டகோணத்தில் இதழினை வளைத்துவிட்டு பேசத்தொடங்கினாள்.

“சமர்! இப்போ என்ன..” அவள் முடிக்கும் முன்பே, அந்நிய ஆடவனொருவனின் குரல் அவசர ஊர்தியின் சத்தத்திற்கு மத்தியில் ஓங்கி ஒலித்தது. “ஹலோ மேம், நான் பூந்தமல்லி சிக்னல் கிட்ட இருந்து பேசுறேன். டீ.என் **** நம்பர் பி.எம்.டபிள்யு கார் உங்களோடதா?” படபடவென பொறிந்தான்.

“எ..ஸ், அது என் ஹஸ்..பன்ட்” வார்த்தைகள் தந்தியடிக்க, மூச்சுக்கூட சரியாக விடமுடியாமல் துகிராவிடம் ஒரு பதட்டம் ஒட்டிக்கொள்ள, சிரமமாக அவள் உச்சரித்து முடிக்கும் முன்னமே, மற்றுமொரு ஆடவன் கூற்று அவளின் நெஞ்சைக் கூரிய வாள் கொண்டு வெட்டியது.

“தினதந்தி பத்திரிகை தானே? எஸ் எஸ். ஐடி புரூப் கிடைச்சது. பெயர் சமர்மறவன். எஸ்.எம்.எல் குரூப் ஆப் கம்பனி எம்டி. இப்போதான் டேங்கர் லாரி மோதிடிச்சு. ஸ்பார்ட் அவுட் ஆகிட்டாரு. ஃபேமிலிக்கு காஃல் பண்ணத்தான் எமர்ஜன்சி காஃல் லிஸ்ட்ல காண்ஸ்டபில் டிரை பண்றாரு…” தொலைபேசியின் அருகில் நின்று போலீஸ் அதிகாரி பத்திரிகைக்கு தகவல் வழங்க கத்திக் கொண்டிருந்தது, துகிராவின் செவிகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல தகித்துக் கொண்டு இறங்கியது.

‘பட்’ என தனது உயர்ரக அழைப்பேசியை நிலத்தில் போட்டவள், சிலையாக சமைந்து மஞ்சத்தில் ‘பொத்’ என்று நிலைதடுமாறி விழுந்தாள். பூமி தன் காலடியில் நழுவுகிறதா? அல்லது தனது உயிரே உடலைக் கிழித்துக் கொண்டு துரந்து செல்கின்றதா? யாதும் அவள் அறியாள். 

கண்கள் பொலபொலவென கண்ணீரை இரைக்க, நொடிப்பொழுதில் இமைகள் தடித்து, வீங்கியெழுந்தது. துடிக்கும் இதயத்தின் சப்தங்கள் அவளின் காதுகளிலே மத்தளம் கொட்டுமளவு புலப்படவும் நடுங்கி, ஒடுங்கிப்போனாள்.

திரையாக படிந்த உவர்நீரினால், விழிகள் செயலிழந்தது போல மங்களாகிக் கிடக்க, துகிராவின் முன் புகையுருவம் ஒன்று மிதந்து வந்து நின்றது.

“துகிரா” மென்மைனா ஆனால் அழுத்தமான குரலில் அவ்வுருவம் அழைத்தது. சட்டென நிமிர்ந்த பெண்ணவளோ, “யார்? யாரு நீ” என அவ்வுருவத்தை ஏறிட்டாள். 

“நல்லாப் பாரு  துகிரா. நான் யாருனு தெரியல?” மீண்டும் உருவம் பேசவே, கண்களைத் துடைத்துக் கொண்டு உருத்த விழித்தவளின் முன்பாக மண்டியிட்டது அவ்வுருவம்.

சரியாக பகுத்தறிய முடியாதவொரு தோற்றம். ஆனால் எங்கோ எப்போதோ அவ்வுருவத்துடன் உற்ற தோழியாக பழகிய நியாபகமும் அவள் அகத்தை அரித்தது. “யாருங்க நீங்க” விம்மி வடிந்த கரகரத்த குரலில் துகிரா வினவவும், “நான் கடவுள் துகிரா” என்றது.

“வாட்? என்..ன குழப்பாதே!” சிந்தனை ரேகைகள் முகத்திலோட அவள் படபடக்கவும். “உன்னை நான் ஏன் குழப்பனும் துகிரா. நான் கடவுள் தான் உனக்குள்ளே இருக்குற கடவுள். தெளிவாவே சொல்லட்டுமா? நான் கடவுள் ஆனா கடவுள் மட்டும் கிடையாது. நான் அரக்கியும் கூடத்தான். நீ என்னை மீறி உன்னக்கான கெட்ட பாதையில செல்லும்போது நான் அரக்கியா உருமாறுகிறேன்.

ஆனா நூற்றிலே தொன்னூற்று ஒன்பது பங்கு நான் கடவுளா மாத்திரம் தான் உனக்குள்ளே வாழ்ந்துட்டு இருக்கிறேன். நீ தப்பு பண்ணும் போது உன்னைத் தடுக்குற நான் எப்போவும் உனக்கு கடவுள் தானே?” இளநகையொன்றை உதட்டில் தழுவவிட்ட அவ்வுருத்தை மருண்டு பார்த்தாள் துகிரா.

“ஐயோ! ஏன் என்னை இம்சிக்குற நானே என் சமர்..” அவள் தனது தலையை அழுத்திப்பிடித்து கதர ஆரம்பிக்கவும், “ஹா, ஹா” என்று சத்தமாக சிரித்தது அவ்வுருவம்.

“உன் சமர்! உன் சமர் செத்துப் போய் ரொம்ப நேரமாச்சு” விடாமல் சிரிக்கவும் துகிராவோ அதனை எரித்துவிடுவது போல நோக்கினாள். “என்ன முறைப்பு? என்ன முறைப்புனு கேட்குறேன். நீ தான் எல்லாத்துக்கும் காரணம் துகிரா” மண்டியிட்ட உருவம் அவளின் தோள்பட்டையை வலிக்கும் படி பிடித்து கத்த ஆரம்பித்தது. 

துகிராவிற்கோ வலி பொறுக்கமாட்டாமல் இருந்தாளும், அவளின் மன வேதனைக்கு இவ்வலியெல்லாம் தூசு போலவே உணர்ந்தவள், அவ்வறையின் முழுச் சுவரின் பாதியை மறைத்தவண்ணமிருந்த அவளின் திருமணப்புகைப்படத்தை வெறித்தாள்.

தலைசிறந்த தயாரிப்பு நிறுவனமொன்றின் குடும்பத்தின் உரிமையாளர்களின் ஒற்றை வாரிசு சமர்மறவன். கடைசித்தலைமுறையான அவனே இப்போது அவ் நிறுவனத்தின் ஏகபோக உரிமையாளன். சமூகத்தின் மத்தியில் முக்கிய அந்தஸ்த்திலிருப்பவன் கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு ஊர் ஊராக வியாரத்துக்காக ஓடிக்கொண்டிருக்க அவனின் வாழ்கை ஓட்டத்துடன் இணைந்து கொண்டவள் தான் துகிரா. 

பெரும் செல்வந்தக் குடும்பத்தில் அவளும் ஒற்றை வாரிசே! குழந்தையிலிருந்து குமரியாகும் வரை அனைவராலும் தாங்கப்பட்டவள், திருமணத்தின் பின் தனது கணவனால் தாங்கப்பட வேண்டும் என்ற ஆசையிலேயே இவனின் கரங்களை பிடித்துக்கொள்ள துணிந்தாள்.

இருவீட்டாராலும் பேசி நிச்சயிக்கப்பட்டு, திருமணமும் நிகழ்தி வைக்கப்பட்டது. திருமணத்திற்கு முன், வியாபாரம் எனும் ஒற்றை வார்த்தை துகிராவின் நாயகனை அவளுடனான நேரங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாமல் செய்துவிட்டாலும், 

அவனவள், அவளவன் என்ற பந்தத்தின் பின்னான நாட்களில் இருவரும் கடலினைத் தேடி உடல் விரிக்கும் நதியாக, காதல் சொப்பனத்தில் முப்பொழுதும் நீந்திச் சென்றனர். 

நாட்கள் சிட்டாக பறந்து மூன்று மாதந்தங்களைக் கடந்த நிலையில் சிறிய சிறிய துகளாக ஊடல்கள் இருவருக்குள்ளும் தகனிக்க ஆரம்பிக்க, இன்று நான்கு மாதங்களைக் கடந்த நிலையில் நேற்று இரவு காந்தப்புயலொன்று எழுச்சி பெற்று தலைவிரித்தாடியது. 

நெடுமரமென வளர்ந்த சமர்மறவனின் குணமும் பக்ககிளைகள் விட்டு வளர்ந்த துகிராவின் குணமும் ஒன்றுக்கொன்று நேர்மாறானதே. கண் அசைவிலேயே தனது ஊழியர்களைக் கட்டியாளும் அவனுக்கு அதிகமாக தனது உள்ளுணர்வுகளை வெளிக்காட்டத் தெரிந்திருக்கவில்லை.

வார்தையாடலை தனது இரட்டைச் சகோதரியாக ஒட்டிவாழும் துகிராவோ, மொத்த உணர்வுக்குவியலினியும் பட்டென்று உடைத்து விடுபவளாகவிருந்தும்,

அவர்களின் திருமணத்தின் போது கண் கரித்துக்கொண்டிருந்தவளின் துளி நீரினை, அவளின் கருமணிகளுக்குள் தன் கருமணிகளை சிறைசெய்த சமர்மறவன் தன் கட்டை விரலால் தட்டித் துடைத்துவிட்டவன் சபையோரின ஆச்சர்ய முகத்தைக் கூட பொருட்படுத்தாமல் உச்சி முகர்ந்தது புகைப்படமாக சுவரில் தொங்கிக் கொண்டிருந்த போதும்,

அவன் தனக்கு எந்தவித நியாயமும் செய்யவில்லையென அவனையே சாடியது அவளின் பெரும் தவறே.

நேற்று அந்தி சாய்ந்த வேளையிலிருந்து, அவனுக்காக சமைத்து வைத்து துகிரா காத்திருக்க நள்ளிரவுக்கு மேல் வீட்டிற்கு வந்தவனோ, தான் சாப்பிட்டதாகவும் அவளை உண்ணுமாறும் கூறினான்.

அவனுக்காக காத்திருந்தவளுக்காே அவனின் பதில் உவர்பாகவிருக்க, “என்ன தான்நினைச்சிட்டிருக்க சமர்! நான் உனக்கு என்ன வேலைக்காரியா? நீ வரும் வரை காத்திட்டிருந்தா, நீ என்ன பதில் சொல்லுற?

ராத்திரி பன்னிரண்டு மணிக்கு வந்தததுமில்லாம, சாப்புட்டனு சொல்லுற. இது என்ன வீடா இல்லை சத்திரமா? உன் பாட்டுக்கு வர உன் பாட்டுக்கு கிளம்புற. அத்தை மாமா கூட இல்லை, தனியா நான் ஒருத்தி இங்க இருந்தா என்ன செத்தா என்னனு நினைச்சியா? 

உனக்கு என்ன நான் செத்ததாலும் சந்தோசப்படுவதானே. உனக்கு ராத்திரிக்கு மட்டும் தானே நா…” அவளின் கூச்சல் அடங்கும் முன், முதல் முறையாக அவனின் வன்கரங்கள் அவளின் கன்னத்தைப் பதம் பார்த்தது.

“ஏய்! பார்த்து பேசு. நீ பேசுறது இந்த சமர்மறவன் பொண்டாட்டி துகிரா பத்தி. இன்னொரு வார்த்தை பேசின” கழுத்து நரம்புகள் புடைக்க பேசவும்,

“ஹெவ் டேர் யூ ஆர்? என்னை அடிச்சிட்டல. என் வீ்ட்டுக்கு நான் போறேன்.” அடக்கமாட்டாமல் கூவினாள்.

“ஷட் அப். நானே போய் தொலையுறேன்” காரின் சாவியை எடுத்தவன் உடையைக் கூட மாற்றாமல் விடுவிடு வென வெளியேரினான்.

அவன் சென்ற பிறகும் ஏதோ கத்தியவள், மஞ்சத்தில் சென்று விழுந்தவள் எழுந்தது என்னவோ காலையில் கேட்ட தொலைபேசி அழைப்பின் சிணுங்களில் தான்.

“என்ன? போட்டோவையே வெறிச்சுப் பார்குற துகிரா? உங்க கல்யாணத்தப்போ எத்தனை பேருக்கு முன்னாடி அந்த லூசு பையன் சமர் கிஸ் பண்ணினான். அதை வெட்கமில்லாம இங்க ஃபிரேம் பண்ணி மாட்டி வேற வைச்சிருக்கிறான்.” உருவம் ஏளனமாக கலகலக்கவும்.

“யார லூசுனு சொல்லுற. என் சமர ஒரு வார்த்தை சொன்னாக் கொண்ணுடுவேன் பார்த்துக்கோ” ஒற்றை விரல் நீட்டி அதை மிரட்டவும்.

“அட போமா, உனக்குத் தான் அவனைப் பிடிக்காதுல்ல? தினத்துக்கும் சண்டை தானே போட்ட?” அது வினவ,

“இல்லியே. எனக்கு சமர்தான் உயிரு, அவன் கூட சண்டை போட்டேன் தான் இல்லைனு சொல்லல. ஆனா அவனும் தானே என்கூட சண்டை போட்டான். என்னை அடிச்சான். வீட்டை விட்டு போனு கூட சொன்னான். இருந்தும் அவன் எனக்கு வேணுமே. என் சண்டைக்காரன் இல்லாம நான் எப்படி…” மழலையாக மிளிற்றினாள்.

“பாப்பா மாதிரி பேசாத துகிரா. நீ தான் வாயை விட்ட. உன்னை நீயே தப்பா பேசினா. ராத்திரிக்கு மட்டும் தான் நீ அவனுக்குத் தேவைனு சொன்ன. சமர் என்ன அப்படிப்பட்ட பையனா அப்போ?” அது எகத்தாளமாய் கேட்டது.

“நான்…நான் தப்பு பண்ணிட்டேன்ல. என் சமர், என் சண்டைக்காரன் ரொம்ப ரொம்ப நல்ல பையன் தெரியுமா? உனக்கு ஒன்னு சொல்லவா? கல்யாணமான புதுசுல கூட, ஒரு மனைவியா என்னை நடத்தாம குழந்தை மாதிரித்தான் பாத்துக்கிட்டான். என் சம்மதமில்லாம அவன் விரல் கூட என்னைத் தொட்டது  கிடையாது. ஒரு ஏவல்ளாலாக என் கண் அசைவுக்கு ஏற்ற மாதிரி என்னை நடத்தினான்.

சில சமயம் நானாக போய் அவன் கிட்ட ஒட்டிக்கிட்டு அவன் கையை அழுத்தப் பிடிக்கும் வரை காத்திருப்பான். அவனோட தேடல்கூட எனக்கான சம்மதமில்லாம நிகழ்த்திக்க விரும்ப மாட்டான். ஏன் இது வரை ஐ லவ் யூ னு கூட சொல்லிக் கிட்டது கிடையாது. ஆனா அவன் பார்வையே தினத்திக்கும் என் மீதான காதலைக் காட்டுமே. ஹீ இஸ் பர்ஃபெக்ட் மேன். மை ஒன் அண்ட் ஒன்லி மேன். எஸ் மை மேன்” அவனினை நினைக்கையிலேயே அகத்தில் அவளுக்கு பெருமை திரிவிட்டு எழுந்தது.

“இப்போ உணர்ந்து என்னை நடக்க போகுது துகிரா. கோபத்தில வரும் வார்த்தைங்க முள்ளு மாதிரி. அது பேசுரவங்களையும் குத்தும் கேட்குறவங்களையும் குத்தும். சரி அவனை உனக்கு பிடிக்கும்னு சொல்லுரியே, அப்போ ஏன் நீ பேசினத்துக்கு மன்னிப்பு கேட்கலை?” சாந்தமாக உருவம் கேட்டது.

“அது, அவன் தானே என்னை வீட்டை விட்டு போனு சொன்னான்” உதட்டை பிதுக்கினாள், “ஹாஹா அவன் உன்னை போக சொல்லல, நீ போகக் கூடாதுனு அவன் போயிட்டான். போய் தொலைனு சொல்லவில்லையே? நான் போய் தொலையுறன்னு தானே சொன்னான்” சிரிக்கவும்,

“கோபத்துல எனக்கு காது கூடவா கேட்காம போயிடுச்சு. அவன் எனக்கு வேணும். இப்போவே, இந்த நிமிசமே எனக்கு அவன் வேணும். என் சமர் எனக்கு வேணும்” அழுது வெடித்தாள் துகிரா.

“இப்போ சொல்லு, ஏன் நீ அவன் கிட்ட மன்னிப்பு கேட்கல?” தன்மையாக கேட்கவும்,

“ஏன்னா என் ஈகோ, என் ஈகோ என்னை கேட்க விடலை. அவனே என் கிட்ட சாரி கேட்கனும்னு எதிர்பார்த்தேன்” என கத்தினாள்.

“துகிரா! மக்கு துகிரா! நீங்க இரண்டு பேரும் காந்தத்தின் இரு முனைங்க போலத்தான். உன் சமர் எதையுமே வெளிப்படுத்த மாட்டான். ஆனா நீ அப்படிக் கிடையாது. உதாரணமா, ஒரு பனை மரத்துல ஒட்டி வாழுர ஆலமரம் மாதிரித்தான் உங்க வாழ்க்கை. அவனுக்குள்ள நீயும் உனக்குள்ள அவனும் பின்னிப் பிணைந்து வாழ்ந்து வளரனும். அவனால பேச முடியாத இடத்துல நீ பேசு, உனக்காக அவன் உன் பேச்சுக்களை காது கொடுத்துக் கேட்பான்.

நீ சொன்னது போன்று காதல் மூன்று வார்த்தையில் வெளிப்படுத்தப்படுகின்ற ஒரு மாயை கிடையாது. அது ஒரு உணர்வு, உங்க இரண்டு பேர்க்குமான உணர்வு. ஆண் பெண் எனும் பாலினத்தை தான்டி உணர்த்தப்பட வேண்டியது. இங்க குறைகளே இல்லாத எந்த மனிதனும் கிடையாது. 

உன்னோட குறை எதிர்பார்ப்புனா, சமரோட குறை வெளிக்காட்டிக்காம இருக்குறது. அவன் கத்தி சொன்னா என்ன? இல்லை கட்டியணைச்சு சொன்னா என்ன? அவன் உனக்கானவன் தான், அதே நேரம் குறைகளைக் கடந்து உன்னை உனக்காக மட்டும் நேசிக்கும் ஒருத்தனும் கூட.

இங்க நான் நீனு இரண்டு வாத்தையாே அல்லது யார் பெரியதுனு பேதமே கிடையாது. திருமணம் உடம்பு மற்றும் மனசை மட்டும் இணைக்காது. நான், நீ என சொல்லப்படுகிற வார்தையைக் கூட நாம்னு சேர்த்து வைக்கும். இங்க ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்தாலே போதும். அவன் பார்வையில நீ என்பதும் அவன் என்பதும் ஒன்றுதான், உனக்கும் அது பொருந்தும் துகிரா” தனது நீண்ட விளக்கத்தை உருவம் முடித்தது.

“அப்போ நாங்க சண்டையே போடக் கூடாதுனு சொல்லுறியா? திகைத்துப் போய்த் துகிரா கேட்டாள்.

“ஆரோக்கியமான சண்டைங்க தான் திருமண வாழ்கையின் அஸ்திவாரம். ஆனா சின்ன ஊடல்களும் செல்ல சண்டைகளும் வளுவாகி வரும் போது, ஒரு மன்னிப்புக் கேட்டால் போதுமே! அந்த மன்னிப்புக் கூட வாய் வார்த்தையாக இருக்க வேண்டியது இல்ல. ஒரு உச்சி முத்தம் போதும் துகிரா” காருண்ய சொற்களில் கட்டுண்ட துகிரா,

“இப்போ புரியுது. இனிமே நான் என் சமர் கிட்ட சண்டை போட மாட்டேன். ஈகோ பார்க்க மாட்டேன்” அனத்தவும்,

“இல்லாத சமர்கிட்ட உன் ஈகோவைக் காட்டினாலும் காட்டாம விட்டாலும் எதுவும் ஆகாது துகிரா” உருவம் புன்முறுவல் ஒன்றைப் பரிசளிக்கவும்,

“இல்ல, இல்ல எனக்கு சமர் வேணும். இப்போவே என் சமர் எனக்கு வேணும். நீ கடவுள் தானே? அப்போ என் சமரை என் கிட்ட கொடுத்துடு. ஒரு வாட்டி எனக்கு வாய்ப்புக் கொடு. பிளீஸ் இரண்டாவதா ஒரு வாய்ப்பைக் கொடு. உன் கிட்ட கெஞ்சிக் கேட்கிறேன்” கை கூப்பி வணங்கி அழுதாள் துகிரா.

“துகி! துகிமா!” அழுது வீங்கிய முகத்துடன் பஞ்சணைக்குள் துஞ்சிக் கொண்டிருந்தவளின் பட்டுக் கரங்களை மெதுவாக ஸ்பரிசித்து எழுப்பியது, நீண்ட ஐந்து விரல்களும் காந்தக்குரலும். 

“பிளீஸ், பிளீஸ்” முனங்கிக் கொண்டிருந்தவளின் செவிகளில் இருண்ட குகைக்குள் ஒலிப்பது போன்ற ‘துகி’ எனும் அவளவனின் பிரத்தியேக அழைப்பை காதைத் தீட்டிக் கேட்டவளின் நாசி முழுவதும் அவனின் வாசணைத்திரவியத்தின் வாசம் ஊடுறுவி அவள் சுவாசப்பையை அடைக்க,

சிப்பியாக இறுக்கி மூடியிருந்த விழிகளை வேகமாக திறக்க அவள் முன் அவனே நின்றிருந்தான். அவளவன், சமர்மறவன் இதழ்கள் நன்றாக விரிந்து வெண்வரிசைப் பற்கள் பளிச்சிட சிரித்தவனாக ஐம்பது ரோஐாக்களை பந்தாக கட்டிய பூச்செண்டை நீட்டினான்.

“சாரி” மிகக் கனமான வார்தையை சாதூர்யமாக உச்சரித்து அவன் நீட்டவும், சட்டென கட்டிலில் இருந்து குதித்து எழுந்த துகிராவோ, அதனை வாங்கி மஞ்சத்தில் தூக்கி வீசிவிட்டு, 

அவனின் ஆரடி உயரத்துக்கு எம்பி நின்று, தலை, நெற்றி என்று ஆயசத்தில் சோதனையிட்டு கடைசியில் அவனின் கைவிரல் நுனியிலிருந்த காயத்தை கண்டுபிடித்தாள்.

“சமர்! சமர் உனக்கு ஒன்னுமில்லைல?” நைந்து போய் கேட்டாள். “இல்லைடா துகி” இடவலமாக தலையசைத்து அவன் சொல்லவும், 

“காயம் எப்…” அவள் பதர, “வரும் வழியில சின்ன ஆக்சிடென்டா. இரண்டு வண்டி மோதிக் கிடந்திச்சு. ஆன் ஸ்போட்ல ஃபர்ஸ்ட் எய்ட் அண்ட் ரெஸ்க்யூயிங் பண்ண வேண்டி போனதால, கையில கண்ணாடி கிழிச்சி விட்டிருச்சு. நீ சில் பண்ணுடா எதுக்கு இப்படி பதட்டம். வா வா தண்ணி குடிப்பியாம்” கை வளைவிற்குள் அவளை அணைத்துக் கொண்டவன் தண்ணீரை எடுத்து புகட்டியும் விட்டான்.

“உனக்கு ஒன்னுமில்லையே சமர்” கேள்வியாக ஏறிட்டவளை இழுத்து தனது திரண்ட மார்பில் கட்டிக் கொண்டவன். “இல்லைடா ஆ…ஆனா சாரி” எனத் தடுமாறவும், 

அவனின் மார்பில் ஊசியாக துளைத்துக் கொள்ள மாட்டமோ என்பது போல அவனுள் ஒன்றிய துகிராவோ, குவளை மலராக இமைகளை மூடி தன்னை சற்று முன் சுருட்டியள்ளிக் கொண்டு தவிக்க விட்ட சொப்பனத்தை ஒரு வினாடி மீட்டிப் பார்த்துவிட்டு, “ஐ அம் சாரி, சாரி சமர். தப்பு என் மேலதானே? நான் எப்படி சமர்மறவன் பொண்டாட்டிய அப்படி பேசலாம்” செல்லமாக கிளுங்கினாள்.

“என் துகிமா” அவளின் இரு கன்னங்களையும் தன் உள்ளங்கைகளுக்குள் அடக்கியவன், அவள் கண்களோடு கண்களை கலக்கவிட்டு ஏறிடவும், துகிராவாே, வலது புருவத்தை ஏற்றி இறக்க உயர்த்திவிட்டு கண்ணைச் சிமிட்டினாள்.

“வலிக்குதாடாமா?” அவன் அடித்த கன்னத்தை அவன் கரம் அழுத்த மெல்லிய கரகரப்பான குரலில் அவன் வினவும் போது  கண்களில் நீர் நிரம்பி அணையுடைக்க தயாரகவிருந்தது.

அவளோ அக் கரத்தின் மேல் தன் கைகளை அழுத்தி வைத்துவிட்டு, “ம்ஹூம்” என்று தலையை சிலுப்ப, அவளின் அசைவுக்கு ஏற்ப முன்நெற்றி முடிக் கற்றைகளும் அசைந்தாடின.

ஒரு விரல் கொண்டு முடிக்கற்றையை அவள் காதின் பின் நகற்றியவன், அவள் செவிகளின் ஈர இதழ் படுமாறு உரசி, “ஷால் ஐ கி..” அவன் ஆரம்பிக்க, அவன் வினாவிற்கு பதிலை அவன் இருவரியில் அவள் முகவரியைத் தொலைத்து காதல் தேர்வுக்கு முடிவிலியாய் ஒரு விடையெழுத ஆரம்பித்தாள்.

இத்தனை நேரமும் வேடிக்கைபார்த்தும், கண்ணாடிக் கதவினை கையில்லா மெய்கொண்டு தட்டிய வாயுபகவானும் நானி தன் முகத்தை திருப்ப அவன் கண்களில் சுவரில் பலகையில் தொங்கிய ஒரு வாசகம் காணக்கிடைத்தது.

‘காதல் குருடல்ல; ஆனால் தூரத்துப் பார்வைக் குறைபாடு காணப்படுகின்றது. அதனால் தான் குறைகள் தெரிவதில்லை.’

கலீல் ஐிப்ரானின் வரிகள் பொன் எழுத்துக்களில் மின்னின. காதல் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டிக் கொண்ட நெஞ்சத்திருடனின் அசையாச் சொத்து. அவன் குறைகளையே நிறைகளாக மாற்றவல்லவன். நேசம் தாங்கும் நெஞ்சங்களின் நேர் மறை என்ற இருமுனைக் கோடுகளினை ஒரே பார்வையில் வளைத்து முடிவிலியாக  மாற்றி வைத்துள்ளான்.

ஒரு புரிதலில் உருப்பெற்ற காதல், இருவருக்கிடையில் முட்டி மோதி விருட்சமாகும் போது அவ் நெஞ்சத்திருடனின் பார்வையில் காதல் காதலே! சமர்மறவன், துகிராவின் முடிவில்லாக்காதலை ரசித்த மாருதம் அடுத்த வீட்டின் ஜன்னலைத் தட்ட ஓடிகிறது. காற்றோடு காற்றாக நாமும் காதலைத் தேடலாம் நமக்குள்ளே! 

சுபம்