இரவு, நேரம் 10:15
மழை இரவு அது! கனமழை கொட்டிக் கொண்டிருந்தது!!
ஒரு வீடு! அதுவும் இருள் சூழ்ந்த வீடு!
வீட்டின் அறையில் யாருமில்லை.
ஆனால், அவ்வீட்டின் பால்கனிச் சுவற்றில் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு, ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
சிறிதும் உடலில் அசைவில்லாமல் நின்றிருந்தான்.
அவனது கண்கள் இரண்டும், அஞ்சன நேரத்து அகிலத்தை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தன.
யாரிவன்?
இவனைப் பற்றிய கோப்பினைத் தரவிறக்கம் செய்தால், கோப்பின் விவரங்கள் இப்படித்தான் இருக்கும்.
நல் கேர்!
கணினி மொழிகளிலே காலத்தைக் கழிப்பவன்.
உயரம் 6’3+
எப்பொழுதும்… ‘சிக்ஸ் பேக்’ தேகத்தை கருப்பு நிற ‘டேங்க் டாப்’ இறுகப் பற்றியிருக்கும். நீளமான கால்களை, அடர் நீல நிற ஜீன்ஸ் கவ்வியிருக்கும்.
கையிலும் கழுத்தில் ஒரு தடித்த ‘லெதர் சோக்கர்’!
செய்யும் செயல்களில் பொறுமை இருக்கும். ஆனால், பார்க்கும் பார்வையில் பொறுமை இருக்குமா?
இருக்கும்! அவன் கண்களில் ஒருவித பொறுமைத்தன்மை தெரியும்!
ஆனால், அதில் சற்றும் மனிதத்தன்மை இருக்காது!!
இதற்கு மேல் இவனைப் பற்றிய தகவல்களைத் தரவிறக்கம் செய்ய முடியாது!
ஏனெனில், அதற்குமேல் அணுகல் மறுப்பு!!
சுருக்கமாக, ஆதார் அட்டைக்குள் அடைக்க முடியாத அடையாளங்கள் கொண்டவன்… இந்த நல் கேர்!
மழைச் சாரல் உடலை நனைப்பதை உணர்ந்தவன், பால்கனியிலிருந்து வீட்டிற்குள் வந்தான்.
அறையின் விளக்கை எறியவிட்டான்.
பத்திற்கு பத்து என்ற அடிக்கணக்கு கொண்ட அறை அது!
அதில் கால்வாசி இடத்தில் ஒரு மேசை போடப்பட்டிருந்தது.
நிறைய வயர்களுக்கு இடையே, அந்த மேசையின் மீது இரண்டு மடிக்கணிகள் மற்றும் மூன்று கணினிகள் இருந்தன.
அவற்றின் திரைகளில் கணினி நிரல் மொழிகள் நிரம்பியிருந்தன.
ஒரு முழுநிமிடம் அதனைப் பார்த்துக் கொண்டு நின்றான்.
பால்கனி கதவு வழியே வந்த மழைக் காற்று, உடலைக் குளிரச் செய்தது.
ஏதாவது குடிக்க வேண்டும்!
நடந்து, மின்சார அடுப்பின் அருகில் சென்றான்.
மழைக்கு இதமாக இருக்க, காஃபி தயாரித்தான். அதன் மேல் இரண்டு மூன்று புதினா இலைகளை மிதக்கவிட்டான்!
ஆவி பறக்கும் காஃபியின் மணத்துடன், புதினா இலைகளின் நறுமணமும் போட்டி போட்டு வந்து நாசியைத் துளைத்துச் சென்றது!!
ஒருமுறை அதன் வாசம் பிடித்தான்!!!
கோப்பையைக் கையினில் ஏந்திக் கொண்டே, கணினி மேசையின் முன்னர் சென்று அமர்ந்தான்.
சற்று நேரம் விசைப்பலகையின் மேல் விரல்கள் விளையாடின!
பின், கணினித் திரையில் இருந்த ‘லோகேஷன் டிராக்கர்’ செயலியைத் திறந்தான். அதில் ஒரு கைப்பேசி இலக்கத்தை தட்டச்சு செய்தான்.
உடனே அந்தச் செயலி, கைப்பேசி இலக்கத்தின் உரிமையாளன் ‘தற்போது, எந்த இடத்தில இருக்கிறான்?’ என்று வரைபடம் மூலமாகக் காட்டியது.
வரைபடம் காட்டும் இடத்தில் ஆட்காட்டி விரலால் வட்டம் வரைந்து, “நிகில்” என்று தன் எதிரியின் பெயரை உச்சரித்தான்.
திரையிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு… ‘இப்பொழுது அழைத்தால் சரியாக இருக்கும்’ என்று, தன் கைபேசியை எடுத்து யாரையோ அழைத்தான்.
எதிர்முனையில் அழைப்பு ஏற்கப்பட்டது.
நிகில் இருக்கும் இடத்தைச் சொல்லி, “அவன் உயிரோட இருக்கக் கூடாது. கொன்னுடுங்க” என்று ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாகச் சொன்னான்.
எதிர்முனை ஒத்துக் கொண்டதும், அழைப்பைத் துண்டித்தான்.
காஃபியை எடுத்து ஒரு மிடறு விழுங்கினான்.
பின், “நிகில்! ஐ அம் நல் கேர், லிவிங் இன் இன்வேலிட் ஐபி அட்ரஸ்! என்னைக் கண்டுபிடிக்கவே முடியாது. நீ தேவையில்லாம என்னைய நெருங்க டிரை பண்ண! அதான், அனுபவிக்கப் போற!” என்றான்.
அமர்தலான குரல்தான்! ஆனால், அவன் ஆபத்தானவன் என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கும் குரல்.
ஏற்ற இறக்கங்கள் இல்லாத குரல்தான்! ஆனால், கேட்போருக்கு ஒரு எச்சரிக்கை உணர்வை வரவைக்கும்.
கட்டளையிடும் குரல் இல்லை! ஆனால், கேட்ப்போர் கட்டுப்படும் நிலையில் நிறுத்தி வைக்கும் குரல்!
அப்படி ஒரு குரல் அவனது!
இன்னும் சிறிது நேரத்தில், தன் எதிரியை வீழ்த்தப் போகிறோம் என்ற எண்ணத்தில்… அவனது கண்கள் பொறுமையுடன் சிரித்தன!!
******
சென்னையின் மற்றொரு இடத்தில்… அதாவது நல் கேர் வரைபடத்தில் பார்த்த இடத்தில்…
இரவு, நேரம் 10 : 50
தனித்துவிடப்பட்ட தார்சாலை!
இருள்! இருட்டு! எத்தகையோரையும் பயம் கொள்ளச் செய்யும் இருட்டு!
விட்டுவிட்டு வெட்டும் மின்னல் ஒளி மற்றும் சற்றுத் தொலைவில் நிற்கும் கார் முகப்பு விளக்கின் ஒளி… இந்த இரண்டு மட்டுமே சிறு வெளிச்சம் தந்தன!
நிறுத்தவே போவதில்லை என்பது போல், சோவென மழைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.
பெய்யும் மழையில், உடல் முழுவதும் நனைந்தவாறு ஒருவன் நின்றுகொண்டிருந்தான்.
அவனைச் சுற்றிப் பத்து பேர் நின்று கொண்டிருந்தனர்.
சற்று நேரத்திற்கு முன், நல் கேருடன் பேசியவனும் நின்றிருந்தான்!
ஆம்! நிகிலைக் கொலை செய்ய, நல் கேர் அனுப்பிய ஆட்கள் இவர்கள்.
சிலரின் கைகளில் பெரிய இரும்புக் கம்பிகள் இருந்தன.
‘என்ன நடக்கிறது?’ என்று நிகில் புரியும் முன்… அவனது முதுகில்… இரும்புக் கம்பி கொண்டு, ஓங்கி ஒரு அடி விழுந்தது!
முன்னோக்கி விழப் போனவன், கால்களை அழுத்த ஊன்றி… வலித்தும் ஸ்திரமாக நின்றான்.
காரின் விளக்கு ஒளியில் தெரிந்த, இந்தக் காட்சியைக் கண்டதும்… காருக்குள் இருந்த பெண்கள் இருவர் ‘நிகில்’ என்று பயந்து கூச்சலிட்டனர்.
வலி! அடித்த இடத்தில் அப்படியொரு வலி!!
மேலும் இரண்டு மூன்று அடிகள்!!
பெண்களிடமிருந்து, ‘நிகில்… நிகில்’ என்ற அலறல்கள்.
அத்தனை அடிகளில் நிகிலின் உடல் நிற்க முடியாமல் தள்ளாடியது! மேலும், கண்கள் காட்டும் காட்சிகள் கலங்கலாகத் தெரிந்தன!!
அதுதான் சரியான தருணம் என நினைத்து… ஒருவன் கத்தியைக் கொண்டு, நிகிலின் வயிற்றில் குத்த வந்தான்.
சட்டென… உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உந்த, நிகில் சற்று பின்னோக்கி நகர்ந்தான்.
குத்த வந்த வேகத்திற்கு, கத்தி வயிற்றில் ஆழச் சென்றிருக்கும்!
பின்னோக்கிச் சாய்ந்ததால், நிகில் தப்பித்தான். எனினும், கத்தியின் கூர்முனை அவனது சட்டையைக் கிழித்து, உடலின் சதையையும் கிழித்திருந்தது.
‘ஆ’ என்று வலியில் துடித்தான்.
இரத்தம் வர ஆரம்பித்தது. மழை நீர் பட்டு இரத்தம் வழிந்தோடியது.
அதற்கு மேல், காரில் இருப்பவர்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.
யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என நினைத்து, காரின் கதவைத் திறந்து கொண்டு, வெளியே வந்தார்கள்.
அக்கணம்…
இத்தனை அடிகளுக்குப் பின்னும், இன்னும் கீழே விழாமல் நிற்பவனை அடித்து வீழ்த்த வேண்டும்!! எனவே இரும்புக் கம்பியைக் கொண்டு நிகிலின் கால்களில் அடிக்க ஒருவன் ஓடி வந்தான்.
இம்முறை நிகில் விலகியதோடு மட்டுமல்லாமல், அடிக்க வந்தவனின் இரும்புக் கம்பியைப் பிடித்தான்.
அடியாள் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான்!
அந்த நொடியில், பிடித்திருந்த இரும்புக் கம்பி கொண்டு… அடியாள் மூக்கில், நிகில் ஓங்கி அடித்தான்.
அடிவாங்கியவன் இரும்புக் கம்பியை மொத்தமாக விட்டுவிட்டு, மூக்கை இருகைகளால் மூடிக் கொண்டு, வலியால் சுருண்டு வீழ்ந்தான்.
ஒரு மின்னல் வெட்டியது! மழை இன்னும் வலுக்க ஆரம்பித்தது!!
இரும்புக் கம்பியை இறுக்கமாய் பற்றிக் கொண்டு… வலியைப் பொறுத்துக் கொண்டு… மழையில் நனைந்தவாறு நிகில் நின்றான்.
அருகில் வந்தால் ‘அடிப்பேன்’ என்ற அர்த்தங்களோடு நின்றான்!
சுற்றி நின்றவர்கள் தயங்கினார்கள்!!
நிகிலின் பார்வை ஒருமுறை கார் நிற்கும் இடத்திற்குச் சென்று வந்தது.
இரு பெண்களும் வெளியே நிற்பதைப் பார்த்தவன், “ஷில்பா… மிலா உள்ளேயே இருங்க” என்று கத்தினான்.
நிகிலின் அந்த ஒரு நொடி கவனச் சிதறலில்… அடியாள் ஒருவன் ஓடி வந்து, அவனது வலது முட்டியில் ஓங்கி அடித்தான்.
மரணவலியுடன், “ஷில்பா… சீக்கிரம் பக்கத்தில இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் போ… போ ஷில்பா” என்று சொல்லிக்கொண்டே, தன்னை அடிக்க வரும் மற்றொருவனை நிகில் அடித்தான்.
“ஷில்பா… என்னைப் பத்திக் கவலைப்படாத… சீக்கிரம் கிளம்பு… போலீஸ் ஸ்டேஷன் போ” என்று மீண்டும் மீண்டும் நிகில் கத்தினான்.
அவன் ‘போலீஸ் ஸ்டேஷன் போ’ என்றதைக் கேட்ட அடியாட்களில் ஒருவன், “டேய்! ரெண்டு பேர் போய் அவங்களைப் பிடிங்க” என்றான்.
“ஷில்பா… மிலா… சொன்னா கேளுங்க” என்றான் நிகில், மேலும் ஒருவனை அடித்துக் கொண்டே!
நிகில் அடியாட்களை அடிப்பதைப் பார்த்த ஷில்பாவிற்கு, அவன் மேல் ஒரு நம்பிக்கை வந்தது.
மேலும், தங்களை நோக்கி இரண்டு பேர் வருவதைக் கண்ட ஷில்பா, “மிலா… உள்ளே ஏறு” என்று பதற்றத்தில் கத்தினாள்.
“ஷில்பா… நிகில்…” என்று மிலா அழ ஆரம்பித்தாள்.
“மிலா! நிகில்… அவனைப் பார்த்துப்பான்!! ப்ளீஸ் நீ கார்ல ஏறு” என்று சொல்லி, ஷில்பா காரினுள் ஏறினாள்.
வேறு வழியில்லாமல் மிலாவும் ஏறிக்கொண்டாள்.
அந்தக் குறுகலான சாலையில் காரைத் திருப்பக் கடினமாக இருந்தது!
தொடர் மழை வேறு!
கடகடவென முன்னும் பின்னும் காரை மாற்றி மாற்றி ஓட்டினாள்.
காரைத் திருப்பிவிட்டாள்.
அவ்வளவுதான்!
இனி வேகம் எடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், மனமேயில்லை!
ஷில்பா, மீண்டும் நிகிலைத் திரும்பிப் பார்த்தாள்.
நிகில், அடியாட்களை அடித்துக் கொண்டிருந்தான். அவன், நிச்சயம் தப்பிவிட முடியும் என்ற நம்பிக்கை வந்தது.
அவள் அப்படி நினைக்கும் போதே… ஓடி வந்தவன், இரும்புக் கம்பியைத் தூக்கி காரின் டிக்கியில் எறிந்தான்.
அந்தச் சத்தத்தில், காரினுள் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன், “ப்பா” என்று பதறி விழித்தான்.
“மிலா, ஜெர்ரியைப் பாரு” என்று ஷில்பா படபடத்தாள்.
அழுகையை அடக்கிக் கொண்டு, “ஜெர்ரி ஒன்னுமில்லை” என்று பின் சீட்டில் படுத்திருந்தவனை… மிலா தட்டிக் கொடுத்தாள்.
‘வேறுவழியில்லை, எப்படியாவது தப்பிக்க வேண்டும்’ என்ற எண்ணம் வர, காரின் ஆக்ஸிலேட்டரை ஷில்பா அழுத்தி மிதித்தாள்.
கார் வேகமெடுத்தது.
மிலாவோ, கண்களில் கண்ணீரோடு பின்னே திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.
ஓடிவந்தவர்கள் பார்க்க முடியாத தூரத்திற்கு கார் சென்றுவிட்டது.
சற்று நேரத்திற்குப் பின்…
நிகில்!
அடைமழை!!
இப்பொழுது நான்கு பேர் மட்டுமே!!!
முயற்சி செய்து, தன்னை அவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தான்.
அடியாட்கள் அவனைக் கொன்று விடவேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்க வந்தனர்.
நிகிலோ, தன்னைப் பாதுகாத்துக் கொண்டால் போதும் என்ற எண்ணத்தில் அடித்துக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில், அப்படிப் பார்த்துப் பார்த்து அடிக்க முடியவில்லை. மேலும், கால் முட்டி பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது.
இப்படித்தான் அடிக்க வேண்டும் என்று இல்லாமல், சகட்டுமேனிக்கு அடிக்க ஆரம்பித்தான்.
அவன் வெறித்தனமாக அடிக்கத் துவங்கியதும், அடியாட்கள் கொஞ்சம் பின்வாங்கினார்.
ஒரு கட்டத்தில் அவனின் அடியைத் தாங்க முடியாமல்… அந்த அடியாட்கள் தப்பித்தால் போதும் என்று தெறித்து ஓடினர்.
அவர்கள் ஓடிச்சென்றதும்…
‘வேறு யாரும் இருக்கிறார்களா?’ என்று சுற்றிலும் பார்த்தான்.
யாரும் இல்லை!
மழையும் நிற்கவில்லை!!
கையில் இரும்புக் கம்பியை வைத்துக் கொண்டே நடந்தான்.
முக்கிய சாலையை அடைந்ததும், கம்பியை ஓரமாகத் தூக்கி எறிந்தான்.
ஏதாவது ஆட்டோ வர வேண்டும் எனக் காத்து நின்றான்.
ஒரு வேகத்தில்… வலியைப் பொருட்படுத்தாமல் நின்று கொண்டு அடித்தான்.
ஆனால், இப்போது வலித்தது. நிற்க முடியவில்லை! முட்டியில் பட்ட அடியினால், கால்களில் வலி உயிர்போனது!!
அத்தோடு, கத்திக் குத்திலிருந்து வெளியேறிய இரத்தம் அவனுக்குச் சோர்வைத் தந்தது.
இருந்தும் முயற்சி செய்து நின்றான்.
மழை இரவு என்பதால், இந்தச் சாலையில் கூட வாகனங்கள் ஏதும் வரவில்லை.
சிறிது நேர காத்திருப்புக்குப் பின், ஒரு ஆட்டோ வந்தது. நிறுத்தச் சொன்னான்.
ஆனால், ஆட்டோகாரன் நிகிலின் நிலையைப் பார்த்துவிட்டு, ‘முடியாது’ என்று சென்றுவிட்டான்.
மறுபடியும் காத்திருப்பு. கண்கள் சொருக ஆரம்பித்தது.
மீண்டும் ஒரு ஆட்டோ வந்தது. நிறுத்தி, உதவி கேட்டான்.
“சரி ஏறுங்க” என்று அந்த ஆட்டோக்காரர் ஏற்றிக் கொண்டார்.
ஆட்டோ கிளம்பியதும், “எந்த ஹாஸ்பிட்டல் போகணும்?” என்று கேட்டார்.
“ஒரு நிமிஷம்” என்ற தேய்ந்து போன குரலில் சொன்னவன், கஷ்டப்பட்டு பேன்ட் பாக்கெட்டிலிருந்து கைப்பேசியை எடுத்தான்.
கைப்பேசி திரையில் ஒரு சில கீறல்கள் இருந்தது, மங்கலாகத் தெரிந்தது.
தலை சுற்றியது!
அவர்கள் மூவரும் எங்கிருக்கிறார்கள் என்று கேட்க வேண்டும் என நினைத்தான்.
ஆனால், அழைப்பை ஏற்படுத்தும் முன்பே நிகில் மயங்கிவிட்டான்!!