நிரல் மொழி 10.1

_20200905_075235

அன்று ஹோலி!!

காலை, நேரம் 6:30 (நேற்றைய காலை)

 

நிகில் வீடு 

சூரியன் வந்து வெகு நேரமாகியிருந்தது. ஆனால், வீட்டிலுள்ள மூவரும் இன்னும் எழுந்து கொள்ளவில்லை.

வழமை போல, நிகிலின் ஒருபுறம் மிலா…  மறுபுறம் ஜெர்ரி…  என்று, அவனது தோள் வளைவில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்தனர். 

சற்று நேரத்திற்கு முன்பே, நிகில் விழித்திருந்தான். ஆனால், எழவில்லை. 

உறங்குவதற்கு முன்னாடியும் , உறங்கி எழுந்த பிறகும்…  நேற்று நடந்த கைப்பேசி உரையாடலை, மீண்டும் மீண்டும் மூளைக்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். 

அதிலிருந்து, ‘நல் கேர்’ பற்றியோ… அவன் இருப்பிடத்தைப் பற்றியோ… அறிய முடியுமா என்று யோசித்துப் பார்த்தான்.

சற்று நேரம், ‘அடுத்து என்ன செய்ய?’ என்று யோசித்தபடியே கண்கள் மூடிப் படுத்திருந்தான். 

ஒரு முடிவு எடுத்தவனாய், மிலாவை எழுப்பினான்.

அவள் தோளில் மெல்லத் தட்டி, ‘மிலா’ என்று இரண்டு மூன்று முறை அழைத்தான்!

லேசாக அசைந்தவள், “ம்ம்ம்” என்றாள். 

“கொஞ்சம் எந்திரிக்கிறியா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.

அவளோ, “எதுக்கு நிகில்? இன்னைக்கு லீவ் எடுத்திருக்கதான?” என்றாள், தூக்கம் கலையாத குரலில்.

“லீவ்தான்! பட், ஒரு சின்ன வேலை இருக்கு. ஸோ, ஆஃபீஸ் போகணும்” என்றான். 

“இன்னைக்கு ஹோலி நிகில்” என்று, மெதுவாகக் கண்கள் திறந்தாள். 

“மிலா! ஆக்ச்சுவலி, நேத்தே முடிக்க வேண்டிய ஆர்டிக்கல். பட், நீங்க ஷாப்பிங் போகணும்னு சொன்னதால வந்தேன்” என்று சொல்லிப் பார்த்தான். 

சட்டென, அவன் தோள் வளைவிலிருந்து தன் முகத்தை உயர்த்தியவள், “நாங்க ஒன்னும் வரச் சொல்லலை” என்று சொன்னாள். 

“தெரியும் மிலா. பட், எப்படி ஜெர்ரி வச்சிக்கிட்டு ஷாப்பிங் பண்ணுவீங்கன்னு யோசிச்சேன்” என்று விளக்கம் கொடுத்தான். 

மிலா எதுவும் பேசவில்லை. ஆனால், மீண்டும் கண்மூடிக் கொண்டாள். 

“மிலா” என்று அழைத்து, திரும்பவும் எழுப்பினான். 

“சொல்லு நிகில்”

“இம்பார்ட்டன்ட் ஆர்டிக்கல் மிலா. லஞ்சுக்கு கண்டிப்பா வந்திடுவேன். ப்ளீஸ்” என்று கெஞ்சினான். 

“அப்படி என்ன இம்பார்ட்டன்ட்?” என்று கேட்டாலும், அவனை விட்டு விலகி… மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.

சிரித்துக் கொண்டே…  தன்னிடமிருந்து ஜெர்ரியை விலக்கிப் படுக்க வைத்தான். 

மிலாவைத் தன் புறமாகத் திருப்பி, “சாரி! பட், சீக்கிரம் வந்திடுவேன். சரியா??” என்றான். 

“1’o கிளாக் வந்திடனும்” என்றாள். 

“ம்ம்ம்” என்று, அவளை அன்பாய் அணைத்துச் சொன்னான். 

“பக்கா??” 

“ம்ம்ம்” என்று அழுத்திச் சொல்லி, எழுந்து கிளம்ப ஆரம்பித்தான். 

அவன் கிளம்பி முடிக்கையில், ஜெர்ரி விழித்திருந்தான். 

மிலா, ஜெர்ரியுடன் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். 

இருவரின் அருகே வந்தவன், ஜெர்ரி கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான். 

பின், அதேபோல் மிலாவிற்கும் செய்தவன்… “கிளம்புறேன் மிலா” என்றான். 

“நிகில் பிரேக்பாஸ்ட்?”

“ஆஃபீஸில பார்த்துகிறேன்” 

“1’o கிளாக் வந்திடு நிகில்” என்றாள். 

“ம்ம்ம் சரி” என்று கிளம்பிச் சென்றான். 

அவன் கிளம்பியதும்… 

ஜெர்ரியை வைத்துக் கொண்டே… ஹோலி வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.

அன்றைய தினத்தின் நேரம் சென்று கொண்டே இருந்தது. 

பகல், நேரம் 1:30 (நேற்று மதியம்)

நிகில் வீடு 

மிலா, மதிய உணவு வகைகளைச் சமைத்து முடித்திருந்தாள். 

இன்னும் நிகில் வரவில்லை!

ஷில்பா ‘லஞ்சுக்கு வந்திடுவேன்’ என்று, நேற்று இரவே சொல்லிச் சென்றிருந்தாள். 

அவள் வரும் நேரம்தான்!

ஜெர்ரி உறங்குவதால், வரவேற்பறையில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து… 

நேரம் 1: 45 

அழைப்பு மணி ஓசை கேட்டதும், மிலா எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

ஷில்பாதான்!

“சொன்னபடி வந்திட்டியா?” என்று கேட்டபடி, மிலா கதவைப் பூட்டினாள்.

“யெஸ்” என்று அழுத்திச் சொல்லி… மிலாவைக் கட்டி அணைத்து, “ஹேப்பி ஹோலி” என்றாள்.

மிலாவும் “ஹேப்பி ஹோலி…  ஹேப்பி ஹோலி” என ஷில்பாவைக் கட்டியணைத்து ஆர்ப்பரித்தாள்.

மேலும், “நம்ம கத்தினதுல ஜெர்ரி முழுச்சிட்டானா-ன்னு பார்க்கிறேன்” எனச் சொல்லி… படுக்கையறை கதவருகே சென்று, திறந்து பார்த்தாள். 

இல்லை! ஜெர்ரி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். 

“தூங்கிறானா?” என்று ஷில்பா கேட்டு, சாப்பாட்டு மேசை அருகில் வந்தாள். 

“ஹாங்! நல்லா சாப்பிட்டு, புது டிரஸ் போட்டு… நல்லா தூங்கிறான்” என்று மிலா சிரித்தாள்.

ஷில்பாவும் சிரித்துக் கொண்டாள்.

“பசிக்குது மிலா! சாப்பிடுவோமா?” என்றாள், அன்றைய உணவுகளைப் பார்த்தபடியே! 

“எனக்கும்தான் ஷில்பா! ஆனா, இன்னும் நிகில் வரலை!” என்றாள் மிலா. 

ஷில்பா ஆச்சிரியம் அடைந்தாள்.

“நிகில் வரட்டுமே. இன்னைக்கு மூணு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்” – மிலா. 

“ம்ம்ம், சரி” என்றவள், “நிகில் லீவ் எடுக்கலையா?” என்று கேட்டாள். 

“இல்லை ஷில்பா. ஏதோ இம்பார்ட்டன்ட் வொர்க்-ன்னு போயிருக்கான். லஞ்சுக்கு வந்திடுவேன்னு சொன்னான்”

‘நேற்று விடுப்பு எடுக்கிறேன் என்று சொன்னவன், இன்று ஏன் அலுவலகம் செல்ல வேண்டும்?’  என்று ஷில்பா யோசித்தாள்.

“ஜூஸ் குடிக்கிறயா?” என்று மிலா கேட்டாள். 

மிலா கேட்டதை, ஷில்பா கவனிக்கவேயில்லை. இன்னும் யோசித்துக் கொண்டே இருந்தாள். 

ஷில்பாவின் தோள் பிடித்து ஆட்டி, “என்னாச்சு ஷில்பா?” என்றாள் மிலா.

“ஆங்! சொல்லு” என்றாள் யோசிப்பு நிலையிலிருந்து வெளியே வந்து!!

“சொல்லா? ஜூஸ் குடிக்கிறியான்னு கேட்டேன்” 

“ம்ம், குடிக்கிறேன். கூலா வேணும்” என்றவள், “வெளியே வெயில் அதிகம்” என்று அதற்குக் காரணம் சொன்னாள். 

“ஈவினிங் மழை வரும் போல” என்று சொல்லிக் கொண்டே, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து ஜூஸை எடுத்து தம்பளரில் ஊற்றினாள். 

“நிகிலுக்கு கால் பண்ணிப் பார்க்கவா?” என்று ஷில்பா கேட்டாள்.

“இன்னைக்கு, அவன் ஃபோன வீட்ல மறந்து வச்சிட்டுப் போயிருக்கான்” என்று சிரித்தாள், மிலா. 

‘இவன் இப்படி மறக்க மாட்டானே? ஏன் இன்று இப்படி?’ என்று ஷில்பா மீண்டும் யோசிக்க ஆரம்பித்தாள்.

“இந்தா குடி” என்று ஜூஸ் தம்பளரை ஷில்பாவிடம் கொடுத்து… அவள் அருகில், மிலா அமர்ந்து கொண்டாள்.

“எப்படி இவன் ஃபோன மறந்திட்ட போனான்?” – ஷில்பா. 

“அதை விடு ஷில்பா! உன்கிட்ட ஒரு விசயம் சொல்லணும்”

“என்ன?” 

“நேத்து நிகில் ஃபோன்-க்கு ஒரு கால் வந்தது”

“என்ன கால்?” 

“அதுல யாரு கால் பண்ணறாங்கனே வரலை. வெறும் காலிங் மட்டும்தான் வந்தது” என்று மிலா, ஆச்சரியமாகச் சொன்னாள்.

“இது எப்போ?”

“ஷாப்பிங் கிளம்பிறதுக்கு முன்னாடி. நீ, கீழ வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கும் போது”

“நிகில் அட்டன் பண்ணானா?”

“இல்லை ஷில்பா. நான் அட்டன் பண்ணதுக்கும், ‘இனிமே இந்தமாதிரி கால்ஸ் அட்டன் பண்ணக் கூடாதுன்னு அட்வைஸ் பண்ணான்”

‘தன் அலுவலகப் பிரச்சனையால், அவனுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறதா?’ என்று ஷில்பா குழம்பிக் கவலை கொண்டாள்.

அக்கணம், மீண்டும் அழைப்பு மணி ஓசை!

“நிகில்தான்” என்று சொல்லிக் கொண்டே, மிலா எழுந்து சென்றாள். 

கதவைத் திறந்தாள்.

நிகில்தான்! 

நேரம் 2:15

நிகில் உள்ளே வந்ததும், “என்ன இவ்ளோ லேட்டாகிடுச்சு?” என்று கேட்டுக்கொண்டே மிலா கதவை மூடினாள்.

“ஆர்டிக்கல் ஃபினிஷ் பண்ணிக் கொடுத்திட்டு வர, லேட்டாயிடுச்சு” என்று சொல்லிக் கொண்டே, அவர்களது அறைக்குள் சென்றான். 

இரண்டு நிமிடங்களில்… 

தன்னை இளைப்பாற்றிக் கொண்டு, சாப்பாட்டு மேசையில் வந்து நிகில் அமர்ந்தான்.

“ஷில்பா, நீயும் வா சாப்பிட?” என்று மிலா அழைத்ததும், ஷில்பாவும் வந்து அமர்ந்தாள்.

“நீ எப்போ வந்த?” என்று ஷில்பாவிடம் நிகில் கேட்டான்.

ஷில்பா பதில் சொல்லவில்லை. எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

மிலாவும் சாப்பிட அமர்ந்துகொண்டு, “ஒரு ஹாஃப் ஆன் அவர் முன்னாடி நிகில்” என்று பதில் சொன்னாள்.

“நீயேன் லீவ் எடுக்கிறேன்னு சொல்லிட்டு, எடுக்கலை?” என்று ஷில்பா கேள்வி கேட்டாள். 

“ஒரு ஆர்டிக்கில் ஃபினிஷ் பண்ண வேண்டியது இருந்துச்சு! மிலா சொல்லலையா?” – நிகில். 

“சொன்னேன் நிகில்” – மிலா. 

“ஃபோன் ஏன் மறந்து வச்சிட்டுப் போன?” என்று, ஷில்பா அடுத்தக் கேள்வி கேட்டாள். 

“ஆஃபிஸ்-க்கு போற அவசரத்தில மறந்திடுச்சி”

“நம்பவே முடியலை” என்றாள், ஷில்பா சாப்பிட்டுக் கொண்டே! 

“உனக்கு என்ன கேட்கணுமோ, டேரைக்ட்டா கேளு?” என்றான் நிகில். 

ஷில்பா அமைதியாகிவிட்டாள்.

“என்ன கேட்கணும் நிகில்? ஒன்னும் புரியலை” என்றாள் மிலா சாப்பிட்டுக் கொண்டே. 

“அது அவளுக்குத்தான் தெரியும்” – நிகில். 

“இல்லை நிகில்! நேத்து ஒரு கால் வந்திச்சாமே??” என்ற ஷில்பாவின் குரல் கலவரப்பட்டு இருந்தது. 

“அதுக்கு?” என்றான் நிகில். 

“இந்த பிளான்ட் இஸ்யூ-ல நமக்கு ஏதும் பிராப்ளம் வந்திடுமோன்னு தோணுது” என்றாள் கவலை நிறைந்த குரலில். 

நிகில்… மிலா… இருவரும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, ஷில்பாவைப் பார்த்தனர்.

ஷில்பா கண்களில் தெரிந்த கலக்கத்தைப் பார்த்த மிலா… திரும்பி, நிகிலைப் பார்த்தாள். 

ஷில்பாவும் நிகிலைப் பார்த்தாள். 

இருவரின் பார்வையில் தெரிந்த கலக்கத்தைப் பார்த்தவன், இவர்களுக்கு விடயம் தெரிந்தால் இன்னும் பயப்படுவார்கள் என்று நினைத்தான்.

எனவே “அதெல்லாம் வராது ஷில்பா. நிம்மதியா சாப்பிடு!” என்றான் நிகில்.

“என்ன ப்ராபளம் நிகில்?” என்று மிலா கேட்டாள். 

“அதெல்லாம் ஒன்னுமில்லை மிலா” என்றவன், “ரெண்டு பேரும் சாப்பிட்டுக் கிளம்புங்க. அப்பார்ட்மென்ட் கீழ, ஹோலி செலிப்ரஷனுக்கு ரெடியாகிட்டு இருக்காங்க” என்று பேச்சை மாற்றினான். 

“ஹாங் ஷில்பா! இன்னைக்கு ஹோலி. ஆனா, காலையிலயிருந்து இன்னும் கலரே பூசிக்கலை. சீக்கிரம் சாப்பிடு. போகலாம்” என்று மிலா கொண்டாட்ட மனநிலைக்கு மாறினாள். 

சட்டென்று, மிலாவைப் போல் ஷில்பா மனம் மாறவில்லை! எனினும் சிரித்துக் கொண்டு, “சரி” என்று சாப்பிட ஆரம்பித்தாள்.

வேறு பேச்சுக்கள் பேசிக்கொண்டே, மூவரும் சாப்பிட்டு முடித்தனர். 

நேரம் 3:30 

மிலா, ஷில்பா இருவரும் ஹோலி கொண்டாட்டத்திற்காக, அந்தக் குடியிருப்பின் தரைத் தளத்திற்குச் சென்றுவிட்டனர். 

ஜெர்ரியுடன் சேர்ந்து நிகிலும் உறங்கிவிட்டான்.

ஒரு ஒன்றரை மணி நேரம் கழித்து…

நேரம் 5:00 (நேற்றைய மாலை நேரம்)

இன்னும் ஷில்பாவும் மிலாவும் வரவில்லை.

நிகில் உறங்கிக் கொண்டிருந்தான். ஆனால், ஜெர்ரி விழித்திருந்தான். 

உருண்டு புரண்டு எழுந்து… நிகிலின் மேல் ஏறி, ஜெர்ரி விளையாடத் தொடங்கிய பின்னரே… நிகில் விழித்தான். 

சற்று வினாடிகள், அதே நிலையில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். 

பின்னர், ஜெர்ரிக்கு மாலை உணவு கொடுக்க வேண்டும் என்று நினைத்து… நிகில் எழுந்தான். 

ஜெர்ரியைத் தூக்கிக் கொண்டு, சமயலறைச் சென்று…  மாலை உணவைத் தயார் செய்தான். 

அப்படியே வரவேற்பறையில் பால்கனியில் வந்து நின்று கொண்டு, அவனுக்கு ஊட்ட ஆரம்பித்தான்.

அங்கிருந்தவாறே, கீழே நடந்துகொண்டிருந்த ஹோலி கொண்டாட்டத்தை…  இருவரும் பார்த்தனர்.

வெகு நேரம் அங்கே நிற்க முடியவில்லை. காரணம், புழுக்கம் அதிகமாகத் தெரிந்தது. 

இன்று இரவு மழை வரும் என்று நினைத்துக் கொண்டு, நிகில் உள்ளே வந்துவிட்டான்.

நேரம் கடந்தது… 

நேரம் 6:30 

நிகிலும் ஜெர்ரியும் அமர்ந்து டிவியில் ரைம்ஸ் பார்த்துக் கொண்டிருந்தனர். 

அக்கணம் அழைப்பு மணி ஓசை!

‘யாரென்று தெரியும்?’ என்பதால், அலட்டிக் கொள்ளாமல் சென்று, நிகில் கதவைத் திறந்தான்.

வண்ணப் பொடிகளில் மூழ்கி எழுந்து வந்தவர்கள் போல, ஷில்பாவும்… மிலாவும் நின்றனர்.

“ரொம்ப நேரம் ஆயிடுச்சுல?” என்று கேட்டபடியே, ஷில்பா உள்ளே நுழைந்தாள். 

“ஜெர்ரி எந்திருச்சுட்டானா? அவனுக்கு ஈவினிங்…” என்று மிலா கேட்கும் போதே… 

“நான் கொடுத்திட்டேன்” என்றான் நிகில். 

பின் மிலாவும் ஷில்பாவும் சென்று, குளித்து முடித்து உடை மாற்றி வந்தனர். 

அதன்பின், மூவரும் பேசிக் கொண்டும்… ஜெர்ரியுடன் விளையாடிக் கொண்டும்… இரவு உணவு சமைத்தனர். 

இரவு, நேரம் 8:00 (நேற்றைய இரவு)

மீண்டும் மூவரும் சேர்ந்து அமர்ந்து, இரவு உணவு உண்டனர். 

நிரம்ப நாட்களுக்குப் பிறகு, மற்ற விடயங்கள் பற்றிப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர். 

அடுத்த ஒரு மணி நேரம், அப்படியே கழிந்தது… 

இரவு நேரம் 9:00

“ஷில்பா, லேட்டாகுது! மழை வேற வரும் போல. நீ கிளம்பு” என்றான் நிகில்.

“இன்னைக்கு டயர்டா இருக்கு, நீயே ட்ராப் பண்ணிடேன்” எனச் சோர்வுடன் கேட்டாள், ஷில்பா. 

“பேசாம இங்கயே தூங்கிட்டு, காலையில எழுந்திருச்சிப் போ” என்று மிலா யோசனை சொன்னாள். 

“இல்லை மிலா! நாளைக்கு ஒரு மீட்டிங் இருக்கு. கொஞ்ச ப்ரீபேர் பண்ணனும்” என்று மறுத்து, ஷில்பா எழுந்தாள். 

“நீ ஆஃபீஸிலருந்து நேரா இங்க வரலையா?” என்று நிகில் கேட்டான். 

“இல்லை. வீட்டுக்குப் போய் லேப்டாப் பேக் வச்சிட்டு, ஒரு செட் டிரெஸ் மட்டும் எடுத்திட்டு வந்தேன்” – ஷில்பா. 

“ஓ!” என்றவன், “பட், நான் எப்படித் திரும்பி வர??” என்று கேட்டான். 

“நீ, கார்லயே ரிட்டர்ன் வந்திடு. நாளைக்கு நான் கேப் அரேஞ் பண்ணிக்கிறேன்” என்றாள். 

“சரி, கார் கீ கொடு” என்று கேட்டு, நிகில் எழுந்தான். 

“டைன்னிங் டேபிள் மேல இருக்கு பாரு” என்று சொல்லி, ஷில்பாவும் எழுந்து கொண்டாள்.

“கார்ல போயிட்டு,  கார்லயே வரப்போற…  அப்போ நாங்களும் வர்றோமே” என்று மிலா, நிகிலிடம் கேட்டாள். 

சாவியை எடுத்துக் கொண்டே, நிகில் யோசித்தான். 

“மூனு பேரும் சேர்ந்து பேசிக்கிட்டே, கார் டிரைவ் போனா சூப்பரா இருக்கும்” என்று ஷில்பா ஆசையாகச் சொன்னாள். 

“சரி, எதுனாலும் சீக்கிரம் கிளம்புங்க” என்றவன், “நான் கார் எடுத்திட்டு, கீழ போர்டிகோ-ல வெய்ட் பண்றேன். வாங்க” எனச் சொல்லிக் கிளம்பிவிட்டான்.

அடுத்த இரண்டு நொடிகளில்…

மிலா, ஷில்பா மற்றும் ஜெர்ரி… கிளம்பிக் கீழே சென்றனர். 

கார் கிளம்பியது.

நேரம் 9:30 (நேற்றைய மழை இரவு)

அதாவது, சம்பவம் நடந்த இரவு! 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!