நிரல் மொழி 12.3

நிரல் மொழி 12.3

திருமணம் முடிந்து இருபது நாட்கள் கழித்து… 

விமானம் ஏறியதும், ‘அழாத! கொஞ்ச நேரம் தூங்கு, சரியாயிடுவ’ என்று நிகில் சொல்லியதும், கண்மூடி அமைதியானவள்தான்… சென்னை விமான நிலையம் வரும்வரை  எதுவும் பேசவில்லை. 

சென்னை வந்த புதிதில்…

ஏற்கனவே நிகில் வசித்து வந்த வீடு என்பதால், பெரிதாக எதுவும் செய்யத் தேவை இருக்கவில்லை. 

நிகில் பேசினால், மிலா பேசுவாள். ஏதேனும் கேள்வி கேட்டால், பதில் சொல்வாள். மற்ற நேரங்களில், எதுவும் பேசமாட்டாள்.

பேசத்தான் செய்வதில்லை! ஆனால், சில நேரங்களில் அங்கங்கே நின்று அவனைப் பார்ப்பாள். 

நிகில் அவளைப் பார்த்தால்… வேறு புறம் முகத்தை திருப்பிக் கொண்டு, வேலை செய்ய ஆரம்பித்துவிடுவாள்.

மிலா இப்படிச் செய்கின்ற போதெல்லாம்… டெல்லி பார்க்கில், அவள் பார்த்ததுதான் நிகிலிற்கு நியாபகத்தில் வரும்!

திருமணம் முடிந்த பின்னும், அப்படியே இருக்கிறாள் என்று நினைத்து… நிகில் சிரித்துக் கொள்வான்.

சில சமயங்களில்… அவள் இப்படிப் பார்த்தால், அருகில் சென்று ‘எதும் வேணுமா மிலா?’ என்று கேட்பான்.

‘வேண்டாம்’ என்பது போல் தலையை ஆட்டிவிட்டு, வேறு அறைக்குச் சென்று விடுவாள். 

அவளுக்குத் தன்னைப் பிடிக்கின்றது என்று அவனுக்குத் தெரியும்! 

ஆனால், ‘அம்மாவின் தனிமை’ என்ற எண்ணத்தில், அவளால் சகஜமாக இருக்க இயலவில்லை என புரிந்து கொண்டான். 

எனினும், முதல் மூன்று சந்திப்பில் பேசியது போல… எப்போது தன்னிடம் பேசுவாள்? என்ற ஆசையும் கொண்டான்! 

ஒரு வாரம் முடிந்த பிறகு… 

ஓரளவிற்கு வீடும், அந்தப் பகுதியும் அவளுக்குப் பழகியது! ஆதலால், நிகில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான். 

சமைப்பது… வீட்டு வேலைகளில் செய்வது… என்று மிலா, தன் நேரங்களைக் கடத்தினாள். 

பத்து நாட்கள் சென்ற பிறகு… 

அன்று இரவு உணவு உண்ட பின்…

“மிலா, ஜஸ்ட் ஒரு வாக் போயிட்டு வரலாம்! வா” என்று, வெளியே அழைத்துச் சென்றான்.

இருவரும், அவர்கள் வீடு இருந்த பகுதியைச் சுற்றி நடந்து வந்தனர். 

முதல் நாள்… வீடுகளை வேடிக்கைப் பார்த்த வண்ணம், அவனுடன் நடந்து வந்தாள். 

இரண்டாவது நாள்… நிகில் பேசினான். மிலா, அதைக் கேட்டுக் கொண்டே நடந்தாள். அவளையும் பேச வைத்தான். 

அடுத்து வந்த நாட்களிலும், இரவு நேரங்களில்… இருவரும் பேசிக் கொண்டு நடப்பது, தொடர்ந்தது. 

அதன் பின் வந்த ஒரு நாளில்…

இரவு உணவு உண்ட பின்… 

“இன்னைக்கு வாக்கிங் வேண்டாம். பைக் ரைடு போகலாமா?” என்று கேட்டான். 

முதலில் யோசித்தவள்… பின், ‘சரி’ என்று கிளம்பி விட்டாள். 

அதுதான் முதல் முறை! மிலாவிற்கு நிகிலுடனான பைக் பயணம்!! 

இரவு நேரத்து சென்னையின் சாலைகளை வேடிக்கைப் பார்த்தவாறே, மிலா பயணித்தாள். 

ஒரு போக்குவரத்துக்கு சமிக்கையில், பைக் நிற்கையில்… சாலை ஓரத்தில் இருந்த சாட் கடை மிலாவின் கண்களில் விழுந்தது. 

இரண்டு நொடிகள்… அதையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அவனுடனான முதல் சந்திப்பு நியாபகம் வந்தது.

‘யாரென்று தெரியாதவனிடம் போய், என்னென்ன கேள்விகள்? கேட்டோம்’ என்று நினைத்துப் பார்த்தாள். 

மிலாவிற்கு, லேசாகப் புன்னகை வந்தது. 

சட்டென, ‘அன்று பேசியது இவனுக்கு நியாபகம் இருக்குமா?’ என்ற கேள்வி வந்தது. 

கொஞ்சம் முன்புறம் சாய்ந்து, நிகிலைப் பார்த்தாள்.

ஹெல்மட் அணிந்திருந்தான்! முகம் தெரியவில்லை!!

அவளது செய்கைகளை, பைக்கின் கண்ணாடி வழியாக நிகில் பார்த்துவிட்டான். 

உடனே… ஹெல்மட்டைக் கழட்டி, பின்புறம் திரும்பி… “எனக்கும் நியாபகம் இருக்கு மிலா” என்றான். 

மேலும், “மிலா, வடா பாவ் வேணுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

அவள் மௌனமாக இருந்தாள்.

“மிலா…” என்று மீண்டும் அழைக்கும் போதே,

‘வேண்டாம்’ என்று மறுத்து தலையசைத்தாள். மேலும், மெல்ல சிரித்துக் கொண்டாள். 

அதன் பின் வந்த நாட்களிலும், அதே போல் பைக் பயணம் தொடர்ந்தது.

சில நேரங்களில்… பைக்கை நிறுத்தி, சாட் சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள்.

ஒருமாதம் சென்றிருந்த நிலையில்… 

டெல்லியில் இருந்து, அனைவரும் சென்னைக்கு வந்திருந்தனர். 

அம்மா வந்ததில்…  அம்மாவைப் பார்த்ததில்…  அவருடன் பேசிக் கொண்டிருப்பதில்…  மிலாவின் முகத்தில் அத்தனை சந்தோஷம் தெரிந்தது. 

ஆனால், மிலா…  தன் அம்மாவிடம் ஓர் மாற்றத்தை உணர்ந்தாள்.

அது! திலகம், நிகிலின் குடும்பத்தினருடன் பழகும் விதம்! 

பாமினி, திலகம்…  இருவரும், ஒருவரை ஒருவர் பெயர் சொல்லி அழைத்துப் பேசிக் கொண்டார்கள். 

ஆஷாவும், மீராவும்… ‘அம்மா’ என்று விளித்து, திலகத்திடம் பேசினார்கள்.

திலகமும், அவர்களிடம்… உரிமையாகப் பேசிப் பழகினார். 

ஒரு வாரம் சென்னையில் இருந்துவிட்டு, நால்வரும் மீண்டும் டெல்லி கிளம்பிச் சென்றார்கள். 

அன்று காலை, விமான நிலையத்தில் அவர்களை விட்டு வந்ததிலிருந்து…  மிலா, நிகிலிடம் எதுவும் பேசவில்லை. 

‘அம்மா சென்ற வருத்தத்தில் இருப்பாள்’ என்று நிகிலும் எதுவும் கேட்கவில்லை. 

ஆனால், நிகில் அலுவலகம் செல்லவில்லை. அவளுக்குத் துணையாக வீட்டில் இருந்தான்.

சமையல் செய்து கொண்டே, மிலா யோசிக்க ஆரம்பித்தாள்.

இந்த ஒரு மாத காலத்தில்… திலகம் மிலாவிடம் கைப்பேசியில் சொல்லுவது உண்டு,  

‘வார நாட்களில், வேலைப்பளு அதிகமாக இருப்பதால் நேரம் செல்வதே தெரியாது. 

ஆனால், வார இறுதிகளில்… ஒன்று, திலகம் பாமினி வீட்டிற்குச் சென்றுவிடுவார். 

அல்லது, அவர்கள் மூவரும், ‘நம் வீட்டிற்கு வந்துவிடுவார்கள்’ என்று!

தன்னைத் தேற்றுவதற்காக, அம்மா அப்படிச் சொல்கிறார் என்று நினைத்தாள். 

ஆனால், இங்கிருந்த நாட்களில் அவர்கள் நால்வரும் பழகும் விதமே சொல்லியது… டெல்லியில் அவர்களின் வாழ்க்கை முறை!

‘அம்மா தனியாக இல்லை’ என்ற எண்ணம், அவளுக்கு அத்தனை மகிழ்ச்சியைத் தந்தது.

மேலும், திலகம்… நிகிலின் குடும்பத்துடன் பொருந்திப் போனதை பார்த்தவளுக்கு, ‘தான் அப்படி இல்லையே?!’ என்ற எண்ணம் வந்து, வருத்தத்தை தந்தது.  

இனிமேல் அப்படி இருக்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டாள்! 

ஒரு நிம்மதி வந்தது.

அதே மன நிலையில் சமைத்துக் கொண்டிருந்தவளுக்கு, நிகிலின் நியாபகம் வந்தது. 

சமயலறையில் இருந்து எட்டிப் பார்த்தவளுக்கு, வரவேற்பறையில் அவன் அமர்ந்து வேலை செய்வது தெரிந்தது.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்… தினமும் கைப்பேசியில், அவன் பேசுகையில்… 

திருமணம் முடிந்து டெல்லியில் இருந்த நேரங்களில்… 

இங்கு வந்த பிறகான, இந்த ஒரு மாதத்தில்… 

முதல் மூன்று சந்திப்பில், பேசிய அளவு அவனிடம் தான்  பேசுவதில்லையே?_என்று எண்ணம் வந்தது.

அது, அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. 

அடுத்த இரண்டு நிமிடங்களில்… 

சமையலை முடித்ததும், வரவேற்பறை சென்று… “சாப்பிடுறியா நிகில்?” என்று கேட்டாள்.

“இப்போ வேண்டாம். கொஞ்ச நேரம் கழிச்சு” என்று சொன்னதும், அவன் எதிரில் அமர்ந்துகொண்டாள்.

அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

தற்செயலாக நிமிர்ந்தவன், அவள் பார்ப்பதைப் பார்த்தான். 

வழக்கம் போல், பார்வையை வேறு புறம் திருப்பாமல்… அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘என்னாச்சு இவளுக்கு? அவள் அம்மா சென்றதை நினைத்துக் கவலைப் படுகிறாளோ?’ என்று நினைத்தவன், “மிலா, நெக்ஸ்ட் ஒன் மன்த் கழிச்சு அத்தையை வரச் சொல்லலாம்” என்றான்.

“அம்மாவும் அப்படித்தான் சொல்லிட்டு போனாங்க” என்றாள். 

“ஓ!” என்றவன், மீண்டும் வேலை பார்க்க ஆரம்பித்தான். 

“நான், அதுக்காக உன்னைப் பார்க்கலை” என்றாள். 

நிமிர்ந்து பார்த்தான்.

‘தன் அருகில் வந்து அமருமாரு’ என கைகளால் சைகை செய்தாள். 

“என்ன மிலா?” என்று கேட்டுக் கொண்டே அருகில் சென்று அமர்ந்தான்.

“சாரி கேட்கணும் நிகில்” என்று, அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள். 

“யார்கிட்ட? எதுக்கு?” என்றான் புரியாமல்! மேலும், அவள் செயலில் புன்னகை செய்து கொண்டே! 

“அட! உன்கிட்டத்தான்-ப்பா” என்றாள் சட்டென எழுந்து!! 

“என்கிட்டயா?” என்றான் ஆச்சரியம் நிறைந்த குரலில்! 

“ஹாங்” என்று சொல்லி, மீண்டும் அவன் தோளில் சாய்ந்தாள். 

“அது, மேரேஜ் பிக்ஸ் ஆனதுலருந்து  நான்… நான்… உன்கூட சரியாவே பேசலை. ப்ச், யார்கிட்டயும் பேசலை… அதுக்காக சாரி” என்று சொன்னாள். 

“அம்மாவைப் பத்தின கவலை போயிடுச்சா??” என்று, அவளைப் புரிந்து கேட்டான். 

“ஹாங்! அம்மா ஹேப்பியா இருக்காங்க. ஆஷாக்கா…மீராக்கா எப்படி அம்மாகூட பேசுறாங்க?? எப்படி பார்த்துக்கிறாங்க? பார்க்கவே சூப்பரா இருக்கிதுல??” என்று கேட்டாள். 

“ம்ம்ம்” 

“இனிமே நானும் அவங்ககிட்ட நல்லா பேசுவேன்”

“ம்ம்ம்”

“ஷில்பாகிட்டயும் நல்லா பேசுவேன்”

“ம்ம்ம்”

“உன்கிட்டயும் நல்லா பேசுவேன்”

“பேசிக்கிட்டுதான இருக்க… ” என்று நிகில் சொன்னதும்… “ஹாங்” என்று சொல்லி, அவன் தோளிலிருந்து சரிந்து வந்து… மடியில் தலை சாய்த்துக் கொண்டாள். 

இருவரும், சற்று நேரம் அமைதியாக இருந்து… அந்த நிலையை ரசித்தனர். 

“நிகில்” 

“ம்ம்ம் சொல்லு” 

“அன்னைக்கு ஏர்போர்ட்-ல வச்சி ஒரு கொஸ்டின் கேட்டியே? அதுக்கு இப்ப ஆன்சர் பண்ணவா?” என்று, அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள். 

“அந்தக் கொஸ்டினுக்கு ஆன்சர் தெரியாமவா… மேரேஜ் பண்ணுவேன்னு நினைச்ச?”

“அப்புறம் ஏன் கேட்ட?” என்றாள் சந்தேகமாக! 

“நீ சொல்லிக் கேட்கணும்-னு தோணுச்சு?” என்றான் சந்தோஷமாக! 

“இப்ப சொல்லவா? கேட்கிறியா?” என்று ஆசையாக கேட்டாள். 

“ம்ம்ம்” என்றான் ஆசையுடன்! 

“எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் நிகில்” என்று, தன் அன்பை அழுத்திச் சொல்லிச் சிரித்தாள். 

“சரி! அப்போ ஃபர்ஸ்ட் டே… நீ கேட்ட கேள்விக்கு நானும் பதில் சொல்லவா??”

“எனக்குத் தெரியும் நிகில். ‘உனக்கு, என்னைய ரொம்பப் பிடிக்கும்னு’ ” என்று சொல்லி… மேலும் சிரித்தாள். 

அதன்பிறகும்… வெகு நேரம், அவன் மடியில் தலை சாய்த்துப் படுத்து, பேசிக் கொண்டே இருந்தாள். 

முகம் முழுவதும் மகிழ்ச்சியை வெளிப்படுத்த… பார்க்கும் பார்வையிலே பாசத்தைக் காட்டும் வண்ணம்… நிகில், அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

இது அன்று!

நிகில் வீட்டில்…

இனி இன்று…

மருத்துவமனையில்!

முகம் முழுதும் கவலை நிரம்பிக் கிடக்க… பார்க்கும் பார்வை பரிதவித்துக் கொண்டிருக்க… நிகில், மிலாவை நினைத்துக் கொண்டிருந்தான்.

மனதின் வலி அதிகமானதால், ‘எப்படி இருக்கிற மிலா?’ என்று வாய்விட்டுக் கேட்டான். 

எப்படி இருக்கிறாள்?

ஷில்பாவிற்கு நடந்தது அவளுக்குத் தெரியுமா?

தெரிந்திருந்தால், எப்படித் துடித்திருப்பாள்? 

ஆறுதல் தேடியிருப்பாள் அல்லவா? 

இதோ…  அண்ணி, நான், அம்மா ஒருவருக்கு ஒருவர் பேசி… ஒருவரின் சோகத்தை ஒருவர் தாங்கிக் கொள்கிறோம்! 

மிலா… தனியாக இருந்து, எப்படித் தாங்குவாள்? 

தனியாக?? இல்லை! மிலா தனியாக இல்லை. ஜெர்ரி கூட இருக்கிறான். 

ஜெர்ரி, தன்னைத் தேடுவானே?! எப்படி அவனைச் சமாளிப்பாள்?

சட்டென எழுந்து விட்டான். 

இருவரும் எங்கிருந்தாலும், ஓடிச் சென்று அழைத்து வந்து… தன் கைவளைவிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனதில் ஒரு வேகம் வந்தது. 

ஆனால், எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்று தெரியாதே? மனம் சுணக்கம் கொண்டது. 

இருவரின் புகைப் படங்களையாவது பார்க்கலாம் என்று, தன் கைப்பேசியை எடுத்தான்! 

அந்த நேரம்தான் நியாபகம் வந்தது, கைப்பேசியில் உள்ளதை எல்லாம் வேறு இடத்திற்கு மாற்றிவிட்டது. 

‘ச்ச்சே’ என்று கைப்பேசியைத் தூக்கிப் போட்டுவிட்டான்.

ஒரு கையால் தலையைப் பிடித்துக் கொண்டு… கண்களை மூடி…  அவர்கள் இருவரையும் காட்சிப்படுத்திப் பார்க்க நினைத்தான். 

நேற்று காலையில், மெத்தையில் இருவரும் அருகருகே படுத்திருந்தது…  

ஜெர்ரியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டது…  

அதற்கு அவன் சிரித்தது…  

மிலாவின் கன்னத்திலும் அழுந்த முத்தம் கொடுத்தது…  

கண்கள் சுருக்கி, அதை அவள் வாங்கிக் கொண்ட விதம்…  

நிகில் கண்களுக்குள் காட்சியாக வந்தது.  

இது, மிலா… ஜெர்ரி… இருவரும், நிகில் அன்பில், அரவணைப்பில் இருந்த பொழுது!!

மிலா, சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

அவள் நெற்றிக் காயத்தின் ரத்தம், உறைந்து போயிருந்தது…  

உதட்டின் ஓரத்திலும் உறைந்த ரத்தம்… 

கைகளில் சிராய்ப்புகள்… 

உள்ளங்கையில் ரத்தக் கறை…  

கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது…  

அவளது உடல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தது… 

‘பயமாயிருக்கு நிகில்! உடனே உன்னைப் பார்க்கணும்’ என வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது… 

அவளின் மடியில் ஜெர்ரி படுத்திருந்தான்… 

இது, மிலாவும்… ஜெர்ரியும்… ‘நல் கேர்’ கட்டுப்பாட்டில் இருக்கின்ற பொழுது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!