நிரல் மொழி 3

“நான் மிலா…” என்று பேச ஆரம்பித்தவள், தன் கைப்பையைத் தூக்கி… முன்னே இருந்த பிளாஸ்டிக் மேசை மீது வைத்தாள். 

நிகில் இன்னும் புரியாமல் பார்த்திருந்தான்.

“கரெக்ட் டைம்-க்கு வந்தாச்சோ?” என்று கேள்வி கேட்டாள்.

‘எதற்காகக் கேட்கிறாள்? ஏன் கேட்கிறாள்?’ என்று இன்னும் புரிபடாமல் பார்த்தான்.

“நான் பஸ்-ல வந்தேனா, அதான் லேட்டாயிருச்சு” என்று காரணம் சொன்னாள்.

‘இவள்தான், காலையில் அண்ணி சொன்ன பெண்ணா?’ என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்தால், அவளிடம் பேசாமல் இருந்தான்.

“உங்க அக்கா கூட வருவாங்கன்னு சொன்னாங்க. வரலையா?” என்று படபடவென்று கேட்டாள்.

‘அண்ணியைத்தான் அக்கா என்கிறாளா?’ என்று குழம்பியவன், “நீ… ?” என்று சந்தேகமாகக் கேட்டான்.

“என் பேர் மிலா! பி.ஏ படிச்சிருக்கேன்” என்று தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள்.

‘பி.ஏ’ என்று சொன்னதுமே, ‘இது வேறு யாரோ’ என்று முடிவிற்கு வந்தவன், ஏதோ சொல்ல வாயைத் திறந்தான்.

“ஃபர்ஸ்ட், நான் சொல்லிக்கிறேன். அப்புறம் நீ பேசிக்கோ” என்று சொல்லி, அவனைப் பேசவிடாமல் தடுத்தாள்.

அக்கணம், நிகில் ஆர்டர் செய்த பேல் பூரியைக் கொண்டு வந்து வைத்த சிப்பந்தி, “ஆப்கோ கியா சாயியே?” என்று மிலாவிடம் கேட்டான்.

“ம்ம்ம்” என்று யோசித்தவள், “ஆர்டர் பண்ணிட்டு, நானே பே(pay) பண்ணிகிக்கவா?” என்று நிகிலிடம் கேட்டாள்.

‘ம்ம்ம்’ என்று தலையை ஆட்டினான்.

“ஏக் வடா பாவ்” என்று மிலா சொன்னதும், சிப்பந்தி எடுத்து வரச் சென்றுவிட்டான்.

சிப்பந்தி சென்றதும், நிகிலைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

புரியவேயில்லை! அப்புறம் எப்படி புன்னகை செய்ய என்பது போல் நிகில் இருந்தான்.

“நான் பி.ஏ படிச்சிருக்கேன். வேலை எதுவும் பார்க்கலை. எனக்கு இந்த மேரேஜ் வேண்டாம். நீ உங்க வீட்ல… இல்லைன்னா என் அம்மாகிட்ட ‘இந்தப் பொண்ண பிடிக்கலைன்னு’ சொல்லிடு” என்று கடகடவென தன் வேண்டுகோளை முன் வைத்தாள்.

‘வேறு யாரிடமோ சொல்ல வேண்டியதை, தன்னிடம் வந்து சொல்கிறாள்’ என்று நிகிலிற்குத் தெளிவாகப் புரிந்தது போயிற்று.

அவன் எதுவும் சொல்லாமல் இருப்பதைக் கண்டவள், “ப்ளீஸ் சொல்லிடேன்” என்று கெஞ்சினாள்.

“அதை நீயே உங்க அம்மாகிட்ட சொல்ல வேண்டியதானா?” என்று பேச ஆரம்பித்தான்.

“நானா? நான் சொன்னா, ரொம்பத் திட்டுவாங்க” என்று சத்தமாகச் சொன்னவள், “ஏற்கனவே எவ்ளோ திட்டு வாங்குவேன் தெரியுமா?” என்று தனக்குள் முணுமுணுத்தாள்.

ஏதோ ஓர் ஆர்வம் உந்த, “ஏன் மேரேஜ் வேண்டாம்?” என்று கேட்டான்.

“எனக்கு என் அம்மா கூடத்தான் இருக்கனும். அவங்களை விட்டு எங்கேயும் போகக் கூடாது. அதனாலதான் சொல்றேன்… ஏதாவது காரணம் சொல்லி, இந்தப் பொண்ண பிடிக்கலைன்னு சொல்லிடு” என்று மீண்டும் அவன் முகத்தைப் பார்த்துக் கெஞ்சினாள்.

“அது என்னாலே முடியாதே”

“ஏன்? ஏன் முடியாது?? உனக்கு என்னை பிடிச்சிருக்கா??” என்று தடாலடியாக ஒரு கேள்வி கேட்டாள்.

‘என்ன சொல்ல?’ என்று ஒரு நிமிடம் தடுமாறினான்.

அதற்குள், “கேட்கிறேன்ல! பதில் சொல்லு” என்றாள்.

“அது.. அது வேற”

“அப்போ முடியாதா?? என்னப்பா நீ!! நான் இவ்வளவு சொல்றேன். புரிஞ்சிக்காம? ஏன் இப்படி பண்ற?” என்று புலம்பினாள்.

“இவ்வளவு சொன்னதலாம் சரி! பட், யார்கிட்ட சொல்லணுமோ அவங்ககிட்ட சொல்லியிருக்கனும்” என்று அவளுக்குப் புரிய வைக்கப் பார்த்தான்.

அவன் சொன்னதை நகத்தைக் கடித்துக் கொண்டு யோசித்தாள்.

“அப்போ… அந்தப் பையன்… நீ.. இல்லையா?” என்று கண்டு பிடித்தாள்.

‘இல்லை’ என்று மறுத்து தலையசைத்தான்.

அக்கணம், சிப்பந்தி வந்து “வடா பாவ்” என்று ஒரு காகிதத் தட்டை வைத்துவிட்டுச் சென்றான்.

மிலா அமைதியாகிவிட்டாள். அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் உட்கார்ந்திருந்தாள்.

சட்டென, அந்த உணவகத்தைச் சுற்றி முற்றிப் பார்த்தாள்.

“என்ன பார்க்கிற?” என்று கேட்டான்.

“அந்தப் பையன் இருக்கிறானா-ன்னு தேடறேன்?” என்று சொன்னாள்.

“யாருன்னு தெரியாதா? போட்டோ கூட பார்க்கலையா??”

“ம்கூம் பார்க்கலை!” என்று தலையசைத்தவள், “என் அம்மாவும்.. அந்தப் பையன் வீட்ல உள்ளவங்களும் பார்த்துப் பேசிட்டாங்க” என்றாள்.

“சரி”

“அந்தப் பையன்… என்னைப் பார்த்துப் பேசணும்னு சொல்லிருக்கான். அதான், அவங்க அக்காவும்… அவனும்… இங்க வர்றதா… ” என்று வார்த்தைகளை மென்று விழுங்கினாள்.

“அதுக்காக! உங்க அம்மா உன்கிட்ட போட்டோ காட்ட மாட்டாங்களா?”

“அரே! யேஸா நஹீ” என்று பட்டென்று இந்தியில் ஆரம்பித்தாள்.

நிகில் ஒரு நொடி அதிர்ச்சியை வெளிப்படுத்தினான். இருந்தும், “பிர் கேய்ஸே” என்றான்.

“அது.. அம்மா மேட்ரிமோனி ஐடி தந்து, போட்டோ பார்க்கச் சொன்னாங்க! பட், நான்தான்… பிடிக்கலைன்னு சொல்றதுக்கு… எதுக்கு போட்டோ பார்க்கனும்-னு… பார்க்கலை” என்றாள்.

“பிடிக்கலைன்னாலும்… யார்கிட்ட பிடிக்கலைன்னு சொல்றதுக்காகப் பார்த்திருகணும்-ல?”

“பார்த்திருக்கணும்! என் தப்புதான். சாரி” என்று மன்னிப்பு கேட்டாள்.

“சரி, அப்புறம் நான்தான்னு எப்படி முடிவு பண்ண?”

“உள்ளே வர்றப்போ… நீ மட்டும்தான் தமிழ் பையன் மாதிரி இருந்த. அதான்… சாரி” என்று மீண்டும் தன் தவறானப் புரிதலை எண்ணி மன்னிப்புக் கேட்டாள்.

“பரவால்ல!” என்றவன், ” ‘என்ன செய்ய-ன்னு?’ உங்க அம்மாக்கு ஃபோன் பண்ணி கேளு” என்றான்.

மட்டியைக் கடித்துக் கொண்டு, அசையாமல் இருந்தாள்.

“என்னாச்சு?”

“அம்மா நல்லா திட்டப் போறாங்க. நான் வீட்டுக்குப் போறேன்” என்று எழுந்து செல்லப் போனவளை,

“மிலா” என்று அழைத்தான்.

அவள் திரும்பியதும், “இது” என்று வடா பாவைக் காட்டினான்.

‘இது வேற இருக்கா’ என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு, அந்தக் காகிதத் தட்டைக் கைகளில் எடுத்துக் கொண்டாள்.

மேலும், “பில் தரச் சொல்றீயா? நான் பே பண்ணிட்டுப் போறேன்” என்றாள்.

“சரி… நான் கொண்டு வரச் சொல்றேன் . நீ உட்கார்ந்து சாப்பிட்டு போ”

சட்டென உட்கார்ந்தாள். ஆனால் சாப்பிடவில்லை. மீண்டும், சுற்றிலும் தேட ஆரம்பித்தாள்.

“இன்னும் தேடறியா?”

“ஹாங்” என்றவள், வடா பாவை கொஞ்சமாகப் பிய்த்து வாயில் வைத்துக் கொண்டே, மீண்டும் தேடினாள்.

“எத்தனை மணிக்கு வர்றதா சொன்னாங்க??”

“பாரா பஜேக்கே”

“பண்ணன்டு மணிக்கு வரச் சொன்னதுக்கு… இப்ப வந்தா? எப்படி வெயிட் பண்ணுவாங்க??”

அவன் பேசுவதைக் கவனிக்காமல், கடைக்கு வெளியே எட்டிப் பார்த்து தேடினாள்.

“இவ்ளோ கூட்டத்துல எப்படித் தேடுவ? அந்தப் பையன் மேட்ரிமோனி ஐடி இருக்கா?”

“ஐடி வீட்ல இருக்கு” என்றவள், கண்களை நாலாபுறமும் சுழலவிட்டுத்  தேடினாள்.

“மிலா” என்றான்.

அவள் கவனிக்கவில்லை.

“மிலா” என்று மேசையில் தட்டினான்.

“ம்ம்ம்” என்று அவனைப் பார்த்தாள்.

“ஒன்னு உங்க அம்மாகிட்ட ஃபோன் பண்ணிக் கேளு. இல்லை, பேசாம வீட்டுக்குப் போ. இப்படி… தேடறது நல்லா இருக்காது” என்று அறிவுரை வழங்கினான்.

“ஹாங், அதான் கரெக்ட். நீ பில் கொண்டு வரச் சொல்லு” என்று உம்மென்று இருந்து கொண்டாள்.

அதற்கு மேல் எதுவும் பேசாமல், சிப்பந்தியைப் ‘பில்’ கொண்டு வரச் சொன்னான்.

அடுத்த நொடியிலிருந்து, அவளைப் பார்க்க ஆரம்பித்தான்.

பளிச்சென்று ஆரஞ்சும், கருப்பும் சேர்ந்த வண்ணத்தில் இருந்தது அவளது கைப்பை. சோவிகளும், சிறு சிறு பாசிகளும்… வட்ட வடிவ கண்ணாடிகளும்… அதை அலங்கரித்தன.

பிங் நிறத்தில் குர்த்தி அணிந்திருந்தாள். குர்த்தியின் கைகளில் ஊதா நிறத்தில் பாம்-பாம்-கள் தொங்கின.

பக்கவாட்டிலிருந்து பின்னலிடப்பட்ட நீளமான கூந்தல். பின்னலை விட, வெளியில்தான் முடிகள் அதிகமாகத் தொங்கின. பேருந்தில் வந்ததின் விளைவாக இருக்கலாம்!

வந்த பொழுது இருந்த துறுதுறுப்பு, இப்பொழுது இல்லை.

கண்கள் இரண்டும் ‘அம்மாவிடம் திட்டுவாங்குவோம்’ என லேசாகக் கலங்கி இருந்தன.

இவனைத் தவறாக நினைத்துப் பேசிவிட்டோமே என்ற கூச்சம், அவளிடம் தெரிந்தது.

சாப்பிடுவதற்குப் பணம் தரப் போகிறோம் என்பது போல் இல்லாமல் தயங்கித் தயங்கிக் கொறித்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள், சிப்பந்தி ரசிதைக் கொண்டு வந்து வைத்தான். நிகில் எடுத்துப் பார்த்தான்.

“எவ்வளவுன்னு சொல்லு? நானே கொடுத்திடறேன்” என்றாள் மீண்டும்.

“முப்பத்தி ஐஞ்சு”

கொஞ்சம் முறைப்பது போல் அவனைப் பார்த்தவள், சட்டென அவனிடமிருந்து ரசீதை வாங்கிப் பார்த்தாள்.

“தேர்ட்டி பைவ்” என்று சொல்லி,  ரசீதை அவனிடம் தந்துவிட்டு, தன் பைக்குள் இருந்து பணத்தை எடுக்க ஆரம்பித்தாள்.

“நான் சொன்னது புரியலையா?”

“ஹாங்! தமிழ்-ல நம்பெர்ஸ்… தெரியாது”

“நீ… பாஃன் அன்ட் பிராஃட்-அப் இங்கேயா?”

“ஹாங்” என்றவள், பணத்தைச் சரியாக எண்ணி மேசையில் வைத்துவிட்டு, கடகடவென ஓடி விட்டாள்.

இரண்டு நிமிடங்களில்,

நிகிலும் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

வீட்டிற்கு வந்தான். அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான்.

கைப்பேசியை எடுத்து, மீண்டும் அந்தச் செய்தியைப் பார்த்தான்.

மும்பையில் சமையல் எரிவாயு விநியோகம் தடைபட்டது.

மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் குழாய்களின் வழியாக வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு விநியோகம், நேற்று மூன்று மணிநேரத்திற்கு மேல் தடைபட்டது.

இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும், இதுபோன்று நடப்பது இது முதல்முறை அல்ல. கடந்த இரண்டு மாதங்களில் பத்திற்கும் மேற்பட்ட தினங்கள் இதுபோல் சமையல் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது.

அதுவும் இந்த இரண்டு தினங்களில் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேல் எரிவாயு விநியோகம் தடைபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, அப்பகுதி மக்கள் பலரும், அந்தேரி மகாநகர் சமையல் எரிவாயு மையத்தில் முறையீடு செய்துள்ளனர்.

செய்தியை ஒரு முறைக்கு இருமுறை வாசித்தான்.

பின், இந்தச் செய்தி மும்பை பத்திரிக்கைகளில் வந்திருக்கிறதா? என்று சிறிது நேரம் கைப்பேசியை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

‘மும்பை மிரர்’ போன்ற  பத்திரிகைகளில் வந்திருந்தது.

‘ஓகே’ என்று சொல்லி, கைப்பேசியை வைத்துவிட்டு… தன் மடிக்கணியை எடுத்தான். கணினியைத் திறந்து, சமூக வலைத்தளங்களைப் பார்க்க ஆரம்பித்தான்.

கவனம் முழுவதும் கணினித் திரையிலே இருந்ததால், சற்று நேரத்திலே நிகிலின் கண்கள் சிவந்திருந்தன.

மாலை, அவனது அம்மா… அண்ணிகள் இருவரும் வேலையை முடித்து வரும்வரை… அவன் இருந்த இடத்திலிருந்து நகரவே இல்லை.

அனைவரும் வந்த பின்னர், அவர்களுடன் சேர்ந்து இரவு உணவு சமைப்பது… அண்ணன்களுடன் வீடியோ சாட் செய்வது… அண்ணிகளுடன் பேசுவது… என்று நேரத்தைக் கழித்தான்.

அன்று அப்படியே கழிந்தது.

மிலாவின் வீடு…

மிலாவின் வீடு அளவில் மிகச் சிறியது. ஒரு சமையலறை, ஒரு வரவேற்பறை மற்றும் ஒரு சிறு படுக்கையறை மட்டுமே!

வரவேற்பறையில் இருந்த மிலா, அம்மா வந்தால் என்ன சொல்வார்கள் என்ற கலக்கத்தில் அமர்ந்திருந்தாள்.

வேலைக்குச் சென்ற மிலாவின் தாயார், வீட்டிற்கு வந்தார். அவர் முகத்தில் களைப்பு தெரிந்தது.

அவர் எப்போது திட்ட ஆரம்பிப்பார் என்று அவர் முகத்தையே மிலா பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால், அவர் எதுவுமே திட்டவில்லை. ஏன்? எதுவும் பேசக்கூட செய்யவில்லை.

வீட்டிற்குள் நுழைந்தவர் நேரே படுக்கையறைக்குச் சென்றார். கைப்பையை வைத்துவிட்டு, முகம் கை கால்கள் கழுவி வந்தார்.

அவர் முன் சென்று, “ம்மா” என்று நின்றாள்.

அவளை விலக்கிவிட்டு, சமையலறை நோக்கிச் சென்றார்.

அடுப்பைப் பற்ற வைத்து, பாலை சூடு செய்தார்.

“ம்மா, சாரி-ம்மா” என்று அவர் முகத்தைப் பிடித்து திருப்பினாள்.

அவள் கைகளைத் தட்டிவிட்டு, இரண்டு டம்பளரை எடுத்தார்.

“ம்மா” என்று ஆரம்பிக்கும் போதே,

“பேசாத மிலா” என்றார் கோபத்துடன்.

“ம்மா… நான்…”

“பேசாதன்னு சொன்னேன்ல” என்று கத்தியவர், “அந்தப் பையன் வீட்ல இருந்து ஃபோன் பண்ணாங்க” என்றார்.

அமைதியாக நின்றாள்.

” ‘என் பையனும் பொண்ணும் ரொம்ப நேரம் வெயிட் பண்ணிப் பார்த்திட்டு, வீட்டுக்கு வந்திட்டாங்க..

உங்க பொண்ணுக்கு விருப்பமில்லை போல… இது வேண்டாம்-ன்னு’

சொல்றாங்க… இப்போ நான் என்ன செய்ய சொல்லு?” என்று கோபப்பட்டார்.

“ம்மா… கொஞ்சம் லேட்டாயிடுச்சி”

“அதெப்படி லேட்டாகும்? வேணும்னே லேட்டா போயிருக்க”

அமைதியாக இருந்தாள்.

“லேட்டாகிடக் கூடாதுதான, ஆட்டோ-ல போகப் பைசா கொடுத்தேன். அப்புறம் ஏன் லேட்டாச்சு?” என்று சத்தமாகக் கேட்டார்.

மீண்டும் அமைதியாக இருந்தாள்.

“உனக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சா, எனக்கு ஒரு கடமை முடியும்னு நினைக்கிறேன். கொஞ்சம் நிம்மதியா இருப்பேன். ஏன் மிலா, உனக்கு அது புரியாதா?” என்றவர் இரு டம்பளரில் தேநீர் தயாரித்து, அதில் ஒன்றை மிலாவிடம் கொடுத்தார்.

“ம்மா” என்று வாங்காமல் நின்றாள்.

சமையல் மேடையில் வைத்து விட்டு, வரவேற்பறையில் சென்று அமர்ந்து கொண்டார்.

தேநீரை எடுத்துக் கொண்டு, மிலாவும் அவர் அருகில் வந்து அமர்ந்தாள்.

இருவரும் தேநீர் குடித்தனர்.

“மிலா”

“ம்மா, இனிமே இதுமாதிரி…” என்று ஆரம்பிக்கும் போதே,

‘நிறுத்து’ என்பது போல் கை  காட்டினார்.

“ஒன்னு வேலைக்குப் போ… இல்லை, கல்யாணம் பண்ணிக்கோ. இப்படி இருக்காத” என்றார்.

“சரி அம்மா” என்றாள் அழகை வரும் குரலில்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

இவர் மிலாவின் தாயார்… திலகம்.

இளங்கலை படிப்பு முடிந்ததும், வேலை கிடைத்து டில்லி வந்தார்.

தன்னுடன் வேலை பார்த்து வந்த டில்லியைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் உறவுகள் என்று பெரிதாக யாரும் இல்லாததால், தனித்தே வாழப் பழகிக் கொண்டார். 

கணவன், மனைவி என்று இருவரும் வேலை பார்த்தனர்.

மிலா பிறந்தாள்… அழகான குடும்பம்… நிறைவான வாழ்க்கை… என்று வாழ்ந்து வந்தார்.

ஆனால், இதெல்லாம் மிலா கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படிக்கும் வரைதான்!

அந்த வருடத்தில்தான், திலகம் தன் கணவரை இழந்தார். சக்கரை நோயுடன் மஞ்சள் காமாலையும் சேர்ந்து கொண்டதால், இந்த இழப்பு!

அதன் பின், இந்த இரண்டு வருடங்கள்… வீட்டையும், மிலாவின் படிப்பையும்…  தன் வருமானத்தைக் கொண்டு திலகம் பார்த்துக் கொள்கிறார்.

கொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும், அது ஒன்றும் பெரிய விடயமல்ல!

ஆனால், இப்பொழுதெல்லாம் திலகத்திற்கு ஒரு பயம் வருகிறது! அது, தனக்குப் பிறகு மிலாவை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற பயம்!!

ஒன்று அவளுக்கு வேலை கிடைக்க வேண்டும்… இல்லை, திருமணம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

அதற்கான முயற்சிகளும் எடுக்கிறார்.

ஆதலாலே, இவ்வளவு பேச்சுக்கள்.

ஆனால் மிலா?

உறவுகள் இல்லாமல் வளர்ந்ததாலும், ஒற்றைப் பிள்ளை என்பதாலும்… பொறுப்புகளைப் பற்றிப் பெரிதாகச் சொல்லிக் கொடுத்து, மிலா வளர்க்கப்படவில்லை. 

தந்தையின் மறைவிக்குப் பின், வளால் படிப்பில் சரியாகக் கவனம் செலுத்த இயலவில்லை. சுமாராகப் படித்துத் தேர்ச்சி பெற்றாள்.

திடீரென்று அவளால் பொறுப்ப்பாகவோ, பக்குவப்பட்டோ நடந்து கொள்ள இயவில்லை.

மேலும், அவள் படிப்பை முடித்து ஆறு மாதங்கள் ஆகிறது. இன்னும் வேலை கிடைத்தபாடில்லை!

இன்னொன்று,

தான் திருமணம் முடிந்து சென்றுவிட்டால், அம்மாவை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற பயம் மிலாவிற்கு அதிகமாக வருகிறது.

இன்னும் இன்னும் நிறைய அறிவுரைகள் வழங்கிக் கொண்டே, திலகம் வேலை செய்தார். 

அதைக் கேட்கிறாளோ? இல்லையோ? ஆனால், அம்மாவைப் பார்த்துக் கொண்டே… மிலா அமர்ந்திருந்தாள்.

அன்று அப்படியே கழிந்தது.

******

Out of the story…

Gas pipeline related pictures.

News given in the story is regarding this…