நிரல் மொழி – 4

_20200803_115712

இரண்டு நாட்கள் நகர்ந்திருந்தன.

நிகில், மிலாவைப் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை.

முதல் நாள், அவளைப் பார்க்க வேண்டும் என்ற உணர்வு மனதில் வந்திருந்தது.

ஆனால், இரண்டாவது நாள் அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற உறுதி உயிரில் வந்திருந்தது.

இதற்கிடையில்…  ஷில்பாவிடம் சொன்னது போல், திரும்ப சென்னை செல்ல வேண்டி விமானப் பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தான்.

மூன்றாவது நாள்

காலை நேரம்…

சட்டா சௌக்கில் இருந்த ஓர் பூங்கா.

நல்ல குளிர் நிலவியது! கடினமான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கூட வியர்க்கவில்லை. அந்த அளவிற்கு குளிர்!!

சூழல், சற்றுத் தெளிவாக தெரியாத அளவிற்குப் பனிமூட்டம் இருந்தது.

அன்று விடுமுறை… ஆதலால், நிகில் தன் அண்ணிகளுடன் நடைப்பயிற்சிக்கு வந்திருந்தான்.

நான்கு சுற்றுகள் முடித்திருந்த நிலையில், நிகிலிற்கு ஒரு கைப்பேசி அழைப்பு வந்ததால், “அண்ணி நீங்க போங்க. நான் பேசிட்டு வர்றேன்” என்றான்.

‘சரி’ என்று மீராவும், ஆஷாவும் சென்றனர்.

சில வினாடிகள் பேசிவிட்டு, சுற்றிப் பார்க்கையில்… நிகில் மிலாவைப் பார்த்தான்.

சிறுவர்களுக்கான ‘மேரி கோ ரௌண்டில்’ அமர்ந்திருந்தாள்.

இந்த நேரத்தில்… இந்த இடத்தில்… அவளை எதிர்பார்க்கவில்லை என்ற ஆச்சர்யத்தை, அவன் முகம் வெளிக்காட்டியது.

அதேசமயம், ஆனந்தத்தை அவனது உள்ளம் உணர்ந்தது.

அவளை நோக்கிச் சென்றவன், அவள் அருகில் அமர்ந்தான்.

அவன் அமர்ந்ததால் ஏற்பட்ட ஒரு சிறு அசைவில், மிலா திரும்பிப் பார்த்தாள்.

நிகில் மெல்லச் சிரித்தான். ஆனால், மிலா சிரிக்கவில்லை.

“என்ன இங்க வந்து உட்கார்ந்திருக்க?” என்று பேச்சை ஆரம்பித்தான்.

“அம்மா வாக்கிங் போகச் சொன்னாங்க” என்றவள் குரலில் லேசான வருத்தம் இருந்தது.

“வாக்கிங் போகலையா?” என்று கேள்வி கேட்டு, அவளைத் திரும்பிப் பார்த்து அமர்ந்தான்.

அவள் பதில் சொல்லாமல், பூங்காவில் நடப்பவைகளை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.

‘ஏன் இப்படி?’ என நினைத்தவன், “மிலா, உங்க அம்மா திட்டினாங்களா?” என்று சந்தேகமாகக் கேட்டான்.

உடனே அவனைத் திரும்பிப் பார்த்தவள், “ஹாங்” என்றாள்.

“ஏன்?”

ஒரு இரண்டு நொடிகள் யோசித்தாள். பின், “மொபைல் ரிப்பேர் பண்ண கொடுத்த பைசால, டிரஸ் எடுத்தேன். அதான்…” என்று காரணத்தைச் சொன்னாள்.

“ம்ம்ம், அவங்க திட்டறதும் சரிதான்” என்று நேராகத் திரும்பி அமர்ந்தான்.

அமைதியாக இருந்தாள்.

“நீ செஞ்சது தப்புதான?” என்று அவளைப் பார்த்துக் கேட்டான்.

‘இல்லை’ என்று, அவளும் அவனைப் பார்த்துத் தலையசைத்தாள்.

“தப்பு இல்லையா?”

“ஹாங்… கல்தி நஹீ”

“ஏன்?”

“அட! அம்மாவோட பர்த்டே வருது-பா. என்கிட்ட ஏது பைசா? அதான், அம்மா கொடுத்த பைசா வச்சு அம்மாக்காக டிரஸ் வாங்கினேன்” என்றவள், சிறிது இடைவெளி விட்டு… “தோ கல்தி நஹீ” என்றாள்.

அவள் சொன்ன விதத்தை ரசித்துக் கொண்டிருந்தவன், அதன்பின் எதுவும் பேசாமல் இருந்தான்.

“மொபைல் இல்லைனாலும் பரவால்ல. பட், அம்மாவோட பர்த்டே ஸ்பெஷல் இல்லையா?” என்றாள்.

அவனுக்கு ‘என்ன சொல்ல?’ என்று தெரியவில்லை. அவளின் கூற்றை ஆமோதிக்கவும் இல்லை…மறுக்கவும் இல்லை. அமைதியாக இருந்தான்.

இரண்டு நிமிடங்கள் கழித்து, “இப்போ மொபைல் வச்சிருக்கியா, மிலா?” என்று கேட்டான்.

‘எதற்கு?’ என்பது போல் பார்த்தாள்.

“வச்சிருந்தா கொடு. நான் என்ன ப்ராப்ளம்னு பார்க்கிறேன்”

“உனக்கு மொபைல் ரிப்பேர் பண்ணத் தெரியுமா?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

“ம்ம்ம்”

“எப்படி?” என்று கேட்டுக்கொண்டே, தன் கைப்பையிலிருந்த கைப்பேசியை எடுத்துத் தந்தாள்.

அதை வாங்கியவன், அதன் ‘பேட்டரி’ ‘கீபேட்’ என ஒவ்வொன்றாய் ஆராய ஆரம்பித்தான்.

“நீ வேற வேல பார்க்கிறதா சொன்னாங்க? உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்” என்று ஒரு கேள்வி கேட்டாள்.

நிகில் சிரிக்க மட்டும் செய்தான்.

“ஏன் சிரிக்கிற?” என்று புரியாமல் கேட்டாள்.

‘ஒண்ணுமில்லை’ என்று தலை அசைத்தான்.

அந்த நேரம், குறுஞ்செய்தி வந்திருக்கிறது என்பதற்கான ஒலி கேட்டதும், டிராக் பேன்ட்டிலிருந்து தன் கைப்பேசியை எடுத்தான்.

குறுஞ்செய்தியைப் படித்துவிட்டு, கைப்பேசியைத் தன் மடிமேல் வைத்தான்.

மீண்டும் மிலாவின் கைப்பேசியை கண்கள் ஆராய்ந்தன.

அதன் கீபேட் இலக்கங்களை அழுத்திப் பார்த்தான். சில இலக்கங்களின் பொத்தான்கள் சரியாக வேலை செய்யவில்லை.

“மிலா” என்று அழைத்தான்.

அவன் அழைப்பை, அவள் கவனிக்கவேயில்லை. மாறாக, அவள் கவனம் முழுதும் அவனது கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தது.

“மிலா” என்றான் மீண்டும்.

“இதென்ன-ப்பா மொபைல்! ரொம்ப டிஃபரென்ட்டா இருக்கு” என்றாள், அவன் கைப்பேசியைப் பார்த்து வியப்புடன்!

“ம்ம்ம், இது கஸ்டமைஸ்டு மொபைல்”

கேள்வியாக, அவனைப் பார்த்தாள்.

“எனக்கு பிடிச்ச மாதிரி… தேவைப் படுற மாதிரி மொபைலை மாத்தி வச்சிருக்கேன்”

“ஓகோ! லேக்கின்… ” என்று, அவள் கேள்வி கேட்க நினைக்கும் போது…

“உங்க வீடு எங்க இருக்கு??” என்று, அவன் கேள்வி கேட்டான்.

“இந்த ரோட்ல டெட் என்ட் போய், லெஃப்ட்ல கட் பண்ணனும். அப்புறம் ரைட். ஆர் ஏக் ரைட். ம்ம்ம், வஹாங் செகன்ட் பில்டிங்”

“பில்டிங் பேரென்ன?”

“யாஸ் பேரடைஸ்”

“உங்க அம்மா வொர்க் பண்றாங்களா?”

“ஹாங்” என்றவள், திலகத்தின் வேலையைப் பற்றிச் சொன்னாள்.

அதன்பின் ஓர் இரண்டு நிமிடத்திற்கு அவன் எந்தக் கேள்வியும் கேட்காமல், அவளது கைப்பேசியைச் சரி செய்வதிலே கவனத்தைச் செலுத்தினான்.

அந்த இரண்டு நிமிடமும், அவனை இமை தட்டாமல் மிலா பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மிலா” என்று அழைத்து நிமிரும் போதுதான், அவள் தன்னைப் பார்க்கிறாள் என்று நிகிலிற்குத் தெரிந்தது.

சட்டென மிலா, தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.

லேசாகச் சிரித்துக் கொண்டே, “மிலா, இதை ரிப்பேர் பண்றதுக்கான டூல்ஸ் வீட்லதான் இருக்கு. ஸோ, நான் வீட்டுக்கு எடுத்திட்டுப் போய் ரிப்பேர் பண்ணித் தரட்டுமா?” என்று நிகில் யோசனையாகக் கேட்டான்.

“எப்போ தருவ?” என்றாள் மீண்டும் அவன் முகம் பார்த்து!

“ம்ம்ம், நாளைக்கு ஈவினிங்”

“இங்கேயே வந்து வாங்கிக்கவா?”

“ம்ம்ம்”

அதற்கு மேல் இருவரும் ‘என்ன பேச?’ என்று தெரியாமல் அப்படியே உட்கார்ந்திருந்தனர்.

ஒரு சில நிமிடங்கள் கடந்த பிறகு, “நான் போறேன்” என்று, மிலா எழுந்து நின்று சொல்லவும்,

“இரு! பார்க் கேட் வரைக்கும் நானும் வர்றேன்” என்று எழப் போவனிடம்…

“அரே! நஹீ… நஹீ… மே அகேலியே ஜாத்தா ஹூன்” என்றாள் பட்டென்று.

அவன் அப்படியே அமர்ந்து விட்டான்.

“நாளைக்கு ஈவினிங் பார்க்கலாம். மறக்காம மொபைல் கொண்டு வா. ரிப்பேர் பண்ணலைன்னாலும் கொண்டு வந்திடு. இல்லைன்னா அம்மா ரொம்பத் திட்டுவாங்க” என்று கடகடவென சொல்லிவிட்டு, நிற்காமல் ஓடிச் சென்றாள்.

‘சரி’ என்று நிகில் தலையை ஆட்டினதைக் கூட, அவள் கவனிக்கவில்லை.

அவள் சென்ற பிறகு, சில விநாடிகள் தீர்க்கமாக யோசித்தான். 

இரண்டு முறை சுற்றி வந்த மீராவும், ஆஷாவும்… நிகிலின் முன் வந்து நின்றனர்.

“நிகில் வாக்கிங் வரலையா?” என்று ஆஷா கேட்டாள்.

“அண்ணி, உட்காருங்களேன், உங்ககிட்ட பேசணும்” என்றான்.

“என்ன பேசணும்?” என்று கேட்டு, இருவரும் புல் தரையில் அமர்ந்தனர்.

“இப்போ மிலாவைப் பார்த்துப் பேசினேன்”

“ம்ம்ம் தெரியும்…தெரியும்” என்று ஆஷா புன்னகையை மறைத்துச் சொன்னாள்.

“நாங்களும் பார்த்தோம் நிகில்” என்று மீரா சொன்னதும்…

மூவரும் லேசாகச் சிரித்தனர்.

இருவரும், ‘சொல்லு மேலே’ என்பது போல், நிகிலைப் பார்த்தனர்.

“மிலாவை மேரேஜ் பண்ணிக்கலாம்-ன்னு நினைக்கிறேன்” என்று தன் விருப்பத்தை வெளிப்படையாகச் சொன்னான்.

“ரெண்டு நாள் முன்னாடி கேட்டப்போ, சரியா சொல்லத் தெரியலைன்னு சொன்ன? இப்போ இப்படிச் சொல்ற?” என்று கேள்வி கேட்டாள், ஆஷா!

“அதான? இந்த ரெண்டு நாள்ல அப்படி என்ன பேசனீங்க?” என்றாள் மீராவும்!

“அப்புறம் உன்னோட… இன்ட்ரெஸ்ட்டிங்.. இம்மெச்சூயூர்… இரிடேட்டிங்… இதெல்லாம் என்னாச்சு?” என்று ஆஷா கேட்டாள்.

“அது என்ன-க்கா?” என்று மீரா கேட்டதும்,

“அது இவனோட மேரேஜ்…” என்று ஆஷா ஆரம்பிக்கும் போதே,

“ஐயோ அண்ணி! நான் இன்விடேஷன் அடிக்கிறதை பத்திப் பேசறேன்… நீங்க என்னென்னா?” என்று நிகில் அலுத்துக் கொண்டான்.

“நானா சொன்னேன்?? நீதான சொன்ன?” என்றாள் ஆஷா அவனைப் போலவே!

“ஓ! அப்படியா?” என்று சமாதானமானவன், “அண்ணி இங்க பாருங்க” என்று மிலாவின் கைப்பேசியை எடுத்துக் காண்பித்தான்.

“யாரோடது?”

“மிலாவோட மொபைல். ரிப்பேர் செஞ்சித் தர்றேன்-ன்னு சொன்னேன். கொடுத்துட்டுப் போயிருக்கா”

அவர்கள் இருவரும் அவன் சொல்ல வருவது என்னவென்று புரியாமல் பார்த்தனர்.

“அண்ணி, என்னையை ஒரு ரெண்டு தடவைதான் பார்த்திருக்கா”

“சரி”

“இருந்தும், இதைக் கொடுக்கிறதுக்கு அவ யோசிக்கவேயில்லை”

“ஓ! இம்மெச்சூர்… இன்னோசென்ட்… அப்படின்னு சொல்லறீயா?”

“ம்ம்ம், அப்படி இருந்தா… அவளைப் பத்திரமா பார்த்துக்கணும். இல்லை, என்னை நம்பிக் கொடுத்திட்டுப் போயிருக்கானா… பாசமா பார்த்துக்கணும்” என்றவன், ஓர் ஆழ்ந்த பெருமூச்சு எடுத்து… “எனக்கு மிலாவை ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணி” என்றான் உறுதியான குரலில்.

“ஹே நிகில்! நீ இவ்வளவு சீரியசா இருந்தா… அத்தைகிட்ட பேசலாம்” – ஆஷா.

“ம்ம்ம் கரெக்ட்-கா. பட், அதுக்குமுன்ன மிலாகிட்ட கேட்டியா?” – மீரா

“ஆங்! மீரா சொல்றது கரெக்ட். அவகிட்ட நீ கேட்டியா?” – ஆஷா.

“அவகிட்ட கேட்டா… ‘நான் அம்மாவை விட்டிட்டு வர மாட்டேன்னுதான்’ சொல்லுவா”

ஆஷா யோசித்தாள்.

“ஆமா-க்கா. அன்னைக்கு நாம பேசறப்பவும் சரியாவே ரெஸ்பான்ஸ் பண்ணலையே?” – மீரா.

மீண்டும் யோசித்த ஆஷா, “சரி, அப்போ உங்க அம்மாகிட்ட அண்ணங்ககிட்ட பேசலாம்” என்று சொல்லி எழுந்தாள்.

மீராவும் எழுந்து கொண்டாள்.

இன்னும் எழாமல் இருப்பவனைப் பார்த்து, “வா வீட்டுக்குப் போகலாம்” என்று ஆஷா சொன்னதும்… நிகில் எழுந்தான்.

மூவரும் வீட்டிற்குச் சென்றனர்.

மிலாவின் வீடு

அடுத்த நாள்… வீட்டின் வரவேற்பரையில்…

மிலாவின் தாயார் திலகம் அமர்ந்திருந்தார். மிலா அருகில் நின்று கொண்டிருந்தாள்.

திலகத்தின் எதிரே… ஆஷா, மீரா, பாமினி அமர்ந்திருந்தார்கள்.

ஆம்! நிகில் சொன்னதை, அவன் அண்ணிகள் இருவரும் பாமினியிடம் சொல்லி, இங்கே அழைத்து வந்திருக்கின்றனர்.

ஆனால், நிகில் வரவில்லை.

எதற்காக வந்திருக்கிறோம் என்று, திலகத்திடம் சொல்லி முடித்திருந்தனர்.

“மிலா… இந்தமாதிரி எதுவும் சொல்லவே இல்லையே” என்றார் திலகம்.

“ஆண்ட்டி, அவளுக்கு இது எதுவும் தெரியாது” என்றாள் ஆஷா.

“ஓ!.. ஆனா…” என்று திலகம் சொல்லத் தயங்கினார்.

“பரவால்ல எதுனாலும் சொல்லுங்க” என்றார் பாமினி.

“மிலா… இங்கேயே பிறந்து வளர்ந்த பொண்ணு. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. அதான்… தமிழ்நாட்டுல போய்… எப்படின்னு?” என்று தன் தயக்த்தைச் சொன்னார்.

“நாங்களும் ஃபர்ஸ்ட் இங்க வர்றப்போ, லாங்வேஜ் தெரியாது. இப்போ கத்துக்கில்லையா?” என்றாள் மீரா.

“இல்லை. அவ பழக்க வழக்கமெல்லாம் வேற மாதிரி இருக்கும். அதோட அவ்வளவு தூரமா…” என்று மேலும் தயங்கினார்.

அவ்வாறு அவர் தயங்கிச் சொன்னதும், மேற்கொண்டு எப்படிப் பேச்சை எடுத்துச் செல்ல என்று தெரியாமல், ஓர் அமைதி நிலவியது.

பின் ஆஷாதான், “இது நிகில் வேலை பார்க்கிற ஆபீஸ் அட்ரஸ்” என்று ஒரு விசிட்டிங் கார்டு கொடுத்து, “விசாரிச்சு பாருங்க. உங்களுக்கு கண்டிப்பா திருப்தியா இருக்கும்” என்றாள்.

திலகம், அதை வாங்கி கொண்டார்.

மேலும், தாங்கள் வேலை பார்க்கும் அலுவலக விலாசத்தையும் கொடுத்து விட்டு… மூவரும் கிளம்பினர்.

அவர்கள் சென்ற பின்

மிலாவின் தாயார் விசிட்டிங் கார்டை பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு மிலாவைப் பார்த்தார்.

“ம்மா”

“என்கிட்ட எதுவும் கேட்காம, எதுக்காக வீட்டு அட்ரஸ் கொடுத்த மிலா?” என்று கேட்டு, எரிச்சலடைந்தார்.

“ம்மா… என் மொபைல் ரிப்பேர் பண்ணித் தர்றதா சொன்னான். அப்போ… அப்படியே அட்ரஸ் கேட்டான்… அதான்… “

“அந்தப் பையன்கிட்ட, உன் மொபைல் கொடுத்திருக்கியா?” என்ற போது, அவரது எரிச்சல் கோபமாக மாறியிருந்தது.

“ஹாங்-மா”

“தெரியாதவங்ககிட்ட ஏன் மொபைல் தர்ற? மிஸ்யூஸ் பண்ணிட்டா??” என்று மேலும் கோபப்பட்டுக் கத்தினார்.

“இன்னைக்கு ஈவினிங் திருப்பிக் கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கான். நான் போய் வாங்கிட்டு வரட்டுமா?” என்று அனுமதி கேட்டு, அவரைச் சமாதானம் செய்யப் பார்த்தாள்.

திலகம் அமைதியாக இருந்தார். ‘இவள் ஏன் இப்படி இருக்கிறாள்?’ என்ற ஆற்றாமையால் வந்த அமைதி, அவரிடம்.

“ம்மா… நான் போய்… “

“பேசாத மிலா” என்றார் இன்னும் கோபம் போகாமல்!

“ம்மா”

“வேண்டாம்! நீ எங்கயும் போக வேண்டாம்” என்று சுள்ளென்று சொன்னார்.

ஆனால் அதற்கும், “சரி அம்மா” என்று மிலா ஒத்துக்கொண்டாள்.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவர், எழுந்து செல்லப் போகையில்…

“ம்மா”

“என்ன?” என்றார் எழுந்து சென்று, அவர்கள் கொடுத்த விசிட்டிங் கார்டை தன் கைப்பையுனுள் வைத்தபடியே!

“நான்… உங்களைத் தனியா விட்டுட்டுப் போகமாட்டேன்” என்றாள், பின்னேயே சென்று கொண்டு.

“சும்மா இதையே சொல்லிக்கிட்டு இருக்காத மிலா. முதல விசாரிச்சுப் பார்க்கலாம்” என்று சொல்லி, அவளைப் பேச விடாமல் செய்தார்.

அதற்கு மேல், அம்மாவின் முடிவில் தான் ஒன்றும் செய்ய முடியாது என்பதால்… மிலா அமைதியாக இருந்தாள்.

இதே நேரத்தில் நிகில் வீட்டில்

வீட்டிற்கு வந்தபின்…

மிலா வீட்டில் பேசிய விடயங்கள் அத்தனையையும் ஆஷா, நிகிலிடம் ஒப்பித்தாள்.

“ஏன் அண்ணி, மிலா எதுவுமே சொல்லலையா?” என்றுதான் முதல் கேள்வி கேட்டான்.

‘ம்கூம்’ என்று தலையசைத்து விட்டு, “என்ன சொல்றாங்கன்னு வெயிட் பண்ணிப் பார்க்கலாம் நிகில்” என்று சொல்லிச் சென்றுவிட்டாள்.

அதற்கு அடுத்து இரண்டு நாட்கள் சென்றிருந்தன.  

இந்த இரண்டு நாட்களின் மாலை வேளைகளிலும், மிலாவைப் பார்ப்பதற்காகப் பூங்காவில் சென்று நிகில் காத்திருந்தான்.

இரண்டு நாட்களும் மிலா வரவேயில்லை.

நிகிலிற்கு ஏமாற்றமாக இருந்தது.

‘மிலா அம்மாவிடமிருந்து ஏதேனும் தகவல் வந்ததா?’ என்று வீட்டிலும் கேட்டுப் பார்த்தான்.

ஆனால், மிலா வீட்டிலிருந்து எந்த தகவலும் சொல்லவில்லை.

கடைசியில் பாமினி, ‘நம் விருப்பத்தைச் சொல்லியாயிற்று. இனி அவர்கள் முடிவு சொல்லட்டும்’ என்று சொல்லிவிட்டார்.

அதன்பின் நிகில் யாரிடமும் எதுவும் கேட்கவில்லை. ஆனால், மிலாவை யாதுமானவளாக எண்ணத் தொடங்கிவிட்டான்.