நிரல் மொழி – 5

_20200803_115712

நிரல் மொழி – 5

இரண்டு நாட்கள் கழித்து…

மாலை வேளை! இருள் சூழத தொடங்கி இருந்தது. 

நிகில், நாளை சென்னைக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய நாள். 

அதிகாலையிலே விமான நிலையம் செல்ல வேண்டும். அதற்காக நிகில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். 

மிலாவின் வீட்டிலிருந்து எதுவும் சொல்லாததால், அவனது முகத்தில் ஒரு வாட்டம் தெரிந்தது. 

அக்கணம், ஆஷா உள்ளே வந்தாள்.

“வாங்க அண்ணி” என்றான் சுறுசுறுப்பே இல்லாத குரலில்.

அதைக் கவனித்தவள், “எல்லாம் எடுத்து வச்சிட்டியா?” என்று கேட்டாள்.

“ம்ம்ம்” என்றவன், “அண்ணி… ஒரு ஹெல்ப்” என்று கேட்டு நின்றான்.

“சொல்லு நிகில்” என்றதும்,

தன் மேசையின் உள்ளே இருந்து, ஒரு கைப்பேசியை எடுத்தவன்… “அண்ணி, இது மிலாவோடது. அவகிட்ட கொடுத்திட முடியமா?” என்று கேட்டான். 

அவள் கேள்வியாகப் பார்த்து நின்றாள்.

“அன்னைக்கு மொபைல் ரிப்பேர் பண்ணித் தர்றேன்னு சொல்லி வாங்கினது. ரிப்பேர் பண்ணிட்டேன்.  ம்ம்ம், இனிமே பார்க்க முடியுமான்னு தெரியலை! அதான்… நீங்களே பார்த்துக் கொடுத்திடுங்களேன்” என்று சோகமாகச் சொன்னான். 

‘மிலாவை இவனுக்கு இவ்வளவு பிடிக்குமா?’ என்று நினைத்தவள், “என்னால கொடுக்க முடியாது நிகில்” என்றாள்.

“அண்ணி ப்ளீஸ்” என்று கெஞ்சினான். 

“என்ன ப்ளீஸ்?”

“அண்ணி நானே… ” என்று பாதியில் நிறுத்தி, நொந்து கொண்டான். 

“நிகில் போதும். இப்போதான் மிலா அம்மா ஃபோன் பண்ணாங்க. அவங்களுக்கு ஓகே-வாம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“அண்ணி!” என்றவன் முகம் சட்டென பிரகாசமானது. மகிழ்ச்சி காட்டியது.

“பட், அவங்க அம்மா உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க”

“ஓ!”

“இப்போ எப்படி முடியும்? நீ சென்னை போறது வேற அவங்களுக்குத் தெரியாதில்லையா?” 

“நீங்க அன்னைக்கு சொல்லலையா?” என்று இயல்பானான். 

“சொல்லலை. அதான்… நாளைக்கு ஏர்போர்ட் பக்கத்தில இருக்கிற ஏதாவது ஒரு ப்ளேஸ்ல மீட் பண்ணலாம்னு, அத்தை சொல்லிருக்காங்க”

கொஞ்சம் சிரித்தான்.

“ஸோ, நாளைக்கு மிலாவை நேரப் பார்க்கிறப்போ… அப்போ இந்த மொபைலையும் கொடுத்திடு” என்றாள்.

“ம்ம்ம், சரி அண்ணி” என்று சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினான்.

“இப்போ ஹேப்பியா?”

“ரொம்ப ஹேப்பி” என்றவன், “தேங்க்ஸ் அண்ணி” என்றான் சற்றே அதிகமாகச் சந்தோஷப்பட்டபடி! 

அவன் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தைப் பார்த்தபடியே, “சரி பேக் பண்ணு” என்று சொல்லி, ஆஷா அறையை விட்டு வெளியே சென்றாள்.

அவள் சென்றதும், தன் கைபேசியை எடுத்து ஷில்பாவிற்கு அழைத்து விடயத்தைச் சொன்னான். 

நண்பனுக்குத் திருமணம் என்ற செய்தி கேட்டதும், ஷில்பா அத்தனை சந்தோஷப்பட்டாள். 

சற்று நேரம், அவளிடம் பேசிவிட்டு… அழைப்பைத் துண்டித்தான். 

அடுத்த நாள்

விமான நிலையம், டெல்லி…

விமான நிலையத்தின் அருகில் இருந்த, ஒரு ‘பொக்கே ஷாப்பில்’ குழுமியிருந்தனர். 

சிறிய இடம்தான். பாமினி, திலகம், மிலா அமர்ந்திருந்தனர். ஆஷா, மீரா, நிகில் நின்று கொண்டிருந்தனர். 

மிலா, தலை நிமிர்ந்து யாரையும் பார்க்கவில்லை. ஆனால், நிகிலின் கண்கள் அடிக்கடி மிலாவைப் பார்த்தன. 

திலகமும் பாமினியும் திருமணம் நடத்துவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“பசங்க ரெண்டு பேரும் துபாய்ல இருக்காங்க. அவங்க வர்றப்போ கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்று பாமினி சொல்லவும், 

“எப்போ வருவாங்க?” என்று திலகம் கேட்டார். 

பாமினி, ஆஷாவைப் பார்த்தார். 

“அவங்க வர்றதுக்கு இன்னும் ஏழு மாசம் ஆகும்” என்றாள் ஆஷா.

“அதுகப்பறம் ஆரம்பிக்கவா… ” என்று திலகம் கேட்டதற்கு, 

“இல்லை.. இல்லை. இவங்க ரெண்டு பேருமே எல்லாம் பார்த்துப்பாங்க” என்று ஆஷாவையும் மீராவையும் கை காட்டினார். 

“ம்ம் சரி” என்றார் திலகம். 

சற்று நேரம், திருமணம் சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர். 

பின், “மிலா எதுவும் பேச மாட்டாளா? அன்னைக்கும் பேசலை…” என்று பாமினி மெதுவாகக் கேட்டார்.

“மிலா… கேட்கிறாங்கள… பேசு” என்று திலகம் சொன்னதும், 

“ம்மா… நான் உங்களைத் தனியா விட்டுட்டு… எப்படிம்மா?” என்று கண்கலங்கினாள்.

கேட்டவர் அனைவருக்கும் ஒரு மாதிரி சங்கடமாயிற்று.

“அது.. அது… நான் தனியா இருப்பேன்னு, அவளுக்கு ஒரு பயம்… அதான்” என்று பாமினி சமாளித்தார்.

“நீங்க தனியா இருக்க வேண்டாம். மேரேஜுக்கு அப்புறம் எங்ககூட சென்னை வந்திடுங்க” என்றான் நிகில்.

அப்பொழுதான், மிலா நிமிர்ந்து நிகிலைப் பார்த்தாள்.

“ச்சே ச்சே அதெல்லாம் வேண்டாம்”  என்று திலகம் மறுத்தார்.

“அவங்க வேலைக்குப் போறாங்க. வேலையை விட்டுட்டு எப்படி வருவாங்க?” என்றார் பாமினி. 

இப்போது, மிலா மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.

“இங்க பாரு மிலா… நாங்க எல்லாரும் இங்கதான இருக்கோம். அவங்களுக்கு எதுவும் தேவைன்னா, நாங்க பார்த்துக்குவோம்” என்றாள் ஆஷா ஆறுதலாக! 

“அதெல்லாம்… ” என்று மறுக்கப் போன திலகத்திடம், 

“நீங்க சரின்னு சொல்லுங்க. அப்பதான் அவ சந்தோஷமா இருப்பா” என்றாள் மீரா. 

“சரி” என்றவர், “மிலா, அம்மாக்கு எப்போ தோணுதோ… அப்போ சென்னை வந்திடுவேன்” என்று சிரித்தார். 

அக்கணம், ஷில்பாவிடமிருந்து பாமினிக்கு அழைப்பு வந்தது. 

“யாரு அத்தை?” என்றாள் ஆஷா. 

“ஷில்பா… வீடியோ கால்-ல வர்றா” என்றவர்… அழைப்பை ஏற்று, “சொல்லு ஷில்பா” என்றார். 

“எல்லாரும் மீட் பண்ணியாச்சா மா?” என்றாள் எடுத்தவுடன். 

“ஆமா ஷில்பா. எல்லாரும் இங்கதான் இருக்கோம்” என்றார் தொடு திரையைப் பார்த்துக் கொண்டே! 

“அப்போ கரெக்ட் டைம்க்கு ஜாயின் பண்ணியிருக்கேன்” என்று சந்தோஷப்பட்டவள், “மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணியாச்சா?” என்று கேட்டாள். 

“இல்லை ஷில்பா. அதெல்லாம் அப்புறம்தான்”

“சரி-ம்மா, ஃபோன பொண்ணுகிட்ட கொடுங்க. நான் பார்க்கணும்” என்றாள் ஆவலுடன். 

“இதோ…” என்று பாமினி மிலாவிடம் கைப்பேசியை நீட்டினார்.

அவள் வாங்கத் தயங்கினாள்.

“வாங்கிப் பேசு மிலா” என்று திலகம் சொன்னதும், கைப்பேசியை வாங்கினாள்.

“ஹாய்” என்று ஆரம்பித்தாள் ஷில்பா. 

“ஹாய்…”

“வாவ்! அழகா இருக்க!! பட், பார்க்கிறதுக்கு டெல்லி பொண்ணு மாதிரிதான் தெரியற” என்றாள். 

“ஹே ஷில்பா! உனக்கும் அப்படித்தான் தோணுதா?” என்று ஆஷா மிலாவின் பின்னே நின்று, திரையைப் பார்த்துக் கேட்டாள். 

“உங்களுக்கும் அப்படித்தான் தோணிச்சா அண்ணி?”

“ஆமா ஃபர்ஸ்ட்! அப்புறம் நானும் மீராவும் பேசிக்கிட்டோம்”

இப்படியே இவர்கள் படபடவென்று பேச… மிலா எதுவும் பேசவில்லை. 

சற்று நேரம் எல்லாரிடமும் ஷில்பா பேசினாள். மிலாவின் அம்மாவிடமும் பேசின பிறகே அழைப்பைத் துண்டித்தாள். 

திலகம் மகிழ்ச்சியாக இருந்தார். 

இந்த இரண்டு நாளில், நிகில் மற்றும் அவன் குடும்பம் பற்றித் திலகம் விசாரித்திருந்தார். 

‘நல்ல குடும்பம்’ என்று தெரிந்தபின்னே, திலகம்  சம்மதித்திருந்தார்.

இப்போது அனைவரிடமும் பேசின பிறகு… ஓர் திருப்தி வந்திருந்தது, அவருக்கு! 

அதன்பின், ‘மிலாவிடம் தனியாகப் பேச வேண்டும்’ என்று நிகில் சொன்னதால், மற்றவர்கள் அவர்களுக்குத் தனிமை தந்தனர். 

விமான நிலையம், உள்நாட்டு நுழைவாயில் முன்னே… 

மிலாவும், நிகிலும் எதிரே நின்று கொண்டிருந்தனர். 

இப்பொழுதும் மிலா நிமிர்ந்து பார்க்கவில்லை.

“மிலா” என்று அழைத்தான்.

“ஹாங் ககியே” என்றாள் குனிந்து கொண்டே! 

“நான் சொல்றது இருக்கட்டும். நீ ஏன் எதுவும் பேச மாட்டிக்க?”

அமைதியாக இருந்தாள்.

“மேரேஜ் முடியட்டும், உங்க அம்மாவை கன்வின்ஸ் பண்ணி சென்னை கூட்டிட்டுப் போகலாம்” 

“நிஜமா?” என்று கேட்டு, நிமிர்ந்து பார்த்தாள். 

“ம்ம்ம், உங்க அம்மா-க்கு ஓகேன்னா… நிஜமா” என்றான். 

அவன் பதில் சொன்னதும், மீண்டும் குனிந்து கொண்டாள். 

“இந்தா உன் மொபைல்” என்று சரி செய்த கைப்பேசியைக் கொடுத்தான்.

வாங்கிக் கொண்டாள்.

“ரிப்பேர் பண்ணதுக்கு பைசா” என்று கேட்டுச் சிரித்தான். 

நிமிர்ந்து, திருதிருவென பார்த்தாள். 

“ஹே! சும்மாதான் கேட்டேன்” என்றவன், “ஆமா, நீ ஏன் ‘பார்க்’ வரலை மிலா?” என்று கேட்டான். 

“அது… அம்மா போக வேண்டாம்னு சொன்னாங்க. அதான்” 

“ஓ!” 

“நீ வந்து வெயிட் பண்ணியா?” என்று சட்டெனத் தோன்றியதைக் கேட்டாள். 

“ம்ம்ம், உன்கிட்ட பேசணும்னு ரெண்டு நாளும் வந்து வெயிட் பண்ணேன்” 

“சாரி” என்றாள். 

“பரவால்ல. ஆனா, இனிமே டெய்லி ஃபோன் பண்ணுவேன்… நீ பேசணும்” 

“ம்ம்” என்று தலையாட்டினாள். 

அதன் பின், இருவருக்கும் ‘என்ன பேச?’ என்று தெரியவில்லை. 

“ஃபர்ஸ்ட் நாள் ஒரு கொஸ்டின் கேட்டியே! அதை இப்பவும் கேட்பியா?” என்று நிகில்தான் மீண்டும் பேச்சை ஆரம்பித்தான். 

“என்ன கொஸ்டின்?” என்று யோசித்தாள். 

” ‘உனக்கு என்னையை பிடிச்சிருக்கா’ – ன்னு கேட்ட” என்று நியாபகப்படுத்தினான். 

“ஓ! அதுவா?”

“அதேதான்! இப்பவும் அந்தக் கேள்வி கேட்பியா?” என்று கேட்டான். 

‘இல்லை’ என்று தலையசைத்து, அமைதியாக நின்றாள். 

“பட், நான் கேட்கணும். உனக்கு என்னை பிடிச்சிருக்கா?”

பேசாமல் நின்றாள். 

“பதில் சொல்லு மிலா” என்றான். 

“நீயும்… அன்னைக்கு நான் கேட்டதுக்குப் பதில் சொல்லலையே?” என்று பதில் கேள்வி கேட்டுப் புன்னகை செய்தாள்.

“இப்படியே சிரிச்சிக்கிட்டே இரு.  அழாத! சரியா?”

“ம்ம்ம்” என்று நன்றாகச் சிரித்தாள்.

அப்படியே…. சிரிக்கும் மிலாவின் முகம், அழுது கொண்டிருந்தது…. அதே விமான நிலையத்தில்… எட்டு மாதங்கள் கழித்து… 

இரு கைகளிலும் முழங்கை வரை மெகந்தி… வெள்ளை மற்றும் சிகப்பு வண்ணங்களில் பாரம்பரிய வளையல்கள்… கற்கள் பதித்த புடவை… நெற்றியில் குங்குமம் என்று மிலா மாறியிருந்தாள்.

ஆம்! நிகிலிற்கும் மிலாவிற்கும் திருமணம் முடிந்து  இருபது நாட்கள் ஆகியிருந்தது. 

மிலா… நிகில்… இருவரையும் வழியனுப்ப அனைவரும் விமான நிலையம் வந்திருந்தனர். 

ஆஷா… மீரா… பாமினி… திலகம்… என்று அனைவரும்.

ஷில்பா திருமணத்திற்கு வந்திருந்தாள். 

அதன்பின் ஐந்து நாட்கள் இருந்தாள். 

ஆனால், அதற்கு மேல் அவளுக்கு விடுப்பு கிடைக்கவில்லை. 

அவளது கம்பெனிக்கு டென்டர் கிடைத்திருந்தது. அது தொடர்பான வேலைப்பளு அதிகமாக இருந்ததால், அவள் சென்றுவிட்டாள்.

நிகிலின் அண்ணன்கள், இரண்டு நாட்களுக்கு முன் துபாய் கிளம்பிச் சென்றுவிட்டனர். 

மிலாவும் நிகிலும் இன்று சென்னை செல்கிறார்கள். 

திலகம், தன் வேலையை விட்டுவிட்டு சென்னை செல்ல விரும்பவில்லை. எவ்வளவு கேட்டுப் பார்த்தாலும், ஒத்துக் கொள்ளவில்லை. 

ஆதலால்தான், இவ்வளவு அழுகை மிலாவிடம்.

“அழாத மிலா” என்று திலகம் சொல்லிப் பார்த்தார். 

அருகே நின்ற ஆஷாவும் மீராவும் சொன்னார்கள். 

மிலா கேட்கவேயில்லை. மாறாக அழுகை அதிகரித்தது.

“ம்மா…” என்று அம்மாவைக் கட்டிப் பிடித்து அழுதாள். 

“அவங்களை நாங்க நல்லா பார்த்துக்கிறோம்” என்று ஆஷா சொன்னாள். 

“ஆமா மிலா! நீ இப்படி அழாத” என்று மீரா சொல்லிப் பார்த்தாள். 

ஆனாலும் மிலா அழுதாள். 

“போதும். நீங்க என்ன சொன்னாலும் அவ அழறதை நிறுத்த மாட்டா” என்ற பாமினி, “லேட்டாகிடப் போகுது, நிகில். செக்-இன் பண்ணனும்ல. ரெண்டு பேரும் கிளம்புங்க” என்றார். 

திலகமும், “கிளம்பு மிலா. எப்போ லீவ் கிடைக்கோ, அப்போ அம்மா சென்னை வர்றேன்” என்றார். 

மேலும், “மிலா, இனிமே அழுதா அம்மா திட்டுவேன்” என்று சொல்லி, அவளைத் தள்ளி நிறுத்தினார். 

மிலா கண்களைத் துடைத்துக் கொண்டாள். 

சற்று நேரம், திலகம் சாதரணமாகப் பேசி… மிலாவைச் சமாதானம் செய்தார். 

மிலாவின் கண்ணீர் கொஞ்சம் குறைந்தது. 

அதன்பின் ஒவ்வொருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு, மிலாவும்… நிகிலும்…விமான நிலையம் உள்ளே சென்றனர். 

சோதனைகள் முடிந்து… போர்டிங் செய்து… விமானத்தின் இருக்கையில் அமர்ந்த பின்பே, நிகில் மிலாவைப் பார்த்தான். 

விமானத்தின் சன்னல் வழியே ஓடுதளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

“மிலா” என்று அழைத்தான். 

அவனைத் திரும்பிப் பார்க்கும் போதே, அவளது கண்கள் கலங்கியிருந்தன. 

“அழாத! கொஞ்ச நேரம் தூங்கு. சரியாயிடுவ” என்றான். 

அவளும் கண்மூடி, இருக்கையின் பின்னே சாய்ந்தாள். 

சற்று நேரம் கழித்து, ‘மிலா’ என்று அழைத்துப் பார்த்தான். அவள் கண் திறக்கவில்லை. 

பின், அவனும் இருக்கையின் பின்புறம் சாய்ந்து… கண்மூடினான். 

‘மிலா’ என்று அழைத்து, மெதுவாக கண் திறந்தான். – இது இன்று! 

மழை விட்டிருந்தது. இரைச்சல் சத்தம் ஏதும் இல்லை. 

மருத்துவமனை நடைகூடத்தில் பேச்சு சத்தம் கேட்டது. கொஞ்சம் பதற்றம் வந்தது. 

‘யார் பேசுகிறார்கள்? ‘என்று உற்றுக் கேட்டான். செவிலியர்கள் குரல்தான் என்று தெரிந்ததும், பதற்றம் தணிந்தது. 

வயிற்றுக் காயத்தின் வலி அதிகமாயிருந்தது. இப்பொழுதும் கால்களை நகர்த்த முயன்று பார்த்தான். 

சிறிதளவு கூட நகர்த்த இயலவில்லை. இப்பொழுது அடிபட்ட கால் கனத்திருந்தது. 

படுத்துக் கொண்டே, தன் கைப்பேசியை எக்கி எடுத்து மணியைப் பார்த்தான். 

4:15 எனக் காட்டியது. 

கைப்பேசியை வைத்துக் கொண்டு, யோசித்தபடியே இருந்தான். 

நிச்சயம் ‘நல் கேர்’ தன் கைப்பேசியை ‘டிராக்’ செய்வான் என்று தெரியும். 

ஆதலால், பொறுமையாகச் செயல்பட வேண்டும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான். 

கைப்பேசியை வைத்துவிட்டு, தலையணையில் தலை சாய்த்தான்.

உறக்கம் வரவில்லை. மீண்டும் யோசிக்க ஆரம்பித்தான். 

இன்று இந்த நிலையில், தான் இருக்க காரணம்… ‘நல் கேர்’ என்று தெரியும். 

ஆனால் ஏன்? எதற்காக? 

நல் கேர்… தன் வாழ்வில் வந்த நாளை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!