நிரல் மொழி – 6.1

PhotoGrid_1597831703066

“என்னாச்சு நிகில்?” என்று மிலா புரியாமல் கேட்டாள்.

“இரு மிலா. அவளே சொல்லுவா” என்றான் அமைதியாக!

“என்ன சொல்லணும் நிகில்…??? உனக்கு என்ன சொல்லணும்?” என்று எழுந்து நின்று, ஷில்பா சத்தம் போட்டாள்.

அவள் கத்திய கத்தில் ஜெர்ரி பயந்து போய், நிகிலின் மேல் ஒட்டிக் கொண்டான்.

“ஷில்பா என்னாச்சு? ஏன் இப்படிக் கத்துற??” என்றாள் மிலா.

“ஒண்ணுமில்லை மிலா” என்று கொஞ்சம் தணிந்து பேசி, ஷில்பா அமர்ந்தாள்.

“என்ன ஒண்ணுமில்லை ஷில்பா? நீ ஏன் என்கிட்ட சொல்லலை?” என்று நிகில் கேட்டான்.

“அதான்… பேப்பர்ல போட்ருக்காங்கள?? அப்புறம் என்ன?” என்றவள் குரல் மீண்டும் தடித்து ஒலித்தது.

“நீ ஏன் சொல்லலை?” என்றான் நிகில் மீண்டும்.

“சரி! சொல்றேன் கேட்டுக்கோ…” என்றவள்… “பிளான்ட் ஷட்டௌன் ஆகுது. ஒரு மாசமா இந்தப் ப்ராப்ளம் இருக்கு. போதுமா??” என படபடவென பதற்றத்துடன் பேசினாள்.

ஆம்! அதுதான் செய்தித்தாள் செய்தி!

சென்னை அருகிலுள்ள அனல் மின் நிலையத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக அடிக்கடி மின்சார உற்பத்தி தடைபடுகிறது.

அதிலும் கடந்த இரண்டு நாளாக மூன்று மணி நேரத்திற்கும் மேலாக மின் உற்பத்தி தடைபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

“முன்னாடியே உனக்குத் தெரிஞ்சிருக்கும்-ல?” என்று நிகில் கேட்டான்.

“ம்ம்ம் தெரியும்”

“அதான் கேட்கிறேன்! ஏன் சொல்லலை?”

ஷில்பா மௌனமாக இருந்தாள்.

“எக்ஸாக்ட் ப்ராப்ளம் என்னன்னு சொல்ல வேண்டாம். பட், உன்னோட பெயின் ஷேர் பண்ணிருக்கலாமே?”

“நிகில், உனக்கு எப்படிப் புரிய வைக்கன்னு எனக்குத் தெரியலை?” என்று ஷில்பா படபடத்தாள்.

“பொறுமையா பேசு ஷில்பா”

“வொர்க் பிளேஸ்-ல அப்படித்தான் இருக்கிறேன் நிகில். உன்கிட்டயும் அதேமாதிரி மெயின்டெயின் பண்ணவா? மனசில இருக்கிற கஷ்டம் எதையும் வெளியில காமிக்காம!? ம்ம் சொல்லு?” என்று கேள்வி கேட்டு நிறுத்தினாள்.

அவள் வேதனையில் இருக்கிறாள் என்று தெரிந்ததும், நிகில் கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டான்.

“எவ்வளவு பேரோட ஹார்டு வொர்க், எல்லாம் வேஸ்ட்டாயிடுமேன்னு… எரிச்சலா வருது!! ஒரு பக்கம் கஸ்டமர்… இன்னொரு பக்கம்… மேனேஜ்மென்ட் பிரஷர்…” என்று புலம்பினாள்.

மனதில் இருப்பதையெல்லாம் அவள் புலம்பட்டும் என்று விட்டுவிட்டான்.

“ஏன் நிகில்! இதே மாதிரி ஒரு ப்ரோஜெக்ட் சக்ஸஸ்ஃபுல்லா நாங்க பண்ணிருக்கோம். பட் இந்த ப்ரொஜெக்ட்ல… ஏன் இப்படி? ஏன் இப்படி நடக்குது?? ஒன்னும் புரியலையே” என்று யோசித்துக் கொண்டே வேதனைபட்டாள்.

“நீதான ரெஸ்பான்சிபிள் பெர்சன்! ஸோ, நீதான் ப்ராப்ளம் என்னன்னு ஃபைன்டு அவுட் பண்ணனும்”

அவர்கள் இருவரும் பேசுவது எதுவும் மிலாவிற்குப் புரியவில்லை. எனவே இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஷில்பா தலையில் கைவைத்து அமர்ந்திருப்பதைப் பார்த்த மிலா, நிகிலின் கைப்பிடித்து அழைத்து… ‘என்னாச்சு?’ என சைகையால் கேட்டாள்.

அவன் ‘பொறு’ என்றான் அவளைப் போல் சைகையால்.

ஷில்பா, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வரை நிகில் அமைதியாக இருந்தான். அதன்பின், “ஷில்பா” என்று அழைத்தான்.

“ம்ம்ம்” என்றாள் தலையை நிமிர்த்தி!

“அடுத்து…”

“அப்புறமா பேசலாமே நிகில். ஐ அம் டயர்ட்”

“ஓகே ஓகே… அதெல்லாம் அப்புறம் பார்க்கலாம். ஃபர்ஸ்ட் சாப்பிடு”

“எனக்கு எதுவும் வேண்டாம் நிகில். எனக்கு எதுவுமே வேண்டாம்” என்றாள் வலிக்கும் குரலில்.

நிகிலிற்கும் மிலாவிற்கும் அவளைப் பார்க்க பாவமாக இருந்தது.

ஷில்பா நிமிர்ந்து பார்த்தாள். இருவரும் தன்னைப் பார்க்கும் பார்வையைக் கண்டு, “நான் கிளம்பிறேன்” என்று எழுந்தாள்.

“ஷில்பா… வெயிட் பண்ணு” என்று சட்டென மிலா எழுந்து, அவள் அருகில் சென்றாள்.

“என்ன மிலா?”

“ஒரு ஜூஸ் மட்டும் எடுத்திட்டு வர்றேன். ம்ம்ம், சரியா??” என்று கேட்டாள்.

“வேண்டாம் மிலா”

“என்ன ஷில்பா நீ?” என்ற மிலா, “நிகில் நீயாவது சொல்லு” என்றாள்.

“ஷில்பா உட்காரு. ஜூஸ் மட்டும் குடிச்சிட்டுப் போ” என்று நிகில் சொன்னதும், ஷில்பா அமர்ந்தாள்.

“ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு” எனச் சொல்லி, மிலா சமயலறைக்குச் சென்றாள்.

கையிலிருந்த கைப்பேசியைச் சுற்றிக் கொண்டே ஷில்பா இருந்தாள். பெரிதாய் தோற்றுப் போன உணர்வு, அவள் முகத்தில் தெரிந்தது.

ஜெர்ரிக்குச் சாப்பாடு கொடுத்து முடித்ததால், நிகில் எழுந்து… அவனைத் தோளில் போட்டுக் கொண்டு தூங்க வைக்கப் பார்த்தான்.

சில நொடிகளிலே, மிலா ஜூஸ் தயாரித்துக் கொண்டு வந்தாள். கூடவே, ப்ரெட் டோஸ்ட்டும்!

இரண்டையும் ஷில்பா முன்னே வைத்தாள்.

“டோஸ்ட் வேண்டாமே மிலா” என்று ஷில்பா மறுத்தாள்.

“அதெல்லாம் முடியாது. கண்டிப்பா சாப்பிடனும். எவ்ளோ டயர்டா இருக்க தெரியுமா?” என்று ஜூஸை எடுத்து, ஷில்பாவின் கையில் கொடுத்தாள்.

ஷில்பாவும் வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.

அவள் கொஞ்சம் குடித்து முடித்த பின்பு, “பேப்பர்-ல என்ன ஷில்பா போட்டிருக்கு?” என்று மெதுவாகக் கேட்டாள்.

“பவர் பிளான்ட் ஷட்டௌன் ஆகுது. ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் பிளான்ட் ரன் ஆகலைன்னா… எப்படி? நீ நினைச்சுப் பாரு?? கரண்ட் ப்ரொடியூஸ் பண்ண முடியாது… எத்தனை ஏரியா அஃபக்ட் ஆகும் தெரியுமா? பெரிய ப்ராப்ளம். அதான் பேப்பர்ல போட்டிருக்காங்க”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. நீ வேணா பாரு… நாளைக்கே எல்லாம் சரியாயிடும்”

தன் வேதனையும் மீறிச் சிரித்த ஷில்பா, “உனக்குப் புரியலை மிலா” என்று சொல்லிவிட்டு, ஜூஸை குடித்தாள்.

ப்ரெட் டோஸ்ட்டையும் சாப்பிட்டு முடித்தாள்.

அதன் பின் சில வினாடிகள், மிலாவிடம் பேசிவிட்டு… ஷில்பா கிளம்பினாள்.

கிளம்பும் முன், ஷில்பா நிகிலைப் பார்த்தாள்.

அவன், “கஷ்டமா இருந்தா என்கிட்ட சொல்லணும் ஷில்பா” என்றான் கண்டிப்பான குரலில்.

‘சரியென்று’ என்று தலையசைத்து விட்டுச் சென்றாள்.

அவள் கிளம்பியதும், மிலா மீண்டும் இரவு உணவிற்கான வேலையில் இறங்கினாள் .

ஜெர்ரியை தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துக் கொண்டே, நிகில் யோசித்துக் கொண்டிருந்தான்.

ஷில்பா சொன்னதையெல்லாம் மீண்டும் ஒரு முறை மூளைக்குள் ஓட்டிப் பார்த்தான்.

‘பிளான்ட் ஷட்டௌன்’

‘ஒரு மாதமாக…’

‘கடந்த இரண்டு தினங்களாக… மூன்று மணிநேரம்…’

மூளையின் ஓரத்தில், எங்கேயோ இது போன்ற ஒரு செய்தி சேமித்து வைக்கப்பட்டது போல் இருந்தது.

‘என்ன செய்தி?’ ‘எங்கு படித்தது?’ என்று மூளையைக் கசக்கினான்.

இரு கண்களையும் மூடியபடி நடந்து கொண்டே யோசித்தான்.

மீண்டும் மீண்டும் யோசித்தான்.

அப்படி யோசித்துக் கொண்டே நடக்கையில், தன் முன்னால் வந்து நின்ற மிலாவின் மேல் இடித்துக் கொண்டான்.

கண் திறந்து பார்த்தான்.

சிரித்துக் கொண்டே, “சாப்பிட வா நிகில்” என்றாள்.

“கொஞ்ச நேரம் கழிச்சு” என்றவன், இன்னும் யோசனையிலே இருந்தான்.

“எனக்கு பசிக்குது நிகில். நீயும் வா” என்று நின்றாள்.

“ரெண்டு நிமிஷம் மிலா… ப்ளீஸ்…” என்று கெஞ்சினான்.

“இல்லை நிகில். ரொம்பப் பசிக்குது. லஞ்ச் வேற…” என்று ஆரம்பித்து, மிலா பேசிக்கொண்டே இருந்தாள்.

அவள் பேசப் பேச… அவன் யோசிப்பதற்கு இடையூறு செய்வது போல உணர்ந்தான்.

இடையூறு… இடையூறு… என்று மீண்டும் கண்மூடி அவன் யோசிக்கும் போது…

அவனது கைபிடித்து உலுக்கி, “அட! என்னப்பா நீ! நான் உன்கிட்டதான பேசிகிட்டு இருக்கேன். கேட்கவே மாட்டிக்க” என்றாள்.

சட்டென, நிகிலிற்குப் பொறி தட்டியது!!

நியாபகம் வந்துவிட்டது!

அந்தச் சாட் கடை…மிலாவை முதலில் சந்தித்தது… அன்றும் இப்படித்தானே வந்து நின்றாள்!

அவளிடம் பேசிவிட்டு, வீட்டிற்குப் போய் படித்த செய்தி! அதுவும் இதே போலத்தானே?

இல்லை, அது வேறு? இது வேறா? என்று அவனுக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவன் தீர்க்கமாக யோசிப்பதைக் கண்டு, “என்னாச்சு நிகில்?” என்று கலக்கமாகக் கேட்டாள்.

அவளின் கலக்கத்தைப் பார்த்தான்.

மெல்லச் சிரித்து, “ஒண்ணுமில்லை. ஜெர்ரி தூங்கிட்டான். அவனைப் படுக்கப் போட்டுட்டு வர்றேன். ரெண்டு பேரும் சாப்பிடலாம்” என்று சொல்லி அறைக்குள் சென்றான்.

அதன்பின், இருவரும் பேசிக் கொண்டே உணவு உண்டு முடித்தனர்.

உண்டு முடித்து, உறங்க வந்த பின்பும் மிலா பேசிக்கொண்டிருந்தாள்.

இடையில் ஜெர்ரி வேறு விழித்துக் கொண்டு, துறுதுறுவென விளையாடிக் கொண்டிருந்தான்.

நிகில், இருவரையும் சந்தோஷமாகச் சமாளித்தான்.

சற்று நேரத்தில், ஜெர்ரி ஒரு புறம்… மிலா ஒரு புறம்… என்று நிகிலின் கைவளைவிற்குள் படுத்தபடியே இருவரும் உறங்கிப் போயிருந்தனர்.

மிலா, ஜெர்ரி… இருவருக்குமே நிகிலின் அருகாமை அவ்வளவு பிடிக்கும்!

அவனின் அன்பிற்கு, பாசத்திற்கு அவர்கள் இருவரையும் பழக்கப் படுத்தியிருந்தான்.

இருவரும் உறங்கும் வரைக் காத்திருந்தவன், உறங்கியதும் மெதுவாக எழுந்தான்.

இருவரும் விழித்துக் கொள்வார்கள் என்று, தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு வந்தான்.

முதலில், அன்று படித்தச் செய்தியைத் தேடி எடுத்தான்.

இரண்டு வருடத்திற்கு முன்பான செய்தி!

தேடத்தான் வேண்டியதிருந்தது. ஆனால், தேடி எடுத்துவிட்டான்.

சமையல் எரிவாயு விநியோகம் தடைபட்டதால்… மக்கள் சிரமத்திற்கு உள்ளாயினர் என்று வந்திருந்தது. – இது மும்பையில்!

அடுத்து செய்தி! இன்று ஷில்பாவின் பிரச்சனை!! அந்தச் செய்தியை எடுத்துப் படித்துப் பார்த்தான்.

ஏற்கனவே படித்ததுதான். ஆனால், திரும்பவும் படித்தான்!

அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழிற்நுட்பக் கோளாறு காரணமாக… மின்சாரம் உற்பத்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சில பகுதிகளில் மின்சாரச் சேவைத் தடை செய்யப்பட்டது. – இது தமிழ்நாட்டில்!

இது இரண்டும் மட்டும்தானா?!

இல்லை, வேறு எங்கேயும் இது போல் பிரச்சனை உள்ளதா? என்று யோசித்தான்.

யோசித்த அடுத்த நொடியே, கைப்பேசியில் செய்திகளைப் பார்க்க ஆரம்பித்தான்.

ஒவ்வொரு மாநிலங்களில்… ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய நகரங்களில்… முக்கிய செய்திகளைப் பார்க்க ஆரம்பித்தான்.

இரண்டு வருடத்திற்கான செய்திகள் அனைத்தையும் பார்ப்பது கடினமாக இருந்தது.

நிறைய முக்கிய செய்திகள்! இதை எல்லாம் படித்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

அதுவும் எந்த ஒரு முகாந்திரமும் தெரியாமல் செய்தியைத் தேடுவது நேரத்தை இழுத்துக் கொண்டே போனது.

செய்திகளின் அளவைக் குறைக்க வேண்டும்! ‘என்ன செய்ய?’ என்று யோசித்தான்.

யோசித்தான். ‘என்ன செய்தால்?’ செய்திகளின் அளவு குறையும் என்று மீண்டும் யோசித்தான்.

ஒரு யோசனை!

அவனிடம் தற்பொழுது உள்ள இரண்டு செய்திகளுமே… அரசின் டென்டர் பெறப்பட்டுச் செய்த ப்ராஜெக்ட்-கள்.

அப்படியென்றால் என்ன அர்த்தம்?? பிரச்சனை வருவது, அரசின் டென்டர் எடுத்துச் செய்யப்படும் ப்ராஜெக்ட்-களுக்கு மட்டுமே!

உடனே, அரசு டென்டர் விடும் ப்ராஜெக்ட் எவையெல்லாம் என்று ஒரு அட்டவணையைத் தயாரித்தான்.

மீண்டும் நிறைய வந்தன.

இப்பொழுது…
இதில் முக்கியமான மற்றும் நிறைய பொருட் செலவில் செய்யப்படும் ப்ராஜெக்ட்டை வரிசைப்படுத்தினான்.

ப்ராஜெக்ட்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.

அதன் பின்… ப்ராஜெக்ட்களின் பெயரினைக் கொண்டு செய்திகளைத் தேட ஆரம்பித்தான்.

முக்கால் மணி நேரம் கைப்பேசியுடன் போராடினான். கடைசியில்… ஒரு செய்தி கிடைத்தது.

அது இந்தியாவின் தலை நகரில் நடந்திருந்தது.

மெட்ரோ ரயில் திட்டம், டெல்லி!

இது ஒரு வருடத்திற்கு முன்பான செய்தி!!

செய்தி இதுதான்… கடந்த இரண்டு மாதங்களாக, டெல்லி மெட்ரோ ரயில் சேவையானது பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் மெட்ரோ ரயில் சிக்னலில் ஏற்பட்ட தொழிட் நுட்ப கோளாறு என்று மெட்ரோ ரயில் நிலைய நிர்வாகம் கூறுகிறது.

இந்தச் செய்தியுடன்… ஒரு மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துவர் கூறிய தகவலும் இணைக்கப்பட்டிருந்தது.

அது!

“ஒன் மன்த்தா ப்ராப்ளம் இருக்கு. திடீர் திடீர்னு ட்ரெயின் ஸ்டாப் ஆகுது. காரணம் என்னென்னு கேட்டா… சிக்னல் ரெட்ல இருக்கு… அதனாலதான் ஸ்டாப் பண்றோம்னு சொல்றாங்க.

ஆனா, இந்த ரெண்டு நாளா… சிக்னல் ரெட்ல இருந்ததா சொல்லி, மூணு மணி நேரத்துக்கு மேல ட்ரெயின் ஸ்டாப் ஆகியிருந்தது. ஆபீஸ் போறவங்களுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு” என்று ஆங்கிலத்தில் சொல்லியிருந்தார்.

மேலும் ஒருவர்,
“ஒரு ட்ரெயின் மட்டுமில்ல! எல்லா ட்ரெயினும்… இதே காரணத்தைச் சொல்லி அங்கங்க ஸ்டாப் ஆகியிருக்கு. அது எப்படி ஒரே நேரத்தில எல்லா டிரெயினுக்கும் ரெட் சிக்னல் வரும்” என்று கூறியிருந்தார்.

இதை வாசித்து முடித்தவுடனே… அதெப்படி எல்லா ரயில்களுக்கும் ஒரே நேரத்தில் சிகப்பு சமிக்கை காட்டும்?? என்ற கேள்வி வந்து நின்றது.

ஏதோ தவறு நடக்கிறதோ என்ற சந்தேகம் வந்தது. ஆனால் என்ன தவறு?

மேலும், இது போல் வேறு ஏதேனும் செய்தி இருக்கிறதா?? என்று கைப்பேசியைப் பார்த்தான்.

ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் தேடினான். கடைசியில் கிடைத்தது.

ரசாயன உற்பத்தி ஆலை! இது பரோடா-வில்!!

இது ஆறு மாதத்திற்கு முன்பான செய்தி!!

இங்கேயும் மக்களிடம் இருந்து புகார் வந்திருந்தது.

புகார் என்னவென்றால்… கடந்த ஒரு மாத காலமாக ரசாயன ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுவாயுவானது, சரியான நேரத்தில் வெளியேற்றப் படுவதில்லை என்பதே!

மேலும், நச்சு வாயுவானது அளவுக்கு அதிகமான அளவில் வெளியேற்றப் படுவதாக, பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் புகார் செய்ந்திருந்தனர்.

‘அதெப்படி! கெமிக்கல் பிளான்டில் இதெல்லாம் பார்க்காமல் இருப்பார்கள்?’ என்று தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டான்.

அன்று செய்தியைப் படித்ததும், ‘ஓகே’ என்று சொல்லிப் போனவனால், இன்று அப்படிக் கடந்து செல்ல முடியவில்லை.

இந்த நான்கு செய்திகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பது போல் இருந்தது.

என்ன? என்ன சம்பந்தம்? என்று யோசித்தான்!

விடை கிடைத்தது!!

ஒன்று… நான்கு பிரச்சனைகளின் கால அளவுகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தது.

இரண்டு… நான்கிலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அடுத்ததாக இதன் பிண்ணனியில் என்ன இருக்கிறது என்று நிகில் யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.

ஆம்! நிகில் யோசிக்க ஆரம்பித்துவிட்டான்!!

இதே நேரத்தில் ஷில்பா தன் வீட்டில்… 

அடுத்ததாக ‘ப்ராடைக்ட் ரூட் காஸ் அனாலிசிஸ்’ செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தாள்.

அதாவது ‘ப்ராடைக்ட்டை’ ஆராய்ந்து பார்த்து ‘பிளான்ட் ஷட்டௌன் ஆக என்ன காரணம்?’ என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள்.

Out of the story 

ரசாயன ஆலை

இது ஒரு கெமிக்கல் இண்டஸ்ட்ரி பிளான்ட்.

இது ரசாயன மற்றும் உயிரியல் மாற்றங்களை மூலப்பொருட்களில் நிகழ்த்தி … ஒரு புதிய மூலப் பொருள் பிரித்தெடுக்கப்படும் / தயாரிக்கப்படும். 

அப்படி பிரிக்கப்படும் போது, நச்சு வாயுக்கள் வெளிவரும்.

இந்த வாயுக்கள் மிகவும் கவனமான முறையில் காற்றில் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்துவிடப்படும்.

இந்த நச்சு வாயு வெளியிடும் போது… அந்த நேரத்தில் சூழ்நிலையின் காலநிலை மற்றும் மக்கள் நடமாட்டம்… இப்படிப்பட்ட காரணிகளைக் கவனத்தில் கொண்ட பிறகே வெளியிடப்படும்.