நிரல் மொழி 7.2

_20200824_200107

நிரல் மொழி 7.2

நிகில், ஷில்பாவைத் திட்டுவதற்காக வாய் திறக்கப் போகும் போது, “சாரி நிகில். வொர்க் பிரஷர். ரியலி சாரி” என்று சொல்லிக் கொண்டே வீட்டிற்குள் வந்தாள்.

வந்தவள், வரவேற்பறையில் கிடந்த பீன் பேக்கில் பொத்தென்று அமர்ந்தாள். 

அவள் சொல்லிய விதம்…அவள் அமர்ந்த விதம்… இவைகளைப் பார்த்தவன், அவளின் முகத்தைப் பார்த்தான். 

ஓய்ந்து போய் தெரிந்தாள். களைப்புடன் காணப்பட்டாள். 

அது, அதிகம் வேலை செய்வதால் வந்த களைப்பு போல் தெரியவில்லை. 

எதையோ செய்ய முடியாமல் போனதால் வந்த களைப்பு போன்று தெரிந்தது.

அவள் அமர்ந்திருக்கும் இடத்தின் அருகில் வந்து நின்றான்.

“மிலா எங்க?” என்றாள் நிமிர்ந்து பார்த்து!

“ரூம்ல இருக்கா” என்றவன், “ஏன் கால் அட்டன் பண்ணலை?” என்று கேட்டான். 

“சொன்னேன்ல நிகில்! வொர்க் டென்ஷன்” என்றாள். 

“சரி, என்னோட கால்-தான் அட்டன் பண்ணலை. அட்லீஸ்ட் அம்மாவோட கால் அட்டன் பண்ணிருக்கலாமே?” என்று கோபமாகக் கேட்டான்.

“பேசிட்டேன் நிகில்” என்றவள் முகம் கவலையைக் காட்டியது. 

அதைக் கண்டவன், “ரூட் காஸ் அனாலிசிஸ் பண்ணிப் பார்த்தியா?!” என்று கேட்டான்.

‘உனக்கு எப்படித் தெரியும்?’ என்பது போல் பார்த்தாள். 

“எல்லா இன்டஸ்ட்ரீலயும், இதான் நடக்கும்” என்றவன், “ரிப்போர்ட்-ல என்ன வந்திருக்கு?” என்றான். 

“அது ஹைய்லி கான்பிடென்ஸியல். அதெல்லாம் சொல்ல முடியாது” என்றாள் கறாராக! 

“ஏன் இதுக்கு முன்னாடி, உன் வொர்க் ரிலேட்டடு இன்ஃபார்மேஷன் ஷேர் பண்ணதே இல்லையா?”

“வாட்??” என்று அதிர்ந்தாள், “ஜஸ்ட் டென்டர் கிடைக்க ஆசை… மீட்டிங் இருக்கு… ரோட்மேப் ப்ளான் பண்ணனும்… லைக் தேட் சொல்லியிருப்பேன். டீடெயில்ஸ் ஷேர் பண்ணதே இல்லை” என்றாள் கணீரென்ற குரலில். 

ஆனால், மீண்டும் கலக்கமாக மாறிவிட்டாள். 

அதனைக் கண்டவன், “ஷில்பா, ஒரு ப்ராடைக்ட்-ன்னு இருந்தா… சக்ஸஸ்… பெயிலர் ரெண்டும் இருக்கும். அதுக்கு போய் ஏன் இப்படி இருக்க? தைரியமா இரு” என்று அறிவுரை கூறினான் நிகில்.

“ஓ! அது எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா, நிகில்?! அது தெரியாம ஒன்னும், நான் இந்த போஸ்ட்-ல இல்லை! சும்மா அட்வைஸ் பண்ணாத நிகில்” என்று எழுந்து நின்று, எரிந்து விழுந்தாள். 

நிகில் அமைதியாகிவிட்டான்! 

சிறு வயதிலிருந்து தனியாக இருந்து, தன்னம்பிக்கையுடன் வளர்ந்து… இந்த நிலைக்கு வந்திருப்பவள். 

எத்தனை தோல்விகளைத் தாங்கியிருப்பாள்??

தான் சொல்லிய அறிவுரை அவளுக்குத் தெரியாதா!?  என்று நினைத்து அமைதியாக நின்றான்!! 

அவளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தே வேண்டும் என்ற எண்ணம் வந்தது. 

அந்த நேரத்தில், வெளியே கேட்ட சத்தத்தில்… அறையின் உள்ளேயிருந்து மிலா வந்தாள். 

கோபமாக… கலக்கமாக… சோர்வாக… நின்று கொண்டிருந்த ஷில்பாவைப் பார்த்தவள், “என்ன ஷில்பா? ஏன் ரெண்டு நாளா ஃபோன் அட்டன் பண்ணலை? அத்தை ரொம்ப பயந்துட்டாங்க” என்று கேட்டபடியே, ஷில்பா அருகில் வந்து நின்றாள். 

“இப்போ பேசிட்டேன் மிலா” என்றாள் சாந்தமாக. 

“சரி, ஏதாவது சாப்பிடுறியா?”

“ம்ம்கூம்” என்றவள், “மிலா… தலை வலிக்குது! ஸ்ட்ராங்கா ஒரு காஃபி இல்லைன்னா டீ வேணும்” என்று கேட்டு, மீண்டும் பீன் பேக்கில் அமர்ந்தாள்.

“இதோ..” என்று, மிலா சமயலறை நோக்கிச் சென்றாள்.

அதன் பின், நிகில்…  ஷில்பா இருவரும் ஏதும் பேசிக் கொள்ளவில்லை. 

இரண்டு நிமிடங்களில்,

ஒரு பெரிய கோப்பை நிறைய தேநீர் எடுத்துக் கொண்டு வந்து, “குடி” என்று மிலா ஷில்பாவிடம் கொடுத்தாள்.

ஷில்பா தேநீரைக் குடித்துக் கொண்டிருக்கும் போதே, “இன்னும் ப்ராப்ளம் சரியாகலையா ஷில்பா?” என்று மிலா கேட்டாள்.

‘இல்லை’ என்று தலை அசைத்தவள், பின்… “அவ்வளவுதான்… எல்லாம் போச்சு! இனி என்ன பண்ண முடியும்?” என்று புலம்பினாள். 

“அப்படி சொல்லாத ஷில்பா”

“இல்லை மிலா! இனி கஸ்டமர் எப்படி ப்ராடைக்ட்ட வச்சிருப்பான், சொல்லு? தூக்கிப் போட்ருவான்! ரிலையபிலிட்டி இல்லாத உன்னோட ப்ராடைக்ட் ஒரு ஸ்கிராப்-ன்னு தூக்கிப் போட்ருவான்” என்றாள் கலங்கிய குரலில். 

மிலாவிற்குப் பெரிதாகப் புரியவில்லை. ஆனால், ஷில்பா கவலையில் இருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது.

நிகில், ஜெர்ரியைத் தோளில் போட்டு நடந்து கொண்டே… ஷில்பா பேசுவதைக் கவனித்துக் கொண்டிருந்தான். 

“நான் அன்னைக்கு சொன்னேன்ல மிலா! ஒரு புது ப்ராஜெக்ட் எனக்கு கொடுப்பாங்கன்னு. அதுகூட இனிமே யோசிப்பாங்க!!” என்றாள் வருத்தத்துடன்.

இப்பொது நிகில், ஓரிடத்தில் நின்று ஷில்பா பேசுவதைக் கவனிக்க ஆரம்பித்தான்.

“பட், அதுகூட பரவால்ல. இருக்கிற ப்ராஜெக்ட்ல சக்ஸஸ் கொடுத்து, என்னை நான் ப்ரூவ் பண்ணிடுவேன். ஆனா,?!?… ஆனா??” என்று நிறுத்தினாள்.

நிகில், ஷில்பாவையே பார்த்துக் கொண்டிருந்தான். 

“என்ன ப்ராப்ளம்னு கண்டுபிடிக்க முடியலைன்னா… இதே மாதிரி ப்ராபளம் வந்துகிட்டே இருந்தா… “

நிகில், ஷில்பா பேசுவதைக் கூர்ந்து கவனித்தான். 

“இந்த மாதிரி ப்ராஜெக்ட்ஸ், இனிமே எங்க கம்பெனி டென்டர் எடுக்க கூடாதுன்னு கவர்ன்மென்ட் பிளாக்லிஸ்ட் (blacklist) பண்ணிடுவாங்க”

அவளையே கவனித்துக் கொண்டிருந்த நிகிலிற்கு, ஏதோ புரிவது போல் இருந்தது. 

“அப்படி நடந்தா… காம்ப்பெட்டிட்டர்ஸ் எல்லாருக்கும் கொண்டாட்டமா இருக்கும்” என்று விரக்தியில் சொன்னாள்.

சட்டென நிகிலிற்கு எல்லாம் புரிந்துவிட்டது. 

உடனே, “நீங்க ரெண்டு பெரும் பேசிக்கிட்டு இருங்க. இதோ வர்றேன்” என்று சொல்லி, அறைக்குள் சென்றான். 

அவன் சென்ற பிறகு, மிலா… ஷில்பா இருவரும் பொதுவாகப் பேச ஆரம்பித்தனர்.

அறைக்குள் வந்த நிகில்…

தன் கைபேசியை எடுத்தான். 

ஜெர்ரி உறங்கும் நிலைக்குச் சென்றதால், அவனை மெத்தையில் படுக்க வைத்தான். 

ஒரு கையால், அவனை தட்டிக் கொடுத்துக் கொண்டே… மற்றொரு கையால் கைப்பேசியில் தேட ஆரம்பித்தான். 

ஷில்பாவின் ‘பிளாக்லிஸ்ட்’ என்ற வார்த்தை, அவனுக்கு நிறைய விடயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

முதலில், இதற்கு முன்பு இது போன்ற பிரச்சனையை எதிர் கொண்ட நிறுவனங்கள் பெயரினைக் கண்டறிய வேண்டும். 

அதாவது, அந்த சமையல் எரிவாயு… ரசாயன ஆலை… மெட்ரோ ரயில்… இந்தப் ப்ராஜெக்ட்களை டென்டர் எடுத்திருக்கும் நிறுவனங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். 

யோசித்தான்! எப்படிக் கண்டறிய முடியும் என்று யோசித்தான்!! 

அவ்வாறு யோசிக்கும் போது, அரசின் டென்டர் பற்றிய விவரங்கள் கூறும் இணையதளங்கள் நினைவில் வந்தது. 

உடனே, அந்த இணைய தளங்களில் சென்று பார்த்தான். 

தேடினான்! ஒரு அரைமணி நேரம் தேடினான்!! 

கிடைத்தது!! 

பிரச்சனைக்குரிய ப்ராஜெக்ட்களை டென்டர் எடுத்த நிறுவனங்களின் பெயர்கள் கிடைத்தது!

அடுத்து!! 

அடுத்து என்ன செய்ய வேண்டும்.?? 

இந்த நிறுவனங்கள், அரசினால் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும்.

அரசின் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் இருக்கும் இணைய தளத்திற்குள் சென்றான்.

பெரிய பட்டியலே இருந்தது! மீண்டும் தேடினான்!!

இருபது நிமிடத் தேடல்!

தேடலின் முடிவில், தேடியது கிடைத்துவிட்டது!!!

அவன் கண்டுபிடித்து வைத்த நிறுவனங்களின் பெயர்கள் மூன்றும், அரசின் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் இருந்தன.

அடுத்து அவன் யோசித்தது!! 

ஷில்பா சொன்ன ‘காம்பட்டிட்டர்ஸ்-க்கு கொண்டாட்டம்’ என்ற வார்த்தைகளை… இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

அப்படியென்றால் என்ன அர்த்தம்?

ஒரு நிறுவனத்திற்கு… அதன் போட்டி நிறுவனங்களால் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தப் படுகின்றன.

அதாவது, திட்டமிட்டே இந்தப் பிரச்சனைகள் உருவாக்கப் படுகின்றன.

இறுதியில் இந்த முடிவிற்குத்தான் நிகில் வந்திருந்தான்!! 

ஆனால், இதில் ஒரு சிக்கல் இருந்தது. 

அது! 

ஒரு நிறுவனத்திற்கு எத்தனையோ  போட்டி நிறுவனங்கள் இருக்கும்!

அதில் எந்த நிறுவனம், இது போன்ற செயல்களைச் செய்கிறது என்று எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? 

இதுதான் அந்தச் சிக்கல்!

மீண்டும் யோசித்தான். அன்று கண்டுபிடித்த தகவல்களையும்… இன்று கிடைத்த தகவல்களையும்… இணைத்துப் பார்த்தான்.

எல்லா பிரச்சனைகளிலும் இருக்கும் கால அளவு! அது ஒரே மாதிரிதானே இருக்கிறது!!

அப்படியென்றால்??

ஒரு நபர்… இந்தப் போட்டி நிறுவனங்களில், ஏதோ ஒரு நிறுவனத்திற்காக… இது போன்று செயல்களை ஏன் செய்து தந்திருக்கக் கூடாது?? 

இந்த எண்ணம் வந்தது! 

எல்லாம் கோடிக்கணக்கான பண மதிப்பில் செய்யப்படும் ப்ராஜெக்ட்-கள். 

அது போன்ற ஒரு ப்ராஜெக்ட்டில் பிரச்சனை ஏற்படுத்துவது என்றால், அந்த நபருக்கு… அந்த வேலைக்காக எத்தனை கோடிகள் கிடைக்கும்!

அதிகம்! மிக மிக அதிகம்!! 

ஆக! இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுத்தி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் ஒரு நபர் அல்லது ஒரு கும்பல்!!

சரி! எல்லாம் சரி!! இனி எப்படி பிரச்சனை ஏற்படுத்தப்படுகிறது என்று யோசிக்க வேண்டுமோ?

இல்லை, தேவை இல்லை! யோசிக்க வேண்டாம்!

காரணம்??

அவனுக்குப் புரிந்துவிட்டது.  எந்த வழியில்… எங்கிருந்து பிரச்சனை ஆரம்பித்திருக்கும் என்று!

அவனுக்கு, உடனே ஷில்பாவிடம் சில விடயங்கள் பேச வேண்டும்!

இக்கணம், ஜெர்ரி உறங்கியிருந்தான். தட்டிக் கொடுப்பதை நிறுத்தி… அவனுக்குப் போர்வையை மூடிவிட்டு, நிகில் வெளியில் வந்தான். 

இன்னும் மிலாவும், ஷில்பாவும் பேசிக் கொண்டிருந்தனர்.

“ஷில்பா” என்று அழைத்து, அவள் எதிரே வந்து நின்றான்.

“என்ன நிகில்?”

“ஆங்! நீங்க ரூட் காஸ் அனாலிசிஸ் பண்ணியிருபீங்கள!! அது… அதைப் பத்தி ஒரு …” என்று தொடங்கும் போதே,

“நீ என்ன கேட்டாலும் ரிப்போர்ட் டீடெயில்ஸ் கொடுக்க முடியாது” என்றவள், “மிலா, நான் கிளம்புறேன்” என்று எழுந்தாள். 

“அது எனக்குத் தேவையும் இல்லை”

“தென்??”

“நீ பிளான்ட்-ல இருக்கிற கண்ட்ரோல் சிஸ்டம் ஆப்ரேட்டர்-கிட்ட பேசினியா?”

“வாட்?” என்றவள், “இல்லை… பட், கண்ட்ரோல் சிஸ்டம் இன்ஜினியர்ஸ் கூட பேசினேன்” என்றாள்.

“நான் கேட்கிறது அது இல்லை, ஷில்பா. ஆப்ரேட்டர் கூடப் பேசிப் பார்த்தியா?” என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான். 

“நான் ஏன் அவரோட பேசணும்? என்னோட மீட்டிங்ஸ் எல்லாம் கஸ்டமர் சைடு டாப் லெவல் மேனேஜ்மென்ட் பியூப்பில் கூடத்தான். லைக் ஹெட்ஸ் ஆஃப் ரெஸ்பெக்ட்டிவ் டிபார்ட்மென்ட்ஸ்”

“ஷில்பா… புரிஞ்சிக்கோ! ஆப்ரேட்டர்-கிட்ட இதைப் பத்தி பேசிப் பார்த்தியா?”

“அவருக்கு என்ன தெரியும் சொல்லு? ஹி இஸ் ஜஸ்ட் ஆன் ஆப்ரேட்டர். இன்ஜினியர் கிடையாது”

“எனக்கும் அது தெரியும் ஷில்பா. பட், அவர்தான் டெய்லி அங்க இருக்கிறவரு. நீங்க எல்லாரும் பிரச்சனை அப்படின்னு வரும்போது உள்ளே வந்தவங்க. ஸோ, அவர்கிட்ட பேசினியா?”

‘இல்லை’ என்று தலை அசைத்தவள்,  “ஆனா, அவர்கிட்ட என்ன பேச நிகில்?” என்று கேட்டாள். 

“நான் என்ன கொஸ்டின் கேட்கச் சொல்றேன்னா, அதை அவர்கிட்ட போய் அப்படியே கேளு, போதும்!” என்றான் நம்பிக்கையாக! 

அவன் அப்படிச் சொன்னதும், ஷில்பா எதுவும் பேசாமல் வாசலை நோக்கிச் செல்லத் தொடங்கினாள். 

“ஷில்பா” என்று அவள் முன்னே சென்று நின்றான். 

“என்ன நிகில்?” 

“பதில் சொல்லிட்டு போ”

“என்ன பதில்? நீ கேட்கிற கொஸ்டின, நான் ஏன் அவர்கிட்ட போய் கேட்கணும்?”

“ஏன் இந்த ப்ராப்ளம் வருதுன்னு, உனக்குத் தெரிய வேண்டாமா?” 

அமைதியாக இருந்தாள். 

“இல்லை, ரூட் காஸ் அனாலிசிஸ் பண்ணதில… ப்ராப்ளம் என்னன்னு உனக்குத் தெரிஞ்சிடுச்சா?” என்று கேட்டான். 

“நீ எப்படி கேட்டாலும், ரிப்போர்ட் பத்தி எந்த டீடெயில்ஸ்-ம் நான் சொல்ல மாட்டேன்” என்று தெளிவாகச் சொன்னாள். 

“சொல்லவும் வேண்டாம். உன் ஃபேஸ் பார்த்தாலே தெரியுது. ப்ராப்ளம் என்னன்னு கண்டு பிடிக்க முடியலைன்னு” என்று, அவளைத் தெரிந்து சொன்னான். 

“நிகில்!!” என்று அலுத்துக் கொண்டாள். 

“ஷில்பா… ஆப்ரேட்டர்கிட்ட நான் கேட்கிற கொஸ்டினைக் கேட்டுப் பாரு”

“அல்ரெடி அவங்க சைடு இன்ஜினியர்ஸ், பிளான்ட் பத்தி அவர்கிட்ட பேசிருப்பாங்க. நீ என்ன புதுசா கொஸ்டின் கேட்கப் போற?”

“நான் கேட்கப் போற கேள்விக்கும் பிளான்ட்-க்கும் எந்த சம்பந்தமும் இருக்காது”

“ஓ! அப்படி சம்பந்தமே இல்லாத கேள்வியை, அவர்கிட்ட ஏன் கேட்கணும்?”

“அப்போதான் ப்ராப்ளம் என்னன்னு தெரியும்”

அவள் யோசித்தாள்.

“ப்ளீஸ் ஷில்பா! யோசிக்காத”

“யோசிக்கணும் நிகில். இதுல நிறைய இருக்கு. கஸ்டமர் சைடு ப்ராப்பரா பெர்மிஷன் வாங்கணும்”

“அதை நீ பார்த்துக்கோ. யார்கிட்ட பேசணுமோ, அவங்ககிட்ட பேசி… ஆப்ரேட்டர்கிட்ட தனியா பேச பெர்மிஷன் வாங்கு”

“நிகில்! தனியாலாம் பேச முடியாது. அவங்க சைடு இன்ஜினியர்ஸ் இருப்பாங்க”

“பரவால்ல ஷில்பா! ஜஸ்ட் அவர்கிட்ட ரெண்டு மூணு கொஸ்டின் கேட்டா போதும். யார் கூட இருந்தா என்ன?” என்றான் உறுதியாக! 

அவன் உறுதியைப் பார்த்தவள், “சரி, நான் டிரை பண்ணிப் பார்க்கிறேன். குட் நைட்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள். 

அவள் சென்றதும், வீட்டின் கதவைத் தாழிட்டு வந்து… மிலாவைப் பார்த்தான். 

அவள் சோஃபாவில் சாய்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தாள். 

அருகில் வந்து, “மிலா, எந்திரி!” என்று அவளை எழுப்பினான். 

தூக்க கலக்கத்திலே கண் திறந்து பார்த்தவள், “ஷில்பா” என்று கேட்டாள். 

“இப்பதான் கிளம்பிப் போறா” என்றவன், “நீ உள்ளே வா” என்று அழைத்துச் சென்றான். 

மிலா… ஜெர்ரியின் அருகில் படுத்துக் கொண்டதும், அவளுக்கும் போர்வை போர்த்திவிட்டான். 

நிகில் நகரப்போகும் போது, மிலா அவனது வலக்கையைப் பிடித்தாள். 

மெல்ல சிரித்தபடி, அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். மிலா கண்மூடித் தூங்க ஆரம்பித்தாள்.

இடக்கரத்தால், தன் கைப்பேசியை எடுத்தான். 

அதில், தான் சேகரித்த விவரங்களை வைத்து… ஒரு அட்டவணை தயாரித்தான். 

டென்டர் எடுத்த நிறுவனங்களின் பெயரை ஒரு புறம் எழுதினான்.

போட்டி நிறுவனங்களின் பெயர்களை மறுபுறம் எழுதினான். 

இரண்டிற்கும் நடுவில் ✖️ என்ற குறியீட்டை வரைந்தான். 

கண்களைச் சுருக்கி, ‘யாரிந்த  ✖️?’ என்று நிகில் யோசிக்க ஆரம்பித்துவிட்டான்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!