“ஹலோ” என்றான் நிகில்.
எதிர் முனையில் நிசப்தம் நிலவியது.
“ஹலோ யாரு?” என்று கொஞ்சம் அழுத்திக் கேட்டான்.
இப்பொழுதும் நிசப்தம்.
“ஹலோ யாரு? என்ன வேணும்??”
“நீ தேடிக்கிட்டு இருக்கிறவன்” என்றொரு குரல் எதிர் முனையில்!
ஆழ்ந்த குரல்! அமைதியான குரல்!! அசாதாரண குரல்!!!
எதிர்முனையில் கேட்ட அந்தக் குரல்!
நிகில் ஒரு நிமிடம்… ஒரே ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றான்.
அந்த நேரத்தில், “நிகில்” என்று அழைத்துக் கொண்டு… மிலா, அவன் முன் வந்து நின்றாள்.
சட்டென கைப்பேசியை ‘ஹோல்டு- மோடில்(hold mode)’ போட்டுவிட்டான், நிகில்.
அழைப்பைத் துண்டிக்கத் தோணவில்லை! ஆகவே, இப்படிச் செய்தான்!!
“சொல்லு” என்றான் அதிர்ச்சியை மறைத்து!
அவனின் நிலை புரியாமல், “பர்சேஸ் பண்ண, உன்னோட கார்டு வேணும்” என்று கேட்டாள்.
“ரூம்ல வாலெட் இருக்கு. நீயே போய் எடுத்துக்கோ” என்றான்.
அவள் எடுத்துவிட்டு வரும் வரை, நிகில் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டே நின்றான்!
‘எப்படி இவனுக்கு தன் கைப்பேசி எண் கிடைத்தது?’ என யோசித்தான்.
மேலும், அந்த ✖️ தன்னைத் தெரிந்து கொள்ள இருக்கும் வழிகளை யோசித்துக் கொண்டு நின்றான்!!
‘டெபிட் கார்டு’ எடுத்தவள், மீண்டும் அவன் முன் வந்து நின்றாள்.
“எடுத்துக்கிட்டேன் நிகில். அப்புறம்…” என்று பேச்சை வளர்க்கப் போனவளிடம்,
“கீழ ஷில்பா வெயிட் பண்ணுவா, நீ கிளம்பு” என்றான், அந்த நொடியின் அவசியத்தை உணர்ந்து.
“சரி சரி… பை” எனச் சொல்லி, மிலா சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும், முதல் வேலையாகச் சென்று கதவைப் பூட்டினான்.
பின் ஜெர்ரியைப் பார்த்து, “அப்பா ஃபோன் பேசப் போறேன். சத்தம் போடக் கூடாது” என்றான்.
அவனுக்கு என்ன புரிந்ததோ? நிகிலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, தோளில் முகம் புதைத்துக் கொண்டான்.
‘ஹோல்டு மோடி’-லிருந்து கைப்பேசியை எடுத்து, மெதுவாகக் காதிற்குக் கொடுத்து, “ஹலோ” என்றான்.
மீண்டும் அமைதி நிலவியது!
“ஹலோ” என்றான் நிகில், மீண்டும்.
இடைப்பட்ட நேரத்தில், ‘இவனுக்கு எப்படித் தன்னைத் தெரியும்?’ என்று நிகில் யோசித்து முடித்திருந்தான்.
“என்ன?!? நான், உன்னை எப்படிக் கண்டுபிடிச்சேன்னு யோசிச்சு முடிச்சிட்டியா?” என்று எதிர்முனை ஆள் திமிரான குரலில் கேட்டான்.
நிகிலிற்குள் ஒரு பதற்றம் வந்தது! எளிதாகத் தன்னைக் கணிக்கிறானே என்ற பதற்றம், அது!!
எனினும், “யோசிச்சு கண்டுபிடிக்கிற அளவுக்கு இதுல என்ன இருக்கு?” என்றான் நிகில், திகைப்பில்லாதக் குரலில்!
“ஓ!” என்று எதிர் முனையிலிருந்து ஆச்சிரியமான குரல் வந்தது.
ஓர் அமைதி நிலவியது!
இருவருமே, பதற்றத்தையும் ஆச்சரியத்தையும் பொறுமையாகக் கையாளுபவர்கள் என்பதை பறைசாற்றும் அமைதி, அது!!
ஓர் பக்குவம் நிறைந்த அமைதி, அது!
“கொஞ்சம் எப்படின்னு சொல்லேன்? நான் யோசிச்சது சரியான்னு செக் பண்ணிக்கிறேன்” என்று கரகரத்தக் குரலில், எதிர்முனையில் இருப்பவன் கேட்டான்.
நிகில் யோசித்தான்! இவன் கேட்கிறான் என்று சொல்லவா? வேண்டாமா? என்ற யோசனை அது!
“ஆக்ச்சுவலி உனக்குத் தெரியுமா? தெரியாதா?” எனப் பரிகாசம் செய்யும் குரலில் கேட்டான், எதிர்முனை ஆள்!
“நீ… அந்த ஆப்ரேட்டரை பாலோவ் பண்ணியிருப்ப!
நேத்து பிளான்ட்டுக்கு வெளியில நான் நின்னதையும் பார்த்திருப்ப!
அப்படித்தான் உனக்கு என்னைத் தெரிய வந்திருக்கும்.
தட்ஸ் ஆல்!!” என்று பட்டென்று நிகில் பதில் சொன்னான்.
“பிரில்லியன்ட் நிகில்!”
“தேங்க்ஸ்!!”
இந்த பாராட்டு, நன்றி… இரண்டுமே வஞ்சப் புகழ்ச்சி அணியின் கீழ் வருமோ??!
ஏனெனில், அப்படித்தான் இருந்தது இருவரின் குரலும்!!
எதிர்முனையில் இருப்பவன் தொடர்ந்தான்…
“யெஸ் நிகில்! அந்த ஆப்ரேட்டரை பாலோவ் பண்ணேன்! ஒரு ப்ராடைக்ட் மேனேஜர் ஆப்ரேட்டரைப் பார்க்கிறது நார்மலான விஷயம்! ஆனா, தேவையே இல்லாம நீ எதுக்கு அங்கன்னு யோசிச்சேன்??”
இப்படித்தான் இவன் தன்னைக் கண்டுபிடித்திருப்பான் என்று நிகிலிற்குத் தெரியும்!
ஆதலால், பெரிய வியப்புகள் ஏதுமின்றி கேட்டுக் கொண்டிருந்தான்!!
“அப்புறம், அந்த ப்ராடைக்ட் மேனேஜர் கூட, நீ பேசுறதையும் பார்த்தேன்” என்று தன் அறிவை மெச்சும் குரலில், எதிர்முனை நபர் சொன்னான்.
“மிச்சத்தை நான் சொல்லவா?” என்று ஆர்ப்பாட்டம் இல்லாத குரலில் நிகில் கேட்டான்.
“மோஸ்ட் வெல்கம்” என்று ஆழ்ந்த குரலில் எதிர்முனையில் இருப்பவன் சொன்னான்.
“என்னைய பாலோவ் பண்ணிருப்ப. ஏதோ ஒரு இடத்தில, என்னை ஃபோட்டோ எடுத்திருப்ப!
கூகிள்-ல அந்த இமேஜ் வச்சித் தேடிப் பார்த்திருப்ப! அப்போ, என் ஃபோட்டோவோட இருக்கிற… நான் எழுதின ஆர்டிக்கில்ஸ் வந்திருக்கும்!!
ஸோ, ஆரிட்டிகில்ஸ் வச்சி என்னோட ஆஃபீஸ் அட்ரஸ் அன்ட் ஃபோன் நம்பர்… கண்டுபிடிச்சிருப்ப!
வெரி சிம்பிள்!! கரெக்டா?!” என்று, தன் அறிவை மெச்சும் குரலில் நிகில் கேட்டான்.
“யெஸ், யூ ஆர் கரெக்ட் அன்ட் யூ ஆர் பிரில்லியன்ட்” என்று பொய்யாகப் பாராட்டினான், எதிர்முனையில் இருப்பவன்.
“ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ்! பட், நீ ஒரு முட்டாள்!!” என்றான் நிகில் உண்மையாக!
“ஓ ரியலி!” என்றான் கொஞ்சம் கூட, நிகில் சொன்னதைப் பொருட்படுத்தாமல்!
“யெஸ்!! நீ யாருன்னு எப்படிக் கண்டுபிடிக்கிறதுன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்.
ஜஸ்ட் ஒரு ஆப்ரேட்டரை பாலோவ் பண்ணதுக்காக, நீயே எனக்கு கால் பண்ணிப் பேசற பார்த்தியா?!
ஸோ, நீ ஒரு முட்டாள்” என்றான் நிகில் திரும்பவும்!
“வாட்! கம் ஆன் நிகில்! ஆப்ரேட்டரை பாலோவ் பண்ணதுக்காக, உனக்கு ஃபோன் பண்றேனா?? ஜோக் ஆஃப் தே இயர் மேன்!” என்றான் சிரிக்காமல்… சிலை போல் இருக்கும் குரலில், எதிர்முனை ஆள்.
அந்தக் குரல்… தன்னை எள்ளி நகையாடுவது போல் இருந்தது, நிகிலிற்கு!
எனவே, நிகில் எதுவும் பேசவில்லை!
“என்ன நிகில்? அமைதியாயிட்ட?! புரியலையா?” என்று எதிர்முனையில் இருப்பவன் அதிராதக் குரலில் கேட்டான்!
ஆம்! உண்மையில் நிகிலிற்குப் புரியவில்லை!
‘அவன் என்ன சொல்ல வருகிறான்?’ என்று புரியாமல் நிகில் யோசித்தான்!!
“நான் சொல்லவா நிகில்?” என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்டான், எதிர்முனை இருந்தவன்!!
“யூ ஆர் மோஸ்ட் வெல்கம்” என்றான் நிகில்!
“ஓகே” என்ற எதிர்முனை, “பைப் காஸ் லைன்… கெமிக்கல் பிளான்ட்… மெட்ரோ ரெயில்…” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, “இப்போ புரியுதா நிகில்?” என்று அர்த்தத்துடன் கேட்டான்.
நிகில் விதிர்த்துப் போனான்!
‘தான் இணையத்தில் தேடியது, இவனுக்கு எப்படித் தெரிந்தது?’ என்று யோசித்துப் பார்க்க ஆரம்பித்தான்.
“என்ன மிஸ்டர் நிகில், இன்னும் சொல்லவா?” என எதிர்முனையில் இருப்பவன் இளக்காரமாகக் கேட்டான்.
நிகிலிடம் மீண்டும் அமைதி!
“நீ பிரச்சனையெல்லாம் ஒரே நேர்கோட்டில கொண்டு வந்துட்ட!
டென்டெர் எடுத்த கம்பெனி டீடெயில்ஸ் பார்க்கிற…
ப்ளாக்லிஸ்ட் வெப்சைட் போய் செக் பண்ற…
இப்படி எல்லாத்தையும் இணைச்சுப் பார்க்க ஆரம்பிச்சுட்ட!
இது எல்லாத்துக்கும் காரணம் யாரோ ✖️-ன்னு ஒருத்தன்! அப்படிங்கிறது வரைக்கும் நீ கண்டுபிடிச்சிட்ட!”
இக்கணம் நிகில்… ஜெர்ரியை சோஃபாவில் உட்கார வைத்து, அவன் விளையாட சில விளையாட்டுப் பொருட்களை எடுத்துப் போட்டான்.
பின், ‘தன் கைப்பேசியில் பார்த்ததை எல்லாம் இவன் சொல்கிறான் என்றால்… என்ன அர்த்தம்?’ என்று நிகிலிற்குப் புரிந்து போயிற்று!
“என்ன நிகில் இன்னும் புரியலையா? அப்போ நான் முட்டாள் இல்லை! நீதான் முட்டாள்!!” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.
“என் ஃபோன ஹேக் பண்ணிருக்க! கரெக்டா??” என்றான் நிகில் பதறாமல்!
“யெஸ் நிகில்! உன் ஃபோன் ஹேக்டு.
உன் ஃபோன் நம்பர் கிடைச்சதும், அதான் பண்ணேன்.
உன் ஃபோன் ப்ரொவ்சிங் ஹிஸ்டரி எல்லாம் பார்த்தேன்.
நீ, கொஞ்ச நாளா பண்ணிக்கிட்டு இருக்கிற விஷயமெல்லாம் தெரிஞ்சது.
அதான் உனக்கு ஃபோன் பண்ணேன்.
ஸோ, திரும்பவும் சொல்றேன்… நீதான் முட்டாள்” என்று நிகிலைக் கோபப்படுத்தினான்.
நிகிலிற்கும் கோபம் வந்தது! ஆனாலும், அதைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
அவனைப் பேச வைக்க வேண்டும்.
பேச வைத்தால்தான் அவனைப் பற்றித் தெரிய வரும் என்று நிகில் நினைத்தான்.
எனவே, “எவனோ எழுதின ஹேக்கிங் ப்ரோக்ராம் வச்சி ஹேக் பண்ணற… யாரோ எழுதின வைரஸ் ப்ரோக்ராம் வச்சி அட்டாக் பண்ணற!! ஆனா, நீ என்னைய முட்டாள்-ன்னு சொல்ற?” என்று, நிகில் இளகாரமாய் கேள்வி கேட்டான்.
“எவனோ எழுதின ப்ரோக்ராமை யூஸ் பண்ண, நான் ஸ்க்ரிப்ட்டு கிட்டிஸ்(scripted kiddies) இல்லை!!
எனக்குத் தேவையான ப்ரோக்ராம்-ம நானேதான் எழுதிப்பேன்!
நான் ஒரு ப்ரோக்ராமிங் மான்ஸ்டர்(programming monster) அன்ட் கோடிங் கிரிமினல்(coding criminal)” என்று தன்னைப் பற்றி, இடைவெளி விடாமல் பேசினான், எதிர்முனை!!
“ஸோ, நீ ஒரு ஹேக்கர்! அவ்வளவுதான்” என்று சொல்லி, நிகில் அவனைக் கோபப்படுத்தினான்.
“நான் ஹேக்கர் இல்லை!! சைபர் கிரிமினல்” என்றான் எதிர்முனையில் இருப்பவன், நிகில் காதின் செவிப்பறைக்குள் வந்து ரகசியமா! ரவுத்திரமாய்!!
“நீ யாரா வேணா இருந்துக்கோ! ஆனா, நீ எங்க இருக்க-ன்னு கூடிய சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்” என்று சவால் விடும் தொனியில், நிகில் பேசினான்.
“நிகில்! ஐம் நல் கேர்!! லிவிங் இன் இன்வேலிட் ஐபி அட்ரஸ். உன்னால என்னை நெருங்கவே முடியாது” என்று நிகிலிற்குச் சவால் விட்டான்!
“ஓ! ரியலி?! அப்புறம் எதுக்கு எனக்கு ஃபோன் பண்ணிப் பேசணும்?”
இம்முறை, நல் கேர் அமைதி காத்தான்.
“ஸோ, ஏதோ ஒரு வகையில… ஐ டிஸ்டப்பர்டு யூ!! அதான் எனக்கு ஃபோன் பண்ணியிருக்க” என்று, நல் கேரின் நாடித் துடிப்பை அறிந்து பேசுபவன் போல் பேசினான் நிகில்.
மீண்டும் நல் கேர் பேச்சில்லாமல் நின்றான்.
“எனக்கு நம்பிக்கை இருக்கு, நான் உன்னைக் கண்டுபிடிப்பேன்னு” என எஃகைப் போல் உறுதி கொண்ட குரலில், நிகில் கூறினான்.
“வேண்டாம் நிகில்! ஐ வார்ன்(warn) யூ!! நீ என்னை நெருங்கனும்-னு நினைக்காத! அப்படி நினைச்ச, யூ வில் சஃபர்(suffer) எ லாட்!!” என்று எச்சரித்து அழைப்பைத் துண்டித்தான், அந்த நல் கேர்!!
அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன்…
சில நொடிகள்… நிகில், தன் கைப்பேசியைப் பார்த்தான்.
அடுத்து என்ன செய்ய? என்று யோசித்தான்.
அதற்குள்… நிகில் பேசி முடித்தது தெரிந்ததும், ‘ப்பா’ என்று சொல்லி…. ஜெர்ரி அவன் மடியில் ஏறி விளையாட ஆரம்பித்தான்.
நிகிலும் யோசிப்பதை விட்டுவிட்டு, ஜெர்ரியுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தான்.
இருவருமே, கணினித் தொழில்நுட்பத்தில் கரை கண்டவர்கள்.
தாங்கள் கொண்ட கணினி அறிவில், ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல!
இன்னும் நிறைய சொல்லலாம்!
சுருக்கமாக,
<NIKIL VS NULL CHAR.> என்கின்ற, விளையாட்டு ஆரம்பம் ஆகிற்று!
Out of the story
Browsing History
நாம் இணையத்தில் தேடும் இணையதளங்களின் விவரங்கள் அனைத்தும், History என்ற இடத்தில் சேமிக்கப் பட்டிருக்கும்.
images.google.com
இதில் சென்றால், புகைப்படங்கள் பயன்படுத்தியும் தேட முடியும்.
தேடல் இடத்தில் ? இப்படி ஒரு பரிந்துரை இருக்கும்.
அதைப் பயன்படுத்தி படத்தை சேர்த்து, ‘தேடு’ என்று கொடுத்தால்… படத்தைப் போல மற்றும் படத்தை ஒத்த… விடயங்கள் வரும்!