நிலா பெண் 14

நிலா பெண் 14

 
அதே ஹோட்டல், அதே ரூம், அதே பால்கனி. ஒரு வட்ட மேஜையில் உணவு பரிமாறப்பட்டிருக்க இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள். டின்னரை ரூமிற்கே வரழைத்திருந்தான் ஆதி.
 
துளசி அவன் வாங்கி கொடுத்திருந்த அனார்கலி ஆடையில் இருந்தாள். மறந்தும் அவனை அருகில் விடவில்லை. இன்று ஆதியின் குறும்புகள் கொஞ்சம் எல்லை மீறிக்கொண்டுதான் இருந்தன. 
 
அவளை விழுங்குவது போலவே அவன் பார்வை இருக்கவும் துளசியால் ஒழுங்காக உண்ணக்கூட இயலவில்லை. அதை உணர்ந்தவன் போல தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் அவன்.
 
“ரெண்டு தாலி, மூனு தாலி… இதையெல்லாமா நம்புவாங்க துளசி?” பேச்சை இப்போது அவனே ஆரம்பித்தான்.
 
“உங்களுக்கு இதெல்லாம் யாரு சொன்னாங்க?”
 
“பாட்டி.” ஆதியின் பதிலில் துளசி திகைத்தாள்.
 
“பாட்டியா?!”
 
“ஆமா… உங்கப்பா சம்மதம் சொல்லிட்டாலும் பாட்டியால இதை ஏத்துக்க முடியலை போல, என்னைக் கூப்பிட்டு வெச்சு பொலம்பி தீர்த்துட்டாங்க.”
 
“ஓ…”
 
“இப்போ ஓ போடு நீ! இதையெல்லாம் நம்புற அளவுக்கு நீயும் முட்டாளா துளசி?”
 
“பெரியவங்க சொல்லும் போது நான் என்ன பண்ணட்டும்?”
 
“எல்லாத்தையும் தூக்கி குப்பையில போட்டுட்டு துணிஞ்சு நீயா கல்யாணம் பண்ணி இருந்திருக்கணும்.”
 
“ஐயையோ!”
 
“என்ன ஐயையோ? அங்கெல்லாம் இந்த ஜாதகம், தோஷம், ஜாதகப்பிரகாரம் ரெண்டு தாலி, மண்ணாங்கட்டின்னா என்னன்னே தெரியாது, அங்கேயும் மனுஷங்க சந்தோஷமாத்தானே வாழுறாங்க?”
 
“அது சரிதான்.” அரை குறையாக அவள் ஒத்துக்கொண்டாள்.
 
“இன்னைக்கு நைட்டே நான் அப்பாக்கு ஃபோனை போட்டு பேசுறேன் துளசி.”
 
“…………………”
 
“என்ன ஓகேவா?”
 
“ம்…” அவள் தலையை ஆட்டினாள்.
 
“இதுக்கு மேலேயும் டேபிளுக்கு அந்த பக்கம் நீ இந்த பக்கம் நான்னெல்லாம் வாழ முடியாது.” அவன் குரலில் கிறக்கம் ஏறவும் துளசி பேச்சை மாற்றினாள்.
 
“கிளம்பலாமா?”
 
“என்ன அவசரம்? இப்பதானே எட்டு மணி.” சொன்னவன் தனது ஃபோனை எடுத்து சங்கரபாணியை அழைத்தான்.
 
“அங்கிள், நானும் துளசியும் பீச்ல இருக்கோம், இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவோம்.” அவன் பேசி முடிக்க இவள்,
 
“பொய்!” என்றாள் ஒரு மாதிரியான குரலில்.
 
“உங்கப்பாக்கிட்ட வேற என்ன சொல்ல சொல்றே நீ? தாலி கட்டினவனைப் பக்கத்துலேயே விடமாட்டேங்கிறா உங்க பொண்ணுன்னு சொல்லவா?” அவன் குரலில் இப்போது கோபம் இருந்தது.
 
“இப்போ என்ன வேணும் உங்களுக்கு?” அவளும் குரலை உயர்த்தினாள்.
 
“ஒன்னும் வேணாம் போ!” சாப்பாட்டை முடித்திருந்தவன் கோபமாக எழுந்து போய் கடலைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
 
குனிந்து தன் மார்பில் பதிந்திருந்த பொன்தாலியைப் பார்த்தாள் துளசி. மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டிருந்தது அந்த மங்கிய வெளிச்சத்திலும் அழகாக மின்னியது. அதைக் கட்டியவன் மேல் இப்போது காதல் பொங்கி வழிய எழுந்து அவன் அருகே போனவள் அவனைப் பின்னால் இருந்த படியே இறுக அணைத்துக்கொண்டாள்.
 
ஒரு நொடி ஆதியின் உடல் விறைத்தது. அடுத்த நொடி வேகமாக திரும்பியவன் அவளை அள்ளி அணைத்துக்கொண்டான்.
 
“துளசி… துளசி… துளசி…” பித்துப்பிடித்தவன் போல அவள் முகமெங்கும் முத்திரைப் பதித்துக் கொண்டிருந்தான் அந்த கிறுக்கன்.
 
பல நூற்றாண்டுகளாக எதற்காகவோ அலைந்து திரிந்தவன் தான் தேடியதைக் கண்டுவிட்டது போல இருந்தது அவன் ஆர்ப்பரிப்பு.
 
துளசி அவனைச் சிறிது நேரம் அனுமதித்தாள். பால்கனி சுவரில் சரிந்து தரையில் உட்கார்ந்தவள் அவனையும் தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்.
 
தாலியும் அதைக் கொடுத்தவனும் இப்போது அவள் நெஞ்சத்தையே மஞ்சம் என சரணடைந்திருந்தார்கள்.
 
அவன் ஆர்ப்பரிப்பு தீரும் வரை அவன் தலையைக் கோதி கொடுத்தாள் பெண்.
 
முகத்தை அவள் மார்போடு புரட்டியவனின் கன்னத்தை அவள் கழுத்துத்தாலி லேசாக உரசியது. நிஜத்துக்கு வந்த ஆதி சட்டென்று எழுந்து கொள்ளப்போனான். பெண் அவனைத் தடுத்தாட்கொண்டது.
 
“போகலாம் துளசி.” இப்போது அவன் அவசரப்பட்டான்.
உண்மையிலேயே தன் மனதிற்கினியவளைத் தனிமையில் சந்திக்க ஆர்வம் காட்டும் ஆண்களுக்கு அத்தனைத் தைரியம் இருப்பதில்லை. 
 
அதே தனிமையைப் பார்த்து அச்சப்படுபவர்களும் அவர்கள்தான். அது அவர்களின் பொறுப்புணர்ச்சி! அந்த பெண் மேல் அவர்கள் வைத்திருக்கும் மரியாதையின் இன்னொரு வடிவம்!
 
“என்ன அவசரம்?” இது துளசி.
 
“துளசி… வேணாம், சொன்னா கேளும்மா… போயிடலாம், நான் அத்தனை நல்லவனெல்லாம் கிடையாது.”
 
“அப்போ கெட்டவனா? உன்னை மாதிரி நானும் பியூரா இருக்கேன் துளசின்னு சொன்னதெல்லாம் சும்மாவா?”
 
“ஏய்! பொண்டாட்டிக்கிட்டயும் பியூரா இருக்க நானென்ன கேணையனா?”
 
“அடேங்கப்பா! இதுக்கெல்லாம் தமிழ் நல்லாத்தான் வருது.”
 
“ஹா… ஹா… போகலாம் துளசி.” அவன் போவதிலேயே குறியாக இருந்தான்.
 
“நீங்களும் நானும் சின்னப்பசங்களா என்ன? எதுக்குப் பயப்பிடுறீங்க?” 
 
“இது பயமில்லை துளசி, உனக்கு அதெல்லாம் சொன்னா புரியாது.” மனமே இல்லாமல் எழுந்தவன் அவளையும் எழுப்பி விட்டான். 
 
நகரப்போன பெண்ணின் கரத்தைப் பிடித்து இப்போது நிறுத்தினான் அவன். என்ன என்பது போல அவள் திரும்பினாள்.
 
“இன்னைக்கு நடந்த இதே ஸீன் நம்ம ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கும் உண்டு.” துளசி அவன் பேசிய பாஷைக் கேட்டு விக்கித்து நின்றாள்.
 
“என்னோட பெட் ரூம்ல எந்த க்ளாஸ் டோரும் இல்லை துளசி.” கொசுறாக அவன் தகவல் வேறு வழங்கினான். 
 
ஸ்தம்பித்து நின்ற பெண்ணின் அருகில் ஒரு புன்சிரிப்போடு வந்தவன் அவள் கன்னத்தை நிமிண்டினான்.
 
“இதே ப்ளாக் ட்ரெஸ் அன்னைய ஸீன்லயும் உண்டு டார்லிங், அன்னைக்கு நீங்க என்ன பண்ணுறீங்கன்னு நானும் பார்க்கிறேன்.” அவன் சூளுரைத்தான். ஆனால்… கனிவோடு, காதலோடு.
 
***
 
அதன் பிறகு ஆதியின் நடவடிக்கைகள் அதிரடியாக மாறிப்போனது. சரியாக அடுத்த நான்காவது நாள் ஆதியின் பெற்றோர் பாரதி தெருவிற்கு வந்துவிட்டார்கள்.
 
ஆத்ரேயனின் அப்பா சுந்தரமூர்த்தி இறக்கை இல்லாமல் வானில் பறந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டாவது மருமகள் தமிழ்நாட்டுப் பெண் என்பதில் அவருக்குக் கொள்ளை மகிழ்ச்சி.
 
அம்மா மார்க்ரெட் மிகவும் இயல்பான பெண்மணியாக இருந்தார்.
 
பால்போல வெண்மையான சருமம், அதற்கு ஏற்றாற்போல பழுப்பு நிற கேசம். 
 
இவை எதற்கும் சம்பந்தமே இல்லாதது போல அழகாக தமிழ் பேசினார் அந்த ஆங்கில பெண். பார்த்த அனைவருமே பிரமித்துப் போனார்கள். பாட்டி மயக்கம் போடாத குறைதான்.
 
“ஆதி! என்னடா உங்கம்மா இவ்வளவு நன்னா தமிழ் பேசுறா?!” வியந்து நின்ற பாட்டியைப் பார்த்து ஆதி வாய்விட்டுச் சிரித்தான்.
 
முழங்காலைத் தாண்டிய நீண்ட ஸ்கர்ட்டும் ப்ளவுஸும் அணிந்திருந்தார் மார்க்ரெட். தமிழ் சுத்தமாக பேசினாலும் அந்த உச்சரிப்பு சரியாக அவர் நாக்கிற்கு வசப்படவில்லை. 
 
ஆதியின் அண்ணா குடும்பத்தினர் வந்திருக்கவில்லை. கல்யாணம் நிச்சயமானதும் வருவதாக அம்மாவிடம் சேதி வந்திருந்தது. அதை ஆதி பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. 
 
அன்று முழுவதும் பயண அலுப்புத் தீர ஓய்வெடுத்த மூத்த தம்பதியர் அடுத்த நாள் காலையே சங்கரபாணியின் வீட்டிற்கு முறைப்படி பெண் கேட்டுப் போய்விட்டார்கள். 
 
இருவீட்டிற்கும் பொதுவில் பெரியவர்களாக தாத்தாவும் பாட்டியுமே எல்லாவற்றையும் முன்னின்று நடத்தினார்கள். பாரதி தெருவிற்குக் கல்யாணக்களை அமோகமாக வந்திருந்தது.
 
இரண்டு வாரங்கள் வேலை நிமித்தமாக வெளியூர் போயிருந்த இம்ரான் திரும்பி வந்தபோது திக்குமுக்காடிப் போனான். அந்த கால இடைவெளியில் இங்கே நடந்திருக்கும் நிகழ்வுகள் அவனை வியப்பில் ஆழ்த்தி இருந்தன. 
 
ஆதிக்காகவும் துளசிக்காகவும் வெகுவாக மகிழ்ந்தது அவன் மனது!
சேதி கேட்டு ராபின் கூட பல முறை ஆதிக்கு ஃபோன் பண்ணி இருந்தான். ஆனால் ஆதியை யாராலும் இப்போது பிடிக்க முடியவில்லை. இறுதியாக நம்பியை அழைத்துப் பேசி இருந்தான்.
 
“ஆதி, ராபின் நாலைஞ்சு வாட்டி உன்னைக் கூப்பிட்டிருப்பான் போல? நீ ஃபோனை ஆன்ஸர் பண்ணவே இல்லையாம்!” இது நம்பி.
 
“ஓ… கவனிக்கலை நம்பி.” பதில் சொன்னாலும் அது உண்மையன்று. ராபினின் அழைப்பை ஏனோ ஏற்றுக்கொள்ள ஆதிக்கு விருப்பம் இருக்கவில்லை.
 
துளசி மேல் அவனுக்கொரு நாட்டம் இருந்தது என்ற உண்மை ஆதியை வெகுவாக பாதித்தது. ஏனோ அவனைத் தவிர்த்துவிட்டான்!
 
தன் வருங்கால இளைய மருமகளை அருகில் அமர்த்திக்கொண்டு கதைப் பேசிக்கொண்டிருந்தார் மார்க்ரெட்.
பாரதி தெரு பெண்களுக்கு இதுவெல்லாம் பெருத்த வேடிக்கையாக இருந்தது.
துளசிக்கு அடித்திருக்கும் யோகம் பற்றிக் கூடிக்கூடி பேசிக்கொண்டார்கள்.
 
சங்கரபாணிக்கு ஆனந்த கண்ணீர் வடிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது.
 
சாஸ்திரம், சம்பிரதாயம், விருந்தோம்பல், முறை செய்தல், துணிமணி வாங்குதல் என்று பத்து நாட்கள் கரைந்து போய்விட்டன. 
இன்னும் இரண்டு நாட்களில் கல்யாணம். ஷிவானி கூட டெல்லியில் இருந்து வந்து குதித்துவிட்டாள். அவள் வந்த பிற்பாடு கல்யாண வீடு இன்னும் அமர்க்களப்பட்டது.
 
அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று தன் அத்தானை ஒரு வழி பண்ணி விட்டாள். சுந்தரமூர்த்தியும் தன் தங்கை மகளோடு இணைந்து கொண்டார். அவருக்கு முழுதாக ஒரு இந்திய திருமணத்தைப் பார்க்க வேண்டும். அந்த ஆர்வத்தில் இளையவளோடு கூட்டுச் சேர்ந்து கொண்டார்.
 
ஆத்ரேயன் எல்லாவற்றிற்கும் தலை ஆட்டினான். நடக்கும் நிகழ்வுகள் அவனுக்குமே மிகுந்த பூரிப்பைக் கொடுத்திருந்தது.
 
“அத்தான், இன்னைக்கு நைட் மெஹந்தி ஃபங்ஷன் கண்டிப்பா உண்டு!” ஆதியிடம் உரிமையோடு மல்லுக்கு நின்று இப்போது அனைவரையும் துளசி வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள் ஷிவானி.
 
துளசி தரப்பில் இதுபோன்ற வழக்கங்கள் இல்லை என்றாலும் மாப்பிள்ளை வீட்டார் சொல்லும் போது தவிர்க்க முடியவில்லை. சங்கரபாணி சரியென்று தலையாட்டி விட்டார்.
 
துளசியின் இரு கைகளிலும் முளங்கை வரை அழகான வர்ணக்கோலம் போடப்பட்டுக்கொண்டிருந்தது.
அவளால் இனி அசைய முடியாது என்று அறிந்த போது ஆதி தன் வேலையைக் காட்ட ஆரமபித்தான்.
 
“ஷிவானி…”
 
“என்னத்தான்?” அந்த பெண் ஆதியை ‘அத்தான், அத்தான்’ என்று அழைக்கும் போதெல்லாம் தளசி வாடிப்போனது. ஆனாலும் வாயைத் திறக்கவில்லை. முன்பொருமுறை வாங்கிக் கட்டிக்கொண்டது போதாதா?!
 
“துளசியோட கழுத்துல ஏதோ மஞ்சக்கலரா தெரியலை உனக்கு?” அவன் கேள்வியில் துளசி மிரண்டு போய் அண்ணார்ந்தாள்.
 
“மஞ்சக்கலரா? இல்லையே… எனக்கொன்னும் தெரியலையே!” ஷிவானியின் பதிலில் துளசிக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது. தாலியை பிறர் காணாதபடி வெகுவாக மறைத்திருந்தாள்.
 
“ஐயோ ஷிவானி! நல்லா பாரு… எனக்கு என்னமோ கயிறு மாதிரி தெரியுது.” மீண்டும் ஆதி வம்பு பண்ணினான்.
 
“என்னத்தான் சொல்றீங்க? மஞ்சள் எங்கிறீங்க… கயிறு எங்கிறீங்…” வார்த்தைகள் பாதியில் இப்போது சிக்கிக் கொண்டது பெண்ணுக்கு. 
 
யாரும் அறியாத வகையில் மெதுவாக துளசியின் பக்கம் நகர்ந்தவள் அவள் கழுத்தை ஆராய்ந்தாள். புத்தம் புது மஞ்சள் கயிறு அங்கே அழகாக மறைக்கப்பட்டிருந்தது.
 
“அத்தான்!” பெண்ணின் வியப்பு விவரிக்க இயலாததாக இருக்க துளசி தலையைக் குனிந்து கொண்டாள்.
 
‘இவன் ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறான்?’
 
“என்னத்தான் இது?!”
 
“அத்தான் எது பண்ணினாலும் அது டபுள் ஸ்ட்ராங்கா இருக்கும் ஷிவானி.” அத்தைப் பெண்ணுக்குப் பதில் சொல்லிவிட்டு துளசியை பார்த்து கண்ணடித்தான் ஆத்ரேயன்.
அன்று இரவு தன் அத்தானைத் தனிமையில் பிடித்துக்கொண்டாள் ஷிவானி.
 
“என்னத்தான் நடக்குது? எப்பிடி துளசி கழுத்துல தாலி? என்னால நம்பவே முடியலை?!”
 
“அதை ஏன் கேக்குற ஷிவானி?‌ இங்க நடந்த கூத்தையெல்லாம் கேட்டா…”
 
“என்னாச்சு அத்தான்?”
 
“துளசி ஜாதகத்துல ஏதோ தோஷமாம், என்னமோ செவ்வாயோ புதனோ… எனக்குச் சரியா ஞாபகம் கூட இல்லை.”
 
“அதுக்கு?”
 
“அவ ஜாதகப்படி ரெண்டு தாலி வேறயாம்.”
 
“அப்பிடின்னா என்ன?”
 
“யாருக்குத் தெரியும்.”
 
“தாலி கட்டினாத்தானே ரெண்டு, நான் பேசாம மோதிரம் மாத்திக்குறேன்னு நீங்க சொல்லி இருக்கலாமே?”
 
“ஹா… ஹா… சூப்பர் ஐடியா! இது எனக்குத் தோணாம போச்சே!”
 
“இதுக்குத்தான் அறிவாளிங்களைப் பக்கத்துல வெச்சுக்கணும்னு சொல்றது, அப்புறம் என்னாச்சு?‌ அதைச் சொல்லுங்க.”
 
“அந்த மனுஷன் பொண்ணையே குடுக்கத் தயங்கினாரு.”
 
“லவ் மேரேஜ்னு அம்மா சொன்னாங்களே?!”
 
“ஆமா, நான் மட்டும் லவ் பண்ணினேன்.” அவன் சொல்லிவிட்டுச் சிரிக்க அவளும் கூடச்சேர்ந்து சிரித்தாள்.
 
“இதையெல்லாமா அத்தான் இந்த மக்கள் இன்னும் நம்புறாங்க?”
 
“ம்… அதான், அவங்க மனசு சங்கடப்படாம இருக்க நானே ஒரு தாலியை ஏற்கனவே கட்டிட்டேன்.”
 
“அப்போ கல்யாணம் முடிஞ்சா துளசி கழுத்துல ரெண்டு தாலியா?!”
 
“ஆமா, ஹா… ஹா…”
 
“அப்போ ரெண்டு ஃபர்ஸ்ட் நைட்டா அத்தான்?!” குறும்பாக கண்ணடித்தாள் ஷிவானி.
 
“சூப்பர் ஐடியா ஷிவானி, எங்க அந்த ஃபோன்? துளசியை கூப்பிடு, என்னோட அறிவாளி அத்தைப் பொண்ணோட ஐடியாவை சொல்லுவோம்.”
 
“துளசி என்னை அடிச்சு விரட்டப்போறாங்க அத்தான்.” இருவரின் சிரிப்புச் சத்தத்தில் அந்த இடமே அதிர்ந்தது.
 
***
அன்று வெள்ளிக்கிழமை. காலை நேரத்து இனிதானதொரு மணித்துளியில் துளசியின் கழுத்தில் தன் உரிமையை ஊரறிய சுற்றம் அறிய நிலைநாட்டினான் ஆத்ரேயன்.
 
திருமதி. துளசி சங்கரபாணி ஆத்ரேயன்! அந்த பெயரிணைப்பில் அதிகம் ஆனந்தப்பட்டது சங்கரபாணியாகத்தான் இருக்க முடியும். கண்களில் துளிர்த்த ஆனந்த நீரை அடிக்கடி துடைத்துக் கொண்டிருந்தார் மனிதர்.
 
தாத்தாவும் பாட்டியும் எந்த சம்பிரதாயங்களிலும் குறை நேர்ந்து விடாமல் அனைத்தையும் பார்த்துப் பார்த்துப் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
 
பெண்கள் அனைவரும் பம்பரமாக சுழன்று வந்தவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்த வண்ணம் சுழன்றார்கள்.
 
ஆதியின் வீடு ஜேஜே என்று இருந்தது. தாலி கட்டிய கையோடு மனைவியைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.
சிற்றுண்டிகள், பானங்கள் என்று சதா பரிமாறப்பட்டது. ஒரு புறம் விருந்து தடபுடலாக தயாரானது.
 
துளசியை ஆரத்தி எடுத்து அபிராமி உள்ளே அழைத்து வந்தார். நெற்றி வகிட்டில் குங்குமத்தோடு பெண் பார்க்க அத்தனை அழகாக இருந்தது.
 
பட்டு, நகைகள் என இவ்வளவு காலமும் சங்கரபாணி சேர்த்து வைத்தது போக இப்போது இன்னமும் வாங்கி குவித்திருந்தார்.
 
மாப்பிள்ளை வீட்டார் சீர்வரிசை என்று எதுவுமே வாய்திறக்காத படியால் தன்னால் இயன்றதைத் தாராளமாக செய்திருந்தார்.
 
கல்யாணத்திற்கு நாள் குறித்த மறு தினமே சங்கரபாணிக்கென்றும் அவர் மனைவிக்கென்றும் இருந்த அனைத்து அசையா சொத்துகளும் துளசி பெயருக்கு மாற்றப்பட்டு விட்டது.
 
“ஐயோ அங்கிள்! எதுக்கு இதெல்லாம் பண்ணுறீங்க?” ஆதி அங்கலாய்த்த போது சங்கரபாணி சிரித்து சமாளித்துவிட்டார்.
 
“எம் பொண்ணுக்கு இன்னும் குடுக்கிறதுக்கு ஒன்னுமில்லையேன்னு எனக்கு அவ்வளவு வருத்தமா இருக்கு ஆதி, முட்டாள் மாதிரி கொஞ்ச நாள் இருந்துட்டேன், இன்னும் நிறைய சம்பாதிச்சிருக்கணும்.” பத்து வயது குறைந்தாற்போல வேலைகள் செய்யும் தனது மாமனாரை விசித்திரமாக இப்போது பார்த்தான் ஆதி.
 
‘இந்த மனிதரை துளசியின் திருமணம் எப்படி மாற்றிவிட்டது?! சோர்ந்து போய் உயிர்ப்பே இல்லாமல் திரிந்த மனிதரா இவர்?!’ தன் பெற்றோரிடம் அதைப் பகிர்ந்து கொண்டான்.
 
திருமணத்திற்கு வருவதாக சொல்லி இருந்த அவன் அண்ணன் குடும்பம் மட்டும் வரவில்லை. அதை ஆதி கண்டுகொள்ளவும் இல்லை. அவன் மனதை மயக்க இங்கொருத்தி இருக்கும் போது எதற்கு எதையும் நினைத்து அவன் வருந்த வேண்டும்!
தாமஸ் அழைத்து வாழ்த்துக் கூறினான்.‌ திருமண சேதி கேட்டு கேத்தரின் லேசாக வருத்தப்பட்டாளாம். இருந்தாலும் அவளிடமிருந்து கூட ஒரு வாழ்த்து வந்திருந்தது.
 
தன் புத்தம்புது மனைவியைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றான் ஆதி. தயங்கிய படியே வந்தவளைப் பார்த்த போது அவனுக்குச் சிரிப்பு வந்தது. கதவை மூடிவிட்டு அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
 
“எதுக்கு இவ்வளவு தயக்கம் துளசி?” முகத்தை அவள் கூந்தலுக்குள் புதைத்துக் கொண்டு பேசினான் ஆதி. அப்போது பார்த்து கதவு தடதடவென தட்டப்பட திடுக்கிட்டு விலகினாள் பெண்.
 
ஆதிக்குமே ஆச்சரியமாக இருந்தது. இப்படி யார் கதவைத் தட்டுவது? இப்போதுதானே உள்ளே வந்தார்கள்? மெதுவாக விலகி கதவைத் திறந்தான். 
 
ஷிவானி நின்றிருந்தாள். அவள் கண்கள் அத்தானையும் அவர் புது மனைவியையும் குறுகுறுவென்று பார்த்தது.
 
“என்ன நடக்குது இங்க?” போலீஸ் ஆஃபீஸர் போல அவள் கேள்வி கேட்கவும் ஆதிக்கு அவள் குறும்பு புரிந்து போனது. வேண்டுமென்றே செய்கிறாள்.
 
“என்ன நடக்கணுமோ அது நடக்குது.” ஆதியும் சளைக்காமல் பதில் சொன்னான்.
 
“அதுதான் என்னன்னு கேட்டேன்?‌ துளசி… எதுக்கு இப்போ உங்க தலை முடியெல்லாம் கலைஞ்சிருக்கு?”
 
“அதை ஏன் துளசிக்கிட்ட கேக்குற ஷிவானி, எங்கிட்ட கேளு சொல்றேன், அது என்ன ஆச்சுன்னா…” மேலே விபரிக்கப் போன ஆதியின் வாயைச் சட்டென்று மூடினாள் துளசி.
 
“ஹா… ஹா…” ஷிவானி காட்டமாக சிரிக்க, ஆதி தன் மனைவியின் கையை விலக்கினான்.
 
“சாரி துளசி, டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” ஷிவானி வெளிப்படையாக கேட்கவும் துளசிக்கு ஒரு மாதிரி ஆகிப்போனது.
 
“இது சும்மா ட்ரெய்லர், இன்னைக்கு நைட்டுக்கு இருக்கு ஃபுல் மூவி!” மிரட்டினாள் டெல்லிக்காரி.
 
“ஷிவானி! இன்னைக்கு ஏதாவது ஏடாகூடமா‌ பண்ணினே… உன்னைக் கொன்னுடுவேன்!” ஆதி கை நீட்டி எச்சரித்தான்.
 
“அதையும் பார்க்கலாம் அத்தான், இன்னைக்கு முழுக்க துளசி முகத்தையே அப்பிடி ஏக்கமா பார்த்துக்கிட்டு இருந்தீங்க இல்லை! நானும் கவனிச்சேன், நைட்டுக்காக வெயிட்டிங்ஙா? வெக்கிறேன் ஆப்பு!” அபிநயத்தோடு சொன்னது பெண்.
 
“நீ ட்ரெய்லரோட நிறுத்து, எம் பொண்டாட்டிக்கு ஃபுல் மூவி காட்ட எனக்குத் தெரியும்.”
 
“நடக்காது அத்தான்.” கடகடவென சிரித்தபடி ஷிவானி வெளியே போய்விட்டாள். ஆதி இப்போது மனைவியைத் திரும்பி பார்த்தான்.
 
“வேற ஸாரி மாத்திக்கிறேன்.” துளசி சொல்லவும் பெருமூச்சு விட்டான் ஆதி. இப்படிக் கேட்பவளிடம் இல்லை என்றா சொல்ல முடியும். 
 
“ஓகே துளசி.” அவனும் வெளியே போய்விட்டான்.
துளசி அறையை நோட்டம் விட்டாள்.
 
ஆதியை முதன்முதலாக அவள் சந்தித்த போது இதே கட்டிலில் தான் படுத்திருந்தான். நம்பிண்ணா, ராபின், இம்ரான் எல்லோரும் கூடி இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
இவள் உள்ளே வரவில்லை என்றாலும் வெளியே நின்று பேசிய போது இவன் படுத்திருப்பது தெரிந்தது. அதன் பிறகும் ஒரு வெள்ளிக்கிழமை இன்று போல வந்தது. அவள் வாழ்வையே புரட்டிப் போட்டது.
 
துளசியின் மனது லேசாக வாடிப்போனது. மனிதர்கள் எத்தனை இலகுவாக சக மனிதர்களைக் குற்றம் கூறுகிறார்கள்! இவள் பிறந்த நேரம், நாள், கோள் என்று யாரோ கணித்துச் சொன்ன ஒரு விஷயத்திற்காக எவ்வளவு தூரம் அவளைக்
காயப்படுத்தி இருக்கிறார்கள்.
 
மறந்து போக வேண்டும். இனி அனைத்தையும் கண்டிப்பாக மறந்து போகவேண்டும். வாழ்க்கை இனி தனக்கு வைத்திருப்பது எல்லாமே வசந்தம்தான்.
 
போதும்! பட்ட வேதனைகள் அனைத்தும் போதும். தன் கரம் பிடித்திருப்பவனோடு சேர்ந்து காதலாக இனிதாக ஒரு வாழ்க்கையை இனி இனிக்க இனிக்க வாழ வேண்டும்!
 
அங்கிருந்த வார்ட்ரோப்பை திறந்தாள் துளசி. அவளுக்கான ஆடைகள் அனைத்தும் அடுக்கப்பட்டிருந்தன. பட்டுப்புடவை ஒன்றை மாற்றிக்கொண்டு உடுத்தியிருந்த கல்யாண சேலையை அழகாக மடித்து தன் உடைகளோடு வைத்தாள்.
 
அவள் அப்பா பார்த்துப் பார்த்து தெரிவு செய்த புடவை. அதை ஒரு புன்னகையோடு வருடி கொடுத்தவள் பாத்ரூமிற்குள் போனாள்.
 
அத்தனையும் அவன் பொருட்கள். லேசாக அவற்றை நோட்டம் விட்டவள் முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள். இன்னும் உறவினர்கள் வரக்கூடும் என்பதால் நகைகளைக் களையாமல் தலைவாரி பொட்டு வைத்துக்கொண்டாள்.
 
சரியாக அப்போது ஆதி உள்ளே நுழைந்தான். அவன் கண்கள் மனைவியை ஒரு நொடி சாவகாசமாக அளவெடுத்தது. முகத்தில் புன்னகையோடு அவளருகே வந்தவன், 
 
“பாட்டி கீழே கூப்பிடுறாங்க துளசி, நானும் குளிச்சிட்டு வந்தர்றேன், ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்.” என்றான்.
 
அவள் தலையை ஆட்டவும் டவலோடு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான். சற்றுப் பொறுத்து இருவரும் கீழே வர, இருவரையும் அருகருகே அமர்த்தி உணவு பரிமாறினார் பாட்டி.
 
அதன்பிறகு வந்தவர்களைக் கவனிக்க, பேச என்றே இருவருக்கும் நேரம் சரியாக இருந்தது. பொழுது பறந்தே போயிருக்க இருள் பரவ ஆரம்பித்துவிட்டது. 
 
நம்பியை பிடிக்கவே முடியவில்லை. தனது தங்கையின் கல்யாணத்தில் ஒரு அண்ணனாக வியர்க்க வேலை செய்து கொண்டிருந்தான்.
 
விருந்தினர்கள் சிறிது சிறிதாக கலைய ஆரம்பிக்க இரவு உணவையும் முடித்துக்கொண்டு ஆதி தனது ரூமிற்கு வந்தான். அதற்குள் அபிராமி அந்த இடத்தில் சின்னச்சின்ன மாற்றங்கள் செய்திருந்தார். 
 
கட்டிலில் தூவி இருந்த மல்லிகைப் பூக்கள் அந்த இடத்தையே தேவலோகமாக மாற்றிக் கொண்டிருந்தன. கூடவே ரோஜா இதழ்கள். 
 
‘என் ரோஜா தூங்க ரோஜா இதழ்களா?!’ மனதுக்குள் எண்ணிச் சிரித்துக் கொண்டான்.
 
‘இன்னும் இங்கு வந்து சேராமல் என்னதான் செய்கிறாள்?!’ ஆசைக்கடல் தாறுமாறாக அலைகளைக் கிளப்ப தன் தேவதையின் வருகைக்காக காத்திருந்தான் ஆத்ரேயன்.
 
அவனை அதிக நேரம் காக்க வைக்காமல் இளநீல வண்ணப் பட்டுடுத்தி லேசான ஒப்பனையில் வந்து சேர்ந்தாள் துளசி. மூடிய கதவின் மேல் அவள் சாய்ந்து நிற்க, அவளருகே போனவன் கதவைத் தாழ்ப்பாள் போட்டான்.
 
“துளசி, இது இப்பிடி வேணாம்.” அவன் சொல்லவும் அவள் எது என்பது போல பார்த்தாள். அவள் இடது தோள் முந்தானையை அவன் சுட்டிக்காட்டினான். 
 
“புரியலை.” அவள் குரலில் லேசான பதட்டம் இப்போது.
 
“ப்ளீட்ஸ் வேணாமே.” 
 
“அப்போ?”
 
“நான் சொல்லுற மாதிரி போடேன்.” அவன் சொல்லவும் பின்னைக் கழட்டினாள் துளசி. சேலைத் தலைப்பை ஒற்றையாக அவள் தோளில் தவழவிட்டான். 
 
“இது தேவைதானா?” மீண்டும் அவள் பின்னைக் குத்தவும் அவன் குரல் கேலி செய்தது. துளசி கண்டுகொள்ளவில்லை.
 
கொஞ்சமாக அவள் தலையில் வைத்திருந்த மல்லிகைச் சரத்தை அகற்றியவன், அந்த பட்டான கூந்தலை லூசாக விட்டான். 
 
துளசி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். அவள் தோளில் தன் கைகள் இரண்டையும் வைத்து அவளைச் சற்று தூரத்தே நிறுத்தியவன், அவளை மேலிருந்து கீழாக ஒரு முறைப் பார்த்தான். அவன் கண்களில் திருப்தி தெரிந்தது.
 
“துளசி, நான் இன்…” எதையோ பேச ஆரம்பித்தவன் சட்டென்று நிதானித்தான். துளசியின் கால்கள் லேசாக துவண்டது போல இருந்தது. அவசரமாக அவளைத் தாங்கி பிடித்துக்கொண்டான்.
 
“துளசி! என்னாச்சு?”
 
“எனக்கு…” துளசிக்கு வார்த்தைகள் வரவில்லை. அளவுக்கு மீறி தடுமாறினாள். கண்கள் லேசாக சொருகியது.
 
“ஏய் துளசி! என்னாச்சு உனக்கு? என்னைப் பாரு துளசி.”
 
“எனக்குத் தூக்கம்… வர்ற… மாதிரி…” வார்த்தைகள் தடுமாற அவன் மீதே சரிந்தது பெண்.
 
“தூக்கம் வருதா?! என்னாச்சு?” அவள் செயல்கள் வித்தியாசமாக இருக்கவும் அவளைக் கைகளில் அள்ளிக்கொண்டவன் மெதுவாக கட்டிலில் கிடத்தினான்.
 
“துளசி! இங்கப்பாரு… ஏய்! என்னைப் பாரு துளசி!” அவள் கன்னத்தில் அவன் தடதடவென இரண்டு மூன்று முறைத் தட்ட லேசான சோர்வோடு அந்த கண்கள் திறந்தன. ஆதிக்கு பயமாக இருந்தது.
 
“என்னாச்சு துளசி? என்ன பண்ணுது உனக்கு?” அவன் நெஞ்சுலர படபடத்தான்.
 
“எனக்கு… தூக்கம்…” அதற்கு மேல் பேச முடியாமல் அவள் கண்ணயர, ஆதியின் ஃபோன் அலறியது.
 
“ஷிட்!” ஒரு வேகத்தோடு சத்தம் போட்டவன் தனது ஃபோனை எடுத்தான். நடப்பது எதுவும் என்னவென்று அவனுக்குப் புரியவில்லை. ஷிவானி அழைத்துக்கொண்டிருந்தாள்.
 
“இவ எதுக்கு நேரம் காலம் தெரியாம கூப்பிடுறா?” நிதானமான மூச்சுகளோடு உறங்கும் தன் மனைவியைப் பார்த்தபடி ஃபோனை காதிற்குக் கொடுத்தான்.
 
“சொல்லு ஷிவானி.” குரலில் பதட்டத்தின் மீதங்கள்.
 
“அத்தான்…” ராகமாக இழுத்தாள் பெண். அந்த குரலில் ஆதிக்கு பொறி தட்டியது.
 
“ஏய்! துளசியை என்ன பண்ணினே?!”
 
“அதுவா அத்தான்… உங்க துளசி குடிச்ச பால் இருக்கில்லை… அதுல…”
 
“ஷிவானி!” ஆதியின் பொறுமைப் பறந்தது.
 
“ஹா… ஹா… என் யூகே அத்தான் அவர்களே! உங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் நாளைக்குத்தான்.”
 
“அங்க வந்தேன்னு வை, உன்னைக் கொன்னுடுவேன்!”
 
“ஹா… ஹா… துளசி நல்லா குறட்டை விட்டுத் தூங்குறாங்களா? முழுசா ஒரு தூக்க மாத்திரை இல்லைப் போட்டிருக்கேன், நாளைக்குக் காலைல ஃப்ரெஷ்ஷா எந்திரிப்பாங்க, அதுவரைக்கும் சாவகாசமா உங்க பொண்டாட்டி முகத்தை ராத்திரி பூரா பார்த்துக்கிட்டு இருங்க, குட் நைட் அத்தான், ஸ்வீட் ட்ரீம்ஸ்!”
 
ஆதி கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தான். சற்று நேரம் கண்கள் துளசியை பார்த்தபடி இருந்தன.
 
சுகமாக உறங்கி கொண்டிருந்தாள்.
லேசாக சிரிப்பு வந்தது. புன்னகை மாறி இப்போது பலமாக வாய்விட்டுச் சிரித்தான். அவன் நிலைமை இப்போது அவனுக்கே சிரிப்பாக இருந்தது.
 
‘கேடி ஷிவானி! காரியத்தை அடியோடு கெடுத்து விட்டாளே!’
எத்தனை ஆசையாக காத்திருந்தான்.
 
எத்தனை நாட்களாக இந்த இரவிற்காக திட்டங்கள் போட்டிருந்தான். அத்தனையையும் இல்லாமல் பண்ணிவிட்டாள்.
 
அத்தை மகள் குறும்புக்காரி என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு தூரம் விளையாடுவாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
அவன் வாழ்க்கையில் இனி இந்த இரவை என்றைக்கேனும் மறக்க முடியுமா? தூங்கும் மனைவியைப் பார்த்தபடி விழித்திருந்தான் ஆத்ரேயன்.
 
மலர் தூவிய மஞ்சமும், அந்த கறுப்பு நிற ஆடையும்… ஆதியை பார்த்து கெக்கலி கொட்டின!
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!