நிலா பெண் 18

அன்று முழுவதும் ஆதி தன் மாமனார் வீட்டிலேயே தங்கி இருந்தான். சொல்லப் போனால் சங்கரபாணி ஆதியை தாங்கினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
‘மாமியார் வீடு மகா சௌக்கியம்!’ என்ற முது மொழி ஆதிக்கு தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் இந்த சௌக்கியத்தை இத்தனை நாளும் தவற விட்டிருக்க மாட்டான்.
 
மனைவி விலகி விலகிப் போகும் போதெல்லாம் முதலில் அவனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவளை மேலும் மேலும் தொல்லைப் பண்ண விருப்பப்படாமல் அவள் போக்கிலேயே விட்டு விட்டான்.
 
அத்தோடு… பேசினால் அது சண்டையில்தான் முடிகிறது! அதை விட அவள் மனம் இரங்கும் வரை பொறுத்திருப்பதே மேல் என்று தோன்றியது ஆத்ரேயனுக்கு.
 
ஆனால் இந்த உள்வயனம் எதுவும் புரியாத சங்கரபாணி மகளை அனைத்திற்கும் ஏவிய படியே இருந்தார்.
 
“துளசிம்மா… ஆதிக்கு இன்னைக்கு ஃபிஷ் ஓகேவான்னு கேளு.”
 
“வெயில் ஜாஸ்தியா இருக்கு, ஆதிக்கு மோர் குடு துளசி, இல்லைன்னா இளநீர் வாங்கிட்டு வரட்டுமா?”
 
“துளசி… டின்னருக்கு நீ எதுவும் பண்ணாதே, ஆர்டர் பண்ணலாம், ஆதிக்கிட்ட என்ன பிடிக்கும்னு கேளு.”
 
“ஆதியை சாப்பிட வரச்சொல்லு, நேரமாகுது… பசிக்குமில்லை.”
ஆதி, ஆதி என்று மூச்சுக்கு மூன்று முறைத் தந்தைத் தன்னை விரட்ட ஒரு கட்டத்தில் துளசி ஓய்ந்து போனாள்.
 
“அங்கிள்… என்ன இது? நான் என்ன வேத்து மனுஷனா? எதுக்கு இப்பிடி தடபுடல் பண்ணுறீங்க?” ஆதி சிரித்தான்.
 
“உனக்கு ஒன்னும் தெரியாது ஆதி, இதுவே துளசியோட அம்மா இருந்திருந்தா இந்நேரம் வீடு ரெண்டு பட்டிருக்கும்.”
 
“என்னைக் கவனிக்கிறதா நினைச்சு நீங்க துளசியை விரட்டிக்கிட்டு இருக்கீங்க, பாவம் துளசி.” மனைவிக்காக அவன் பரிந்து பேசினாலும் அந்த கவனிப்பை, உபசரிப்பை அவன் அனுபவித்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
“அதெல்லாம் ஒன்னுமில்லை ஆதி, உன்னைக் கவனிக்கிறதுன்னா துளசிக்கு கசக்குமா?” அப்பாவின் பேச்சிற்கு லேசாக உதட்டை இழுத்து சிரிப்பு என்ற பெயரில் என்னவோ செய்தாள் துளசி.
 
சங்கரபாணியின் முகம் முழுவதும் இனம்புரியாத மகிழ்ச்சி கொப்பளித்துக் கொண்டிருந்தது.
அவர் முகத்தைப் பார்த்தாலே சட்டென்று கண்டுபிடித்துவிட முடியும்,
 
மனிதர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் என்று.
டின்னரை முடித்துக்கொண்டு சங்கரபாணி துளசியின் அறைக்கு முன்னால் இருக்கும் அந்த சின்ன முற்றத்தில் வந்து உட்கார்ந்து கொண்டார். 
 
கால் நீட்டி அப்பா விச்ராந்தியாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்து விட்டு துளசியும் அவர் அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.
 
மனைவி இருந்த காலத்திலெல்லாம் இப்படி விருந்துண்டுவிட்டு மனிதர் வெற்றிலைப் போடுவது வழக்கம். 
இன்றைக்கு நெடிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அப்பா வெற்றிலைப் போடவும் துளசிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
 
“அப்பா எனக்கு?” என்று சிறுபிள்ளைப் போல கேட்டுக்கொண்டு அவர் பக்கத்தில் நெருங்கி அமர்ந்து கொண்டாள்.
 
“உனக்கில்லாததா துளசிம்மா!” மகளுக்கும் பதமாக வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி, பாக்கு வைத்து மடித்துக் கொடுத்தார் சங்கரபாணி.
 
“ஆதி எங்கம்மா?” கேட்டுக்கொண்டிருக்கும் போதே ஆதி ரூமை விட்டு வெளியே வந்தான். 
 
“ஆதி, வா வா… வெத்திலைப் போடுறியா?”
 
“இல்லை அங்கிள்.” சிரித்தபடியே சங்கரபாணியின் எதிராக முழக்காலை நிலத்தில் ஊன்றி அமர்ந்தான்.
 
“என்னப்பா இங்க உக்கார்றே? துளசி ஆதிக்கு செயார் கொண்டு வா.”
 
“இல்லை அங்கிள், நான் உங்கக்கிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்.”
 
“என்னப்பா?” அப்பா கேட்கவும் துளசி லேசான பயத்தோடு கணவனைப் பார்த்தாள்.
 
‘இவன் எதை அப்பாவிடம் பேசப் போகிறான்? எல்லாவற்றையும் தடாலடியாக பண்ணுவது போல அப்பாவிடமும் அனைத்தையும் கொட்டி விடுவானோ?’ அவள் எண்ணமே சரியென்பது போல பேச்சை ஆரம்பித்தான் ஆதி.
 
“அங்கிள்… நான் ஒரு தப்புப் பண்ணிட்டேன்.” பாவமன்னிப்புக் கேட்பது போல இருந்தது அவன் உட்கார்ந்திருந்த விதமும் பேச்சும்.
துளசிக்கு இப்போது தூக்கிவாரிப் போட்டது. இவனுக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? என்ன பேசுகிறோம் என்று புரிந்துதான் பேசுகிறானா?
 
“தப்பா? என்ன தப்பு ஆதி?”
 
“அதெல்லாம் ஒன்னுமில்லை ப்பா, அவங்க சும்மா எதையோ பேசுறாங்க.” சட்டென்று இடையில் புகுந்த பெண் ஆதியை முறைத்துப் பார்த்தது. ஆனால் ஆதி எதையும் கண்டு கொள்ளவில்லை.
 
“இல்லை அங்கிள்… சிலுவைச் சுமக்கிற மாதிரி மனசு கனக்குது, எனக்கு உங்கக்கிட்ட எல்லாத்தையும் கொட்டணும், அவ்வளவுதான்.”
 
“கொட்டி முடிச்சிட்டா ஆச்சா? என்ன பேசுறீங்க நீங்க?” கணவன் மேல் பாய்ந்தாள் துளசி.
 
“துளசிம்மா! என்ன இது? இப்பிடித்தான் பாய்வியா நீ ஆதி மேல? உங்கம்மா இருந்திருந்தா இந்நேரம் வாயிலேயே ஒன்னு போட்டிருப்பா!” சங்கரபாணி மகளை வெகுவாக கடிந்து கொண்டார்.
 
“அதெல்லாம் ஒன்னுமில்லை அங்கிள், எங்கிட்டத்தானே பேசுறா, விடுங்க.” ஆதி மெலிதாக புன்னகைத்தான்.
 
“நீ ரொம்ப துளசிக்கு செல்லம் குடுக்கிறே ஆதி!” மாமனார் கடிந்து கொள்ள மனைவியைத் திரும்பிப் பார்த்தான் ஆதி. 
 
வெற்றிலையால் உதடும் கோபத்தால் முகமும் சிவக்க தலையை அப்பால் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
 
“நான் என்ன சொல்ல வந்தேன்னா…”
 
“ப்ளீஸ்… கொஞ்சம் சும்மா இருங்களேன்.” கெஞ்சுதலாக வந்தது மனைவியின் குரல், அவனைத் தடுப்பது போல.
 
“இல்லை துளசி… அங்கிளுக்கு எல்லாம் தெரியணும்.”
 
“எனக்கு என்ன தெரியணும் ஆதி? நீ சொல்லு!”
 
“அதெல்லாம் ஒன்னுமில்லைப்பா.”
 
“அதை ஆதி சொல்லட்டுமேம்மா.”
 
“அவங்க புரியாம பேசுறாங்க.”
 
“யாரு? ஆதியா?” அப்பா கேட்ட விதத்தில் பெண் வாயை மூடிக்கொண்டது. மனைவியைத் தீர்க்கமாக பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டான் ஆதி.
 
“அங்கிள்… நான் சொல்லுற விஷயத்தைக் கேட்டா உங்களுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு துளசி பயப்பிடுறா.” ஆதியின் பேச்சைக் கேட்டு சங்கரபாணி சிரித்தார்.
 
“அதென்னப்பா அப்பிடியொரு விஷயம்? கேட்ட உடனேயே எனக்கெதுவும் ஆகுற மாதிரி?!”
 
“ப்ளீஸ்… விடுங்கப்பா.” பெண் மீண்டும் கெஞ்சியது.
 
“நீ சொல்லு ஆதி.”
 
“அங்கிள்… நீங்க என்னைச் சரியான கோணத்துல புரிஞ்சுக்கணும், துளசியோட அப்பாவா இல்லாம… இந்த ஆத்ரேயனோட நிலையில இருந்து நீங்க என்னைப் புரிஞ்சுக்கணும்.”
 
“என்ன ஆதி பீடிகை பலமா இருக்கு?” சொல்லிவிட்டு இடிஇடி என்று சிரித்தார் சங்கரபாணி. 
துளசி கணவனைக் கெஞ்சுதலாக பார்த்தாள். ஆனால் ஆதி இளகவில்லை. தன்னைச் சற்று நிதானப்படுத்திக் கொண்டு பேச்சை ஆரம்பித்தான்.
 
“அங்கிள்… அன்னைக்கு…” தொண்டை லேசாக அடைத்தது ஆதிக்கு.
 
“என்னைக்கு?”
 
“அன்னைக்கு துளசியோட நிச்சயதார்த்தம் நின்னு போச்சில்லை?” துளசியின் முகம் வெளுக்க, சங்கரபாணியின் முகம் கவலையில் தோய்ந்தது.
 
“அது… அதுவா நிக்கலை.” ஆதி சொல்லியே விட்டான்.
 
“அதுவா நிக்கலைன்னா? நீ நிறுத்துனியா ஆதி?” ஒரு சின்னப் புன்னகையோடு கேட்டார் பெரியவர். இளையவர்கள் இருவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்குப் போனார்கள்.
 
“அங்கிள்!” ஆதி திடுக்கிட்டுப் போய் அழைத்தான். ஆனால் துளசியால் அதுகூட இயலவில்லை. இடி இறங்கி அவளது தலையிலேயே வீழ்ந்தது போல அமர்ந்திருந்தாள்.
 
“இதைத்தான் எங்கிட்டச் சொல்லணும்னு நினைச்சியா ஆதி?” சங்கரபாணி படு நிதானமாக கேட்க ஆதிக்கு நடப்பது திகைப்பாக இருந்தது. 
 
மனைவியைத் திரும்பி பார்த்தான். அவளும் எதையும் நம்ப முடியாதவள் போல திக்பிரமைப் பிடித்து அமர்ந்திருந்தாள்.
 
“அங்கிள்… உங்களுக்கு…” மருமகன் திணற மாமனார் சிரித்தார்.
 
“அதிர்ச்சியா இருக்கா? நேத்து… அந்த அருண் குமார் இங்க வந்திருந்தான்.”
 
“வாட்!” ஆதியின் குரல் அவசரமாக தெறித்து வீழ்ந்தது.
 
“அப்பா?” துளசி மெதுவாக இன்னும் நகர்ந்து அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டாள். சங்கரபாணி மகளின் கையைத் தட்டிக் கொடுத்தார்.
 
“எதுக்கு துளசிம்மா இப்பிடி பயப்பிடுறே? அப்பாக்கு அப்பிடி என்ன ஆகிடப்போகுது?”
 
“அப்பா…” கண்களில் கண்ணீர் வழிய அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டாள் துளசி.
 
“சாரி அங்கிள்.” மீண்டும் பாவமன்னிப்பை இறைஞ்சியது ஒரு குரல்.
 
“எதுக்காக ஆதி இந்த மன்னிப்பு? எம்பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சுதே, அதுக்காகவா?!”
 
“நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கா இல்லையான்னு உங்க பொண்ணுதான் சொல்லணும்.”
 
“ஏன்? நான் சொன்னா நீ ஏத்துக்க மாட்டியா?” இப்போது ஆதி சத்தமின்றி சிரித்தான்.
 
“நல்ல வாழ்க்கையைக் குடுக்க முடியுமோ இல்லையோ, ஆனா கண்டிப்பா ஒரு மோசமான வாழ்க்கையில இருந்து அவளைக் காப்பாத்தணும்னு நினைச்சேன்.”
 
“அப்போ எதுக்கு சாரி கேக்குறே? நீ நல்லதுதானே பண்ணி இருக்கே?”
 
“அதை நீங்களாவது புரிஞ்சுக்கணும் அங்கிள்.”
 
“வேற யாரு புரிஞ்சுக்கலை? துளசியா?”
 
“…………….”
 
“பேசு ஆதி.”
 
“அங்கிள்… நான் சொல்லப்போற விஷயங்கள் உங்களுக்குச் சிரிப்பா இருக்கலாம், சின்னப்புள்ளைத் தனமா தெரியலாம், ஆனா…”
 
“சொல்லு ஆதி.”
 
“இந்த பாரதி தெருவுக்கு வந்த முதல் நாளே எனக்கு துளசியை அவ்வளவு புடிச்சுது.”
 
“ஓ…”
 
“ஆனா அடுத்த நொடி நம்பி…”
 
“நம்பி என்ன பண்ணினான்?”
 
“இந்த வெள்ளிக்கிழமை துளசிக்கு நிச்சயதார்த்தம்னு சொன்னான்.”
 
“ஓ…”
 
“கொஞ்சம் ஏமாத்தமாத்தான் இருந்துச்சு, ஆனா நான் என்னையே சமாளிச்சுக்கிட்டேன்.”
 
“ம்…” சுவாரஸ்யமாக கதைக் கேட்டார் சங்கரபாணி.
 
“போகப்போக… அந்த அருண் குமார், அவனோட குடும்பம்… துளசியை இவங்களோட என்னால இணைச்சுப் பார்க்க முடியலை அங்கிள்.”
 
“………….” இப்போது மனிதர் மௌனமானார். ஆனால் முகம் கசங்கிப் போனது.
 
“ஆசைப்பட்ட மனசை என்னால கட்டுப்படுத்தியிருக்க முடியும்… துளசிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருந்தா, ஆனா அது இல்லேங்கிறப்போ… சுயநலம் வென்றிடுச்சு அங்கிள்.” சொல்லிவிட்டு வலித்த மனதோடு மனைவியைப் பார்த்தான் ஆதி.
 
அவன் பார்வையைத் தொடர்ந்து சங்கரபாணியும் மகளைத் திரும்பிப் பார்த்தார். தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் பெண்.
 
“துளசி உன்னைப் புரிஞ்சுக்கலைன்னா… நீ அவளுக்கு உன்னைப் புரிய வெக்கலைன்னு அர்த்தம் ஆதி.”
 
“அப்பிடியில்லை அங்கிள்… கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாள்தான் ஆகுது, இப்போவே எதுக்கு அவசரப்படணும்னுதான் நினைச்சேனே ஒழிய… எதையும் துளசிக்கிட்ட இருந்து மறைக்க நினைக்கலை அங்கிள்.”
 
“ஓ… அப்போ துளசிக்கு இப்ப இதெல்லாம் எப்பிடித் தெரிஞ்சுது?” அப்பாவின் கேள்விக்குக் கணவன் பதில் சொல்வதற்கு முன்பாக அதைக் கேட்கப் பிடிக்காதவள் போல தனதறைக்குள் எழுந்து போனாள் துளசி.
 
“என்னாச்சு ஆதி?”
 
“உங்களைப் பார்த்துட்டு நேரா அவன் துளசிக்கிட்ட போய் எல்லாத்தையும் சொல்லி இருக்கான்.”
 
“சொன்னா என்ன ஆதி? அதுக்கு ஏன் துளசி கோபிக்கிறா?”
 
“அவகிட்ட எல்லாத்தையும் நான் சொல்லாம மறைச்சது தப்புத்தானே அங்கிள்.” இப்போது பெரியவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார்.
 
“இதுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்குத் தெரியலை ஆதி! எது எப்பிடி இருந்தாலும், எப்பிடியெப்பிடி நடந்திருந்தாலும்… எம்பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு, அதை நினைச்சு நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன்.”
 
“அப்பிடி நினைச்சிருந்தா… சட்டுன்னு ஏன் அங்கிள் இன்னைக்குக் காய்ச்சல் வந்துது?” ஆதி சரியாக பாயின்ட்டைப் பிடித்தான்.
 
“அதுக்குக் காரணம் உம்மேல வந்த நம்பிக்கை இன்மைன்னு நீ நினைக்கிறியா ஆதி? இல்லைப்பா… ஒரு பெரிய உண்மை முகத்துல வந்து மோதும் போது… வயசு போயிடுச்சு இல்லையா? ராத்திரி முழுக்கத் தூக்கம் வரலை.”
 
“ஓ…”
 
“அந்த நிச்சயதார்த்தம் நின்னு போச்சேங்கிறதை விட… நடந்திருந்தா எம்பொண்ணோட நிலைமை என்ன ஆகியிருக்கும் எங்கிற நினைப்புத்தான் மனசைப் புழு மாதிரி அரிச்சிச்சு.”
 
“அங்கிள்… நான் பண்ணினது தப்புத்தான், இல்லேங்கலை…”
 
“போதும் நிறுத்து ஆதி! நீ தப்புப் பண்ணிட்டேன்னு இங்க யாரும் சொல்லலை.”
 
“சொல்ல வேண்டியவ சொல்லலையே அங்கிள்!” அந்தக் குரல் கவலையோடு வந்தது.
 
“சொல்ல வெக்குறது உன்னோட சாமர்த்தியம், என்னை ஆளை விடு, எனக்குத் தூக்கம் வருது.” சுலபமாக சொல்லிவிட்டு சங்கரபாணி எழுந்து உள்ளே போய்விட்டார். 
 
ஆதியும் எழுந்தவன் துளசியின் அறைக்குள் போனான். இவனுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தாள்.
கட்டிலில் அவன் புறமாக கால் நீட்டி அமர்ந்தவன் மெதுவாக நகர்ந்து மனைவியின் அருகில் போனான்.
 
அவள் முழங்கையைப் பற்றியவன் குனிந்து அவள் முகத்தைப் பார்த்தான். கண்களிலிருந்து ஒற்றைக் கோடாக வழிந்த கண்ணீர் மூக்கை நனைந்திருந்தது.
ஒரு பெருமூச்சோடு விலகியவன் தலையணையில் தலைசாய்த்துக் கொண்டான். சிந்தனைகளில் சுழன்றபடி அப்படியே உறங்கியும் போனான்.
 
***
 
அன்றைக்கு நம்பிக்கு நிச்சயதார்த்தம். துளசி காலையிலிருந்து மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தாள் என்பது பார்த்தாலே புரிந்தது.
 
காலையில் எழுந்து நன்றாக ஷாம்பூ போட்டுக் குளித்தவள் கூந்தலை வெகு சிரத்தையாக உலர்த்தினாள்.
 
மனைவியின் உற்சாகமான ஆர்ப்பாட்டங்களை ஆதி பார்த்தும் பாராதவன் போல ரசித்துக் கொண்டிருந்தான்.
 
சுமார் கடந்த ஒரு மணி நேரமாக அவர்கள் ரூமிற்குள் போய் அடைந்து கொண்டவள்தான். இன்னும் வெளியே வரவில்லை. ஆதி இன்னும் குளிக்காததால் இவள் எப்போது வெளியே வருவாள் என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
 
சட்டென்று அறைக்கதவு திறக்க ஆதி ஆவலோடு திரும்பினான். திரும்பியவன் இமைக்க மறந்து அப்படியே நின்று விட்டான். 
 
லேசாக அடர்ந்த பின்க் நிறத்தில் பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள் துளசி. பார்டரும் சேலைத் தலைப்பும் மெல்லிய ஊதா வண்ணம் கலந்த பின்க் நிறத்தில் இருந்தது.
 
கூடவே கண்ணை உறுத்தாத தங்க நிறத்தில் அடுக்காக இன்னொரு பார்டர். அதே தங்க நிறத்தில் உடல் முழுவதும் வேலைப்பாடுகள்.
 
வானலோகத்து அப்ஸரஸ் ஒன்று தன் மனைவி ரூபத்தில் வந்திறங்கி இருப்பது போல உணர்ந்தான் ஆதி. 
 
அன்றைய அசம்பாவிதத்திற்குப் பிறகு ஒன்றிரண்டு வார்த்தைகள் அவனோடு பேசினாலும், சிதம்பரத்தில் இருந்த அன்னியோன்யம் காணாமலேயே போயிருந்தது.
 
ஆதிக்கு மனைவியைப் பார்த்த போது மூச்சு முட்டியது. அத்தனை அழகாக இருந்தாள். முகத்திற்கு லேசான ஒப்பனை வேறு. 
 
பெரிய பெரிய மூச்சுகளாக எடுத்து கணவன் தன்னை நிதானப்படுத்திக் கொள்வது துளசிக்கு வெளிப்படையாகவே தெரிந்தது.
 
ஆதி மிகவும் பிரயத்தனப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். சிதம்பரத்தில் அவனுக்கு அறிமுகமான இரண்டு நாள் சுகம்… அதன்பிறகு அவனை மறந்தே போயிருந்தது!
 
“துளசி…” அந்தக் குரலில் வடிந்த தாபத்தில் துளசி தலையைக் குனிந்து கொண்டாள். ஆதி சட்டென்று பேச்சை மாற்றி விட்டான்.
 
“லூஸ் ஹெயார் ரொம்ப நல்லா இருக்குமே துளசி.”
 
“பாட்டி திட்டுவாங்க, இதென்ன பேய் மாதிரின்னு.”
 
“ஓ… ஆனா நல்லா இருக்குமே, இவ்வளவு கோல்ட் எதுக்குடா போட்டிருக்கே?” இங்கு இப்படித்தான் என்று அவனுக்குப் புரியவில்லை.
 
“…………..” அவள் மௌனிக்க, அவன் புன்னகைத்தான். தலை நிறைய குண்டு மல்லி வேறு சூடியிருந்தாள்.
 
“ரொம்ப அழகா இருக்கே.” அவன் பாராட்டில் அவள் முகம் சிவந்தது. புன்னகைத்தபடி பாத்ரூமை நோக்கிப் போய் விட்டான் ஆதி.
 
வெண் பட்டு வேஷ்டி சட்டையில் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் ஆத்ரேயன். வலது மணிக்கட்டில் ஒரு தங்க நிற வாட்ச், அவன் எப்போதும் அப்படித்தான்.
இரவுகளில் எட்ட நின்று அவனை வேடிக்கைப் பார்க்கும் அவன் இன்பம், இப்போது அவனுக்காக வாசலில் காத்து நின்றிருந்தது.
 
இவன் அரவம் கேட்டுத் திரும்பிய விழிகளில் லேசானதொரு சலனம், கூடவே ஒரு மயக்கம். ஆதி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
 
அவன் அவளை நெருங்கும் போது நாசியுணர்ந்த அவனுக்கேயான வாசனை, துளசிக்கு சிதம்பரம் வீட்டை ஞாபகப்படுத்தியது. 
 
“கிளம்பலாமா துளசி?”
 
“ம்…” தலை மட்டும் ஆடியது. இப்போதெல்லாம் பேச்சை வெகுவாக குறைத்துக் கொண்டது பெண். அவளாக அவனிடம் பேசுவது இல்லை. கேட்கும் கேள்விகளுக்கு ஒன்றிரண்டு வார்த்தைகள் பதிலாக வரும், அவ்வளவுதான்.
 
இவர்கள் இருவரும் காரை நோக்கிப் போகும்போது சங்கரபாணி கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்.
 
“அப்பா! நீங்க இன்னும் கிளம்பலையா?”
 
“எல்லாரும் கிளம்பியாச்சு துளசி, நான் எம்பொண்ணோடயும் மாப்பிள்ளையோடயும் வரேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.” 
நம்பி எல்லோரும் பயணம் பண்ண வசதியாக ஒரு பெரிய வாகனத்தையே ஏற்பாடு பண்ணி இருந்தான். ஆனால் சங்கரபாணி அதை மறுத்துவிட்டு இங்கே வந்துவிட்டார்.
 
துளசிக்கு ஆச்சரியமாக இருந்தது. நம்பி வாங்கிக் கொடுத்திருந்த புது வேஷ்டி சட்டையில் ஜம்மென்று அப்பா வந்த போது துளசிக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது.
 
அப்பாவின் பழைய ஓய்ந்த தோற்றம் காணாமல் போயிருந்தது. அம்மாவோடு போயிருந்த அவர் கண்களின் ஒளி இப்போது மீண்டும் வந்தது போல இருந்தது பெண்ணுக்கு.
 
“முன்னாடி வந்து உக்காருங்க அங்கிள்.” காரின் பின் சீட்டில் அமரப்போன மனிதரைத் தடுத்தான் ஆதி.
 
“ம்ஹூம்… அது சரிப்பட்டு வராது, இங்கப்பாரு ஆதி, அங்க மண்டபத்துல எல்லார் முன்னாடியும் நான் உன்னை மாப்பிள்ளைன்னுதான் கூப்பிடுவேன், புரியுதா?”
 
“ஏன் அங்கிள்?” காரை ஆதி ஸ்டார்ட் பண்ண துளசி கணவனின் பக்கத்தில் ஏறி அமர்ந்து கொண்டாள். சங்கரபாணி பின்னால் ஏறிக்கொண்டார்.
 
“அது அப்பிடித்தான், நிச்சயதார்த்தத்தைக் கல்யாணம் மாதிரி பெருசா பண்ணுறாங்க, ஜனக்கட்டு அதிகமா இருக்கும் போல இருக்கு.”
 
“ம்…” கார் பாரதி தெருவைத் தாண்டியது.
 
“எல்லார் முன்னாடியும் மருமகனைப் பேர் சொல்லிக் கூப்பிட்டா நல்லாவா இருக்கும்?”
 
“இதுல என்ன அங்கிள் இருக்கு?”
 
“சொன்னாக் கேளு ஆதி, நீயும் என்னை மாமான்னு கூப்பிட்டுப் பழகு.”
 
“போச்சுடா, இது வேறயா?!” மனைவியைப் பார்த்துச் சிரித்தான் ஆதி.
 
துளசிக்கு மனது லேசானது போல இருந்தது. அப்பாவின் உற்சாகம், குதூகலம் எல்லாம் பார்க்க மனதுக்கு நிறைவாக இருந்தது.
 
“சிரிக்காத ஆதி, எத்தனைப் பேருக்கு எம்மேல பொறாமைத் தெரியுமா?”
 
“ஏன் அங்கிள்?” கார் அந்த வளைவில் லாவகமாக திரும்பியது.
 
“இந்த சங்கரபாணிக்கு அடிச்ச லக்கைப் பார்த்தியா, பொண்ணுக்கு சூப்பரா இல்லை ஒரு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கான்னு எங்காதுல விழுற மாதிரியே பேசுறாங்கன்னாப் பாரேன்!”
 
“அங்கிள்…” இப்போது ஆதி சங்கடப்பட்டான்.
 
“எனக்கு இப்போ இருக்கிறதெல்லாம் ஒரேயொரு ஆசைதான் ஆதி.”
 
“என்ன அங்கிள் அது?” கார் வேகமெடுத்தது.
 
“கண்ணை மூடுறதுக்கு முன்னாடி பேரனோ பேத்தியோ, எதுவோ ஒன்னைக் கண்ணாற பார்த்திடணும்.” சொல்லிவிட்டு சங்கரபாணி சீட்டில் சாய்ந்து கொண்டு கனவு காண ஆரம்பித்துவிட்டார்.
 
ஆதி ஒரு எதிர்பார்ப்போடு மனைவியின் முகத்தைத் திரும்பிப் பார்த்தான். அவன் தன்னைப் பார்ப்பது புரியவும் தலையை மறுபுறம் திருப்பிக் கொண்டு வேடிக்கைப் பார்த்தாள் துளசி. 
 
அந்த ப்ளாக் ஆடி மண்டபத்தின் முன்பாக போய் நின்றது. மண்டபம் என்றால் ஓரளவான மண்டபம்தான். இது கூட தேவையில்லை என்று நம்பி எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். பெண் வீட்டார் கேட்கவில்லை.
 
சீதனம், ரொக்கம் என்று மாப்பிள்ளை வீட்டார் எதுவும் வாங்காததால் நிச்சயதார்த்தத்தை எந்தக் குறையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று எண்ணினார்கள்.
 
கல்யாணத்திற்கு உண்டான செலவில் பாதியைத் தான் கொடுப்பதாகவும் நம்பி ஏற்கனவே சொல்லி விட்டான். அதனால் நிச்சயதார்த்த அமர்க்களப்பட்டது.
 
“வாங்கோ வாங்கோ!” வாசலில் நின்றிருந்த பெண்ணின் தந்தை இவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்று அமர வைத்தார். 
 
பட்டுச்சேலை சரசரக்க கொண்டவனை உரசிக்கொண்டு நடப்பது பரவசமாக இருந்தது துளசிக்கு. மண்டபத்தில் இருந்த அத்தனைக் கண்களும் தன்னைப் பார்ப்பது போல தோன்ற கணவனை இன்னும் கொஞ்சம் நெருங்கினாள் பெண்.
 
“வா சங்கரபாணி.” பாட்டியின் குரல் குதூகலமாக ஒலித்தது.
 
“ரொம்ப நன்னா அழகா இருக்கேடி பொண்ணே!” துளசிக்கு திருஷ்டி கழித்தார் பாட்டி.
 
“அப்ப நான்?”
 
“நோக்கென்னடா ஆதி, ராஜா மாதிரி இருக்கே!” பாட்டியின் பதிலில் ஆதி பலமாக சிரித்தான். அப்போதுதான் இவனைப் பார்த்த நம்பி அவசரமாக வந்து ஆதியை அணைத்துக் கொண்டான்.
 
“கன்கிராட்ஸ் டா!”
 
“ஆதி… டென்ஷனா இருக்குடா.”
 
“ஏன்?!”
 
“தெரியலை.” நண்பனின் கரங்கள் சில்லிட்டிருப்பதை உணர்ந்தான் ஆதி.
 
“எங்கூடவே இருடா‌ ஆதி.”
 
“எதுக்கு? ஸ்வாதி என்னை வில்லன் மாதிரி பார்க்கிறதுக்கா?”
 
“டேய்! ஏன்டா?” பேசிய படியே நண்பர்கள் இருவரும் நகர துளசி பாட்டியோடு போனாள்.
 
சற்று நேரத்தில் நிச்சயதார்த்த வேலைகள் ஆரம்பமாகி விட்டன. ஐயரும் வந்து சேர்ந்து விட நிச்சயதார்த்தப் பத்திரம் படிக்கப்பட்டது.
 
சம்பிரதாயங்களுக்கு எந்தக் குறைவும் இன்றி அனைத்தும் ஜரூராக நடந்து முடிந்தன. அதுவரை நண்பனுக்குத் துணையிருந்த ஆதி அதன் பிறகு துளசிக்கு பக்கத்தில் போய் நின்று கொண்டான்.
 
மதியம் விருந்து பரிமாறப்பட்டது. கணவனும் மனைவியும் அருகருகே அமர்ந்து உண்டார்கள். புதுமண தம்பதிகள் என்பதால் இவர்களுக்கும் கவனிப்பு பலமாக இருந்தது.
அதுவும் துளசி நம்பியின் பிரியத்திற்குரிய தங்கை அல்லவா?
அதனால் பெண் வீட்டார் ஆதியை நன்றாக கவனித்தார்கள்.
 
அதன்பிறகு வந்த பொழுதுகளை எல்லாம் ஆதி ஒரு ரசனையோடு அனுபவித்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.
 
நிச்சயதார்த்தம் இனிதே நிறைவு பெற்று விட்டதால் கேளிக்கைகள் மாத்திரமே மீதமிருந்தன. இளையவர்கள் அனைவரும் கொண்டாடித் தீர்க்க ஆதியும் மனைவியோடு அனைத்திலும் இணைந்து கொண்டான்.
 
அவள் அருகாமை இன்பத்தை அள்ளிக் கொடுத்தது. நிச்சயதார்த்த நிகழ்வின் மகிழ்ச்சி அவனுள்ளும் கிளர்ச்சியை உண்டு பண்ண அவள் கரத்தோடு கரம் உரச நகரும் நொடிகளை ரசித்திருந்தான்.
 
துளசியும் அவனை விட்டு எங்கேயும் நகரவில்லை. அவளுக்கும் அவன் அருகாமை, அவனுக்கே உரித்தான அந்த பிரத்தியேக வாசனை… பிடித்ததோ என்னவோ! 
 
அவனைப் போல ஒட்டி உரசாவிட்டாலும் கூடவே நின்றிருந்தாள். இளையவர்களின் கேலி இவர்கள் மீதும் அவ்வப்போது பாய்ந்த போது ஆதி அதை இலகுவாக கையாண்டான். அப்போதெல்லாம் அழகாக நாணியது பெண்.
 
“எங்க மாப்பிள்ளை சார் ரொம்ப சமத்து, ஆனா மாப்பிள்ளையோட ஃப்ரெண்ட் ரொம்ப கலாட்டாப் பேர்வழியாமே?!” ஸ்வாதியின் சொந்தக்காரப் பெண் ஒன்று ஆதியை வம்புக்கிழுத்தது.
 
இப்போது நம்பி கடகடவென சிரித்தான். இன்னொரு குரல் மீண்டும் ஒலித்தது.
 
“ரொம்ப வெவரமான ஆளாம்!”
 
“என்னோட வெவரம் உங்களுக்கு எப்பிடித் தெரிஞ்சுதாம்?!” லேசில் விடுபவனா ஆதி? ஆனால் இப்போது ஆதிக்கு ஸ்வாதி பதில் சொன்னாள்.
 
“ஏன்? உங்க துளசிதான் சொன்னாங்க.” நிச்சயதார்த்த பெண்ணின் பதிலில் புதுப்பெண் திடுக்கிட்டது.
 
“அப்போ ஒத்துக்க வேண்டியதுதான்.” வெட்கமே இல்லாமல் மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தான் ஆதி.
 
“நான்… நான் எதுவுமே சொல்லலை.” அவனுக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுத்தாள் துளசி. அவன் வேண்டுமென்றே அவளை நம்பாத பார்வைப் பார்த்தான்.
 
“சத்தியமா நான் எதுவும் ஸ்வாதிக்கிட்ட சொல்லலை.” சொன்ன மனைவியைக் காதலோடு பார்த்த ஆதியின் கண்கள் அவளை ரசித்துச் சிரித்தன.
 
“இங்கப்பாருங்க பொண்ணுங்களா! என்னோட தங்கையை யாராவது கேலி பண்ணினா நேக்குக் கெட்டக் கோபம் வரும்!” நம்பி சத்தமாக அங்கிருந்த அனைவரையும் போலியாக மிரட்டினான்.
 
“ஆமாமா, உங்க தங்கை ரொம்ப பாவம்தான், அத்தானைக் கலாட்டாப் பண்ணின பொண்ணு, உங்க தங்கைப் போட்ட போடுல டெல்லிக்கே ஓடிப் போயிட்டாளாமே?!” ஸ்வாதி போட்டு உடைக்க இப்போது நம்பி, ஆதி, ஸ்வாதி என மூவரும் சேர்ந்து சிரித்தார்கள்.
 
ஆதி நடக்கும் அனைத்தையும் எப்போதும் நண்பனிடம் பகிர்ந்து கொள்பவன் என்பதால் இதையும் சொல்லிச் சிரித்திருந்தான். நம்பி அதை அப்படியே ஸ்வாதிக்கு ரிலே பண்ணி இருந்தான்.
 
துளசி முகம் சிவக்க அப்பால் ஓடிவிட்டாள். போகும்போது கணவனை முறைக்கத் தவறவில்லை.
 
“என்னடா சொல்றா துளசி?” நண்பனின் காதைக் கடித்தான் நம்பி. ஒரு பெருமூச்சோடு சிரித்தான் ஆதி.
 
“இன்னைக்கு உன்னோட லைஃப்ல ரொம்ப முக்கியமான நாள், எப்பவும் போல சொதப்பிடாம அதை முதல்ல நீ என்ஜாய் பண்ணு.” நம்பியின் வயிற்றில் லேசாக குத்திவிட்டு ஆதியும் துளசி நின்றிருந்த இடத்திற்குப் போய்விட்டான்.
 
எல்லாக் களியாட்டங்களும் முடிந்து அந்த ப்ளாக் ஆடி வீடு வந்து சேர்ந்த போது மாலை ஆறு மணி. லேசாக இருள் பரவ ஆரம்பித்திருந்தது. 
 
மழை மேகங்கள் வேறு வானை மூடி இருந்தது. சில்லென்ற இதமான காற்று அன்றைய பகல் பொழுதின் வெப்பத்தை மெதுவாக நீக்கிக் கொண்டிருந்தது.
 
துளசிக்கு உள்ளும் புறமும் சிலிர்ப்பாக இருந்தது. கடந்து சில நாட்களாக அவள் மனதில் இருந்த இறுக்கம் மெதுவாக விலகினாற் போல உணர்ந்தாள். 
 
இன்றைக்கு முழுவதும் தன்னைப் பார்வையாலேயே தொடர்ந்து கொண்டிருந்த கணவனை அவள் உணராமல் இல்லை. 
 
அன்று அப்பாவிடம் அனைத்து உண்மைகளையும் அவன் கொட்டிய பிறகு அவளை எந்த வகையிலும் தொல்லைச் செய்யவில்லை. அவள் போக்கிலேயே விட்டுவிட்டான்.
 
துளசிக்கும் அந்த கால அவகாசம் தேவைப்பட்டது. கூடவே நிச்சயதார்த்த வேலைகள். புதுமண தம்பதிகள் என்பதையே மறந்து ஒரே வீட்டில் இருவரும் தனித்தனி தீவாக இருந்தார்கள்.
 
இன்றைய விசேஷ நாளின் பூரிப்போடு தங்கள் அறைக்குள் போனாள் துளசி. ஆதி காரை பார்க் பண்ணிக் கொண்டிருந்தான்.
 
சங்கரபாணியும் இவர்களோடே வந்தவர் களைப்பாக இருப்பதாக கூறிவிட்டு அவர் வீட்டிற்குப் போய்விட்டார். சற்றுக் கழித்து பாட்டி அனைவருக்கும் டின்னர் கொண்டு வருவதாக சொல்லி இருந்ததால் எந்த வேலையும் இருக்கவில்லை துளசிக்கு.
 
வாட்ரோபின் கதவைத் திறந்தவள் காதில் அணிந்திருந்த பெரிய குடை ஜிமிக்கியைக் கழட்டினாள். சிந்தனை அப்பாவிடம் போனது.
 
அப்பாவின் உடலில் இப்போது எத்தனை முன்னேற்றம்!
 
முன்பெல்லாம் சோர்வாக நடப்பவருக்கு இப்போது வாலிபமல்லவா திரும்பி இருக்கிறது?! என் கல்யாணம் அவருக்கு இத்தனை மகிழ்ச்சியையா கொடுத்திருக்கிறது?!
 
‘இன்றைக்குப் பேரன், பேத்தி என்று என்னென்னவோ பேசுகிறாரே?!’ அவள் சிந்தனையைக் குலைத்தது வேகமாக அணைத்த இரு வலிய கரங்கள்.
 
“துளசி…” பெண் திடுக்கிட்டுப் போனாள். சட்டென்று அவள் திரும்பப் போக அவன் விடவில்லை.
 
“துளசி… ப்ளீஸ், இனியும் என்னால முடியாது.” எங்கே அவள் மறுத்து விடுவாளோ என்று பயந்தவன் போல அவள் இதழ்களை மூடினான் ஆதி.
 
உலகின் ஒட்டுமொத்த இன்பத்தையும் பெண்ணுக்குள் புதைத்தது அந்த ஒற்றை முத்தம். அவனது நீண்ட நாள் ஏக்கத்தைப் பெண்ணுக்குச் சொன்னது அதே நெடிய முத்தம்!
 
“துளசி…” கெஞ்சுதலாக அவள் முகம் பார்த்தவன் அங்கே எதிர்ப்பு இல்லை என்று புரிந்து போகவும் அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.
 
“ஷ்…” அவள் கழுத்து ஆரம் அவன் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது.
 
“என்னாச்சு?” பதறிப் போய் கேட்டவளுக்கு அவன் பதில் சொல்லவில்லை. சட்டென்று அவள் கழுத்தில், கைகளில் இருந்த நகைகளைக் கழட்டி கப்போர்ட்டில் போட்டான்.
 
“ஐயையோ! அப்பிடி வீசக்கூடாது.” நகைகளை ஒழுங்காக வைக்கப்போன மனைவியை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டான். 
 
அவன் கைகள் இயல்பாக அவள் தலையில் லேசாக வாடியிருந்த குண்டு மல்லிச் சரத்தை அகற்றிவிட்டு பின்னலை அவிழ்த்து விட்டது.
 
கூந்தல் கலைய நின்றிருந்த பெண்ணை அவன் கண்கள் விழுங்குவது போல பார்த்தது.
 
“ஆதீ…” பானகத் துரும்பாக பாட்டியின் குரல் அப்போது வெளியே கேட்டது. ஆதி ஒரு சலிப்போடு பெருமூச்சு விட்டான்.
 
“பாட்டி வந்திருக்காங்க.” இது துளசி.
 
“கதவை லாக் பண்ணி இருக்கேன்.” நான் எதற்கும் அசைந்து கொடுக்க மாட்டேன் என்பது போல இருந்தது அவன் பதில்.
 
“பாட்டி என்ன நினைப்பாங்க…” அவள் தடுமாறினாள்.
 
“கதவைத் திறக்கலைன்னா பாட்டி புரிஞ்சுப்பாங்க, நீ முதல்ல என்னைக் கவனி டார்லிங்!”
துளசிக்கு மேலே பேச எதுவும் இருக்கவில்லை. சிந்தை, செயல் என அனைத்திலும் அவனே நிறைந்து போனான். 
 
நடுவே துளசி மட்டுமல்ல, அவன் தொலைபேசியும் சிணுங்கியது. ஆனால் எதையுமே அவன் கண்டு கொள்ளவில்லை.
 
இன்பம் என்றால், இல்லறம் என்றால் என்னவென்று அவளுக்கும் உணர்த்தி… அவனும் உணர்ந்து கொண்டிருந்தான்!