நிலா பெண்

நிலா பெண்

                   நிலா பெண் 4

ஆத்ரேயன் ஹாலில் கிடந்த சோஃபாவில் அமர்ந்திருந்தான். கையில் அவன் டைரி. அந்த டைரிதான் பெரும்பாலான நேரங்களில் அவன் சுமைதாங்கி.
 
எப்போதும் மனதில் தோன்றும் பாரங்களை அந்த டைரியில் கொட்டி தீர்த்து விடுவான். இன்றைக்கும் மனம் அப்படித்தான் கனத்தது, வலித்தது. கொட்டி தீர்த்து விட்டான்.
 
விடிந்தால் வெள்ளிக்கிழமை!
 
துளசிக்கு நிச்சயதார்த்தம். அந்த தெருவே கலகலவென்று வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டிருந்தது. 
 
ஆதி கூட இத்தனை நேரமும் அங்கேதான் நின்றிருந்தான். ஆர்டர் பண்ணியிருந்த பொருட்கள் அனைத்தும் வந்திறங்கி இருந்தன. 
 
சங்கரபாணி இவனிடம் ஒரு லிஸ்டை கொடுத்து எல்லா பொருட்களும் சரிவர இருக்கிறதா என்று பார்க்க சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.
 
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டான்.
 
அதற்கு மேலும் அங்கே நிற்க அவனுக்குப் பிடிக்கவில்லை. மனதுக்குள் ஏதோ பெரிய சுமை ஒன்றைத் தூக்கி வைத்தாற்போல கனத்தது. 
 
வாழ்க்கையில் எதுவோ ஒன்றை இழக்க போவது போல அவன் மனம் கிடந்து தவித்தது. ஒட்டுமொத்த வியாபாரத்தையும் அண்ணன் கையில் தூக்கி கொடுத்த போது கூட அவன் இவ்வளவு வருந்தவில்லை!
 
“ஆதி!” அந்த குரலில் சட்டென்று கலைந்தான் ஆத்ரேயன்.
 
“இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” கேட்டபடி நம்பிதான் வந்து கொண்டிருந்தான். இப்போது நண்பர்கள் எல்லோரும் ஆதியை ஒருமையில் அழைக்க பழகி இருந்தார்கள்.
 
“என்னாச்சு நம்பி? இப்பதான் வந்தேன்.”
 
“பிளாஸ்டிக் செயார் எல்லாம் வந்திருக்கு, இறக்கி வைக்க இன்னொரு ஆள் இருந்தா நல்லா இருக்கும், நீ என்ன இப்பிடி வந்து உட்கார்ந்துட்டே?”
 
“ஓ… அப்பிடியா? இதோ வர்றேன்.” சோஃபாவில் இருந்து எழப்போன ஆதியின் வலது தோளில் கையை வைத்து தடுத்தான் நம்பி.
 
“என்னாச்சு ஆதி? ஏன் முகம் ஒருமாதிரியா இருக்கு?” நம்பியின் கேள்விக்கு ஆதி சட்டென்று பதில் சொல்லி விடவில்லை. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தான்.
 
“என்னவோ எம் மனசுக்குத் தப்பா தெரியுது நம்பி.” சொன்ன ஆதியின் முகத்தில் கவலையின் அளவு அதிகரித்தது.
 
“தப்பா? என்ன தப்பு? எனக்குப் புரியலை.”
 
“நான் துளசி கூட கொஞ்சம் பேசணும்.”
 
“பேசு, யாரு வேணான்னு சொன்னா?”
 
“இல்லை நம்பி, நான் தனியா துளசிக்கிட்ட பேசணும்.”
 
“ஓ… ஏதாவது பிரச்சனையா ஆதி?”
 
“துளசியை நல்லா கவனிச்சுப் பார்த்தியா நம்பி?”
 
“ஏன்? என்னாச்சுடா?” நம்பி பதறினான்.
 
“துளசி முகத்துல சந்தோஷமே இல்லை நம்பி, யாருக்கோ வந்த விருந்துங்கிற மாதிரியே இருக்கா.”
 
“அப்பிடியா என்ன?! எனக்கு ஒன்னும் அப்பிடி வித்தியாசமா தெரியலையே!”
 
“அன்னைக்கு சாரீஸ் வாங்க ஷாப்புக்கு போயிருந்தோமில்லை?”
 
“ஆமா.”
 
“அன்னைக்கு மாப்பிள்ளை துளசிகிட்ட பேச ட்ர்ரை பண்ணினாரு.”
 
“இது சகஜம்தானே ஆதி.”
 
“அதைத்தான் நானும் சொல்றேன், சும்மா ரெண்டு வார்த்தைப் பேச வேண்டியதுதானே! ஆனா துளசி மாட்டேன்னு சொல்லிடுச்சு.”
 
“டேய்! இது ஒரு பெரிய மேட்டரா? பேச வெக்கப்பட்டிருப்பா!” சொல்லிவிட்டு நம்பி கடகடவென சிரிக்க,
 
‘கிழிச்சா!’ மனதுக்குள் பொருமிக்கொண்டான் ஆதி.
 
“அப்பிடியில்லை நம்பி, அதுக்கப்புறமும் மாப்பிள்ளை எனக்கு ஃபோன் பண்ணி இருந்தாரு.” அள்ளி விட்டான் ஆத்ரேயன். அப்படி ஏதும் நடந்திருக்கவில்லை.
 
“ஓ…” 
 
“ஆனா துளசி மாட்டேன்னு சொல்லிட்டாங்க.” நண்பனின் பேச்சில் இப்போது நம்பியின் முகத்தில் குழப்பம் தோன்றியது.
 
“ஃபோன்ல ரெண்டு வார்த்தைப் பேசுறதுக்கு என்ன? ஸ்கூல்ல எத்தனை ஜென்ட்ஸோட பழகுறா! அந்தளவுக்கு வெக்கப்படுற பொண்ணில்லையே துளசி!” 
 
“அதுதான் எனக்கும் டவுட்டாவே இருக்கு நம்பி, துளசிக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லையோன்னு தோணுது.”
 
“இஷ்டம் இல்லைன்னா அதை அவங்க அப்பாக்கிட்ட சொல்லி இருக்கலாமில்லை!”
 
“என்ன பேசுற நம்பி நீ! அதான் ஆளாளுக்கு ஜாதகம், தோஷம்னு ஏதேதோ சொல்லி அந்த பொண்ணை முடக்கிட்டீங்களே! அது எப்பிடி பிடிக்கலைன்னு சொல்லும்?” கோபமாக ஆதி கேட்க நம்பியின் முகத்தில் கவலைத் தெரிந்தது.
 
சற்று நேரம் தாடையைத் தடவிய படி அமைதியாக நின்றிருந்தான் நம்பி. அதன் பிறகு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன் போல, 
 
“கொஞ்சம் பொறு ஆதி, நான் போய் துளசியை கூட்டிட்டு வர்றேன், இதுக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும், பொழுது விடிஞ்சிருச்சுன்னா அதுக்கப்புறமா எதுவுமே பண்ண முடியாது, எல்லாம் கை மீறிடும்.” அவசரமாக சொன்னவன் கிடுகிடுவென வெளியே போனான். ஆதியின் முகத்தில் லேசான புன்னகைத் தோன்றியது.
 
சிறிது நேரத்திலெல்லாம் துளசியை அழைத்துக்கொண்டு ஆதியின் வீட்டிற்கு வந்தான் நம்பி. துளசியின் முகத்தில் இருந்த குழப்பமே நம்பி எதையும் இன்னும் அவளிடம் சொல்லவில்லை என்று சொன்னது.
 
“என்னாச்சு நம்பிண்ணா?” கேட்டபடியே வந்த பெண்ணை வீட்டின் ஹாலில் நிறுத்திவிட்டு கோபமாக பேசினான் நம்பி.
 
“துளசி! உண்மையைச் சொல்லு, உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமா இல்லையா?” நம்பி அதிரடியாக கேட்க துளசி மிரள மிரள விழித்தாள்.
 
“நம்பி கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க துளசி.” ஆதியும் ஆரம்பிக்க பெண் வெகுவாக திகைத்து போனது.
 
“என்னாச்சு? ஏன் இப்பிடியெல்லாம் கேக்குறீங்க?”
 
“ஆதி என்னென்னமோ சொல்லுறான், ஜவுளி எடுக்க போனப்போ மாப்பிள்ளைக் கூட பேச முடியாதுன்னு சொல்லிட்டியாம்!”
 
“அது… நம்பிண்ணா…”
 
“மனசுல இருக்கிறதைத் தெளிவா பேசுங்க துளசி.” அதற்கு மேலும் நம்பியை பேச விடுவது ஆபத்து என்று களத்தில் தானே இறங்கினான் ஆத்ரேயன்.
 
“எம் மனசுல எதுவுமே இல்லையே!”
 
“அதைத்தான் நானும் சொல்றேன், உங்க மனசுல எதுவுமே இல்லை துளசி மேடம், ஒரு கல்யாண பொண்ணுக்கான மலர்ச்சி, வெக்கம், எதிர்பார்ப்பு, படபடப்பு… எதுவுமே இல்லை… ஜடம் மாதிரி இருக்கீங்க.”
 
“………….”
 
“துளசி! உண்மையைச் சொல்லு, ஆதி சொல்றது நெஜமா? உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?”
 
“அப்பிடியெல்லாம் எதுவுமில்லைண்ணா.”
 
“அப்ப ஏன் இப்பிடி இருக்க? ஒன்னா பொறக்கலைன்னாலும் துளசி என்னோட தங்கை, அவளுக்கொரு கஷ்டம்னா என்னால தாங்கிக்க முடியாது, உள்ளதைச் சொல்லு துளசி.” நம்பி வற்புறுத்த துளசி ஒரு பெருமூச்சு விட்டாள்.
 
“எதை ஆதாரமா புடிச்சிக்கிட்டு எல்லா பொண்ணுங்களையும் போல என்னையும் நடந்துக்க சொல்றீங்க நம்பிண்ணா?”
 
“துளசி!”
 
“உங்க தங்கை எல்லா பொண்ணுங்களையும் போல சாதாரண பொண்ணில்லை, தோஷம் புடிச்சவ, தரித்திரம்!”
 
“துளசி!” நம்பி அலறிவிட்டான். அந்த வார்த்தைகளின் சரியான அர்த்தம் ஆதிக்கு புரியவில்லை என்றாலும் ஏதோ தவறான வார்த்தை என்று புரிந்தது.
 
“எதுக்கு இவ்வளவு அதிர்ச்சிண்ணா? அதானே உண்மை?”
 
“துளசி! ஏம்மா இப்பிடி யெல்லாம் பேசுற?” நம்பியின் கண்கள் கலங்கின.
 
“நான் உண்மையைத்தானே சொல்றேன், இருபது வயசுல இருந்தே அப்பா வரன் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க, எத்தனை வரன், எத்தனை ஜாதகம், எத்தனை மாப்பிள்ளை… ஏன் நம்பிண்ணா? உங்களுக்கே அலுக்கலை?”
 
“துளசி!” நம்பி திடுக்கிட, ஆதியின் கை முஷ்டி இறுகியது.
 
“எனக்கு அலுத்துப்போச்சு நம்பிண்ணா, நானும் மனுஷிதானே? எக்குன்னும் ஒரு மனசு இருக்கில்லையா? அதுல ஆசைகள் இருக்கக்கூடாதா?” ஆண்கள் இருவரும் பேச்சற்று நிற்க ஒரு கசப்பான புன்னகையோடு தொடர்ந்தது பெண்.
 
“ஒவ்வொரு முறையும் ஸ்லேட்ல எழுதி எழுதி அழிக்கிறா மாதிரி… முடியலைண்ணா! எல்லாமே வெறுத்து போச்சு! மறத்து போச்சு! இதுல எதிர்பார்ப்பு, வெக்கம், படபடப்பு… இதெல்லாம் எங்கிருந்து வர?” இப்போது ஆதியை கேலியாக ஒரு பார்வைப் பார்த்தவள் சிரித்துவிட்டு வெளியே போய்விட்டாள். 
 
ஆதி உறைந்து போனான்!
 
இப்படியொரு குமுறலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு வேகத்தோடு நம்பியின் ஷர்ட் காலரை கொத்தாக பிடித்தான் ஆத்ரேயன்.
 
“என்னடா சாஸ்திரம், சம்பிரதாயம், மண்ணாங்கட்டி! ஒரு பொண்ணோட மனசை இந்தளவுக்குக் காயப்படுத்தித்தான் பாழாப்போன இந்த சாஸ்திரத்தை நீங்கெல்லாம் கட்டிக்கிட்டு அழணுமா?” வெறி கொண்டவன் போல ஆதி கேட்க நம்பி எதுவுமே பேசவில்லை. கண்களில் கண்ணீர் பொங்க அமைதியாக நின்றிருந்தான்.
 
ஆதிக்கு மனது ஆறவேயில்லை. நம்பி அங்கிருப்பதையும் கவனத்தில் கொள்ளாது தடதடவென்று படிகளில் ஏறி மாடிக்குப் போய் விட்டான்.
 
வெறி பிடித்தால் போல இருந்தது. ஏன் இந்த பெண் தன்னை இத்தனைத் தூரம் பாதிக்கிறாள் என்று அவனுக்குப் புரியவேயில்லை. பலவகையான பெண்களைப் பார்த்தவன் அவன். கல்லூரி காலத்தில் பல கலாச்சாரங்களிலிருந்தும் பெண்களைப் பார்த்திருக்கிறான்.
அவர்களில் பலர் அவனைக் கவர்ந்ததும் உண்டு.
 
அவர்களையெல்லாம் ஒரு முறுவலோடு கடக்க முடிந்தவனால் ஏன் இந்த பெண்ணை ஒரு எல்லைக்கு அப்பால் நிறுத்த முடியவில்லை!
 
அவன் மீதே அவனுக்கு வெறுப்பு வர கையை ஓங்கி அங்கிருந்த மேசையில் அடித்தான். வாழ்க்கைச் சூனியமாக தெரிந்தது. அத்தனைச் சுலபத்தில் அந்த பெண்ணைத் தூக்கி யார் கையிலாவது கொடுக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை.
நாளை துளசியின் வாழ்வில் ஏதாவது ஒரு சிக்கல் வந்தால் அதை அவனால் தாங்க இயலாது. அப்போது அவன் மனசாட்சியே அவனைக் கொன்றுவிடும்.
 
நள்ளிரவு வரை நடைபயின்று கொண்டிருந்தவன் விஸ்வநாதன் அங்கிளை அலைபேசியில்
அழைத்தான்!
 
***
 
“சரஸ்வதி! சீக்கிரம் கோலத்தைப் போட்டு முடி! காமிலா, இந்த குத்துவிளக்கு எங்க இருக்கு?” பாட்டியின் குரலில் அந்த இடமே அதிர்ந்தது.
 
“இங்க இருக்கு பெரியம்மா.”
 
“செத்த அதை இங்க கொண்டு வா, ஐயர் எத்தனை மணிக்கு வர்றார் சங்கரபாணி?”
 
“இப்போ வந்திடுவார் பெரியம்மா.”
 
“மாப்பிள்ளையோட அம்மா கொஞ்சம் திமிர் பிடிச்சவா மாதிரி தெரியுறா, எந்த குறையும் வந்திட கூடாது சங்கரபாணி.”
 
“சரி பெரியம்மா.”
எல்லோருக்கும் ஆணைகள் பிறப்பித்தபடி துளசியின் அறைக்கு வந்தார் ரங்கநாயகி. சிவப்பு நிற பட்டுப்புடவை அணிந்து அலங்காரங்களோடு அமர்ந்திருந்தாள் துளசி. 
 
அலங்காரம் செய்வதற்கென்று ஒரு பெண்ணை ஏற்பாடு செய்திருந்தார்கள். துளசி பார்க்க லட்சணமான பெண்தான். ஆனால் இத்தனை அழகென்று பாட்டிக்குத் தெரியாது.
 
“ஏன்டி குழந்தை, எவ்வளவு அழகா இருக்க?!” சொல்லிவிட்டு தனது கையாலேயே திருஷ்டி கழித்தார் பாட்டி. 
 
“இந்தாம்மா பொண்ணு, அந்த உதட்டுல போடுவாளே லிப்ஸ்டிக்கு, அதுல இன்னும் கொஞ்சம் போடு, இது பத்தாது.” பாட்டி சொல்ல துளசி அலறினாள்.
 
“ஐயோ பாட்டி!‌ அவங்களை நான்தான் ரொம்ப போட வேணாம்னு சொன்னேன்!”
 
“நீ வாயை மூடிண்டிரு துளசி, நோக்கு ஒன்னும் தெரியாது!” பாட்டியின் கர்ஜனையில் இன்னும் கொஞ்சம் லிப்ஸ்டிக் துளசியின் பவள இதழ்களில் குடியேறியது.
 
நேரம் பத்தைத் தாண்டி கொண்டிருந்தது. பத்து முப்பதுக்கு மாப்பிள்ளை வீட்டார் வருவதாக ஏற்பாடு. வருபவர்களுக்கு சிற்றுண்டி பரிமாறி விட்டு பதினொன்றுக்கு மேல் நிச்சயதார்த்தம் ஆரம்பமாகும். 
 
இதோ! பெண் ரெடி! துளசியின் வீட்டு ஹாலுக்கு வந்த பாட்டி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்வையிட்டார். வாசலில் கோலம், தோரணம் முதற்கொண்டு அனைத்தும் நிறைவாக இருந்தது.
அதேவேளை… அப்போதுதான் எழுந்த ஆத்ரேயன் குளியலை முடித்துவிட்டு ஒரு காஃபியை போட்டு குடித்தான்.
 
பட்டு வேஷ்டி சட்டை எல்லாம் ரெடியாக இருந்தது.
 
சங்கரபாணி அந்த தெருவில் இருக்கும் அனைவருக்கும் துணிமணி எடுத்து கொண்டிருந்தார்.
நம்பி வேஷ்டி கட்ட ஆதிக்கு கற்று கொடுத்திருந்தான்.
 
ஒரு புன்னகையோடு காஃபியை முடித்தவன் சாவதானமாக மாடிக்குப் போனான். பட்டு வேஷ்டி சட்டையை அணிந்து கொண்டு சட்டையின் கையை முழங்கை வரை மடித்து விட்டான். லைட்டாக ஜெல் போட்டு கேசத்தை நீவி விட்டான்.
 
வானில் தோன்றும் கோலம்… அதை யார் போட்டதோ…
பனி வாடை வீசும் காற்றில்… சுகம் யார் சேர்த்ததோ…
 
எங்கிருந்தோ ஒலித்த பாடல் ஒன்று ஆதியின் காதுகளைத் தேடி வந்து உட்கார்ந்து கொண்டது. அந்த இதமான இசைக்கு ஏற்ப லேசாக அசைந்தாடினான் ஆத்ரேயன்.
 
உதட்டில் லேசான புன்னகை ஒன்று வந்து அமர்ந்து கொள்ள இப்போது துளசியின் வீட்டை நோக்கி போனான் ஆதி. வீதியின் இரு மருங்கிலும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. 
 
சொந்த பந்தங்கள், அக்கம் பக்கம் என அழைக்கப்பட்டிருந்த அனைவரும்  ஏற்கனவே வந்திருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டார் வருவது மட்டும்தான் மீதமாக இருந்தது. 
 
துளசியின் வீட்டிலிருந்து வெளியே வந்த நம்பி சாவதானமாக புன்னகையோடு வந்த ஆதியை ஒரு தினுசாக பார்த்தான்.
 
“என்ன நம்பி?”
 
“இல்லை… லேட்டா வர்றதும் இல்லாம இவ்வளவு கூலா வர்றியா… அதான் அப்பிடி பார்த்தேன்.” நம்பி சொல்ல தோளை ஸ்டைலாக குலுக்கினான் ஆதி.
 
“சரி சரி, உள்ள போ!” நம்பியின் குரலில் இப்போதும் பேதமிருந்தது.
 
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எத்தனை மணிக்கு வர்றாங்க?”
 
“இந்நேரத்துக்கு வந்திருக்கணும், இன்னும் வரலை, இங்க எல்லாரும் டென்ஷனா உக்கார்ந்திருக்காங்க, நீ என்னடான்னா…” நம்பி குறைப்பட ஆதி அதைக் கண்டு கொள்ளாமல் உள்ளே போனான். 
 
பாட்டி நகத்தைக் கடிக்காத குறையாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார். வீட்டினுள் பெண்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.
 
“என்னாச்சு பாட்டி?” பாட்டியின் வாயைக் கிளறினான் ஆதி.
 
“பத்தரைக்கே வந்திருக்கணும் ஆதி, பதினொன்னு ஆச்சுடா! இன்னும் அவா வந்து சேரலை, நேக்கு பக்கு பக்குன்னு இருக்குடா ஆதி!”
 
“சேச்சே! ட்ராஃபிக் ல மாட்டியிருப்பாங்க பாட்டி, நீங்க கவலைப் படாதீங்க.”
 
“ஏன்டாப்பா! இன்னைக்கு நிச்சயதார்த்தம், பள்ளிக்குப் போற சின்ன குழந்தை மாதிரி இதுக்கெல்லாமா லேட் பண்ணுறது?”
 
“டென்ஷன் ஆகாதீங்க பாட்டி, வந்திருவாங்க.” இவர்கள் இப்படி இங்கே தர்க்கித்து கொண்டிருக்க அங்கே ஐயர் சத்தம் போட்டார்.
 
“மாப்பிள்ளை எத்தனை மணிக்கு வர்றார்? நேக்கு இன்னொரு இடத்திலயும் பூஜை இருக்கு, லேட் பண்ணிடாதீங்கோ!”
 
“என்னடா ஆதி இப்பிடி பண்ணுறாங்க? நேக்கு வயித்துல புளியைக் கரைக்குது! இந்த குடும்பத்துக்கு மட்டும் ஏன்டாம்பி இப்பிடியெல்லாம் நடக்குது? ஏதாவது ஏடாகூடமா நடந்தா சங்கரபாணி தாங்க மாட்டானே!” பாட்டி கண்களில் கண்ணீரோடு புலம்ப ஆதியின் முகம் லேசாக கறுத்தது.
 
சங்கரபாணியின் வீடு கொஞ்சம் பழைய கால அமைப்பில் இருந்தது. முன்னே பெரிய வரவேற்பறை, அதை அடுத்தாற்போல‌ ஒரு கூடம்.
 
இறுதியில் அழகான துளசி மாடம் கொண்ட இடம். துளசி மாடத்திற்கு இருபுறமும் சமையலறை, படுக்கை அறைகள் என்று அமைந்திருந்தது.
பாட்டியும் ஆதியும் இப்போது துளசி மாடத்திற்கு அருகில் நின்றுதான் பேசிக்கொண்டிருந்தார்கள். அதற்கு வலப்பக்கத்தில் இருந்த அறையில்தான் துளசி இருக்க வேண்டும். 
 
ஆவலைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி கொண்டு பாட்டி அப்பால் நகர்ந்ததும் அந்த ரூமை நோட்டம் விட்டான் ஆதி. சிகப்பு பட்டுடுத்தி துளசி அமர்ந்திருப்பது தெரிந்தது.
 
முதுகு வரை இருந்த அடர்ந்த கூந்தலும் அதில் சூடியிருந்த கொள்ளை மல்லிகைப் பூவும்தான் இவன் கண்களுக்குத் தெரிந்தது.
 
முகம் தெரியவில்லை.
நேரம் பதினொன்று முப்பது. கிரீச் என்ற ஒலியோடு அந்த கார் வந்து நிற்க அனைவரும் பரபரப்பானார்கள். மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட்டார்கள்!
 
முதலில் மாப்பிள்ளையின் அம்மாதான் காரை விட்டு இறங்கினார். அந்த அம்மாவின் கையில் லேசான கட்டு போடப்பட்டிருந்தது.
 
“ஐயையோ! சம்பந்தி என்ன ஆச்சு?” பதறிய படி பாட்டிதான் முன்னே ஓடி வந்தார். மாப்பிள்ளையின் அப்பா அதன்பிறகு இறங்க, மாப்பிள்ளையின் அக்காவும் இறங்கினார். அக்காவின் நெற்றியில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது.
 
“என்னம்மா ஆச்சு? நெத்தியில எப்பிடி அடிபட்டுது குழந்தை?” பாட்டி அவசரமாக கேட்க மாப்பிள்ளையின் தாய் தன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார்.
 
“இன்னும் என்ன நடக்கணும்? வீட்டுக்கு வர்றதுக்கு முன்னமே உங்க பொண்ணோட லட்சணம் தெரியுது!” வீரியமான வெடிகுண்டு போல வார்த்தைகள் வந்து வீழ்ந்தது.
 
“சம்பத்தியம்மா! என்ன பேசுறீங்க?!” சங்கரபாணி துடித்து போனார்.
 
“சம்பந்தியா? யாரு யாருக்கு சம்பந்தி? இன்னும் அந்த நினைப்பு வேற உங்க மனசுல இருக்கா?”
 
“என்ன நடந்ததுன்னு சொல்லாம நீங்க பாட்டுக்கு என்னென்னமோ பேசுறீங்களேம்மா?”
 
“இன்னும் என்னைய்யா நடக்கணும்? வர்ற வழியில ஆக்ஸிடென்ட்!” மரியாதை இல்லாமல் அந்த பெண் பேசிய போதும் ஆக்ஸிடென்ட் என்று சொன்னதும் அங்கிருந்த அனைவரும் மலைத்து போனார்கள்.
 
“உங்க கார் ஆக்ஸிடென்ட் ஆனதுக்கு எம் பொண்ணை எதுக்குமா தப்பா பேசுறீங்க?” சங்கரபாணி இப்போது அழுது விட்டார்.
 
“வேற யாரைச் சொல்றது? மகராசி எங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்னமே அவ ராசி எங்களை ஆட்டுது.” அந்த பெண் தெருவே கிடுகிடுக்க கர்ஜித்தார்.
 
“இங்கப்பாருங்கம்மா, துளசியை தப்பா பேசாதீங்க, அவ ஜாதகத்துல தோஷம் இருக்குத்தான், இல்லேங்கலை… அதை நாங்க யாரும் உங்கக்கிட்ட மறைக்கலை, நீங்களும் அதெல்லாம் தெரிஞ்சுதான் வந்தீங்க!” பாட்டியின் குரலிலும் இப்போது லேசான அனல் தெறித்தது.
 
“ஓஹோ! இந்த தரித்திரத்தைப் பெத்து வெச்சுட்டு உங்களுக்குக் கோபம் வேற வருதோ?!” அம்மாவைப் பேச விட்டுவிட்டு காரிலேயே ஒய்யாரமாக அமர்ந்திருந்தான் அருண் குமார்.
 
“இங்கப்பாருங்கம்மா! கொஞ்சம் வார்த்தையை அளந்து பேசுங்க!” இப்போது காமிலா வாயைத் திறந்தார்.
 
“எதுக்கு அளந்து பேசணும்? இவ்வளவு அக்கறை இருக்கிற நீங்க உங்க பையனை இந்த பொண்ணுக்குக் கட்டி வெப்பீங்களா?”
 
“அதெல்லாம் உங்களுக்கு எதுக்கும்மா? நீங்க பொண்ணைப் பிடிச்சுப்போய், ஜாதகம் பார்த்து எல்லாம் திருப்தியான பிறகுதானே நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்தீங்க?” இது எமிலி, ராபினின் தாய்.
 
“ஆத்தாடீ! நல்ல வேளை… இப்பவே உங்க பொண்ணோட தரித்திரம் தெரிஞ்சுது, கல்யாணம் ஆகியிருந்தா என்னத்துக்கு ஆகியிருக்கும்!” அந்த அம்மா பேசிக்கொண்டே போக பெண் வீட்டாருக்கு ஆத்திரம் பொங்கியது. 
 
மேலும் மேலும் அந்த பெண்மணி துளசியை தரித்திரம் தரித்திரம் என்று சொல்வதை இவர்களால் தாங்க இயலவில்லை.
 
“சங்கரபாணி! இந்த வீட்டுக்கு வாழப்போனா நம்ம துளசி நிம்மதியா இருக்கும்னு நீ நினைக்கிறியா?” ராபினின் அப்பா இப்போது சற்று சத்தமாகவே கேட்டார். கேட்கும்போதே அவர் வலதுகை வேஷ்டியின் நுனியைக் கோபமாக பற்றியது.
 
“டேவிட், என்னப்பா சொல்றே? இது எம் பொண்ணோட வாழ்க்கை டேவிட்!” மனிதர் அழுதபடியே கேட்டார்.
 
“அதைத்தான் நானும் சொல்றேன், பொம்பிளையைப் பேச விட்டுட்டு காருக்குள்ள உக்கார்ந்துக்கிட்டு வேடிக்கைப் பார்க்கிற ஆம்பிளைக் கூட உம் பொண்ணால சந்தோஷமா வாழ்ந்துர முடியுமா?” டேவிட் வார்த்தைகளைக் கடித்து துப்பினார்.
 
“யாரை ஜாடைப் பேசுறீங்க?” இப்போது கோபமாக காரிலிருந்து இறங்கினான் அருண் குமார்.
 
“ஏன்? உன்னைத்தான் சொல்றாங்க, உனக்கு அது புரியலையா?” நம்பி கேலியாக கேட்டான்.
 
“இந்த கேலியெல்லாம் இங்க வேணாம்! அக்கறை இருந்தா நீ கட்டிக்கோ!”
 
“பல்லைத் தட்டிடுவேன்டா பரதேசி! அவ என் தங்கைடா!”
 
“தங்கையா?! கூட பொறந்தவளா என்ன?”
 
“டேய்! நிறுத்துடா பொடிப்பயலே! இதுக்கு மேல ஏதாவது தப்பா ஒரு வார்த்தை எங்க குழந்தைகளைப் பத்தி பேசினே…” பாட்டியும் வரிந்து கட்டிக்கொண்டு வந்தார்.
 
“ஏன்? என்ன பண்ணிடுவீங்க? தரித்திரம் புடிச்ச வீட்டுல சம்பந்தம் பண்ண எங்களுக்கென்ன தலையெழுத்தா?” இது மாப்பிள்ளையின் அக்கா.
 
“ஆமாடியம்மா, தரித்திரம் புடிச்ச வீடுதான், அந்த தரித்திரத்துக்கிட்ட இருந்து அன்னைக்கு ஜவுளிக்கடையில ரெண்டு லட்சத்துக்கு அம்மாவும் மகளுமா பட்டுப்புடவையை சுருட்டினீங்களே! அந்த பணத்தை இப்போ இங்க எண்ணி வெச்சுட்டு திரும்பி பார்க்காம நடையைக் கட்டு!” காமிலா பத்ரகாளி போல பேசினார்.
 
“அதைச் சொல்லு காமிலா!” பாட்டியும் சேர்ந்து கொள்ள அந்த இடம் கொஞ்சம் திமிலோக பட்டது.
 
“பெ…ரிய…ம்மா!” தீனமாக வலியோடு வந்த அந்த குரலில் அத்தனைப் பேரும் திகைத்து போனார்கள். சங்கரபாணி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சரிந்து கொண்டிருந்தார்.
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!