நிலா பெண் 5

நிலா பெண் 5

 
பாரதி தெருவில் நடந்தேறி கொண்டிருந்த காட்சி நொடிப்பொழுதில் சட்டென்று மாறியது. கைதேர்ந்த இயக்குனர் ஒருவரால் காட்சிகள் மாற்றப்படுவது போல அங்கேயும் காட்சி மாறி இருந்தது.
 
இதுவரை நேரமும் மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க எங்கே கைகலப்பு நேர்ந்து விடுமோ என்று கூடியிருந்தவர்கள் அச்சப்பட்டு போனார்கள்.
 
ஆனால் சங்கரபாணி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விழுந்த அடுத்த நொடி பெண் வீட்டார் துடித்து போனார்கள்.
 
“சங்கரபாணி!” டேவிட் கூவியபடி ஓடிவந்து தோழனைத் தாங்கி கொண்டார்.
 
“அப்பா!” துளசியும் கூச்சலிட்ட படி தந்தையிடம் ஓடி வந்தாள்.
 
“ஆதீ! காரை எடு!” பாட்டி கத்த தன் ப்ளாக் ஆடியை நோக்கி ஓடினான் ஆத்ரேயன். இந்த களேபரத்தில் மாப்பிள்ளை வீட்டார் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனதை யாரும் கவனிக்கவேயில்லை.
சங்கரபாணியை அள்ளி போட்டுக்கொண்டு அந்த ப்ளாக் ஆடி ஒரு பிரபல மருத்துவமனையை நோக்கி விரைந்து போனது. ஆண்கள் அனைவரும் காரில் ஏறிக்கொள்ள பெண்கள் ஒரு ஆட்டோவில் பின்னோடே போய் சேர்ந்தார்கள்.
 
அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார் சங்கரபாணி. ஏற்கனவே இரத்த அழுத்தமும் மனிதருக்கு இருந்ததால் நண்பர்கள் அளவுக்கு அதிகமாகவே கவலைப்பட்டார்கள்.
 
“அப்பாக்கு என்ன ஆச்சு?” பாட்டியோடு வந்த துளசி பதறியபடி அழவும் ஆதி விறைத்து போனான்.‌ இப்படியொரு திருப்பத்தை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. ஏன்? அங்கிருந்த யாருமே எதிர்பார்த்திருக்கவில்லையே!
 
“டாக்டர்ஸ் பார்த்துக்கிட்டு இருக்காங்க துளசிம்மா, நீ அழாதே.” நம்பி ஆறுதல் சொன்னான்.
 
“நம்பிண்ணா!” நம்பியின் தோளில் சாய்ந்தபடி வெடித்து அழுதாள் துளசி. நம்பிக்கும் கண்கள் கலங்கி போனது. அவள் தலையைத் தடவி கொடுத்தான்.
 
“அழக்கூடாது துளசி, அப்பாக்கு ஒன்னும் ஆகாது.” நம்பியின் தேற்றல் எதுவும் வேலைச் செய்யவில்லை.
 
“அப்பாவும் என்னை விட்டுட்டு போயிட்டா என்னோட கதி என்ன நம்பிண்ணா?”
 
“சீச்சீ! என்ன பேச்சு பேசுறே துளசி! அப்பாக்கு ஒன்னும் ஆகாது, நீ அழக்கூடாது, இங்கப்பாரு… நம்பிண்ணா சொன்னா கேக்கணும்.” அவள் கண்களைத் துடைத்துவிட்டு குழந்தைக்குச் சொல்வது போல சொன்னான் நம்பி.
 
அந்த காட்சியைக் காண பொறுக்காதவன் போல தலையைத் திருப்பி கொண்டான் ஆதி. ஏனோ நம்பியை பார்த்த போது அவனுக்குப் பொறாமையாக இருந்தது! 
டாக்டர் ஒருவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். அவர் நேராக இவர்களிடம் வரவும் எல்லோரும் படபடத்து போனார்கள்.
 
“மைல்ட் அட்டாக், பிரஷர் ரொம்ப அதிகமா இருக்கு, அப்பிடி என்னதான் ஆச்சு?” டாக்டர் சந்தேகமாக கேட்க,
 
“வீட்டுல ஒரு சின்ன பிரச்சனை டாக்டர்.” என்றார் கரீம்.
 
“எதுவா இருந்தாலும் ரொம்ப கவனமா பார்த்துக்கணும், மனசளவுல ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கார், ஃபுல் ரெஸ்ட் எடுக்கணும்.”
 
“வேற ஒன்னும் பிரச்சனை இல்லையே டாக்டர்.” 
 
“இல்லையில்லை, கவலைகள் ஒரு மனுஷனை அரிச்சு தின்னுடும், அவர் கவலைப் படாம பார்த்துக்கோங்க.” சொல்லிவிட்டு டாக்டர் நகர்ந்து விட எல்லோரும் ‘அப்பாடா’ என்று அமர்ந்து விட்டார்கள்.
 
மனதிலிருந்த பாரம் ஒன்று குறைவது போல உணர்ந்தான் ஆதி. துளசியின் முகத்தைப் பார்த்தான். அதில் நிம்மதி விரவிக்கிடந்தது.
 
சங்கரபாணியை அப்போது பார்க்க யாரையும் டாக்டர் அனுமதிக்காததால் பெண்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். 
 
ஆனால் துளசி நகர மறுத்துவிட்டாள். அப்பாவோடு ஒரு முறைப் பேசிவிட்டுத்தான் நான் வீட்டிற்குப் போவேன் என்று உறுதியாக சொல்லிவிட்டாள்.
 
நேரம் பிற்பகல் நான்கையும் தாண்டி கொண்டு போகவே நம்பி மீண்டும் துளசியிடம் வந்தான். 
 
“துளசிம்மா, டாக்டர் இப்போ அப்பாவைப் பார்க்க விட மாட்டாங்க போலதான் தெரியுது, வீட்டுக்குப் போகலாம்மா.” கெஞ்சலாக அவன் சொல்ல துளசி மறுத்துவிட்டாள்.
 
“இல்லை நம்பிண்ணா, ஒரு தடவை அப்பாவைப் பார்த்துட்டு போயிடலாம், ப்ளீஸ்.”
 
“அப்பா இப்போ உன்னைப் பார்த்தா…‌ அதுவும் இந்த கோலத்துல பார்த்தா கண்டிப்பா டென்ஷன் ஆவாங்க, வேணாம்மா.” நம்பி சொல்லிய பிறகுதான் தன் நிலையை உணர்ந்தாள் பெண்.
 
“துளசி.” உரிமையாக முதன் முறையாக அழைத்தான் ஆத்ரேயன். அந்த குரலில் துளசி திகைப்போடு திரும்பினாள் என்றால் நம்பி ஆவலோடு நண்பனைப் பார்த்தான்.
 
“அப்பா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும், நைட்டுக்கு நானே உங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வர்றேன், இப்ப கிளம்புங்க.” ஆதி சொல்ல அதற்கு மேல் துளசி மறுக்கவில்லை. சட்டென்று கிளம்பி விட்டாள். நம்பி கூட அதிசயத்து போனான்.
 
பாரதி தெருவை அவர்கள் சென்றடைந்த போது தெருவே அமைதியாக இருந்தது. அன்றைக்குக் காலையில் அங்கிருந்த கோலாகலம் மறைந்து இப்போது நிசப்தம் குடியிருந்தது.
 
நம்பியின் மனதுக்குள் வேதனைப் புகுந்து கொண்டது. ஆனால் அந்த உணர்வு சற்றும் இல்லாமல் துளசி வாழ்க்கைத் தப்பித்தது என்ற எண்ணம் அமைதியைக் கொடுக்க தனது ப்ளாக் ஆடியை துளசியின் வீட்டின் முன்பாக நிறுத்தினான் ஆதி.
 
தெருவில் போடப்பட்டிருந்த நாற்காலிகளை அப்புறப்படுத்தும் வேலையில் டேவிட் இறங்கி இருந்தார். வந்திருந்த விருந்தினர்கள் பெரும்பாலானோர் கலைந்து போயிருக்க ஒன்றிரண்டு சொந்த பந்தங்கள் மட்டுமே எஞ்சி இருந்தன.
 
அவர்களைக் கூட காமிலா, எமிலி, சரஸ்வதி என மூவரும் அவர்கள் வீடுகளுக்கு அழைத்து சென்று விட்டார்கள்.
 
துளசி வீடு திரும்பும்போது அவளுக்குத் தேவையில்லாத சங்கடங்கள் இருக்க கூடாது என்பதால் அனைவரையும் அப்புறப்படுத்தி இருந்தார்கள்.
 
கார் நிற்கவும் நம்பியின் ஃபோன் சிணுங்கவும் சரியாக இருந்தது.
 
காரிலிருந்து இறங்க போன துளசி கூட சற்று தாமதித்தாள். சட்டென்று தொலைபேசியை பார்த்த நம்பி பரபரப்பானான்.
 
“யாரு நம்பி?” இது ஆதி.
 
“என்னோட ஃப்ரெண்ட்தான்.” பதில் சொன்னவன் அவசர அவசரமாக அழைப்பை ஏற்றான்.
 
“ஹலோ மனோ! சொல்லுடா.”
 
“………….”
 
“எப்போ? நிஜமாத்தான் சொல்றியா?” நம்பியின் குரல் பதைபதைக்க கூட இருந்த இருவரும் உறைந்தார்கள். 
 
“என்னாச்சு நம்பிண்ணா?” பொறுமையற்று துளசி கூட இடைமறித்தாள். ஆனால் நம்பி தொலைபேசி பேச்சைத் தொடர்ந்தான்.
 
“என்னால நம்பவே முடியலை மனோ, அவன் அப்படிப்பட்ட பையன் இல்லைன்னு உனக்கே தெரியும், எஃப் ஐ ஆர் போட்டுடாதப்பா, நான் உடனேயே கிளம்பி வர்றேன்!” 
 
“எஃப் ஐ ஆர் ஆ? என்னாச்சு நம்பி?” ஏதோ விபரீதமான நிலைமை என்று புரிய ஆதி இப்போது அவசரப்பட்டான்.
 
“துளசி! நீ இறங்கி உள்ள போம்மா, ஆதி நீ காரை எடு!” கட்டளையிட்ட நம்பி வேறு யாரையோ தொலைபேசியில் அழைக்க தொடங்கினான்.
 
காரை விட்டு குழப்பத்தோடேயே இறங்கினாள் துளசி. அவள் இறங்கும் இடைப்பட்ட அந்த நேரத்தில் நம்பி ஆத்ரேயனிடம் அப்படி என்ன சொன்னானோ தெரியவில்லை. சட்டென்று ஆதியும் காரிலிருந்து இறங்கினான்.
 
“துளசி… உள்ள போகலாம்.” மலைத்து நின்றவளை வீட்டுனுள் அழைத்து சென்றான். ஒன்றும் புரியாமல் துளசி ஆதி கூடவே நடந்தாள்.
 
“என்னாச்சு?”
 
“ஒன்னுமில்லை, ஒரு சின்ன ப்ராப்ளம், நானும் நம்பியும் போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வர்றோம்.”
 
“அதான் ஏன்? என்னாச்சு? எங்கிட்ட சொல்ல கூடாதா?” அந்த வார்த்தைகளில் சிக்குண்டு ஆத்ரேயன் சில நொடிகள் உலகை மறந்து நின்றான். அவன் வாயிலிருந்து வார்த்தைகளும் தன்னை மறந்து வந்து வீழ்ந்தன.
 
“உங்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட நான் சொல்ல போறேன் துளசி!” உணர்ச்சி குவியலாக அவன் பேச துளசி திடுக்கிட்டு போனாள்.
 
எப்போதும் அவளை மேடம் என்றுதான் அவன் அழைப்பது வழக்கம். அவள் அவனிடம் ஒரு சின்ன முறுவலோடு இல்லையென்றால் தலையசைப்போடு நகர்ந்து விடுவாள். 
 
இந்த உரிமையான ஒருமை அவளை கதிகலங்க வைத்தது. அவள் முகத்தில் மாறுபாட்டை உணர்ந்த ஆதியும் எதையும் இனி மறைக்க விரும்பவில்லை.
 
அவளையே கூர்ந்து பார்த்தான். அன்றைய அலங்காரம் கலைந்து போயிருக்க, வாடிய சிவப்பு ரோஜா போல நின்றிருந்தது பெண்.
அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் என எந்த நிலையில் இருந்தாலும் ரோஜா அழகுதானே! வாடி நின்றிருந்தாலும் அவள் வாசம் நுகர அவன் மனம் துடித்தது. குரலைச் செருமி சரி பண்ணிக்கொண்டான்.
 
“ஈவ்னிங் ஹாஸ்பிடல் போய்ட்டு டாக்டர் கிட்ட பேசுறேன், டாக்டர் அப்பாவைப் பார்க்கலாம்னு பர்மிஷன் குடுத்தாங்கன்னா வந்து நைட்டுக்கு உன்னைக் கூட்டிட்டு போறேன், ரெடியா இரு.” இப்போதும் அந்த குரல் அவளோடு உரிமையாக வார்த்தையாடியது.
 
தலையை ஆட்டுவதைத் தவிர வேறெதுவும் அவளுக்குத் தெரியவில்லை. காரை நோக்கி திரும்பி நடந்த ஆதி கொஞ்சம் நிதானித்து மீண்டும் அவளிடம் வந்தான்.
“தேவையில்லாம எல்லாத்துக்கும் சும்மா சும்மா கவலைப்பட கூடாது, உனக்காக நாங்க எல்லாரும் இருக்கோம்.” என்றவன் சற்று இடைவெளி விட்டு,
 
“நான் இருக்கேன்… புரியுதா?” என்றான் சற்று அழுத்தமாக. துளசியின் இமைகள் அப்படியே நின்றுவிட்டன. அவன் இதழ்கடையோரம் லேசாக மலர கண்கள் லேசாக சுருங்கியது. 
 
“ஆதீ!” வெளியே இருந்து நம்பி குரல் கொடுக்க சட்டென்று நகர்ந்து விட்டான். அந்த ப்ளாக் ஆடி விரைந்து நகர்ந்தது.
 
***
 
போலீஸ் ஸ்டேஷனில் நின்றிருந்த ராபினின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான் நம்பி. ராபின் எதுவும் எதிர்த்து பேசவில்லை. அறையை வாங்கி கொண்டு அமைதியாகவே நின்றிருந்தான்.
 
“நம்பி…” ஆதிதான் நம்பியை தன் புறமாக கொஞ்சம் இழுத்து நிறுத்தினான்.
 
“என்ன காரியம் பண்ணி இருக்கான்டா இவன்?!” நம்பி ஆத்திரத்தில் கொதிக்க ஆத்ரேயன் எதுவும் பேசவில்லை. ஏனென்றால் நம்பியின் கோபத்தில் நியாயம் இருந்தது.
 
“ஏன்டா இப்பிடி பண்ணின?” ஆதியும் இப்போது ஆதங்கப்பட ராபினின் கண்களில் அனல் பறந்தது.
 
“ஆதி, இன்னைக்கு அவனைக் கொன்னு போட்டிருப்பேன், சுத்தி இருந்தவங்க தடுத்துட்டாங்க, இல்லைன்னா அவனுக்குச் சங்குதான்.” ராபின் கொதிப்பின் உச்சத்தில் இருந்தான்.
 
அவன் முகத்தில் ரௌத்திரம் இருந்தது. போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறோம் என்பதையும் மறந்து கர்ஜித்தான். நம்பிக்கு இப்போது தலை வேதனையாக இருந்தது.
இன்று துளசியின் நிச்சயதார்த்தம் இருந்ததால் வேலை ஒன்றைக் காரணம் காட்டி நண்பனைப் பார்க்க வெளியூர் போயிருந்தான் ராபின்.
 
என்னதான் பரந்த மனது இருந்தாலும் துளசியின் நிச்சயதார்த்தத்தைப் பார்க்கும் அளவிற்கு அவன் புத்தன் ஆகிவிடவில்லை. 
 
இந்நேரத்திற்கு ஃபங்ஷன் நடந்து முடிந்திருக்கும் என்று கணக்குப்போட்டு வீடு வந்தவனுக்கு அவன் தாய் சொன்ன தகவல்கள் தூக்கிவாரி போட்டன.
 
மாப்பிள்ளை வீட்டார் துளசியை தரித்திரம் அது இதுவென்று கண்டபடி பேசிவிட்டார்கள். இது போதாததற்கு இவர்கள் சுடு சொற்களைத் தாங்க முடியாமல் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வீழ்ந்த சங்கரபாணி அங்கிள் ஹாஸ்பிடலில் அனுமதிக்க பட்டிருக்கிறார் என்று தாய் சொன்ன மாத்திரத்தில் ராபின் வெறி பிடித்தவன் போல ஆகிவிட்டான்.
 
ஏற்கனவே அந்த பெண் தனக்குக் கிடைக்கவில்லையே என்று நெஞ்சுக்குள் கனன்று கொண்டிருந்த நெருப்பை எங்கே கொண்டு கொட்டுவது என்று புரியாமல் தவித்தவனுக்கு வடிகால் கிடைத்தால் போல ஆகிவிட்டது.
 
துணைக்குக் கூட யாரையும் அழைக்காமல் அருண் குமாரை தேடி கண்டுபிடித்தவன் அவனைப் புரட்டி எடுத்து விட்டான்.
 
ராபினின் நல்ல காலமோ இல்லை அருண் குமாரின் கெட்ட காலமோ… அவன் வேறு அப்போது தனியாக நின்றிருந்தான்.
 
லட்டு போல தனக்குக் கிடைத்த வாய்ப்பை ராபின் அழகாக பயன்படுத்தி கொண்டான். ஆனால் அடி வாங்கிய அருண் குமார் சும்மா இருந்து விடவில்லை.
 
நேராக போலீஸ் ஸ்டேஷன் வந்து புகார் செய்துவிட்டான். நல்ல வேளையாக அந்த போலீஸ் ஸ்டேஷனின் இன்ஸ்பெக்டர் நம்பியின் நெருங்கிய நண்பன்.
 
நம்பி வீட்டிற்கு எப்போதோ ஒரு முறை வந்தவன் ராபினை பார்த்திருக்கிறான். அந்த ஞாபகத்தில் அவன் ராபினை விசாரிக்க உண்மை அத்தனையும் தெரிய வந்தது.
 
நம்பியை அழைத்து தகவல் சொல்லிவிட்டு அவர்கள் வரும் வரைக்கும் காத்திருந்தான் மனோ. ஆனால் அதற்கு முன்னமே தான் செய்த குற்றத்தையும் அதற்கான காரணத்தையும் வெளிப்படையாக இன்ஸ்பெக்டரிடம் ஒப்புவித்திருந்தான் ராபின்.
 
“என்னடா நம்பி நடக்குது? பயல் சரியான லூசா இருப்பான் போல இருக்கு?!” 
 
“மனோ, ரொம்ப காலமா சொந்த பந்தங்களைப் போல பழகிட்டோம், மாப்பிள்ளைன்னு சொல்லிக்கிட்டு வந்தவன் மேலயும் தப்பு இருக்குப்பா.”
 
“அது எனக்கும் புரியுது நம்பி, ஆனா இப்போ அவன் கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டானே, நான் என்ன பண்ணுறதுன்னு நீயே சொல்லு!” ஒரு இன்ஸ்பெக்டராக மனோ கேட்ட போது நம்பிக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை.
 
“எஃப் ஐ ஆர் போடாம ரொம்ப நேரம் கடத்த முடியாது நம்பி…”
 
“புரியுது மனோ.” கையால் தலையைத் தாங்கிக்கொண்டு நிற்கும் நண்பனை யோசனையோடு பார்த்தான் ஆதி. அவன் மூளைக் கொஞ்சம் வேகமாக வேலைச் செய்தது. நேராக இன்ஸ்பெக்டரிடம் போனான்.
 
“சார், மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஜவுளிங்கிற பேர்ல பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு ரெண்டு லட்சத்துக்கு பில் வெச்சிருக்காங்க.” 
 
“ஓ… இது எப்போ நடந்தது?”
 
“இந்த வாரம்தான், ஜவுளி எடுக்க போகும் போது நானும் அங்க இருந்தேன்.”
 
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அவங்களுக்கும் ஜவுளி எடுத்தாங்களா?”
 
“ஆமா சார், ஆனா பொண்ணோட அப்பாதான் எல்லா பில்லுக்கும் பணம் குடுத்தாரு.”
 
“ம்…” தாடையைத் தடவிக்கொண்டு லேசாக யோசித்தான் மனோ. நம்பியின் முகத்திலும் இப்போது குழப்பமே இருந்தது.
 
“நம்பி, இந்த பாயிண்ட்டை வெச்சு சமரசம் பண்ணலாம், ஆனா… ரெண்டு லட்சம்!‌ தொகைக் கொஞ்சம் பெருசா இருக்கே, உனக்கு ஓகே யா?” போலீஸ் நண்பனின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று நம்பிக்கு புரியவில்லை.
 
இரண்டு லட்சம் என்பது பெரிய தொகை அல்லவா! அத்தோடு அது துளசியின் பணம். அதை அவர்களிடம் கேட்காமல் இந்த முரட்டுப்பயல் செய்த காரியத்திற்காக விட்டுக்கொடுப்பது என்பது நியாயமா?!
 
“சம்பந்தப்பட்டவங்க கிட்ட பேசு நம்பி, அதுக்கப்புறமா முடிவெடுக்கலாம்.” மனோ சொல்ல அதுதான் சரியென்பது போல நம்பியும் ஃபோனை எடுத்தான்.
 
“நம்பி, கொஞ்சம் பொறு.” அவசரமாக சொன்ன ஆதி நம்பியின் கையைப் பிடித்து அப்பால் அழைத்துக்கொண்டு போனான்.
 
“என்னடா?”
 
“நம்பி, இந்த பிரச்சனை எதுவும் துளசிக்கோ இல்லை சங்கரபாணி அங்கிளுக்கோ இப்ப தெரிய வேணாம்.”
 
“ஏன்?”
 
“புரிஞ்சுதான் பேசுறியா? நொந்து போய் ஹாஸ்பிடல்ல படுக்கிறாரு அந்த மனுஷன், அவருக்கிட்ட போய் இதையெல்லாம் சொல்ல போறியா? ஒட்டிக்கிட்டு இருக்கிற கொஞ்ச நஞ்ச உசிரும் ஒரேயடியா போயிரும்!”
 
“அதுவும் சரிதான்… இந்த முட்டாள் இப்பிடியொரு ஏழரையைக் கூட்டுவான்னு நான் நினைக்கலையே ஆதி!”
 
“அது முடிஞ்சு போன கதை, அதை விட்டுட்டு ஆகிறதைப் பார்ப்போம்.”
 
“பணத்துக்கு என்ன முடிவுப்பா? அதுக்கு நாம எப்பிடி முடிவெடுக்கிறது?”
 
“நான் பணத்துக்குப் பொறுப்பு நிக்கிறேன் நம்பி.”
 
“ஆதி!”
 
“இப்போதைக்கு ராபினை இந்த பிரச்சனையில இருந்து வெளியே கொண்டு வரணும், அதேநேரம் சங்கரபாணி அங்கிளுக்கும் எந்த தொல்லையும் வரக்கூடாது.”
 
“ம்…”
 
“அதுக்கு இதைத்தவிர வேற வழியில்லை, உன்னோட ஃப்ரெண்ட் தெரிஞ்சவர் எங்கிறதுக்காக இவ்வளவு ஹெல்ப் பண்ணுறார், அதுக்காக அவரை நாம ரொம்பவும் சிரமப்படுத்த கூடாது.”
 
“ஆமா ஆதி.”
 
“அதனாலதான் சொல்றேன், நான் சொல்லுற மாதிரி பண்ணு நம்பி.” ஆதியின் ஆலோசனையைச் சிறிது நேரம் ஆராய்ந்தான் நம்பி.
எப்படி பார்த்தாலும் இதைவிட ஒரு சிறந்த தீர்வு அவனுக்கும் தெரியவில்லை.
பணம்தானே! பிற்பாடு அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
 
இல்லாவிட்டால் ஆதிக்கு நாம் அந்த பணத்தில் பாதியைக் கொடுத்து விடலாம்.
மனதிற்குள் முடிவு செய்து கொண்டு நகரப்போன நம்பியை நிறுத்தினான் ஆத்ரேயன்.
 
“நம்பி, அந்த பரதேசியைக் கூப்பிட்டு பேசும் போது ராபினை செல்லுக்குள்ள போட சொல்லு.”
 
“டேய்!”
 
“கொலை வெறியில இருக்கான், அவனைத் திரும்பவும் இங்க பார்த்தான்… அவ்வளவுதான்!”
 
“நீ எங்கடா சொல்லிட்டு போறே?” நகர்ந்த ஆதியை தடுத்தது நம்பியின் குரல். இரண்டெட்டு நடந்து போன ஆதி அங்கேயே நின்று திரும்பி பார்த்தான்.
 
“இங்க நான் இருந்தேன்னு வை… ராபின் செய்யாம விட்டதை நான் செஞ்சிடுவேன்.” சொல்லிவிட்டு மளமளவென்று காரை நோக்கி போய்விட்டான். நம்பி திக்பிரமைப் பிடித்து நின்றுவிட்டான்.
 
சற்று நேரத்தில் அருண் குமார் மட்டும் தனியாக வந்தான். நெற்றியில் ஒரு பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது. முகம் நன்றாக வீங்கி இருந்தது. 
 
அவனைப் பார்த்த மாத்திரத்தில் தோன்றிய வெறுப்பை மறைத்து கொண்டு நம்பி பொறுமையாக நின்றிருந்தான். பெண் விஷயம், அதுவும் துளசி தன் தங்கை. காரியத்தை மிகவும் நூதனமாக கையாள வேண்டும்.
 
இன்ஸ்பெக்டர் மனோ பணத்தைப் பற்றிய பேச்சை எடுக்கவும் முதலில் அருண் குமார் மறுத்தான். ஒரு போலீஸ் காரனாக நான்கைந்து வார்த்தைகளை மனோ காரமாக சொன்னபோது பயல் சுருண்டு போனான்.
 
“நீங்க பண்ணியிருக்கிறது பெரிய தப்பு, அந்த பொண்ணு துளசி உங்க மேல புகார் குடுத்துச்சுதுன்னா பெரிய பிரச்சனை ஆகிடும், அதுக்காக உங்க மேல அந்த பையன் கை வெச்சதை நான் சரின்னு சொல்லலை, அதுக்குத்தான் இந்த சமரசம், புரிஞ்சுதா?” 
 
“…………….” அருண் குமார் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தான்.
 
“இதோட ரெண்டு தரப்பும் இந்த பிரச்சனையை மறந்து விலகி போயிடணும், இதுக்கு மேல பழி வாங்குறேன், பல்லைப் புடுங்குறேன்னு கிளம்பினதா கேள்விப்பட்டேன்…” மனோவின் குரல் உச்ச ஸ்தாயியில் நிற்க,
 
“இல்லை சார், அப்பிடி எதுவும் நடக்காது.” சொல்லிவிட்டு அருண் குமார் போய்விட்டான். 
 
“நம்பி…”
 
“சொல்லு மனோ.”
 
“எனக்கு இந்த ராபின் பையன் மேல நம்பிக்கை இல்லை.”
 
“ஓ… அப்பிடியா சொல்றே!”
 
“ஆமா, வந்த நேரத்துக்கு வெட்டுவேன், குத்துவேன்னே பேசுறான், அதையும் தைரியமா எங்கிட்டயே சொல்றான்.”
 
“ம்…” நம்பியின் முகத்தில் கவலைத் தெரிந்தது.
 
“கொஞ்ச நாளைக்கு அவனை எங்கேயாவது வெளி நாட்டுக்கு அனுப்பிடுங்க.”
 
“என்ன மனோ இப்பிடி சொல்றே?!”
 
“நான் சொல்றதைக் கேளு நம்பி, எனக்கு அதான் சரின்னு தோணுது, இவன் கண்ணைப் பார்த்தாலே தெரியுது, அந்த அருண் குமாரை திரும்பவும் தேடி போய் வம்பு வளர்ப்பான்னு.”
 
“ஓ… நான் ஆதிக்கிட்ட பேசுறேன் மனோ, எனக்கு அந்த அளவுக்கெல்லாம் சட்டுப்புட்டுன்னு காரியத்தை முடிக்க சக்தி இல்லை, அவனுக்கு யாரையாவது தெரிஞ்சிருக்கும்.”
 
“நல்லது, சீக்கிரமா என்னன்னு பாரு.”
 
“தாங்ஸ்டா மனோ!” சொல்லிவிட்டு நம்பி போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்த நேரம் சரியாக அந்த ப்ளாக் ஆடியும் அங்கே வந்து நின்றது.
 
***
 
மாலை ஆறு மணி போல ஆதி வீட்டை விட்டு வெளியேறினான். எதிரே நம்பி இவனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
 
“ஆதி, ஹாஸ்பிடல்தானே போறே?”
 
“ஆமா, ஏன்?”
 
“துளசியை கூட்டிண்டு போறியா?”
 
“ஆமா.”
 
“அப்போ நானும் வர்றேன்.”
 
“எதுக்கு?”
 
“எதுக்கா? என்னடா கேள்வி இது?”
 
“அதான் இருபத்தி ஆறு வருஷம் தங்கையை வளர்த்துட்டீங்க இல்லை, கொஞ்சம் ஒதுங்குங்க!” ஒரு தினுசாக சொன்ன ஆதி நம்பியின் நெஞ்சில் கை வைத்து லேசாக தள்ளிவிட்டு காம்பவுண்ட்டை தாண்டி வெளியே வந்தான்.
 
நம்பிக்கு நண்பனின் செய்கைகள் அனைத்தும் விசித்திரமாக இருந்தன. ஏதோ ஒரு மாற்றம் ஆத்ரேயனிடம் தெரிவதை அவன் புரிந்து கொண்டான். 
 
துளசியிடம் பயல் கொஞ்சம் அதிக உரிமை எடுத்துக்கொள்வது போல நம்பிக்கு தோன்றியது. அதை அவன் தவறாக நினைக்கவில்லை. இந்த தெருவில் இருக்கும் யாரும் யாரையும் என்றைக்கும் தப்பாக நினைத்தில்லையே!
 
அப்படியிருக்க நம்பி மட்டும் ஆதியை சந்தேகப்படுவானா? அதுவும் துளசியை இணைத்து?! ஆனால் இப்போது நம்பிக்கு சந்தேகம் வந்தது. ஆதியின் மனதில் என்ன இருக்கிறது?
 
ஆதி எத்தனைப் பொறுப்பான பிள்ளை என்று நம்பிக்கு இந்த ஒரு வாரத்திலேயே தெரிந்து போனது. நண்பர்கள் எல்லோரும் இரவு வேளைகளில் கூடிப்பேசி சிரிப்பதுண்டு. அப்போதெல்லாம் ஆதி தனது பிஸினஸ் பற்றியெல்லாம் சொல்வான்.
 
நம்பிக்கு அப்போதெல்லாம் ஆதிமேல் பெரியதொரு மரியாதைத் தோன்றும். எத்தனைப் பெரிய தொழிலை இலகுவாக தன் அண்ணனிடம் தூக்கி கொடுத்திருக்கிறான்! அதற்கு எத்தனைப் பெரிய மனது வேண்டும்! 
 
ஆனால் அதே ஆதி… துளசி மேல் நாட்டம் கொள்கிறானா? அப்படித்தான் நம்பிக்கு தெரிந்தது. ஆதியிடம் பேச வேண்டும். தானாக எந்த முடிவிற்கும் வந்துவிட கூடாது.
தான் எதையோ நினைத்து கடைசியில் ஒன்றுமில்லை என்று ஆகிவிட்டால் ஆதி வேதனைப்படுவான். ஆனால் ஒன்றுமில்லாதது போலவும் தோன்றவில்லையே!
 
நம்பியின் சிந்தனை இப்படி வலுக்க அங்கே துளசியின் வீட்டிற்குள் ஒரு உரிமையோடு நுழைந்தான் ஆத்ரேயன். பெண் பின்கட்டில் ஏதோ வேலையாக நின்றது.
 
“துளசி…” அவன் அழைக்க சட்டென்று திரும்பினாள்.
 
“ஹாஸ்பிடல் போலாமா?”
 
“இதோ…” அங்கு கிடந்த டவலில் கையைத் துடைத்தவள் சுடிதார் துப்பட்டாவைச் சரி பண்ணிக்கொண்டு முன்னே வந்தாள்.
 
“நம்பிண்ணா வரலை?” அவள் முகத்தில் இப்போது கேள்வி இருந்தது.
 
“இல்லை… இப்போ எதுக்கு நம்பி?” அவன் கேட்க அவள் முகத்தில் வியப்பு தெரிந்தது.
என்ன மாதிரியான கேள்வி இது? இதற்கு என்னவென்று அவளால் பதில் சொல்ல முடியும்?!
 
“இல்லை… நம்பிண்ணாவும் வருவாங்கன்னு எதிர்பார்த்தேன்.”
 
“இல்லை, நாம ரெண்டு பேரும்தான் போறோம்.” கத்தரித்தால் போல வந்தது பதில்.
 
“ஓ…” சொன்னவள் காரின் பின் கதவைத் திறந்து கொண்டு ஏறி உட்கார்ந்தாள். ஆதியின் முகம் கடுகடுத்தது.
 
“ஏன்? முன்னாடி உட்கார மாட்டீங்களா?”
 
“இல்லை… யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க.”
 
“ஸோ… முன்னாடி உட்கார்றதுல உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைன்னு நான் எடுத்துக்கலாமா?” கிடுக்கிப்பிடியாக அவன் பேச்சுக்கள் இருக்க துளசி திணறி போனாள். சற்று நேரம் அவள் தவிப்பைக் கண்ணாடியில் பார்த்து ரசித்தவன் ஒரு சிறு முறுவலோடு காரை நகர்த்தினான்.
 
“இன்னைக்கு என்ன பிரச்சனை?” பெண் மெதுவாக ஆரம்பித்தது. 
 
“பிரச்சனையா? என்ன பிரச்சனை? ஒன்னுமில்லையே?”
 
“இல்லை… நம்பிண்ணாக்கு ஃபோன் கால் வந்துதே, அதான் கேட்டேன்.”
 
“ஓ… அதுவா? அது நம்பியோட ஃப்ரெண்ட் ஒருத்தனுக்கு ஏதோ ப்ராப்ளம் போல, அது எதுக்கு இப்போ நமக்கு?”
 
“இல்லை, சும்மாதான் கேட்டேன்.”
 
“ம்… அடுத்த வாரம் ஸ்கூல் இருக்கா என்ன?”
 
“ஆமா.” 
 
“வழமையா எப்பிடி போவே ஸ்கூலுக்கு? பஸ்லயா?” அவன் ஒருமை இப்போது அவளுக்குப் பழகியிருந்தது.
 
“ஸ்கூல் வேன் வரும்.”
 
“வெளியே எங்கேயும் இனி தனியா போக வேணாம் என்ன?”
 
“ஏன்?”
 
“ஏன், எதுக்குன்னு கேள்வி கேக்காம சொன்னா புரிஞ்சிக்கணும் துளசி.” அவன் குரலில் லேசான சலிப்பு தொனிக்க துளசி மௌனமாகிவிட்டாள்.
 
“என்ன பேச்சைக் காணோம்?”
 
“ஒன்னுமில்லை.” பதில் மெல்லிய குரலில் வந்தது. ஆத்ரேயன் சிரித்துக்கொண்டான். மனம் லேசானது போல இருந்தது. அந்த ப்ளாக் ஆடி புது உற்சாகத்தோடு ஹாஸ்பிடலை நோக்கி போனது.
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!