நிலா பெண் 7

 
அன்று ஆத்ரேயனின் வீடு கலகலவென்றிருந்தது. அந்த தெருவில் குடியிருந்த அனைவரையும் அழைத்து பகல் விருந்தொன்று வைத்திருந்தான் ஆதி.
 
நான்வெஜ் சமையலில்தான் அவன் கில்லாடி என்பதால் நம்பி குடும்பத்தாருக்குத் தரமான ஹோட்டல் ஒன்றிலிருந்து சைவ உணவு வரவழைத்திருந்தான்.
 
“ஏன்டா ஆதி, அப்பிடி என்னதான் சமைச்சிருக்கே?‌ வாசனை ஆளையே தூக்குதே?!”
 
“மட்டன் பிரியாணி வித் க்ரில்ட் சிக்கன், டேஸ்ட் பண்ணுறேளா பாட்டி?” குறும்பாக பாட்டியை நோக்கி கண் சிமிட்டினான் ஆதி.
 
“ஈஷ்வரா!” பாட்டி அலற,
 
“ஈஷ்வரா… வானும் மண்ணும் ஹான்ட் ஷேக் பண்ணுது உன்னால் ஈஷ்வரா…” இம்ரான் வேண்டுமென்றே சத்தமாக பாடினான்.
 
“ஏன்டி காமிலா, இந்த கடன்காரனை எந்த நேரத்துலடீ நீ பெத்து தொலைச்சே?!”
 
“ஏன் பாட்டி, நோக்கு அது தெரியாதோன்னோ?” இம்ரான் இப்போது மீண்டும் பாட்டியை வம்புக்கு இழுக்க கிச்சனில் இருந்த பூரி கட்டையை எடுத்தார் பாட்டி.
 
“தாத்தா… உங்க ஆம்படையான் கிட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்கோ!” கூவியபடி நம்பியின் தாத்தாவின் பின்னால் போய் ஒளிந்து கொண்டான் இம்ரான்.
 
அந்த இடமே இப்போது சிரிப்பால் அதிர்ந்தது. பாட்டி கூட சிரித்துக்கொண்டே பூரி கட்டையால் இம்ரானின் முதுகில் ஒரு அடி வைத்துவிட்டுத்தான் ஓய்ந்தார்.
 
சாப்பிடும் நேரம் நெருங்கி விட்டதால் நம்பி குடும்பத்திற்கான உணவை ஹால் சோஃபாவில் பரிமாறிவிட்டு, மற்றையவர்களுக்கு டைனிங் டேபிளை ஏற்பாடு பண்ணி இருந்தான் ஆதி.
 
கிச்சனிலேயே ஒரு பெரிய டைனிங் டேபிள் ஆறு நாற்காலிகளோடு இருந்தது. பெரியவர்கள் அனைவரும் முதலில் சாப்பிட அமர்ந்து விட்டார்கள்.
 
“பாய் வீட்டு பிரியாணிதான் பிரமாதமா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன், இங்க ஆதி வீட்டு பிரியாணியும் அமர்க்களமா இருக்கே!” ஆச்சரியப்பட்டபடி சாப்பிட்டார் டேவிட்.
 
எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட எஞ்சியிருந்தது ஆதியும் துளசியும் மட்டும்தான்.
 
“நீ உக்காரு துளசி.”
 
“பரவாயில்லை, நீங்க உக்காருங்க, நான் பரிமாறுறேன்.”
 
“இல்லையில்லை, நீயும் உக்காரு, ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்.” ஆதி வற்புறுத்த சங்கடத்தோடே அமர்ந்தாள் துளசி. 
 
அவள் ப்ளேட்டில் முதலில் பரிமாறிவிட்டு தனக்கும் உணவை எடுத்துக்கொண்டான் ஆதி. உணவை ருசி பார்த்த துளசி ஆச்சரியப்பட்டு போனாள்.
 
“பிரியாணி சூப்பர்!”
 
“ம்ஹூம்!”
 
“கையில ஏகப்பட்ட வித்தை வெச்சிருக்கீங்க போல!”
 
“ஏகப்பட்டதுன்னா?”
 
“அங்க என்னடான்னா விவசாயத்தைப் பத்தி பேசுறீங்க, இங்க என்னடான்னா சமையல்ல பின்னுறீங்க… இன்னும் என்னெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க?” முகத்தில் புன்னகை மின்ன தன்னையும் மீறி அவனிடம் அன்று சற்று அதிகமாகவே பேசியது பெண்.
 
“நீ ஓகே சொல்லு துளசி, நான் தெரிஞ்சு வெச்சிருக்கிறதை எல்லாம் உனக்குச் சொல்லி குடுக்கிறேன்.” அவன் பதிலில் அவள் மூச்சுக்காற்று சற்றே தடுமாறியது. கை பிரியாணியை அளைந்து கொண்டிருக்க பேச்சற்று போனாள் துளசி.
 
வார்த்தைகளை விட்ட பிறகுதான் ஆதிக்கும் அவன் பேச்சின் ஆழம் புரிந்தது. அவளைத் தன் உடமை என்று நினைத்த காரணத்தினாலோ என்னவோ அவளிடம் அனைத்தையும் இலகுவாக பேச அவனால் முடிந்தது.
 
ஆனால் அவள்?‌! அவளுக்கு இன்னும் சிறிது கால அவகாசம் தான் கொடுக்க வேண்டும் என்று அவனுக்குப் புரிந்தாலும் இந்த வாய் அவசரப்பட்டு விடுகிறதே!
 
ஹாலில் இருந்த படி இவர்கள் மேல் ஒரு கண்ணை வைத்திருந்த நம்பியை திரும்பி பார்த்தான் ஆதி.
இவன் அழைப்பை உணர்ந்தது போல அவனும் சட்டென்று எழுந்து டைனிங் டேபிளுக்கு வந்தான்.
 
“என்ன? ரெண்டு பேரும் இன்னும் சாப்பிட்டு முடிக்கலையா?” 
 
“நான் முடிச்சுட்டேன், உன்னோட தங்கைதான் இன்னும் பாதி கூட முடிக்கலை.” சொல்லிவிட்டு ஆதி எழுந்து அப்பால் போய் விட்டான். 
 
தங்கையின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான் நம்பி.‌ அங்கே தெரிந்த லேசான வெட்கச்சிவப்பு அவனைச் சிந்திக்க வைத்தது.
 
“சாப்பிடு துளசிம்மா, அப்பிடி என்ன யோசனை?”
 
“அண்ணா…” பெண் எதையோ சொல்ல தடுமாறியது.
 
“என்ன துளசி? எதை அண்ணாக்கிட்ட சொல்ல இப்பிடி தயங்குறே?”
 
“இல்லை… ஊருக்குப் போகணும்னு அவங்க சொன்னாங்க.” அந்த குரலில் அவ்வளவு தயக்கம்.
 
“யாரு? ஆதியா?”
 
“ம்… ஆமா.”
 
“எதுக்காம்?”
 
“இங்கேயே ஏதோ ஃபார்ம் மாதிரி பண்ண போறாங்க போல.”
 
“ஓ…” நம்பியிடம் துளசி இந்த விஷயத்தைச் சொல்லி கொண்டிருக்கும் போது ஆதியும் ஹாலில் இருந்த அனைவரிடமும் அதே விஷயத்தை விளக்கி கொண்டிருந்தான்.
 
‘பயல் அவ்வளவு தூரத்துக்கு வந்துட்டானா?!’ மனதுக்குள் நினைத்ததை வெளியில் சொல்லவில்லை நம்பி.
 
“அப்பாக்கிட்ட நிலத்தைப் பத்தி பேசினாங்க.”
 
“நல்ல விஷயம்தானே துளசி.”
 
“ம்… ஊருக்குப் போகும்போது நீயும் வா ன்னு கூப்பிட்டாங்க.”
 
“ஓ… நீ எதுக்காம்?” சாதாரணம் போல கேட்டுவிட்டு தங்கையின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான் நம்பி. அந்த கண்கள் அலைப்புற்றனவே ஒழிய பதில் ஏதும் வரவில்லை.
 
“ஒருவேளை உனக்கு எல்லா இடமும் நல்லா தெரிஞ்சிருக்கும் ன்னு நினைச்சிருக்கலாம், சங்கரபாணி அங்கிளால இப்போ எங்கேயும் ட்ராவல் பண்ண முடியாதில்லையா?”
 
“அதுக்கு நான் எதுக்கு நம்பிண்ணா? நீங்க கூட போங்க.”
 
“ஏம்மா? எதுக்காக இப்போ ஆதியை இவ்வளவு அவாய்ட் பண்ணுறே நீ?” கேட்ட அண்ணனை இப்போது பெண் தீர்க்கமாக பார்த்தது.
 
“இப்பவே அவாய்ட் பண்ணிட்டா பின்னாடி வர்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் இல்லையா ண்ணா?” 
 
“அவன் என்னைக்கும் உனக்கொரு பிரச்சனையா இருக்க மாட்டான் துளசிம்மா.” நயமாக சொன்னான் நம்பி.
 
“போதும் ண்ணா, நெருப்பு சுடும்னு தெரிஞ்சுக்கிட்டே விரலைக் கொடுக்க நான் தயாரில்லை.”
 
“நெருப்புன்னு ஏன் நினைக்கிறே? நீ இளைப்பார்ற நிழல்னு அவனை நினைக்கலாமே!” இப்போது சட்டென்று துளசி நிமிர்ந்து தன் அண்ணாவைப் பார்த்தாள்.
 
‘எனக்கு எல்லாம் தெரியும்.’ என்பது போல அவன் புன்னகைத்தான்.
 
“நம்பிண்ணா எது செஞ்சாலும் அது துளசியோட நன்மைக்காகத்தான் இருக்கும், அவன் கூப்பிட்டா நீ கிளம்பி அவங்கூட போ.”
 
“என்னண்ணா, நீங்களே இப்பிடி சொல்றீங்க?!”
 
“ஆதி யார்னு எனக்குத் தெரியும் துளசி, என் வயசுல இருக்கிற பசங்களோட மனசுல என்ன இருக்குன்னு அவங்க கண்ணை வெச்சே என்னால சொல்ல முடியும்.”
 
“அதுக்காக… அவங்ககூட…”
 
“தனியா போக சங்கடமா இருந்தா நானும் கூட வர்றேன், ரெண்டு நாள் லீவு போட்டுட்டு என் தங்கைக்காக
ஊருக்கு வர்றது தப்பேயில்லை.”
 
“நீங்களே இப்பிடி சொன்னா எப்பிடி?”
 
“நான்தான் சொல்றேன், அவன் சொல்ற படி கேளு, அவன் ரொம்ப நல்லவன், இப்போதைக்கு இவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்.” நம்பி அத்தோடு நிறுத்தி கொண்டான். மேற்கொண்டு எதுவும் அவன் பேச முடியாது. பேசவும் கூடாது.
 
சற்று நேரத்திலெல்லாம் அனைவரும் கலைந்து போய் விட்டார்கள். சோஃபாவில் சிந்தனையோடு அமர்ந்திருந்தான் ஆதி.
 
“என்ன? ஐயா எங்கிட்ட எதுவும் சொல்லாம பெரிய பெரிய விஷயங்களைப் பத்தியெல்லாம் மாமனார் கிட்ட பேசி இருக்கீங்க?” குறைப்பட்டபடி வந்து அமர்ந்தான் நம்பி.
 
“அதான் மாமனார் ன்னு சொல்லிட்டே இல்லை, இனிமே நடுவில நீ எதுக்கு நந்தி மாதிரி?” நமுட்டு சிரிப்போடு கேட்டான் ஆதி.
 
“அடப்பாவி! டேய்!”
 
“ஹா… ஹா…” அடக்க முடியாமல் வாய்விட்டு சிரித்தான் ஆதி.
 
“என்ன நடக்குது ஆதி?” இப்போது உண்மையான அக்கறையோடு கேட்டான் நம்பி. சற்றுநேரம் ஆத்ரேயன் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தான்.
 
“இதெல்லாம் சரிப்பட்டு வருமா ஆதி? உன்னோட வீட்டுல இதையெல்லாம் ஏத்துக்குவாங்களா?” நம்பியின் குரலில் கவலைத் தெரிந்தது.
 
“என்னோட பேச்சுக்கு எங்க வீட்டுல எந்த மறுப்பும் இருக்காது, என்னோட கவலையெல்லாம் உன்னோட அருமைத் தங்கையை எப்பிடி சம்மதிக்க வெக்கிறதுங்கிறதுதான்.”
 
“இங்க ஒரு பொண்ணைப் பார்த்தே சரி, ஆனா இங்கேயே தங்கிடுறதுன்னா சம்மதிப்பாங்களா?”
 
“கொஞ்சம் கஷ்டந்தான் நம்பி, அதுக்காக துளசியை விட்டுக்குடுக்க
முடியுமா?”
 
“இன்னும் கொஞ்சம் நிதானமா யோசி ஆதி.”
 
“துளசி விஷயத்துல இனி யோசிக்க எதுவுமே இல்லை நம்பி, எடுத்த முடிவு எடுத்ததுதான், என்னோட கவலையே இப்போ வேறடா?”
 
“என்னாச்சு?”
 
“டைனிங் டேபிள்ல தலையைக் குனிஞ்சுக்கிட்டு என்னமோ உங்கிட்ட ரகசியம் பேசினாளே உன்னோட தங்கை, என்னவாம்?” ஏதோ வில்லங்கமாக அதுவும் தனக்கு எதிராகத்தான் ஏதாவது அவள் பேசி இருப்பாள் என்று தெரிந்தவன் போல கேட்டான் ஆதி.
 
“ஹா… ஹா…” இப்போது சிரிப்பது நம்பியின் முறையாகிற்று.
 
“சொல்லிட்டு சிரி.” கோபப்பட்டான் ஆதி.
 
“நீயே கண்டுபிடி பார்ப்போம், என் தங்கையைப் பத்தி நீ எவ்வளவு தூரம் தெரிஞ்சு வெச்சிருக்கேன்னு நானும் பார்க்கிறேன்.”
 
“வேற என்னத்தைச் சொல்லி இருக்க போறா? ஊருக்குப் போக நீயும் கண்டிப்பா வரணும்னு சொன்னேன், அதை உங்கிட்ட சொல்லி புலம்பி இருப்பா.”
 
“கரெக்ட்! அது மட்டுமில்லை.”
 
“வேற என்னவாம்?”
“அவ வரமாட்டாளாம், நீங்க போங்கண்ணா ன்னு சொன்னா.”
 
“ஓ… அவ வரமாட்டாளாமா? கார்ல அள்ளிப்போட்டுக்கிட்டு போறேனா இல்லையா பாரு!”
 
“டேய்! ஒரு அண்ணன்கிட்ட பேசுற மாதிரி பேசுடா.”
 
“மவனே! கார்ல நீ ஏறின, கொலைதான் விழும்!”
 
“அப்பிடியில்லை ஆதி, கொஞ்சம் யோசிச்சு பாரு, நீயும் துளசியும் போனா அன்னைக்கே திரும்பி வந்திடணும், ஆனா நானும் கூட வந்தேன்னு வை, ரெண்டு நாள் தங்கி வரலாமில்லை.”
 
“சூப்பர் ஐடியா நம்பி! அவங்க அப்பா இதுக்குச் சம்மதிப்பாரா?”
 
“பாட்டியையும் கூப்பிடலாம், அப்போ ஓகே.”
 
“பாட்டியா?!”
 
“அவங்களை நான் கவனிச்சுக்கிறேன், நீ கவலைப்படாதே.”
 
“ம்…” ஆதியின் மனதுக்குள் உற்சாகம் பீறிட்டது. தான் மட்டும் உற்சாகப்பட்டு என்ன செய்வது? அவளிடம் அதற்கான எந்த எதிர்விளைவும் இல்லையே!
 
***
 
பாடசாலைக்கு இந்த வாரம் முழுவதும் லீவ் போட்டுவிட்டாள் துளசி. அவள் மனது எப்படி உணர்கிறது என்று அவளுக்கே புரியவில்லை!
 
நிச்சயதார்த்தம் நின்று போனது ஒரு வகையில் திருப்தியாக இருந்தது. இப்படிப்பட்ட மனிதர்களோடு எப்படி அவளால் வாழ்ந்திருக்க முடியும்?!
 
இன்னொரு வகையில் வாழ்க்கை மீதிருந்த கொஞ்ச நஞ்ச பிடிப்பும் காணாமல் போயிருந்தது.
 
எல்லாவற்றின் மீதும் இனம்புரியாத ஒரு வெறுப்பு தோன்ற ஆரம்பித்திருந்தது.
 
அன்றைக்கு ஆசிரமத்திற்கு வந்திருந்தாள் துளசி. ஆசிரமம் என்றால் ஏழு குழந்தைகள் கொண்ட காப்பகம் அது. அவள் பாடசாலையில் கற்பிக்கும் ஒரு சக ஆசிரியையின் சகோதரி இந்த காப்பகத்தை நடத்துகிறார்.
 
தகவல் தெரிந்த நாளிலிருந்து அவ்வப்போது துளசி இங்கே வருவதுண்டு. ஏழு குழந்தைகள் மாத்திரம் இருப்பதால் அனைவருக்கும் வரும்போது ஏதாவது வாங்கி வருவாள். 
 
பெரும்பாலும் வார இறுதி நாட்களில்தான் அங்கு வருவாள். ஒரு நாள் முழுவதும் யாருமற்ற அந்த பிஞ்சு முகங்களோடு செலவழித்து விட்டு போவாள்.
 
இன்றைக்கும் வழமைபோல காலையிலேயே வந்துவிட்டாள்.
 
வரும்போது கையில் தின்பண்டங்களோடு வந்தவளுக்கு எப்போதும் போல இன்றும் நல்ல வரவேற்பு.
 
மேத்ஸில் குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு முதலில் விளக்கம் கொடுத்தவள் பிற்பாடு கொஞ்ச நேரம் அவர்களோடு விளையாடினாள். 
 
மனது லேசாக சமன்பட்டது போல இருந்தது. இந்த குழந்தைகளுக்கும் தனக்கும் அப்படியொன்றும் பெரிதாக வித்தியாசம் இல்லை என்று எண்ணிய மாத்திரத்திலேயே அவள் மனம் திடுக்கிட்டு போனது.
 
‘ஏன் இப்படியெல்லாம் உணர்கின்றோம்?! எதை எதிர்பார்த்து இழந்த சோகத்தில் என் மனம் இப்படியெல்லாம் சலித்து கொள்கிறது?!’
 
“துளசி!”
 
“சொல்லுங்கக்கா.” காப்பகத்தின் உரிமையாளரை அவள் அப்படித்தான் அழைப்பாள். அவளை விட நான்கைந்து வயதுதான் பெரியவராக இருப்பார். 
 
வாழ்க்கை அவருக்கு அனைத்தையும் தாராளமாக வழங்கி இருந்ததால் ஏழு ஏழைக் குழந்தைகளுக்கு அவர் வாழ்க்கையை வழங்கி இருந்தார்.
 
“வெளியே கார் ஒன்னு ரொம்ப நேரமா நிக்குதும்மா.”
 
“யாரதுக்கா?”
 
“தெரியலை துளசி, கேட்டதுக்கு உனக்குத் தெரிஞ்சவங்கன்னு சொல்லி இருக்காங்க.”
 
“எனக்குத் தெரிஞ்சவங்களா? அப்பிடி யாரையும் நான் வர சொல்லலையேக்கா?”
 
“ஒரு ப்ளாக் ஆடி துளசி.”
 
“ப்ளாக் ஆடியா?” இப்போது துளசி திடுக்கிட்டு போய் எழுந்தாள்.
 
“தெரிஞ்சவங்களா துளசி?”
 
“ஆமாக்கா, எங்க தெருவுக்குப் புதுசா குடி வந்திருக்காங்க, யுகே ல பொறந்து வளர்ந்தவங்க.”
 
“ஓ… நம்ம ஊர்க்காரங்களா?”
 
“ஆமா, தமிழ் நல்லா பேசுவாங்க.” பேசியபடியே எழுந்து வெளியே போனாள் துளசி. 
 
காரில் சாய்ந்தபடி இவள் வருவதையே பார்த்திருந்தான் ஆதி. முகத்தில் கோபம் தெரிந்தது. துளசி ஒரு ஆச்சரியத்துடனேயே அவனை நெருங்கினாள்.
 
“இங்க என்ன பண்ணுறீங்க?”
 
“அதை நான் கேக்கணும், நீ இங்க என்ன பண்ணுறே?” கனல் தெறித்தது அவன் கேள்வியில்.
 
“இதென்ன கேள்வி? ஆசிரமத்துக்கு எதுக்கு வருவாங்க? குழந்தைங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.” ஒரு குறுஞ்சிரிப்போடு பதில் சொன்னாள் துளசி.
 
“பார்க்க வந்தது தப்பில்லை, எதுக்காக தனியா வந்தே?”
 
“இங்க வரும்போது எப்பவும் தனியாத்தான் வருவேன், இங்கேன்னு மட்டுமில்லை, வேற எங்க போறதா இருந்தாலும் எப்பவுமே தனியாத்தான் போவேன்.” சிறு பிள்ளைக்குச் சொல்வது போல இப்போது விளக்கமாக சொன்னாள் பெண்.
 
“இவ்வளவு நாளும் இருந்த நிலைமை இப்போ இல்லை துளசி.”
 
“அப்பிடியா? அப்பிடி என்ன நிலைமை இப்போ மாறிப்போச்சு?”
 
“நான் சொல்ற எதையுமே கேக்க கூடாதுங்கிற முடிவுல இருக்கியா நீ?” சட்டென்று அவள் மேல் எரிந்து விழுந்தான் ஆதி.
 
“நீங்க எதைப் பார்த்து இந்தளவுக்குப் பயப்பிடுறீங்கன்னு எனக்குப் புரியலை.”
 
“நான் எதைப் பார்த்தும் பயப்பிடலை, எதுவும் தப்பா நடந்திட கூடாதுன்னு எச்சரிக்கையா இருக்கேன்.”
 
“ரெண்டும் ஒன்னுதானே?!”
 
“இங்கப்பாரு துளசி, உன்னோட மல்லுக்கு நிக்க என்னால முடியாது, சொல்றதைக் கேளு, எங்க போறதா இருந்தாலும் என்னைக் கூப்பிடு, தனியா போகாதே.”
 
“இதெல்லாம் எத்தனை நாளைக்கு?” நேராக அவனைப் பார்த்து கேட்டாள் துளசி. அவனுக்கு அவள் கேள்வி புரியவில்லை.
 
“எது?” என்றான் குழப்பத்தோடு.
 
“நான் வெளியே போறப்பெல்லாம் உங்களைக் காவலுக்குக் கூப்பிடுறது.”
 
“ஏன்? என்னோட வாழ்நாள் வரைக்கும்னு வெச்சுக்கோ.” சாதாரணமாக அவன் சொன்னான். 
 
துளசி சற்று நேரம் அமைதியாக நின்றாள். இரண்டொரு நாட்களாக எதிர்பார்த்த வார்த்தைகள்தான்.
 
இருந்தாலும் அவன் வாயிலிருந்து அந்த வார்த்தைகளைக் கேட்ட போது அவளை அவை என்னவோ செய்தன.
 
“உள்ள வர்றீங்களா?” சம்பந்தமே இல்லாமல் அவள் பேச்சை மாற்ற ஆதி அவளையே சில நொடிகள் பார்த்திருந்தான்.
 
“நான் வரணும்னு நீ எதிர்பாக்கிறியா?” அவனும் இப்போது ஏடாகூடமாக கேள்வி கேட்டான்.
 
“யாரோ கார்ல எனக்குத் தெரிஞ்சவங்க வந்திருக்காங்கன்னு உள்ள இருக்கிறவங்களுக்குத் தெரிஞ்சு போச்சு…” அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை. காரை லாக் பண்ணிவிட்டு அவளோடு கூட நடந்தான்.
 
உள்ளே இவர்கள் இருவரும் நுழைவதைப் பார்த்துவிட்டு யாமினி கை வேலையைப் போட்டுவிட்டு வந்தார்.
 
“இவங்க யாமினிக்கா, என்னோட ஃப்ரெண்ட்டோட அக்கா, இந்த ஆசிரமத்தை இவங்களும் இவங்க ஹஸ்பெண்ட்டும்தான் நடத்துறாங்க.” துளசி அறிமுகம் செய்து வைத்தாள்.
 
“ஹாய், ஐம் ஆதி.” வசீகர புன்னகையோடு கை குலுக்கினான் ஆத்ரேயன்.
 
“துளசி சொன்னா, அவங்க தெருவுலதான் புதுசா குடி வந்திருக்கீங்களாம்.” சம்பிரதாயமாக இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு யாமினி நகர்ந்துவிட்டார்.
 
ஆதி அந்த இடத்தை சுற்றும்முற்றும் பார்த்தான். மிகவும் சிறிய இடமென்றாலும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தது. 
 
“ஏழு பசங்க இங்க இருக்காங்க.” அவன் பார்வை உணர்ந்து அவள் பேசினாள்.
 
“ஓ…”
 
“நான் அடிக்கடி இங்க வருவேன்.” 
 
“ம்…” 
 
“அன்னைக்கு அப்பாக்கு சட்டுன்னு உடம்புக்கு முடியாம போனப்போ… இந்த பசங்களுக்கு ஒருவேளை சாப்பாடு போடணும்னு மனசுக்குள்ள வேண்டிக்கிட்டேன்.” ஆத்ரேயனின் கண்கள் பெண்ணை ஆர்வத்தோடு பார்த்தது.
 
“இன்னைக்கு சாப்பாடு ஆர்டர் பண்ணி இருக்கேன், இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடும்.”
 
“நல்லது, நான்… நானும் இங்க இருக்கலாமா?” தயங்கிய படியே கேட்டான்.
 
“பிடிச்சிருந்தா இருங்களேன்.” சொல்லிவிட்டு அங்கே தன் துணிகளைத் துவைத்துக்கொண்டிருந்த ஒரு பையனிடம் போய் அதைத் துவைக்கலானாள் துளசி.
 
ஆதியின் கண்கள் லேசாக பனித்தது. துணியை உலர்த்துவதற்காக உயரமாக கட்டப்பட்டிருந்த கயிறு எட்டாமல் நாற்காலி ஒன்றைப் போட்டுக்கொண்டு நின்ற பையனிடம் போனவன் அவனுக்கு உதவி செய்ய ஆரம்பித்தான்.
 
“இதையெல்லாம் இவங்கதான் பண்ணணுமா?” அவன் பேச ஆரம்பிக்க சட்டென்று கண் ஜாடை செய்தாள் துளசி. ஆதியும் பேச்சை நிறுத்திவிட்டான்.
 
ஆனால் சற்று அப்பால் போனதும் தான் கேட்க நினைத்ததை இப்போது கேட்டான்.
 
“இந்த வேலைக்கெல்லாம் வேற ஆளுங்களைப் போடலாமே?‌ இதெல்லாம் இவங்கதான் பண்ணணுமா துளசி?” 
 
“இன்னொரு ஆள் போடணும்னா அதுக்கும் ஒரு தொகை வேணும் இல்லையா? அந்த தொகையை அக்கா பசங்களுக்கு நல்ல சாப்பாட்டுக்காக செலவு பண்ணுவாங்க.”
 
“அதுக்காக…”
 
“வாழ்க்கைன்னா என்னன்னு பசங்களுக்கும் தெரியணுமில்லையா?”
 
“அது சரிதான் துளசி, ஆனாலும்…” ஆதிக்கு மனது கேட்கவில்லை. யதார்த்தத்தை, பணத்தின் அருமையை அந்த சிறுவர்களுக்குப் புரிய வைக்க அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் சரிதான். 
 
அவன் மனதின் சிந்தனைகளை முகம் வெளிப்படுத்த புன்னகைத்தாள் துளசி. அந்த முகத்தில் தெரிந்த வாட்டம் ஏனோ அவளுக்கு ஒருவித மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த குழந்தைகளுக்காக அவனும் இரங்குகிறானே!
 
“அக்கா எது செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்.”
 
“அது சரிதான்மா, ஆனாலும் சின்ன பசங்க இந்த மாதிரி வேலையெல்லாம் செய்றதுன்னா… மனசுக்குக் கஷ்டமா இருக்கு.”
 
“நம்மால முடிஞ்சது இதுதான், அவங்க கஷ்டத்துல பங்கெடுத்துக்கலாம்.” 
அத்தோடு பேச்சு முடிந்தது என்று துளசி அப்பால் போய் விட்டாள். சற்று நேரத்தில் ஆர்டர் செய்த உணவும் வந்துவிட பிள்ளைகளை வரிசையாக உட்கார வைத்து அவர்களுக்குத் தன் கையாலேயே துளசி உணவு பரிமாறினாள்.
 
உண்பதற்கு முன்பாக யாமினி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து குழந்தைகளும் ஒரு நிமிடம் கண்மூடி துளசியின் தந்தைக்காக அந்த எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனைச் செய்த போது ஆதி மனமுருகி போனான்.
பார்த்து பார்த்து பரிமாறினாள் துளசி.
 
இல்லாதவர்களுக்குக் கொடுப்பதுதானே என்றில்லாமல் நல்ல தரமான உணவகத்திலிருந்து உணவு வரவழைக்கப்பட்டிருந்தது. பிள்ளைகள் ஆசையோடு உண்டார்கள்.
 
அக்கா, அக்கா என்று ஆசையோடும் உரிமையோடும் துளசியோடு உரிமைப் பாராட்டினார்கள். அவள் வயதையும் தாண்டிய தாய்மை உணர்வை அந்த முகத்தில் பார்த்தான் ஆதி.
 
எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து கிளம்பிய போது மணி மூன்று தாண்டி இருந்தது. அவளுக்காக காரின் முன் கதவைத் திறந்து விட்டான் ஆதி. அவள் ஏறி உட்கார்ந்ததும் கார் புறப்பட்டது.
 
“நான் இங்க இருக்கேன்னு யாரு சொன்னா? அப்பாவா?”
 
“ம்… உங்க வீட்டுக்குப் போயிருந்தேன், அப்போதான் சொன்னாங்க.” அவன் கைகளில் கார் வீட்டை நோக்கி போகவில்லை.
 
“எங்க போறோம்?”
 
“நாம இன்னும் சாப்பிடலையே துளசி.”
 
“வீட்டுக்குப் போய் சாப்பிடலாமே.”
 
“இன்னைக்கு ஒரு நாள் வெளியே சாப்பிடலாமே, வேணும்னா உங்கப்பாக்கு ஃபோனை போட்டு வர லேட்டாகும்னு சொல்லிடு.” 
காரை ஒரு ஹோட்டல் முன்பாக நிறுத்திவிட்டு இறங்கினான் ஆதி.
 
துளசியும் இறங்கிக்கொள்ள இருவரும் உள்ளே நுழைந்தார்கள். 
 
இவர்கள் உள்ளே நுழையும் நேரம் சரியாக ஹோட்டலிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தான் அருண் குமார். ஆத்ரேயனின் உடல் சட்டென்று விறைத்தது. ஆனால் துளசி நிதானமாக நின்றிருந்தாள்.
 
ராபின் அண்மையில் செய்த அபிஷேகத்தின் மிச்சம் மீதி அருண் குமாரின் முகத்தில் இன்னும் இருந்தது. உள்ளே வந்து கொண்டிருந்த இருவரையும் ஒரு நொடி நின்று பார்த்தவன் எதுவும் பேசாமல் அமைதியாக கடந்து போய்விட்டான்.
 
உள்ளே சென்று அமர்ந்து ஆர்டர் செய்த உணவு வரும்வரை ஆதியின் கொதிப்பு அடங்கவில்லை.
அவனையே பார்த்திருந்த துளசி அமைதியாக புன்னகைத்தாள்.
 
“தேவையில்லாத படபடப்பு.” அவள் சொல்லிய பிறகும் கூட அவன் சிறிது நேரம் நிதானமில்லாமல்தான் நடந்து கொண்டான்.
 
உணவு வந்த பிற்பாடும் அதை ஏறெடுத்தும் பார்க்காமல் அவன் கண்கள் அலைப்புறவே துளசி பேச ஆரம்பித்தாள்.
 
“என்னாச்சு?”
 
“என்னால… என்னால அந்த சம்பவத்தை விட்டு வெளியே வர முடியலை.”
 
“எந்த சம்பவத்தை?”
 
“அன்னைக்கு… அந்த…”
 
“ம்… சொல்லுங்க.”
 
“அந்த நிச்சயதார்த்தம் நடந்திருந்தா?!”
 
“அதான் நடக்கலையே!”
 
“நடக்கலை, நடந்திருந்தா?”
 
“நடக்க கூடாதுன்னு ஆண்டவன் எழுதி இருக்கும்போது எப்பிடி நடக்கும்?!” அழகான புன்னகையோடு கேட்டாள் துளசி.
 
‘அது அப்படியல்ல பெண்ணே!’ அவன் மனம் உள்ளுக்குள் கூக்குரலிட்டது. 
 
ஆத்ரேயன் என்றொருவனின் வரவு அந்த பாரதி தெருவிற்கு இல்லாமல் போயிருந்தால் அந்த நிச்சயதார்த்தம் நிச்சயமாக நடந்திருக்குமோ?!
 
இல்லை… இது நடக்கக்கூடாது என்பதற்காகவே ஆத்ரேயனின் வரவு அங்கு இடம்பெற்றதோ?! 
 
“சாப்பிடலாமா?”
 
“ம்…” அவன் சிந்தனை எங்கோ அலைபாய்வதை உணர்ந்த துளசி அவனுக்கும் சேர்த்தே பரிமாறினாள்.
 
அந்த இதத்தைக் கூட உணர முடிமாமல் உணவைக் கொறித்து கொண்டிருந்தான் ஆத்ரேயன்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!