நிலா பெண் 8

 
பால்கனியில் நின்றிருந்தான் ஆத்ரேயன். கையில் ஒரு சிகரெட். எப்போதாவது மனம் வெகுவாக குழம்பி போனால் இது அவனுக்குத் தேவைப்படும்.
 
எதிரே துளசியின் வீடு அமைதியாக காணப்பட்டது, அவளைப் போல! கண்கள் அவள் வீட்டை அளவிட்டது.
 
அந்த வீட்டிற்குள் இருக்கும் ஒரு சிறு பெண் அவன் உணர்ச்சிகளோடு வெகுவாக விளையாடி பார்க்கிறாள் என்று சொன்னால் அவன் குடும்பத்தில் யாராவது நம்புவார்களா?!
 
“டாமிட்!” பால்கனியின் கைப்பிடியில் ஓங்கி குத்தினான் ஆதி. யார் மேல் ஆத்திரப்படுகிறோம் என்று அவனுக்கே புரியவில்லை.
 
நம்பி கேட்டைத் திறந்து கொண்டு இவன் வீட்டிற்குள் நுழைவது தெரிந்தது. கையிலிருந்த சிகரெட்டை நொடிப்பொழுதில் டாய்லெட்டில் போட்டு நீரை அடித்துவிட்டு மீண்டும் வந்து பால்கனியில் நின்று கொண்டான்.
 
“ஆதீ… நீ இன்னும் தூங்கலை? ரூம்ல லைட் எரியுறது தெரியவும்தான் வந்தேன்.” பேசிய படியே மாடியேறி வந்தான் நம்பி.
 
“டேய்! சிகரெட் புடிச்சியா?” வந்ததும் வராததுமாக ஆதியின் மேல் பாய்ந்தான் நம்பி.
 
“நம்பி ப்ளீஸ்…”
 
“என்னடா ப்ளீஸ்? நீ நல்லவன்னு துளசிக்கிட்ட நான் அவ்வளவு‌ அடிச்சு பேசுறேன், நீ என்னடான்னா இப்பிடி நடந்துக்கறே?!”
 
“சிகரெட் புடிக்கிறவனெல்லாம் கெட்டவன்னு யார் சொன்னது? அந்த அருண் குமார் கூடத்தான் சிகரெட் புடிக்க மாட்டான், அதுக்காக அவன் நல்லவனா?”
 
“இப்போ எதுக்குடா தேவையில்லாம அவன் பேச்சு? நான் இப்போ உன்னையும் துளசியையும் பத்தி மட்டும்தான் பேசிக்கிட்டு இருக்கேன்.”
 
“சாரி!” சட்டென்று இறங்கினான் ஆதி.
 
“என்னாச்சு இன்னைக்கு உனக்கு?”
 
“ரொம்ப டென்ஷனா இருக்குடா நம்பி.” பால்கனி கைப்பிடியைப் பிடித்திருந்த ஆதியின் கை லேசாக நடுங்கவும் அதை அழுத்தி பிடித்தான் நம்பி.
 
“என்னாச்சு ஆதி?”
“உன்னோட தங்கை என்னை ஆட்டி வெக்குறாடா!” சற்று இரைந்தே சொன்னான் ஆதி.
 
“துளசி என்ன பண்ணினா?!”
 
“இன்னைக்கு தனியா கிளம்பி ஆசிரமம் ன்னு எங்கேயோ போய் உக்காந்துட்டா.”
 
“ஓ அதுவா… அடிக்கடி அங்க துளசி போவா ஆதி.”
 
“இவ்வளவு நாளும் ஓகே, ஆனா இப்பவும் அது ஓகேவா நம்பி?”
 
“……………..”
 
“அவ்வளவு சொல்றேன், எங்கேயாவது போகணும்னா என்னைக் கூப்பிடுன்னு, அதை அவ கொஞ்சமும் பொருட்படுத்தலை.”
 
“சண்டைப் போட்டியா?”
 
“எங்க சண்டைப் போடுறது, கொஞ்சம் குரலை உயர்த்தி பேசினா நின்னு நிதானமா நிமிர்ந்து ஒரு பார்வைப் பார்க்குறா, எனக்குத்தான் வெலவெலத்து போகுது.”
 
“ஹா… ஹா…”
 
“என்னால துளசியை தைரியமா நெருங்க முடியலை நம்பி!” ஆதியின் குரலில் அவ்வளவு கவலைத் தெரிந்தது.
 
“ஏன்டா?” 
 
“நம்ம ஊர் பொண்ணுங்க மாதிரி அவ சாதாரண பொண்ணில்லை நம்பி, அவ சிந்தனைகள் வேற லெவல்ல இருக்கு.”
 
“ம்…”
 
“என்னோட ஆசைகளை அவ மேல கொட்டி அவளை நான் சிறுமைப் படுத்திடுவேனோன்னு எனக்குப் பயமா இருக்கு நம்பி.” 
 
ஆதியின் பயம் பார்த்து லேசாக புன்னகைத்தான் நம்பி. இது துளசியின் மீதான அவனது மரியாதை, அக்கறை! நம்பியின் கரம் இப்போது தன் நண்பனின் தோளை இறுக அணைத்து கொண்டது.
 
“நீ துளசியை பத்தி இவ்வளவு யோசிக்கிறது எனக்குச் சந்தோஷமா இருக்கு ஆதி.”
 
“…………..”
 
“துளசியோட கல்யாணம் தள்ளி தள்ளி போனப்போ நான் ரொம்ப வருத்தப்பட்டிருக்கேன், ஆனா… உன்னை மாதிரி ஒருத்தன் கிடைக்கத்தான் அவ இத்தனை நாளும் காத்திருந்தாளோன்னு இப்ப தோணுதுடா.”
 
“அசைய மாட்டேங்குறா!”
 
“கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும், அவ ஆசைகளுக்கும் எண்ணங்களுக்கும் நீ மதிப்பு குடு, நீ என் மரியாதைக்குரிய உறவுன்னு அவளுக்குக் காட்டு ஆதி, உன்னோட பக்கம் அவ தானாவே வருவா.”
 
“ம்…”
 
“சுயமரியாதை நிறையவே இருக்கிற பொண்ணுடா துளசி, நீயும் அவளை ரொம்ப மரியாதையா நடந்து, புரிஞ்சுப்பா.”
“பேச்சாலே கொஞ்சம் நெருங்கினாலே சட்டுன்னு டாபிக்கை மாத்திடுறா.”
 
“ம்… எதிர்பார்த்ததுதானே?”
 
“நான் நினைக்கிறேன்… ஃபேமிலி லைஃப்ல அவளுக்கொரு இன்ட்ரெஸ்ட்டே இல்லாம போயிடுச்சு போல!”
 
“இருக்கலாம், நான் இல்லேன்னு சொல்ல மாட்டேன்.”
 
“நம்பி… இன்னைக்கு அவனைப்
பார்த்தோம்.”
 
“யாரை?”
 
“அந்த அருண் குமாரை.”
 
“ஓ… துளசியும் பார்த்தாளா?”
 
“ம்…”
 
“ஏதாவது பேச முயற்சி
பண்ணினானா?”
 
“இல்லை, ஆசிரமத்தில‌ இருந்து நேரா சாப்பிடலாம்னு ஹோட்டல் போனோம், இவன் அப்பத்தான் ஹோட்டல்ல இருந்து வெளியே வந்துக்கிட்டு இருந்தான்.”
 
“அப்புறம் என்னாச்சு?”
 
“அவனைப் பார்த்த உடனே எனக்கு சும்மா ஜிவு ஜிவுன்னு கோபம் தலைக்கேறிடுச்சு, பயலை அங்கேயே அடிச்சு நொறுக்கலாமான்னுதான் தோணிச்சு.”
 
“டேய், ஏன்டா நீ வேற… துளசி என்ன பண்ணினா?”
 
“உன்னோட தங்கைதானே? அவனைக் கல்லையும் மண்ணையும் பார்க்கிற மாதிரி ஒரு பார்வைப் பார்த்து வெச்சா!”
 
“அதை ஏன்டா இவ்வளவு சோகமா சொல்றே? அதுக்கு நீ சந்தோஷம்தானே படணும்?”
 
“உன்னோட தங்கை என்னையும் அப்பிடித்தானே பார்க்கிறா, இதுல நான் எங்க இருந்து சந்தோஷப்பட?”
 
“தப்புடா, அவக்கு உம்மேல பாசம் இருக்கு.”
 
“யாருக்கு வேணும்டா அந்த பாசம்? எனக்கு துளசியோட லவ் வேணும்!”
 
“இவன் வேற, டேய்! அந்த எழவெடுத்த லவ்வைத்தான்டா நானும் சொல்றேன்!”
 
“நம்ப முடியலை.”
 
“ஆதி… நம்ம ஊரு பொண்ணுங்கன்னா அப்பிடித்தான்டா, உங்க ஊரு மாதிரி சட்டுன்னு வெளிப்படையா பேசிட மாட்டாங்க, மனசுல உள்ளதைக் காட்டிக்க மாட்டாங்க.”
 
“ஓபனா துளசிகிட்ட சொல்லிடட்டுமா நம்பி?”
 
“அவசரப்படாதே.”
 
“எனக்கு இருக்கிற அவசரத்துக்கு…” ஆதி பேச்சை முழுதாக முடிக்கவில்லை. நம்பி வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கி கொண்டான். ஆதி இது எதையும் கவனிக்கும் மனநிலையில் தற்போது இல்லை.
 
“நீ இப்போ துளசியோட அண்ணன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கே, ஞாபகம் வெச்சுக்கோ!” என்றான் நம்பி பொய் கோபத்தோடு.
 
“நான் என்னோட ஃப்ரெண்ட் கிட்டத்தான் பேசிக்கிட்டு இருக்கேன், எத்தனை நாளைக்கு நம்பி நானும் நல்லவன் மாதிரியே நடிக்கிறது?”
 
“ஹா… ஹா… டேய் நல்லவனே! நீ நல்லவன்தானேடா?”
 
“ம்ப்ச்… போடா! அங்க பொண்ணுங்க எம்பின்னாடி அலைஞ்சாங்க, இங்க, இவளுக்காக நான் பைத்தியக்காரன் மாதிரி புலம்புறேன்.”
 
“நம்ம ஊரு பொண்ணுங்கன்னா சும்மாவா ஆதி?”
 
“நீதான் மெச்சிக்கணும், எனக்கு வர்ற கோபத்துக்கு… இப்பவே அவங்க வீட்டுக்குப் போயி, அப்பிடி என்ன குறையை எங்கிட்ட கண்டுட்ட நீ ன்னு கேக்கணும் போல இருக்கு!” 
 
“ஆதீ!” நம்பியின் ஒரு அதட்டலில் ஆதி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அதன் பிறகு நம்பியும் அதிக நேரம் அங்கே தங்கி விடவில்லை. அவன் வீட்டுக்குப் போய் விட்டான்.
 
ஆனால்… இவன் உடம்பின் ஒவ்வொரு அணுவும் அந்த பெண்ணுக்காக அந்த நிமிடம் ஏங்குவதை நம்பியிடம் கூட ஆதியால் பகிர்ந்து கொள்ள இயலவில்லை.
 
தன் உள்ளத்து வெப்பத்தைத் தீர்த்துக்கொள்ள இன்னுமொரு சிகரெட் வெப்பம் தேவைப்பட்டது ஆத்ரேயனுக்கு. முயன்று தன்னைக் கட்டுப்படுத்தி கொண்டான்.
 
அந்த வேதனைக் கூட அவனுக்கு இப்போது சுகமாக இருந்தது. ஆதியால் தன்னையே நம்ப முடியவில்லை. சிரித்துக்கொண்டான்.
 
எத்தனை இலகுவாக தன் அண்ணனை இவன் குற்றம் சொல்லி இருக்கிறான்.
 
மனைவியைப் பார்த்ததும் ஆதேஷ் முழுதாக மாறிப்போனதாக இவன் கூட குறைப்பட்டிருக்கிறானே!
 
ஆனால்… மனதுக்குப் பிடித்தாற்போல ஒரு பெண் அமைந்து போனால் யாருக்குத்தான் பித்து பிடிக்காது?! இப்போது இவனே துளசி துளசி என்று ஜபிக்கவில்லையா?
 
சின்னதாக மல்லிகைச் சரம் சூடும் அந்த கூந்தலுக்குள், நான்கைந்து தங்க வளையல்கள் கலகலக்கும் அந்த மணிக்கட்டில், மெல்லியதாக ஒரு சங்கிலி தவழும் அந்த கழுத்து வளைவில்… அதற்கு மேல் ஓடிய சிந்தனைக்குக் கடிவாளம் போட்டான் ஆத்ரேயன். உதட்டில் ஒய்யாரமாக ஒரு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது. 
 
***
 
அந்த ப்ளாக் ஆடி சிதம்பரத்தை நோக்கி போய் கொண்டிருந்தது.
துளசியின் அம்மாவின் பூர்வீகம் சிதம்பரம்தான். சங்கரபாணி கல்யாணம் ஆன புதிதில் மனைவியின் ஊரில் நிறைய தோப்பு, துரவு என்று வாங்கி போட்டிருந்தார்.
 
வயல் நிலங்களும் கரும்பு தோட்டங்களும் நிறையவே உண்டு அவருக்கு. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பு வரை இவற்றாலெல்லாம் நல்ல வருமானம் வந்து கொண்டிருந்தது சங்கரபாணிக்கு.
 
இப்போது இவற்றை எல்லாம் பார்க்க அதிக ஆட்கள் கிடைப்பதில்லை. அத்தோடு உடையவன் பார்க்காவிட்டால் ஒரு முழம் கட்டைதானே?! 
 
நான்கரை மணித்தியாலங்கள் பயணம் செய்து அடிக்கடி சங்கரபாணியாலும் சிதம்பரம் போக முடிவதில்லை.
 
மனைவியையும் இழந்து, மகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி போன பிற்பாடு மனிதருக்கு எல்லாவற்றின் மீதும் இருந்த ஆர்வம் குறைந்து போனது.
 
ஆத்ரேயனின் முகம் முழுதாக மலர்ந்து கிடக்க அந்த ப்ளாக் ஆடியை ஓட்டிக்கொண்டிருந்தான். பக்கத்தில் நம்பி. பின்சீட்டில் பாட்டி வாகாக சாய்ந்து உறங்கி கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் துளசி. 
 
அன்று காலையிலேயே பயணத்தை ஆரம்பித்து விட்டார்கள். வெயில் கிளம்பிய பிறகு ட்ரைவ் பண்ணுவது சிரமம் என்று ஆதி சொன்னதால் இந்த ஏற்பாடு.
 
பாட்டி ‘சிதம்பரம்’ என்று சொன்னதும் உற்சாகமாக கிளம்பி விட்டார். நடராஜரைத் தரிசிக்க அவருக்கு அவ்வளவு ஆவல்.
 
பாட்டியும் கூட போவதால் சங்கரபாணி தலையாட்டி விட்டார்.
அத்தோடு தன் பெண்ணுக்கு இதுபோல சந்தோஷங்கள் வெகு அரிதாகவே கிடைக்கின்றன என்பதும் அவர் எண்ணம்.
 
“அப்பாவை எப்பிடி தனியா விட்டுட்டு வர்றது?” என்று துளசி இதமாக மறுப்பு தெரிவித்த போது காமிலாவும், எமிலியும் அந்த பொறுப்பை ஏற்று கொண்டார்கள்.
 
அதற்கு மேல் துளசியால் எதுவும் பேச முடியவில்லை. இரண்டு நாட்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டாள்.
 
அவள் அம்மாவின் சொந்த ஊர். அங்கு போயே வெகு நாட்கள் ஆகின்றன. அறிந்தவர் தெரிந்தவர் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.
 
“துளசி, நல்ல புடவைகளா எடுத்துக்கிட்டு போம்மா, நகைகளையும் எடுத்துக்கோ.” அப்பா சொன்னபடியே செய்தாள்.
 
வண்டி டவுனை நெருங்கிய போது ஆதி காரை நம்பியின் கையில் கொடுத்துவிட்டான். யூகே இல் கார் ஓட்டுவதற்கும் இந்தியாவில் கார் ஓட்டுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன.
சர்க்கஸில் கார் ஓட்ட ஆதிக்கு தெரியவில்லை.
 
“துளசி, அம்மா போனதுக்கு அப்புறம் இப்பதான் ஊருக்கு வர்றியா?”
 
“ஆமாண்ணா.”
 
“ஒரு அஞ்சு வருஷம் இருக்குமா?”
 
“ம்… இருக்கும்.” 
 
கார் இப்போது வயல் வெளிகளையும் கரும்பு தோட்டங்களையும் தாண்டி போய்க்கொண்டிருந்தது. ஆதி ஏதோ விண்வெளியில் பறப்பவன் போல அமர்ந்திருந்தான்.
 
“வீடு ஞாபகம் இருக்கு, இருந்தாலும் நீயும் கொஞ்சம் வழியைக் கவனிச்சுக்கோ துளசி.”
 
“சரிண்ணா.”
கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத இடமாக இருந்தது அந்த ஊர். பசுமையாகத்தான் இருந்தது. இந்த ஐந்து வருடங்களில் ஊரில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்ததால் துளசிக்குமே வழி கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.
 
எப்படியோ வழி கண்டுபிடித்து அவர்கள் வீடு வந்து சேர்ந்தார்கள். நல்ல பழைய வீடு. துளசியின் அம்மா பிறந்து வளர்ந்த வீடு அது. அவர் திருமணம் முடித்து சென்னை போன பிற்பாடு இந்த வீட்டைப் பராமரிப்பார் இல்லாமல் போனது.
 
துளசியின் தாய்க்கு உடன்பிறந்தவர்கள் யாருமில்லை. துளசி சிறு பெண்ணாக இருக்கும்போதே அவள் தாத்தா பாட்டியும் ஒருவர் பின் ஒருவராக போய் சேர்ந்து விட்டார்கள். 
 
அதன்பிறகு சங்கரபாணி வருடத்திற்கு ஒரு முறை இங்கு வந்து போவார். இரண்டொரு நாட்கள் இங்கே தங்கி கணக்கு வழக்குகளைப் பார்த்து, தோட்டத்திற்கு ஒரு நடை சென்று என்று நேரம் செலவழிப்பார். இப்போது அதுவும் நின்று போனது.
 
“பாட்டி, வீடு வந்திருச்சு, எந்திரிங்க.” துளசி எழுப்பவும் சோர்வோடு கண்ணைத் திறந்தார் பாட்டி.
 
“வந்துட்டோமாடி கொழந்தை, கோயில் வர்ரச்சே எழுப்பி இருக்கலாமே, கோபுரத்தைக் கண்ணார பார்த்திருப்பேனே துளசி!” பாட்டி ஆதங்கப்பட்டார்.
 
“ஆமா, நல்லா கொறட்டை அடிச்சிட்டு பேச்சைப் பாரு, நாளைக்கு சாவகாசமா கோயிலுக்குப் போகலாம், இப்போ இறங்கு பாட்டி.” இது நம்பி.
 
“போடா பொடிப்பயலே!” பேரனுக்கு ஒரு குட்டு வைத்துக்கொண்டு இறங்கினார் பாட்டி.
 
ஆதிக்கு அந்த வீட்டைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. வீட்டின் உயரம் மிகவும் குறைவாக இருந்தது. இவன் உள்ளே நுழைய வேண்டும் என்றால் குனிந்து கொண்டுதான் செல்ல வேண்டும்.
 
“வீடு குளுகுளுன்னு இருக்க இப்பிடி கட்டுவாங்கடா.”
 
“ஓ…” நம்பியின் விளக்கம் அது.
உண்மையிலே வீடு உள்ளே ஏசி பூட்டினாற் போலத்தான் இருந்தது.
 
நெடுநாட்களாக யாரும் புழங்காததால் முகத்தில் ஒரு பழைய வாசம் வந்து மோதியது. 
 
இவர்கள் வருவார்கள் என்று ஏற்கனவே சங்கரபாணி தகவல் கொடுத்திருந்ததால் வீடு துப்புரவாக இருந்தது. 
 
அந்த வீட்டின் அமைப்பு கொஞ்சம் வித்தியாசமாக காணப்பட்டது.‌ உள்ளே போனதும் வரவேற்பறை, அதற்கு அடுத்ததாக ஒற்றை வரிசையில் மூன்று படுக்கை அறைகளும் சமையலறையும் இருந்தது. படுக்கை அறைகளுக்கு எதிரேயே கிணறு இருந்தது.
 
“இதுதான் கிணறு இல்லை?!” ஆச்சரியமாக கிணற்றை எட்டி பார்த்தான் ஆதி. சென்னையில் கூட யார் வீட்டிலும் அவன் கிணற்றைப் பார்த்திருக்கவில்லை.
துளசியும் நம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டார்கள்.
 
“இப்போ எதுக்கு நீங்க ரெண்டு பேரும் சிரிக்கறேள்? பாவம் ஆதி, அவன் இதையெல்லாம் எங்க கண்டான்!” பாட்டி இப்போது ஆத்ரேயனின் உதவிக்கு வந்தார்.
 
“ஏன்டீ துளசி! சமையல் கட்டுல ஒரு மிக்ஸி, க்ரைன்டர் ன்னு ஒன்னையும் காணோம், அம்மியும் ஆட்டுக்கல்லும்தான் இருக்கு!” சமையலறையை எட்டி பார்த்த பாட்டி கூவினார்.
 
“ஆனா க்ளீனா இருக்குடி கொழந்தை.”
பாட்டியின் குரலில் துளசியும் அங்கு வந்தாள். அவளுக்கு இந்த வீட்டில் என்ன இருக்கிறது இல்லையென்று என்ன தெரியும்?
 
சங்கரபாணிக்கும் இதெல்லாம் புத்தியில் படவில்லை. ஒருவேளை துளசியின் அம்மா இருந்திருந்தால் இதையெல்லாம் கவனித்திருப்பாரோ என்னவோ?
 
“என்ன பாட்டி, ஏதாவது வாங்கணுமா?” இது நம்பி.
 
“நம்பி, அம்மியும் ஆட்டுக்கல்லும்தான்டா இருக்கு.” சொல்லிவிட்டு பாட்டி இடி இடியென்று சிரித்தார்.
 
“தேவையானதை வாங்கிக்கலாம் பாட்டி.” என்றான் ஆதி.
 
“வேணாம் ஆதி, இதெல்லாம் நேக்குப் பழக்கம்தான், ரெண்டு நாள் தங்க போறோம், எதுக்குப்பா வீண் செலவு?” 
 
பாட்டி சமாதானம் சொன்னாலும் ஆதி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பாட்டியைப் பொறுத்தவரை இது இரண்டு நாள் பயணம். ஆனால் ஆதிக்கு அப்படி அல்லவே!
 
“இல்லை நம்பி, இன்னைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், ஆனா நாளைக்குக் கண்டிப்பா போய் தேவையானதை வாங்கிக்கலாம்.” பாட்டியும் துளசியும் அப்பால் நகர நம்பியின் காதைக் கடித்தான் ஆதி.
 
“சரிப்பா.”
 
“இன்னொரு விஷயம் நம்பி.”
 
“சொல்லு.”
 
“துளசி இந்த வாரம் ஃபுல்லா லீவ் போட்டிருக்கா, இந்த ரெண்டு நாள் பேச்செல்லாம் சரி வராது.”
 
“நான் ரெண்டு நாள்தான் லீவ் போட்டிருக்கேன்டா!”
 
“உன்னை யாரு கூப்பிட்டா? அதான் கூட்டிட்டு வந்துட்டே இல்லை, பேசாம சென்னைக்கு நடையைக் கட்டு!”
 
“டேய் ஆதி, இது நியாயமே இல்லைடா!”
 
“பாட்டியை விட்டுட்டு போ, அவங்களும் தேவலைதான்… இருந்தாலும் பரவாயில்லை, துளசியோட அப்பா அவங்க இங்க இல்லைன்னா சங்கடப்படுவாரு, அதுக்காக இருக்கட்டும்.”
 
“நீ ஏன் பேசமாட்டே! தேவை முடிஞ்சிடுச்சு இல்லை, இனி கழட்டி விடத்தான் பார்ப்பே!”
 
“கரெக்ட்!” ஆதி அழகாக புன்னகைக்க நம்பி அவன் வயிற்றில் குத்தினான்.
 
“துரோகி!” நண்பர்கள் இருவரும் இங்கே விளையாடி கொண்டிருக்கும் போது வெளியே அழைப்புக்குரல் கேட்டது.
 
“துளசி… மாமி…”
 
“யாருடா நம்பி அது?‌ நம்ம ஆளைக் கூப்பிடுறது?”
 
“சங்கரபாணி அங்கிள் ஃபோன் பண்ணி பொண்ணு வர்றான்னு சொல்லி இருப்பார், நம்ம பாட்டியைத்தான் உனக்குத் தெரியுமே, போற இடமெல்லாம் ஃப்ரெண்ட்ஸ் பிடிச்சிக்கும்.”
 
“பாட்டி ஏற்கனவே இங்க வந்திருக்காங்களா?”
 
“துளசியோட அம்மா இருக்கும்போது வந்திருக்காங்க, அதால அவங்களை இங்க எல்லாருக்கும் தெரியும்.”
 
“ஓ…”
 
“லன்ச் வெளியே வாங்கிடலாம் ஆதி, நைட்டுக்கு பாட்டி ஏதாவது பண்ணுவாங்க.”
 
“எதுக்குடா அவங்களை சிரமப்படுத்தணும்? நைட்டுக்கும் வெளியே ஏதாவது வாங்கிடலாம்.”
 
“இல்லையில்லை, பாட்டிக்கு அது ஒத்து வராது, வீட்டு சாப்பாடுதான் பெருசுக்குச் சரிப்பட்டு வரும்.”
 
“அப்ப ஓகே.”
வெயில் வெளியே நன்றாக வாட்டியது. வீட்டின் அமைப்பினாலும் வீட்டின் உள்ளேயே கிணறு இருந்ததாலும் ஆதியை வெப்பம் அதிகம் தாக்கவில்லை.
 
ஆண்கள் இருவரும் ஒரு ரூமில் தங்கிக்கொள்ள பாட்டி ஒரு ரூமை ஆக்கிரமித்து கொண்டார். துளசிக்கு அடுத்த அறை. 
 
மதிய உணவை ஆண்கள் இருவரும் போய் வாங்கி வந்தார்கள். நம்பிக்கும் பாட்டிக்குமான உணவை அவர்களிடம் கொடுத்துவிட்டு துளசியை தேடிக்கொண்டு வந்தான் ஆதி. இயல்பாக அவள் இருந்த அறைக்குள் அவன் நுழையவும் கட்டிலில் சாய்ந்திருந்தவள் சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். கதவைக் கூட தட்டாமல் அவன் உள்ளே நுழைவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. குற்றம் சாட்டும் அவள் பார்வையை அவன் கண்டுகொள்ளவும் இல்லை.
 
“சாப்பிடலாம் துளசி.”
 
“பாட்டியும் அண்ணாவும் எங்க?”
 
“அவங்க அங்க சாப்பிடுறாங்க, நாம இங்க சாப்பிடலாம்.” சொல்லிவிட்டு அங்கிருந்த கட்டிலில் இயல்பாக அமர்ந்தான்.
 
“எல்லாரும் ஒன்னா சாப்பிடலாமே?”
 
“பாட்டிக்கு முன்னால நான்வெஜ் சாப்பிட போறியா?”
 
“ஓ… நான்வெஜ்ஜா?”
 
“ஆமா, சாப்பிடு.” இந்த தனிமைக்காகவே அவன் நான்வெஜ் வாங்கியதை இவளிடம் சொல்ல முடியுமா? அவள் அமைதியாக இருந்தாள்.
 
“எனக்குப் பசிக்குது, சாப்பிடுற ஐடியா இருக்கா இல்லையா?”
 
“இதோ…” அவசர அவசரமாக கை கழுவிக்கொண்டு வந்தாள் துளசி. அவன் அந்த மட்டன் பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிட்டான்.
 
“ஆயிரந்தான் சொல்லு, ஹோட்டல்ல வாங்குற பிரியாணியோட ருசியே தனிதான்!” அவன் சொல்ல அவள் புன்னகைத்தாள்.
 
“என்ன, இல்லேங்கிறியா?”
 
“அன்னைக்கு உங்க வீட்டுல நீங்க பண்ணிண பிரியாணி இதைவிட டேஸ்ட்டா இருந்துது.”
 
“அப்பிடியா?! அது உங்க வீடு இல்லை, நம்ம வீடு.” அவள் பேச்சைத் திருத்திவிட்டு அந்த பூ முகத்தையே ஆவலோடு பார்த்திருந்தான் ஆதி. அந்த திடீர் தாக்குதலிலிருந்து சீக்கிரமே அவள் தன்னை விடுவித்து கொண்டாள்.
 
“ரொம்ப நல்லா தமிழ் பேசுறீங்களே, அது எப்பிடி?” பேச்சை அவள் மாற்ற ஆதி ஒரு பெருமூச்சு விட்டான். இப்படி ஒதுங்குபவளிடம் அவன் எதை, என்னவென்று பேச?!
 
“அது அப்பாவோட ஆசை, அதனால எங்கம்மாவே தமிழ் கத்துக்கிட்டாங்க.”
 
“அப்பா மேல அம்மாக்கு அவ்வளவு அன்பா?” அவள் கண்களில் அந்த கேள்விக்கான பதிலை அறிந்து கொள்ளும் ஆவல் தெரிய ஆதி
சிரித்தான்.
 
“லவ் மேரேஜ், அப்பா அங்க படிக்க போனப்போ ஒருத்தரை ஒருத்தர் புடிச்சு போக கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்.”
 
“உங்க தாத்தா பாட்டி எதுவுமே சொல்லலையாமா?” அவன் குடும்பத்தைப் பற்றி முதன் முதலாக பேசுகிறாள். ஆதிக்கு மகிழ்ச்சி பொங்கியது.
 
“சொல்லாம இருந்திருப்பாங்களா… இவங்க கண்டுக்கலைப் போல.”
 
“உங்க அம்மா இங்க வந்ததே இல்லையா?”
 
“நாங்கெல்லாம் சின்ன பசங்களா இருந்தப்போ வந்திருப்பாங்க போல, தாத்தா பாட்டி போனதுக்கு அப்புறம் வரலைன்னு நினைக்கிறேன்.”
 
“அப்பாவுக்குக் கூடப் பிறந்தவங்க?”
 
“சிஸ்டர் இருக்காங்க, அபிராமி அத்தை, டெல்லியில இருக்காங்க.”
 
“ஓ…”
 
“ஒவ்வொரு தடவையும் இன்டியா வரும்போது அத்தை வீட்டுக்குத்தான் போவேன், இந்த தடவை விதி பாரதி தெருவுக்குக் கூட்டிக்கிட்டு வந்திடுச்சு.” அவள் முகத்தில் இப்போது அழகானதொரு சிரிப்பு.
 
“அது எதுக்குன்னு இப்போதானே தெரியுது!” அவள் முகச்சிரிப்பு இப்போது அவன் முகத்திற்கு இடம் மாறியது. சிரிப்பைத் தொலைத்து திகைத்து நின்றது பெண்.
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!