நிலா பெண் 9

 
மதிய உணவை முடித்துவிட்டு அனைவரும் சற்று ஓய்வெடுத்தார்கள். அதன் பிற்பாடு ஊரில் சங்கரபாணியை நன்குத் தெரிந்த மனிதர் ஒருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு நிலத்தைப் பார்க்க போய்விட்டார்கள் ஆண்கள் இருவரும்.
 
ஆதிக்கு அந்த இடத்தைப் பார்த்த நொடியே பிடித்து போனது. நீர்ப்பாசன வசதியும் இருந்தது. மண் கூட அவன் அறிந்த மட்டில் ஆரோக்கியமானதாகத்தான் தெரிந்தது. இருந்தாலும் சாம்பிள் எடுத்து கொண்டான்.
 
“என்ன ஆதி, எல்லாம் ஓகேவா?”
 
“மண்ணை முதல்ல டெஸ்ட் பண்ணி பார்ப்போம் நம்பி, அனேகமா எல்லாம் பர்ஃபெக்ட்டா இருக்கிற மாதிரிதான் தெரியுது.”
 
“ம்…”
 
“இயற்கை உரங்களைத்தான் பாவனைப் பண்ணி இருக்காங்க போல, மண் நல்ல ஆரோக்கியமா இருக்கு நம்பி.”
 
“அப்போ நல்லதுதானே!”
 
“ஆமா.” பேசிய படியே இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள். 
 
“நம்பி, செத்த இங்க வா.” இவர்கள் தலையைக் கண்டதும் பாட்டி உரக்க அழைத்தார். துளசியை காணவில்லை.
 
“எதுக்குப் பெரிசு இப்ப உள்ள இருந்து குரல் குடுக்குது?!” ஆச்சரியப்பட்டபடி உள்ளே போனான் நம்பி. ஒரு புன்சிரிப்போடு ஆதி ஹாலில் அமர்ந்துவிட்டான். சில நிமிடங்களில் நம்பி மீண்டும் திரும்பி வந்தான்.
 
“ஆதி, நான் பக்கத்துல இருக்கிற ஏதாவது ஃபார்மசிக்கு போய்ட்டு வந்திடுறேன்.”
 
“ஃபார்மசியா? எதுக்கு?”
 
“டேப்ளட் வாங்கி வரட்டாம்.”
 
“யாருக்கு?‌ பாட்டிக்கா? என்னாச்சு நம்பி?”
 
“பாட்டிக்கில்லை, துளசிக்கு, ஏதோ வயித்து வலிக்காம்.” சொல்லிவிட்டு நம்பி நகரப்போக ஆதி சட்டென்று எழுந்தான்.
 
“துளசிக்கு வயித்து வலியா? நல்லாத்தானே இருந்தா? லன்ச் ஒத்துக்கலையா என்ன? டாக்டர்கிட்ட போகலாம் நம்பி.” பதறியபடி உள்ளே போகப்போன நண்பனைப் பிடித்து நிறுத்தினான் நம்பி.
 
“ஆதி, அப்பிடியெல்லாம் ஒன்னும் இல்லைடா, இது ஏதோ… லேடீஸ் ப்ராப்ளம் போல…” நம்பி இப்போது லேசாக தடுமாற ஆதி புரிந்து கொண்டான்.
 
“ஓ…”
 
“இந்த டைம்ல கொஞ்சம் கஷ்டப்படுவா போல இருக்கு.”
 
“யாராவது லேடி டாக்டர்கிட்ட போகலாமா நம்பி?”
 
“தேவையில்லை ஆதி, நான் கடை
வரைக்கும் போயிட்டு வந்தர்றேன்.”
 
“இரு நானும் வர்றேன்.”
அன்றைய இரவுப்பொழுது முழுவதும் துளசி அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை. ஆதி கொஞ்சம் தவித்து போய்விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.
மாத்திரைப் போட்டிருந்தாள். இருந்தாலும் வலி இருந்திருக்கும் போலும். ஒரு தடவை ரூமை விட்டு வெளியே அவசரமாக ஓடி வந்து வாந்தி எடுத்தாள். 
 
“அடடா!” சமையலறையில் இரவு உணவைத் தயார் பண்ணிக்கொண்டிருந்த பாட்டி கை வேலையைப் போட்டுவிட்டு ஓடி வந்தார்.
 
“என்னடீ துளசி பண்ணுது நோக்கு?” கேட்டபடியே அவள் தலையைத் தாங்கி பிடித்து கொண்டார்.
 
“டேய் நம்பி, ஒரு பக்கெட்ல ஜலம் கொண்டு வா.” பாட்டி இரைந்து கூப்பிட நம்பி கிணற்றிலிருந்து நீர் இறைத்தான்.
 
கைத்தாங்கலாக துளசியை அவள் அறைக்கு அழைத்துச்சென்ற பாட்டி லேசாக கட்டிலில் சாய்த்து உட்கார வைத்தார். 
 
“இப்போ தேவலையா துளசி?”
 
“ம்…” நலிந்த குரலில் அவள் சொல்வது ஆதிக்கு கேட்டது.
 
“இரு, சூடா ஏதாவது குடிக்க கொண்டு வரேன்.” பாட்டி வெளியே வந்த போது ஆதி அவரிடம் விரைந்து வந்தான்.
 
“பாட்டி…”
 
“சொல்லு ஆதி.”
 
“டாக்டர்கிட்ட போகலாமா?”
 
“எதுக்கு டாக்டர்?! இதுக்கெல்லாமா டாக்டர்கிட்ட போவாங்க?!”
 
“இல்லை… துளசி வாமிட் பண்ணி…” 
 
“அதுக்கு நீ ஏன்டா இவ்வளவு சோகமா இருக்கே?! பொம்மனாட்டின்னா இதெல்லாம் சகஜம்தான், கல்யாணம் பண்ணி ஒரு கொழந்தைப் பொறந்தா இதெல்லாம் சரியாகி போகிடும்.” 
பாட்டி அப்பால் நகர்ந்து விட்டார்.
 
ஆனால் ஆதிக்கு மனம் தாளவில்லை. உள்ளே அறையில் துடிப்பது அவன் உயிரல்லவா?!
 
இரவு உணவிற்கும் துளசி வெளியே வரவில்லை. நம்பி ஃபோனில் ஏதோ பிஸியாகிவிட ஆதிதான் தவித்து போனான். பாட்டியிடம் மீண்டும் மீண்டும் துளசியை பற்றி விசாரிக்க சங்கடமாக இருந்தது.
 
“பாட்டி… துளசி சாப்பிட்டாளா?” என்றான் தயக்கமாக.
 
“எங்கப்பா சாப்பிட்டா…‌ ஏதோ கொஞ்சம் கொறிச்சா, நானும் விட்டுட்டேன்.” 
 
“நைட்டுக்கு பசிச்சா என்ன பண்ணுவா?” அளவுக்கு மீறிய அக்கறை அவன் குரலில் தெரிய பாட்டி ஆதியை ஒரு தினுசாக
பார்த்தார்.
 
“சமைச்சதெல்லாம் இருக்கில்ல, போட்டு சாப்பிடட்டும்.” ஒரு கொட்டாவியை வெளியேற்றியவர்,
 
“நான் தூங்குறேன் ஆதி, இந்த நம்பி எங்கடா? என்ன ரொம்ப நேரமா ஃபோனை கட்டிக்கிட்டு அழுறான்?”
 
“ஏதோ முக்கியமான ஃபோன் காலாம் பாட்டி.”
 
“அப்போ சரி, குட்நைட் ஆதி.”
 
“குட்நைட் பாட்டி.” 
சற்று நேரம் சிந்தனையின் வசமிருந்த ஆதி எழுந்து வெளியே வந்தான். காரை எடுத்துக்கொண்டு கடைகள் இருந்த தெருவிற்கு வந்தவன் ஒரு கடையில் கொஞ்சம் பழங்கள் வாங்கி கொண்டான்.
 
பால் பாக்கெட்டுகள் வாங்கினால் வைக்க வீட்டில் ஃப்ரிட்ஜ்ஜும் இல்லை.‌ சங்கரபாணி மேல் கொலை வெறி வந்தது. இன்னொரு கடையில் கேக் இருக்கவே அதையும் வாங்கி கொண்டான்.
 
“எங்க போய்ட்டு வர்றே ஆதி?” காரை இவன் வீட்டிற்கு முன்னால் நிறுத்த வெளியே வந்தான் நம்பி.
 
“பாட்டி தூங்கிட்டாங்களா நம்பி?”
 
“ஆமா.”
 
“துளசி எதுவுமே சாப்பிடலை போலடா.”
 
“ஓ… பரவாயில்லை விடு, இன்னைக்கு ஒரு பொழுதுதானே?” சொன்னவனை முறைத்தான் ஆதி.
 
“ஏன்டா?”
 
“நைட்டுக்கு அவளுக்குப் பசிச்சா குடுக்க வீட்டுல ஒன்னும் இல்லை, அதான் கொஞ்சம் ஃபுருட்ஸ் வாங்கிட்டு வந்தேன்.”
 
“ஓ!” நம்பிக்கு அதற்கு மேல் பேச நா எழவில்லை.
 
‘என்ன இவன்?! இப்படி துளசி மேல் பைத்தியமாக இருக்கிறான்?!’ என்றுதான் எண்ண தோன்றியது.
 
இருவரும் படுக்கைக்கு வந்த பிறகும் ஆதி தூங்கிவிடவில்லை. அவன் அப்புறம் இப்புறமாக கட்டிலில் புரள நம்பி திரும்பி பார்த்தான். ஆதி எழுந்து உட்கார்ந்திருந்தான்.
 
“என்னாச்சு ஆதி?”
 
“நம்பி, என்னால இங்க தூங்க முடியலை, நான் துளசி ரூம்ல தூங்கட்டுமா?”
 
“ஆதி! என்னடா பேசுறே?!”
 
“லுக் நம்பி, எந்த தப்பான அர்த்தத்துலயும் நான் உங்கிட்ட இதைக் கேக்கலைன்னு உனக்கே நல்லா தெரியும், அவ அங்க கஷ்டப்படுறப்போ என்னால இங்க இருக்க முடியலைடா, புரிஞ்சுக்கோ.”
 
“அங்க ஒரு பெட்தான் இருக்கு, நீ எங்க தூங்க போறே?”
 
“ஹால்ல இருக்கிற செயார் ஒன்னைக் கொண்டு போய் போட்டு அதுல தூங்கிக்கிறேன்.”
 
“நீ தேவையில்லாம உன்னைச் சிரமப்படுத்திக்கிற ஆதி.” சொன்ன நம்பியை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு துளசியின் ரூமிற்கு வந்தான் ஆதி.
 
கசங்கிய துணியைப் போல கட்டிலில் படுத்திருந்தாள் துளசி. உடல் உபாதை, வாந்தி எடுத்த சோர்வு எல்லாமாக அவளை வாட்டியது போலும். 
 
நாற்காலி ஒன்றைக் கொண்டு வந்து அவள் கட்டில் அருகில் போட்டவன் ரூம் கதவை நன்றாக திறந்து வைத்தான். நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு ஃபோனை கொஞ்ச நேரம் பார்த்திருந்தான்.
 
எப்போது தூங்கினான் என்று ஆதிக்கே தெரியாது. துளசியின் முனகல் குரல் கேட்கவும் சட்டென்று எழுந்தான். தூக்கத்தில்தான் இருந்தாள். இருந்தாலும் அவள் கை, மடங்கி இருந்த அவளது காலைப் பிடித்தபடி இருந்தது.
 
‘கால் வலிக்கிறதோ?!’ எழுந்து அவள் கால் புறமாக கட்டிலில் உட்கார்ந்த ஆதி அவள் கால்கள் இரண்டையும் இதமாக பிடித்துவிட ஆரம்பித்தான்.
 
ஆடை லேசாக விலக அவள் காலில் இருந்த மெல்லிய கொலுசு அவன் கண்களுக்குத் தெரிந்தது.
 
‘இது இங்கே இருப்பது இத்தனை நாளாக அவனுக்குத் தெரியாதே!’ 
 
“அப்பா…” அந்த தீனமான குரலில் அவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான். 
 
“பரவாயில்லை விடுங்கப்பா…” அவள் தந்தைதான் காலைப் பிடித்து விடுகிறார் என்ற எண்ணத்தில் தூக்கக்கலக்கத்தில் பிதற்றினாள் துளசி. ஆனால் அவன் எதையும் நிறுத்தவில்லை.
 
அதன்பிறகு துளசி ஆழ்ந்து உறங்க ஆரம்பித்தாள். ஆதியும் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து காலைக் கட்டிலின் மேல் போட்டுக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.
 
பொழுது லேசாக புலர ஆரம்பித்த போதே துளசி கண்விழித்து விட்டாள்.‌ நேற்றைய நாள் அவள் பட்ட வேதனை அனைத்தும் காணாமல் போயிருந்தது.
 
ஒவ்வொரு மாதமும் இது ஒரு வேதனை அவளுக்கு. அன்றைக்குப் பாடசாலைக்குக் கூட போக மாட்டாள். வாந்தி எடுத்த பிறகுதான் கொஞ்சம் அமைதி கிடைக்கும் அவளுக்கு.
 
அடுத்த வீடு என்பதால் காமிலாதான் எப்போதும் அவள் உதவிக்கு வருவார். இருந்தாலும் தெருவில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் துளசிக்கு முடியவில்லை என்று தெரிந்து போகும்.
 
மெதுவாக எழுந்து உட்கார்ந்தவள் திகைத்து போனாள்! கட்டிலின் அருகே இருந்த நாற்காலியில் ஆதி உறங்கி கொண்டிருந்தான். அவன் கால்கள் அவளருகே!
 
சடாரென தன் கால்களைக் கொஞ்சம் அப்பால் நகர்த்தி கொண்டாள் துளசி. அந்த அசைவு அவனை எழுப்பியிருக்க வேண்டும்.
 
“துளசி!” என்றபடி பதறிப்போய் எழுந்தான்.
 
“என்னாச்சு? என்ன பண்ணுதுடா?” கனிவான அவன் குரலை உணர்ந்து கொள்ளும் நிலையில் அவள் அப்போது இல்லை. 
 
‘இவன் எப்போது இங்கே வந்தான்?! எதற்காக வந்தான்?!’ அவள் எண்ணவோட்டத்தை முகம் பிரதிபலித்தது போலும்.
 
“என்னால உன்னை இங்க தனியா விட்டுட்டு அங்க நிம்மதியா இருக்க முடியலை.” தவறு செய்த குழந்தைப் போல கையால் பிடரியைத் தடவிக்கொண்டு இப்போது தலைக் குனிந்தான் ஆதி.
 
துளசி இரண்டொரு விநாடிகள் அவனை ஆழ்ந்து பார்த்தாள். அவள் முகத்தில் குழப்ப ரேகைகள் இப்போது தெரிந்தது. எதுவும் பேசாமல் அமைதியாக கட்டிலை விட்டு எழுந்தாள்.
 
“பார்த்து பார்த்து…” அவன் பதறினான். துளசிக்கு சற்று சங்கடமாக இருந்தது. 
 
‘இவனுக்கு எந்த அளவு தற்போதைய தன் நிலைமைத் தெரியும்?!’ லேசாக கன்றி சிவந்த அவள் முகம் பார்த்து அவன் முகம் கனிந்து போனது. 
 
அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் தவித்த பெண்ணின் அருகில் வந்தவன் அவள் கரத்தை ஆதரவாக பிடித்தான்.
 
“எங்கிட்ட என்ன வெட்கம் துளசி?” அந்த வார்த்தைகளில் அவளுக்கு மூச்சடைத்தது. கையை மெதுவாக விலக்கிக்கொண்டாள்.
 
“நீங்க… நீங்க கொஞ்சம் வெளியே இருக்கீங்களா?” தடுமாறியது பெண்.
 
“சரிடா.” ஒப்புக்கொண்டாலும் லேசாக வலித்தது ஆதிக்கு. இந்த விலகல் இந்த நேரத்தில் பெண்களுக்கே உரித்தான இயல்பு என்று அவனுக்குப் புரியவில்லை.
 
ஒரு பெருமூச்சோடு அவன் ரூமை விட்டு வெளியேற தனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டாள் துளசி. அவள் வெளியே வந்த போது அங்கேயே அவளுக்காக காத்திருந்தான் ஆதி.
 
“இப்போ குளிக்க போறியா என்ன?!” அவள் கையில் மாற்றுடை, டவல் என அனைத்தும் இருக்க அவன் திகைத்துப்போய் கேட்டான்.
 
“ம்…”
 
“இந்நேரத்துக்கு எப்பிடி துளசி?”
 
“பரவாயில்லை… பழக்கம்தான்.”
 
“அதுக்காக, இப்போ…” அவன் முடிக்கவில்லை. உன் கவலை அனாவசியம் என்பது போல அப்பால் நகர்ந்தாள் துளசி.
 
கிச்சனுக்கு அடுத்தாற்போல சிறிய இடமொன்று சுவர் எழுப்பப்பட்டு மறைவாக இருந்தது. பெண்கள் குளிப்பதென்றால் அங்குதான் குளிக்க வேண்டும். 
 
அந்த இடத்தில் தனது மாற்றுடைகளை வைத்துவிட்டு தண்ணீர் இறைக்க பக்கெட்டுடன் கிணற்றை நோக்கி வந்தாள் பெண்.
 
“ஐயையோ! இதெல்லாம் நீ பண்ண வேணாம்.” அவள் கிணற்றின் கையிற்றை அணுகு முன்பாக அவன் அங்கே வந்து சேர்ந்திருந்தான்.
 
நேற்று கிணற்றிலிருந்து நம்பி நீர் இறைப்பதைப் பார்த்திருந்ததால் அவனால் இப்போது இலகுவாக வேலை செய்ய முடிந்தது. கண் கண்டால் கை செய்துவிட்டு போகிறது!
 
நான்கைந்து பக்கெட்களில் நீரை நிரப்பியவன் அதை குளிக்கும் இடத்தில் கொண்டு போய் வைத்தான்.
 
“உங்கப்பாக்கு அறிவே இல்லையா?” இதுவரை அவன் முகத்திலிருந்த இதம் காணாமல் போக, இப்போது கோபம் முன்னறிவிப்பு இல்லாமல் வந்திருந்தது.
 
“ஏன் இப்பிடி பேசுறீங்க?”
 
“பின்ன என்ன துளசி, இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கிற வீட்டுல ஒரு பாத்ரூம் கட்டணும்னு அவருக்குத் தோணிச்சா?”
 
“நான் இங்க இல்லையே, இருக்கிற வீட்டுல அழகா கட்டி குடுத்திருக்காங்க.” அவள் பதிலில் அவன் முகத்தில் இன்னும் கோபம் அதிகமானது. எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டான்.
 
துளசி குளித்துக்கொண்டு இருக்கும்போது பாட்டி எழும் சத்தம் கேட்கவே ஆதி மெதுவாக அவன் ரூமிற்குள் போய் அடைந்து கொண்டான்.
 
“துளசிம்மா, குளிக்கிறியா?” பாட்டியின் குரல் ஆதிக்கு கேட்டது. பாட்டி எழுந்து விட்டார் என்று தெரிந்ததும் சிறிது நேரம் தூங்கலாம் என்று கண்ணை மூடிக் கொண்டான்.
 
ஆத்ரேயனுக்கு விழிப்பு வந்த போது வீடே அமைதியாக இருந்தது. சட்டென்று எழுந்து உட்கார்ந்தவன் வெளியே வந்தான். துளசி கிச்சனில் ஏதோ செய்வது தெரிந்தது. காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வந்தான்.
 
“பாட்டி, நம்பியெல்லாம் எங்க?”
 
“பக்கத்துல இருக்கிற கோயிலுக்குப் போயிருக்காங்க.”
 
“ஓ… நீ போகலை…” பேச்சின் அபத்தம் புரிய வார்த்தைகளை விழுங்கி கொண்டான்.
 
“என்ன பண்ணுற துளசி?”
 
“இந்த தெருவிலேயே ஃப்ரெஷ்ஷா மாவு கிடைக்குமாம், பாட்டி வரும்போது வாங்கிட்டு வர்றேன்னு சொன்னாங்க, சட்னி அரைச்சிட்டா தோசை வார்த்துக்கலாம்.”
 
“ஓ…” தேங்காயை அவள் ஒரு பெரிய கத்தியால் உடைக்க, அதை வினோதமாக பார்த்தான் ஆதி.
 
“இதை என்ன பண்ணணும்?”
 
“கீறி எடுக்கணும்.” சொல்லிவிட்டு அவள் செய்ய ஆரம்பிக்க ஆதி அவளிடமிருந்து அதை வாங்கி கொண்டான்.
 
“நான் பண்ணுறேன் நீ உட்காரு.”
 
“இல்லை பரவாயில்லை, நீங்க கையை வெட்டிக்க போறீங்க.”
 
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது நீ ரெஸ்ட் எடு.” சொல்லிவிட்டு அவள் செய்தது போல கவனமாக தேங்காயைச் சில்லுகளாக வெட்டி எடுக்க ஆரம்பித்தான்.
 
“இந்த வேலையெல்லாம் உங்களுக்குப் பழக்கமில்லை.”
 
“நோ ப்ராப்ளம், பழகிக்கிறேன்.” மடமடவென்று அவன் வேலையை முடிக்க இப்போது துளசி அம்மியைக் கழுவினாள்.
 
“அது எதுக்கு?”
 
“சட்னியை இதுலதான் அரைக்கணும்.”
 
“ஓ… அது எப்பிடி பண்ணணும்னு சொல்லிக்குடு.” அவன் இலகுவாக கேட்க அவள் திகைப்பின் உச்சத்திற்குப் போனாள்.
 
“என்ன விளையாடுறீங்களா?” அவள் குரலில் இப்போது கோபம் இருந்தது.
 
“ஹா… ஹா… என் துளசிக்கு கோபமெல்லாம் வருமா?” அந்த உரிமையான பேச்சில் அவள் திக்குமுக்காடினாள்.
 
“இது பொண்ணுங்க பண்ணுற வேலை.”
 
“அப்பிடின்னு யாரு சொன்னது? எந்த உலகத்துல இருக்க துளசி நீ?!”
 
“ப்ளீஸ்… நீங்க முன்னாடி போய் உட்காருங்க, இதை நான் பார்த்துக்கிறேன்.”
 
“ம்ஹூம்… முடியாது, நேத்து எவ்வளவு கஷ்டப்பட்டே நீ! உன்னை சமைக்க விட்டுட்டு என்னை வேடிக்கைப் பார்க்க சொல்றியா?”
 
“ப்ளீஸ்… போங்களேன்!” அவள் எவ்வளவு கெஞ்சியும் அவன் அந்த இடத்தை விட்டு நகரவில்லை.
 
கடைசியில் அவள்தான் அவன் வழிக்கு வரவேண்டி இருந்தது.
அம்மியில் அவள் ஒவ்வொன்றாக வைக்க வைக்க அவன் சட்னியை அழகாக அரைத்தெடுத்தான். துளசிக்கே ஆச்சரியமாகி போனது.
 
“உங்க வைஃப் ரொம்ப குடுத்து வெச்சவங்க.” பாடசாலையில் இயல்பாக பேசுவது போல பேசிவிட்டு நாக்கைக் கடித்து கொண்டாள் பெண். அவன் கண்கள் சிரித்தன.
 
“இல்லை… கிச்சன் வேலை உங்களுக்கு ரொம்ப நல்லா வருது…” ஏதாவது பேசி சமாளிக்க வேண்டும் என்பதற்காக உளறினாள் அவள். 
 
“ம்ஹூம்… அப்பிடியா?!” அவன் குரலில் கேலி அப்பட்டமாக தெரிந்தது. அவள்… இப்போது தலையைக் குனிந்து கொண்டாள்.
 
***
 
அந்த ப்ளாக் ஆடி உல்லாசமாக பிச்சாவரம் காட்டை நோக்கி போய்க்கொண்டிருந்தது. சாம்பல் வண்ண புடவையில் மெரூன் நிறத்தில் பெரிய பெரிய பூக்கள் போட்ட சில்க் சேலை அணிந்திருந்தாள் துளசி, பக்கத்தில் அவன்!
 
இருவரும் மட்டும் கிளம்பி வந்திருந்தார்கள். சட்னி அரைத்து முடித்த கையோடு பாட்டியும் நம்பியும் வந்துவிட தோசை வார்த்து சாப்பிட்டார்கள்.
 
பாட்டி நடராஜர் கோயிலிலுக்குப் போக வேண்டும் என்று கிளம்பிவிட்டார். அவர் சிதம்பரம் வந்ததே அதற்காகத்தானே!
 
“துளசி, நீ தனியா சமாளிச்சுப்பே இல்லை?”
 
“ஒன்னும் ப்ராப்ளம் இல்லை பாட்டி, நீங்க தாராளமா‌ போய்ட்டு வாங்க.”
 
“ஆதி, அந்த கோயிலைப் பார்த்தா நீ பிரமிச்சு போயிடுவே!” பாட்டி ஆர்வத்தோடு சொன்னார்.
 
“நான் அங்க வரலை பாட்டி.” திடுமென ஆதி சொல்ல மற்றைய மூவரும் அவனை ஆச்சரியமாக பார்த்தார்கள்.
 
“ஏன்டாப்பா?”
 
“துளசி தனியா இருக்கா இல்லை, இப்பிடி எல்லாரும் போனா எப்பிடி?” மனதிலிருப்பதை ஆதி வெளிப்படையாக எந்த ஒளிவு மறைவுமின்றி சொல்லியே விட்டான்.
 
“இல்லை…‌ நான் பார்த்துக்கிறேன், நீங்க கிளம்புங்க.” இளையவளின் குரல் தயக்கத்தோடு வந்தது. 
நம்பி கூட கொஞ்சம் திகைத்து நின்றாற் போலத்தான் தெரிந்தது. பாட்டிக்கு எக்ஸ்ரே கண். எதையாவது கண்டுபிடித்து விட்டால் வம்பாகி போய்விடும். ஆனால் பாட்டி எதையும் தவறாக நினைக்கவில்லை போலும்!
 
“நீ இங்க இருந்து என்ன பண்ண போறே ஆதி? துளசிக்கு சமைச்சு போட போறியா?” சிரித்துக்கொண்டே கேலியாக பெரியவர் கேட்டாலும் சற்றுமுன் நடந்தது அதுதானே! துளசியின் தலை இப்போது தானாக குனிந்தது.
 
“இல்லை பாட்டி, எல்லாரும் வெளியே கிளம்பி போறது எனக்கென்னவோ சரியா படலை.” சொல்லிவிட்டு நம்பியை ஒரு முறைப்பு முறைத்தான் ஆதி.
 
‘உடனேயே என் உதவிக்கு நீ இப்போது வரவேண்டும்!’ என்ற ஆணை அதில் இருந்தது.
 
“நேரம் போகுது பாட்டி, நாம கிளம்பலாம், ஆதி இங்கேயே இருக்கட்டும், எனக்கும் அதுதான் சரின்னு தோணுது.” இது நம்பி.
 
“இவ்வளவு தூரம் வந்திட்டு நடராஜரை ஆதி பார்க்கலைன்னா எப்பிடி நம்பி?!”
 
“நான் அடுத்த தடவை வரும்போது பார்த்துக்கிறேன் பாட்டி.”
 
“அடுத்த தடவையா?!”
 
“அவன்தான் இங்க பிஸினஸ் ஆரம்பிக்குற ஐடியால இருக்கான் இல்லை பாட்டி.” எதையெதையோ சொல்லி பாட்டியை சமாளித்து அழைத்துக்கொண்டு போனான் நம்பி.
 
“நானும் துளசியும் வெளியே போகணும், நீ ஒரு டாக்ஸி பிடிச்சு போ நம்பி.” நண்பனிடம் ரகசியம் பேசினான் ஆதி.
 
“டேய் ஆதி, வேணான்டா… ஏதாவது தப்பாகிட போகுது!”
 
“அது ஒன்னும் ஆகாது, நீ முதல்ல இடத்தைக் காலி பண்ணு!” 
அவர்கள் இருவரும் கிளம்பிய பிறகுதான் ஆதிக்கு மூச்சு சீராக வந்தது. துளசியை திரும்பி பார்த்தான். உள்ளே போக திரும்பி கொண்டிருந்தது பெண்.
 
“துளசி!” அவன் குரலில் அவள் நின்றாள்.
 
“நாம இப்போ வெளியே போறோம்.”
 
“எங்க?!”
 
“கிளம்பு சொல்றேன்.”
 
“என்னால… இப்போ…” அவள் மேலே சொல்ல தயங்கினாள். அவனைத் தவிர்த்து விடும் நோக்கம் மட்டுமே இப்போது அவள் மனதில் இருந்தது.
 
“பொய் சொல்லாதே! நீ பர்ஃபெக்ட்லி ஆல்ரைட் ன்னு எனக்கு நல்லாவே தெரியும், சும்மா ஆர்க்யூ பண்ணாம கிளம்பும்மா.”
 
ஆத்ரேயனுக்கு மலையைப் பிளந்து விட்டால் போல இருந்தது! இந்த பெண்ணைக் கொஞ்சம் வெளியே அழைத்து வர எத்தனைப் பாடுபட வேண்டி இருக்கிறது!
 
கை காரின் சவுண்ட் சிஸ்டத்தை உயிர்ப்பித்தது. தமிழ் பாடல்களை இப்போதெல்லாம் ஆதி விரும்பி கேட்கிறான். அது நம்பியின் உபயம்.
 
‘சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு…’ பாடல் ஆதிக்கு இலவச தகவல் வழங்க சட்டென்று துளசியை திரும்பி பார்த்தான்.
 
“உண்மையா என்ன?” அவன் கேட்க அவள் சிரித்தாள்.
 
“அம்மாவோட ஒன்னு ரெண்டு புடவைகளை இன்னும் வாஷ் பண்ணாம அப்பிடியே வெச்சிருக்கேன்.”
 
“ஓ…” அவன் முகம் இப்போது கனிந்து போனது.
 
“சில நேரங்கள்ல அம்மா கூடவே இருக்கிற மாதிரி இருக்கும்.”
 
“ம்… ஆனா எனக்கு அப்பிடி தோணினது இல்லை.”
 
“ஏன்?!”
 
“ஏன்னா எங்கம்மாதான் புடவைக் கட்டினதே இல்லையே!” அவன் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்ல அவள் தன்னை மறந்து சிரித்து விட்டாள். 
 
காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு இருவரும் இறங்கினார்கள். சதுப்பு நிலம் என்பதால் வெயிலின் தாக்கம் அவ்வளவாக அங்கே தெரியவில்லை.
 
படகில் ஏறி இருவரும் அந்த இடத்தைச் சுற்றி பார்த்தார்கள். துளசி ஏற்கனவே வந்த இடம்தான்.
இருந்தாலும் இருபுறமும் மாங்குரோவ் மரங்கள் அடர்ந்த அந்த நீர்நிலையில் பயணிப்பது சுகமாக இருந்தது.
 
படகில் ஏற, இறங்க என்று ஆதி அவளை வெகுவாக கவனித்து கொண்டான். அதிகம் நடக்க வேண்டிய இடங்களைத் தவிர்த்து விட்டு பயணத்தை இலகுவாக்கி, அதேநேரம் ரசிக்கும்படியாகவும் பார்த்து கொண்டான்.
 
ஆனால் ஒன்றேயொன்று மட்டும் அவனுக்கு இதுவரை அமையவில்லை… அவளோடான அவன் நாடிய தனிமை!
 
“துளசி…” அவன் எதையோ சொல்ல தயங்க பெண் அவனைக் கூர்ந்து பார்த்தாள்.
 
“என்ன…”
 
“கொஞ்ச தூரம் நடக்கலாமா? முடியுமா உன்னால? கஷ்டமா இருந்தா வேணாம்!” வாக்கியத்தின் இறுதி பகுதியை அவன் பதறிக்கொண்டு சொல்ல துளசி சிரித்தாள்.
 
‘இவ்வளவுதானா? இதைக் கேட்பதற்கா இவன் இவ்வளவு தயங்கினான்?’ 
பெண் வேறெதையும் ஏதிர்பார்த்ததோ?!
 
“இல்லை… நீ இப்போ ரெஸ்ட் எடுக்க வேண்டிய நேரம்… நான்…” 
 
“பரவாயில்லை…” அவன் விளக்கத்தில் அவளுக்குச் சிரிப்பு வந்தது. லீவ் போட்டிராவிட்டால் இன்றைக்கு அவள் பாடசாலைப் போயிருக்க வேண்டும். அதைச் சொன்னால் இவன் என்ன செய்வானாம்?!
 
“அங்க சின்னதா ஒரு ப்ரிட்ஜ் இருக்கு, அதுவரைக்கும் நடக்கலாமா?”
 
“ம்…” துளசி தலையை ஆட்ட இருவரும் நடந்தார்கள். மரத்தாலான தொங்கு பாலம் அது. இருபுறமும் மரங்கள் அடர்ந்திருக்க பார்க்கவே ரம்மியமாக இருந்தது அந்த இடம்.
 
ஆதி சுற்றி வர ஒருமுறைத் தன் கண்களை ஓட்டினான். அவன் கண்களுக்கு யாரும் தென்படவில்லை. தென்பட்டாலும் இன்றைக்கு அவன் கவலைப்படுவதாக இல்லை.
 
“துளசி, உங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்.” அவன் திடீரென்று சொல்ல துளசி அவனைக் கேள்வியாக பார்த்தாள். மனதுக்குள் ரயில் ஓடியது.
 
“எம்மனசுல என்ன இருக்குன்னு உனக்குத் தெரியும் துளசி, புரியாத மாதிரி ஏன் நடிக்கிறேன்னுதான் எனக்குப் புரியலை.” இப்போது பெண்ணின் தலை லேசாக குனிந்தது. 
 
“துளசி… என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?” ஆதி கேட்டே விட்டான்! துளசி இப்போது திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அவள் விழிகள் இமைக்க மறந்து அவனை வெறித்து பார்த்தன.
 
“எனக்குப் பதில் சொல்லு, எனக்கு இன்னைக்கே இதுக்குப் பதில் தெரிஞ்சாகணும்!” அவன் குரலில் பிடிவாதம் இருந்தது.
 
“என்ன… இது?” அவள் திணறினாள். பேச்சு தடுமாற கண்களில் லேசாக நீர் கோர்த்தது.
 
“என்ன இதுன்னா என்ன அர்த்தம்? உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு எம்மனசுல ஆசை இருக்கிறது உனக்குத் தெரியாது?” நயமான வார்த்தைகள் இவளிடம் எடுபடாது என்று நினைத்தானோ என்னவோ, கோபத்தைத் தற்போது ஆயுதமாக தன் கையில் ஏந்திக்கொண்டான்.
 
“பதில் சொல்லு துளசி!” அவன் வார்த்தைகள் அவளை வற்புறுத்தியது.
 
“என்னோட நிலைமை தெரியாம நீங்க பேசுறீங்க.”
 
“டாமிட்! பொல்லாத நிலைமை! என்ன கோபப்படுத்தாத துளசி!” ஆக்ரோஷமாக பேசினான் ஆத்ரேயன். அவள் சுற்றும்முற்றும் ஒரு முறைப் பார்த்தாள். அந்த இடத்தில் நல்லவேளையாக யாரும் இருக்கவில்லை.
 
“நீ என்னைப் பார்த்து பேசு.” 
 
“இது சரி வராது!” உறுதியாக சொன்னாள்.
 
“ஏன்?” அந்த ஒற்றை வார்த்தையால் அவளைக் கூறு போட நினைத்தானோ?! கூரிய அம்பாக வந்து வீழ்ந்தது வார்த்தை.
 
“அது உங்களுக்கே தெரியும்.” அவள் முகத்தை வலப்புறமாக திருப்பிக்கொண்டு பதில் சொல்ல ஆதி கோபத்தின் உச்சத்திற்குப் போனான்.
 
முகம் சிவந்து போக எட்ட நின்றவளின் தோள்களைத் தன் இரு கைகளாலும் பிடித்து தன்னை நோக்கி இழுத்தான். துளசி திடுக்கிட்டு போனாள்!
 
தன் காதலை, ஆசையை இதுவரை வாய் வார்த்தைகளாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் அவளுக்கு உணர்த்தியவன்… ஆனால் எப்போதும் கண்ணியம் தவறியதில்லை!
 
இன்று காலையில் கூட அவள் கையை அவன் பிடித்தான். ஆனால் அது ஒரு ஆதரவான செய்கை. நோய்வாய்ப்பட்ட நேரத்தில் டாக்டரும் நர்ஸும் நம் கரத்தை ஆதரவாக தட்டிக்கொடுப்பதில்லையா, அதுபோல!
 
ஆனால்… இது அவன் முதல் தீண்டல்! உரிமையான முதல் தீண்டல்! பெண் அதிர்ந்து போய் நின்றிருந்தது!
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!