நிஹாரி-10

IMG-20211003-WA0016-3c275570

நிஹாரி-10

அந்தத் தெருவிலிருந்த அனைவரும் உறக்கத்தைக் காதலோடு கட்டித் தழுவியிருந்தனர். மணி பதினொன்று முப்பது.

தெருவின் இருபக்கமும் இருபதடி இடைவெளியில், மரங்கள் செழித்து வளர்ந்திருக்க, அந்த நடுஇரவை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையும், இரவின் அமைதியும், தென்றலும் இதமாய் வருடியது, அங்கு உறங்கிக் கொண்டிருந்த அத்தெருவின் நாய்களையும் அதன் அழகிய குட்டிகளையும்.

“எனக்கு இரண்டு வேணும்” வெள்ளை நிற டாப்ஸும், வானின் நீல நிறத்து ஸ்கர்ட்டும் அணிந்து, தனது போனி டெயில் அசைந்தாட நிஹாரிகா ரிஷ்வந்திடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

“அதெல்லாம் வேணாம்” அவளது கையைப் பிடித்துத் தடுத்தவன் அவளைக் கண்டிக்க,

“ப்ளீஸ்.. ப்ளீஸ்” அவள் தன் விழிகளை சுருக்கி, இதழ்களை சுளித்துக் கேட்க, அவர்கள் அருகில் நின்றிருந்தவனோ நிஹாரிகாவை பார்வையாலேயே கபளீகரம் செய்து கொண்டிருந்தான்.

அவனின் பார்வையை கண்ட ரிஷ்வந்த் கோபம் தலைக்கேற, முதலில் நிஹாரிகாவைக் கடிய நினைத்தவன், அதைக் கைவிட்டு அவனிடம் திரும்பினான்.

எத்தனை நாள் பெண்களையே குற்றம் சாட்டுவது!

இப்படி இருப்பதால் தானே, இன்றும் தனது கண்களாலேயே பெண்களைக் கூனிக்குறுகி நிற்க வைத்துவிடுகிறார்கள்.

அழகை ரசிப்பதில் தவறில்லை.

ஆனால், அழகை ரசிப்பதற்கும், தவறான கண்ணோட்டத்தோடு வெறிப்பதற்கும் வித்தியாசங்கள் ஏராளம் இருக்கிறதே!

அதுவும் அவனின் பார்வை நிஹாரிகாவின் வெண் சங்குக் கழுத்திற்குக் கீழேயே பதிந்திருந்தது.

அதில் ஆத்திரமடைந்த ரிஷ்வந்த், நிஹாரிகாவையே பார்த்துக் கொண்டிருந்தவன் முகத்தின் முன் சொடக்கிட்டு, “ஏய், வாங்கிட்டல, கிளம்பு” அதிகாரக் குரலில் கர்ஜிக்க, ரிஷ்வந்தின் கண்களில் தெரிந்த பளபளப்பிலும், முகத்தில் தெரிந்த ஆக்ரோஷத்திலும், அவனோ தனது குல்பி வண்டியைத் தள்ளிக்கொண்டு ஓடியேவிட்டான்.

“டேய், ஏன்டா இப்படி பண்ற? எனக்கு இன்னொரு குல்பி வேணும்” நிஹாரிகா சண்டையிட,

“அறைஞ்சேன்னா பாரு” கையை ஓங்கியவன், “அவன் எப்படி பாக்கறான், எங்க பாக்கறான்னு தெரியாம எங்கிட்ட சண்டைப்போட்டுட்டு இருக்க?” ரிஷ்வந்த் கத்த, அவன் கைகளிலிருந்த பிஸ்தா ப்ளேவர் குல்பியைப் பறித்தவள், தலையை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு செல்ல, அவள் பின்னே போட்டிருந்த போனி டெயிலோ முன்னால் சென்று விழுந்தது.

“டேய், அவளை ஏன்டா திட்டறே?” கவின் ரிஷ்வந்திடம் வினவ,

“பின்னே திட்டாம” என்றவனின் பார்வை முன்னால் சென்று கொண்டிருந்த நிஹாரிகாவின் மீது பதிந்தது.

இடது கையில் மேங்கோ ப்ளேவர் குல்பியும், வலது கையில் அவனது பிஸ்தா ப்ளேவரையும் வைத்திருந்தவள், இரண்டையும் மாற்றி மாற்றி சுவை பார்த்துக்கொண்டே செல்ல ரிஷ்வந்திற்கு எரிச்சலும், சிரிப்பும் கலவையாக எழுந்தது.

‘என்னோடத வாங்கிட்டுப் போனதும் இல்லாமா.. எதுமே நடக்காத மாதிரி தின்னுட்டு போறா பாரு’ மனதிற்குள் நினைத்தவன் ஓடிச்சென்று அவளின் தோளில் சுற்றி கைபோட்டுக் கொண்டான்.

அவனை முறைத்தவள், “போ, அவன்கிட்ட போய் சண்டைப் போடு” என்றாள்.

புரியாமல் பார்த்தவனிடம், “ஏன்டா, அவன் பாக்கறது உனக்கு முன்னாடியே எனக்குத் தெரியும். அதுகூடவா தெரியாது எனக்கு. நம்மளே இப்பதான் எக்ஸாம் முடிச்சிட்டு வீட்டுல கஷ்டப்பட்டுக் கேட்டு மிட் நைட்ல குல்பி சாப்பிட வந்திருக்கோம். இதுல பிரச்சனை எல்லாம் தேவையா?” அவனின் கை வளைவிற்குள் நின்றபடியே அவள் பேச, ஏதோ சொல்ல வந்தவனைத் தடுத்து மீண்டும் தொடங்கினாள்.

“நீ சொல்ல வர்றது புரியுது. என்னை மீறி என்மேல யாராலையும் கை வைக்க முடியாது” என்றாள். அவளது குரலில் அத்தனை உறுதி.

“வச்சா என்ன ஆகும்னு உனக்கே தெரியும்” என்றவள், தனது சுவை அரும்புகள் மீண்டும் கெஞ்ச குல்பியை கவனிக்கத் தொடங்கினாள்.

ரிஷ்வந்த் அவள் சொன்னதின் அர்த்தம் புரிந்தவனாய் தலையைக் கோதியபடி சிரித்தான்.

அன்றைய நாள் அவனின் கண்முன் வந்தது.

***

அன்று அவர்களது பன்னிரெண்டாம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் முடிந்த நாள். அந்தத் தளம் முழுதும் சிரிப்பும், விளையாட்டும், கும்மாளமுமாக இருந்தது.

வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை மற்றவர்கள் மேல் ஊற்றிக்கொண்டும், பேனாவில் மீதமிருந்த இன்க்கை நண்பர்களின் மேல் சிதறடித்துக்கொண்டும், பெஞ்ச்சின் மேலேறி தாவிக்கொண்டும் இருக்க, ஆசிரியர்கள் கூட சத்தம் போட்டால் கூட இவர்கள் யாரும் அடங்கப்போவதில்லை என்று இறுதி நாளை அவர்களின் போக்கில் விட்டுவிட்டனர்.

அன்பின் சட்டையில் தண்ணீரை ஊற்றிவிட்டு, ரிஷ்வந்த் ஓடிச் செல்ல திரும்ப அவனின் சட்டையில் வந்து இன்க் பிடித்துக்கொண்டது.

ரிஷ்வந்த் நிமிர, “ச்சுச்சுசு! ஸாரிடா தெரியாம பட்டிருச்சு” நிஹாரிகா அதரங்களைப் பிதுக்கி சாதாரணமாகப் பேசுவதுபோல் கேலி செய்ய,

“க்ரீஸ் டப்பாவ எப்படி எட்டி ஒதச்ச.. இப்படித்தான” என்றவன் அவள் அசரும் முன், தனது பாண்ட் பாக்கெட்டில் இருந்த இரண்டு பேனாக்களையும் எடுத்து அவளின் மேல் இன்க்கை சிதறடித்தான்.

“இருடா உன்னை..” என்றவள் தனது ஸ்கூல் பேக்கில் வைத்திருந்த இன்க் பாட்டிலை ஓடிச்சென்று எடுக்க,

“ஏய் ஜிலேபி வேணாம்” ரிஷ்வந்த் ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்க, அதற்கெல்லாம் பின்வாங்குபவளா அவனின் தோழி.

“ஆஹான்..” இன்க் பாட்டிலின் மூடியை அவள் திறக்க, ரிஷ்வந்தோ பெஞ்ச்சின் மேல் ஏறியவன், நான்கே தாவில் வகுப்பின் இறுதியில் இருந்து வகுப்பின் முதல் பெஞ்ச்சிற்கு வந்தவன், கீழே குதித்து நிஹாரிகாவைத் திரும்பிப் பார்த்து, ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேலியாய் இதழ் விரியாமல் சிரித்தவன், வெளியே ஓட, நிஹாரிகாவும் அனைவரையும் இடித்து நகர்த்திவிட்டு வெளியே வந்தாள்.

வந்தவள் அவனைத் துரத்திக்கொண்டு ஓட படியில் இறங்குவதுபோலச் சென்றவன், திரும்பும் இடத்தில் கையை ஊன்றி ஒரே தாவில் சுற்றி அதே தளத்தில் நிற்க, அவனைத் துரத்திக் கொண்டு வந்தவளோ அவன் திடீரென்று ஒரே எட்டில் குதிக்கவும், நிற்க முடியாமல் படியில் வந்துகொண்டிருந்த ஆசிரியரின் மீது இடித்துவிட்டாள்.

இருவரும் திகைத்து நிற்க, ரிஷ்வந்த் தான் முதலில் சுதாரித்தது.

“ஸார், ஆக்சுவலி..” அவன் தொடங்க அவனைப் பேசவிடாமல் கை நீட்டித் தடுத்தவர்,

“நீ போ” என்றார்.

ரிஷ்வந்த் நிஹாரிகாவை விட்டுவிட்டு எப்படிச் செல்வான்?

அவன் அசையாமல் நேராக நிற்க, அவனை மேலிருந்து அளந்த ஆசிரியர், “என்ன எக்ஸாம் முடிஞ்சு திமிரா?”

“டிசி இன்னும் எங்ககிட்ட தான் இருக்கு.. ரிமெம்பர் தட்” என்று மிரட்டும் தொணியில் பேச, பதற வேண்டியவனோ அசையாமல் நிற்க, இருவருக்கும் இடையில் நின்றிருந்த நிஹாரிகா தான் ரிஷ்வந்திற்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று பதறிவிட்டாள்.

ரிஷ்வந்திடம் திரும்பியவள், ‘நீ போ’ என்பதுபோலக் கெஞ்ச அவனோ, ‘நான் இங்கிருந்து அசையமாட்டேன்’ என்னும் பாவனையில் தாடை இறுகி அதில் திமிரோடும், கண்களில் இறுமாப்போடும் நின்றிருந்தான்.

அவனைப் பொறுத்தவரை நிஹாரிகாவை யாரிடமும் தனியே விட்டுச் செல்ல அவனிற்குள் இருக்கும் நட்பும், ஆணவமும் விடாது.

இந்த வயதில் அவன் நிற்கும் தோற்றம் பார்த்த ஆசிரியர், “கம் வித் மீ, டூ தி ஸ்டாப் ரூம்” அதிகாரத்தோடு நிஹாரிகாவிடம் சொன்ன ஆசிரியர், முன்னே செல்ல, இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட்ட நிஹாரிகா,

“டேய், நீ போ. ஸ்டாப் ரூம் தானே. அங்க எல்லா ஸ்டாப்ஸும் இருப்பாங்க” நிஹாரிகா அவனிற்கு மட்டும் கேட்கும் குரலில் பேச, “ம்ம்” என்றவன் அழுத்தமாய் நின்றிருந்த இடத்திலிருந்து தனது நீண்ட கால்களை நகர்த்தினான்.

வகுப்பிற்குள் வந்தவனின் முகத்தில் எரிச்சலின் சாயல் படர்ந்திருக்க, அவனின் முகத்தைக் கவனித்த கவினும், அன்பும் விசாரிக்க, நடந்ததைக் கூறியவன்,

“அந்த ஆள் சரியில்லைன்னு நமக்கே தெரியும்.. அதான் நான் அங்க இருந்து நகரவே இல்ல.. ஆனா, இப்ப எரிச்சலா இருக்கு” ரிஷ்வந்த் பேசிக்கொண்டு இருக்கும்போது அங்கு வந்த சக்தி அனைத்தையும் கேட்டுவிட்டாள்.

சக்தியின் சித்தி இங்கு தானே பல வருடங்களாக ஆசிரியராக பணி புரிகிறாள்.

நேற்று சித்தி வீட்டிற்கு வந்தபோது கூறியது நினைவில் எட்ட, “ரிஷ்வந்த், இன்னிக்கு ரீச்சர்ஸுக்கு மீட்டிங் டா. நம்ம எக்ஸாம் முடிஞ்சவுடனே எல்லாரும் ஆடிட்டோரியம் போயிட்டாங்க” அவள் சொன்னதுதான் தாமதம், அர்ஜூனனின் வில்லிலிருந்து சீறிப்பாய்ந்த அம்புபோல ஓடினான் ரிஷ்வந்த். அவன் பின்னேயே சக்தியும், கவினும், அன்பும்.

காற்றைக் கிழித்துக்கொண்டு ஓடும் இளம் இரத்தத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் இளரத்தங்களும் பின்னேயே ஓட, ஸ்டாப் ரூமின் முன்னே சென்றவன் கதவைத் தள்ள, அதுவோ உள்ளே தாழிட்டு இருந்தது.

வெறும் சாதாரண ஃபைபர் ப்ளாஸ்டிக்கினால் இருந்த கதவு அது.

எதைப் பற்றிய சிந்தனையையும், பின்விளைவையும் யோசிக்காதவன், கதவை ஆங்காரமாய் எட்டி உதைக்க, படாரென்ற சத்தத்தோடு தாழ்ப்பாள் உடைய கதவை அடித்துத் திறந்தான் ரிஷ்வந்த்.

திறந்தவன் கீழே விழுந்து கிடந்த ஆசிரியரைத் தான் முதலில் கண்டது.

அருகே கோபத்தோடும், ஆக்ரஷோத்துடனும் நின்றிருந்த நிஹாரிகா, “சம்பேஸ்தான்னு ரா”(கொன்னுடுவேன் டா) என்று சிம்மக் குரலில் கர்ஜித்தவள், தன் நண்பர்களிடம் திரும்பினாள்.

யாரையும் பார்க்காமல் நேராய் ரிஷ்வந்திடம் வந்தவள், அவனின் கையோடு தனது கையைச் சற்றிப் பிடித்து, “வாடா போலாம்” என்றிட, தனது இடது கையைப் பிடித்திருந்த அவளின் கரத்தின் மேல் தனது வலது கரத்தை வைத்தவன்,

“என்ன நடந்துச்சு?” வினவ,

“வேணாம் போலாம் வா. என்கிட்ட வாங்குன்ன அடிக்கு அவன் நடக்கிறதே கஷ்டம்” விழுந்து கிடந்தவனைத் திரும்பி முறைத்தபடி நிஹாரிகா சொல்ல,

“என்ன நடந்துச்சு” மீண்டும் கூரிய விழிகளுடன், தன்னருகில் இருந்த நிஹாரிகாவை நோக்கி, கழுத்தைச் சாய்த்து தலைகுனிந்து அவளை ஊடுருவும் குரலில் கேட்டான். அவனை நிமிர்ந்து பார்த்திருந்தவள் அந்த ஆழ்ந்த பார்வையிலும், கேள்வியின் அழுத்தத்திலும் நிஹாரிகாவின் உதடுகள் அனைத்தையும் ஒப்பிக்கத் தொடங்கியது.

பத்து நிமிடத்திற்கு முன்..

தன்னை அழைத்து வந்த ஆசிரியரை பார்த்தபடியே நின்றிருந்தாள் நிஹாரிகா.

வந்ததிலிருந்து தன் இருக்கையில் அமர்ந்தபடி நிஹாரிகாவையே பார்த்திருந்தவனின் பார்வை சரியில்லை என்று அவளுக்கு தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.

“ஸார், ஐ ஹாவ் டு லீவ்” எச்சரிக்கும் தொணியுடன் நிஹாரிகா பேச,

“அவன் யாரு உன் பாய் பிரண்ட்ஆ?” அவளின் அருகில் வந்து நின்றபடி அந்த ஆசிரியர் வினவ, அவரை முறைத்தபடி நிஹாரிகா விலகி நின்றாள்.

பாவம் அவளின் பின்புலமும் அவனுக்குத் தெரியவில்லை. அவளின் தைரியமும் அறியவில்லை.

வீட்டில் நிகழ்ந்த கடந்த கால நினைவால் சோகமாய் இருந்தவள் தான்!

ஆனால், தைரியமில்லாத கோழை இல்லியே அவள்.

அவளின் நிம்மதிக்காகத் தானே தைரியமாய் சென்னை தனியாக வந்தாள். என்னதான் சக்கரவர்த்தி அவளின் பாதுகாப்பிற்கு ஆட்கள் வைத்திருந்தாலும், பதினாறு வயதில் தன்னந்தனியாக மாநிலம் விட்டு மாநிலம் வர தைரியம் வேண்டுமே!

“என்ன ஆன்சர் பண்ண மாட்டியா?” தன்னை முறைத்தபடி விலகிய நிஹாரிகாவிடம் வினவியவன்,

“எக்ஸாம் எப்படி பண்ணியிருக்க?” பதினெட்டு வயது மங்கையின் வளிப்பான உடலைப் பார்வையால் கொய்தபடி, அவள் அணிந்திருந்த யூனிபார்மின் டாப்பில் கைவைத்துத் தூக்க வர, அடுத்தநொடி கீழே விழுந்து கிடந்தான்.

தன் உடையின் மீது கூட தன் அனுமதி இன்றி யாரும் கை வைக்கக் கூடாது என்று எண்ணியவள், நெஞ்சத்திலிருந்து தீப் பிழம்பாய் எழுந்த கோபத்தில், அவனின் விரல் நுனி தன் உடைமேல் படும்முன், கழுத்தில் முழங்கையால் அடித்தவள், அவன் வலியில் நகர, அவன் கால்களுக்கு இடையில் இருந்த இடைவெளியில், தனது வலது காலால் அடியை இடியாய் வைத்துத் தாக்க, நொடிப்பொழுதில் நடந்த சம்பவத்தில் நிலைகுலைந்தவன் தாக்கப்பட்ட இடத்தை பிடித்துக்கொண்டு சுருண்டு விழவும், ரிஷ்வந்த் கதவை உடைத்து உள்ளே நுழையவும் சரியாக
இருந்தது.

அனைத்தையும் கேட்ட ரிஷ்வந்த் நிஹாரிகாவின் கரத்தைப் பற்றி, “அவனை இப்படியே விடணுமா?” வினவ, நிஹாரிகா அதிர்ந்தாள்.

அவனின் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தைக் கண்டவள் ஸ்தம்பித்துப் போனாள். தனது கரத்தைப் பிடித்திருந்த அவனது கரத்தின் இறுக்கத்தையும், முகம் செந்தணலாய் எரிந்து கொண்டிருந்ததையும் கண்டு, ஒருபுறம் அது தனக்காக என்று அவள் மனம் மகிழ்ந்தாலும், மற்றொரு புறம் ஏதாவது விபரீதமாக நடந்தால் அது அவனது வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கிவிடும் என்று உள்ளுக்குள்
பதறியவள்,

“வேணாம் ரிஷ்வந்த். அவனுக்கு என் கையால விழுந்த அடியே வாழ்க்கை ஃபுல்லா மறக்க முடியாது. அன்ட் மோர் ஓவர் நான் அடிச்சதுல அவனால இன்னொரு பொண்ணு கிட்ட தப்பா நெருங்கக்கூட முடியாது. வா போகலாம்” அவனைத் தரதரவென்று இழுத்து வந்தாள்.

அவனைக் கீழ் தளத்திற்கு அழைத்துச் சென்றவள், “ஃபேஸ் வாஷ் பண்ணு.. இவ்வளவு ஹாட்டா இருக்காத. அப்புறம் கேர்ள் பேன்ஸ் அதிகம் ஆகிடுவாங்க” அவனின் தலையை கலைத்துவிட்டு அவள் சிரிக்க,

“ப்ச்” சலித்தவன் முகத்தைக் கழுவினான்.

முகத்தைக் கழுவியவன் ரெஸ்ட்ரூமிற்குள் செல்ல, சக்தி ரிஷ்வந்த் அவளைவிட்டு வந்தபின் அன்பு, கவினிடம் பகிர்ந்ததையும், ஸ்டாப் ரூமில் யாரும் இல்லை என்று தெரிந்தவுடன் அவன் அடைந்த பதட்டத்தையும், ஆவேசத்தையும், அவன் சீறிப்பாய்ந்து வந்த வேகத்தையும் சொல்ல நிஹாரிகாவிற்கு சில்லென்று ஏதோ
உள்ளிறங்கியது.

‘அவன் யாரு உன் பாய் பிரண்ட்ஆ?’ சற்று நேரத்திற்கு முன் அந்த ஆசிரியர்  கேட்டது நினைவிற்கு வர, தேகமெல்லாம் புல்லரித்து, தொண்டைக் குழி தவித்து, நாபியில் இருந்து இதயத்திற்கு ஏதோ உணர்வு செல்ல நிஹாரிகாவிற்கு உள்ளுக்குள் ஆடிவிட்டது.

கன்னங்களில் ஏதோ படர்வதை உணர்ந்தவள், கன்னங்களைத் தேய்த்துக்கொள்ள சக்தி, “ஏய் என்னடி நான் பேசறேன். அப்படியே நிக்கற?” என்று அவள் தோள் தொட்டு உலுக்க,

“ம்ம்.. என்ன?” விழித்தவள் பின், “ஒண்ணுமில்லை வா போலாம்” என்று முன்னே நடந்தாள்.

ரிஷ்வந்த் வெளியே வர, ஆண் பிள்ளைகள் மூவரும் பெண்கள் இருவரின் பின்னே இடைவெளிவிட்டு பேசியபடியே சென்றனர்.

படியின் வளைவில் திரும்பிய நிஹாரிகா, கீழே அப்போது தான் ஐந்தாறு படிகள் ஏறிய ரிஷ்வந்தைப் பார்க்க அவனும் அவளைத்தான் பார்த்தான். கன்னங்கள் இரண்டும் சிவப்பேறி, விழிகள் அவனை புதியதொரு பாதையில் பார்க்கத் துவங்க, தலையை சக்தியிடம் திருப்பியவள் பேசுவதுபோல் பாவனை செய்ய, அவளின் செய்கையில் ரிஷ்வந்த் குழம்பித்தான் போனான்.

மீண்டும் அடுத்த தளத்தின் படி வளைவில் நிஹாரிகா அவனைத் திரும்பியே பார்க்க அவளின் பார்வையின் வித்தியாசம் அவனிற்கு எதையோ உணர்த்துவது போல இருந்தது.

மயிர்க்கால்கள் சிலிர்க்க, சடுதியில் தன்னைக் கட்டுப்படுத்தியவன் அவளைப் பார்த்து, ‘என்ன?’ என்பதுபோல் புருவங்களை உயர்த்த, அவனின் செயலில் புதியாய் அவளிற்கு நாணம் வந்தாலும், தலையைத் திருப்பியபடியே இரண்டு முறை ஒற்றைப் புருவத்தை நளினமாய் அவள் ஏற்றி இறக்கிய விதத்தில், அதன் அழகில், அது உணர்த்திய செய்தியில், படியில் ஏறிக்கொண்டிருந்தவன் தடுமாறி விழப்போக,

“டேய், பாத்துடா” கவின், அன்பு இருவரும் ஒரே நேரத்தில் கடிய,

“பாத்தனால தான்டா விழுந்தான்” முன்னே சென்று கொண்டிருந்த நிஹாரிகா தைரியமாய் வார்த்தைகளை விட,

‘அடியேய்’ என்றிருந்தது ரிஷ்வந்திற்கு.

‘ரொம்ப தைரியம் தான்டி உனக்கு’ என்று நினைத்தவன் நண்பர்களை இப்போது சமாளிக்க வேண்டுமே என்று அவர்களிடம் திரும்பியவன்,

“இப்ப எதிர்ல டென்த் ஷர்மிளா போனால. அவளைப் பார்த்து விழுந்தேன்னு சொல்ல வர்றா” சமாளிக்க, முன்னே சென்று கொண்டிருந்த நிஹாரிகாவின் செவிகளில் அது விழ, ஒற்றை விரலை உதடுகளுக்கு அருகில் கொண்டு சென்று சிரிப்பை அடக்கியவள்,

‘பிராடு’ என்று மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.

***

அனைத்தும் மனதில் சில்லென்ற சாரலாய் அடித்து மனதை ஏதோ உணர்வுகளுக்கு இழுத்துச் செல்ல தன் கை வளைவில் இருந்த நிஹாரிகாவைப் பார்த்தான்.

இரண்டு குல்பியையும் முழுதாக சாப்பிட்டு முடித்தவள், அவனை நிமிர்ந்து பார்க்க அவளின் மேல் உதட்டின் மேலிருந்த குல்பி விட்டுச்சென்ற அச்சுகள் இருந்தது.

அதன் அழகில் சொக்கியவனின், இளம் மனதில் தாறுமாறான எண்ணங்கள் ஓட, ‘என்னடா ரிஷ்வந்த் இப்படியெல்லாம் யோசிக்கற.. அவ இப்ப வரைக்கும் உன் பிரண்ட் தான். உன் லிமிட்ல இரு’ மனதை அடக்கியவன், நல்ல நண்பனாய்,

“எப்படி சாப்பிட்டிருக்க பாரு” என்று தனது கையால் அவளின் உதட்டைத் துடைத்தவன்,முன்னால் சென்று கொண்டிருந்த கவினின் தோளில் கை வைப்பது போல கையைத் துடைத்துக்கொள்ள நிஹாரிகாவோ,

“டேய் கவின்..” என்றழைக்க அவளின் வாயை அவளைச் சுற்றியிருந்த கையை வைத்தே ரிஷ்வந்த் மூட, இருவரையும் பார்த்த கவின், “இதுக ஒண்ணு” தலையில் அடித்துக்கொண்டு முன்னே நடந்தான்.

ஆள் நடமாட்டம் இல்லாமலிருக்க, திடீரென்று அந்த தெருவிற்குள் புகுந்த நான்குசக்கர வாகனம் ஒன்று, இவர்களை உரசும்படி புழுதியைக் கிளப்பிக்கொண்டு செல்ல, பயத்தில் கையில் குல்பியின் கடைசிப்பகுதியை சுவைத்து சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கவின் தவறவிட்டான்.

தன்னுடைய கேசர் குல்பி கீழே விழுந்து உருகுவதைக் கண்டவனுக்கு இதயத்தில் இரத்தம் சொட்டியது.

அதில் வெகுண்டு எழுந்தவன், “போடா குடிகார பொறம்போக்கு.. ****” வாயில் வந்தக் கெட்ட வார்த்தையை வைத்து திட்ட சக்தியும், பிருந்தாவும் தங்கள் காதுகளை பொத்திக்கொள்ள, நிஹாரிகாவின் காதுகளை ரிஷ்வந்த் மூடினான்.

என்ன மூடி என்ன பயன்! அவள் தான் கேட்டுவிட்டாளே!

ரிஷ்வந்த் நிஹாரிகாவின் காதிலிருந்து கையை எடுக்காமலேயே, “டேய் அறிவுகெட்டவனே, பொண்ணுங்கடா” என்று கவினை அதட்ட,

“என் குல்பிடா” என்று எகிறினான் அவன்.

“**** அப்படினா என்ன?” நிஹாரிகா சாதாரணமாகக் கேட்க, அவளின் வாயிலிருந்து வந்த வார்த்தையில் அதிர்ந்தவன், இப்போது கையை அவளது செவியில் இருந்து வாயிற்கு மாற்றினான்.

அவளது வாயை அடைத்தவன், “மடச் சாம்பிராணி, அது கெட்ட வார்த்தைடி..” அவளின் வாயை அடைத்தபடியே தன் பக்கம் இழுத்து அவளின் காதில் சொல்ல, கடந்த இரு வருடங்களில் எதுவும் செய்யாத அவனின் நெருக்கம், இன்று ஏனோ அவளை நெளிய வைத்தது.

அவன் விலகிய பின் “அதோட மீனிங் என்ன?” நிஹாரிகா ஆர்வமாய்க் கேட்க, அங்கிருந்த மொத்த கேங்கும் தலையில் கை வைத்தது.

திரும்பி கவினை முறைத்த ரிஷ்வந்த், ‘எல்லாம் உன்னால தான்டா’ என்று முறைப்பை அவனை நோக்கி எறிய, அனைவரும் சிரித்தபடியே முன்னே நடக்க ஆரம்பித்தனர்.

“அதோட மீனிங் தெரியனுமா?” ரிஷ்வந்த் இடுப்பிற்குக் கரத்தைக் கொடுத்தபடி வினவ,

“ஆமா” என்றாள் அவனைப் போலவே கையை இடுப்பிற்கு கொடுத்து.

“கிட்ட வா” அவனழைக்க, அருகில் சென்றவள் காதைக் காட்ட,

“அதோட மீனிங்..” அவள் செவியில் அவன் மெதுவாய் தயங்கியபடியே அதே சமயம் குறும்பாய் அர்த்தத்தைச் சொன்னான்.

“சீச்சீ..” என்று துள்ளியபடி நகர்ந்தவள், அவனைப் பார்த்து முகத்தைச் சுளித்துவிட்டு முன்னே சக்தியுடனும், பிருந்தாவுடனும் ஓடினாள்.

தனது துறுதுறு எட்டுக்களில் குடுகுடுவென ஓடுவதையே ரசித்தபடி பார்த்திருந்தவனுக்குத் தெரியவில்லை, ‘என்னை மீறி என் மேல யாராலையும் கை வைக்கமுடியாது’ அவள் சொன்னது ஒருநாள் அவளின் கைமீறிப் போகப்போவதை.

ஏன் அவளுமே அறியவில்லை, தான் ஒருவன் கையில் தன்னந்தனியாக
நிராயுதபாணியாய் சிக்கப்போவதை!

ராமனிடம் இருந்து சீதையைத் தூக்கிச் செல்ல, இராவனன் வருவான் என்று அறிந்திருந்தால் இன்றே எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பிரளயங்களைத் தடுத்திருப்பானோ?