நிஹாரி-11

IMG-20211003-WA0016-2c5eb177

நிஹாரி-11

கல்லூரியின் முதல் நாள். எட்டுபேரும் சென்னையிலுள்ள ஒரே கல்லூரியில் சேர்ந்திருந்தனர்.

அதுவும் ஒரே டிபார்ட்மெண்ட். விஷுவல் கம்யூனிகேஷன்.

முதலில் சக்கரவர்த்தி சொல்லியபோது வேண்டாவெறுப்பாக அந்தக் கோர்ஸை எடுக்க முடிவு செய்திருந்தவள், நண்பர்களும் அதையே எடுக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் ஏனோதானோ என்று இருந்தவளுக்கு, கரும்பு திண்ணுவது கடினமா என்றிருந்தது.

சக்கரவர்த்தி சென்னையிலேயே மிகப்பெரிய கல்லூரியில் பேத்தியை சேர்த்துவிட முடிவுசெய்ய, அங்கேயும் அவள் ஒரு ‘க்’ வைத்தாள் அவரின் செல்ல பங்காரம்.

தன் நண்பர்களால் இந்தக் கல்லூரியில் அவர்கள் இருக்கும் வசதிக்கு சேர முடியாது. சேர்ந்தாலும் கல்லூரிக் கட்டணம் கட்ட அவர்களின் பெற்றோர் மிகவும் சிரமப்பட்டுவிடுவர் என்று நினைத்தவள்,

“தாத்தையா, நான் *** காலேஜில் சேர்றனே” அவள் கேட்க, அவருக்கோ உள்ளுக்குள் நெருடலாய் இருந்தது.

சிறியவயதில் இருந்து அவள் உபயோகப்படுத்தும் ஒவ்வொன்றிலும், அதன் வேலைப்பாட்டிலும், அதன் நேர்த்தியிலும், அதன் மித மிஞ்சிய அழகிலேயே தெரிந்துவிடும் பார்ப்பவருக்கு அதன் விலை என்னவாக இருக்கும் என்று.

அப்படியிருந்தவள், நடந்த சிலக் கசப்பான சம்பவங்களால், தனது +1, +2 வகுப்பிற்கு சாதாரண பள்ளியைத் தேர்ந்தெடுத்ததை வேண்டும் என்றால், அன்று அவளின் மனநிம்மதிக்காக ஏற்றுக்கொண்டார்.

ஆனால், இன்று?

நிஹாரிகா சொன்னது ஒண்ணும் அவ்வளவு குறைவான கல்லூரி இல்லை. அதுவும் நீண்ட காலமாக இருக்கும் பெயர்போன கல்லூரி தான்.

ஆனால், சக்கரவர்த்தி சொன்ன கல்லூரி மிகவும் பெயர்போன, சென்னையிலேயே முதல் இடத்தில் இருக்கும் கல்லூரி.

“பங்காரம், நான் சொன்ன காலேஜ் ஏன் வேணாம். காரணம் செப்பண்டிமா”(காரணம் சொல்லுமா) அவர் கேட்க,

“தாத்தையா, எனக்கு அந்த மாதிரி இடம் வேணாம் தாத்தா. நீங்க சொல்ற காலேஜ்ல நிறைய சினி ஸ்டார்ஸ் சன்ஸ் அன்ட் டாட்டர்ஸ் படிக்கறாங்க. நம்ம டோலிவுட்ல இருக்கவங்க பசங்களே அங்கதான் படிக்கறாங்க. ஸோ, வேணாமே தாத்தையா” என்றவள்,

“எனக்கு இந்த பிரண்ட்ஸ்தான் பிடிச்சிருக்கு தாத்தையா. எங்க இருந்தாலும் படிக்கப்போறது விஸ்காம் தானே” என்றாள் அவரைப் பார்த்தபடி.

அவரின் இருபுருவங்களும் யோசனையில் அருகருகே இருக்க, நீண்ட நேரம் யோசித்தவராய் பேத்தியை நிமிர்ந்து பார்த்தார். எப்போதும் அவளிடம் காட்டும் பாசமான புன்னகையுடன்.

“சரி பங்காரம்.. மீ இஷ்டம்(உன் இஷ்டம்). ஆனா, இனி நான் உன்னை சென்னை வந்து பாக்க நீ எதுவும் தடை சொல்லக்கூடாது” அவர் உறுதியான குரலில் மிரட்டும் தொணியில், பேத்தியிடம் பேச முயன்று, ஆனானப்பட்ட நடிப்பின் சாணக்கியனான சக்கரவர்த்தியே தோற்றார்.

“ஓஹோ, மிரட்டலா.. பட் தாத்தையா நான் ஒரு கண்டிஷன் சொல்லட்டா” என்று பூனைபோல் அமர்ந்திருந்த ஷோபாவில் நகர்ந்து அவரின் காதருகில் சென்றவள்,

“இனிமேல் நீங்க என்னை இரண்டு மாசத்துக்கு ஒரு தடவை வந்து பார்க்கணும்” அவரின் கழுத்தைக் கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சியபடி சொன்னவளைக் கண்டு, அவருக்கு இன்றும் அவளைக் கையில் ஏந்திய தினம் நினைவில் வந்தது.

தனக்கே இப்படி என்றால் தன் மகளின் நிலையை எண்ணினார்.

பத்து மாதம் ஆசையாய் நிஹாரிகாவை மகள் விவாஹா சுமந்தது, அவரின் மனதில் இன்றும் முத்திரை குத்தியதுபோல் நினைவில் இருக்கிறது.

அதுவும் பிரசவத்தின் போது மகள் அனுபவித்த வேதனை அவரால் மறக்கமுடியுமா?

நிஹாரிகாவை முதன்முதலாய் கைகளில் ஏந்தி அவளின் உச்சி முகர்ந்து, நிஹாரிகாவின் நெற்றியோடு கன்னத்தை மிருதுவாய் வைத்து கண்மூடி அமர்ந்த அவர் மகளின் பிம்பம், இன்றும் வரைந்து வைத்த சித்திரமாய் அவரின் மனதில் இருக்கிறது.

மகாதேவன் பாசமும் அதற்குக் குறைவானது இல்லியே!

தன் நினைவிலிருந்து வெளியே வந்தவர், “பங்காரம் அம்மா அப்பாகிட்ட பேசலாம்ல” தன் கழுத்தைச் சுற்றியிருந்த பேத்தியின் கையைத் தட்டியபடியே அவர் வினவ, உடல் விறைத்து அவரின் மேல் சாய்த்திருந்த தலையை எடுத்தவள், எழுந்து தன் அறைக்கு அமைதியாய் நடந்தாள்.

அவளிற்குத் தெரியும் இன்னும் சிறிதுநேரம் இங்கிருந்தால் ஏதாவது கோபத்தில் அன்னையைத் திட்டி அதில் தாத்தாவின் மனமும், முகமும் வாடிவிடும் என்று.

நிஹாரிகா செல்வதையே பார்த்திருந்தவருக்கு எப்போதும் போல் மனதிற்குள் சுருக்கென்ற வலி.

‘நீ இருந்திருந்தாவது உங்கிட்ட எல்லாத்தையும் சொல்லுவேன். என்னை தனியா விட்டுட்டு போற அளவுக்கு உனக்கு எப்படி தைரியம் வந்துச்சுடி’ மனதிற்குள் மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தார் சக்கரவர்த்தி.

***

முதல்நாள் கல்லூரியில் வழக்கம்போல் கடைசி வரிசையைப் பிடித்த நமது வாணரக்கூட்டம், தங்களது அலப்பறையை அமோகமாக நல்ல நேரத்தில் தொடங்கினர்.

ரிஷ்வந்தும், நிஹாரிகாவும் காதலை யாரும் அறியாமல் உள்ளுக்குள் சுமக்கத் துவங்கி, கண்களாலேயே சம்பாஷனைகள் செய்து கொண்டாலும், வெளிப்படையாக தங்களது காதலை இன்னும் வாய்விட்டுக் கூறவில்லை.

இருவரும் தங்களுக்குள் இருக்கும் காதலை பொக்கிஷமாய்க் காத்து ரகசியமாய் வைத்திருந்தனர். யாரும் அறியாமல். அவர்களின் நட்பு வட்டங்கள் கூட அறியாமல்.

ஆனால், நிஹாரிகா அறியாத ரகசியம் ஒன்று இருந்தது. அது ரிஷ்வந்திற்கு அவளைப்பற்றி தெரிந்துவிட்டது என்று.

இப்போது இல்லை. அவள் அவன் வீட்டிற்கு பிறந்தநாள் கொண்டாட வந்த அன்றே தெரிந்துவிட்டது.

பிறந்தநாள் முடிந்து அடுத்தநாள் அனைவரும் காலை கிளம்பிய பிறகு, மகனின் அறைக்குள் கனகராஜ் நுழைய, ஏதோ வேலையில் இருந்தவன் அவரை நிமிர்ந்து கேள்வியாய்ப் பார்த்தான்.

மனைவி கீழே சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டவர், “அந்தப் பொண்ணு நிஹாரிகாவை உனக்கு நல்லா தெரியுமா?” என்று அமைதியான குரலில் வினவினார்.

கடுமையோ, சந்தேகமோ எதுவும் அவரின் குரலில் இல்லை. மாறாக அவரின் குரலில் மகனின் பதிலையே தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது.

“தெரியும் ப்பா. நல்ல பொண்ணு ப்பா” உள்ளுக்குள் தந்தை ஏதாவது தவறாக தங்களை நினைத்துவிட்டுக் கேட்கிறாரோ என்று யோசித்தபடி சொன்னான்.

“நல்ல பொண்ணுதான் ரிஷ்வந்த். இல்லன்னு சொல்லலை. ஆனா, அந்தப் பொண்ணை எனக்கு இரண்டு வருசத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியே இருக்கு. தெலுங்கு நடிகர் சக்கரவர்த்தி தெரியும் தானே உனக்கு. உனக்கு சொல்லணும்னு அவசியம் இல்லைன்னு நினைக்கறேன்”

“அவர் ஒரு தடவை, இங்க நான் இருக்க ப்ரொடக்சனுக்கு, சுரேஷ் சாரை(கனகராஜ் வேலை செய்யும் ப்ரொடக்சன் முதலாளி. சக்கரவர்த்தியின் நண்பர்) பார்க்க வந்திருந்தாரு. அப்ப இது மாதிரி… பொண்ணும் வந்திருந்துச்சு. எனக்கு சரியா தெரியலைப்பா. நீ எதுவும் நான் சொன்ன மாதிரி காட்டிக்காத. உன்கிட்ட காதுல போட்டிரனும்னு இருந்துச்சு. அதான் சொல்லிட்டேன்” என்று கனகராஜ் சொல்லிவிட்டுப் போக ரிஷ்வந்த், உடனே கவினின் வீட்டிற்குக் கிளம்பினான்.

வீட்டிற்கு வந்த நண்பனைக் கண்ட கவின், “டேய், வாடா. என்ன புயல் மாதிரி வர்ற?” கவின் கேட்க,

“மச்சா, இண்டர்நெட் இருக்குல்ல. கம்ப்யூட்டர் ஆன் பண்ணு” ரிஷ்வந்த் பேச, அவனின் அவசரத்தை வேறு மாதிரியாக புரிந்துகொண்ட கவின்,

“மச்சி, அம்மா வீட்டுல இருக்காங்கடா. இப்ப அந்தப் படம்லாம் பார்க்க முடியாது. வர்ற சண்டே கல்யாணத்துக்குப் போறாங்க. அப்ப வா பாப்போம்” கவின் தனது முப்பத்தி இரண்டு பல்லைக் காட்டிச் சொல்ல, ரிஷ்வந்திற்கு எங்கேயாவது போய் முட்டிக்கொள்ளலாம் என்று இருந்தது.

கேடி நண்பர்கள் இருவரும் பதினொராம் வகுப்பு வந்த பிறகு, அரும்பு மீசைகள் சிறிது முரட்டுத் தனமாக வளரத் தொடங்கிய பின், பல மாதிரியான படங்களைப் பார்த்து வரத் தொடங்கி இருந்தனர், கவினின் வீட்டில். வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில்.

இப்போது நண்பன் அதற்காகத் தான் வந்துவிட்டானோ, அதுவும் அன்னை இருக்கும் நேரத்தில் என்று நினைத்த கவினிற்கு சூறாவளி தாக்கியதுபோல் இருந்தது இதயத்தில். அதனால் தான் ரிஷ்வந்தைத் தடுத்தது.

“டேய், அம்மா இருக்கும் போதாடா வருவேன்” கடிந்த ரிஷ்வந்த், “எனக்கு சிலது கூகுள் பண்ணனும்” என்றிட தன்னறைக்கு அழைத்துச் சென்ற, கவின் நண்பனை கம்யூட்டரில் அமர வைத்துவிட்டு அவனருகில் அமர,

‘இவனை பக்கத்துல வச்சிட்டு எப்படிப் பாக்கிறது. என்ன ஏதுன்னு கேட்டு வாயை புடுங்கீடுவானே’ நினைத்தவன், “மச்சி, டீ கிடைக்குமாடா?” என்றிட, “அம்மா ரிஷ்வந்திற்கு டீ” அமர்ந்த இடத்தில் இருந்து நகராமல் கவின் கத்த, ‘சுத்தம்’ என்றிருந்தது ரிஷ்வந்திற்கு.

“டேய், ஏன்டா அவங்கள டிஸ்டர்ப் பண்றே. போ, நீயே போய் போட்டு எடுத்திட்டுவா” என்றிட, நண்பனைச் சந்தேகமாய்ப் பார்த்தபடியே வெளியேறினான் அவன்.

அவன் சென்றதும் அடுத்தநொடி நேரத்தை வீணடிக்காமல், சக்கரவர்த்தி என்று கீபோர்ட்டில் தட்ட, அவரின் முழு விவரமும் வந்தது. முதலில் அவன் புகைப்படங்களை ஆராய, நிஹாரிகாவின் புகைப்படங்கள் அதில் ஒன்றிலும் இல்லை.

அவள் யார் என்று தெரியாத வண்ணம் சிறியவயதில் இருந்தே வைத்திருந்தனர். யாரும் நிஹாரிகாவை சினித்துறையைச் சார்ந்த எந்த விழாக்களுக்கும் அழைத்துச் சென்றதில்லை. அதனாலேயே அவளை உறவினர்கள், சக்கரவர்த்திக்கு நெருங்கியவர்களைத் தவிர யாருக்கும் தெரியாது.

ஆனால், விவாஹாவின் புகைப்படத்தைப் பார்த்த ரிஷ்வந்தின் கண்கள் இமைக்க மறுத்தன. விவாஹாவை உரித்து வைத்து அல்லவா நிஹாரிகா பிறந்திருந்தாள். தந்தை சொன்னது சரிதான் என்று நினைத்தவன்.

விவாஹாவைப் பற்றி கூகுளில் அடிக்க, அனைத்தும் வந்தது. அதிலும் நிஹாரிகாவின் புகைப்படம் இல்லை. ஆனால், குழந்தையின் பெயர் என்று இருந்த இடத்தில், ‘நிஹாரிகா’ என்று மட்டும் இருந்தது.

அடுத்து விவாஹாவைப் பற்றிய சில செய்திகளைப் படித்தவன் அந்த செய்த சொன்ன விஷயத்தில் முகத்தை சுளித்துவிட்டு, கவின் வருவதற்குள் கூகுள் ஹிஸ்டரியை அழித்துவிட்டு யூடியூப்பிற்குள் சென்றுவிட்டான்.

நிஹாரிகாவிடம் அவனால் வாய்விட்டு அதைப் பற்றிக் கேட்க முடியவில்லை. அவளின் முகத்தைக் கண்டாலே கேட்கும் எண்ணம் அவனிடமிருந்து பறந்துவிடும்.

பெற்றோரைப் பற்றிக் கேட்டால் ஏனோதானோ என்று முதலில் பதில் சொன்னது நினைவில் இடிக்க, அவனுக்குத் புரிந்தது அவளுக்கு அவர்களின் மேலிருந்த பிடித்தத்தின் அளவு. எனவே, அவளிடம் அதைக் கேட்க நினைக்கும் எண்ணத்தையே அழித்துக் கொண்டான்.

தன் பிறந்தநாளன்று தன் வீட்டில் அவள் அழுததை நினைத்தவன், அவளை நிஹாரிகாவாக மட்டும் தன் மனதில் நிறுத்தியிருந்தான்.

***

கல்லூரி வந்த முதல்நாள் அன்றே அவர்களின் வகுப்பிற்குள் நுழைந்த சீனியர்ஸ், அவர்களுக்கு வெல்கம் பார்ட்டி வைக்க இருப்பதால் அவர்கள் பட்டியலிட்ட நடனம், பாட்டு, குக்கிங், ஃபேஷன் ஷோ, என்று பங்கேற்க அழைத்தனர்.

“ஸீ எனக்கு உங்க யாரு பேரும் தெரியாது. நெக்ஸ் வீக் ஃபெரஷர் பார்ட்டி. யாரும் பார்டிசிபேட் பண்ணாம இருக்காதீங்க. பிகாஸ் நீங்க இருக்கிறது விஷுவல் கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட்ல” சீனியர்களுள் ஒருவன் பேசினான்.

“ஈவ்னிக்குள்ள யாராவது வந்து என்கிட்ட யார் யார் எதுல பார்டிசிபேட் பண்றீங்கன்னு நேம் லிஸ்ட் தந்திடுங்க” என்றவர்கள் வெளியேற, நிஹாரிகா ரிஷ்வந்தை ஓரக்கண்ணால் பார்க்க, அவள் பார்வையை உணர்ந்தாலும், அவன் அவளின் புறம் திரும்பவில்லை.

ரிஷ்வந்த் யார் யார் எதில் பங்கேற்கிறார்கள் என்று பட்டியல் எழுதிக் கொண்டிருக்க, டான்ஸிலேயே க்ரூப் டான்ஸ், டூயட், ட்ரிப்ளட் என்றிருக்க அதில் டூயட்டிற்கு மட்டும் யாரும் இன்னும் பெயர் தராமல் இருந்தனர்.

முதல் நாள் என்பதால் யாருக்கும் யாரையும் அவ்வளவாகத் தெரியவில்லை. அதனால் டூயட்டிற்கு பெயர் கொடுக்கத் தயங்கினர்.

“என்னடா யாருமே டூயட்டுக்கு பேர் தரல” ரிஷ்வந்த் கவினிடமும் அன்பிடமும் சலிக்க,

“மச்சி, நீ இன்னும் எதுலையும் பேர் தரலைல. நீயும்… அதோ அங்க ஒரு மஞ்ச காட்டு மைனா செம ஸ்டரக்சரா இருக்கா பாரு. அவளோட ஆடேன்” கரத்திலிருந்த லிஸ்ட்டை பார்த்து யோசித்தபடி இருந்த ரிஷ்வந்திடம் அன்பு பேச,

“டேய், எப்படி பேசற?” நிஹாரிகா கோபம் கொள்ள,

“இதே ‘பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி’ அப்படின்னு சொன்னா வெக்கப்படுவீங்க.. இதே செம ஸ்டரக்சரா இருக்கேன்னு சொன்னா கோபப்படுவீங்க பொண்ணுக. பட் இரண்டுக்கும் ஒரே மீனிங் தானே” என்றான் ரிஷ்வந்த் வைரமுத்துவின் வரிக்கும் தங்களது அரட்டைக்கும் முடிச்சிட்டு.

அப்பெண்ணுடன் நடனமாடு என்று அன்பு சொன்னபோதே நிஹாரிகாவின் விழிகள் பொறாமையைக் கக்கியது. அதுவும் அன்பை சுட்டு எரித்துவிடுவது போலப் பார்த்தாள்.

கோபத்தில் உதடுகள் இரண்டும் இறுகி, பல்லைக் கடித்து நின்றவளைக் கண்டு ரிஷ்வந்திற்கு, அவளை சீண்டிப் பார்க்கும் எண்ணம் வந்தது. அதனால்தான் தானும் அன்புக்கு ஒத்த ஊதுவதுபோல அவன் பேசியது.

அவன் சொன்னதிற்கு அவள் அவனை முறைக்க, “அந்தப் பொண்ணு பேரு என்னடா” ரிஷ்வந்த் ஆர்வமாய் அன்பிடம் வினவ,

“மண்ணாங்கட்டி” என்று உலையில் போட்ட அரிசியைப் போலக் கொதித்தவள், ரிஷ்வந்தின் கையிலிருந்த லிஸ்ட்டை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, இரு மேசைகள் தள்ளிச்சென்று அதில் எதையோ கடுப்புடன் கிறுக்கிவிட்டு, ரிஷ்வந்திடம் திணித்தவள் கோபத்துடனே வகுப்பு முடிந்து சென்றாள்.

தன் கையில் லிஸ்ட்டை திணித்துவிட்டு நிஹாரிகா செல்ல, அவள் செல்வதையே புன்னகையுடன் பார்த்திருந்தவனுக்குத் தெரியாதா அவள் என்ன எழுதியிருப்பாள் என்று.

ஒருவரிடம் ஏற்படும் பொறாமை கர்வத்தின் உச்சத்தைக் கொடுக்குமானால் அது தன்னவன்/தன்னவளிடம் இருந்து மட்டுமே என்பது காதலின் நியதிபோல.

அவன் கையிலிருந்த லிஸ்ட்டை வாங்கிப் பார்த்த கவினின் புருவங்கள் வியப்பில் உயர்ந்தது.

டூயட் லிஸ்ட்டில், ‘ரிஷ்வந்த், நிஹாரிகா’ என்று இருந்தது.

நிமிர்ந்தவன் ரிஷ்வந்தைப் பார்க்க, அவனோ லேசாய் தலைகுனிந்து தனது வலது புருவத்தால் இடது புருவத்தை தேய்த்தபடி, நிஹாரிகா சென்ற திசையையே காதல் வழிந்த விழிகளோடு பார்த்துக்கொண்டு, நண்பனிடம் இருந்த லிஸ்ட்டை வாங்கினான்.

“மச்சி, என்னடா நடக்குது? அவ பொசசிவ் ஆகறதும். உன் பார்வையும்” கவின் இழுக்க,

“She’s my unsaid words”(அவள் நான் சொல்லப்படாத வார்த்தைகள்) என்றான் விழிகளில் காதலைத் தேக்கி வைத்து. இதை சொல்லும்போது ரிஷ்வந்தின் உடல் சிலிர்த்தது. ஏதோ ஜென்ம ஜென்மமாய் போட்ட முடிச்சு போல அவனின் மனம் அவளின் மேல் லயித்திருந்தது. அவள் மேலிருந்த உரிமை இப்போதெல்லாம் படிப்படியாக அதிகரிப்பதை அவனால் உணர முடிந்தது.

கவினிற்கோ நண்பன் சொன்ன செய்தி இனிமையாய் இருந்தது. இருவருமே தன்னுடைய தோழர்கள். இப்போது காதலிக்கிறார்கள். அவனுக்கு அது மிகவும் ஆனந்தமாய் இருந்தது.

“லவ்வை சொல்லிட்டிங்களா?” கவின் ஆர்வமாய் வினவ,

“இன்னும் இல்லடா”

“சீக்கிரம் சொல்லுங்க” கவின் நண்பனிற்கு ஊக்கமளிக்க,

“சொல்றதுல பிரச்சனை இல்லடா. ஆனா, கொஞ்ச நாள் போகட்டும். நீ தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத” என்றவன் மனதில் ஒரு இறுமாப்புடன், “என் நிஹாரிகா மச்சி அவ. இங்க தானே மூணு வருஷம் இருக்கப்போறா பார்த்துக்கலாம்” என்றவன் தனது ஷோல்டர் பேக்கை எடுத்து மாட்ட கவினும் அவனுடன் கிளம்பினான்.

சீனியர்களிடம் பட்டியலைத் தந்துவிட்டு, வீட்டிற்கு வந்தவன், நிஹாரிகவை அலைபேசியில் அழைத்து சமாதானம் செய்ய போதும் போதுமென்று ஆகிவிட்டது.

“போ போய் அந்த மேனா மினிக்கி கூட ஆடறனா ஆடிக்க. அவளும் ஆளும். அதான் ஸ்டரக்சரா இருக்கால்ல. நல்லா ஆடு. எனக்கு பிரச்சனை இல்ல. ஆனா, அதுக்கு அப்புறம் ஜிலேபி அதுஇதுன்னு வந்து பேசுன நான் மனுஷியா இருக்க மாட்டேன். சொல்லிட்டேன்” நிஹாரிகா வாலுவாலென்று கத்த, அவளின் அனைத்து சத்தமும் அடுத்து ரிஷ்வந்த் கேட்ட ஒரே கேள்வியில் கப்சிப் என்று அடங்கியது.

“அவ கூட நான் ஆடறதுல என்ன இருக்கு? ஏன் உனக்கு பிடிக்கல?” குறும்பாய் அவன் வினவிய குரலில் நிஹாரிகாவிற்கு தொண்டையில் வார்த்தைகள் சிக்கியது. தடுமாறியது. வயிற்றுக்குள் மேலும் கீழும் ஏதோ உருண்டது.

அவன் வேண்டுமென்றே சீண்டுவது இப்போது அவளுக்கு புரிந்தது.

கன்னங்கள் சிவந்தது.

கைகள் அலைபேசியை பிடிக்க முடியாமல் தவித்தது.

கண்கள் நாணத்தால் தாழ்ந்தது.

நாசி குறுகுறுத்தது.

இதயமோ படபடத்தது.

அவளின் மௌனம் அவளின் நிலையை அவனுக்கு எடுத்துரைக்க, “ம்கூம்” தொண்டையை செறுமியவன்,

“ஜிலேபி, நாளைக்கு என்ன சாங்ஸ் எடுக்கலாம் டான்ஸுக்கு. ரெட் தீம்(red theme) வச்சுக்கலாம். ப்ராக்டிஸ் காலேஜ்ல தான். நாளைக்கு ஏதோ தியா (அந்த மஞ்சக்காட்டு மைனா) சொன்ன டெய்லர் வருவாங்கலாம். உன் ட்ரெஸுக்கு அளவு எடுப்பாங்க. ரெட்டுன்னு சொல்லிடலாம். நாம சொன்னா அதே மாதிரி ஸ்டிச் பண்ணித் தந்திடுவாங்கலாம்” அவன் சொல்லத் தலையை ஆட்டியவள்,

“சாங்க்ஸ் நாளைக்கு செலக்ட் பண்ணிடலாம்” என்றாள்.

“சரி. நாளைக்குப் பார்க்கலாம்” என்றவன் அலைபேசியை வைத்துவிட்டான்.

***

அடுத்தநாள் மாலை வகுப்பறையே பரபரப்பாக இருந்தது. இரண்டாவது நாளே வெல்கம் பார்ட்டிக்கு பெயர் தந்திருந்தவர்கள், அவரவர் ஈவன்டிற்கு ஏற்ப ஒவ்வொரு குழுவாக நின்று பேசிக்கொண்டிருக்க, அந்த வகுப்பே சலசலப்பாக இருந்தது.

ஒவ்வொருவரும் தங்களது திறமையையும் தங்களது வகுப்பின் ஒற்றுமையையும் காண்பிக்க, தாங்கள் கலந்துகொள்ளும் ஒவ்வொன்றிலும் திறம்படச் செய்யத் திட்டமிட்டிருக்க, அதற்கான பணிகளையும் ஆர்வத்தையும் காட்டிக் கொண்டிருந்தனர்.

அதற்கு அடுத்து இருந்த காலியான வகுப்பறையில் டான்ஸில் ஆடும் பெண்களுக்கு, அந்த லேடி டெய்லர் அளவெடுத்துக் கொண்டிருந்தார். அளவுகளை தியா எழுதிக் கொண்டிருந்தாள்.

முதலில் குரூப் டான்ஸ் ஆடும் பெண்களுக்கு எடுத்து முடித்த டெய்லர், அடுத்து ட்ரிப்ளட் ஆடுபவர்களுக்கு எடுத்துவிட்டு அவர்கள் கிளம்ப, இறுதியாக நிஹாரிகாவிற்கு எடுக்கத் தொடங்க, தியாவின் அலைபேசி அழைத்தது.

வீட்டிலிருந்து வந்த அழைப்பை தவிர்க்க முடியாது என்று எண்ணியவள், சுற்றியும் முற்றியும் பார்க்க, அந்தப்பக்கம் வந்த ரிஷ்வந்தைக் கண்டவள்,

“ரிஷ்வந்த்” என்றழைக்க

“என்ன தியா?” என்று உள்ளே நுழைந்தான்.

“இவங்க அளவு எடுக்கறாங்க. எனக்கு வீட்டுல இருந்து இரண்டு டைம் கால் வந்திடுச்சு. நான் பேசறேன். நீ போய் அவங்க சொல்றதை நோட்ல எழுதிடேன்” என்றவள் அவனிடம் பேனாவை தந்துவிட்டுச் செல்ல, அங்கிருந்த மேசையில் அமர்ந்தவன் நிமிர்ந்து பார்க்க, நிஹாரிகாவோ சங்கடத்துடன் அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து நின்றிருந்தாள்.

முதலில் அவளின் சங்கடம் எதனால் என்று அவனிற்குப் புரியவில்லை.

முதலில் கை, தோள்பட்டை என்று எடுத்துக் கொண்டிருந்த டெய்லர், அனைத்தையும் எடுத்துமுடித்துவிட்டு நிஹாரிகாவின் மார்பு, இடை மற்றும் அதற்குக் கீழ் வைத்து அளவை எடுத்தவர், “34-28-36 தம்பி” என்றிட, அவரைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கோ அவளின் சங்கடம் எதனால் என்று இப்போது புரிந்தது.

நிஹாரிகா கீழ்க்கண்ணால் அவனைப் பார்க்க, அவனோ தலைக்குனிந்து இடமும்வலமும் தலையை லேசாய் சிலுப்பிவிட்டு, உதட்டில் தோன்றிய மென்நனையுடன் அவளின் அளவுகளை எழுத, நிஹாரிகாவிற்கு, ‘ஐயோ, கடவுளே’ என்று வெட்கம் பிடுங்கித் தின்றது.

அளவுகளை எழுதி முடித்தவன் டெய்லரிடம், அமர்ந்திருந்த படியே ஸ்டைலாக நோட்டைத் தர, அவர் சென்றபின் அவனைத் தாண்டிச் செல்ல முயன்ற நிஹாரிகாவின் கரத்தை வன்மையாகப் பற்றினான்.

அத்தனை அழுத்தம், ஆவேசம் அவளது கரத்தைப் பற்றியிருந்த அவனது கையில். அதே சமயம் மென்மையும், நிதானமும் நீயா நானா என்று போட்டி போட்டிருந்தது.

நெஞ்சம் ஒருநொடி அதிர்ந்து துடிக்க அவனைத் திரும்பிப் பார்த்தவளின் கண்களில் சிறிது பயமும், நாணமும்.

மேசையில் இருந்து எழுந்தவன் அவளருகே செல்ல, நிஹாரிகாவிற்கோ அவனின் நெருக்கத்தில் உள்ளுக்குள் ஆயிரம் பேரிடிகள் ஒரே நேரத்தில் இறங்கியது போல இருக்க, எதையும் வெளிக்காட்டாமல் நின்றிருந்தாள்.

அவளின் தவிப்பை ரசித்தவன் அவள் செவியின் அருகே குனிய அவனின் மூச்சுக்காற்று அவளின் செவியில் பட்டு, உடல் சிலிர்த்தது அவளுக்கு.

“இந்த க்ளாஸ்ல தான் டான்ஸ் ப்ராக்டிஸ். நீ இங்க இரு. நான் நம்ம கேங்கைக் கூட்டிட்டு வர்றேன்” என்றுவிட்டு அவன் வெளியேற அப்போதுதான் அவளால் மூச்சுவிட முடிந்தது.

‘ச்சை இதுக்குத் தான் இவ்வளவு பில்ட் அப் குடுத்தானா. ஒரு நிமிஷம் இவன் பார்த்ததுல ஜெர்க் ஆகிடுச்சு நமக்கு. துல்கர் சல்மான் சொல்ற மாதிரி நல்ல படத்துக்கு மொக்கை க்ளைமாக்ஸ்’ மனதுக்குள் முணுமுணுத்தவள் அப்போதுதான் கவனித்தாள் தனது கை கால்கள் சில்லிட்டு இருப்பதை.

‘கடவுளே இவனை எந்த நேரத்துல எந்த மூடுல அளவெடுத்து செஞ்சு அனுப்புனியோ நீ. நான் பாடாய் படறேன்’ என்று கடவுளையும் உள்ளுக்குள் செல்லமாய்த் திட்டினாள்.

அவர்களது கேங் உள்ளே நுழைய, இருவரும் பாட்டைத் தேர்வு செய்து அதற்கு ஏற்ற ஸ்டெப்ஸை ப்ராக்டிஸ் செய்யத் துவங்கினர்.

இருவரின் காதலையும் இருவரும் தங்களுக்குள்ளேயே சொல்லாமல் இருக்க வரவிருக்கும் வெல்கம் பார்ட்டி அனைவருக்கும், அதாவது கல்லூரிக்கே அவர்களைக் காதலர்களாய்க் காட்டத் தயாராய் இருந்தது.